நான் எழுத ஆரம்பித்து தொடர முடியாமல் பதிவை அழிப்பது என்பது இரு ஆளுமைகளைப் பற்றி எழுதும் போது நிறைய நடந்ததுண்டு. ஒருவர் சங்கீத வாணி எம்.எல்.வசந்தகுமாரி. இரண்டாமவர் நான் அருகிலிருந்து தரிசித்த மேதமைக்குச் சொந்தக்காரர் எச்.எம்.வி.ரகு சார்.
இருவரைப் பற்றி எழுதும் போதும் என்ன எழுதினாலும் சொல்ல நினைப்பதை சொல்ல முடியாத பாரம் அழுத்தி எழுதவிடாமல் செய்துவிடும்.
ஓராண்டுக்கு முன் நான் ரசித்த இசைப்பதிவுகள் என்கிற வரிசையில் பத்து இசைப்பதிவுகளைப் பற்றி நாளுக்கொன்றாய் எழுதத் தொடங்கினேன். அந்தத் தொடரில் பத்து பதிவுகளைப் பற்றி எழுத எண்ணியிருந்தேன். அதில் நிச்சயம் எழுத வேண்டும் என்று நான் முதலில் நினைத்த பதிவு ரகு சார் இசையமைப்பில் எம்.எல்.வி அம்மா பாடிய பதிவைத்தான். ஒவ்வொரு நாளும் முயன்று, நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டு, ஒன்பது நாட்கள் வேறு இசைப்பதிவுகளைப் பற்றித்தான் எழுத முடிந்தது.
கார்வையில் முடியாத ராக சஞ்சாரமாய் அந்த எழுதாத பத்தாவது பதிவு பல மாதங்களாய் அலைகழித்துக் கொண்டுதான் இருக்கிறது.
கடந்த சில மாதங்களில், மேதை பாலமுரளிகிருஷ்ணாவின் பிறந்த நாள், ரகு சாரின் பிறந்த நாள் என்று சாக்கிட்டு எச்.எம்.வி.ரகு அவர்களைப் பற்றி சில பதிவுகள் எழுதிய (அசட்டு?) தைரியத்தில், எம்.எல்.வி அம்மாவின் நினைவு நாளில் அந்தப் பத்தாவது பதிவை எழுதத் துணிகிறேன்.
ஸரஸ்வதி ஸ்டோர்ஸ் வெளியீட்டில் ‘பம்பை பாலகனே’ என்கிற பெயரில் 1970-களின் தொடக்கத்தில் ஒரு கிராமஃபோன் ரிக்கார்ட் வெளியானது. அதில் குன்னக்குடி வைத்தியநாதன், ’பள்ளிக்கட்டு சபரிமலைக்கு’ புகழ் வீரமணி போன்றவர்கள் இசையமைத்துள்ளனர். போட்டி நிறுவனம் எச்.எம்.வி-யில் வேலைபார்த்து இசைப்பதிவாளராக ரகு சார் பெரும் பெயர் ஈட்டியிருந்தாலும், அவர் இசையறிவை அறிந்து இசையமைப்பாளராக வாய்ப்பளித்தது ஸரஸ்வதி ஸ்டோர்ஸ்தான். ரகு ஸார் இசையமைத்து பி.சுசீலா பாடிய முருகன் பக்தி பாடல்கள் (தவமிருந்தாலும் கிடைக்காதது நிம்மதி முதலியவை) நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் இந்தப் பதிவிலும் ரகு சாரின் பாடல்கள் இருக்க வேண்டும் என்பது ஸரஸ்வதி ஸ்டோர்ஸ் கண்ணன் நினைத்ததில் ஆச்சர்யமில்லை.

”நல்ல ராகங்களில், எல்லோருக்கும் போய் சேரும்படியாய் இந்த மெட்டுகள் இருகக்ட்டும்”, என்று கண்ணன் ரகு சாரிடம் சொன்னாராம்.
