இரண்டு நாட்களாய் காருக்குறிச்சியாரின் ஹேமவதியைத் தாண்டி வரமுடியவில்லை.
ஆலாபனையைக் கேட்கும் போதெல்லாம் ஏதோ ஒரு வரி மங்கலாய் மனத்தில் வந்து வந்து போனது. ”தொண்டையில் இருக்கிறது – வாயில் வரவில்லை”, என்ற நிலை.
ஆலாபனைக்கு ஏது வரி?
கற்பனைதான் – இருந்தாலும் மீண்டும் மீண்டும் மனத்துள் தோன்றியும் மறைந்தும் பூச்சி காட்டிக் கொண்டிருந்தது.
இன்று காலையில் இன்னொருமுறை கேட்டேன் அந்த ஆலாபனையை.
தைவதத்தை மையமாக்கி – மத்யம ஸ்தாயி மத்யமம் முதல் தார ஸ்தாயி மத்யமம் வரை யாரோ சாவகாசமாய் ஏறி ஏறி இறங்குவதைப் போலத் தோன்றியது.
சுழற்றி சுழற்றி மத்யமத்தைத் தாண்டி தார பஞ்சமத்தைத் தொட்ட போது நெடிய விக்கிரகத்துக்கு தீபாராதனை காட்டியது போல இருந்தது.
தீபக்கீற்றில் நிழலும் ஒளியுமாய் அந்த மந்தஹாசம். ஆங்காங்கே வைரங்களாய் மின்னிய நீர்த்துளிகள்.
நீர்த்துளிகள்.
எனக்கு அந்த வரி கிடைத்துவிட்டது.
“ஸஹஸ்ர கலஸ அபிஷேக மோதாம்” என்கிற தீட்சிதரின் வரி.
ஆயிரம் கலசங்களில் அன்னைக்கு அபிஷேகம்.
அருணாசலம் மத்யமத்திலிருந்து நீரை மொண்டு தைவதம், நிஷாதம், ஷட்ஜம் என்று அன்னையும் ஒவ்வொரு அங்கத்திலும் நீரால் நிறைக்கும் காட்சி இப்போது மனக்கண்ணில் விரிந்தது.
ஆயிரம் கலசங்கள் ஆனதும் தார பஞ்சமத்தில் தீபாராதனை!
காந்திமதி அன்னையின் முகத்தில் குறுநகை.
“இரண்டு நாள் அலைக்கழிப்பு தீர்ந்ததா?”, என்று என்னைக் கேட்பது போலிருந்தது.