Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘hmv raghu’

நான் எழுத ஆரம்பித்து தொடர முடியாமல் பதிவை அழிப்பது என்பது  இரு ஆளுமைகளைப் பற்றி எழுதும் போது நிறைய நடந்ததுண்டு. ஒருவர் சங்கீத வாணி எம்.எல்.வசந்தகுமாரி. இரண்டாமவர் நான் அருகிலிருந்து தரிசித்த மேதமைக்குச் சொந்தக்காரர் எச்.எம்.வி.ரகு சார்.

இருவரைப் பற்றி எழுதும் போதும் என்ன எழுதினாலும் சொல்ல நினைப்பதை சொல்ல முடியாத பாரம் அழுத்தி எழுதவிடாமல் செய்துவிடும்.

ஓராண்டுக்கு முன் நான் ரசித்த இசைப்பதிவுகள் என்கிற வரிசையில் பத்து இசைப்பதிவுகளைப் பற்றி நாளுக்கொன்றாய்  எழுதத் தொடங்கினேன். அந்தத் தொடரில் பத்து பதிவுகளைப் பற்றி எழுத எண்ணியிருந்தேன். அதில் நிச்சயம் எழுத வேண்டும் என்று நான் முதலில் நினைத்த பதிவு ரகு சார் இசையமைப்பில் எம்.எல்.வி அம்மா பாடிய பதிவைத்தான். ஒவ்வொரு நாளும் முயன்று, நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டு, ஒன்பது நாட்கள் வேறு இசைப்பதிவுகளைப் பற்றித்தான் எழுத முடிந்தது.

கார்வையில் முடியாத ராக சஞ்சாரமாய் அந்த எழுதாத பத்தாவது பதிவு பல மாதங்களாய் அலைகழித்துக் கொண்டுதான் இருக்கிறது.

கடந்த சில மாதங்களில், மேதை பாலமுரளிகிருஷ்ணாவின் பிறந்த நாள், ரகு சாரின் பிறந்த நாள் என்று சாக்கிட்டு எச்.எம்.வி.ரகு அவர்களைப் பற்றி சில பதிவுகள் எழுதிய (அசட்டு?) தைரியத்தில், எம்.எல்.வி அம்மாவின் நினைவு நாளில் அந்தப் பத்தாவது  பதிவை எழுதத் துணிகிறேன்.

ஸரஸ்வதி ஸ்டோர்ஸ் வெளியீட்டில் ‘பம்பை பாலகனே’ என்கிற பெயரில் 1970-களின் தொடக்கத்தில் ஒரு கிராமஃபோன் ரிக்கார்ட் வெளியானது. அதில் குன்னக்குடி வைத்தியநாதன், ’பள்ளிக்கட்டு சபரிமலைக்கு’ புகழ் வீரமணி போன்றவர்கள் இசையமைத்துள்ளனர். போட்டி நிறுவனம் எச்.எம்.வி-யில் வேலைபார்த்து இசைப்பதிவாளராக ரகு சார் பெரும் பெயர் ஈட்டியிருந்தாலும், அவர் இசையறிவை அறிந்து இசையமைப்பாளராக வாய்ப்பளித்தது ஸரஸ்வதி ஸ்டோர்ஸ்தான். ரகு ஸார் இசையமைத்து பி.சுசீலா பாடிய முருகன் பக்தி பாடல்கள் (தவமிருந்தாலும் கிடைக்காதது நிம்மதி முதலியவை) நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் இந்தப் பதிவிலும் ரகு சாரின் பாடல்கள் இருக்க வேண்டும் என்பது ஸரஸ்வதி ஸ்டோர்ஸ் கண்ணன் நினைத்ததில் ஆச்சர்யமில்லை.

”நல்ல ராகங்களில், எல்லோருக்கும் போய் சேரும்படியாய் இந்த மெட்டுகள் இருகக்ட்டும்”, என்று கண்ணன் ரகு சாரிடம் சொன்னாராம்.

எல்லோருக்கும் போய் சேரும்படியான ராகங்கள் என்றால் – கல்யாணி,மோகனம், சிந்துபைரவி, ரேவதி, சிவரஞ்சனி – என்று தேர்வு செய்திருப்பார் என்று நினைத்தால் உங்களுக்கு ரகு சாரைத் தெரியவில்லை என்று அர்த்தம்.

அவர் தேர்வு செய்த ராகங்கள் காவதி, கோசலம், காங்கேயபூஷணி! (கதையல்ல – நிஜம்!)

அந்த மூன்றில் முதலிரண்டைப் பாடியவர் எம்.எல்.வி அம்மா.

இசையமைத்தவரும் பாடியவரும் சங்கீத கலாநிதி ஜி.என்.பாலசுப்ரமண்யத்தின் சீடர்கள். அவர்கள் இணையும் போது, அவர்கள் குருநாதர் கர்நாடக இசையுலகுக்கு அறிமுகப்படுத்திய காவதியில் பாடலமைந்ததைப் புரிந்து கொள்ள முடிகிறது. 

