Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘Madurai Somu’

மதுரை சோமுவைப் பற்றிய என் உரையில் சோமுவின் பதிவுகளில் இருந்து பல சிறு பகுதிகளைப் போட நினைத்தேன். நான் தேர்ந்தெடுத்த பகுதிகளில் உச்சமென்று நான் கருதியது ஷண்முகப்ரியா ஆலாபனையின் ஒரு பகுதியை.

அந்த சின்ன பகுதி நமக்குப் பல செய்திகளைச் சொல்லக்கூடியவொன்று.

மியூசிக் அகாடமியில் நடந்த கச்சேரியில், ராகம் தானம் பல்லவிக்காகப் பாடிய பிரதான ராகத்தில் இருந்து ஒரு பகுதி.

தார ஸ்தாயி ரிஷபம் ஆலாபனையின் மையமாகும் போது தன் சிஷ்யனை நீ பாடு என்கிறார்.

அரங்கேற்றம் என்றால், பல லட்சங்கள் செலவு வைத்து ஊரைக் கூட்டினால்தான் என்று இல்லை. சங்கீத வித்வத் சபையில் பிரதான ராகத்தில் முக்கியமான இடத்தில் சிஷ்யனை “நீ பாடு” என்றாலும் அது அரங்கேற்றம்தான்.

நாகஸ்வர பாணியில் ராகம் பாடிய பலர் உண்டு. குரலை நாகஸ்வரமாகவே ஆக்கிப்பாடியவர் அனேகமாய் சோமுவாகத்தான் இருக்கமுடியும்.

நாகஸ்வரத்தில் இருவர் சேர்ந்து இசைக்கும் போது, ஆலாபனையின் உச்சகட்டத்தில் மாற்றி மாற்றி “கொடுக்கல் வாங்கலாக” வாசிப்பது வழக்கம். இந்த கச்சேரியில் தன் சிஷ்யனை பாட வைத்து அந்த இரட்டை நாகஸ்வர சூழலை உருவாக்குகிறார் சோமு.

சோமுவின் குரலைப் பற்றி பல புரளிகள் உண்டு. அவற்றில் ஒன்று அவருக்கு மந்திர ஸ்தாயியில் குரல் பேசாது என்பது. இந்த ஆலாபனையின் கடைசியில் சோமு பாடியிருக்கும் மந்திர ஸ்தாயி சஞ்சாரங்களைக் கேட்டால் உண்மையை உணர முடியும்.

சரி, என்ன பேசி என்ன? இனிப்பு இனிப்பு என்று எழுதினால் இனிக்கவா போகிறது. இணைப்பைக் கொடுத்துவிடுகிறேன். இனிப்பை நீங்களே சுவைத்துக்கொள்ளுங்கள்.

 

Read Full Post »

2019-ஐ திரும்பிப் பார்க்கும் போது அதில் மதுரை சோமு வியாபித்திருக்கிறார். அவருடைய பதிவுகள், அவருடைய ரசிகர்களுடனான பேச்சு, அவர் குடும்பத்தாருடனான தொடர்பு, அவர் சீடர்களுடன் நேர்காணல், அவரைப் பார்த்து இசைக்கு வந்த கலைஞர்களின் தரிசனங்கள் என்று 2019-ல் நடந்த மற்ற எதையும் உதறித் தள்ளும்படியாய் சோமுவின் நூற்றாண்டு எனக்கு அமைந்தது பேறுதான்.

அதன் விளைவாய் ஒரு நீண்ட கட்டுரையை அவரைப் பற்றி எழுதினேன். அவர் இசையுடன் கூடிய நீண்ட உரை ஒன்றையும் தயார் செய்தேன். கட்டுரை விரைவில் வருகிறது. வந்ததும் இங்கு பகிர்கிறேன். உரையின் சுருக்கப்பட்ட வடிவத்தை கடந்த டிசம்பர் 25 அன்று சென்னை சங்கீத வித்வத் சபையில் பேச முடிந்தது. அதை இங்கு காணலாம்.

 

நண்பர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகள்.

Read Full Post »

இந்தக் கட்டுரை, மாணவர்களுக்காக தினமலர் வெளியிடும் பட்டம் இதழில் வெளியானது. என் சேமிப்புக்காக இங்கும் இட்டுக் கொள்கிறேன்.

