Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘mridangam’

வித்வான் மதுரை சீனிவாஸன் மறைந்த போது எழுதிய பதிவு. அவருடைய 87-வது பிறந்த நாளில் இங்கு இட்டுக் கொள்கிறேன்.

போன வருடம் அக்டோபர் 29-ம் தேதி மற்றுமொரு நாளாகத்தான் கடந்து கொண்டிருந்தது. இலக்கில்லாமல் ஃபேஸ்புக்கை மேய்ந்து கொண்டிருந்த போதுதான் ’சீனா குட்டி’ என்று அறியப்பட்ட வித்வான் மதுரை சீனிவாசன் மறைந்த செய்தி கண்ணில்பட்டது.

“இரண்டு வருடங்களுக்கு முன் நான் அவரைச் சந்தித்த போது தொலைபேசி அவரை அழைத்திராதிருந்தால்…”, என்று அத்தைக்கு மீசை வளர்த்தபடி அவருடன் கழித்த அந்த ஞாயிறு காலையை மனத்துக்குள் ஓட்டிப் பார்த்தேன்.

வளசரவாக்கம் பெத்தானியா நகரில் அவர் வீட்டை அடைந்த போது, அவர் வீட்டின் உள் அறையில் ஒரு மாணவிக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்கு அப்போது கிட்டத்தட்ட 77 வயது. தன் வயதை விட 15 வயது குறைந்தவராய் எனக்குத் தோன்றினார். வித்வான்கள் வழக்கமாய் வெளிப்படுத்தும் போலி சுயதாழ்த்தலோ, அபரிமிதமான உதட்டளவு உபசரிப்போ கிஞ்சித்தும் இல்லாமல் உரத்த குரலில் என்னிடம் அன்பொழுகப் பேசினார். அவர் பெரிய சிரிப்பை உதிர்த்த போதெல்லாம் அவர் கண்களும் சிரித்து என்னைப் பெரிதும் கவர்ந்தன. அவர் கையில் இருந்த நீளமான 192 பக்க நோட்டுப் புத்தகம், பல முறை உபயோகத்தினால் ஓரங்களில் நைந்திருந்தது. அவர் புனைந்திருந்த பாடல்களின் தொகுப்பே அந்த நோட்டுப் புத்தகம் என்பது பேச்சு வாக்கில் தெரிய வந்தது.

‘கருணை தெய்வமே கற்பகமே’ என்ற சிந்து பைரவி ராகப் பாடல் உலகப் பிரசித்தி பெற்றது. இந்தப் பாடலைத் தவிர அவர் பாடல் வேறு ஒன்றையும் நான் கேட்டிராதபடியால், அந்த நோட்டுப் புத்தகத்தைப் பார்த்ததும் அவற்றைக் கேட்க வேண்டும் என்ற ஆசை துளிர்த்தது. தயங்கித் தயங்கி அவரிடம் அதைச் சொன்னேன்.

மீண்டுமொரு அந்தக் கண்கள் சிரித்தன. “இவளுக்கே நிறைய பாடமுண்டு”, என்று அவர் மாணவியை நோக்கி “ஒரு அரை மணி பாடலாமா? உனக்கு டைம் இருக்கா?”, என்றார்.

அந்தப் பெண் ஸ்ருதியுடன் கலந்து பாட ஆரம்பித்தாள்.

அவரிடம் திரையுலக அனுபவங்கள். கச்சேரியில் வாசிப்பதற்கும் சினிமாவுக்கு வாசிப்பதற்கும் உள்ள வேறுபாடு, சினிமாவில் வாசித்ததால் அவர் கச்சேரி வாய்ப்புகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றியெல்லாம் கேட்க நினைத்திருந்தேன். அவர் பாடல்களை அந்த மாணவி பாட ஆரம்பித்ததும் அவர் வாக்கேயக்கார முகத்தை கடந்து செல்ல மனம் ஒப்பவில்லை.

31THSRINIVASAN

சுத்த தன்யாஸி வர்ணம் அறை நிரம்பி ஓய்ந்த போது, “இது மிருதங்க கலைஞர் அமைத்த பாட்டா”, என்று ஆச்சர்யப்பட்டேன். ஒரு வாய்ப்பாட்டுக்காரரோ, வயலின் கலைஞரோ கடினமான கணக்குகளை உபயோகித்து பாடல்களை புனைந்தால் நமக்கு ஆச்சர்யம் ஏற்படுவதில்லை. ஆனால், ஒரு மிருதங்க கலைஞர் கணக்கு வழக்குகளை பின்னுக்குத் தள்ளி ராக பாவம் சொட்டச் சொட்ட பாடல்களைப் புனைந்திருப்பதைப் பார்க்க ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

சீனிவாசனின் பாடல்களில் ராகத்தின் புதிய பரிமாணங்களையோ, அதிசய லய கோவைகளையோ, கவித்துவம் வாய்ந்த வரிகளையோ நான் கண்டுகொள்ளவில்லை (நான் கண்டு கொள்ளாததால் அவை இல்லை என்று அர்த்தமாகாது). அந்தப் பாடல்களை ஒரு முறை கேட்டாலும் மனதில் ஒட்டிக் கொள்ளும்படியாய் அவை புனையப்பட்டிருக்கின்றன. ராகத்தின் சாரம் இதுதான் என்பதை எளிமையாக எடுத்துக் கூறும் வகையில் அமைந்துள்ளன. எட்டு ராகங்களில் அமைந்த அவரது அஷ்ட ராகமாலிகையில் ஒரு வரிதான் ஒரு ராகத்தில் அமைந்துள்ளது என்ற போதும், அந்த ஒரு வரியிலேயே ராகத்தின் ஜீவகளை அழகாக வெளிக் கொணரப்பட்டிருக்கிறது. அழகிய லய வேலைபாடுகள் பொதிந்துள்ள அவரது சுத்த தன்யாஸி வர்ணத்தின் சிட்டை ஸ்வரத்தை, வெறும் ராக பாவத்துக்காக மட்டுமே ரசிக்க முடியும். மூச்சிரைக்க விரட்டிப் பிடிக்கும் ‘பண்டுரீதி’ பாடலைக் (தியாகராஜர் என்ன காலப்ரமாணத்தில் அமைத்தாரென்று தெரியவில்லை. எலியைப் பார்த்த பூனை போல எட்டித் தாவும் காலப்ரமாணமே இன்று கேட்கக் கிடைக்கிறது) கேட்பதை விட இதமாய் வருடம் ‘மந்த்ர பலம்’ என்ற சீனிவாஸனின் கிருதியைக் கேட்டால் ஹம்ஸநாத ராக அமைப்பை எளிதில் புரிந்து கொள்ள முடியும். ராகங்களை அடையாளம் காண ஸ்வர ஞானம் தேவையில்லை. இது போன்ற பாடல்களின் போக்குகளை மனதில் நிறுத்திக் கொண்டாலே போதுமானது. அச்சுறுத்தாத வகையில் மாணவர்களுக்கு ராகப் பிரயோகங்கள் பரிச்சயமாக இந்தக் கீர்த்தனங்கள் உதவியாய் இருக்கும்.

கன ராகம், ரக்தி ராகம், சின்ன ராகம், பெரிய ராகம், பிரபல ராகம், அபூர்வ ராகம், ஹிந்துஸ்தானி, கர்நாடகம் என்று அனைத்து வகைகளிலும் சீனிவாஸனின் கிருதிகள் மிளிர்கின்றன. ஆறு அட்சரத்தில் தொடங்கி பதினான்கு அட்சரம் வரையில், ஒன்பது தாளங்களில் சீனிவாசனின் வர்ணங்கள் அமைந்துள்ளன. வாசந்தி, ஜோதிஸ்வரூபிணி, நீதிமதி போன்ற ராகங்களுக்கு இந்த வர்ணங்கள் வரப்ரசாதம். இருபத்திமூன்று தில்லானாக்கள் செய்துள்ள சீனிவாசன் அவற்றைப் பற்றி, “தில்லானாவின் கடைசியில் ஸ்வரமும் ஜதியும் கலந்து வரும். இந்தப் பகுதியில் ஸ்வரமும் ஜதியும் சமமான அளவில் வரவேண்டும் என்று அவசியம் இல்லை. பெரும்பாலான தில்லானாகளில் இப்படி சமமாக இல்லாமல்தான் இருக்கின்றன. என்னுடைய அத்தனை தில்லானாகளும், ‘சம எடை’ தில்லாகளாகத்தான் அமைந்துள்ளன.”, என்கிறார்.

‘விளையாட்டாய் ஏதோ செய்ய ஆரம்பித்தேன்’, என்று தன் பாடல்களைப் பற்றி கூறும் சீனிவாசன் நூறு உருப்படிகளுக்கு மேல் கவனம் செய்துள்ளார். திருமால், ஐயப்பன், முருகன், அம்பிகை என்று பல்வேறு தெய்வங்களையும், மதுரை, ஸ்ரீரங்கம், அழகர்கோயில் போன்ற பல்வேறு க்ஷேத்ரங்களையும் பாடு பொருளாய் கொண்டிருக்கிறார். ராகவேந்த்ரர் பெயரில் ‘தஸாங்க’ கிருதிகள் இயற்றியுள்ளார்.

இவை தவிர, நாட்டிய கச்சேரிகளுக்கு பயன் தரும் வகையில், சூலாதிசப்த தாளங்கள் எனப்படும் 35 தாளங்களிலும் அலாரிப்புகளும், ஜதிஸ்வரங்களும் செய்துள்ளார். வழமையில்லாத தாளங்களில் மாணவர்களால் ஆட முடியுமா என்று சில நாட்டிய கலைஞர்கள் தயங்கிய போது, “இன்றைய மாணவர்கள் மிகவும் புத்திசாலிகள். அவர்களுக்கு இவை ஒரு பொருட்டல்ல என்று உற்சாகப்படுத்தினேன்”, என்றார்.

“சென்டரல் கவர்மெண்டுக்கு எழுதிப் போட்டு இருக்கேன். இந்தப் பாட்டையெல்லாம் நல்ல ஸ்டுடியோ-ல பதிவு பண்ணி archive செய்ய உதவி கேட்டு இருக்கேன்”, என்றார்.

அந்த ஆவணப்படுத்தல் இது நாள் வரை நடைபெறாத ஒன்றாக இருக்கிறது. என் சாதாரண வாய்ஸ் ரிக்கார்டரில், ஃபேன் இரைச்சலுக்கும், பேச்சுக் குரல்களுக்கும் இடையே பதிவாகி இருக்கும் அவருடைய 5-6 பாடல்களைத் தவிர வேறு சிலரும் பதிவு செய்திருந்தால் நாம் புண்ணியம் செய்தவர்கள்.

அரை மணி ஆனதும் அலாரம் அடித்தது போல, “கிளம்பம்மா! உனக்கு நேரமாச்சு”, என்று சிஷ்யையை அனுப்பி வைத்தார்.

அப்போது மணி பத்தாகியிருக்கும். இன்னும் ஒரு மணி நேரமாவது அவரைப் பேச வைத்து பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

சூடாக வந்த காப்பியை குடித்த படி நேர்காணலைத் துவங்க, அவர் பேச ஆரம்பித்தார்.

“நான் பிறந்தது 26 ஏப்ரல் 1933-ல். எங்கள் ஊர் மதுரை. என் அப்பா திருவேங்கட ஐயங்கார் ஒரு ஜோதிடர். அம்மா பெயர் அலமேலு. என்னுடைய அண்ணா மதுரை டி.வெங்கடேசன் நன்றாகப் பாடுவார். அடுத்த அண்ணாதான் நாட்டியத்துக்கு பாடுவதில் கொடிகட்டிப் பறந்த மதுரை டி.சேதுராமன்.”

“அவர்கள் வாய்ப்பாட்டுக்கு போன போது, நீங்கள் எப்படி மிருதங்கம் பக்கம் வந்தீர்கள்?”, என்றேன்.

”மதுரை பாலகிருஷ்ண ஐயங்கார் என்று எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் இருந்தார். அவர் எங்கள் வீட்டுக்கு வந்திருந்த போது, அவர் தலையில் மிருதங்கம் வாசிப்பது போலத் தட்டினேன். அவர் என் அப்பாவை அழைத்து, ‘இவனுக்கு மிருதங்கம் வரும் போல இருக்கு. விஜயதசமியில் இருந்து சொல்லிக் கொடுக்கிறேன்’, என்றார். சில மாதங்கள் சொல்லிக் கொடுத்தபின் என்னை சோழவந்தான் சேஷ ஐயங்காரிடம் குருகுலவாசம் செய்து வைக்க என் அப்பாவிடம் பரிந்துரைத்தார். என்னுடைய ஆறாவது வயதில் சேஷ ஐயங்காரிடம் சென்றேன்.”

“அவரைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.”

“சினிமா உலகில் பிரபலமாக இருந்த டி.ஆர்.மகாலிங்கம் சேஷ ஐயங்காரிடம் பயின்றவர்தான். சேஷ ஐயங்கார் பாடுவார், ஆர்மோனியம், வயலின், மிருதங்கம் எல்லாம் வாசிப்பார். இதெல்லாம் ஆச்சர்யம் இல்லை. இவற்றோடு கூட நாகஸ்வரமும் வாசிப்பார். அநேகமாய் நாகஸ்வரம் வாசிக்கத் தெரிந்த ஒரே பிராமணர் இவராகத்தான் இருக்க வேண்டும். எனக்கு ஐந்து வயதான போது அவரிடம் சென்றேன். என்னைப் பாடச் சொன்னார். அந்தக் காலத்தில், ‘குரல் இல்லாவிட்டால்தான் விரல்’. முதல் ஆறு மாதங்களுக்கு வாய்ப்பாட்டுதான் கற்றுக் கொண்டேன். அதன்பின், வாய்ப்பாட்டு மிருதங்கம், இரண்டையும் சேர்த்து சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்.”

”குருகுல முறை பற்றி சொல்லுங்களேன்”

“மாடியும் கீழுமாய் ஒரு பெரிய வீட்டை சிஷ்யர்களுக்காகவே வாடகைக்கு எடுத்திருந்தார் எங்கள் குருநாதர். அந்த வீட்டு வராண்டாவில் 30 பேர் படுத்துத் தூங்கலாம். இவரிடம் படித்த அந்த ஊர் பிள்ளைகள் கூட, இரவுச் சாப்பாடு முடிந்ததும் இந்த வீட்டுக்கு வந்துவிடுவார்கள். காலையில் ஐந்து மணிக்கு எழுப்பிவிடுவார். ஏழு மணி வரை சாதகம் செய்த பின் ஆத்தங்கரைக்குச் சென்று வருவோம். அப்போதெல்லாம் காலை டிஃபன் என்றால் என்னவென்றே தெரியாது. இட்லி தொசையை கண்ணால் கூட பார்க்க முடியாது. அங்கிருந்த ஆறு வருடங்களும் தினமும் காலையில் பழைய சோறுதான் டிஃபன். ஒன்பது மணிக்கு திண்ணைப் பள்ளிக்கூடத்துக்குப் போவோம். சாயங்காலம் மூன்று மணிக்கு நாங்கள் வரும் போது குருநாதர் தயாராக இருப்பார்.”

“அவர் கச்சேரி செய்யவில்லையா?”

“இல்லை. முழு நேர வாத்தியாராகத்தான் இருந்தார். மூன்று மணிக்குத் தொடங்கினால் எட்டு மணி வரை எல்லொருக்கும் பாடம் எடுப்பார். இப்படி ஆறு வருடங்கள் கற்ற பின், என் பெரிய அண்ணா மதுரை டி.வெங்கடேசனின் கச்சேரியில் என் அரங்கேற்றுப்படி நடந்தது. எனக்கு 11 வயதாகும் போது, ‘மெட்ராஸுக்குப் போய் வாசித்து முன்னுக்கு வா’, என்று ஆசிர்வதித்து என்னை என் குருநாதர் அனுப்பி வைத்தார்.”

“அப்போது உங்கள் குடும்பம் மெட்ராஸில் இருந்ததா?”

“இல்லை. எல்லொரும் மதுரையில்தன் இருந்தனர். நானும் என் அப்பாவும் மட்டும் மெட்ராஸுக்கு வந்தோம். திருவல்லிக்கேணி வானமாமலை ஜீயர் மடத்தில் தங்கிக் கொண்டோம். பார்த்தசாரதி கோயிலில் தினமும் மதியம் ஒரு பெரிய மந்தாரை நிறைய எதோ ஒரு வகை அன்னம் பிரசாதமாகக் கிடைக்கும். அந்தக் காலத்தில் அதுதான் எங்களைக் காப்பாற்றியது. என் அப்பாவின் நண்பர் ‘கானம் வைத்தியநாத ஐயர்’ என்றொருவர் இருந்தார். அவர் ஒருநாள் வந்து, “என்ன இப்படி பையனை உண்டக்கட்டி வாங்க வெச்சுண்டு இருக்க? எனக்கு அஞ்சு குழந்தைங்க. இவன் ஆறாவது இருக்கட்டும்.”, என்று கூறி என்னை அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவர் மூத்த பெண் அலமேலு நன்றாகப் பாடுவாள். அந்த அம்முலு அக்காதான் என்னை, ‘இதை வாசி, அதை வாசி’, என்று வாசிக்க வைத்தவர்.”

“மெட்ராஸில் முதலில் யாருக்கு வாசித்தீர்கள்?”

“முதன் முதலில் வாசித்தது ஸ்ரீரங்கம் சடகோபாச்சாரியாரின் ஹரிகதைக்கு. ஹரிகதைக்கு வாசிப்பது சாமான்யமான விஷயமல்ல. ‘திமிகிட திமிகிட’ என்று ஆரம்பித்தால் நாலுகால் பாய்ச்சலில் ஓட்டம் பிடிக்கும். அப்படி ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாய் கச்சேரி வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.”

“உங்கள் அப்பா திரும்பிச் சென்றதும் நீங்களே உங்கள் கச்சேரி வாழ்க்கையை மெட்ராஸ்-இல் அமைத்துக் கொண்டீர்களா?”

“இல்லை. சீக்கிரமே என் குடும்பம் முழுவதும் மெட்ராஸுக்கு வந்துவிட்டது. என் சின்ன அண்ணா சேதுராமனுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘சிவகவி’ படத்தில் எம்.கே.டி ‘சொப்பன வாழ்வில் மகிழ்ந்தேன்’ பாடுவாரே, அந்தப் பாடலில் பால முருகனாகத் தோன்றியது என் அண்ணாதான். அதன் பின் பி.யூ.சின்னப்பா நடித்த ஹரிசந்த்ராவில் லோஹிதாசனாய் நடித்தார். இதனால் என் குடும்பம் இங்கேயே இராமகிருஷ்ணா மடம் தெருவுக்கு குடிபெயர்ந்தது. எனக்கும் கச்சேரி வாய்ப்புகள் வர அரம்பித்தன. சாவித்ரி கணேசன், பி.லீலா, டி.வி.ரத்னம், டி.எம்.தியாகராஜன் பொன்ற பலருக்கு வாசிக்க ஆரம்பித்தேன். குறிப்பாக டி.வி.ரத்னத்துக்கு நிறைய வாசித்தேன். சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளுக்கெல்லாம் அவருடன் சென்று வாசிக்கும் வாய்ப்பும் ஏற்பட்டது. 1976-ல் ஆல் இந்தியா ரேடியோவில் சேர்ந்தேன்.”

“கச்சேரி வாசித்துக் கொண்டிருந்த நீங்கள் எப்படி சினிமாவில் நுழைந்தீர்கள்?”

“அதற்கு பி.லீலாவின் அப்பா ஈ.கே.கே.மேனன்தான் காரணம். ’நீ ஏன் சினிமாவில் வாசிப்பதில்லை?’, என்று கேட்டார். ‘வாய்ப்பு வந்தால் வாசிப்பேன்’, என்றேன். 1953-ல், ’எதிர்பாராதது’ என்ற சிவாஜி கணேசன், பத்மினி நடித்த படத்தில் பி.லீலா பாடும்படியாய் அமைந்தது. கல்யாணி ராகத்தில் அமைந்த பாடலுக்கு சி.என்.பாண்டுரங்கன் இசையமைத்தார். அப்போது என் பெயர் பரிந்துரைக்கப்பட்டதால், எதிர்பாராத விதமாய் ‘எதிர்பாராதது’-வில் வாசித்தேன். ”, என்று சிரித்தார்.

“இன்றைக்கு உங்கள் பெயரைத் தெரியாதவர்கள் கூட உங்கள் வாசிப்பை கேட்காமல் இருந்திருக்க முடியாது”, என்றேன்.

“கே.வி.மகாதேவன் என்னை ஆஸ்தான மிருதங்க வித்வானாகவே வைத்திருந்தார். ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் ‘மறைந்திருந்தே பார்க்கும்’, ‘திருவிளையாடல்’ படத்தில் ‘பாட்டும் நானே’ போன்ற பல பிரபல பாடல்களில் என் வாசிப்பு இடம் பெற்றிருக்கிறது.”

“ஜி.ராமநாதனுக்கு வாசித்திருக்கிறீர்களா?”

“அருணகிரிநாதர் படத்தில் வாசித்திருக்கிறேன். ‘ஆடவேண்டும் மயிலே’ பாடலில் என் மிருதங்கமும் உண்டு.”

“கச்சேரி வாசிப்பதற்கும் சினிமாவில் வாசிப்பதற்கும் என்ன வித்யாசம்?”