(மலையேறி வருவோர்க்கு – என்ற வார்த்தைகளுக்கு மான்குட்டித் துள்ளலில் மலையேறிக் காட்டும் சங்கதிகள் மனத்தில் தோன்றினாலும் அவற்றை அழிச்சாட்டியமாய் விலக்கி பதிவைத் தொடர்கிறேன்)

காவதி சரி; கோசலம்?

ரகு சாரை தூக்கத்தில் எழுப்பி, ;ஒரு ராகம் பாடுங்களேன்’, என்றால் திய்வமணியையோ, காந்தாமணியையோ பாடுபவர். அவர் கோசலத்தில் அமைத்ததில் எந்த வியப்புமில்லை.  ஆனால், எம்.எல்.வி அம்மா விவாதி ராகங்களும் கச்சேரிகளில் பாடியிருக்கிறார் என்றாலும் அவற்றை அவருடைய முதல் தேர்வுகள் என்று சொல்வதற்கில்லை. பக்திப் பாடல் கோசலத்தில் என்பதை அவர் எப்படி எதிர்கொண்டிருப்பார்?

இந்தக் கேள்வியை ஒருநாள் அவர் ரமண கேந்திரத்தில் அவர் அறையில் சமைத்துக் கொண்டிருந்த போது கேட்டேன்.

“பாடினது வசந்தி அக்கா இல்லையா? கோசலமா இருந்தா என்ன? கல்யாணியா இருந்தா என்ன? அவர் பாடறதுக்குக் கேட்கணுமா?’, என்று எதையோ சொல்ல முயன்று உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் விட ஆரம்பித்துவிட்டார் ரகு சார்.

உணர்ச்சிப்பெருக்கு அடங்கியதும், “நான் அப்போது கிராமஃபோன் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும், கச்சேரிகளும் செய்துகொண்டிருந்தேன். ஒருநாள் மாலை கச்சேரியில் கோசலம் பாடி, கோடீஸ்வர ஐயரின் ‘கா குஹா’ பாடினேன். அன்று இரவே கண்ணன் வீட்டுக்கு வந்து இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லிவிட்டு பூவை செங்குட்டுவனின் பாடல் வரிகளையும் கொடுத்துவிட்டுப் போனார். கச்சேரியின் தாக்கம் தொடர்ந்ததால் இந்தப் பாடலை கோசலத்தில் அமைத்தேன்.

என் குரலிலேயே அந்தப் பாடலை பதிவு செய்து வசந்தி அக்காவுக்கு அனுப்பி வைத்தேன். அடுத்த நாள் காலையிலேயே பதிவுக்கு ஏற்பாடாகியிருந்தது. அவர் வந்ததும் ‘பாட்டைக் கேட்டீர்களா?’, என்று ஆவலுடன் கேட்டேன். ‘கேட்டேன் ரகு’ என்று அவர் இழுத்த விதத்திலேயே அவருக்குக் கேட்க நேரமிருந்திருக்கவில்லை என்று புரிந்து கொண்டேன்.

‘இதற்கு பின்னணி இசையெல்லாம் உண்டல்லவா?’, என்று கேட்டார். நான் ஆமாமென்று தலையசைத்தேன்.

”நீ அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பாயல்லவா? அதை நானும் கேட்கிறேன்”, என்றார்.

அவர்களுக்கு நான் ஏற்கெனவே சொல்லி இருந்தாலும் இன்னொருமுறை எம்.எல்.வி அம்மாவின் முன் வாத்தியக் கலைஞர்களுக்குப் பாடிக் காண்பித்தேன்.

ஒரே ஒருமுறை அதைக் கேட்டவர், “டேக் போயிடலாம் ரகு”, என்றுவிட்டார். ஒரே தவணையில் பாடல் பதிவை முடித்துவிட்டோம். சங்கதிகள் எல்லாம் நான் போட்டிருந்தேன் என்றாலும், அவர் சாரீரத்துக்கே உரிய ஜொலிஜொலிப்பில்தான் அவை மிளிர்ந்தன என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. அவர் மேதை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்றாலும் அத்தனை வேகமாய் கற்பூரம் போல அவர் கிரகித்துக் கொண்டதை இப்போது நினைத்தாலும் புளகாங்கிதம் ஏற்படுகிறது”, என்று மீண்டும் தழுதழுக்க ஆரம்பித்துவிட்டார் ரகு சார்.

2015-ல் முதன் முறையாக நான் சபரிமலை யாத்திரைக்குச் சென்றேன். மிகவும் சஞ்சலமான காலகட்டத்தில் ஏனோ அங்கு சென்று வந்தால் ஆறுதலாய் இருக்கும் என்று தோன்றியது. எதைத் தேடிச் சென்றேன் என்று தெரியாமல் ஆனால் எனக்கு வேண்டியது கிடைக்கும் என்கிற உள்ளுணர்வில் சென்ற பயணமது.

பதினெட்டு படிகள் ஏறி, குழுமியிருந்த பக்தர்களுக்கு இடையில் முண்டியடித்துக் கொண்டு முதல் முறை, இரண்டாம் முறை, மூன்றாம் முறை என்று ஐயப்பனைப் பார்த்தது மனதுக்கு இதமாக இருந்தாலும் நான் தேடி வந்த பொருள் சிக்காததைப் போலவே எனக்குத் தோன்றிக் கொண்டிருந்தது.

