Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘jayanthi kumaresh’

இந்த வருடம் கச்சேரி கேட்க சிறந்த இடம், என்னைப் பொறுத்தவரையில், திருவான்மியூர் ஹரே கிருஷ்ணா அமைப்பின் கடலோரக் கோயில்தான்.

ஒலியமைப்புக்காக வடிவமைக்கப்பட்ட அரங்கம் ஏதுமில்லை. ஷாமியானாவும், பிளாஸ்டிக் நாற்காலிகளும் நிறைக்கப்பட்ட தற்காலிக அரங்கம்தான். இருப்பினும், கடலலைக்கு வெகு அருகே, குளிர்ந்த காற்று வீசிய படி இருக்க, அந்த இடத்தில் பொங்கும் அமைதி, வேறொன்றும் தேவையில்லை என்று எண்ண வைத்தது.

ஒரு பக்கம் கடல் அலை. மற்றொரு பக்கம் இசை அலை.

அங்கு நிரம்பிய அமைதியை, இசைக்க வந்தவர்களும் உணர்ந்திருக்க வேண்டும். நேற்று இரு கச்சேரிகள் கேட்டேன். இரண்டிலும் மருந்திற்கும் (ஒரு பாடல் நீக்கி) இரைச்சல் இல்லை, அவசரம் இல்லை, வேகம் இல்லை.

ஜெயந்தி குமரேஷ், இழைத்து இழைத்து தன் வீணையில் கமகங்களைப் பொழிந்து தள்ளினார். கச்சேரியை கர்நாடக சுத்தசாவேரியில் தொடங்கி,  ‘ஏகாம்பரேஸ’ பாடலுக்கு கல்பனை ஸ்வரங்களை வாசித்த போது, அதிலும் குறிப்பாக, ஒரு சில ஸ்வரங்களை மட்டும் மீண்டும் மீண்டும் வாசித்த போது meditative mood உருவாகியது.

நிதானமாய் ஸ்ருதியுடன் கலந்து கொண்டு பஹுதாரியை மெல்ல மெல்ல மலர வைத்த போது, my day was made. அந்த 8 நிமிட ஆலாபனை ஏற்படுத்திய நிறைவு என்னை கச்சேரியை விட்டு கிளம்பிவிடலாமா என்று கூட எண்ண வைத்தது. நல்ல காலம் செய்யவில்லை.

பஹுதாரியை நாலு கால் பாய்ச்சலிலும் இசைக்கக் கூடும். ஆனால், இன்று அரங்கிருந்த சூழலுக்கேற்ப மயிலிறகால் வருட விட்டார் ஜெயந்தி. ‘ப்ரோவ பாரமா’ கிருதியை நிதானமாய் வாசித்தார். ஒவ்வொரு வரியும், பாடுவது போல தெளிவாய் வாசிக்கும் ஜெயிந்தியின் ‘காயகி’ வீணை பாணி, பிரமிக்க வைத்தது. ஒரு மீட்டலின் ஒலி இவ்வளவு நேரம் ரீங்காரிக்க முடியுமா என்று ஆச்சர்யப்பட வைத்தது.

பஹுதாரியைத் தொடர்ந்து விளம்ப காலத்தில் துவஜாவந்தியில் அகிலாண்டேஸ்வரி வாசித்து தாலாட்டினார். பக்க வாத்தியம் வாசித்த அனந்தா ஆர். கிருஷ்ணனும், கிரிதர் உடுப்பாவும் வாத்தியத்தில் கொஞ்சினர். சென்ற வருடம் ஜெயந்தியின் கச்சேரியில் கிரிதர், ‘ஆளை உடுப்பா’ என்று சொல்லும்படி வாசித்ததாக எழுதியிருந்தேன். நேற்று அவர் வாசிப்பைக் கேட்ட போது, இவரா அன்று இடியாய் இடித்தார் என்று எண்ண வைத்தது.