எல்லோருக்கும் போய் சேரும்படியான ராகங்கள் என்றால் – கல்யாணி,மோகனம், சிந்துபைரவி, ரேவதி, சிவரஞ்சனி – என்று தேர்வு செய்திருப்பார் என்று நினைத்தால் உங்களுக்கு ரகு சாரைத் தெரியவில்லை என்று அர்த்தம்.
அவர் தேர்வு செய்த ராகங்கள் காவதி, கோசலம், காங்கேயபூஷணி! (கதையல்ல – நிஜம்!)
அந்த மூன்றில் முதலிரண்டைப் பாடியவர் எம்.எல்.வி அம்மா.
இசையமைத்தவரும் பாடியவரும் சங்கீத கலாநிதி ஜி.என்.பாலசுப்ரமண்யத்தின் சீடர்கள். அவர்கள் இணையும் போது, அவர்கள் குருநாதர் கர்நாடக இசையுலகுக்கு அறிமுகப்படுத்திய காவதியில் பாடலமைந்ததைப் புரிந்து கொள்ள முடிகிறது.
(மலையேறி வருவோர்க்கு – என்ற வார்த்தைகளுக்கு மான்குட்டித் துள்ளலில் மலையேறிக் காட்டும் சங்கதிகள் மனத்தில் தோன்றினாலும் அவற்றை அழிச்சாட்டியமாய் விலக்கி பதிவைத் தொடர்கிறேன்)
காவதி சரி; கோசலம்?
ரகு சாரை தூக்கத்தில் எழுப்பி, ;ஒரு ராகம் பாடுங்களேன்’, என்றால் திய்வமணியையோ, காந்தாமணியையோ பாடுபவர். அவர் கோசலத்தில் அமைத்ததில் எந்த வியப்புமில்லை. ஆனால், எம்.எல்.வி அம்மா விவாதி ராகங்களும் கச்சேரிகளில் பாடியிருக்கிறார் என்றாலும் அவற்றை அவருடைய முதல் தேர்வுகள் என்று சொல்வதற்கில்லை. பக்திப் பாடல் கோசலத்தில் என்பதை அவர் எப்படி எதிர்கொண்டிருப்பார்?
இந்தக் கேள்வியை ஒருநாள் அவர் ரமண கேந்திரத்தில் அவர் அறையில் சமைத்துக் கொண்டிருந்த போது கேட்டேன்.
“பாடினது வசந்தி அக்கா இல்லையா? கோசலமா இருந்தா என்ன? கல்யாணியா இருந்தா என்ன? அவர் பாடறதுக்குக் கேட்கணுமா?’, என்று எதையோ சொல்ல முயன்று உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் விட ஆரம்பித்துவிட்டார் ரகு சார்.
உணர்ச்சிப்பெருக்கு அடங்கியதும், “நான் அப்போது கிராமஃபோன் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும், கச்சேரிகளும் செய்துகொண்டிருந்தேன். ஒருநாள் மாலை கச்சேரியில் கோசலம் பாடி, கோடீஸ்வர ஐயரின் ‘கா குஹா’ பாடினேன். அன்று இரவே கண்ணன் வீட்டுக்கு வந்து இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லிவிட்டு பூவை செங்குட்டுவனின் பாடல் வரிகளையும் கொடுத்துவிட்டுப் போனார். கச்சேரியின் தாக்கம் தொடர்ந்ததால் இந்தப் பாடலை கோசலத்தில் அமைத்தேன்.
என் குரலிலேயே அந்தப் பாடலை பதிவு செய்து வசந்தி அக்காவுக்கு அனுப்பி வைத்தேன். அடுத்த நாள் காலையிலேயே பதிவுக்கு ஏற்பாடாகியிருந்தது. அவர் வந்ததும் ‘பாட்டைக் கேட்டீர்களா?’, என்று ஆவலுடன் கேட்டேன். ‘கேட்டேன் ரகு’ என்று அவர் இழுத்த விதத்திலேயே அவருக்குக் கேட்க நேரமிருந்திருக்கவில்லை என்று புரிந்து கொண்டேன்.