கொடிக்கம்பத்துக்கு அருகில் உட்கார்ந்து கொண்டிருந்த போது ஒலிப்பெருக்கியில் நாகஸ்வரத்தில் கல்யாணி ராகம் ஒலித்துக் கொண்டிருந்தது.

பதநீதப

மபதநீதப

கமபதநீதப

என்று பஞ்சமத்தை  மையமாக்கி காந்தாரத்திலிருந்து நிஷாதம் வரை சுற்றிச் சுற்றி ஒலித்த அந்த சஞ்சாரங்கள் மனத்தில் ஒட்டிக் கொண்டன.

கோயிலைவிட்டுக் கிளம்பி அறைக்குச் சென்ற பின்னும் கூட அந்த சஞ்சாரங்கள் மனத்துக்குள் அலையடித்துக் கொண்டே இருந்தன. ஏதோ ஒருகணப்பொழுதில் ஒலித்துக் கொண்டிருந்த ஸ்வரக் கோவைகளில் ஷட்ஸ்ருதி ரிஷபம் சேர்ந்து கொண்டு பளீரென்று மின்னல் வெட்டியது.

கல்யாணி கோசலமாய் மாறியது.

செலுத்தப்பட்டவன் போல நான் என் கைப்பேசியை இயக்கினேன். யுடியூபைத் திறந்து ‘கண்கண்ட தெய்வம்’ பாடலை ஒலிக்கவிட்டேன்.

என் மனம் கல்யாணியிலிருந்து கோசலத்துக்கு தாவியது என்பதால் கோசலம் என்னமோ கல்யாணிக்கு உடன்பிறந்த ராகம் என்று நினைத்துவிட வேண்டாம். மருந்துக்கும் கல்யாணி சாயல் தெரியாமல் ஒவ்வொரு துளியிலும் கோசலம் தனித்துவமாகவே ஒலிக்கக்கூடுமென்பதற்கு இந்தப் பாடலைத் தாண்டி எங்கும் செல்ல வேண்டியதில்லை.

முன்னோட்ட இசையைத் தாண்டி பல்லவியைக் கேட்கும் போது என் மனத்தில் அமைதி ஏற்படுவது போன்றத் தோன்றினாலும் இன்னொரு பக்கம் மனம் பாடலை ஆராயத் தொடங்கியது.

இந்தப்பாடலைப் போன்ற பக்திப் பாடல்கள் கர்நாடக ராகங்கள் அமைந்திருந்தாலும் அவற்றை கீர்த்தனைகளை அணுகுவது போல அணுகமுடியாது. அதனாலேயே அவற்றை (அதிகபட்சம்) semi classical என்று வகைப்படுத்துகிறோம். ஒரு தேர்ந்த கர்நாடக இசைக் கலைஞர் இது போன்ற பாடல்களைப் பாடும் போது அளவுக்கு அதிகமாய் ‘கர்நாடகத்தன்மை’-யுடன் பாடுவதற்கான சாத்தியங்கள் அதிகம். இந்தப் பாடலில் எந்தவொரு இடத்திலும் அத்தகு மிகுதிகளைக் காணவியலாது. (நிறைய திரைப்பாடல்களும் பாடியுள்ள எம்.எல்.வி மிகாமல் பாடியது ஆச்சர்யமில்லை என்பது வேறு விஷயம்.)

சரணத்தில்,

“பாவங்களைத் தீர்த்து வைக்கும் பம்பா நதி;

பயபக்தியோடு தீர்த்தமாட பெரும் நதி”

இந்த வரிகளில் நதியென்ற என்ற வார்த்தையில் நறுக்குக் கத்தரித்தது போல கூர்மையான நிறுத்தங்களை நினைக்கும் போதே தார ஸ்தாயிக்கு தூக்கிச் சென்றது ‘அச்சன்கோயில்’ சஞ்சாரம். அடுத்த வரியில் இறங்கும் வழியில் விசேஷ விவாதி ஸ்வரங்களை தரிசனம் செய்வித்து தட்டாமலைச் சுற்றிக் காட்டித் தரையைத் தொடும் அந்த இரண்டாவது ‘ஐயன்கோயில்’.

‘அடியவர்க்கு துணிவு தரும் ஐயன்கோயில்’

நான் தேடி வந்த மருந்து எனக்குக் கிடைத்துவிட்டது. நான் தேடி வந்த ஐயப்பன் இருக்கும் ‘ஐயன்கோயிலை’ நான் உணர்ந்து கொண்டேன்.

அத்தனை வேகத்திலும், துல்லியமாகவும், கம்பீரமாகவும், நறுவிசாகவும் அந்த ‘ஐயன்கோயில்’ சங்கதி.

இன்னும் எவ்வளவு சொன்னாலும் அந்தக் கோசல சங்கதியின் சௌந்தர்யத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியப்போவதில்லை. அதனால் என்ன கெட்டுவிட்டது இப்போது? காற்று மண்டலத்தில் கரைந்துவிட்ட கச்சேரி சங்கதியாய் இருந்தால் வருத்தப்படலாம். இதுதான் சாஸ்வதமாகிவிட்ட கிராமஃபோன் பதிவுதானே?