”ஒரே ஒரு வித்யாசம்தான். கச்சேரியில் காலப்ரமாணம் மனிதர்களால் நிச்சயிக்கப்படுவது. அதில் ஒரு இழை ஓட்டமோ தொய்வோ ஏற்பட்டாலும் பாதகமில்லை. பாடுபவருக்கேற்ப வாசிப்பவரே, வாசிப்பவருக்கு ஏற்ப பாடுபவரோ அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம். சினிமாவில் காலப்ரமாணம் மெஷினால் நிர்ணயிக்கப்படுவது. ஒரு ஆவர்த்தம் இத்தனை வினாடி என்றால் இம்மி பிசகாமல் அத்தனை வினாடியில் வாசிக்க வேண்டும்.”

அவர் சொல்லிய விஷயம் சாதரணமான ஒன்றாகத் தோன்றினாலும், அனைவருக்கும் கைவரக் கூடும் ஒன்றல்ல. காலப்ரமாண சுத்தம் என்பது ஸ்ருதி சுத்தம் போல், இயற்கை வரமும், நிறைய உழைப்பும் இருந்தால் அன்று சாத்தியப்படுவதில்லை என்று நினைத்தடி, “மிருதங்க சக்கரவர்த்தியிலும் நீங்கள் வாசித்தீர்கள் அல்லவா?’

“ஆமாம். சிவாஜிக்கு உமையாள்புரம் சிவராமன் வாசித்தார். பிரபு ’தோற்கும் கட்சி’ என்பதால் யாரும் வாசிக்க முன் வரவில்லை. சினிமாவில் ஜெயிப்பாவது தோற்பாவது? என்னைக் கேட்ட போது ஒப்புக் கொண்டேன். ரிக்கார்டிங்கில் வாசிக்க ஆரம்பித்தோம். சிவராமன் வாசிப்பைக் கேட்க வேண்டுமா? அமிர்த்மாய் பொழிந்தார். நானும் எனக்குத் தெரிந்ததை வாசித்தேன். பார்த்துக் கொண்டே இருந்த எம்.எஸ்.வி , “நீங்களும் இவ்வளவு நன்றாக வாசித்தால் காட்சிக்குப் பொருந்தாது. ரொம்ப சாதாரணமாய் வாசிக்க வெண்டும்”, என்றார். “என்னை கூப்பிட்டு வாசிக்கச் சொன்னால் என்னால் முடிந்த வரை நன்றாகத்தான் வாசிப்பேன். இதுவரை சாதாரணமாக வாசிக்க முயற்சி செய்ததில்லை. அப்படி மாற்றி வாசிக்க வெண்டும் என்றால் ’டபிள் பேமண்ட்’ கொடுக்க வெண்டும் என்றேன். அவர்கள் அதற்கு ஒப்புக் கொண்டதும் வாசித்தேன்.”

“சுமாராக வாசிக்க டபிள் பேமண்ட் வாங்கியவர் நீங்கள் ஒருவராகத்தான் இருப்பீர்கள்.”

“அப்போதெல்லாம் பரத நாட்டிய பாட்டுக்கு மட்டும்தான் மிருதங்கத்தை போட்டுக் கொள்வார்கள். இது இளையராஜா வந்தவுடன் மாறியது. நாம் நினைத்தே பார்க்க முடியாத பாடல்களில் எல்லாம் மிருதங்கத்தை உபயோகித்து இருப்பார்.”

“இதை இன்னும் கொஞ்சம் விளக்கி….”
அவர் செல்ஃபோன் அழைத்தது.

“இதோ வந்துட்டேன்.” என்று ஃபோனை அணைத்தபடி. “காமாட்சி கோயிலில் மீட்டிங் என்று மறந்தேவிட்டேன். நீங்க சாயங்காலமா வர முடியுமா?”

சென்றிருக்கலாம் – விதி.
“அடுத்த முறை சென்னை வரும் போது சந்திக்கிறேன்”, என்றேன்.

அடுத்து 50 முறை சென்னை சென்ற போதும் வளசரவாக்கம் செல்ல மட்டும் ஒழியவில்லை.

அவரைச் சந்தித்த பின் ஓடிவிட்ட இரண்டு வருடங்களில், இளையராஜாவின் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் சீனிவாஸனின் மிருதங்கம் ஒலிக்கிறதா என்று காதைத் தீட்டிக் கொள்வேன். அவர் வாசிப்பைக் கண்டு கொள்வது அப்படி ஒன்றும் கடினமான விஷயமல்ல. ‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடலின் தொடக்கத்தில் ஒலிக்கும் மிருதங்கத்தின் திஸ்ர கதி அந்த முன்னிசையே தொடக்கம், வளர்ச்சி, முடிவு (climax) கொண்ட முழு இசையாய் ஒலிப்பதை தமிழ்நாடே நினைவுகூறும். ‘அந்தி மழை பொழிகிறது’ பாடல் முழுவதையும் சீனிவாசனின் மிருதங்க இசை அரவணைத்துக் கொஞ்சுவதைக் கேட்காதவர் இருந்தால்தான் அதிசயம்.

கிளாசிகல் வகை சினிமா பாடல்களில் ஒரு பாடலிலேயே ஒரு கச்சேரியைக் கேட்ட உணர்வு ஏற்பட வேண்டும். கச்சேரியில் களை கட்டுதல் என்று ஒன்று உண்டு. ஒரு வர்ணத்தையே, விறுவிறுப்பான கிருதியையோ சில நிமிடங்களில் பாடி இதைக் கச்சேரியில் பாடகர்கள் களை கட்ட வைப்பார்கள். சில நிமிடமே ஒலிக்கும் பாடலில் இதைச் செய்ய மிருதங்கமே பெரும்பாலும் பயன்படும். பாடகர் பல்லவியை ஒரு முறை பாடி முடித்ததும் ஃபரன்கள் நிறைந்த ஒரு தீர்மானத்தை வாசிப்பதன் மூலம் இதைச் செய்ய முடியும். உதாரணமாக ‘இவன்’ படத்தில் ‘எனை என்ன செய்தாய்’ பாடலில் இதைக் காணலாம். சீனிவாசன் இப்படிக் களை கட்ட வைத்த பாடல்கள் கணக்கில் அடங்காதவை.

சமீபத்தில், மதுரை சீனிவாஸனுக்காக ஃபேஸ்புக் பக்கம் ஒன்று இருப்பதைக் கண்டு இணைந்து கொண்டேன். அதிலிருந்து ‘ஸ்ரீ ராகவேந்திரா’ படத்தில் வரும் ‘ராம நாமம் ஒரு வேதமே பாடலில் ஒலிக்கும் குருவின் குரல் சீனிவாஸனுடையது என்பதைத் தெரிந்துகொண்டேன். பாடலின் தொடக்கத்தில் அவர் பாடும் மாயாமாளவகௌளை ஸ்வரங்களில் மத்யமத்தை ஒரு சுழற்றலோடு இசைக்கும் அழகைக் கடந்து போகவே பல நிமிடங்கள் ஆயின. வாணி ஜெயராமின் குரல் தார ஸ்தாயி ஷட்ஜத்தில் துல்லியமாய் தரித்து நிற்கும் போது சீனிவாஸன் ‘ஆஹா’ என்றிருப்பார். ஒரு தேர்ந்த ரசிகராய் எனக்குத் தெரிந்த சீனிவாஸன், இந்த ஆஹாவை அவர் தன்னிச்சையாய் சொல்லி இருப்பார் என்றே எனக்குத் தோன்றியது.

அவர் வாசிப்பில் பரிமளித்த பாடல்களுள் என்னை மிகவும் கவர்ந்த பாடல் ‘நீங்கள் கேட்டவை’ படத்தில் வரும் ‘ஓ வஸந்த ராஜா’. பாடலின் தாள அமைப்பில் ஒவ்வொரு நான்காவது அட்சரத்திலும் பளிச்சென்று மிருதங்கத்தின் சாப்பு ஒலிக்கும். அநேகமாய் அந்தப் பாடலில் மிருதங்கத்திலிருந்து அந்தச் சொல் மட்டும்தான் ஒலிக்கும். அந்தச் சாப்பு இல்லாமல் பாடலை கற்பனை செய்து பார்த்தால் சீனிவாஸனின் பங்களிப்பையும் உணர்ந்து கொள்ள முடியும். இதைப் போலவே காளிதாஸன் கண்ணதாசன்’ பாடலும் அதிசயிக்கத்தக்கது. பாடலின் நடையை வானாகக் கொண்டால் ஆங்காங்கே கண் சிமிட்டும் நட்சத்திரங்களாய் சீனிவாசனின் மிருதங்கச் சொற்கள் மின்னுவதை உணர முடியும். இந்தப் பாடல்களில் எல்லாம் இன்னன்ன இடத்தில் மிருதங்கம் ஒலிக்க வேண்டும் என்ற இளையராஜாவின் கற்பனைகள், அவரது மேதமையை எடுத்துக் காட்டும் விஸ்வரூப தரிசனங்கள்.

2011 டிசம்பரில் பழனி சுப்ரமணிய பிள்ளையைப் பற்றிய என் நூல் வெளியான போது, அதைக் கொடுக்க சீனிவாஸன் வீட்டுக்குச் சென்றிருந்தேன். மிகவும் தளர்ந்திருந்தார். ஓராண்டு காலத்தில் அவர் முகம் 20 ஆண்டுகால மாறுதலைக் காட்டியது. அவர் பழனியைப் பற்றி கூறிய கருத்துகள் எனக்கு உதவியாய் இருந்தன என்று கூறிய போது, “நான் பழனியைப் பற்றி சொன்னேனா? எனக்கு அவரைப் பற்றி ஒன்றும் தெரியாதே. நானா சொன்னேன்?”, என்று என்னை வியப்பாகப் பார்த்தார்.

இவர் நினைவு இன்னும் தப்புவதற்கு முன் நீண்ட நேர்காணல் ஒன்றை எடுத்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். சீனிவாஸனின் மகன் சேஷாத்ரியும், அவர் உடல்நிலை சற்று தேறியதும் அழைப்பதாகச் சொல்லி என் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டார். ஒராண்டு காலமாய் அவர் உடல்நிலை நலிந்து கொண்டே வந்தது என்று இரண்டு நாட்கள் முன்னால் பேசிய போது சேஷாத்ரி தெரிவித்தார்.

“இரண்டு வருடங்களுக்கு முன் நான் அவரைச் சந்தித்த போது தொலைபேசி அவரை அழைத்திராதிருந்தால்…”.

Read Full Post »

இன்று மிருதங்க மேதை முருகபூபதியின் பிறந்த நாள். பல வருடங்களுக்கு முன் சொல்வனத்தில் அவரைப் பற்றி எழுதியதை இங்கு பதிவிடுகிறேன்.

1930-களில் இருந்து 1960-கள் வரையில் உள்ள காலத்தை கர்நாடக இசை உலகின் பொற்காலம் என்று அழைப்பதுண்டு. பல்வேறு மேதைகள் ஒரே சமயத்தில் கோலோச்சிய காலமது. அந்த காலகட்டத்தில் பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்ரமண்ய பிள்ளை, இராமநாதபுரம் சி.எஸ்.முருகபூபதி ஆகிய மூவரும் மிருதங்க உலகை தமதாக்கிக் கொண்டிருந்தனர். மூவரில், முருகபூபதிதான் அதிக காலம் வாழ்ந்தவர் என்ற போதும், இவர் வாழ்க்கையே மிகக் குறைவாகப் பதிவாகியுள்ளது. “மிக அரிய பொக்கிஷங்கள், பெரும்பாலும் பொது மக்களின் கண்களின் இருந்து விலக்கப்பட்டே இருக்கும்”, என்ற கூற்று முருகபூபதியாரைப் பொருத்த மட்டில் முற்றிலும் உண்மையானது.

முருகபூபதியின் முன்னோர்கள் விவசாயத்தில் ஈடுபட்டவர்களாகத் தெரிய வருகிறது. இந்தக் குடும்பத்துக்கும், இராமநாதபுரம் அரசர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. இராமநாதபுரம் மன்னர்கள் வரலாற்றைப் பார்க்கும் போது, அவர்கள் சங்கீதத்தில் பெரும் ஈடுபாட்டுடன் விளங்கியதை அறிய முடிகிறது. காசி நாத துரை பொன்ற மன்னர் வம்சாவளியினரே கச்சேரி செய்யும் அளவிற்கு சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றிருந்தனர். சங்கீதத்தை போஷிக்க சபைகள் உருவாவதற்கு முன்னர், இது போன்ற சமஸ்தானங்களே அந்த வேலையை திறம்படச் செய்து வந்தன. அவ்வகையில், முருகபூபதியின் தந்தையார் சித்சபை சேர்வை அவர்கள், இராமநாதபுரம் மன்னர் ஆதரவில், புதுக்கோட்டை மான்பூண்டியா பிள்ளையிடம் குருகுலவாசம் செய்து லயத்தில் தேர்ச்சியைப் பெற்றார்.
“பூச்சி ஸ்ரீனிவாஸ ஐயங்கார் போன்ற மேதைகளுக்கு அவர் வாசித்திருந்த போதும் அவர் கச்சேரி வித்வானாக விளங்கவில்லை. ஆத்மார்த்தமாகவே மிருதங்கக் கலையை வாசித்து வந்தார். எப்போதும் அவர் வாய் ஜதிகளை உதிர்த்துக் கொண்டே இருக்கும்”, என்று ஒரு நேர்காணலில் சங்கரசிவ பாகவதர் கூறியுள்ளார். இராமநாதபுரம் அரணமனைக்கு இசைக் கலைஞர்கள் வரும் போதெல்லாம் சித்சபை சேர்வையின் வீட்டிலேயே தங்கினர். “அரண்மனைக்கு வராத வித்வான்களே இல்லை. அவர்கள் பாடாத பாட்டை இது வரை யாரும் பாடவில்லை”, என்று முருகபூபதியே கூறியுள்ளார்.

சித்சபை சேர்வைக்கு நான்கு மகன்கள். அவர்களுள் இருவர் சங்கீதத் துறையில் சிறந்து விளங்கினர். இரண்டாவது மகனான சங்கரசிவத்தை இராமநாதபுரம் மன்னர் ஹரிகேஸநல்லூர் முத்தையா பாகவதரிடம் குருகுலவாசம் செய்ய அனுப்பி வைத்தார். அவரிடம் கற்ற பின், கச்சேரிகள் செய்தாலும், சங்கீத ஆசிரியராகத்தான் சங்கரசிவ பாகவதர் பெரும் புகழை அடைந்தார். குருகுலவாசத்தில் கற்ற வாய்ப்பாட்டை தவிர, வயலின், மிருதங்கம் ஆகியவற்றையும் சொல்லிக் கொடுக்கும் ஆற்றலையும் இயற்கையாகவே வரப்பெற்றிருந்தார் சங்கரசிவம்.

சித்சபை சேர்வையின் நான்காவது மகனான முருகபூபதி, தான் வளர்ந்த சூழலினால் சங்கீதத்தின் பால் ஈர்க்கப்பட்டார். தன் தந்தை வாசிப்பதைப் பார்த்து தானும் மிருதங்கத்தை இசைக்க ஆரம்பித்தார். சிறு வயதில் முருகபூபதி வாசிப்பதைப் பார்த்த அழகநம்பியா பிள்ளை, அவரை மடியில் அமர்த்திக் கொண்டு, மிருதங்கத்தில் தொப்பியை கையாள வேண்டிய முறையை எடுத்துச் சொன்னதை முருகபூபதியே ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
இள வயதில், கேட்டதை மட்டும் வைத்துக் கொண்டு விளையாட்டாய் வாசித்துக் கொண்டிருந்த முருகபூபதியை நெறிப்படுத்தியவர் சங்கரசிவ பாகவதர்தான். முருகபூபதியின் சிறு வயது அனுபவங்களை அறிந்த அவரது சீடர் காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி “என் குருநாதர் கற்கும் போது ராமநாதபுரம் ஈஸ்வரன் போன்ற சிலரும் சங்கரசிவ பாகவதரிடம் மிருதங்கம் கற்று வந்தனர். அப்போதெல்லாம் பூபதி அண்ணாவின் கவனம் வாசிப்பில் இருக்கவில்லை. ராமநாதபுரம் ராஜாவின் பிள்ளைகளுடன் சேர்ந்து கால்பத்து ஆடுவது, குஸ்தி போடுவது போன்றவற்றில்தான் அவருக்கு ஈடுபாடு இருந்தது. அண்ணாவுக்குத் தெரியாமல் விளையாடச் சென்றுவிடுவார். சாயங்காலம் வாசல் திண்ணையில் சங்கர சிவ பாகவதர் அமர்ந்திருப்பார் என்பதால், சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் நுழைந்து, மற்ற சீடர்களிடம், “அண்ணா, இன்னிக்கு என்ன பாடம் போட்டார்”, என்று கேட்டுக் கொள்வார். ஒரு முறை சொன்னதைக் கேட்டு வாசிக்கத் தொடங்கினால், அதை அவர் ஏற்கெனவே பல முறை வாசித்திருக்கிறார் என்று எண்ணத் தோன்றுமாம். அவர் வாசிக்கத் தொடங்கியதும், “முருகன் வந்துட்டான் போல இருக்கு”, என்று புன்னகையுடன் கூறுவாராம் சங்கரசிவம்.”, என்கிறார்.

முருகபூபதியின் வாழ்வில் திருப்புமுனையாய் இரண்டு கச்சேரிகள் அமைந்தன. முதல் கச்சேரி சென்னை ஆர்.ஆர்.சபாவில் நடை பெற்றது. அப்போது சங்கரசிவ பாகவதர் சென்னையில் தங்கி பலருக்கு இசை பயிற்றுவித்துக் கொண்டிருந்தார். முருகபூபதியும் அவருடன் தங்கி இருந்தார். ஆர்.ஆர்.சபாவில் நடக்கவிருந்த செம்மங்குடியின் கச்சேரிக்கு சௌடையாவும், பாலக்காடு மணி ஐயரும் பக்கவாத்யம் வாசிக்க எற்பாடாகி இருந்தது. பம்பாய் சென்றிருந்த மணி ஐயர், கச்சேரி தினத்தன்றுதான் சென்னை அடைவதாக இருந்தது. இடையில் ஏற்பட்ட ரயில் தாமதங்களால் மணி ஐயரால் சரியான நேரத்துக்கு வந்து சேர முடியாது என்று தெரிந்ததும், ஒரு ரயில் நிலையத்திலிருந்து தன் நிலை பற்றி தந்தி கொடுத்தார். மணி ஐயர் பிரபலத்தை அடைந்திருந்த காலமது. மணி ஐயரின் வாசிப்பை கேட்க வந்தவர்கள் ஏமாற்றமடையா வண்ணம் வாசிக்க யாரை கூப்பிடலாம் என்று தவித்துக் கொண்டிருந்த சபா நிர்வாகிகள், இராமநாதபுரம் ஈஸ்வரனை அணுகினர். அப்போது தற்செயலாக் முருகபூபதி ஈஸ்வரனின் வீட்டுக்கு வந்திருந்தார். விஷயம் அறிந்ததும், இராமாதபுரம் ஈஸ்வரன் முருகபூபதியை பரிந்துரை செய்தார். “எனக்கு சற்று பயமாகத்தான் இருந்தது. ரேட்டை ஒன்றுக்கு மூன்றாக உயர்த்திக் கேட்டால் நம்மை வாசிக்க சொல்ல மாட்டார்கள் என்றெண்ணி அதிகம் கேட்டேன். அவர்களுக்கு இருந்த அவசரத்தில் நான் எவ்வளவு கேட்டாலும் கொடுக்க தயாராக இருந்தனர்.”, என்று ஓர் நேர்காணலில் முருகபூபதியே கூறியுள்ளார். அன்றைய கச்சேரியில் முருகபூபதியின் வாசிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. கச்சேரியின் நடுவில் அவர் வாசித்த தனி ஆவர்த்தனத்தை தொடர்ந்து கூட்டம், “முருகபூபதிக்கு இன்னொரு தனி”, என்று கூச்சலிட ஆரம்பித்துவிட்டது. ”அன்றைக்கு செம்மங்குடி எனக்கு மூன்று தனி கொடுத்தார். ரசிகர்களும் வெகுவாக என்னை உற்சாகப்படுத்தினர்.”, என்றும் முருகபூபதி கூறியுள்ளார்.

பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்ரமண்ய பிள்ளை வாழ்வில் நடந்தது போலவே முருகபூபதியின் இசை வாழ்வு முன்னேற்றப் பாதைக்கு வர செம்பை வைத்தியநாத பாகவதரின் பங்கு முக்கியமானது. சம்பிரதாயாவில் உள்ள முருகபூபதியின் நேர்காணலில், “திருச்செந்தூரில் முதன் முறையாக செம்பைக்கு வாசித்தேன். அப்போது நான் ஃபுட்பால் ப்ளேயர். பெரிய மீசையெல்லாம் வைத்திருப்பேன். என்னைப் பார்த்ததும், “இந்தப் பையனா மிருதங்கம் வாசிக்கப் போகிறான்?”, என்று பாகவதர் நினைத்தாராம். அந்தக் கச்சேரிக்கு முன் நான் பல முறை செம்பையில் பாட்டை கேட்டிருக்கிறேன். அதன் போக்கு எப்படி இருக்கும். எப்படி வாசித்தால் அவர் மகிழ்ச்சியடைவார் என்பதையெல்லாம் நான் நன்கறிந்திருந்தேன். அப்படியே வாசித்ததும், “இவ்வளவு நாளா நீ எங்கப்பா இருந்த?”, என்று ஆச்சர்யப்பட்டுப் போனார்”, என்று கூறியுள்ளார். ஓரிடத்தில் சிறு நல்ல விஷயத்தைக் கண்டால் கூட அதை எல்லொருக்கும் தெரியும் படி பெரியதாகக் காட்டுவது செம்பையின் சுபாவம். முருகபூபதியை வாசிக்கக் கேட்டதும், சென்னையில் தனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் சிபாரிசு செய்தார். அந்த வருடம் அகாடமி கச்சேரிகளில் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயருக்கு முருகபூபதி வாசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார் செம்பை.
இவ்விரு நிகழ்வுகளுக்குப் பின், முருகபூபதி முன்னணி வித்வான்கள் அனைவருக்கும் வாசிக்கத் தொடங்கினார். “சுமார் 30 ஆண்டு காலத்துக்கு, எந்த ஒரு பெரிய கச்சேரியிலும், மணி ஐயர், பழனி, முருகபூபதி ஆகிய மூவரில் ஒருவரே மிருதங்கம் வாசித்தனர்”, என்கிறது ஒரு ஸ்ருதி இதழ். “சங்கீத மும்மூர்த்திகள் போல, மிருதங்க மும்மூர்த்திகள் என்று இந்த மூவரையும் குறிப்பிடலாம்”, என்று வயலின் மேதை லால்குடி ஜெயராமன் கூறியுள்ளார். பழனி, முருகபூபதி இருவரும் புதுக்கோட்டை பரம்பரையில் இருந்து வந்தவர்கள்தான். அதனால், இருவரின் வாசிப்பு அணுகுமுறையிலும் பல ஒற்றுமைகள் உண்டு. ஒரே வழியில் வந்தாலும், ஒருவரைப் போல மற்றவர் வாசிக்கிறார் என்று சொல்ல முடியாத வண்ணம் பிரத்யேகமாய் தங்கள் வாசிப்பை அமைத்துக் கொண்டனர். மணி ஐயரோ, முருகபூபதியோ மிருதங்கம் வாசித்த கச்சேரிகளில்தான் பழனி கஞ்சிரா வாசிக்க சம்மதித்தார் என்பதிலிருந்து பழனியின் மனதில் மணி ஐயருக்கு நிகரான இடத்தை முருகபூபதி பெற்றிருந்தார் என்பதை உணர்திடலாம்.
முருகபூபதியின் வாசிப்பின் சிறப்பம்சங்கள் பல உண்டு எனினும், முதலில் கேட்பவரைக் கவர்வது அவர் மிருதங்க நாதம்தான். “அவர் மிருதங்கம் எப்போதுமே 100% ஸ்ருதியுடன் இணைந்து இருக்கும். எவ்வளவுதான் விவகாரமாக வாசித்த போதும், அவர் வாசிப்பில் ஒவ்வொரு சொல்லும் தேனைக் குழைத்து வாசிப்பது போல இனிமையாக இருக்கும். வறட்டு சொற்களை அவர் வாசிப்பில் கிஞ்சித்தும் காண முடியாது. குறிப்பாக, சர்வலகு கோவைகளை அவர் வாசிக்கும் போது, வலந்தலையில் உள்ள சாதத்தை தடவிக் கொடுத்தபடியே பல்வேறு நடைச் சொற்களை வாசிப்பது அவர் சிறப்பம்சமாகும்.”, என்கிறார் முருகபூபதியின் சீடர் சென்னை தியாகராஜன். ஸ்ருதியுடன் ஒருங்கிணைவதை ஓர் உபாசனையாகவே செய்த மதுரை மணி ஐயருக்கு முருகபூபதியின் வாசிப்பு வெகுவாகப் பிடித்திருந்ததில் ஆச்சர்யமில்லை. ஒரு கச்சேரியில், மதுரை மணி ஐயரின் தம்புரா பழுதாகி அவ்வப்போது ஸ்ருதியிலிருந்து விலகிய படி இருக்க, “எனக்கு தம்புராவே வெண்டாம். பூபதியாரின் மிருதங்க ஸ்ருதியே போதும்.”, என்று கச்சேரியைத் தொடர்ந்துள்ளார்.

cs_m

பழனியைப் போலவே மிருதங்கத்தின் தொப்பியை கையாள்வதில் முருகபூபதி தனக்கென்று ஓர் சிறந்த வழியை வகுத்துக் கொண்டிருந்தார். அவர் தொப்பியில் வாசித்த முறையை, “his greatest contribution to mridangam playing”, என்கிறார் திருச்சி சங்கரன். சாதாரணமாக, மிக வேகமான சொற்கட்டுகளை வாசிக்கும் போது கும்காரங்கள் இடம் பெருவது அரிது. ஆனால், முருகபூபதியின் வாசிப்பிலே, வலந்தலையில் மின்னல்; வேக ஃபரன்கள் ஒலிக்கும் போதே, தொப்பியில் அவரது இடது கை கும்காரங்களை தன்னிச்சையாய் உதிர்ப்பதை, அவர் கச்சேரி பதிவுகளைக் கேட்கும் பொது அறிந்து கொள்ளல்லாம். பொதுவாக வலந்தலையில்தான் விரல்களை பிரித்து வாசிப்பர். தொப்பியில் வாசிக்கும் போது, பெரும்பாலான சொற்களில் விரல்கள் அனைத்தும் இணைந்தே இருக்கும். “வலந்தலையைப் போலவே தொப்பியிலும் வாசிப்பதை நான்தான் அறிமுகப்படுத்தினேன் என்று நினைக்கிறேன். என் சிறு வயதில் அழகநம்பி பிள்ளை தொப்பியில் வாசித்துக் கேட்டதே என்னை இவ்வாறு வாசிக்க தூண்டியது”, என்று முருகபூபதியே வானொலி நேர்காணலில் கூறியுள்ளார். “ஒரு வழைமையான சொல்லில், வலந்தலையில் இடம் பெறுவதை தொப்பியிலும், தொப்பியில் இடம் பெருவதை வலந்தலையிலும் மாற்றி வாசிப்பதும் அவர் தனிச் சிறப்பாகும்”, என்கிறார் முருகபூபதியின் சீடர் லட்சுமணராஜ். “அவர் வாசிக்கும் சொற்கட்டுகளை கேட்ட மாத்திரத்தில் புரிந்து கொண்டு விட முடியாது. அவர் விளக்கினால்தான் அதைப் புரிந்து கொள்ள முடியும்”, என்கிறார் சென்னை தியாகராஜன். “நான் கச்சேரியில் மணி ஐயர், பழனி சுப்ரமணிய பிள்ளை வாசிப்பதைக் கேட்டு என் அண்ணாவிடம் சொல்வேன், அதை இவர் “இதைத்தான் செஞ்சு இருக்காங்க”, என்று விவரமாக விளக்குவார். அதை கிரகித்துக் கொண்டு, அப்படியே வாசிக்காமல், என் பாணியில் வாசிப்பேன். அது கேட்க புதிதாக ஒலிக்கும்”, என்று முருகபூபதியே விளக்குகிறார்.

அரியக்குடி, ஜி.என்.பி, மதுரை மணி, செம்மங்குடி போன்ற பல முன்னணி வித்வான்களுக்கு பரவலாக வாசித்து வந்த முருகபூபதி, பின்னாளில் பல திறமையான இளம் வித்வான்களை தூக்கி விடுவதிலும் முக்கிய பங்கு ஆற்றினார். “சோமு என் தம்பி மாதிரி” என்று அடிக்கடி கூறிய முருகபூபதி, பல்வேறு கச்சேரிகளில் அவருக்கு வாசித்து அவர் கச்சேரிகளை சிறப்பித்துள்ளார். பின் நாளில் மதுரை டி.என்.சேஷகோபாலன் கச்சேரிகளுக்கு நிறைய வாசித்து வலு சேர்த்துள்ளார். புல்லாங்குழல் மேதை மாலி மிகவும் விரும்பிய மிருதங்க வித்வான்களுள் முருகபூபதி முக்கியமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமது நீண்ட இசை பயணத்தில் எண்ணற்ற விருதுகளையும் கௌரவங்களையும் கண்டவர் முருகபூபதி. சிவகங்கை சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வான் பட்டம் (1949), பத்மஸ்ரீ (1973), சங்கீத் நாடக் அகாடமி விருது (1975), இசைப் பேரறிஞர் (1979), அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மாநிலக் கலைஞர் (State Artiste, 1979) ஆகியவை அவருக்கு கிடைத்த ஒரு சில கௌரவங்களே. சங்கீத விருதுகளில் தலையாயதாக கருதப்படும் சங்கீத கலாநிதி விருது அவருக்குக் கிடைக்காமல் போனதை, ‘a conspicuous omission’, என்று ஸ்ருதி இதழ் குறிப்பிடுகிறது.
1940-களிலும் 50-களிலும் கோலோச்சிய பாடகர்கள் பலரது மறைவு 1960-களிலும் 70-களிலும் ஏற்பட்டது. தன்னுடன் நெருங்கிப் பழகியவர்களில் மறைவினாலும், அடுத்த தலைமுறை வித்வான்கள் தலையெடுக்கத் துவங்கியதாலும் கச்சேரி வாசிப்பை கணிசமாகக் குறைத்துக் கொண்டு தான் கற்ற கலையை அடுத்தவருக்கு அளிப்பதில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார். சுய மரியாதையை எந்தக் காலத்திலும் இழந்து விடாதவர் என்று பெயர் பெற்றிருந்த இவர்., சம்பிரதாயாவுக்கு அளித்துள்ள நேர்காணலில், “என்னை கௌரவமாக நடத்துபவர்கள் கச்சேரியில் மட்டுமே நான் வாசிக்கிறேன். இப்போதெல்லாம் தனியை விட்டதும் இரண்டு விரலைக் காட்டி, இரண்டு நிமஷத்துக்குள் முடித்துவிடு என்று சமிக்ஞை செய்கின்றனர். அவர்களுக்கெல்லாம் நான் வாசிக்க விரும்புவதில்லை.”, என்று தன் உள்ளத்தை ஒளிவு மறைவின்றி கூறியுள்ளார்.
1980-களில் தமிழ் இசைச் சங்கம் நடத்திய இசைப் பள்ளியில் விசிடிங் பிரின்சிபாலாக பணியாற்றியுள்ளார். அரசு இசைக் கல்லூரியின் அலோசகர் குழுவிலும், அண்ணாமலை பல்கலைகழகத்தின் நுண்கலை பிரிவிலும் (faculty of fine arts) பணியாற்றினார். “எப்போது போனாலும் தடையின்றி சொல்லிக் கொடுப்பார். தான் ஒரு மிருதங்கத்தை வைத்துக் கொண்டு, மாணவனுக்கு ஒரு மிருதங்கத்தை அளித்து தான் சொல்லிக் கொடுப்பதை எல்லாம் மாணவன் சரிவர வாசிக்கும் வரை விடாமல் பொறுமையாகச் சொல்லிக் கொடுப்பார்”, என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் முருகபூபதியின் சீடர் லட்சுமணராஜ். முருகபூபதியிடன் பயின்ற வித்வான்களுள் முக்கியமானவர் மறைந்த கஞ்சிரா மேதை ஹரிசங்கர். இவர் தவிர, மாவேலிக்கரை சங்கரன் குட்டி நாயர், காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி, மதுரை செல்லப்பா, கும்பகோணம் ப்ரேம்குமார், சென்னை தியாகராஜன் போன்ற கலைஞர்கள் இவரிடம் பயின்றவர்களே.

1998-ல் தனது 84-வது வயதில் முருகபூபதி காலமானார். அதை ஒட்டி கே.எஸ்.காளிதாஸ் எழுதிய அஞ்சலி கட்டுரையில், “The last of titans”, என்று இவரை குறிப்பிடுகிறார். முருகபூபதி இருக்கும் போதே சங்கரசிவ பாகவதரின் வருடாந்தர அஞ்சலி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. முருகபூபதியின் மறைவுக்குப் பின் ‘சங்கர பூபதி ட்ரஸ்ட்’ என்கிற அமைப்பின் முயற்சியால் ஆண்டுதோறும் சங்கரசிவம், முருகபூபதி இருவருக்கும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நாள் முழுவதும் இசை நிகழ்ச்சிகள் மூலம் அஞ்சலி செலுத்துவதோடல்லாமல் இசைத் துறையில் சாதித்தவர்களையும் கௌரவித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடக்க மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவதசலத்தின் முயற்சியும், முருகபூபதியின் சீடர் லட்சுமணராஜின் உழைப்புமே முக்கிய காரணங்களாகும்.

முருகபூபதியின் மறைவை சில இணையதளங்கள் தவிர எந்த ஒரு மாநில பத்திரிகையோ, தேசிய பத்திரிகையோ குறிப்பிடக் கூட இல்லை என்று ஸ்ருதியில் காளிதாஸ் எழுதிய அஞ்சலி கட்டுரை அங்கலாய்த்தாலும், அவர் வாசிப்பை கேட்ட எண்ணற்ற ரசிகர்கள் மனதில் அவர் மிருதங்க நாதம் என்றென்றும் ரீங்காரித்துக் கொண்டே இருக்கும்.

Read Full Post »

இந்தக் கட்டுரை முதலில் இங்கு வெளியானது

மிருதங்க வினைஞர் பர்லாந்தைப் பற்றி சென்ற வாரம் பார்த்தோம். அவர் பெயரில் விருது ஒன்று 2013-ல் தொடங்கப்பட்டது. அதனை முதலில் பெற்றவர் பர்லாந்தின் மகன் செல்வம். இவரும் தன் தந்தையாரைப் போலவே மிருதங்கம் தயார் செய்வதில் தேர்ச்சியும் தனித்தன்மையும் பெற்றிருந்தார்.

தன் இளமைக்காலங்களை ஒருமுறை நினைவுகூர்ந்த செல்வம்,

“என் தந்தையார் மிருதங்க வேலையில் பேர் பெற்றவர் என்றாலும் நான் அவரிடம் தொழில் கற்கவில்லை. பள்ளிக்குச் சென்று ஈ.எஸ்.எல்.சி வரை படித்தேன். 1950-களின் கடைசியில் அப்பாவுக்கு சர்க்கரை நோய் கட்டுக்கடங்காமல் ஆகிவிட்டது. வேலை செய்ய மிகவும் சிரமப்பட்டார். அதனால் படிப்பைத் தொடராமல் வேலைக்குச் செல்ல முடிவெடுத்தேன். மாஜிஸ்டிரேட் அலுவலகத்தில் “பங்கா” (மின்விசிறிக்கு முந்தைய காலத்தில் இருந்த கையால் இழுத்து இயக்கப்பட்ட விசிறி) இழுக்கும் வேலை கிடைத்தது.

எங்கள் குடும்பத்துக்கு மணி ஐயரும், அவர் குருநாதரும் நிறைய ஆதரவு அளித்துள்ளனர். என் தாத்தா செபாஸ்டியனுக்கு நிலம் வாங்கிக் கொடுத்தது வைத்தியநாத ஐயர்தான். குடிசைவீட்டை கட்டிடமாக்க மணி ஐயர் உதவியுள்ளார். அப்படி அவர்கள் ஆதரவு இருந்தும் நான் ஏன் இந்த வேலையில் இருக்கவேண்டும் என்று பலர் கேட்ட போதும் எனக்கு அவர்களிடம் செல்லத் தோன்றவில்லை. ஒருநாள் மணி ஐயரே அழைத்தார்.

“உன் அப்பாவுக்கு முடியவில்லை. நிறைய வேலை இருக்கிறது. உன்னால் செய்ய முடியுமா?”, என்று கேட்டார்.

நான் சற்றும் தயங்காமல், “செய்ய முடியும்”, என்றேன்.

”இதுவரை என்ன வேலை செய்திருக்கிறாய்?”

“அப்பாவும் சித்தப்பாவும் வேலை செய்வதைப் பார்த்திருக்கிறேன். நான் வேலை செய்ததில்லை”, என்றேன்.

அப்போது அப்பாவும் மணி ஐயர் வீட்டுக்குள் நுழைந்தார்.

”என்ன பர்லாந்து! உன் பையன் வேலை செஞ்சது இல்லை. பார்த்ததை வெச்சே செய்வேன்கறானே!”, என்று கேட்டார்.

அதற்கு என் அப்பா, “அவன் செய்வேன்னு சொன்னா நிச்சயம் செய்வான்.”, என்று அடித்துக் கூறினார்.

மகிழ்ந்த மாஸ்டரும், “மாடிக்குப் போ! உனக்குத் தெரிஞ்ச வேலையை செய்!”, என்றார்.

அன்று வேளாங்கன்னி மாதாவிடம், “என்னை மாஸ்டருக்கு கெட்ட பெயர் வரவழைக்காத படியும், என் தந்தையைவிட அதிக பேர் வாங்காதபடியும் வைக்க வேண்டும்”, என்று வேண்டிக் கொண்டு வேலையில் இறங்கினேன்.

அந்த அறைக்குள் 60 மிருதங்கங்கள் இருப்பது கண்டு மிரண்டு போனேன். பெரும்பாலான மிருதங்கங்களில் ஒரு துண்டு பேப்பர் சொருகியிருந்தது. அதில் இருந்த குறிப்புகள்தான் என் குரு. அவற்றில் எந்த மிருதங்கத்தில் எந்த வேலை செய்ய வேண்டும் என்று மாஸ்டர் எழுதியிருந்ததை வைத்து என் வேலையைத் தொடங்கினேன்.

என் அப்பா மாஸ்டரைப் பார்த்தாலே எழுந்துவிடுவார். என்னிடம் மாஸ்டர் இன்னும் நெருக்கமாக பழகினார் என்றே தோன்றுகிறது. நான் அவர் அருகில் தைரியமாக அமர்ந்து பேசுவேன். என்னிடம் என் அப்பாவின் வேலையைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறார்.

“காசுக்காக என்றைக்கும் உன் அப்பா வேலை செய்ததில்லை. கச்சேரிக்கு நிறைய ஊர் ஊராகப் போகும் போது வீட்டுக்கு வரக் கூட நேரமிருக்காது. அந்த மாதிரி சமயங்களில் இடையில் எதோ ஒரு ஊரின் பிளாட்பாரத்தில் அமர்ந்து கூட வேலை செய்திருக்கிறார். நேரமில்லாவிட்டால் அடுத்த ஸ்டேஷன் வரை டிக்கெட் வாங்கி ஓடும் வண்டியில் கூட வேலை செய்திருக்கிறார். அந்த ஸ்ரத்தை உனக்கு வர வேண்டும்”, என்று அவர் சொன்னதுதான் எனக்கு வேத வாக்கு.

அந்த அறையிலேதான் இருப்பேன். தூக்கம் வந்தால் மிருதங்கங்களுக்கிடையிலேயே தூங்குவேன். சாப்பாடு மாஸ்டர் வீட்டிலிருந்தே வந்துவிடும். என் அப்பாவைப் பார்த்து நான் கற்றுக் கொண்டது ஒன்றுதான்.  ஒரு வாத்யத்தை தொட்டதும் அதில் என்ன வேலைகள் செய்ய வேண்டும், எந்த ஸ்ருதிக்கு சரியாக இருக்கும், எப்படி வார் பிடிக்க வேண்டும் என்றெல்லாம் உள்ளணர்வில் தெரிய வேண்டும். அந்த உள்ளுணர்வு கிட்டிவிட்டால் வேலை சிறப்பாக இருக்கும். மாஸ்டரின் குறிப்புகள் என் உள்ளுணர்வை வளர்த்துக் கொள்ள வழி வகுத்தன.

நாளடைவில் எனக்கு சரியாகப்பட்டதையே செய்ய ஆரம்பித்தேன். இது மாஸ்டருக்குத் தெரியும். ஒருமுறை, என் அப்பாவிடம் பேசும் போது, “இப்போது பாரு, நான் இந்த மிருதங்கத்தில் சில வேலைகள் சொல்கிறேன். செல்வம் பேசாமல் கேட்டுவிட்டு தனக்கு சரியென்று தோன்றும் வகையில் செய்து முடிப்பான்”, என்று கூறி என்னை அழைத்து அந்த வேலையைக் கொடுத்தார்.  நானும் அவர் எதிர்பார்த்தபடியே என் பாணியில் வாத்தியத்தை தயார் செய்து கொடுத்தேன். இருவரும் அதைக் கண்டு பெரும் மகிழ்ச்சியுற்றது ஒருவகையில் என் வேலைக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரம்.

பெங்களூரில் ஆலத்தூர் பிரதர்ஸ் கச்சேரிக்கு மாஸ்டர் வாசிக்க இருந்தார். ஏதோ காரணத்தினால் அவர்கள் வரமுடியாததால் மாலியின் கச்சேரி மாற்றாக ஏற்பாடாகியது. ஆலத்தூரின் ஸ்ருதி ஒரு கட்டை. மாலியின் ஸ்ருதியோ ஐந்து கட்டை. அரை நாளில் வாத்தியங்களை மாற்றி தயார் செய்தேன். கச்சேரி முடிந்ததும் மாஸ்டர் என்னை அழைத்து மாலி என்னைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார். மாலியைச் சென்று பார்த்த போது என்னை மிகவும் பாராட்டி, மிருதங்கத்தின் நாதம் தன்னை வாசிக்கத் தூண்டியதாகக் கூறினார்.

செல்வத்தை குடும்பத்தில் ஒருவராக பார்த்த மணி ஐயரின் மகன் ராஜாராம்,

“என் அண்ணாவின் காம்பஸ் போன்ற உபகரணங்களை மிருதங்க வேலையில் உபயோகிப்பதில் அப்பா, செல்வம் இருவருக்கும் பெரிய ஆவல் உண்டு. ஒருமுறை வெட்டுத்தட்டு எடுக்க காம்பஸில் வட்டம் போட செல்வம் அண்ணாவை அணுகிய போது அண்ணா ஏதோ வேலையாய் இருந்தார். இரண்டு மூன்று அழைத்தும் அண்ணா செவி சாய்க்காதலால் செல்வம் கோபத்தில் வெறும் கையால் எடுத்த வெட்டுத்தட்டு கச்சிதமாய் காம்பஸில் போட்ட வட்டம் போல் வந்ததைப் பார்த்து நாங்கள் ஆச்சரியப்பட்டுப் போனோம்.”