இது பூர்வி கல்யாணி சீஸன் போலும். நான் இது வரை கேட்டதில், அபிஷேக், ராம கிருஷ்ணன் மூர்த்தி, கே.காயத்ரி ஆகியோர் வரிசையில் நேற்று ஜெயந்தியும் இணைந்து கொண்டார். ராகம் வெறும் உடல்தான், அதற்கு உயிர் கொடுப்பது கலைஞரின் கையில்தானே இருக்கிறது, அவரவருக்கு தக்க படி புதிதாய் ராகம் உயிர் பெற்று எழுவதுதான் நிதர்சனம். ஜெயந்தி, நிறைய கேட்டு விட்ட பூர்வி கல்யாணியை, எடுத்துக் கொண்ட போதும் அலுப்பாக இல்லை. மாறாக அந்த ஏகாந்த சூழலுக்கேற்ற ராகட்த்தை எடுத்துக் கொண்டாரே என்று சந்தோஷமாகத்தான் இருந்தது.

அவர் வாசிப்பைப் பற்றி சொல்ல வேண்டுமானால், கட்டுரையில் ‘கூறியது கூறல்’ நிறைந்திருக்கிறது என்று தமிழ் பேப்பர் ஆசிரியர் கோபிக்கக் கூடும். வாய்பாட்டில், (இன்றைய நிலையில்) பெரும்பாலும் இரண்டு ஸ்தாயிகளை குரல் சஞ்சாரம் செய்வதே அபூர்வம். வாத்தியத்துக்கு அதற்கு மேலும், கீழும் சென்று ராக அலைகளை எழுப்புவதற்கான வசதி உண்டு. அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, ஜெயந்தி மந்திர ஸ்தாயியில் வாசித்த அத்தனை பிடிகளும் படு பிரமாதம். ஜெயந்தியின் கைவிரல்கள் சுழற்காற்றாய் இயங்கிக் கூடியவைதான் என்றாலும் ,நேற்று வாசித்த, ராகத்திலும், தானத்திலும் தென்றலாய் வருடினார்

பிரதானமாக வாசித்த ஷ்யாமா சாஸ்திரியின் ‘நின்னுவினா’ கிருதியும், கல்பனை ஸ்வரங்களும் அழகுக்கு அழகு சேர்த்தன. பொதுவாக நான் தனி ஆவர்த்தனத்தை மிகுந்த ஆர்வத்துடன் கேட்பேன். நேற்று ஜெயந்தியின் வாசிப்பு, முடிந்த பின்னும் கூட, என் மனதில் ஒலித்துக் கொண்டே இருந்து என்னை இரு கலைஞர்கள் அற்புட்ர்ஹமாய் வாசித்த தனியின் கவனம் செலுத்தவிடாமல் செய்தது. அவ்வப்போது, ஆனந்தா கிருஷ்ணன் எழுப்பிய கும்கார திவலைகள் மனதை வருடிய போதும், எதையும் பதிய வைத்துக் கொள்ளும் நிலையில் நான் அப்போது இல்லை.

அதிகம் கேட்டிராத லால்குடியின் கமாஸ் ராக தில்லானாவுடன் கச்சேரியை நிறைவாக நிறைவு செய்தார் ஜெயந்தி.

அவரைத் தொடர்ந்து பாடினார் பந்துல ரமா. உடன் வயலின் வாசித்தவர், ரமாவின் கணவர் மூர்த்தி. எச்.என்.சுதீந்திரா மிருதங்கம், உடுப்பி பாலகிருஷ்ணன் கடம்.

ஜெயந்தி வாசிக்க ஆரம்பித்த போது ஆங்கொன்றும் ஈங்கொன்றுமாய் இருந்த ரசிகர்கள், கச்சேரியின் போது பெருகி அரங்கை நிறைத்தனர். நிறைந்த கூட்டம் அடுத்த கச்சேரிக்கும் தங்கியது. நல்ல கூட்டத்தைப் பார்த்ததும் ஜிம்நாஸ்டிக்கில் இறங்காமல் அழகாக அளவாகப் பாடினார் பந்துல ரமா.

இவரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன் என்ற போதும், நேற்றுதான் முதன் முதலில் கேட்கிறேன். நல்ல கனமான சாரீரம். மந்திரம், மத்ய ஸ்தாயியில் அரங்கை நிறைக்கிறது. குரலில் வேகமும் சரளமாய் பேசுகிறது. தார ஸ்தாயியில் சஞ்சரிக்கும் போது சற்றே குரல் கம்முகிறது.