மகாவிதுஷியின் நினைவு நாளின் நீங்களும் கேட்டுத்தான் பாருங்களேன்.

Read Full Post »

ரகு சார் – 86!

இன்று ரகு சாரின் பிறந்த நாள். அவரைப் பற்றி எழுத வேண்டுமானால் பதிவெல்லாம் எழுத முடியாது. நாவல்தான் எழுத வேண்டும். நாவல் எழுத எனக்கு வணங்குமா தெரியவில்லை. ஆனால் 2013-ல் நடந்த ஒரு சம்பவத்தை மட்டும் ஒரு அத்தியாயமாக அவர் பிறந்த நாளில் எழுதிக் கொள்கிறேன்.

***************************************

அதுவரை எங்களுக்குக் கச்சேரி கேட்டுதான் பழக்கம். கச்சேரியை ஏற்பாடு செய்வதில் ஆனா ஆவன்னா கூடத் தெரியாது.

நான் கேட்க விரும்பிய சில கலைஞர்கள் அந்த டிசம்பரில் எங்கும் பாடவில்லை என்கிற அதிர்ச்சியில் அவசரமாய் ஐந்து நாட்களுக்கு நாளுக்கு இரண்டு கச்சேரிகள் (இளைஞர் கச்சேரி ஒன்று/ சீனியர் கச்சேரி ஒன்று) வீதம் ஒரு கச்சேரித் தொடரை ஏற்பாடு செய்தோம்.

டிசம்பர் கச்சேரிகளை ஜூன் மாசமே ஏற்பாடு செய்யும் சென்னை சபாகளுக்கு மத்தியில் எங்களுக்கு இந்த எண்ணம் தோன்றியதே நவம்பர் கடைசியில்தான். சென்னையில் மொட்டைமாடிகள் கூட காலியில்லாத நிலையில், ஐந்து நாட்களுக்கு மூன்று இடங்களில் அரங்குகளைப் பிடித்து கச்சேரிகள் ஏற்பாடு செய்தோம். அந்த மூன்றிலொரு இடம் பெரிய குடியிருப்பு ஒன்றின் கம்யூனிடி ஹால். அங்கு வெளியிலிருந்து ஒலிபரப்பு சாதனங்கள் எடுத்து வர அனுமதியில்லை. அவர்களிடம் இருந்த அரதப்பழசு ஆம்ப்ளிஃபையரும் மைக்குகளும்தான் உபயோகித்து ஆகவேண்டும் என்று நிபந்தனை.

எனக்கோ மைக் என்றால் கேட்டிங்கா ஹஸ்ஸியா என்று கேட்கும் அளவிற்குத்தான் ஒலி உபகரணங்களைப் பற்றிய அறிவு. எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று குழம்பியபடி மைலாப்பூரின் ஒரு உணவகத்தில் நானும் என் தம்பியும் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு பரிச்சியமான குரல் சத்தமாகச் சிரிப்பது காதில் விழுந்தது. அங்கு ரகு ஸார் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்.

நாங்கள் அவரிடம் சென்றதும் உற்சாகமாய் இன்னும் இரண்டு நாற்காலிகளை இழுத்துப் போட்டு வரவேற்றார். அவரிடம் அதுவரை பேசிக் கொண்டிருந்தவர் விடைபெற்றுக் கொள்ளவும், நான் ஜி.என்.பி-யின் கல்யாணியில் நிஷாத சஞ்சாரத்துக்கு பேச்சைத் திருப்பினேன். அதை ரகு சார் பாடி இன்னொருமுறை கேட்க வேண்டும் போலிருந்தது. அங்கு தொடங்கி அவர் இசை மனத்தின் அலையடிப்பில் நாங்கள் சவாரி செய்தோம். பேச்சுவாக்கில் நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிற கச்சேரிகள் பற்றி சொன்னேன். அடுத்த நாள் வந்துவிடுவதாய் சொன்னார். நான் அவரை வாருங்கள் என்றோ, வந்தால் உதவியாக இருக்குமென்றோ சொல்லவில்லை. அவராகவே வருகிறேன் என்று சொன்னாலும் அதை நான் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. எத்தனையோ பேர் அவரை அழைக்கக் கூடும், அதன் மூலம் பாடல்புனைவிலோ அல்லது ஒலிப்பதிவிலோ அவர் மூழ்கிவிடக் கூடும் என்று அறிந்தவன் என்பதால் நான் பெரியதாக அலட்டிக் கொள்ளவில்லை.

அடுத்த நாள் மாலை நான்கு மணிக்கு கச்சேரி தொடக்கம். மூன்று மணிக்கே கலைஞர்கள் வந்துவிட அவர்களை வரவேற்க நான் வாசலுக்குச் சென்றேன். அப்போது ரகு சார் தன்னுடைய டிவிஎஸ் 50-ஐ நிறுத்திக் கொண்டிருந்தார். என் தம்பி கலைஞர்களைப் பார்த்துக் கொள்ள நான் ரகு சாரை நோக்கி ஓடினேன். எதிரொலிக்கவென்றே பார்த்துக் கட்டின அரங்கில் அந்த அரதப் பழசான மைக்குகளை நான் ரகு சாரிடம் காட்டினேன். “பாட்டு நன்னா இருந்தா மைக் என்ன பண்ணும்?” என்று சிரித்தபடி ஸ்டாண்டை எடுத்துக் கொண்டு மேடைக்கருகில் சென்றார்.