வேலையில் அசகாயசூரந்தான் என்றாலும், செல்வத்திடம் குறும்பும் உண்டு.

ஒருமுறை அப்பா தன் விருப்பத்திற்கு ஏற்றார் போன்ற நாதம் மிருதங்கத்தில் வரவில்லை என்று மீண்டும் மீண்டும் மாற்றச் சொல்லிக் கொண்டிருந்தார். செல்வமும் செய்து செய்து அலுத்துப் போய், “நாளைக்கு செஞ்சுத் தரேன் பாருங்க, உங்களுக்கு ஏற்றார் போல் இருக்கும்”, என்று கிளம்பிவிட்டார். அடுத்த நாள் கொண்டு வந்த வாத்யம் அப்பா எதிர்பார்த்த ஒலியை ஏற்படுத்தியது ஆனால் அதை வாசித்ததுமே, “என்னமோ சரியில்லையே, எதோ பெரிய சில்மிஷம் பண்ணி இருக்க!, என்ன பண்ணினாய்?”, என்று கேட்டார்.

செல்வமும் சிரித்துக் கொண்டே, பன்றியின் தோலை உபயோகித்ததாகவும், நீங்கள் கேட்ட ஒலி அதில்தான் வரும் என்றும் கூறிச் சிரித்தார். பர்லாந்திடம் இல்லாத இது போன்ற தைரியம் செல்வத்திடம் நிறைய உண்டு.

மணி ஐயர் தஞ்சாவூரில் இருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்த போது செல்வமும் சென்னைக்கு வந்து தொழிலைத் தொடர்ந்தார். துரதிர்ஷ்டவசமாக 1995-ல் நடந்த சாலைவிபத்தில் செல்வம் தன் வலது கரத்தை இழந்தார்.

2017 ஃபெப்ரவரியில் செல்வம் மறைந்தார். அவர் மகன்கள் இன்றும் மிருதங்க வினைஞர்களாகத் தொழில்புரிந்து வருகின்றனர்.

Read Full Post »

சென்ற வாரம் தொடங்கி இன்மதியில் ஒரு தொடர் எழுதுகிறேன்.

இந்தக் கட்டுரை முதலில் இங்கு வெளியானது

இசைக் கருவிகளை வசித்தவர்களைத் தெரியும் அளவுக்கு அவற்றை செய்தவர்களைப் பற்றி அதிகம் வெளியில் தெரிவதில்லை. மரத்தின் கனியின் மீது கவனம் செல்லும் அளவிற்கு வேரின் பெயரில் கவனம் செல்லாது என்பதுதான் நடைமுறை. இருப்பினும் ஒரு சிலரின் திறன் நடைமுறை வழக்கங்களையும் மீறி வெளிச்சத்துக்கு வந்துவிடும். அப்படிப்பட்ட அரிய மிருதங்க வினைஞர்தான் பர்லாந்து.

கடந்த சில நூற்றாண்டு கால வரலாற்றை பார்க்கும் போது, மிருதங்க வித்வானாய் நமக்குக் கிடைக்கும் முதல் பெயர் தஞ்சாவூர் நாராயணசாமியப்பா. மிருதங்க வினைஞர்களை பார்க்கும் போது நமக்குக் கிடைக்கும் முதல் பெயர் செவுத்தியான் என்றறியப்பட்ட செபஸ்டியன். செபஸ்டியன் நாராயணசாமியப்பாவுக்கு வேலை செய்தாரா என்று தெரியவில்லை. அவர் சமகாலத்தில் இருந்த மான்பூண்டியாபிள்ளை, அதற்கு அடுத்த தலைமுறையினரான தட்சிணாமூர்த்தி பிள்ளை, தஞ்சாவூர் வைத்தியநாத ஐயர் போன்றோருக்கு வேலை செய்தவர் என்று தெரிய வருகிறது.

செபஸ்டியனின் மகன்கள் செங்கோல், பர்லாந்து, செட்டி ஆகிய மூவரும் தஞ்சாவூரில் இருந்தபடி வாத்தியங்களுக்கு வேலை செய்து வந்தனர். தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரின் வீட்டிலேயே பெரும்பாலும் இந்த வேலைகள் நடை பெறும்.

சாதி/மத பாகுபாடுகள் மலிந்திருந்த காலகட்டத்திலும்,  இந்த சகோதரர்களின் கைவண்ணம் சமூக அடுக்குகளை தளர்த்தியது.  தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரின் வீட்டில் தலித் கிருஸ்துவ பின்னணியில் இருந்து வந்த இவர்கள் நினைத்த வண்ணம் புழங்க முடிந்ததை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்த சங்கீத கலாநிதி டி.கே.மூர்த்தி, “நாங்க இன்னிக்கு வேளா வேளைக்கு சாப்பிடறோம்-னா அதுக்கு இவங்களை மாதிரி மிருதங்க வேலை செஞ்சு தரவங்களும் தான் காரணம்”, என்று ஒருமுறை உருக்கமாய் கூறியது அன்று அந்த அரங்கில் இருந்தவர்களை சற்றே அசைத்தது.

miruthangam

புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளைக்கு வெகு நாட்களாய் தொல்லைக் கொடுத்துக் கொண்டிருந்த மிருதங்கத்தை ஒரே நாளில் சரிபடுத்திக் கொடுத்த இளவயது பர்லாந்தின் கைகளில் தெய்வீகத்தன்மை நிறைந்திருப்பதாக தட்சிணாமூர்த்தி பிள்ளை கூறியுள்ளார் என்று ஒரு நேர்காணலில் சங்கீத கலாநிதி திருச்சி சங்கரன் கூறியுள்ளார்.

இந்தச் சகோதரர்களுள் பர்லாந்து என்கிற ஃபெர்னாண்டிஸுக்குத் தனி இடமுண்டு.

தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரிடம் இசை பயின்ற போதும், மணி ஐயரின் வீடு பாலக்காட்டில் தான் இருந்தது. மணி ஐயருக்கு கச்சேரிகளில் வாசிப்பதை விட, மிருதங்கம் என்கிற வாத்தியத்தை மேம்படுத்துவதில் ஈடுபாடு அதிகம். அவர் அந்த வாத்தியத்தில் செய்த பரிசோதனை முயற்சிகள் ஏராளம். இதனால் இயற்கையாகவே அவருக்கும் பர்லாந்துக்கும் ஒரு நெருங்கிய உறவு ஏற்பட்டது. நாளடைவில் தான் பாலக்காட்டிலும், மிருதங்க வேலை தஞ்சாவூரிலும் நடைபெறுவதை பொறுக்க முடியாமல் தன் இருப்பிடத்தையே தஞ்சைக்கு மாற்றிக் கொண்டார் அந்த மேதை.

தன் வீட்டிலேயே இடம் ஒதுக்கி எந்த நேரமும் மிருதங்க வேலை நடக்கும்படி பார்த்துக் கொண்டார். பல ஊர்களுக்கு கச்சேரி சென்றுவிட்டு வரும் போது சற்று ஓய்வெடுக்க மதியம் ஓய்வெடுக்கும் போதும், பர்லாந்து வேலை செய்து முடித்த பின் அந்த வாத்தியத்தை சரிபார்க்க சில நாத திவலைகளை எழுப்பினால் களைப்பைத் தூக்கி எறிந்துவிட்டு புத்துணர்ச்சியுடன் கிளம்பிவிடுவார் மணி ஐயர். எப்படித் தோல் பார்ப்பது, எந்த அளவில் வலந்தலை வைத்துக் கொள்வது, சாதம் எப்படி போடுவது, எப்படி மூட்டடிப்பது என்றெல்லாம் பர்லாந்துடன் கலந்து பேசி எண்ணற்ற மிருதங்க பரிசோதனைகளை மணி ஐயர் மேற்கொண்டுள்ளார்.

மணி ஐயரின் சமகால மேதையான பழனி சுப்ரமண்ய பிள்ளைக்கும் பர்லாந்துதான் மிருதங்க வேலை செய்து வந்தார். இந்த மூவரைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பாலக்காடு மணி ஐயரின் மகன் ராஜாராம் கூறுகையில்:

ஒரு முறை, சில நாட்களுக்கு பர்லாந்து எங்கள் வீட்டுப் பக்கம் வரவேயில்லை.

அவர் திரும்ப வந்த போது, பழனி ஐயாவுக்கு வேலை பார்க்கப் போயிருந்ததாகக் கூறினார்.  உடனே அப்பாவும் பழனியின் வாத்யத்தைப் பற்றி ஆர்வமாகக் விசாரித்த பின், “பழனியின் தொப்பி இவ்வளவு சுகமா இருக்கே. அது மாதிரி எனக்கு வேலை செஞ்சு தர மாட்டேங்கறியே”, என்றார்.

“அதுக்கென்ன ஐயா! அடுத்த மிருதங்கத்துல செஞ்சுட்டா போச்சு.”, என்றார் பர்லாந்து.

சில நாட்களுக்கெல்லாம், சொன்னது போலவே பழனி தொப்பி போல செய்திருப்பதாகச் சொல்லி ஒரு மிருதங்கத்தை பர்லாந்து எடுத்து வந்தார்.

அப்பா வாசித்துப் பார்த்து விட்டு, “இல்லைடா! பழனி தொப்பி மாதிரி இது இல்லையே.”, என்றார்.

“பழனி ஐயாவுக்கு செய்யறா மாதிரித்தான் செஞ்சேன். ஆனால், உங்களுக்காக கொஞ்சம் மாத்தினேன். அடுத்த தடவை அப்படியே செஞ்சு கொண்டு வரேன்.”

சொன்னாரே தவிர அதன் பின் அப்படி ஒரு மிருதங்கத்தை பர்லாந்து கொண்டு வரவே இல்லை. அப்பா பர்லாந்தைப் பார்க்கும் போதெல்லாம் பழனி தொப்பியைப் பற்றி கேட்டுக் கொண்டே இருந்தார்.

சில மாதங்களில் பொறுமை இழந்தவராய், “நீ எப்போ பண்ணி தரப் போறாய்? இப்ப தரேன், அப்ப தரேன்னு ஏமாத்திண்டே வரியே!”, என்றார்.

அப்போது அப்பா பாம்பே கச்சேரிகளுக்காக கிளம்பிக் கொண்டிருந்தார்.

“புதுத் தோல் வந்திருக்குங்க. நீங்க ஊருக்குப் போயிட்டு வாங்க. வரும் போது பழனி தொப்பியோட மிருதங்கம் தயாரா இருக்கும்.”, என்றார் பர்லாந்து.

அப்பா பாம்பே டூர் போய்விட்டு திரும்பியதும் வீட்டுக்குள் நுழையவில்லை. தோட்டம் தாண்டியதும், வீட்டுக்கு வலப்புறத்தில் ஒரு கொட்டகை உண்டு. அங்கு 20-25 மிருதங்கங்கள் இருக்கும். வேலையெல்லாம் அங்குதான் நடக்கும். பர்லாந்து அங்கு இருந்ததைப் பார்த்ததும், அப்பா நேராக கொட்டகைக்குள் சென்றுவிட்டார். பெஞ்சின் மேல் ஒரு மிருதங்கத்தை தயாராக வைத்திருந்தார் பர்லாந்து.

“இது பழனி தொப்பி மாதிரி பண்ணி இருக்கியா?”

“நீங்க வாசிச்சு பாருங்க ஐயா! அப்படியே பண்ணி இருக்கேன்”

அப்பா எடுத்து வாசித்துப் பார்த்தார். அவருக்குத் திருப்தியில்லை.

“ஏய்! இதுல அந்த சுகம் கிடைக்கலையேடா!”, என்றார்.

பர்லாந்து மெதுவாக சிரித்த படி, “அது அவர் கை வாகுங்க”, என்றான்.

“அப்ப எனக்கு வராதா!”, என்று குழந்தையைப் போல அப்பா கேட்டார்.

இந்த சம்பவம், மிருதங்க கலையில் உச்சத்தில் இருந்த மணி ஐயர் தன் சக கலைஞரிடமும் தனக்கு வேலை செய்த வினைஞரிடமும் வைத்திருந்த பெருமதிப்பை அழகாகப் படம்பிடிக்கிறது.

பலமுறை கச்சேரிக்குப் பின் தனக்கு அளிக்கப்பட்ட சால்வை போன்ற மரியாதைகளை பர்லாந்துவுக்கு அளித்து மகிழ்ந்துள்ளார் மணி ஐயர்.

“சொர்க்கம் என்றால் அது நல்ல சந்தன மரத்தில் சோமு ஆசாரி கடைந்து, பர்லாந்து வாத்தியத்தை மூட்டடித்து தயார் செய்து, அதில் அரியக்குடி ராமானுஜ ஐயங்காருக்கு வாசிக்க நேர்வதுதான்”, என்றும் மணி ஐயர் கூறியுள்ளார்.

பர்லாந்துவின் வேலையின் விசேஷத்தைப் பற்றி கூறும் பல கலைஞர்கள், “அவரிடம் எந்தப் பாடகருக்கு கச்சேரி என்று சொல்லிவிட்டால் போதும். எந்த ஸ்ருதி என்று கூடச் சொல்ல வேண்டாம். மிருதங்கம் தேவையான ஸ்ருதியில் தயாராக இருக்கும். இத்தனைக்கும் அவரிடம் தம்புராவோ ஸ்ருதி பெட்டியோ இருந்ததில்லை. அத்தனை ஸ்ருதியும் அவர் மனத்தில் அத்துப்படியாய் இருந்தது”, என்கின்றனர்.

”ஒருமுறை முசிறி சுப்ரமண்ய ஐயருக்கு வாசிக்க வந்தபோது, என்னை செண்ட்ரல் காலேஜில் அன்று சாயங்காலம் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு வாசிக்கச் சொன்னார். நான் முசிறிக்கு வாசிக்க எடுத்து வந்த இரண்டு வாத்யங்களை சில மணி நேரங்களில் பர்லாந்துவும் செட்டியும் எம்.எஸ்-க்கு வாசிக்கத் தோதாய் தயார்படுத்திவிட்டனர்.”, என்கிறார் டி.கே.மூர்த்தி.

பொதுவாக புது மிருதங்கத்தை நேரடியாக கச்சேரிகளில் வாசிக்க முடியாது. அதில் சிஷ்யர்கள் வாசித்து பழகுவர். முதல் சாதம், இரண்டாம் சாதம் உதிர்ந்து மூன்றாம் சாதம் போட்டவுடனேயே கச்சேரி மிருதங்கமாக அந்த வாத்யம் தகுதியுறும். பர்லாந்துவின் வேலையின் விசேஷத்தால் புது மிருதங்கமே பக்குவமான மிருதங்கம் போல இருக்கும். அப்படிப்பட்ட புது மிருதங்கத்தை வைத்துக் கொண்டு பாலமுரளி கிருஷ்ணாவுக்கு நேஷனல் புரோகிராம் வாசித்ததாகவும், அந்த வாசிப்பைக் கேட்டவர்கள் வாத்தியத்தின் நாதத்தை வெகுவும் புகழ்ந்ததையும் திருச்சி சங்கரன் நினைவுகூர்ந்துள்ளார்.

இன்றும் பர்லாந்தின் சந்ததியினர் சென்னையில் இருந்தபடி அனைத்து முன்னணி வித்வான்களுக்கும் மிருதங்கம் தயார் செய்து கொடுக்கின்றனர். 2013-ல் பர்லாந்தின் பெயரில் விருது ஒன்று நிறுவப்பட்டு ஒவ்வொரு வருடமும் ஒரு சங்கீத வாத்யம் தயாரிக்கும் வினைஞருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. முதல் பர்லாந்து விருதை அவரது மகன் செல்வம் பெற்றார்.

Read Full Post »

டிசம்பர் 11 அன்று சென்னை ராக சுதா அரங்கில் துருவ நட்சத்திரம் வெளியானது.

ஞாயிறு காலை 9.00 மணிக்கு அவ்வளவு பேர் கூடி அரங்கை நிறைத்தது ஆச்சர்யமாக இருந்தது.  இந்த விழாவுக்காகவே பெங்களூர், ஓசூர் போன்ற ஊர்களில் இருந்து நண்பர்கள் வந்து நெகிழ வைத்தனர்.

விழாவைப் பற்றி கிரியும், சுகாவும் விவரமாகவே எழுதியுள்ளனர்.

அன்றைய கச்சேரியில் பழனி வழியில் வந்திருக்கும் இரு இளம் வித்வான்களின் தனியை இங்கு காணலாம்.

நூல் வெளியான அன்று ஹிந்துவில், கோலப்பன் புத்தகத்தைப் பற்றியும் என்னைப் பற்றியும் எழுதியிருந்தார். சில நாட்களில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலும் ஒரு கட்டுரை வெளி வர, “என்ன செய்யற-னு தெரியல. ஆனா என்னமோ செய்யர போல இருக்கு”, என்கிற ரீதியில் பல நண்பர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்தன.

இந்த இரு கட்டுரைகளின் உபயத்தில், ம்யூசிக் அகாடமியில் கர்நாடிக் ம்யூசிக் புக் ஸ்டோரின் ஸ்டாலில் புத்தகம் எதிர்பார்த்ததை விட நன்றாகவே விற்றது என்றால், இணையத்தில் நண்பர் சொக்கன் எழுதிய அறிமுகத்தினால் இந்தப் புத்தகத்தை வாங்கினோம் என்று பலர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பினர்.  “இந்தப் புத்தகத்துக்கு இவ்வளவு ஆர்டரா?” என்று உடுமலை.காம் சிதம்பரம் அதிர்ச்சியில் பல நாட்கள் இருந்தார். சில நாட்களாய் ஆர்டர் இல்லை என்று நேற்று பேசும் போது சொன்னார். அப்போதுதான் அவர் குரலில் கொஞ்சம் ஆசுவாசம் தெரிந்தது.

புத்தகம் எழுதும் போது, கதை போல எழுதிய அத்தியாயங்கள் எல்லாம் அதிகப் பிரசங்கம் ஆகி விடுமோ என்ற பயம் எனக்கு இருந்தது. இத்தனைக்கும் மான்பூண்டியா பிள்ளை, தட்சிணாமூர்த்தி பிள்ளை போன்ற அத்தியாயங்கள் சொல்வனத்திலும், இந்த வலைப்பூவிலும் வெளியானவைதான். புத்தகத்தைப் படித்தவர்கள் அனைவருக்கும் அந்தப் பகுதிகளே பெரிதும் பிடித்திருக்கின்றன. பிரபல எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்ரன், இரா.முருகன் போன்றோரும் லா.ச.ரா-வின் மகன் சப்தரிஷி போன்ற தேர்ந்த ரசிகர்களும் இதனை உறுதி செய்தனர்.  இதுவரை இணையத்தில் வெளியாகாத ஓர் அத்தியாயம் சில நாட்களுக்கு முன் (சேதுபதியின் பதிப்புரையோடு) தமிழ் பேப்பரில் வெளியானது.

இ.பா-வும் அ.மி-யும் புத்தகத்தைப் பற்றிச் சொன்னவை இந்த வார சொல்வனம் இதழில் வெளியாகியுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன் தினமணியிலும் புத்தகத்தில் இருந்து ஒரு சிறிய பகுதி வெளியாகியிருந்தது.

இந்தப் புத்தகத்துக்கு இவ்வளவு விளம்பரம் நான் எதிர்பார்க்காத ஒன்று.

எல்லாவற்றையும் விட,  “இணையத்தில் ஓர் ஓரத்தில் எழுதவதன் மூலம் இவ்வளவு நண்பர்களா”, என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது.

அந்த நண்பர்களுள் பலரை புத்தகக் கண்காட்சியில் சந்திக்க நினைத்திருந்தேன். ஆனால், பணி நிமித்தமாக இந்த வாரக் கடைசியில் வெளிநாடு செல்ல வேண்டி உள்ளது. திரும்ப ஒன்றரை மாதங்கள் ஆகும்.

புத்தகங்களுடனும், நண்பர்களுடனும் உறவாடும் அரிய வாய்ப்பை இழக்கத்தான் வேண்டி உள்ளது 😦

புத்தகக் கண்காட்சியில் டிஸ்கவரி புக் பேலஸின் ஸ்டாலில் (ஸ்டால் எண் 334)  ‘துருவ நட்சத்திரம்’ புத்தகம் கிடைக்கும்.

இணையத்தில் பெற: http://udumalai.com/?prd=thuruva+natchatram&page=products&id=10381

Read Full Post »

சமீபத்தில் வெளியான என் நூலின் முதல் அத்தியாயம் இது.

 

“அண்ணா! கீழயே நிக்கறேளே! வண்டில ஏறுங்கோ” என்ற குரல் அந்த இளைஞனின் எண்ண ஓட்டத்தைக் கலைத்தது.

‘இன்னும் சில நிமிடங்களில் ரயில் கிளம்பி விடும். ரயிலடிக்கு வந்த பின் வர மாட்டேன் என்றா சொல்ல முடியும்? பாகவதரைப் பார்த்தால் பேச்சே வரõது. இதில் பொய் வேறா சொல்ல முடியும்? சென்ற முறை பம்பாய் சென்றபோது மனம் குதியாட்டம் போட்டது. இந்த முறை எப்படியாவது மெட்ராஸிலேயே தங்கிவிட மாட்டோமா என்று தவியாய்த் தவிக்கிறது.’ என்றெல்லாம் குழம்பிக் கொண்டிருந்த அவன் கையைப் பிடித்து வண்டிக்குள் இழுத்தே விட்டான் பாகவதரின் சிஷ்யன்.