‘இதற்கு பின்னணி இசையெல்லாம் உண்டல்லவா?’, என்று கேட்டார். நான் ஆமாமென்று தலையசைத்தேன்.
”நீ அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பாயல்லவா? அதை நானும் கேட்கிறேன்”, என்றார்.
அவர்களுக்கு நான் ஏற்கெனவே சொல்லி இருந்தாலும் இன்னொருமுறை எம்.எல்.வி அம்மாவின் முன் வாத்தியக் கலைஞர்களுக்குப் பாடிக் காண்பித்தேன்.
ஒரே ஒருமுறை அதைக் கேட்டவர், “டேக் போயிடலாம் ரகு”, என்றுவிட்டார். ஒரே தவணையில் பாடல் பதிவை முடித்துவிட்டோம். சங்கதிகள் எல்லாம் நான் போட்டிருந்தேன் என்றாலும், அவர் சாரீரத்துக்கே உரிய ஜொலிஜொலிப்பில்தான் அவை மிளிர்ந்தன என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. அவர் மேதை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்றாலும் அத்தனை வேகமாய் கற்பூரம் போல அவர் கிரகித்துக் கொண்டதை இப்போது நினைத்தாலும் புளகாங்கிதம் ஏற்படுகிறது”, என்று மீண்டும் தழுதழுக்க ஆரம்பித்துவிட்டார் ரகு சார்.

2015-ல் முதன் முறையாக நான் சபரிமலை யாத்திரைக்குச் சென்றேன். மிகவும் சஞ்சலமான காலகட்டத்தில் ஏனோ அங்கு சென்று வந்தால் ஆறுதலாய் இருக்கும் என்று தோன்றியது. எதைத் தேடிச் சென்றேன் என்று தெரியாமல் ஆனால் எனக்கு வேண்டியது கிடைக்கும் என்கிற உள்ளுணர்வில் சென்ற பயணமது.
பதினெட்டு படிகள் ஏறி, குழுமியிருந்த பக்தர்களுக்கு இடையில் முண்டியடித்துக் கொண்டு முதல் முறை, இரண்டாம் முறை, மூன்றாம் முறை என்று ஐயப்பனைப் பார்த்தது மனதுக்கு இதமாக இருந்தாலும் நான் தேடி வந்த பொருள் சிக்காததைப் போலவே எனக்குத் தோன்றிக் கொண்டிருந்தது.
கொடிக்கம்பத்துக்கு அருகில் உட்கார்ந்து கொண்டிருந்த போது ஒலிப்பெருக்கியில் நாகஸ்வரத்தில் கல்யாணி ராகம் ஒலித்துக் கொண்டிருந்தது.
பதநீதப
மபதநீதப
கமபதநீதப
என்று பஞ்சமத்தை மையமாக்கி காந்தாரத்திலிருந்து நிஷாதம் வரை சுற்றிச் சுற்றி ஒலித்த அந்த சஞ்சாரங்கள் மனத்தில் ஒட்டிக் கொண்டன.
கோயிலைவிட்டுக் கிளம்பி அறைக்குச் சென்ற பின்னும் கூட அந்த சஞ்சாரங்கள் மனத்துக்குள் அலையடித்துக் கொண்டே இருந்தன. ஏதோ ஒருகணப்பொழுதில் ஒலித்துக் கொண்டிருந்த ஸ்வரக் கோவைகளில் ஷட்ஸ்ருதி ரிஷபம் சேர்ந்து கொண்டு பளீரென்று மின்னல் வெட்டியது.
கல்யாணி கோசலமாய் மாறியது.
செலுத்தப்பட்டவன் போல நான் என் கைப்பேசியை இயக்கினேன். யுடியூபைத் திறந்து ‘கண்கண்ட தெய்வம்’ பாடலை ஒலிக்கவிட்டேன்.