எம்.எஸ்.என் மூர்த்தி வாழ்க்கையில் மட்டுமல்ல, வாசிப்பிலும் நல்ல துணை.

சுசீந்திராவுக்கோ பிரமாதமான கை. தன் பங்கை உணர்ந்து கச்சேரியை உயர்த்துவதில் முனைந்து பாடு பட்டு வாசிக்கிறார்.

கச்சேரி சாலக பைரவியில் தொடங்கியது. ’பதவிநி’ பாடிய பின், கானமூர்த்தியை அழகாக ஆலாபனை செய்தனர் தம்பதியினர். ‘கானமூர்த்தே’ பாடலில் பல்லவியில் உள்ல காந்தாரத்தையே பல வகைகளில் வளைத்து அழகிய சங்கதிகள் பாடினார். விவாதி ஸ்வாரங்களை கையாளத் தேவையான, சுத்த ஸ்நிர்ணயம் பெரிதும் கவர்ந்தது. நிஷாதத்தில் கமகம் நலந்து நின்று பாடிய போது அற்புதமாக இருந்தது. நிரவல் ஸ்வரங்களுக்குப் பின், கதனகுதூகலத்தை இழையோட விட்டார். வாத்தியக் காரர்களுக்கு இந்த ராகம் அல்வா சாப்பிடுவது போல. வயலினில் வெளித்துக் கட்டினார் மூர்த்தி.

கிருதியில், குறிப்பாக, மூச்சிரைக்கும் வேகத்தில் பாடிய சிட்டை ஸ்வரங்கள் அந்த மாலைப் பொழுதின் பரவசத்துடன் சேராமல் அமைந்தன. இந்த உணர்வு எனக்கு மட்டும்தான். அரங்கம் இந்த சிட்டை ஸ்வரங்களுக்கு அளித்த அப்ளாஸ்தான், அன்றைய அப்ளாஸ்களிலேயே பெரியதாக அமைந்தது.

அடுத்து பெஹாக் ராகத்தை எடுத்து ஆலாபனை செய்த போது ஆச்சரியமாகத்தான் இருந்தது. பெரும்பாலும் கச்சேரியின் கடைசியில் பாடக் கூடிய ராகம். இதை பிரதான ராகமாகக் கேட்கக் கூடும் என்று எதிர்பார்க்கவில்லை. நல்ல உருக்கமான ராகத்தை நன்கு இழைத்துப் பாடினார்ட் பந்துல ரமா. அவர் ஒன்பது நிமிடங்கள் பாடியதை, அதில் பாதி நேரத்துக்குள் precise writing செய்து, முழுமை கெடாமலும் வாசித்தார் மூர்த்தி.

ஸ்வாதி திருநாளின் ‘ஸ்மர ஜனக’ பாடி முடித்த போது, இன்றைக்கு இவ்வளவு போது என்று தோன்றியது. .

நிச்சயம் இன்னொரு முறை இவர் கச்சேரியைக் கேட்பேன் (அம்முறை முழுமையாக).

 

Read Full Post »

டிசம்பர் 26-ம் தேதி காலையில் மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் வீணை ஜெயந்தியின் கச்சேரி.

நல்லதோர் வீணை (கலைஞரைச்) செய்தே – அவரை
நலங்கெட கூட்டமில்லா ஸ்லாட்டுகளில் இடுவதுண்டோ

நான்கு வருடங்களாய் நானும் பார்க்கிறேன், இந்த அற்புதமான வாசிப்பு, நல்ல கூட்டமுள்ள இடத்தில் அரங்கேறும் என்று!