PHOTO-2019-07-31-11-40-14

திருச்செந்தூரின் கடலோரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களை கிருபானந்தவாரியாரின் சொல்லமுது கட்டிவைத்திருந்தது. அப்போது ஒரு வித்வான் அரங்குக்குள் நுழைவதைப் பார்த்து வாரியார் சொன்னார், “இவ்வளவு நேரம் நான் என் அப்பன் முருகனைப் பத்திச் சொன்னேன். என் தம்பி இதோ வந்துட்டான், அவன் முருகனைக் கையைப்பிடிச்சுக் கொண்டுவந்து உங்க கண் முன்னால நிறுத்துவான்”.

வாரியார் குறிப்பிட்ட கலைஞர் ரஞ்சிதகானமணி மதுரை எஸ்.சோமசுந்தரம்.  ஃபெப்ரவரி 09-ம் தேதி, 1919-ல் (ஆம்! இந்த வருடம் நூற்றாண்டுதான்) சுவாமிமலையில் பிறந்த சோமுவின் இயற்பெயர் பரமசிவம். அரசுப்பணியில் இருந்த சோமுவின் தந்தையார் பணி நிமித்தமாக குடும்பத்துடன் மதுரைக்குப் பெயர்ந்தார்.

சிறு வயதில் குஸ்தி, சிலம்பம் போன்றவற்றில் ஆர்வத்துடன் பயிற்சி பெற்று வந்தார் சோமு. அங்கு பயிற்சியாளராக இருந்த நாராயண கோனார் காளீஸ்வரன் கோயிலில் பக்திப்பாடல்கள் பாடுவார். அவருக்குத் துணையாய் ஸ்ருதிப்பெட்டியை இசைப்பார் சோமு. ஒருநாள் நாராயணக் கோனாருக்காக கோயிலில் காத்திருந்த சோமு களைப்பில் தூங்கிப் போனார். அப்போது அவர் கனவில் காளி வந்து, “நீ இசைக் கற்றுக்கொள்”, என்று பணித்ததாக ஒரு நேர்காணலில் சோமுவே குறிப்பிட்டுள்ளார்.

ஆறாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு சங்கீத்தத்தில் மூழ்கிய சோமு, ஒரு கச்சேரியில் சித்தூர் சுப்ரமண்ய பிள்ளை பாடியதைக் கேட்டுமயங்கி அவரிடம் மாணவனாகச் சேர்ந்தார். பதினான்கு வருடங்கள் குருகுலவாசம் செய்து நாயனாப் பிள்ளை இசைப் பாரம்பரியத்தின் முக்கிய வாரிசாக தன்னை உருவாக்கிக்கொண்டார்.

ஒரு மாணவனின் வளர்ச்சிக்கு குருவிடம் கற்பதைத் தவிர, தன்னைச் சுற்றியுள்ள நல்ல இசையை செவியாறுதலிலும் முக்கிய பங்குவுண்டு. அவ்வகையில், மதுரை சோமு அந்தக் காலத்தில் கோலோச்சிய ராஜரத்தினம் பிள்ளை, மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர், ஜி.என்.பி போன்றவர்களின் இசையை தொடர்ந்து கேட்டு அவற்றுள் உள்ல நல்ல விஷயங்களை தன் குரலுக்கேற்ப மாற்றிக் கொண்டு தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டார். 1940-களில் கச்சேரி அரங்கில் நுழைந்த சோமு, வெகு சீக்கிரத்திலேயே இசை ரசிகர்களின் கவனத்தைக் கவர ஆரம்பித்தார்.

1950-களில் உச்சிக்கு வந்த சோமு கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் இசையரசராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். அவர் கச்சேரி நடக்காத கிராமமே தமிழகத்தில் இல்லையெனலாம். “ஒருமுறை வீட்டை விட்டு கச்சேரிக்கு கிளம்பிவிட்டால் திரும்ப வீட்டுக்கு வர குறைந்தபட்சம் 35 நாட்கள் ஆகும். ஊர் ஊராய் கச்சேரிக்காக பயணித்துக்கொண்டே இருப்போம்.”, என்கிறார் சோமுவின் சீடர் மழையூர் சதாசிவம்.

