Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘layam’

கச்சேரி செய்யும் கலைஞர்கள் வீட்டின் அறைகள் என்றால், அவர்களை உருவாக்கும் பணியைச் செய்பவர்கள் (சில ஹை-டெக் வாத்தியார்கள் நீக்கி) வீட்டின் அஸ்திவாரம் போன்றவர்கள். இவர்கள் கண்ணில் பட மாட்டார்கள். இவர்களைக் கண்டாக வேண்டுமெனில் நிச்சயம் செய்முறை (லெக்-டெம்) விளக்க நிகழ்வுகளுக்காகக் காத்திருக்க வேண்டும்.

22-ம் தேதி லெக் டெம்-க்காக வந்திருந்த ஜெ.வி என்று பரவலாய் அழைக்கப் படும் திருச்சி ஜெ.வெங்கடராமன் இவர்களுள் ஒருவர். ஆலத்தூர் வெங்கடேச ஐயரிடம் குருகுலவாசம் செய்தவர். சௌக்யத்துக்கு மதுரை மணி, பளிச்சென்று பாடுவதற்கு செம்பை, புதுமைகளைப் புகுத்த ஜி.என்.பி என்றிருந்த காலத்தில் லயத்துக்காக உழைத்துப் பெயர் பெற்று விளங்கியவர்கள் ஆலத்தூர் சகோதரர்கள். அந்த வழியில் வந்துள்ள ஜெவி-யும் லய சமாசாரங்களில் அசுர சாதகம் செய்துள்ளார். கரணம் தப்பினால் மரணம் வகை கணக்குகளை அநாயாசமாகப் பாடக் கூடியவர். கச்சேரி செய்யும் ஆற்றல் வாய்த்ததும் வழைமை போல் சென்னைக்குக் குடி பெயராமல், இன்றளவும் திருச்சியில் இருந்து வருபவர். அரை நூற்றாண்டுக்கு மேலாகப் பல மாணவர்களைத் தயார் செய்து வருபவர். சில வருடங்களாய் கச்சேரி உலகில் பிரபலமடைந்து வரும் பிரதீப் குமார் இவரது சீடர்தான்.

இள வயது நினைவுகளை அசை போடும்போது, “என் தாத்தா வெங்கடராம தீட்சிதர் ஃபிடில் வாசிப்பார். எங்கள் குடும்பத்தில் முதன் முதலில் இசையில் ஈடுபட்டவர் அவர்தான். அவர் வழியில் என் அப்பா ஜெயராமனும் வயலின் வித்வானாக விளங்கினார். அவருடைய சிறு வயதிலேயே தாயை இழந்துவிட்ட நிலையில், என் அப்பா பல இடர்களுக்கிடையில் சங்கீதத்தைக் கற்று அத்துறையில் ஈடுபட்டு வந்தார்.”, என்கிறார்.

இள வயது முதல் தந்தையாரிடம் சங்கீதம் பயின்று வந்த ஜெவி, எஸ்.எஸ்.எல்.சி முடித்து, தட்டச்சில் உயர்நிலைப் பிரிவிலும் தேறியிருந்த போதும் வேறு வேலைக்குச் செல்லவில்லை.  “நீ சங்கீதத்தில் முழு நேரம் ஈடுபட்டால்தான் எனக்கு நிறைவாக இருக்கும் என்று அப்பா சொன்னார். என் அம்மாவுக்கு அதில் விருப்பம் இல்லை என்ற போதும் நான் அதன்படி நடந்தேன்.”, என்கிறார்.