“அண்ணா நாலஞ்சு தடவை உங்களைக் கேட்டுட்டார்” என்றவனைப் பார்த்து வெற்றுப் புன்னகை ஒன்றை உதிர்த்த படி உள்ளே சென்றான் சுப்ரமணியம்.

உரத்த குரலில் சௌடையாவுடன் பேசிக் கொண்டிருந்த செம்பை பாகவதர், உள்ளே நுழைந்தவனைக் கண்டதும், “ஏய்! எங்க யாக்கும் போனாய் நீ? எத்தர நாழியா நோக்கு வேண்டி காத்துண்டு இருக்கோம். ஏன் மொகமெல்லாம் வாடியிருக்கு? உடம்புக்கு சுகமில்லையோ?” என்றார்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லண்ணா” என்று தன் இருக்கையில் அமர்ந்தான் சுப்ரமணியம்.

சற்றைக்கெல்லாம் வண்டி கிளம்பி விட, பாகவதர் பழைய கதைகளை சௌடையாவிடம் விவரிக்கத் தொடங்கினார். திடீரென சுப்ரமணியத்தைப் பார்த்து, “சுப்புடு! நீ நேக்கு மொத மொதல்ல வாசிச்ச கச்சேரி ஓர்மை இருக்கோ?” என்றார்.

“அதை மறக்க முடியுங்களா? அப்ப எனக்கு பதினெட்டு வயசு கூட முடியல. 1926-ல நெல்லூர் கிட்ட புச்சிரெட்டிபாளையத்துல ஒரு கல்யாண கச்சேரி. அன்னிக்குப் பாடின கல்யாணியும் காம்போதியும் காதுலையே கிடக்குதுங்களே”

“சுப்புடு! அன்னிக்கே உன் வாசிப்பு நேக்கு ரொம்பப் பிடிச்சுது கேட்டியா. நிறைய இடத்துல பெரியவர் வாசிப்பை ஓர்மை படுத்தித்து.”

“அண்ணா! தட்சிணாமூர்த்தி ஐயா வாசிப்பு எங்க, என் வாசிப்பு எங்க. உங்களுக்கு தெரியாததா?”

“அப்படிச் சொல்லாதே சுப்புடு. உன் கையில எல்லாம் பேசறதாக்கும். கணக்கு, துரிதத்துலையும் தெளிவு, காலப்ரமாண சுத்தம் எல்லாம் நெறஞ்சு இருக்கு. ஆனா…”

“ஆனா என்னண்ணா? குத்தம் குறை இருந்தா தயங்காம சொல்லுங்க. நிச்சயம் மாத்திக்கறேன்.”

“சுப்புடு! என்ன வார்த்தை சொல்றாய் நீ. உன் வாசிப்புல குத்தம் சொல்றதாவது. அதுல வேண்டியதெல்லாம் பூர்ணமா இருக்கு. ஆனா நேக்கொரு ஆசை.”

“சொல்லுங்கண்ணா”

“இந்தக் கணக்கெல்லாம் கையில பேச அசுர சாதகம் பண்ணிருப்பாய் இல்லையா? கேட்க நன்னாத்தான் இருக்கு. இதையெல்லாம் ரசிக்கவே நிறைய ஞானம் வேணும். போன கச்சேரியில பிரமாதமா தனி வாசிச்சாய். திஸ்ரத்துக்குள்ள சதுஸ்ரத்தை நுழைச்சு வாசிச்சதெல்லாம் பெரிய காரியம். பட்சே, நான் கல்யாணி கிருதி அனுபல்லவியில கார்வை குடுத்து நிறுத்தினப்போ ஸர்வலகுவா ரெண்டு ஆவர்த்தம் வாசிச்சயே, அப்போ நிஜமாவே சிலிர்த்துப் போச்சு. அதுனாலயாக்கும் இன்னொருக்கா அதே எடத்தைப் பாடினேன். கணக்கெல்லாம் வேண்டாங்கலை. அதுக்காக ஸௌக்யமா வாசிக்கறதை குறைச்சுக்காத. சூட்சமம் என்னன்னா தனியில வாசிச்ச கணக்கு, புத்தியைத் ஸ்பர்சிச்சுது. கிருதியில வாசிச்ச டேக்கா சொல்லு மனசை ஸ்பர்சிச்சுது. நீ பகவானா நினைக்கறயே தட்சிணா- மூர்த்தி பிள்ளை, அவரோட விசேஷமே அவர் பாட்டுக்குக் கொடுக்கற போஷாக்குதான். அவருக்குத் தெரியாத கணக்கா? அவர் பண்ணாத கோர்வையா? ஆனாலும், காரைக்குடி பிரதர்ஸுக்கு வாசிக்கும்போது மூணாமத்த வீணையாவே அவர் மிருதங்கம் மாறிடுமாக்கும். ஒரு சாப்பு குடுத்தாப் போறும். மனசு நிறைஞ்சுடும்.”

பாகவதர் பேசப் பேச ஏற்கெனவே குழம்பியிருந்த சுப்ரமணியத்தின் மனம் மேலும் கலக்கத்துக்குள்ளானது.

‘வாழைப் பழத்துல ஊசி ஏத்தறாரா பாகவதர்? நிறைய கச்சேரி வாய்ப்புகள் வரணும்னா வித்வத்தை எல்லாம் மூட்டை கட்டி வெச்சாகணுங்கறாரா? பாடறவர் கையில தாளம் போடறாப்புல மிருதங்கக்காரன் வாத்தியத்துல தாளம் போட்டாப்போதும் போல இருக்கு. கச்சேரி கேட்கறவனுக்கு ராகமோ, கிருதியோ புரியற அளவுக்கு லய நுணுக்கங்கள் புரியறதில்லை. அது யார் குத்தம்? அவங்களுக்கு புரியலைங்கறதாலயே வாசிக்காம இருக்க முடியுமா?’ என்றெல்லாம் அவனுள் எண்ண அலைகள் எழும்பியபடி இருந்தன.

அது வரை அமைதியாய் வந்த சௌடையா, “அண்ணா! ஒரு விஷயம்…” என்று இழுத்தார்.

“சொல்றதுக்கென்ன நாள் பார்க்கணுமா? என்னவாக்கும் சேதி?” என்றார் செம்பை.

“உங்களுக்குத் தெரியாத சம்பிரதாயம் இல்ல. கச்சேரியில ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு இடம் இருக்கு. அதுல பாடகருக்கு வலப் பக்கம் மிருதங்கம், இடப் பக்கம் வயலின். இதுதான் சம்பிரதாயம்.”

“சௌடையா! நீங்க சொல்ற விஷயத்துக்குள்ள போறதுக்கு முன்னாடி ஒரு சோத்யம் கேக்கறேன். ஒரு வாய்ப்பாட்டுக் கச்சேரி நன்னா அமையறத்துக்கு எதெல்லாம் காரணம்?”

“பாடறவர் ஸ்ருதி சுத்தமாப் பாடணும். சபை அறிஞ்சு பாடணும். மனசு முழுக்க கச்சேரியில லயிச்சு சத்தியமாப் பாடணும்.”

“பாடறவர் ஒழுங்காப் பாடினா மாத்திரம் கச்சேரி நன்னா அமைஞ்சுடுமோ?”

“அது எப்படி? கூட வாசிக்கற பக்கவாத்தியங்களும் பாடறவர் பாட்டுக்கு போஷாக்கு பண்ணி மெருகேத்தணும்”

“அதைச் சொல்லும்! ஆக பாடகர், வயலின் வித்வான், மிருதங்க வித்வான் மூணு பேரும் பிரகாசிச்சாத்தான் கச்சேரி சோபிக்கும் இல்லையா?”

“அதுல என்ன சந்தேகம்”

“அப்போ, மிருதங்கக்காரர் வாசிப்பு பரிமளிக்கறதும் கச்சேரிக்கு முக்கியம்தானே?”

“இல்லையாபின்ன. அவர் அமைச்சுக் கொடுக்கற பாதையில- தானே நாம நடக்க முடியும்?”

“ரொம்ப சரி. மிருதங்க வாசிப்பு நன்னா அமைய வாத்யத்தோட வலந்தலை சபையை பார்த்து இருக்கணுமா? எதிர்பக்கம் இருக்கணுமா?”

பாகவதர் தன்னை மடக்கிவிட்டதை உணர்ந்த சௌடையா மெல்லிய புன்னகை ஒன்றை உதிர்த்தார்.

“உமக்கே புரிஞ்சு இருக்கும்னு நினைக்கறேன். கச்சேரியில எங்க உட்கார்ந்தா என்ன? சம்பிரதாயங்கறதே நாம வெச்சதுதானே? பழைய நாளுல எல்லாம் வயலினே இல்லை. வீணையும், குழலும்தான் பக்க வாத்யம். அதனால, வயலினோட கச்சேரி செய்யறது சம்பிரதாய விரோதம்னு சொல்ல முடியுமோ? வழக்கமா உள்ள வயலினோட தந்தி அமைப்பை மாத்தி நீங்க வாசிக்கற வயலின் சம்பிரதாயத்துக்கு விரோதமான வயலின்னு சொன்னா ஏத்துக்க முடியுமோ?” என்று பாகவதர் அடுக்கிக் கொண்டே போனார்.

கேட்டுக் கொண்டு வந்த அந்த இளைஞனுக்கு ஒரு பக்கம் பாகவதரின் மேல் மதிப்பும், மறு பக்கம் வீண் சம்பிரதாயங்களின் மேல் வெறுப்பும் பெருகின.

‘ஒரு மனுஷனுக்கு வலது கைப்பழக்கமோ, இடது கைப் பழக்கமோ அமையறது கடவுள் சித்தமில்லையா? எத்தனையோ காலமா நாகஸ்வர கச்சேரியில ரெட்டைத் தவில் வாசிக்கறது வழக்கத்துலதானே இருக்கு. அப்படி வாசிக்கும்போது ஒருத்தர் வலக்கைப் பழக்கம் இருக்கறவராகவும், மற்றவர் இடக்கை பழக்கம் இருக்கறவரõகவும் உள்ள ஜோடிகள் எத்தனையோ உண்டே. அம்மாப்பேட்டை பக்கிரியோட வாசிப்பைக் கேட்க கூட்டம் அலை மோதுமே. அவரும் இடது கைப் பழக்கம் கொண்டவர்தானே? ரேடியோ கச்சேரியில என் கூட சந்தோஷமா வாசிக்கிற வயலின் வித்வான்கள் சபா கச்சேரியில வாசிக்கத் தயாராயில்லை. இடம் மாறாம தொப்பியை சபை பக்கம் வெச்சு வாசிச்சா கேட்க நல்லாவா இருக்கும்? பரம்பரை பரம்பரையா லயத்துல ஊறின எனக்கு ஏன் இப்படி சோதனை வரணும்? என் வாசிப்பு சரியில்லை-னு ஒதுக்கினா நியாயம். என் இடது கைப் பழக்கத்தால் கச்சேரி வாய்ப்பு தட்டிப் போவது எந்த விதத்துல நியாயம்?’ என்றெல்லாம் அந்த இளைஞனின் நெஞ்சம் குமுறியது.

யோசனையில் தலையைக் கவிழ்த்திருந்தவனின் தோளைத் தொட்ட பாகவதர், “சுப்புடு! இதுக்கு முன்னால் நீ பம்பாய் பார்த்திருக்கியோ?” என்று கேட்டார்.

பாகவதரின் கேள்வி அவனை மேலும் தளரச் செய்தது. அதைப் பற்றி பேச விரும்பாதததால் தலையை இல்லை என்று ஆட்டியபோதும், அவன் மனக்கண் முன் பழைய நினைவுகள் ஓடத் தொடங்கின.

முதல் பயணம் என்பதால் ஆசை ஆசையாய் பம்பாய்க்குக் கிளம்பியிருந்தான். முதன்முறையாய் அங்கு வாசிக்கப் போகும் கச்சேரியே ஒரு பெரிய சபையில் சிறந்த பாடகரின் கச்சேரியாய் அமைந்ததை எண்ணி அவன் உள்ளத்தில் உற்சாகம் பொங்கியது. நிறைந்த சபையில் கச்சேரி விறுவிறுப்பாக தொடங்கியது. பாடகருக்கு போஷாக்கு செய்து நன்கு உழைத்து வாசித்தான். முதல் பாடலின் அனுபல்லவி முடிந்து சரணம் பாடுவதற்குள் திஸ்ரத்தில் சின்ன மோரா ஒன்றை வாசித்ததற்கே கூட்டம் ஆரவாரித்தது. அந்த இளைஞனின் முகத்தில் பரவசம் பரவ ஆரம்பித்த வேளையில் பாடகரின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க ஆரம்பித்தன.

அடுத்த பாடலுக்கு முன்னால் அரை மணி நேரம் ராகம் பாடினார். கிருதியைப் பாடி நிரவல், ஸ்வரம் என்று விஸ்தாரமாய் முடித்தபோது கச்சேரி தொடங்கி 2 மணி நேரம் ஆகிவிட்டது. தன் திறமையை முழு வீச்சுடன் காட்ட தனி ஆவர்த்தனம் விடுவார் என்றெண்ணியிருந்தான் அந்த இளைஞன். ஸ்வரப்ரஸ்தாரத்துக்கு ஆரவாரமாய் கைத்தட்டிய கூட்டமும் தொடர்ந்து தாளம் போடத் தயாரானது. ஆனால் பாடகரை அவசர அவசரமாய் அடுத்த ராகத்தைப் பாடத் தொடங்கினார். எவ்வளவோ முயன்றும் சுப்ரமணியத்தால் பாடகரின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை. ராக பாவத்துக்குள் மூழ்குவது போன்ற பாவனையில் கண்ணை மூடிக் கொண்டு ஆலாபனை செய்பவரை என்ன செய்ய முடியும்?

ராகம் முடிந்ததும் தானம் பாடி பல்லவியை அமர்க்களமாய் பாடி முடித்தபோது கூட்டம் கலையத் தொடங்கி விட்டது. அப்போதும் அவர் தனி ஆவர்த்தனம் விடத் தயாராக இல்லை என்று உணர்ந்தபோது, “இப்பவாவது தனி வாசிக்கலாமா?” என்று வாயைத் திறந்து சுப்ரமணியம் கேட்டே விட்டான். வேண்டா வெறுப்பாய் பாடகர் தாளம் போட ஆரம்பித்தார். நல்ல நேரத்தில் தனி என்றாலே இளைப்பாற அரங்கை நீங்கும் கும்பல், கச்சேரி கிட்டத்தட்ட முடிந்த நிலையிலா தனி கேட்க உட்கார்ந்திருக்கும்? எல்லோரும் கலையும் நேரத்திலா நன்றாய் வாசிக்கத் தோன்றும். ஏதோ பேருக்கு இரண்டு நிமிடம் வாசித்து கோர்வையை வைத்து தனியை முடித்தான். “ஆஹா! ஜிஞ்சாமிர்தம்! எப்பேர்பட்ட வாசிப்பு” என்ற பாடகரின் குசும்பு அவன் மனதை சுருக்கெனத் தைத்தது.

இந்நிகழ்வால் ஏற்பட்ட கசப்பு அவனை பம்பாய்க்கு மீண்டும் வரக் கூடாது என்ற முடிவை நோக்கிச் செலுத்தியது. ஆனால் இன்றோ மீண்டும் பம்பாய்க்கு சென்று கொண்டிருக்கிறான்.

ஒரு வேளை பாகவதர் அழைப்பை மறுத்திருந்தால்…

அது எப்படி முடியும்? அவரிடம் கொடுத்த வாக்கை மீற முடியுமா?

பதின்ம வயதில் நாயனா பிள்ளைக்கும், டைகருக்கும் வாசித்திருந்தாலும், கச்சேரி வாய்ப்புகள் அதிகம் கிட்டாமலே இருந்த காலத்தை மறக்கவா முடியும்? நாயனா பிள்ளை போன்ற லயசிம்மத்துடன் வாசித்ததைக் கேட்ட மற்ற பாடகர்கள், இந்த வாசிப்புக்கு நம்மால் தாளம் போட்டு நிர்வாகம் பண்ண முடியுமா என்ற பயந்தார்கள். போதாக் குறைக்கு இடது கைப் பழக்கம் வேறு. இசையை நம்பியே வாழ்க்கை நடத்துபவனுக்கு கச்சேரிகளே இல்லை என்றால் ஜீவனம் எப்படி நடக்கும்?

அந்தச் சமயத்தில் கொடி கட்டிப் பறந்த பாடகர்களுள் செம்பை முதன்மையானவர். அவருக்கு வழக்கமாய் பாலக்காடு மணி ஐயர்தான் வாசித்து வந்தார். மணி ஐயர் சிறுவனாக இருந்த போதே, அவரை தட்சிணாமூர்த்தி பிள்ளையுடன் இணைத்து வாசிக்க வைத்து, அவர் திறமையை உலகுக்கு எடுத்துக் காட்ட வழி செய்தவர் செம்பை. ஏதோ ஒரு காரணத்தினால் செம்பைக்கு மணி ஐயர் பெயரில் மனத்தாங்கல் ஏற்பட்டது.

அப்போது அவனைக் கூப்பிட்டார் செம்பை. “சுப்புடு! உன் கையில பேசாததே இல்லையாக்கும். இந்த வாசிப்பு எல்லாருக்கும் தெரியணும். அதுக்கு நான் வழி பண்றேன். அதுக்கு முன்னால நாம ஒரு ஒப்பந்தம் போட்டுக்கணும்.” என்று பீடிகை போட்டார் செம்பை.

“பெரியவர் தட்சிணாமூர்த்தி பிள்ளை உங்களுக்கு எவ்வளவோ சந்தோஷமா வாசிப்பார். அப்பேர்பட்ட பாட்டு உங்களோடது. நீங்க என் கிட்ட ஒப்பந்தமாப் போடணும்? கட்டளை போட்டா செய்ய மாட்டேனா?”

“அப்படின்னா நேக்கு ஒரு வாக்கு கொடு.”

“நீங்க என்ன சொன்னாலும் செய்யறேன்.”

“நான் எங்க கச்சேரிக்குக் கூப்பிட்டாலும் வரணும். கச்சேரிக்கு ரேட் நீ பேசக் கூடாது. நான் என்ன பேசிக் குடுக்கறேனோ ஒப்புக்கணும்.”

“இது என்னண்ணா பிரமாதம். கரும்பு தின்னக் கூலியா என்ன? உங்க பாட்டுக்கு சன்மானமே இல்லாம கூட வாசிப்பேனே.”

இந்த நிகழ்வுக்குப் பின் அவனுக்கு எக்கச்சக்க கச்சேரிகள். கோவில் கச்சேரி, கல்யாணக் கச்சேரி, சபா கச்சேரி என்று சதா செம்பை வைத்தியநாத பாகவதருடன் சுழன்று கொண்டே இருந்தான். இசை உலகும் அவனது வாசிப்பை கவனிக்கத் தொடங்கியது. மெது மெதுவாய் மற்ற பாடகர்களும் அவனை அழைக்க ஆரம்பித்தனர். செம்பை கச்சேரி இல்லாத சமயத்தில் மற்றவர்களுக்கும் அவன் வாசித்து வந்தான். அப்படி ஒரு சமயத்தில்தான் பம்பாயில் வேறொரு பாடகருடன் அந்தக் கசப்பான அனுபவம் ஏற்பட்டது.

அது நடந்த அடுத்த மாதம் செம்பை பம்பாய்க்கு வருமாறு அழைக்க, கொடுத்த வாக்கை மீற முடியாமல் ஒப்புக் கொள்ள நேர்ந்தது.

‘இவ்வளவு குமுறலை மனதுக்குள் அடக்கியபடி வாசித்தால் நன்றாகவா இருக்கும்? முழு மனதுடன் வாசிக்க முடியாத இடத்தில் நல்ல பேரை வாங்க முடியும்? நமக்கு எவ்வளவோ உபகாரம் செய்து வரும் செம்பை பாகவதரின் கச்சேரியிலா நான் அசிரத்தையாய் வாசிக்க முடியும்?’

எண்ண அலைகளின் சுழற்சியில் சிக்கித் தவித்தபடி ரயில் பயணத்தை எப்படியோ கடத்தினான் அவ்விளைஞன். பம்பாயில் ஜாகைக்குச் சென்றதும், “அண்ணா, எனக்குத் தலைவலியா இருக்கு. நான் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கறேன்.” என்று கூட்டத்தினின்று நழுவி தன் அறைக்குள் தனிமையில் மூழ்கினான்.

அவன் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த வேளையில் செம்பையைச் சந்திக்க வந்த ரசிகர், “இன்னிக்குக் கச்சேரியில மிருதங்கம் யாரு?” என்றார்

“பழனி முத்தையா பிள்ளையோட பையன் சுப்புடுவாக்கும் மிருதங்கம். அவன் வாசிப்பை பம்பாய் முதன்முதலா கேட்கப் போறது” என்று கண் சிமிட்டினார் பாகவதர்.

“முதன்முதலாவா? போன மாசம்தானே அவர் இங்க வந்திருந்தார்? அப்ப நடந்த விவகாரத்தையெல்லாம் பார்த்தபோது இனிமே அவர் இங்க வரவேமாட்டார்னு நினைச்சேன்.”

“ஓ! நான் கேட்டப்போ இதுக்கு முன்னால பம்பாய் வந்ததில்லைனு சொன்னானே! என்னவாக்கும் நடந்தது? விவரமாய்ச் சொல்லும்.” என்று பாகவதர் பரபரக்க, நடந்ததையெல்லாம் விளக்கினார் ரசிகர்.