என் மனம் கல்யாணியிலிருந்து கோசலத்துக்கு தாவியது என்பதால் கோசலம் என்னமோ கல்யாணிக்கு உடன்பிறந்த ராகம் என்று நினைத்துவிட வேண்டாம். மருந்துக்கும் கல்யாணி சாயல் தெரியாமல் ஒவ்வொரு துளியிலும் கோசலம் தனித்துவமாகவே ஒலிக்கக்கூடுமென்பதற்கு இந்தப் பாடலைத் தாண்டி எங்கும் செல்ல வேண்டியதில்லை.
முன்னோட்ட இசையைத் தாண்டி பல்லவியைக் கேட்கும் போது என் மனத்தில் அமைதி ஏற்படுவது போன்றத் தோன்றினாலும் இன்னொரு பக்கம் மனம் பாடலை ஆராயத் தொடங்கியது.
இந்தப்பாடலைப் போன்ற பக்திப் பாடல்கள் கர்நாடக ராகங்கள் அமைந்திருந்தாலும் அவற்றை கீர்த்தனைகளை அணுகுவது போல அணுகமுடியாது. அதனாலேயே அவற்றை (அதிகபட்சம்) semi classical என்று வகைப்படுத்துகிறோம். ஒரு தேர்ந்த கர்நாடக இசைக் கலைஞர் இது போன்ற பாடல்களைப் பாடும் போது அளவுக்கு அதிகமாய் ‘கர்நாடகத்தன்மை’-யுடன் பாடுவதற்கான சாத்தியங்கள் அதிகம். இந்தப் பாடலில் எந்தவொரு இடத்திலும் அத்தகு மிகுதிகளைக் காணவியலாது. (நிறைய திரைப்பாடல்களும் பாடியுள்ள எம்.எல்.வி மிகாமல் பாடியது ஆச்சர்யமில்லை என்பது வேறு விஷயம்.)
சரணத்தில்,
“பாவங்களைத் தீர்த்து வைக்கும் பம்பா நதி;
பயபக்தியோடு தீர்த்தமாட பெரும் நதி”
இந்த வரிகளில் நதியென்ற என்ற வார்த்தையில் நறுக்குக் கத்தரித்தது போல கூர்மையான நிறுத்தங்களை நினைக்கும் போதே தார ஸ்தாயிக்கு தூக்கிச் சென்றது ‘அச்சன்கோயில்’ சஞ்சாரம். அடுத்த வரியில் இறங்கும் வழியில் விசேஷ விவாதி ஸ்வரங்களை தரிசனம் செய்வித்து தட்டாமலைச் சுற்றிக் காட்டித் தரையைத் தொடும் அந்த இரண்டாவது ‘ஐயன்கோயில்’.
‘அடியவர்க்கு துணிவு தரும் ஐயன்கோயில்’
நான் தேடி வந்த மருந்து எனக்குக் கிடைத்துவிட்டது. நான் தேடி வந்த ஐயப்பன் இருக்கும் ‘ஐயன்கோயிலை’ நான் உணர்ந்து கொண்டேன்.
அத்தனை வேகத்திலும், துல்லியமாகவும், கம்பீரமாகவும், நறுவிசாகவும் அந்த ‘ஐயன்கோயில்’ சங்கதி.
இன்னும் எவ்வளவு சொன்னாலும் அந்தக் கோசல சங்கதியின் சௌந்தர்யத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியப்போவதில்லை. அதனால் என்ன கெட்டுவிட்டது இப்போது? காற்று மண்டலத்தில் கரைந்துவிட்ட கச்சேரி சங்கதியாய் இருந்தால் வருத்தப்படலாம். இதுதான் சாஸ்வதமாகிவிட்ட கிராமஃபோன் பதிவுதானே?
மகாவிதுஷியின் நினைவு நாளின் நீங்களும் கேட்டுத்தான் பாருங்களேன்.