அதன் பின் ஆலத்தூர் சுப்பையரின் தந்தையாரிடம் (வெங்கடேச ஐயர்) குருகுல வாசம் செய்து வந்த போதும் வறுமை இவரைப் பெரும் மன இறுக்கத்துக்குள் தள்ளியது. அதிலிருந்து விடுபடக் காரணமாய் இருந்தவர் பழநி சுப்ரமணிய பிள்ளை.  “திருச்சி வந்திருந்தபோது நான் பாடுவதைக் கேட்டு என்னை அகாடமிக்கு எழுதிப் போடச் சொன்னார். பிறகு என்ன தோன்றியதோ தெரியவில்லை,  ‘அதெல்லாம் ஒன்றும் எழுத வேண்டாம்! நான் பாத்துக்கறேன்’, என்று சென்றுவிட்டார். அந்த வருடம் அகாடமியில் பாட வாய்ப்பு கிடைத்தது. பாடிய பின் அந்த வருடத்தில் நான் பாடிய ஸ்லாட்டுக்கான சிறந்த கச்சேரிக்காகத் தம்புரா பரிசு கிடைத்து. அது என் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அவர் எனக்கு உதவியிருக்க வேண்டிய அவசியமே இல்லை. பாட்டைக் கேட்டுவிட்டு ஒற்றை வார்த்தையில் நன்றாயிருக்கிறது என்று சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்.”, என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஜெவி.

சென்னையில் வந்து பாடிய சீஸனில், 15 நாட்களுக்கும் மேல் பழநி சுப்ரமணிய பிள்ளை வீட்டிலேயே தங்கியது அவருக்கு பல படிப்பினைகளை அளித்தது. பழநியின் வாசிப்பும், ஜெவி-யின் பாட்டைக் கேட்டு மேலும் பல புதிய கல்பனைகள் செய்ய தூண்டுதலாய் அமையும் படி அவர் கூறிய விஷயங்களும், ஜெவி-யை லயத்தினுள் இழுத்தன.

“லயத்தில் அதிகம் ஈடுபட்டால் சௌக்கியம் போய்விடும் என்று சொல்கிறார்கள். அதை விட ஒரு பெரிய பொய் இருக்கவே முடியாது. இன்னும் சொல்லப் போனால் லயத்தில் ஈடுபாடு இருந்தால்தான் சௌக்யமாகப் பாட முடியும். நாம் நடந்து செல்லும்போது, நடை சீராக இல்லை என்றால் விழுந்துவிட மாட்டோமா? அந்த சீரான நடைதான் லயம்.  பழநி அவர்களுக்கு உடம்பு முழுவதும் கணக்குதான், ஆனால் அவர் மதுரை மணிக்கு வாசிக்கும்போது சௌக்யத்தின் சிகரமாகத்தானே வாசித்துள்ளார்? லயத்தில் ஈடுபட்டதால் அவர் வாசிப்பில் சௌக்யம் குறைந்தா போய்விட்டது”, என்று எதிர்கேள்வி எழுப்புகிறார்.

“தாங்கள் போன வருடம் செய்த சாவேரி வர்ண லெக்-டெம், பாடுவதைப் போலவே கேட்டு ரசிக்கவும் மிகக் கடினமானதாக விளங்கியதே”, என்று கேட்டதற்கு, “அது மாணவர்களுக்காகச் செய்த விளக்கம். லயத்தில் தேர்ச்சி ஏற்பட, காலப்ரமாணம் சீராய் அமைய மாணவர்கள் பயிற்சி செய்ய வேண்டிய முறை. அப்படி கச்சேரியில் பாட வேண்டும் என்று ஒரு நாளும் சொல்லவில்லை. பாடினால் நன்றாகவும் இருக்காது”, என்று தெளிவுபடுத்துகிறார் ஜெவி.

சென்னையில் தங்கினால் நல்ல எதிர்காலம் அமையும் என்று பழநி கூறிய போதும், குடும்பச் சூழல் ஜெவி-யை திருச்சியை நீங்க விடவில்லை. எஸ்.வி.பார்த்தசாரதி என்ற மியூசிக் புரொட்யூசரின் உதவியால் கிடைத்த ஆல் இந்தியா ரேடியோ வேலை, சமய சஞ்சீவினியாய் இவருக்கு அமைந்துள்ளது. “நான் நிறைய கஷ்டங்களைப் பார்த்துவிட்டதால், கேட்டவருக்கெல்லாம் தடையின்றி பாடம் சொல்லி வைக்க வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையை வளர்த்துக் கொண்டேன்”, என்கிறார் காவேரிக் கரைக்குரிய நக்கலுடன்.