அன்று பாடவிருந்த கலைஞர்களுக்கு ரகு சாரிடம் பரிச்சியமில்லை. சங்கீத மேதை என்றால் பளபளக்கும் மேலாடையும், அகல ஜரிகையும் என்று நிலைபெற்றுவிட்ட நிலையில் – வெய்யிலில் வந்ததில் வேர்த்த முகமும், அணிந்திருந்த பழைய அரைக்கை சட்டையும் ரகு சாரின் மேதமையை பார்த்த மாத்திரத்தில் கண்டுகொள்ள உதவியிருக்காது.

அவர் மைக் ஸ்டாண்டை தூக்கிக் கொண்டு வரவும், இவர் யாரோ அந்த சமுதாயக் கூடத்தில் வேலை செய்பவர் என்று அந்தப் பாடகி நினைத்திருக்கக் கூடும். அந்தப் பெண் இவரைப் பொருட்படுத்தாமல் பக்கவாத்தியக் கலைஞர்களோடு பேசிக் கொண்டிருந்தார்.

ரகு சார் மைக்கை அந்தப் பெண்ணின் முன்னால் வைத்துவிட்டு அவளிடம் எதோ சொல்ல நினைத்தார். அந்தப் பெண் இவர் பக்கம் திரும்புவதாகவே இல்லை. நானும் குறுக்கிட சங்கோஜப்பட்டு நின்றுகொண்டிருந்தேன்.

கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு, “அம்மா! மைக் சரியா இருக்கானு பாரும்மா”, என்றார் ரகு சார்.

அந்தப் பெண் மைக்கின் உயரத்தை கொஞ்சம் தாழ்த்திவிட்டு, சரியாகயிருக்கிறது என்பது போல தலையை ஆட்டினாள்.

“இல்லம்மா, ஏதாவது பாடு.”, என்றார் ரகு சார்.

அந்தப் பெண் வாயைத் திறக்காமல் மெல்லிய குரலில், ‘ம்ம்ம்ம்’ என்று ஸ்ருதி காண்பித்தது.

ரகு சார் தோள்களை கொஞ்சம் சிலுப்பியபடி இரண்டடி பின்னால் நகர்ந்தார். எல்லாம் சரியாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு அவர் நகர்ந்துவிடுவார் என்று நினைத்தேன்.

ஆனால் அவர் அந்தப் பெண்ணைப் பார்த்து, “இன்னிக்கு என்னம்மா பாடப் போற?”, என்று சத்தமாகக் கேட்டார்.

அந்தப்பெண்ணிற்கு தூக்கி வாரிப்போட்டது. ‘ம்?’, என்று கண்களை அகல விரித்தாள்.

’கச்சேரின்னா மெயின் சப்-மெயின்-னு எதாவது தயார் பண்ணிண்டு வந்திருப்பியே! அதைக் கேட்கறேன்.’’

கச்சேரிக்குக் கூப்பிட்டவர்கள் கூட என்ன பாடப் போகிறாய் என்று கேட்கவில்லை. மைக்கைத் தூக்கி வைப்பவர் இப்படி புகுந்து பேசுகிறாரே! அவருக்குப் பின்னால் நம்மைக் கச்சேரிக்குக் கூப்பிட்டவர் கைகட்டி நிற்கிறாரே.’ – என்று அந்தப்பெண் குழம்பித் தவிப்பது நன்றாய் புலப்பட்டது.

ரகு சார் பதிலுக்குப் பொறுமையாகக் காத்திருந்தார்.

அந்தப் பெண் வேறு வழியில்லாமல், ‘லதாங்கியும், தோடியும்’, என்று முணுமுணுத்தது.

‘லதாங்கினா ‘அபராதமுல’ பாடப் போறியா?”, என்றார் ரகு சார்.

அந்தப் பெண் ஆமோதித்துத் தலையை ஆட்டினாள்.ரகு சார் ஒரே பாய்ச்சலில் மேடைக்கருகில் சென்றார். அந்தப் பெண் பயந்து ஓரடி பின்னால் நகரப் போகும் போது ரகு சார் மைக்கைக் ஸ்டாண்டிலிருந்து கழட்டி கையில் எடுத்துக் கொண்டார்.

“கிருபஜேசின மனவியாளகிஞ்சி”, என்று ஒருகுரல் ஓங்கி ஒலித்தது. அதிகமில்லை. இருபது நொடிகளுக்குள்தான் இருக்கும். அடுக்கடுக்காய் நான்கைந்து சங்கதிகள் அந்த அனுபல்லவியில் வந்து விழுந்தன. கடைசி சங்கதியில் நல்ல காத்துக்கு பவளமல்லியிலிருந்து கொத்துக் கொத்தாய் விழும் மலர்கள்போல அத்தனை மணமாய் ஸ்வரவர்ஷம். சத்தியமாய் சொல்கிறேன் – காலம் உறைந்து போனது.