கர்நாடக இசையைப் பொருத்த வகையில், அந்த வடிவத்தின் ஆழங்களைத் தொட்டுப் பாடுபவர்களுக்குப் பெரும்பாலும் பெரிய ரசிகர்கூட்டம் வாய்க்காது. ஜனரஞ்சகமாகப் பாடி கூட்டத்தைக் கவர்பவர்கள் பாட்டில் ஆழங்களைக் காணமுடியாது. சோமுவைப் போன்ற ஒருசில மேதைகளுக்குத்தான் இவ்விரண்டும் ஒருசேர சாத்தியமாகிறது. இசை இலக்கண தேர்ச்சி என்பது பலசமயங்களில் கலைஞனை தன்னை இழந்துபாடுவதிலிருந்து தடுத்துவிடுவதுண்டு. சோமுவைப் பொருத்தமட்டில் இலக்கணம் அவரை என்றும் தடுத்ததில்லை. கற்பனையைக் குலைக்கும் பட்சத்தில் அந்தத் தளையைத் தூக்கியெறிவதையும் அழகுணர்ச்சிகெடாமல் செய்தவர் சோமு.

மேடையேறிவிட்டால் அங்கு சோமு என்னும் இசைக் கலைஞரைப் பார்க்க முடியாது. மாறாக சங்கீத தேவதையின் உபாசகராக, ராக சௌந்தர்யத்தின் ரசிகராக சோமு வீற்றிருப்பதைத்தான் காண முடியும். தன் அனுபவத்தை ரசிகரின் அனுபவமாகவும் கடத்த முடிந்தததால், பாட்டுக்கிடையில் சோமு விக்கத்த போது ரசிகர்களும் விக்கினர். அவர் கண்கலங்கிய போது ரசிகர்களும் அழுதனர், அவர் துள்ளிக் குதித்த போது ரசிகர்களும் ஆனந்தக் கூத்தாடினர்.

செம்மங்குடி சீனிவாஸ ஐயர் ஒருமுறை, “ராகங்கள் எல்லாம் தேவதைகள். ராக ஸ்வரூபம் வெளிப்படும்படி பாட அந்த ராக தேவதையின் அருள் வேண்டும். பொதுவாக கலைஞர்கள் எல்லாம் அந்த தேவதையின் அருளை நோக்கி தவமிருப்பார்கள். சோமுவைப் பொறுத்தவரை ராகங்கள் எல்லாம் “என்னைப்பாடு சோமு”, என்று சோமுவிடம் தவம்கிடக்கின்றன.”, என்றுள்ளார். இதைவிட அந்த நூற்றாண்டு நாயகனைப் பற்றி வேறென்ன சொல்லிவிடமுடியும்?

பெட்டிச் செய்தி

கர்நாடக இசைக் கலைஞராக ஒவ்வொரு ஊரிலும் அறிந்தவராக இருந்த சோமுவை தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கும் தெரியப்படுத்திய பெருமை ‘தெய்வம்’ படத்தில் அவர்பாடியுள்ள ‘மருதமலை மாமணியே’ பாடலையே சேரும். தர்பாரி கானடா ராகத்தில் சோமுவின் பாணியிலேயே அமைந்த அந்தப்பாடல் இன்றளவும் தமிழகத்தில் ஒலிக்காத நாளில்லை. எந்த ஊரில் சோமுவின் கச்சேரி எத்தனை மணி நேரங்களுக்கு நடந்தாலும், இந்தப்பாடலை எப்போது பாடுவார் சோமு என்று காத்திருக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுத் தந்தபாடலிது. இதைத் தவிர ’சஷ்டி விரதம்’ என்கிற படத்திலும் சோமு பாடியுள்ளார். (This line is edited out in the published article due to want of space). சோமு இசையமைத்துப்பாடி வெளிவராத படமான ‘அவளுக்காகவே நான்’ என்கிற படத்தைப் பற்றி சமீபத்தில் இசையாய்வாளர் சரவணன் (Saravanan Natarajan) கவனப்படுத்தியுள்ளார்.

Read Full Post »