ம்ஹும்! சரஸ்வதியே இன்று சீஸனுக்கு வந்தால் கூட, “வீணையெல்லாம் வாசிச்சா ப்ரைம் ஸ்லாட் கிடைதும்மா! வேணும்-னா, வாய்ப்பாட்டு பாடு. பாடினாப் போறாது, நல்ல ஷோக்கா அலங்காரம் பண்ணிக்கணும். கண்ணை எப்ப மூடணும், கையை எப்பத் தூக்கணும், எப்ப மந்தகாஸம் புரியணும்-னு எல்லாம் coaching class-ல சேர்ந்து கத்துக்கணும். கர்நாகடம் எல்லாம் தூக்கி கிடப்புல போட்டுட்டு, அடித் தொண்டையில் கத்தற அபங்கம், rap song மாதிரி வர தில்லானா எல்லாம் பாடம் பண்ணனும். அப்புறம்தான் ப்ரைம் ஸ்லாட்!”, என்று சபை காரியதரிசிகள் சொல்லக் கூடும்.

அவர்களும் என்ன செய்வார்கள் பாவம். காலை வேளை கச்சேரிகளில் கூட, வாய்ப்பாட்டு என்றால் 40-50 பேராவது வருகின்றனர். வாத்தியம் என்றால், விரல் விட்டு எண்ணிவிடலாம். வீணையின் குழைவையும், கம்பீரத்தையும், அந்த வாத்தியத்தில் வெளிப்படும் கமகங்களின் யௌவனத்தையும் எந்த வாய்ப்பாட்டுக்காரனும் வெளிப்படுத்த முடியாது. கல்யாணங்களில் கூட சாக்ஸஃபோன் ஒலிக்கும் கால்மய்யா இது.  வீணை வீணாய் போவதில் ஆச்சர்யம் என்ன?

எது எப்படியோ. கேட்ட சொர்ப்பமானவரகளுக்குக் கொடுத்து வைத்திருந்தது.

கூட்டமின்மை. போதிய நேரமின்மை. அரங்கின் ஒலியமைப்பு. பக்கவாத்தியங்களின் இடைஞல்கள். இது அத்தனையும் மீறி நெஞ்சைத் தொட்ட வாசிப்பை அளித்தார் ஜெயந்தி.

மாளவிகா ஒரு ஸ்லோகம் பாட, காலை ராகமான கர்நாடக சுத்தஸாவேரியில் ’ஏகாம்ரேஸ’ கிருதியில் கச்சேரியைத் தொடங்கினார் ஜெயந்தி. ஸ்வரப்ரஸ்தாரத்தில் மான் கூட்டத் துள்ளல்! அதைத் தொடர்ந்த விஜ நாகரி — த்ஸொ த்ஸொ — கேட்டே எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன. தியாகராஜ பாகவதர், “சொப்பன வாழ்வில் மகிழ்ந்தேன்” என்று பாடி பட்டிதொட்டியெல்லாம் பரப்பிய ராகம். சம்பிரதாயமாய் பூர்வி கல்யாணி, பந்துவராளி என்று கச்சேரியின் முதல் பிரதான ராகமாய் ஒரு பிரதி மத்யம ராகத்தைப் பாடுபவர்கள், இது போன்ற ராகங்களை எடுத்துக் கொள்ளலாம். பாரதி சொல்வதைப் போல, தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு எல்லாம் இருபுச் செவிகளாகத்தான் இருக்க முடியும். இல்லையெனில் கேட்டதையே மீண்டும் மீண்டும் கேட்க முட்டி மோதும் கூட்டம், புதியதை இசைப்பவர்களுக்கு வராமல் இருக்குமா?

ஜெயந்தியின் வாசிப்பில் Discipline என்ற பெயரில் தளைகளைத் தானே மாட்டிக் கொள்ளும் இயல்பும் இல்லை. Adventure என்கிற பெயரில் கண்டதை வாசிக்கும் இயல்பும் இல்லை. லால்குடி (இவர் குரு பத்மாவதி லால்குடியின் சகோதரி) வழியும், பாலசந்தர் வழியும் அற்புதமாய் சங்கமிக்கும் பாணியை தனக்கென்று அமைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த வருடம் காம்போதி, கரஹரப்ரியா, சாவேரி, வராளி போன்ற ராகங்களை கேட்கவே முடியவில்லை (நான் போன இடங்களில்). ஆனால் எக்கெச்செக்க இடங்களில் வஸந்தா, லதாங்கி, பேகடா போன்ற ராகங்கள் துரத்தின. ஜெயந்தியும்  விஸ்தாரமாக வசந்தா வாசித்தார். விறுவிறுப்பான காலப்ரமாணத்தில் ‘ராமசந்த்ரம் பாவயாமி’ வாசித்து, அதற்கு contrast-ஆக ஷ்யாமா சாஸ்திரியின் யதுகுல காம்போதி ஸ்வரஜதி வாசித்தார்.