”மைக் சரியா இருக்கானு பார்க்கணும்னா இப்படி வாயைத் திறந்துபாடினாத்தானேம்மா தெரியும்”, என்று ரகு சார் சொன்ன போதுகூட நான் அந்த லதாங்கியின் தார ஸ்தாயியில்தான் சஞ்சரித்துக் கொண்டிருந்தேன்.

ரகு சார் என்னைப் பார்த்து, “சிங்கர் மைக் ஓகே!”, என்று விட்டு வயலின் வாசித்த பெண்ணை நோக்கி “நீ கொஞ்சம் வாசிம்மா”, என்றார். அந்தப்பெண்ணும் உறைந்து போய்தான் அமர்ந்திருந்தாள்.

எனக்குப் பின்னாலிருந்து என் தம்பி கீழே விழாத குறையாய் சிரிக்க ஆரம்பித்தான். அப்போதுதான் எனக்கு அங்கு என்ன நடந்தது என்று கொஞ்சம் புரிபட ஆரம்பித்தது. இவன் சிரித்து வந்திருக்கும் கலைஞர்களின் வம்பை வாங்கிக் கொடுத்துவிடுவானோ என்று பயந்து அவனைப் பின்னுக்குத் தள்ளினேன்.

அடுத்த சில நிமிடங்களில் வயலின் மைக்கையும் மிருதங்கத்தின் மைக்கையும் சரிபார்த்துவிட்டு மேடையிலிருந்து ஐந்தாறு வரிசைகள் தள்ளிச் சென்று ஒரு இருக்கையில் அமர்ந்துகொண்டார் ரகு சார். அவரிடம் யாரோ வந்து பேச ஆரம்பித்தார்கள்.

நான் தண்ணீர் பாட்டில்களை எடுத்துக் கொண்டு மேடைக்குச் சென்றேன்.அன்று பாடவிருந்தப் பெண் மெதுவாக என்னை அழைத்து, “இப்பப் பாடினாரே, அந்த மாமா யாரு?”, என்று கேட்டாள்.

“அவர்தாம்மா எச்.எம்.வி.ரகு. ஜி.என் சார் சிஷ்யர்.”, என்று சொல்லிவிட்டு இறங்கும் போது எனக்கென்னமோ சங்கீத கலாநிதி கொடுத்து அதை நான் வாங்கிக் கொண்டு இறங்குவது போல இருந்தது.

என் பின்னாலேயே அந்தப் பெண்ணும் மேடையைவிட்டு இறங்கினாள்.

நான் வாசல் பக்கம் செல்ல அந்தப்பெண் ரகு சாரிடம் சென்று அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்.

********************************************************

உங்களுக்கு இன்னும் ஒரு நூறாண்டு நோயில்லா வாழ்வும் அந்த வாழ்வில் நீங்கள் பேசி நான் கேட்க எனக்குப் பேறும் ஆண்டவன் அருளட்டும் ரகு சார்!

Read Full Post »

இன்று மாமேதை பாலமுரளிகிருஷ்ணாவின் பிறந்த நாள்.

நான் தேடித் தேடி அவர் சங்கீதத்தைக் கேட்டேன் என்று சொல்வதற்கில்லை. பெரும்பாலும் என் சங்கீத ரசனை வளரக் காரணமாக இருந்தவர்களுக்கு பாலமுரளியின் சங்கீதம் ஒத்துக் கொள்ளாது. ’சுகர் பேஷண்டுக்கு குளூகோஸ் ஊசி போட்டா மாதிரி சங்கீதம்’, என்று புகழுரை போல் பாதாளத்தில் தள்ளும் நையாண்டிப் பேச்சுகள்தான் எனக்கு பாலமுரளி சங்கீதத்துக்கு அறிமுகம்.

பத்து/பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் மாலை ஒரு வயரை சால்டரிங் அடித்தபடி எச்.எம்.வி ரகு சார் தன் பழைய அனுபவங்களை எனக்காக மீண்டுமொருமுறை வாழ்ந்து காண்பித்தார். அன்று அவர் பகிர்ந்த சாருகேஸி அனுபவம்தான் என்னை பாலமுரளிகிருஷ்ணாவின் ரசிகனாக்கியது என்று சொல்லத் தோன்றுகிறது.

2008-லிருந்து 2012 வரையிலான காலகட்டத்தில் அவர் அடிக்கடி பெங்களூர் வருவார். சஞ்சய் நகரில் உள்ள ரமண மகரிஷி செண்டரில் வாரக் கணக்கில் தங்கி அவர்களுக்கு இசையமைத்துக் கொடுப்பார். அப்படி வரும்போது நாங்கள் சந்தித்து இரவு முழுவதும் பேசிக் கொண்டே இருப்போம். சங்கீதத்தின் அதிமேதாவிலாசங்களை நான் மிக மிக அருகிலிருந்து பார்த்தது (தரிசித்தது என்று இருக்க வேண்டுமோ) ரகு சாரின் அண்மையில்தான்.