தனது பத்தொன்பதாவது வயது தொடங்கி கிட்டத்தட்ட 59 வருடங்களாக ஆசிரியராய் விளங்கும் இவர் உருவாக்கிய மாணவர்கள் ஏராளம். இள வயதில் பல ஊர்களுக்குச் சென்றும் பாட்டு சொல்லி வைத்துள்ளார். இன்றோ பெங்களூர், பாம்பே, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று பல இடங்களிருந்து மாணவர்கள் இவரை நாடி வருகின்றனர். “அது என்னமோ கம்ப்யூடர்ல வெச்சு சொல்லிக் குடுக்கலாமாமே? அப்படிக் கூட சில பேர் கேட்கிறா!”, என்கிறார் வெகுளியாக.

லயத்தில் இன்று சிறப்புடன் திகழ்பவர் என்ற போதும் அனைத்து மாணவர்களுக்கும் கடும் லயப் பயிற்சிகள் அளிப்பதில்லை. அதில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மட்டுமே ஆழமான விஷயங்களைச் சொல்லித் தருகிறார். “எதைக் கேட்டு வருகிறார்களோ அதையே சொல்லி வைப்பதுதான் என் வழக்கம். ஒருவருக்கு நிரவல் பிடிக்கலாம். இன்னும் சிலருக்கு அரிய கிருதிகள் பிடிக்கலாம். அவர்களைப் போய் நடை பல்லவி பாடினால்தான் ஆச்சு என்று சொல்ல முடியாது.”, என்கிறார்.

இந்த லய நுணுக்கங்கள் எல்லாம் கைவருவது எல்லோருக்கும் சாத்தியமா என்ற கேள்வி அவரைக் கோபப் படுத்திவிட்டது. “கோயமத்தூரில் கிருஷ்ணமூர்த்தி என்றொரு வித்வான் இருக்கிறார். இரண்டு கையுமில்லை, இரண்டு காலும் இல்லை. இருந்தும் தளராமல் சங்கீதம் பயின்று, ஜனாதிபதி மாளிகையில் அழைக்கப்பட்டு கச்சேரி செய்யும் அளவுக்கு வந்திருக்கிறார்.  உழைப்பு மட்டும் இருந்தால் ‘வராது’ என்று எதுவுமே இல்லை.”, என்றார் சூடாக.

மாணவர்களுக்குச் சொல்லித் தருவதைத் தவிர, 90 திருப்புகழ்களுக்கும் பல திவ்ய பிரபந்தங்களுக்கும் மெட்டமைத்துள்ளார். “திருப்புகழில் ஈடுபாடு என் குருநாதரிடம் இருந்து வந்தது. அவர் கஞ்சிரா மகாவித்வான் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளையின் பக்தர் என்றே சொல்லலாம். தட்சிணாமூர்த்தி பிள்லை பெரிய முருக பக்தர். அற்புதமாய்த் திருப்புகழ் பாடுவார். அதனால் என் குருநாதர் திருப்புகழை விரும்பிச் சொல்லித் தருவார். ஆலத்தூர் சகோதரர்கள் திருப்புகழை வைத்தே கச்சேரிகள் செய்துள்ளனர். திருப்புகழில் விசேஷமே சந்த தாளம்தான். அந்த தாளங்களில், என்னால் இயன்ற வரை மெட்டமைத்துள்ளேன். குறைந்த பட்சம் 300 திருப்புகழ் பாடல்களுக்காவது மெட்டமைக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது.”, என்கிறார்.

வாழ்வில் பல ஏற்ற இறக்கங்களைப் பார்த்துவிட்ட ஜெவி, இன்னும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறாரா?

“நான் பாடம் செய்துள்ள கீர்த்தனைகள் குறைச்சல் என்றுதான் நினைக்கிறேன். இன்னும் நிறைய அரிய கீர்த்தனைகளை கற்றுக் கொள்ள வேண்டும். அவற்றை பல பேருக்குச் சொல்லித் தர வேண்டும். வாழ்வில் எப்போதும் சும்மா இருந்துவிடக் கூடிய நிலை வந்துவிடக் கூடாது. பாடம் சொல்லிக் கொடுக்கும் போதே என் உயிர் பிரிய வேண்டும் என்பதுதான் என் ஆசை”, என்று புன்னகைக்கிறார் ஜெவி.

Read Full Post »