ஸ்வரஜதியின் அழகுக்கு எவ்வளவு தூரம் பங்கம் விளைவிக்க முடியுமோ, அப்படி இருந்தது கடம் வாசித்த கிரிதர் உடுப்பாவின் வாசிப்பு. யதுகுல காம்போதி, “ஐயோ, என்னை உடுப்பா”, என்று கெஞ்சிக் கதறிய போது, அவர் கடத்தில் உருட்டிப் பெருக்கி வாசித்த ஃபரன்களை அவர் விடுவதாக இல்லை. போதாக் குறைக்கு, மிருதங்கத்தை விட, கடத்தின் ஒலி அளவு அதிகமாகி, மாளவிகா பாடிய சாஹித்யங்களைக் கொஞ்சம் கூட கேட்க விடாமல் செய்தது.  தாளத்தை, 4-ம் 2-ம் ஆறு. அதோடு 2 கூட்டினா எட்டு, என்று கணக்கு பண்ணி வாசித்தால் மட்டும் போதாது. பாடலுக்கு ஒரு பாவம் உண்டு, சவுக்கமான ஸ்வார்ஜதியைத் தடியால் அடித்தால் தாளம் முருங்கை மர வாழ் இனமாகி விடும். நல்ல காலமாய், ஆலாபனை என்று ஒன்று இருக்கிறதோ, இந்த தடாலடியிலிருந்து தப்பித்தோமோ.

 
பிரதான ராகமாக தர்மவதியை எடுத்துக் கொண்டார் ஜெயந்தி. விஜயநாகரியின் தாய் ராகம்தானே தர்மவதி? இரண்டையும் ஒரே கச்சேரியில் வாசித்திருக்க வேண்டுமா, என்ற கேள்வி எழுந்தாலும், கேட்க நன்றாகத்தான் இருந்தது. தர்மவதியின் உருக்கம் முழுவதும் வெளிப்படும் வகையில் ஆலாபனை செய்து முடிக்கும் போதே, நேரம் நிறைய ஆகிவிட்டது. வீணையில் தானம் கேட்பதே தனி சுகம். அந்த சுகம் இன்னும் கொஞ்சம் நீடித்திருக்கக் கூடாதா என்று தோன்றியது. மூன்று மணி நேர கச்சேரியாய் இருந்தால் நிறைய வாசிக்கலாம், இரண்டு மணி நேரத்தில் இவ்வளவுதான் வாசிக்க முடியும் என்று மனதைத் தேற்றிக் கொண்டேன். ராகமாலிகையில் வாசித்த ஹம்சத்வனி, சுத்த தன்யாஸி, அம்ருதவர்ஷிணி, குமுதக்ரியா, மோகனம் போன்ற ராகங்கள் கேட்க ரொம்பவே நன்றாக இருந்தன. இருப்பினும், RTP ஒரு மணி நேரம் வாசித்தால், பத்து நிமிடம் ராகமாலிகை வாசிக்கலாம். பத்து நிமிட பல்லவிக்குப் பிறகு, பத்து நிமிடங்கள் ராகமாலிகை வாசிப்பது எனக்கு நிறைவளிக்கவில்லை. தர்மவதியிலேயே இன்னும் நிறைய வாசிக்க இருந்ததாய்த் தோன்றியது.

தனி ஆவர்த்தனத்தில், மிருதங்க வித்வான் அர்ஜுன் குமார், பளிச்சென்று வைத்த தீர்மானங்களுக்கு எல்லாம் அமைதியாக இருந்த கூட்டம் (கூட்டம்-னா இருந்த சொர்ப்பமானவர்கள்). கட வித்வான், கடமுட கடமுட என்று உருட்டிய போது, காணாததைக் கண்டது போல சிலாகித்து கைதட்டியது.