“அப்படியா சேதி. நீங்க இதெல்லாம் சொன்னது ரொம்ப நன்னாச்சு” என்று யோசனையில் ஆழ்ந்தார் பாகவதர்.

மாலையில் கச்சேரிக்காக மேடை ஏறும் வரை சுப்ரமணியத்திடம் பாகவதர் பேசவில்லை. அவர் ஏதும் கேட்டால் போலியாய் நடந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படுமோ என்று பயந்தவனுக்கு, அவர் பேசாததே பெரிய ஆறுதலாய் இருந்தது.

கச்சேரி தொடங்குவதற்கு முன் அவனைப் பார்த்து ஒரு முறை மலர்ந்த புன்னகையை வீசிய பாகவதர், கண்களை மூடி குருவாயூரப்பனை வணங்கிவிட்டு ஸ்ருதியோடு இணைந்து கொண்டார். அவரது வெண்கலக் குரல் அரங்கை நிறைக்க, நல்ல விறுவிறுப்புடன் வர்ணத்தைத் தொடங்கினார்.

மேடையேறும்போது அவன் மனத்தில் இருந்த குழப்பம் எல்லாம் பாகவதர் பாட ஆரம்பித்ததும் பறந்தோடியது. நங்கூரம் பாய்ச்சியதுபோல் ஸ்திரமான தாளத்தைப் போடுவதைப் பார்க்கும்போதே அவனுக்கு வாசிக்க வேண்டும் என்ற ஆவல் பெருகியது. முக்தாய் ஸ்வரம் முடிந்தபோதே அரங்கில் இருப்பவர்கள் எல்லாம் ஆரவாரிக்க, மேடையிலிருந்தோர் எல்லாரும் கச்சேரி களை கட்டிவிட்டதை உணர்ந்தனர்.

வர்ணத்துக்குப் பின், ‘வாதாபி கணபதிம்’ பாடி, ‘ப்ரணவ ஸ்வரூப வக்ர துண்டம்’ என்ற இடத்தில் நிரவல் செய்தார் பாகவதர். தார ஸ்தாயியில் ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம் என்று ஒவ்வொரு ஸ்வரத்திலும் கார்வை கொடுத்து பாகவதர் நிற்கும் வேளையில், அவன் மிருதங்கத்திலிருந்து புறப்பட்ட சாப்புகளும், குமுக்கிகளும் எண்ணற்ற ஆஹாகாரங்களைப் சம்பாதித்தன. கீழ் கால ஸ்வரங்களுக்குத் தென்றலாய் வருடிய மிருதங்கம், பாகவதரின் விசேஷமான ‘கத்திரி ஸ்வரங்களின்’ போது கோடை இடியாய் முழங்கியது.

கச்சேரி ஆரம்பித்த அரை மணிக்குள் ரசிகர்கள் மனது நிறைந்து விட, பாகவதர் அவனைப் பார்த்து, “தனி வாசிச்சுடு” என்றார்.

“தனியா? நான் ஏதும் தப்புப் பண்ணிட்டேனா? எதானாலும் நேரடியாச் சொல்லுங்க.”

“ஏய்! தப்பொண்ணும் இல்லையாக்கும். நீ கிருதிக்கு வாசிச்சதை எப்படி ரசிச்சாப் பார்த்தியோ? எனக்கே பாடறதை நிறுத்திட்டு கொஞ்சம்கூடக் கேட்டாத் தேவலைன்னு தோணித்து. சீக்கிரம் வாசி.” என்று உற்சாகப்படுத்தினார்.

அவன் மகிழ்ச்சியெல்லாம் வாசிப்பில் வெளிப்படத் தொடங்கியது. இரண்டு ஆவர்த்தம் வாசித்ததும் பாகவதர் ரயிலில் சொன்னது நினைவுக்கு வந்தது. தன் மனத்துக்கு சரி என்று தோன்றாதபோதும், இவரது பெருந்தன்மைக்கு வேண்டியாவது விவகாரமில்லாமல் சர்வலகுவாய் இன்று நிறைய வாசிக்க வேண்டும் என்று முடிவெடுத்தான். ஸ்ருதியொடு இழைந்தபடி அவன் உதிர்த்த சாப்புகளும், மீட்டுச் சொற்களும் ரசிகர்களை களிப்பில் ஆழ்த்தின. புறா குமுறுவது போன்ற குமுக்கிகள் அவன் மிருதங்கத்தின் தொப்பியில் இருந்து எழுந்தபோது சௌடையா தன்னை மறந்த நிலையில் ஆஹாகாரம் செய்தார். ஐந்து நிமிடங்கள் சர்வ சௌக்யமாய் வாசித்துவிட்டு தனியை முடிக்கப் போகும் வேளையில், “சுப்புடு! அந்தக் கண்ட நடையைக் கொஞ்சம் பிரஸ்தாபம் பண்ணேன்” என்றார்.

பாகவதரை இன்னும் வாசிக்கச் சொல்லிக் கேட்கிறார் என்றதும் கூட்டமும் அந்த இளைஞனை உற்சாகப்படுத்துவதில் முனைந்தது. கதி பேதம் செய்து கண்ட நடைக்குத் தாவி, கண்டத்தின் ஐந்தை ஐந்தாகவே காட்டாமல் வெவ்வேறு அழகிய கோவைகளை அவன் உருவாக்கியபோது பாகவதர் முகத்தில் பெருமிதம் ததும்பியது. அதன்பின் சதுஸ்ரத்துக்குத் தாவி மின்னல் வேகஃபரன்கள் வாசித்து, மோரா கோர்வை வாசித்து தனியை நிறைவு செய்யும்போது அரை மணிக்கு மேல் தனி வாசித்திருந்தான் அவ்விளைஞன். அன்று அவனுக்குக் கிடைத்த கைத்தட்டல் போல் அவன் அதுவரை கண்டதில்லை.

“என்னமா வாசிச்சான் பார்த்தேளா? தனி ஆவர்த்தனம் வாசிச்சா நிறைய இடத்துல எழுந்து போறா. நீங்களாக்கும் உண்மையான ரசிகாள். இப்பவே இன்னொரு தனி கொடுத்தாக் கூட உட்கார்ந்து கேட்பேளோல்லியோ?” என்று ரசிகர்களைப் பார்த்து கேட்டார் பாகவதர். பாகவதர் தென்னகத்தில் உள்ள ரசிகர்களைக் காட்டிலும் நம்மை உயர்ந்தவர் என்று கூறிவிட்டதை எண்ணி புளகாங்கிதம் அடைந்த பம்பாய் ரசிகர்கள், அந்தக் கச்சேரியில் இனி எத்தனை தனி வாசித்தாலும் அலுக்காமல் கேட்டிருப்பார்கள்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, இரண்டு பாடலுக்கு ஒரு முறை அவனை தனி வாசிக்கச் சொல்லிக் கொண்டே வந்தார் பாகவதர். ரூபகம், கண்ட சாபு, மிஸ்ர சாபு என்று வெவ்வேறு தாளங்களில் தன் திறமையை காட்டிக் கொண்டே வந்தான் அவ்விளைஞன். நேரம் செல்லச் செல்ல சபையின் மொத்த கவனமும் மிருதங்க வித்வானின் மேலேயே தங்கியது. பாட்டுக்கு மிருதங்கம் என்பது போய், மிருதங்கம் பரிமளிக்க வேண்டி பாகவதர் பாடுவது போன்ற தோற்றம் ஏற்பட்டது.

கணக்குகளை அவ்வப்போது காட்டி, சௌக்கியத்தைப் பிரதானமாக்கிக் கொண்டு வாசிக்கும்போதுதான் பாகவதர் ரயிலில் கூறிய விஷயத்தில் பொதிந்திருந்த உண்மை அவனுக்கு விளங்க ஆரம்பித்தது. உண்மையான லய வேலைப்பாடு விரலை ஒடிக்கும் கணக்குகளில் இல்லை, மிகவும் சௌக்யமாய் வாசித்தபோதும் லய விவகாரங்களை நுணுக்கமாய்ச் செய்ய முடியும் என்பதை அவன் உணர ஆரம்பித்தான்.

இறுதியாகத் திருப்புகழ் பாடியபோது, அரங்கில் இருந்த ரசிகர்கள் ஒருமித்த குரலாய் “இன்னொரு தனி” என்று முழங்கினர். அவர்களுக்கிணங்கி ஐந்தாவது முறையாகத் தனி வாசிக்கச் சொன்னார் பாகவதர். கரணம் தப்பினால் மரணம் என்ற வகையிலான சந்த தாளத்தில் சுப்ரமணியம் வாசிக்க, இம்மி பிசகாமல் தாளம் போட்டு உற்சாகப் படுத்திக் கொண்டே வந்தார் பாகவதர். ஒவ்வொரு முறையும் இடத்தில் சரியாக வந்து சேரும்போதும் அரங்கில் ஆரவாரம் அதிகரித்துக் கொண்டே போனது. இறுதியாய் கோர்வை வைத்து முடித்தபோது, “வேற தெரிஞ்ச தாளத்தோட கோர்வையை முன்ன பின்ன தள்ளி எடுத்து இடத்துக்குக் கொண்டு வரலையாக்கும். இந்தத் தாளத்துக்கான பிரத்யேகமான கோர்வையை வாசிச்சான். வாசிப்புல சத்தியம்னா இதுதானே?” என்று பாகவதர் புகழ் மாலை சூட்ட கச்சேரி இனிதே முடிந்தது.

“இதுவரை எத்தனை தனி ஆவர்த்தனத்தின்போது எழுந்து போயிருப்போம். அதனால் எவ்வளவு நஷ்டம் என்று இன்றுதான் புரிகிறது.” என்று சிலர் மனம் வருந்தினர். “தா தீ தொம் நம் மட்டுமே ஒழுங்காக வாசிக்க வராதபோது, நாம் எப்படி இந்த வாசிப்பெல்லாம் வாசிப்பது” என்று சிலர் கலங்கினர். சபையின் காரியதரிசி, “நாளன்னிக்கு கச்சேரிக்குள்ள வேற பேனருக்கு ஏற்பாடு செய்யணும். செம்பை வைத்தியநாத பாகவதர், சௌடையா – பார்ட்டி என்றிருக்கும் பேனரில், மிருதங்கம் வாசித்த இளைஞனின் பெயரையும் நிச்சயம் சேர்க்க வேண்டும்” என்று நினைத்துக் கொண்டார். “Grand Mridangam Conert” என்று அடுத்த நாள் தினசரி ஒன்று அவன் புகழ் பாடியது.

இளமை முதல் பல துயரங்களைக் கண்ட அவனுக்கு அதன்பின் உயரங்கள் மட்டுமே காத்திருந்தன.

அந்த இளைஞன்தான், சுப்புடு என்றும், பழனி என்றும், பிள்ளைவாள் என்றும் பலரால் அழைக்கப்பட்ட மிருதங்க வித்வான் பழனி சுப்ரமணிய பிள்ளை.

********************************************************************************************************

நன்றி: http://solvanam.com/

நூலை இணையத்தில் இங்கு வாங்கலாம்: http://udumalai.com/?prd=thuruva%20natchatram&page=products&id=10381

 

Read Full Post »

கடந்த சில மாதங்களாகவே இங்கு எதுவும் எழுதவில்லை. அதற்கு முக்கிய காரணம் நான் எழுதிக் கொண்டிருந்த நூல்.
ஸ்ருதி பத்திரிகையின் பழைய இதழ்களைப் படிப்பது எனக்குப் மிகவும் பிடித்த பொழுது போக்கு.  ஒரு முறை 1987-ல் வந்த ஸ்ருதி இதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்த போது, மிருதங்க வித்வான் தஞ்சாவூர் உபேந்திரன் எழுதியிருந்த கடிதம் கண்ணில் பட்டது.   “இடது கைப்பழக்கம் உள்ள ஒவ்வொரு மிருதங்க வித்வானும், ஒவ்வொரு வேளை சாப்பிடும் போது பழனி சுப்ரமணிய பிள்ளையை நன்றியுடன் நினைத்துக் கொள்ள வேண்டும்” என்று அவர் எழுதியிருந்தது மனதில் ஆழமாகப் பதிந்தது.  அன்று விழுந்த முதல் விதை, காலப் போக்கில் பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாசிப்பைக் கேட்கக் கேட்க விருட்சமாய் வளர்ந்தது.
இந்த நூலை எழுத ஆரம்பிக்கும் போது, இதை யாருக்காக எழுதுகிறேன் என்ற கேள்வி எழுந்தது.  கர்நாடக இசையில் தேர்ச்சி உடையவர்களுக்காகவா? அல்லது பரிச்சயம் மட்டும் உள்ளவர்களுக்காகவா? அல்லது பரிச்சயமே இல்லாமல், பழனி சுப்ரமணிய பிள்ளையின் பெயரைக் கேள்வியே பட்டிருக்காதவர்களுக்காகவா? இந்தக் கேள்விக்கு பதில் காண்பது சுலபமாக அமையவில்லை.  ஒருவருக்காக எழுதி மற்றவரை விடுவதற்கு மனம் ஒப்பவில்லை.  எல்லோருக்குமாக எழுதுவது என்பதோ இயலாத காரியம் என்ற போதும் அதைச் செய்யவே விரும்பினேன்.  இதன் விளைவாக இந் நூலின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு விதங்களில் அமைந்திருக்கின்றன.  குறிப்பாக, பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாசிப்பை நன்கு உணர்ந்தவருக்கு, கற்பனையாய்க் காட்சி விரித்து கதை போல எழுதப்பட்டிருக்கும் பகுதிகள் எரிச்சலூட்டக் கூடும்.   “என்னவோ நேரில் இருந்து பார்த்தா மாதிரி எழுதியிருக்கான்” என்று இளக்காரப் பார்வை வீசக் கூடும் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறேன்.  இந்த நூலில் கற்பனைகளைக் கலந்து நான் எழுதியிருக்கும் பகுதிகளில் பெரும்பாலானவை சொல்வனம் இணைய இதழில் தனிக் கட்டுரைகளாக வெளியாகியுள்ளவை.  அவை வெளியான போது பெற்ற வரவேற்பே என்னை அந்தப் பகுதிகளை மாற்றாமலேயே புத்தகத்தில் சேர்த்துக்கொள்ளத் தூண்டின.
துருவ நட்சத்திரம்
பழனி சுப்ரமணிய பிள்ளையின் பங்களிப்பை முழுமையாக உணர அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையும் வாசிப்பும் மட்டும் போதாது, அவர் வாசித்த வாத்யம்; அதன் வரலாறு; அவருக்கு முன்னால் இருந்த நிலை; அவர் வாசிப்பை பாதித்தவர்கள்; அவர் சம காலத்தினர் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போதுதான் முழுமையான பார்வை கிடைக்கும்.  இவற்றை எல்லாம் இந்த நூல் முழுமையாகப் பதிவு செய்திருக்கிறது என்று சொல்ல முடியாது.  மேலே குறிப்பிட்ட அனைத்திலும் ஒரு பறவைப் பார்வையை அளிக்கவே முயன்றிருக்கிறேன்.
இந்த நூலுக்கான அடித்தளமாக, பழனியுடன் நேரில் பழகியர்களின் நேர்காணல்களே அமைந்துள்ளன.  நேர்காணல்களை என்னால் இயன்றவரை நானே எடுத்தேன் என்றாலும் கணிசமான நேர்காணல்களை ஏற்கெனவே கே.எஸ்.காளிதாஸ் எடுத்து வைத்திருந்தார்.  அவர் பேட்டி கண்டிருந்தவர்களுள் பெரும்பாலானவர்கள், நான் தகவல் சேகரிக்க ஆரம்பிக்கும் போது உயிருடன் இல்லாதவர்கள்.  காளிதாஸ் சிறந்த மிருதங்க வித்வான் மட்டுமன்றி தெளிவாகவும் சுவையாகவும் எழுதக் கூடியவர்.  நினைத்திருந்தால், பழனியைப் பற்றிய நூலை என்னை விட சிறப்பாக அவர் எழுதியிருக்க முடியும்.  ஆனால், ஏனோ என் மூலமாகத்தான் இந்த நூல் வெளிவர வேண்டும் என்பதில் என்னை விட அதிக ஆர்வமாக இருந்தார்.  சில வாரங்களுக்கு ஒரு முறை தொலைபேசி மூலமும், நேரில் சந்திக்கும் போதும் தூண்டிக் கொண்டே இருந்தார்.  அவரது வழிகாட்டலும் தூண்டுதலும் இல்லாமல் இந்த நூலை எழுதியிருக்க முடியாது என்பதில் சந்தேகமே இல்லை.
காளிதாஸ் கொடுத்த தகவல்களை மட்டும் வைத்து இந்த நூலை எழுதியிருந்தாலும் இப்போதுள்ள நூலிலுள்ள வடிவத்திலிருந்து அது அதிகம் வேறுபட்டிருக்காது.  இருப்பினும், எனக்குத் தெரிந்த அத்தனை வழிகளிலும், சுமார் நான்கு ஆண்டுகள் தகவல்களைச் சேகரித்த பின்னரே இந்த நூலை எழுதியுள்ளேன்.  கருத்திலோ, தகவல்களிலோ பிழை வராமலிருக்க முடிந்த வரை முயன்றுள்ளேன்.  இதையும் மீறி தகவல் பிழைகளோ, கருத்து முரண்களோ இருப்பின், வாசகர்கள் தயங்காமல் தெரிவிப்பார்களானால் அடுத்த பதிப்புகளில் திருத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்.
இந்நூல் மலரக் காரணமானோர் பலர். என் தம்பியின் மிருதங்க ஆசானாய் அறிமுகமாகி, எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே ஆகிவிட்டவர் திரு. திருவையாறு பாலசுப்ரமணியம். லயம் என்றால் என்னவென்றே அறியாத நிலையில் மிருதங்க வாசிப்பின் அடிப்படைகளையும், கச்சேரியில் கேட்டு ரசிக்க வேண்டிய அம்சங்களையும் இவரிடம்தான் அறிந்து கொண்டேன்.
1962-ல் மறைந்து விட்ட பழனியை இன்றளவும் கேட்டு ரசிக்கக் காரணமாக இருப்பவை கச்சேரி ஒலிப்பதிவுகள். அவற்றை அரும்பாடுபட்டு சேர்த்திருப்பினும், எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் என்னிடம் பகிர்ந்து கொண்ட திரு.நாராயணசாமி, திரு.சிவராமகிருஷ்ணன், திரு.லக்ஷ்மி நரசிம்மன், திரு.கிருஷ்ண பிரசாத் ஆகியோரிடம்பட்டுள்ள கடனை இந்த ஜென்மத்தில் அடைக்க முடியாது.
நூலை எழுதும் போது பல சமயங்களின் எப்படி மேலே கொண்டு செல்வது என்ற குழப்பங்கள் ஏற்பட்டன. அத்தகைய சமயங்களில் எல்லாம் ‘தினமணி’ சிவகுமாரிடம் உரையாடித் தெளிவடைந்துள்ளேன். இந்த நூலுக்கு வேராய் பத்திரிகை செய்திகளும், நேர்காணல்களுமே அமைந்துள்ளன. பழைய பத்திரிகைக் களஞ்சியங்களில் தேட, ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தினர் அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தனர்.
இந்த நூலுக்காக திரு. திருச்சி சங்கரனை நேர்காணல் எடுத்த போது, டிசம்பர் சீஸன் களேபரத்துக்கு இடையிலும் இரண்டு முறை நேரம் ஒதுக்கி, தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். புதுக்கோட்டை லய பரம்பரையின் முதன்மைக் கலைஞர்களுள் ஒருவரான திரு.சங்கரனுக்கு ‘சங்கீத கலாநிதி’ விருது கிடைத்துள்ள வேளையில் என் புத்தகம் வெளிவருவதை எண்ணி மகிழ்கிறேன்.
முனைவர் பி.எம்.சுந்தரத்தின் ஆய்வுகள் நான் ஆதர்சமாகக் கருதுபவை. ஒரு முறை நேரிலும் பல முறை தொலைபேசியிலும், கலைஞர்கள் பற்றியும், சென்ற நூற்றாண்டின் சங்கீத உலக நிகழ்வுகள் பற்றியும் எனக்கெழுந்த சந்தேகங்களை பொறுமையாகப் போக்கினார். பழனி என்ற அற்புத மனிதரைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியவர் திரு.ஜெ.வெங்கடராமன், பழனியைப் பற்றிய நினைவுகளை அவர் கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்டது என்னுள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பழனி என்ற கலைஞன் காலம் கடந்து நிற்பதை உணரும் வகையில் பழனிக்கு அடுத்த தலைமுறை வித்வானான மதுரை டி. சீனிவாஸனும், அதற்கு அடுத்த தலைமுறை வித்வான் அருண்பிரகாஷும் பேசினர். பாலக்காடு மணி ஐயரின் மகன் திரு. ராஜாராம் கூறிய தகவல்கள் மணி ஐயர் – பழனி உறவைப் புரிந்து கொள்ள ஏதுவாய் அமைந்தன.
நூலின் சில பகுதிகளை, எல்லோரும் படிக்கும் விதமாய் இருக்க வேண்டும் என்பதற்காக, கொஞ்சம் கற்பனை கலந்து கதை போல எழுதய போதும், கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. அப்படி எழுதிய பகுதிகளுள் ஒன்றான மான்பூண்டியா பிள்ளையின் கதையைப் பாராட்டி எழுத்தாளர் ஜெயமோகனும், எழுத்தாளர் விமலாதித்த மாமல்லனும் வெளியிட்ட குறிப்புகள் எனக்குத் துணிச்சலை அளித்தன.
இதுவரை சொல்வனம் பதிப்பகம் வெளியிட்டு இருக்கும் இரு புத்தகங்களும் பொக்கிஷங்கள். மூன்றாவதாய் என் புத்தகம் வெளி வருவதில் எனக்குப் பெருமகிழ்ச்சி. நூலை நேர்த்தியாய் வடிவமைத்த திரு.மணிகண்டனும், அவசரம் என்ற போதும் நூலைத் தரமாக அச்சடித்துக் கொடுத்த நண்பர் ஜெயராமனும் ஆபத்பாந்தவர்கள்.
நான் முறையாகத் தமிழ் பயின்றவன் அல்லன். என் எழுத்தை செம்மைப்படுத்தியதில் பெரும் பங்கு திரு. ஹரிகிருஷ்ணனையே சேரும். என் தாயார் ஆர்.விஜயலட்சுமி, தந்தையார் ஆர்.மகாதேவன், என் தம்பி டி.எம்.சாய்ராம், நண்பர்கள் ஷீலா ராமன், முரளி, அருண் நரசிம்மன், ராமச்சந்திர ஷர்மா, சிந்துஜா, திரு.பாரதி மணி, ஷங்கர் இராமநாதன் ஆகியோர் பல்வேறு அத்தியாயங்களைப் படித்துக் குறை, நிறைகளைச் சுட்டினர்.
தகவல் சேகரிக்க வேண்டி பல பயணங்களை மேற்கொண்ட போதும், எழுதுகிறேன் என்ற பெயரில் பல மாதங்கள் கழித்த போதும், “என்னைக் கவலைகள் தின்னத் தகாமல்” பார்த்துக்கொண்டவர் என் மனைவி ஆர்.கிருத்திகா.
அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
டிசம்பர் 11-ம் தேதி அன்று இந்த நூல் சென்னை ராக சுதா அரங்கில் (மயிலாப்பூர், நாகேஸ்வரன் பூங்கா அருகில்) காலை 9.00 மணிக்கு வெளியாகிறது. வாசகர்கள் அனைவரையும் இந்நிகழ்வுக்குப் பணிவுடன் வரவேற்கிறேன்.