யாரேனும் நம்மைப் பற்றி பேசினால் புரைக்கேறும் என்பது உண்மையென்றால் வாழ்நாள் முழுவதும் குறைந்தபட்சம் பத்து நிமிடங்களுக்கு ஒருமுறையாவது பாலமுரளி அவர்களுக்கு, ரகு சாரின் புண்ணியத்தில், புரைக்கேறியிருகும். ’குருஜி’ என்று ரகு சார் சொல்லும்போது தன்னிச்சையாய் அவர் கண்கள் மூடிக் கொள்ளும். அப்போது அவர் முகத்தில் தவழும் குறுநகையை எனக்கு எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது.

1970-களில் எச்.எம்.வி ஒரு வித்தியாசமான இசைத்தட்டை வெளியிட்டது. அந்த இசைத்தட்டில் பாலமுரளியே பாடி, அவரே வயோலா வாசித்து, அவரே மிருதங்கமும் வாசித்திருக்கிறார். அப்படி வெளியான முதல் கர்நாடக இசைப்பதிவு இதுதான். அதைப் பற்றி பின்னர் குறிப்பிட்டு எழுதியவர்கள், அந்தப் பதிவை டிராக் ரிக்கார்டிங் என்று நினைத்து எழுதியுள்ளனர். உண்மையில் அந்தச் சமயத்தில் எச்.எம்.வி-யின் டிராக் ரிக்கார்டிங் செய்வதற்கான வசதியே கிடையாது.

இன்று வித்வான் பாலக்காடு ஸ்ரீராமை ஃபேஸ்புக்கில் தொடர்பவர்கள் – “இவ்வளவு தொழில்நுட்பம் தெரிந்த சங்கீத வித்வானோ, அல்லது இவ்வளவு சங்கீதம் தெரிந்த தொழில்நுட்ப நிபுணரோ இருப்பார்களா”, என்று வியப்பது வழமை. அந்த வகையில் ஸ்ரீராமுக்கு முன்னோடி ரகு சார்தான்.

டிராக் ரிக்கார்டிங் இல்லாத சமயத்தில் இப்படி ஒன்றைச் செய்யலாம் என்கிற எண்ணம் எப்படி வந்தது? அதை எங்ஙனம் செய்து முடித்தனர்?

ரகு சாரின் வார்த்தைகளிலேயே இங்கு தரப் பார்க்கிறேன்.

**********************************

“1970-களில் ஆறு மாத காலம் டோக்கியோவில் தங்கி தொழில்நுட்பப் பயிற்சி பெற ஒரு வாய்ப்பு கிடைத்தது. பயிற்சி முடிந்து மீண்டும் சென்னையில் எச்.எம்.வி-க்கு பதிவுகள் செய்துகொண்டிருந்தேன். ஒருநாள் பதிவகத்துக்கு குருஜி வந்திருந்தார். என்னைப் பார்த்ததும்  “ஜப்பானில் என்ன புதியதாகத் தெரிந்து கொண்டாய்?”, என்று கேட்டார். அப்போது ஜப்பானில் டிராக் ரிக்கார்டிங் ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு கச்சேரியில் குரலைத் தனியாக, வயலினைத் தனியாக, மிருதங்கத்தை தனியாக என்று பதிவு செய்துகொண்டு, நம் விருப்பத்துக்கு ஏற்ப ஒலியளவை ஏற்றி இறக்கிக் கலந்து கொள்வதற்கான வசதியைப் பற்றி விவரித்தேன். 
“ரகு! உன் கிட்ட இருக்கற ரிக்கார்டரை வெச்சு அப்படி செய்ய முடியாதா?”, என்று கேட்டார். 
’முடியாது’ என்று சொல்ல எனக்கு வாய்வரவில்லை. ’முடியுமானு பார்க்கணும் குருஜி. அப்படியே முடிஞ்சாலும் அதை வெச்சுப் புதுசா என்னப் பண்ணப் போறோம்?’, என்று அவரைக் கேட்டேன். 
 “புதுசா? பண்ணலாமே! சொல்லட்டுமா”, என்று புன்னகைத்தபடி, “நானே வாய்ப்பாட்டு, நானே வயலின், நானே மிருதங்கம் – இப்படி ஒரு ரிக்கார்டிங் பண்ணினால் புதுசா இருக்குமில்லையா?”, என்றார்.

எப்படிச் செய்யமுடியும் என்று யோசிப்பதாக அவரிடம் கூறினேன். அடுத்த நாள் காலையில் எனக்கு ஒரு வழி தோன்றியது.