தேஷ் ராகத்தில், ‘துன்பம் நேர்கையில்’ வாசித்து கச்சேரியை நிறைவு செய்தார். இப்படிப் பட்ட கச்சேரிக்கு கூட்டமே இல்லாத்தைக் கண்டு எனக்குள் எழுந்த துன்பத்தைப் போக்க ஜெயந்தி, யாழின் இன்றைய உருவமான வீணையில் இன்பம் சேர்த்தது போல எனக்கு பிரம்மை ஏற்பட்டது.

அடுத்த நாள், காலை அகாடமியில் ஜெயந்தியின் lec-dem-க்கு ஓரளவு கூட்டம் இருந்ததைக் காண சந்தோஷமாக இருந்தது. மைசூர் பாணி, தஞ்சாவூர் பாணி, ஆந்திர பாணி, கேரள பாணி என்று வீணை வாசிப்பில் இருக்கும் பல வகைகளை, அற்புதமாக வாசித்தும், media-வில் காண்பித்தும் விளக்கினார்.

வீணையின் அமைப்பு, வாசிப்பவர்களின் technique (விரலை அதிகம் பிரித்து வாசிக்கும் முறை, ஒரே fret-ல் அநேக ஸ்வரங்கள் வாசிக்கும் முறை. மீட்டு தந்திகளை உபயோகிக்கும் முறை, sympathetic strings-ன் பங்கு), கிருதி வாசிப்பதில் இருக்கும் வேறுபாடுகள், வாய்ப்பாட்டைப் போலவே வாசிப்பது, அல்லது வேறு மாதிரியாக வாசிப்பது, என்று பல விஷயங்களை தடங்கலின்று விளக்கினார்.  இந்த நிகழ்ச்சிக்காக மெனக்கெட்டு சேகரித்திருக்கும் ஒலி/ஒளித் தரவுகள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவை. இந்த நிகழ்ச்சியின் பதிவை டிவிடி-யாக வெளியிட்டால், மாணவர்களுக்கும் ரசிகர்களுக்கும் பயனுள்ளதாய் இருக்கும்.

காரைக்குடி சகோதரர்களுள் ஒருவர் வீணை நிமிர்த்தி வைத்து வாசிப்பாரே, அதைப் பற்றி ஏன் ஒன்றும் சொல்லவில்லை என்று கேட்க வேண்டும் என்று நினைத்தேன். நேரமிருக்கவில்லை.

இந்த சீஸனில் ஒவ்வொரு lec-dem போதும், நேரம் பற்றவில்லை என்றே கேட்ட அனைவரும் நினைத்தனர். அப்படியிருக்கையில், இரண்டு மணி நேரத்துக்கு இரண்டு டெமான்ஸ்ட்ரேஷன் என்பதற்கு பதிலாக, ஒரு நிகழ்ச்சியை வைத்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும். lec-dem முடிந்ததும், experts committee member சம்பிரதாயமாக வாழ்த்திப் பேசுவது மட்டுமின்றி, கேள்விகளைக் கேட்கவும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் சந்தேகங்கள் தீரும்.

இந்த வருடம் ஜெயந்திக்கு lec-dem-க்கு வாய்ப்பளித்த அகாடமி, அடுத்த வருடம் கச்சேரிகளில் ப்ரைம் ஸ்லாட் கொடுக்க பிரார்த்திப்போம்!

பி.கு:  சபா நடத்தும் பெருமான்களே! உங்கள் தரித்திர புத்தியை வருடம் தவறாமல் மேடையில் கட்டும் பேனரில் காட்டியே தீர் வேண்டும் என்று வேண்டுதலா? வருடா வருடம் அதே மஞ்சக் கலர் கண்றாவி பேனரில், ஆண்டு எண்ணை மட்டும் மாற்றி, மேடை மேல் வைப்பது பார்க்க சகிக்கவில்லையே, ஏன் மாற்றித் தொலைய மாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்கிறீர்?

Read Full Post »