Read Full Post »

புதுக்கோட்டை லய பரம்பரையை உயரங்களுக்கு இட்டுச் சென்றவர்கள் வரிசையில் முத்தையாப் பிள்ளைக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு. புதுக்கோட்டை வழியில் வந்தவர் என்ற போதும் இவர் பிறந்தது பழநியில். மிடற்றிசை பிரபலமாவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்தே இசையை பராமரித்தும் வளர்த்தும் வந்தவர்கள், நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்களாக விளங்கிய இசை வேளாளர்கள்தான். அந்தப் பரம்பரையில் பெரியசெல்வன் என்பவரின் மூத்த மகனாக 1868-ல் முத்தையா பிள்ளை பிறந்தார்.

பரம்பரை கலையான தவில் வாசிப்பை கற்றதோடு இளம் வயதில் பழநி (கடம்) கிருஷ்ணையரிடம் வாய்ப்பாட்டும் கற்றார் என்று பி.எம்.சுந்தரம் எழுதியுள்ளார். இள வயதில் வாத்தியத்தில் நல்ல தேர்ச்சியை அடைந்த போதும், அந்தத் துறையில் நிபுணராக வேண்டி புதுக்கோட்டை மான்பூண்டியா பிள்ளையிடம் குருகுலவாசம் மேற்கொண்டார். மான்பூண்டியா பிள்ளை கஞ்சிராவில் பெயர் பெற்றிருந்தார் என்ற போதும், அவருடைய குருநாதர் மாரியப்பத் தவில்காரரே, ஓரளவு தேர்ச்சி பெற்ற மாணவர்களை மேற்கொண்டு பயில மான்பூண்டியா பிள்ளையிடம் அனுப்பி வைப்பாராம்.

பழநி முத்தையா பிள்ளைவுடன் மான்மூண்டியா பிள்ளைமான்மூண்டியா பிள்ளையுடன் பழநி முத்தையா பிள்ளை 

மான்பூண்டியா பிள்ளையின் சிஷ்யர்களுள், கச்சேரி வித்வானாக தட்சிணாமூர்த்தி பிள்ளைக்குப் பெரும் பெயர் இருந்த போதிலும், லய விவகாரங்களில் தேர்ச்சியைப் பொறுத்த மட்டில் முத்தையா பிள்ளையின் பெயர் சிறந்து விளங்கியது. “எந்த வித்வான் தலையால் போட்ட லய முடிச்சையும் முத்தையா பிள்ளை காலால் அவிழ்த்துவிடுவார். ஆனால் முத்தையா பிள்ளை காலால் போட்ட முடிச்சை தலையால் அவிழ்ப்பதே முடியாத காரியம்”, என்றொரு சொலவடை லய உலகில் இருந்து வந்ததாக எம்.என்.கந்தசாமி பிள்ளை கூறியுள்ளார்.

முத்தையா பிள்ளையின் குருகுலவாசத்தின் போது ஒரு நாள் புதுக்கோட்டையில் மதுரை பொன்னுசாமி நாயனக்காரரின் கச்சேரி ஏற்பாடாகியிருந்தது. அவருக்கு வழக்கமாய் வாசிக்கும் தவில்காரர் திடீரென்று வர முடியாமல் போனது. உடன் வாசிக்க ஆளில்லாமல் தவித்த போது முத்தையா பிள்ளையை போட்டுக் கொள்ளும்படி மான்பூண்டியா பிள்ளை சிபாரிசு செய்தார். ஓர் இளைஞர் தனக்கு ஈடுகொடுத்து வாசிக்க முடியுமா என்று முதலில் பொன்னுசாமி பிள்ளை தயங்கினாலும் அந்த யோசனைக்கு இசைந்தார். அன்று கச்சேரியில் முத்தையா பிள்ளையின் வாசிப்பைக் கேட்டதும், பொன்னுசாமி பிள்ளை பெரிதும் மகிழ்ந்து வாயாறப் பாராட்டினார். அதன் பின் பல கச்சேரிகளில் சேர்த்துக் கொண்டார்.

சிதம்பரம் வைத்தியநாத பிள்ளைக்கு என்றொரு நாகஸ்வர வித்வான் இருந்தார். அவரைப் பற்றி எழுதும் போது, “பல்லவிச் சுரங்கம் என்று போற்றிக் குறிப்பிடப்பட்டவர் இவர். இவருடைய பல்லவிகள், அமைப்பில் சிறியவையானாலும லய நுட்பம் மிகுந்தவை. வைத்தியநாத பிள்ளையின் மேளம் என்றால் பல்லவி இல்லாமலிருக்காது. அதிலே அடுக்கடுக்காக இடம் பெறும் கணக்கு வழக்குகளைச் சமாளிப்பதில், தவிற்கலைஞர்கள் சிரமப்படுவதைக் கண்டுகளிக்கவும் கூட்டம் வருவது சகஜம். இவரது பல்லவிகளின் அமைப்பு புரியும்படிதான் இருக்கும். ஆனால், அதை வாசிக்க முற்படுகையில், அவர் அமைத்துக் கொள்ளும் காலப்ரமாணம் மற்றவர்களுக்கு நிர்ணயப்படாமல், அப்பல்லவி சரியாக அமையாமல் போய்விடும்.”, என்கிறார் பி.எம்.சுந்தரம். “அந்தக் காலத்தில் பல்லவிகள் பல சமயம் கைக்கலப்பில் முடிந்து விடுவதுண்டு. வைத்தியநாத பிள்ளையின் கச்சேரிகள் போலீஸ் பந்தோபஸ்துடன் கூட நடந்திருக்கின்றன. அப்படிப் பட்டவருக்கு வாசிக்கத் தோதான் ஆள் என்றே முத்தையா பிள்ளையை அழைத்து வந்தனர்.”, என்று தா.சங்கரன் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். மாயூரத்தில் வைத்தியநாத பிள்ளை மூன்று காலங்களில் வாசித்த மல்லாரியைப் பற்றியும், அன்று அவருக்கு தவில் வாசித்தவர் முத்தையா பிள்ளை என்றும் பி.எம்.சுந்தரத்தின் ‘மங்கல இசை மன்னர்கள்’ நூலிலிருந்து தெரிய வருகிறது.

அன்றைய நாட்களில் பல்லவிகள் என்றால் அவை போட்டிகள்தான் என்பதை உணர்த்த பல குறிப்புகள் கிடைக்கின்றன. ஒருவர் வாசித்ததை மற்றவர் வாசிக்க முடியாவிட்டால், இனி அந்த வாத்யத்தை தொடுவதில்லை என்று சபதம் மேற்கொள்வது சாதாரணமாய் இருந்திருக்கிறது. ஒரு திருமண ஊர்வலத்தில் உறையூர் கோபால்ஸ்வாமி பிள்ளை நாகஸ்வரத்துக்கு முத்தையா பிள்ளை தவில் வாசித்தார். பாதி ஊர்வலம் நடக்கும் போது இருவருக்கும் சச்சரவு ஏற்பட்டு, “இனி தவிலை வாசிப்பதில்லை”, என்றொரு சபதத்தை முத்தையா பிள்ளை எடுத்தார்.

தட்சிணாமூர்த்தி பிள்ளை கடத்தைத் துறந்து மிருதங்கமும் கஞ்சிராவும் வாசித்தது போலவே முத்தையா பிள்ளையும் இவ்விரு வாத்தியங்களிலும் நிறைய கச்சேரிகள் செய்தார். தட்சிணாமூர்த்தி பிள்ளை கஞ்சிராவுடன் சேர்ந்து கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர், காரைக்குடி வீணை சகோதரர்கள், பலல்டம் சஞ்சீவ ராவ் போன்ற முன்னணி வித்வான்களுக்கு மிருதங்கம் வாசித்துள்ளார் முத்தையா பிள்ளை.

நாயினாப் பிள்ளை, தன் மனதிற்குகந்த மிருதங்கக் கலைஞரான முத்தையா பிள்ளையையே பிற்காலத்தில் சம்பந்தி ஆக்கிக் கொண்டார். அவரது மகள் நீலாயதாக்ஷியை முத்தையா பிள்ளையின் மூத்த மகனான நாகேஸ்வரனுக்கு அளித்தார். முத்தையா பிள்ளையின் இரண்டாவது மகனே முழவிசையின் உயரங்களைத் தொட்ட பழநி சுப்ரமணிய பிள்ளை. பிற்காலத்தில் பழநியுடன் சேர்ந்து பல கச்சேரிகளில் முத்தையா பிள்ளை கஞ்சிரா வாசித்துள்ளார்.

முத்தையா பிள்ளைக்கு இரு மனைவியர். முதல் மனைவி சென்னிமலையைச் சேர்ந்த உண்ணாமுலையம்மாள். இவருக்குப் பிறந்தவர்கள்தான் நாகேஸ்வரனும், சுப்ரமணியமும். மற்றொரு மனைவி அஞ்சுகத்தமாள். இவர்தான் முதன் முதலில் ‘ராகம் தானம் பல்லவி’ பாடிய பெண்மணி என்கிறார் இசையாய்வாளர் பி.எம்.சுந்தரம். இவருக்குப் பிறந்த சௌந்திரபாண்டியனையே தன் வாரிசாகக் கருதினார் முத்தையா பிள்ளை.

முத்தையா பிள்ளையின் லய குறிப்புகள் ஒரு நோட்டுப் புத்தகத்தில் பதிவாகியிகியிருந்ததாகத் தெரிய வருகிறது. “அந்தப் புத்தகம் அவரது பிரிய மகன் சௌந்திரபாண்டியனுடன் இருந்தது. இதைப் பெற பழநி சுப்ரமணிய பிள்ளை எத்தனையோ முறை முயன்றும் பயனற்றுப் போனது.”, என்கிறார் பழநியின் சீடர் கே.எஸ்.காளிதாஸ். 1973-ல் சௌந்திரபாண்டியன் மியூசிக் அகாடெமியில் இந்த நோட்டுப் புத்தகத்தைப் பற்றி பேசியுள்ளார் என்று அகாடமியின் ஜர்னல் தெரிவிக்கிறது. திண்ணியம் வெங்கடராம ஐயர், “இந்த நோட்டுப் புத்தகத்தை பதிப்பிக்க வேண்டும்”, என்று சொல்லி இருப்பதைத் தவிர வேறொரு குறிப்பும் அந்த நிகழ்வைப் பற்றி கிடைக்கவில்லை.

பல வருடங்கள் தன் குருநாதருக்குத் துணையாக இருந்து வந்த முத்தையா பிள்ளையின் கடைசி ஆசை அநேகமாய் மான்பூண்டியா பிள்ளைக்கு சமாதி கோயில் எழுப்புவதாகத்தான் இருந்திருக்க வேண்டும். பழநி சுப்ரமணிய பிள்ளையின் பெரும் முயற்சியால் இந்தக் கோயில் 1945-ல் எழுப்பப்பட்டது. குடமுழுக்கை முன் நின்று நடத்திய முத்தையா பிள்ளை அதே ஆண்டே மறைந்தார்.

Read Full Post »

இந்தக் கட்டுரைக்குத் துணையாக இருந்தவற்றைக் கட்டுரையின் முடிவில் பட்டியலிட்டுள்ளேன். இவை தவிர, தேடினாலும் கிடைக்காத இணைய ஆர்க்கைவ்களுக்குள்ளும் சில கட்டுரைகளோ, நான் உபயோகித்துள்ள கட்டுரைகளின் மொழி பெயர்ப்புகளோ பதுங்கி இருக்கலாம். அவற்றுக்கும் இந்தக் கட்டுரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை சமாதி கோயிலில் ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. வருடா வருடம் நடக்கும் நிகழ்வுக்கு முதன் முறையாய் சென்றிருந்தேன். மிருதங்கமும், கஞ்சிராவும் மாற்றி மாற்றி ஒலித்து சூழலை நாதமயமாக்கிக் கொண்டிருந்தன. மனமெல்லாம் சில வருட காலமாய் அவரைப் பற்றி திரட்டிய தகவல்கள் அலைமோதிக் கொண்டிருந்தன.

தக்‌ஷிணாமூர்த்தி பிள்ளை மண்டபமும், முருகனும் 

தட்சிணாமூர்த்தி பிள்ளை சமாதி கோயில் முக மண்டபமும், முருகனும்

கோயிலுக்கு வெளியில் இருந்து “ஆஹா! ஆஹா! என்ன அழகு! என்ன ருசி!” என்றொரு குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது. இசையை இவ்வளவு ரசிப்பவர் வெளியே நிற்கிறாரே என்று நினைத்துக் கொண்டேன். நேரம் ஆக ஆக, தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்த அந்தக் குரல் மனதை நெருட ஆரம்பித்தது. கோயிலில் பூஜை முடிந்து தீபாராதனை ஆன பின்னும் அந்தக் குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது. பொறுக்க முடியாமல் வெளியில் சென்ற போது, ஆங்கொரு பெரியவர் புதர்களிடையே அமர்ந்திருந்தார்.

வயது தொண்ணூறுக்கு மேல் இருக்கும். தலை சீரான கதியில் ஆடிக் கொண்டிருந்தது. கண்களில் இருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது. விரல்கள் தன்னிச்சையாய் தாளம் போட்டுக் கொண்டிருந்தன. சமாதி கோயிலுள் ஒலித்த தாளத்துக்கும் பெரியவரின் தாளத்துக்கும் சம்பந்தமே இல்லை. ஏனோதானோவென்றும் அவர் தாளம் போடவில்லை. அந்த விரல்கள் சீரான காலப்ரமாணத்தில் ஒரே தாளத்தை தெளிவாகப் போட்டன.

மெதுவாக அவரருகில் சென்று நின்று கொண்டேன். என்னை நிமிர்ந்து பார்த்தவர், “உங்களுக்கும் கேட்குதா?”, என்றார்.

எனக்கு அவர் குரலைத் தவிர வேறொன்றும் கேட்கவில்லை.

“தம்பி! என்னடா இவன் பைத்தியக்காரன்னுதானே பார்க்குறீங்க?”

எதுவும் சொல்ல என் நா எழவில்லை.

என் மனதில் ஓடியவற்றை தெளிவாய்ப் படித்தவர் போல, “எல்லாரும் கோயிலுக்குள்ள இருக்கும் போது இவன் மட்டும் புதர்ல உட்கார்ந்திருக்கானேன்னு நினைக்கறீங்க.”, என்றார்.

ஆச்சர்யத்தில் என் முகம் மாறியதைப் பார்த்து புன்னகைத்தவாறு, “இந்த இடம் இன்னிக்குத்தான் தம்பி புதராயிருக்கு. இங்கதான் எங்க ஐயா கட்டின கோயில் இருந்தது. சிற்ப வேலைபாடோட கருங்கல் மண்டபமும், ஸ்ரீ விமானமுமா, எவ்வளவு கம்பீரமா இருந்த கோயில் தெரியுமா? பக்கத்து கொட்டகையில தண்டபாணிய தரிசனம் பண்ணி இருப்பீங்களே? அவரு இந்தக் கோயில்லதான் இருந்தாரு. நான் இங்க வந்தாலே தட்சிணாமூர்த்தி பிள்ளை வாசிப்பு காதுல தானா வந்து விழும்.”

dandapani-temple-at-pudukottai-in-2011

தட்சிணாமூர்த்தி பிள்ளையின் வாசிப்பு என்று அவர் சொன்னதும் என் மனது பரபரத்தது.

“அவர் வாசிப்பை நீங்க கேட்டிருக்கீங்களா?”

“நான் கேட்டுகிட்டு இருக்கேன்னு சொல்றேன். கேட்டிருக்கியான்னா என்ன அர்த்தம்?”

“அது இல்லையா, நேரில் அவர் கச்சேரில வாசிச்சதைக் கேட்டு இருக்கீங்களா?”

“எனக்கு நெனவு தெரியாத நாள்ல இருந்து கச்சேரிக்கு எங்கப்பா கூட்டிக்கிட்டுப் போக ஆரம்பிச்சுட்டாங்க. எனக்குப் பதினேழு வயசுலதான் தட்சிணாமூர்த்தி ஐயா சமாதி ஆனார். அது வரைக்கும் புதுக்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம், திருச்செந்தூர்-னு ஊர் ஊராப் போய் நானும் எங்கப்பாவும் அவர் வாசிப்பைக் கேட்டிருக்கோம்.”

“ஐயா! நான் ஒரு ரைட்டர். சில வருஷமாவே அவரைப் பத்தி தகவல் திரட்டறேன். உங்களுக்குத் தெரிஞ்சதை எல்லாம் எனக்கு சொன்னா ரொம்ப உதவியா இருக்கும்.”

“அவரைப் பத்தி சொல்ல என் ஒரு நாக்கு போதுமா தம்பி. ஆதி சேஷனுக்கு ஆயிரம் நாக்காமே. அவரு வேணா சொல்லலாம்.”

“தட்டிக் கழிக்காம, நிச்சயம் உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லணும்.”

“தெரிஞ்சதை சொல்றேன். வாங்க வீட்டுக்குப் போவோம்”, என்று மெல்ல எழுந்திருந்தார்.

“ஒரு நிமிஷத்துல வந்துடறேன்”, என்று கோயிலுக்குள் சென்று அவசர அவசரமாய் உடைமைகளை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.

பெரியவர் வீடு தூரமில்லை. 90 வயதிலும் சீரான நடை. வாயிலுள் தன்னைக் குறுக்கிக் கொண்டு அந்த உருவம் வீட்டினுள் சென்றது. நானும் பின் தொடர்ந்தேன். நாற்காலியில் என் உட்காரச் சொல்லிவிட்டு, ஓர் அறைக்குள் நுழைந்தார். திரும்பி வரும் போது கையில் ஒரு புத்தகம். புத்தகத்தைப் பார்த்த போதே அதை அவர் பல முறை படித்திருக்க வேண்டும் என்று தோன்றியது.

அருகில் வந்ததும், திருச்சி தாயுமானவன் எழுதியுள்ள தட்சிணாமூர்த்தி பிள்ளையின் வாழ்க்கை வரலாறை கையில் வைத்திருப்பது தெரிந்தது. சென்னையில் அந்தப் புத்தகத்தை நான் கண்டதில்லை. அதை எழுதிய தாயுமானவன்தான் தட்சிணாமூர்த்தி பிள்ளையின் சமாதி கோயிலை கட்டியவர் என்று அன்று காலைதான் தெரிந்து கொண்டிருந்தேன்.

திருச்சி தாயுமானவன் வீட்டில் எடுக்கப்பட்ட தக்‌ஷிணாமூர்த்தி பிள்ளையின் புகைப்படம் 

திருச்சி தாயுமானவன் வீட்டில் எடுக்கப்பட்ட தக்‌ஷிணாமூர்த்தி பிள்ளையின் புகைப்படத்தின் புகைப்படம்

“தம்பி! மளிகைக் கடை வெச்சிருந்தவரோட பையனா பொறந்து, பிறந்த கொஞ்ச நாளுக்குள்ள தாயை இழந்து, படிப்பு ஏறாம ஊர் ஊராத் திரிஞ்சு, சிபாரிசுல அரண்மனை காவக்காரனா போன ஒருத்தர் காதுல விழுந்த இசைல மயங்கி, அது பின்னால போய், சங்கீதத்தோட உச்சத்துக்குப் போறதுங்கறது மனுஷனால ஆகிற காரியமா சொல்லுங்க?”

நான் அவர் பேச்சை பதிவு செய்ய ரிக்கார்டரை ஆன் செய்தேன்.