எங்கள் ஸ்டுடியோவில் ஒரு ஸ்டீரியோ ரிக்கார்டரும் ஒரு ஸ்டீரியோ பிளேயரும் இருந்தன. முதலில் அவர் பாடுவதை மட்டும் பதிவு செய்து கொள்வது. அதை எங்களிடமிருந்த பிளேயரில் போட்டு அதன் வெளியீட்டை (output)-ஐ மீண்டும் ரிக்கார்டிரின் ஒரு சானலுக்குக் கொடுத்துவிடுவது. அதற்கு ஏற்ப குருஜி வயோலா வாசிப்பதை இன்னொரு சானலுக்குக் கொடுத்து பதிவு செய்து கொள்வது. அந்தப் பதிவை மீண்டுமொருமுறை பிளேயரில் போட்டு அந்தப் பதிவுக்கு ஏற்றார்போல மிருதங்கம் வாசிப்பதை (முன்னர் வயலினை பதிவு செய்தது போலவே) பதிவு செய்து கொண்டால் இது சாத்தியமாகும் என்று தோன்றியது.

வேலைக்குச் சென்றதும் குருஜியை தொலைபேசியில் அழைத்து ஸ்டுடியோவுக்கு வரச் சொன்னேன். அவர் வந்ததும் இந்தத் திட்டத்தை விவரித்தேன். அவர் உற்சாகமாகிவிட்டார்.

எந்தப் பாடல்களை எப்படிப் பாடலாம் என்று திட்டமிடும்போது ஒரு சிக்கல் எழுந்தது. அந்தக் காலத்தில் தாளத்தைக் காட்டும் மெட்ரோனோம்கள் உபயோகத்திலிருக்கவில்லை. பாடலைப் பாடும் போது அதனால் பெரிய சிக்கல் இருக்காது. ஆனால் கல்பனை ஸ்வரங்கள் பாடும் போது வாய்ப்பாட்டுக்குப் பின் வயலின் வரவேண்டும். அதற்கு சரியான காலப்ரமாணத்தில், சரியான அளவில் இடைவெளி விட வேண்டும். வயலினைப் பதிவு செய்யும் போது, அந்த இடைவெளியில் சிறு நெருடல் கூட ஏற்படாத மாதிரி வாசிக்க வேண்டும். அது சரிப்படுமா என்று குருஜி சற்றுத் தயங்கினார்.

வெண்ணை திரண்டு வரும் போது தாழியை உடைத்து – இந்தப் பதிவே வேண்டாமென்றுவிடுவாரோ என்று எனக்கு பயமாகிவிட்டது. நான் ஒரு யோசனை சொன்னேன்.

”என் அறையில் இருந்தபடி நான் தாளத்தை சரியாகக் காட்டி அடித்துப் போடுகிறேன். நீங்கள் கல்பனை ஸ்வரங்கள் பாடும் போது, வயலினுக்கான இடத்தில் நான் பாடி விடுகிறேன். என் அறையிலிருந்து ஒரு இணைப்பை எடுத்து ஹெட்ஃபோன் மூலம் உங்களுக்குக் கொடுத்துவிடுகிறேன். வயலின் பக்கவாத்தியம் போல நினைத்து என் ஸ்வரங்களுக்குப் பின்னால் நீங்கள் பாடிவிடுங்கள்.”, என்றார். அவருக்கும் அது சரியாக வரும் என்று தோன்றியதால் பதிவுக்குச் சென்றோம்.

பதிவை எடிட் செய்து, வயலின் ஒரு பக்கமும், மிருதங்கம் மறு பக்கமும் கேட்கும்படி panning செய்த போது கச்சேரி பதிவு போல அமைந்துவிட்டது.

*****************************************

இந்தக் கதையைக் கேட்டபின், அந்தப் பதிவை நான் தேடிப்பிடித்துக் கேட்டு நான் பாலமுரளியின் ரசிகனானேன்,  என்று நீங்கள் நினைக்கலாம். அது நியாயமும்கூட.

ஆனால் வாழ்க்கை விசித்திரமானதல்லவா?

நான்தான் முன்னாலேயே சொன்னேனே! ரகு சார் தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கமாட்டார். திரும்ப வாழ்ந்து காட்டுவாரென்று.

அவரோடு சேர்த்து என்னையும் அன்று எச்.எம்.வி ஸ்டுடியோவுக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.  ’ஆடமோடி’யில் பல்லவியில் ஸ்வரப்ரஸ்தாரம்.  இரண்டு குரல்களில்  மாறி மாறி மூன்று ஸ்தாயிகளில் தாவித் தாவி அரை மணி நேரத்துக்கு ஸவரபிரஸ்தாரம்.

திருக்கோவிலூரில் முதலாழ்வார்கள் மூவர் நிற்க இடமிருக்கும் என்று நின்ற போது சூட்சுமமாய் அங்கு நாராயணன் வந்து நெருக்கினான் என்கிறார்கள். அன்று என்னை பாலமுரளிகிருஷ்ணா நெருக்கவில்லை. ரகு சாரின் குரல் மூலம் உச்சிமோந்து தழுவிக்கொண்டார்.

அதன்பின் எத்தனையோ பதிவுகளுடன் கணக்கில்லா கணங்கள் அந்தரங்கமாய் கழிந்திருக்கின்றன. ஆனாலும் ஒவ்வொருமுறையும் அந்த மேதையின் பெயரைச் சொன்னதும் முதல் ஸ்பரிசமாய் நினைவுக்கு வருவது அன்று சஞ்சய் நகரில் ரகு சார் பாடிய சாருகேஸிதான். 

Read Full Post »