“தட்சிணாமூர்த்தி ஐயாவோட அப்பா பேரு இராமசாமி பிள்ளை. இங்கதான் மளிகைக் கடை வெச்சிருந்தார். அம்மா பேரு அமராவதி. பெரியப்பா, முத்து வளர்த்தா பிள்ளை, யோகாநந்தர்-ங்கற பேர்ல சன்யாஸியா வாழ்ந்தவர். அந்தக் காலத்துல பெரிய இடத்துக்கெல்லாம் அவருதான் வைத்தியம் பார்ப்பார். ஜோசியமும் சொல்வார். எத்தனையோ வருஷம் ஹடயோகம் பண்ணின மகான் அவர். அவர் ஹடயோகம் பண்ணின இடத்துலதான் நாம இன்னிக்கு சந்திச்சோம். அவர் மேற்பார்வைலதான் தட்சிணாமூர்த்தி பிள்ளை வளர்ந்தார்.”

ஊருக்கு வெளியே இருந்த அந்த இடம் ஹடயோகம் செய்ய தோதாகத்தான் இருந்திருக்க வேண்டும், என்று நினைத்துக் கொண்டேன்.

“ஏழு வயசுல தட்சிணாமூர்த்திப் பிள்ளையை பள்ளிக் கூடத்துல சேர்த்தாங்களாம். அவருக்குப் படிப்பு ஏறலை. குதிரை வண்டி ஓட்டறது, குஸ்தி போடறது மாதிரியான விஷயங்கள்லதான் லயிப்பு இருந்தது. ஆறடி உயரம், கட்டுமஸ்தான உடம்போட, பிள்ளை ஆஜானுபாகுவா இருப்பார். பெரியப்பாவோட ஊர் ஊராப் போய் கோயில்களை பார்க்கிறதுலையும் ரொம்ப ஆர்வமாம்.”

“இள வயசுல சங்கீதம் கத்துக்காம பிற்காலத்துல பெரிய பேர் வாங்கினது ஆச்ச்ர்யம் இல்லையா?”

“ஆமாம். பிள்ளைக்கு கிட்டத்தட்ட 16 வயசாகும் போது, பெரியப்பாவோட சிபாரிசுனால புதுக்கோட்டை அரண்மனைல காவலாளி வேலை கிடைச்சுது. லயத்துல பிரம்மலயம்-னு உண்டு. அது சொல்லிக் கொடுத்து வரதில்லை. இயற்கையா அமைஞ்சாத்தான் உண்டு.”

“லால்குடி ஜெயராமன் வாசிப்பைக் கேட்டு அவருக்கு பிரம்மலயம் உண்டுனு பாலக்காடு மணி ஐயர் சொல்லி இருக்காரதாக் கேள்விப் பட்டிருக்கேன்.”

“அதேதான்! பிள்ளைக்கும் பிரம்மலயம் தானா அமைஞ்சு இருந்தது. புதுக்கோட்டை அரண்மனைல நிறைய கச்சேரிகள் நடக்கும். பிள்ளை அதை நிறைய கேட்டிருக்கார். கேட்கக் கேட்க அவருக்குள்ள பொதிஞ்சிருந்த லயம் வெளிப்பட ஆரம்பிச்சுது.”

“…..”

“துப்பாக்கி, அரண்மனைக் கதவு, தொப்பி, செடிக்கு தண்ணி ஊத்தும் பானை, இப்படி கைல கிடைச்சதுல எல்லாம் தாளம் போட்டுக்கிட்டே இருப்பாராம் பிள்ளை. ஒரு தடவ, பெரியப்பாவோட நச்சாந்துப்பட்டிக்குப் போன போது, ஏகாதசி மடத்துல தங்கியிருக்கார். அங்க ஒரு பண்டாரம் பானையை வெச்சு தட்டிகிட்டு இருந்தார். அதப் பார்த்ததும், இவருக்கும் அதை வாங்கி வாசிக்கத் தோணியிருக்கு. பண்டாரம் பானையை கொடுத்ததும், பிள்ளை வாசிக்க ஆரம்பிச்சிருக்கார். அது வரைக்கும் அரண்மனைல கேட்டதை வெச்சு பானையில் வாசிச்சதும், அந்தப் பண்டாரம், “அப்பா! நீ என்னை விட நல்லா வாசிக்கிற. தினமும் பானையைத் தட்டிப் பழகு”-னு பானையை இவர் கிட்டக் கொடுத்தாராம்.”

“இந்த விஷயங்கள் எல்லாம் பழநி சுப்ரமணிய பிள்ளை எழுதின கட்டுரையிலையும் இருக்கு”, என்று என் பையைத் திறந்து நான் சேகரித்திருந்ததை கடை பரப்ப ஆரம்பித்தேன்.

கட்டுரையை வாங்கிப் பார்த்த பெரியவர், “தாயுமானவன் புத்தகத்துல இன்னும் கொஞ்சம் விரிவா இருக்கு. நச்சாந்துப்பட்டியில ஒரு பாகவதர் ராமாயணம் கதை சொன்னார். கதையில நிறைய பாட்டும் வருமே! பிள்ளைக்கு, அவர் பாடும் போது வாசிக்கணும்-னு ஆசை வந்திருக்கு. எப்படியோ பல பேரை நச்சரிச்சு சம்மதம் வாங்கி, தன் பானையையே கடமா பாவிச்சு, பாகவதர் பாட்டுக்கு ரொம்ப அனுகூலமா வாசிச்சு இருக்கார். இதைப் பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டவர் பெரியப்பா யோகானந்தர்தான். பிள்ளையை இந்த வித்தையை நல்லா விருத்தி செஞ்சுக்கச் சொன்னார். தட்சிணாமூர்த்தி பிள்ளை ஊர் திரும்பினதும், ஒரு கடத்தை வாங்கி தொடர்ந்து சாதகம் செஞ்சு வந்தார்.”

“அவர் முதல் கச்சேரி பத்தி எதுவும் தகவல் இருக்கா?”

“குறிப்பா எந்தக் கச்சேரி முதல் கச்சேரினு தெரியல. உள்ளூர்-ல முதல்ல கச்சேரிகள் வாசிச்சாலும், கட வித்வானாப் பேர் வாங்கினது ராமநாதபுரத்துலதான். பாஸ்கர சேதுபதி மகாராஜாவோட சமஸ்தானத்துக்குப் போனார் பிள்ளை. அங்க பூச்சி சீனிவாச ஐயங்காரோட பரிச்சியம் கிடைச்சதும், அவர் மூலமா அரண்மனை கச்சேரிகள் நிறைய கேட்க ஆரம்பிச்சார். காலப்போக்குல, அங்க கச்சேரி செய்ய வந்த வித்வான்கள் கிட்ட தன்னை அறிமுகப்படுத்திகிட்டு, தன்னையும் கச்சேரியில போட்டுக்க வேண்டினார். அப்படி போட்டுகிட்டவங்க எல்லாம் இவருடைய லய ஞானத்தைப் பார்த்து அசந்து போனாங்க.”

“மான்பூண்டியா பிள்ளை கிட்ட சிஷ்யனா போகறதுக்கு முன்னாலயே கச்சேரி பண்ண ஆரம்பிச்சுட்டாரா? பழநி சுப்ரமணிய பிள்ளை எழுதியிருக்கற குறிப்புல மான்பூண்டியா பிள்ளை கிட்ட கத்துகிட்ட பிறகுதான் இராமநாதபுரம் போய் நிறைய கச்சேரி செய்தார்-னு வருது. ஈ.கிருஷ்ணையர், பிள்ளை 25 வயசு வரை கடம் வாசிச்சு, அதுக்குப் பின்னாலதான் மான்பூண்டியா பிள்ளை கிட்ட சிஷ்யரா சேர்ந்தார்-னு எழுதியிருக்கார்.”

“இதெல்லாம் நான் பொறக்கறதுக்கு முன்னாடி நடந்த சமாச்சாரம் பாருங்க, அதனால் உறுதியாச் சொல்ல முடியல. தாயுமானவன் புத்தகத்துல அவர் சீதாபதி ஜோஸ்யர் கிட்டயும், இலுப்பூர் மூக்கையா பிள்ளை கிட்டயும் மிருதங்கம் கத்துகிட்டு பாலாமணி நாடக கம்பெனியில மிருதங்கம் வாசிச்சார். அப்புறம் இராமநாதபுரம் சமஸ்தானம் போய், நிறைய கச்சேரிகள் செஞ்சு, மாங்குடி சிதம்பர பாகவதரால, 40 வயசுக்கு மேலதான் மான்பூண்டியா பிள்ளையைப் பார்த்தாருன்னு இருக்கு. எது எப்படியோ, தட்சிணாமூர்த்தி பிள்ளைங்கற வைரத்தை, பட்டை தீட்டின புகழ் மான்பூண்டியா பிள்ளைக்குதான்.”

குருவையும் சிஷ்யரையும் ஒரே வரியில் குறிப்பிடும் ஈ.கிருஷ்ணையரின் வரி எனக்கு நினைவுக்கு வந்தது. பெரியவருக்குப் படித்துக் காண்பித்தேன்.

“If the guru showed to the world that there was an instrument like that capable of being adopted as an accompaniment in a musical concert, the discple demonstrated the highest possibilities of the same.”

மாமூண்டியா பிள்ளையோடு தக்‌ஷிணாமூர்த்தி பிள்ளை 

மாமூண்டியா பிள்ளையோடு தட்சிணாமூர்த்தி பிள்ளை

பெரியவர் தொடர்ந்தார், “மான்பூண்டியா பிள்ளையும், தட்சிணாமூர்த்தி பிள்ளையும் கூடை நிறைய பொடிக் கல்லா பொறுக்கி கிட்டு கோயில்ல போய் உட்கார்ந்துக்குவாங்களாம். ‘தம்பி கல்லுங்களை அஞ்சஞ்சா அடுக்கு, இப்ப ஒரு அஞ்சை மூணாவும், இன்னொரு அஞ்சை ஏழாவும் மாத்து’-னு எல்லாம் மான்பூண்டியா பிள்ளைச் சொல்லச் சொல்ல, கல்லை அடுக்கியே நிறைய நுட்பமான லய கணக்குகளையெல்லாம் தயார் பண்ணுவாங்களாம்.”

“மான்பூண்டியா பிள்ளை கிட்ட போனதுமே தட்சிணாமூர்த்தி பிள்ளை கடத்தை விட்டுட்டார் இல்லையா?”

“அவர் கடத்தை விடக் காரணமா இருந்தவர் நாராயணசாமியப்பா.”

“இதைப் பற்றி நிறைய கட்டுரைகள்-ல வருது. இராமநாதபுரம் அரண்மனை-ல தட்சிணாமூர்த்தி பிள்ளை வாசிப்பை நாராயணசாமியப்பா கேட்டார். அந்தக் காலத்துல மிருதங்கத்தில் பிரபலம் ஆன முதல் கலைஞர் அவர்தான். மான்பூண்டியா பிள்ளைக்கு அங்கீகாரம் வாங்கிக் கொடுத்தவரும் அவர்தான்.”

“நாராயணசாமியப்பா தட்சிணாமூர்த்தி பிள்ளை வாசிப்பைக் கேட்டு, “தம்பி, உன் கிட்ட இருக்கற திறமை முழுமையா வெளிய வரணும்-னா மிருதங்கம்தான் உனக்கு சரியான வாத்தியம்.”-னு சொல்லி இருக்கார். இதைக் கேட்ட பிள்ளைக்கோ ஒரு பக்கம் சந்தோஷம் இன்னொரு பக்கம் சந்தேகம். இவ்வளவு வருஷமா கடத்தை அடிச்சு அடிச்சு உறுதியான கையால, மிருதங்கம் மாதிரி மிருதுவா வாசிக்க வேண்டிய வாத்யத்தை வாசிக்க முடியுமான்னு நினைச்சு இருக்கார். அதைக் கேட்டதும் நாராயணசாமியப்பா, தன்னோட மிருதங்கத்தில் ஒண்ணை எடுத்துக் கொடுத்து, “தம்பி! ஆண்டவன் அனுக்ரஹத்தில் நீ ரொம்ப நல்லா வருவ”-ன்னு ஆசீர்வாதம் செஞ்சாராம். ஆனால், பிள்ளை கடத்தை விட்டதுக்கு இன்னொரு காரணமும் இந்தப் புத்தகத்துல இருக்கு.”

“….?”

“அந்தக் காலத்தில, கச்சேரியில போட்டி நடக்கறது சகஜம். போட்டியில தோத்தவர் அந்த வாத்யத்தையே வாசிக்கறதில்லை-னு முடிவுக்கு வந்துடறது சாதாரணமா நடக்கிற விஷயம். ஒரு தடவை பழநி ‘கடம்’ கிருஷ்ணையரும் தட்சிணாமூர்த்தி பிள்ளையும் சேர்ந்து வாசிச்சு இருக்காங்க. கச்சேரி முடிஞ்சதும் சாஷ்டாங்கமா நமஸ்காரம் செஞ்சு, ‘இனி இந்த வாத்யத்தை வாசிக்கப் போறதில்லை’-னு தட்சிணாமூர்த்தி பிள்ளை சபதம் எடுத்துகிட்டாராம்.”

பெரியவர் விரல் நுனியில் விஷயச் சுரங்கமே இருந்தது.

“கடத்தை விட்ட போதும் பிள்ளைக்கு எக்கெச்செக்க கச்சேரி.”

“மான்பூண்டியா பிள்ளையோடு சேர்ந்து நிறைய கச்சேரிகள் வாசிச்சு இருக்கார். அதுல எல்லாம் மிருதங்கம்தான் வாசிச்சார். இருந்தாலும் கஞ்சிராவிலும் விடாம சாதகம் பண்ணிகிட்டு வந்தார்.”

மான்பூண்டியா பிள்ளை பற்றி பேச்சு திசை திரும்பியதும் எனக்குள் ஓர் ஐயம் எழுந்தது.

“மான்பூண்டியா பிள்ளை தவில் வாசிப்பை அடிப்படையா வெச்சு வந்தவர். அவர் கிட்ட கத்துகிட்ட தட்சிணாமூர்த்தி பிள்ளை வாசிப்புலையும் கணக்கு நிறைய இருக்குமா”

“பிள்ளைக்குக் கணக்கைப் பத்தி தெரியணும்னா, இந்தப் புத்தகத்துல ”முடிகொண்டான் வெங்க்டராம ஐயர் கடிதாசியை வாசிங்க.”

“பிள்ளையவர்கள் 5 நிமிஷத்தில் வாசிப்பது எப்படி பூர்த்தியாய் காது நிறைந்து இருக்குமோ அதே போல, ஒன்றரை மணி நேரம் வாசித்தாலும் வந்தது வராமல் வாசிக்கக் கூடிய கற்பனை உடையவர். திஸ்ர கதி மட்டுமின்றி நான்கு அக்ஷரத்தை ஐந்தாகவும், ஏழாகவும், ஒன்பதாகவும் அழகாக அமர்த்தி வாசிக்கும் திறமை பெற்றவர். அதிலும் பல விவகாரங்களை எதிர்பாரா விதம் செய்யும் சாமர்த்தியம் கொண்டவர். அவர் கற்பனைகளை மனதில் வாங்குவதோ, பிசகாமல் தாளம் போடுவதோ அவரைப் போல உழைத்தவர்களுக்குத்தான் சாத்தியம். சென்னையில் ஒரு சமயம் 35 தாளங்களில் பல திருப்புகழ்களைப் பாடினார்கள். அப்போது மிருதங்கம் வாசித்த நம் பிள்ளை, பழக்கத்தில் இல்லாத தாளங்களில் கூட, ஏற்கெனவே தயார் செய்து வைத்திருந்ததைப் போல, வித விதமான மோராக்களும், கணக்குகளும் வைத்து வாசித்தது பெரிய ஆச்சர்யமாக இருந்தது.”

கடிதம் ஒரு சந்தேகத்தைப் போக்க இன்னொரு சந்தேகம் முளைத்தது.

“தட்சிணாமூர்த்தி பிள்ளையோட கஞ்சிரா பெருசா? மிருதங்கம் பெருசா?”

“அதையும் முடிகொண்டானே அழகா சொல்லியிருப்பாரே! ‘இவர் மிருதங்கம் வாசிக்கும் போது கஞ்சிரா வாசிக்க வேண்டாம் என்றும், கஞ்சிரா வாசித்தால் மிருதங்கம் வேண்டாமென்றும் கேட்பவர்களுக்குத் தோன்றும்”-னு எழுதியிருக்காரே! இவரோட சேர்ந்து கஞ்சிரா வாசிக்கணுங்கறத்துக்காகவே தவிலில் முடிசூடா மன்னனா இருந்த இலுப்பூர் பஞ்சாபிகேச பிள்ளை தவிலை விட்டார். கஞ்சிராவைப் பொறுத்த வரைக்கும், இன்னிக்கு வரைக்கும் இவரைப் போல யாருமே வாசிச்சதில்லை.”

“சித்தூர் சுப்ரமணிய பிள்ளை பாடியிருக்கற ரிக்கார்டுல, ஒரு மேல்கால ஃபரன் வாசிச்சு இருக்கார் பாருங்க. அதுக்கு இணையா இது வரைக்கும் நான் வேறெதையும் கேட்டதில்லை” என்று தஞ்சாவூர் பி.எம்.சுந்தரம் சொன்னது எனக்கு நினைவுக்கு வந்தது.

“ஆண், பெண், கச்சேரி, பஜனை, ஹரிகதை, நாடகக் கம்பெனி-னு எல்லாம் வித்தியாசம் பார்க்காம வாசிச்சவர் தட்சிணாமூர்த்தி பிள்ளை”, என்றும் பி.எம்.சுந்தரம் சொல்லி இருந்தார். அதை பெரியவரிடம் சொன்னேன்.

“பிள்ளைக்கு தினமும் வாத்தியத்தில் வாசிச்சாகணும்னுதான் குறி. வேற எந்த சிந்தனையும் கிடையாது.” என்றவாரே தன் கையில் இருந்த புத்தகத்தில் இருந்து பாபநாசம் சிவனின் கடிதத்தில் சில வரிகளைப் படிக்க ஆரம்பித்தார்.

“ஸ்ரீரங்கத்தில் மருங்காபுரி கோபாலகிருஷ்ணையர் குமாரன் உபநயனத்தின் போது என் போன்ற சிறு பிள்ளைகள் பலர் விளையாட்டாய் தலைக்கொன்று இரண்டு பாட்டுகளைப் பாடிக் கொண்டு வந்தோம். காலை 8 மணி முதல் 12.30 மணி வரை நடந்த இந்தக் குழந்தை விளையாட்டில் கூட, தன் கஞ்சிராவை சேர்த்துக் கொண்டு அலுக்காமல் வாசித்து பிரமாதப் படுத்தினார்.”

“இப்ப புரியுதா நான் சொன்னது?”

நான் தலையசைத்தேன்.

“கச்சேரி பண்ண ஆரம்பிச்ச கொஞ்ச வருஷத்துக்குள்ளையே உச்சாணிக்குப் போனவர் தட்சிணாமூர்த்தி பிள்ளை.”

“அவர் புகழ் உச்சியில் இருந்த போது வெளியான ஈ.கிருஷ்ண ஐயரோட குறிப்பை படிச்ச போது அவரோட பெருமை புரிஞ்சுது.”

“He is the virtual ruler of any musical concert of note and he ensures a crowded house. Perhaps his fee is rather high for an accompanist. But none grudges to pay him and his presence pays in turn”

தனி ஆவரத்தனத்தில் மிருதங்கமும் கஞ்சிராவும் மாறி மாறி வாசிப்பது போல பெரியவரும் நானும் எங்களிடம் இருந்த குறிப்புகளை மாறி மாறி படித்து மகிழ்ந்தோம்.

“அவர் வாசிப்பை பத்தி படிக்கதான் முடியுதே தவிர, அதிகம் கேட்கற அதிர்ஷ்டம் எனக்கில்லை. நீங்க நேரில கேட்ட அவர் வாசிப்புல உங்களை கவர்ந்த அம்சம் எது?”

“சமயோசிதம். எந்த நேரத்துல எதை எப்படி வாசிக்கணும்-னு அவருக்குத்தான் தெரியும்.”

“ஒரு செம்மங்குடி கச்சேரியில பாவப்பூர்வமா பாடி விஸ்ராந்தியான சூழல் ஏற்பட்ட போது, யாரோ ஒரு ரசிகர் “ஐயா தனி வாசிக்கணும்”-னு கேட்டாராம். “ஆண்டவனே! தனி வாசிச்சா இந்த சூழல் கெட்டுப் போயிடும்”-னாராம் பிள்ளை. பிரமாதமான தனிக்கு கிடைப்பதை விட, அன்னிக்கு வாசிக்க மறுத்ததுக்கு அப்ளாஸ் கிடைச்சிதாம். பழநி சுப்ரமணிய பிள்ளையோட குறிப்புல “சாதாரண பாடகராயிருந்தாலும் அவரை உயர்ந்த ஞானஸ்தர் என்று ரசிகர்கள் கருதும்படி தன் வாசிப்பால் காட்டிவிடுவார்கள். சிறியதைப் பெரிதாகக் காட்டும் திறமையில் இவருக்கு ஈடு இணையில்லை”-னு எழுதியிருக்கார்.”

“எப்படி அவரால அதை செய்ய முடிஞ்சுது?…”

“….?”

“அவர் ஒரு சித்தர். அந்த அமானுஷ்ய வாசிப்புல கட்ட முடியாத விஷயம் உண்டா?”

பெரியவர் என்னை சிந்தனையில் ஆழ்த்தினார்.

மெட்ராஸ் கண்ணன் வீட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் 

மதறாஸ் கண்ணன் வீட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தின் புகைப்படம்

பிள்ளையைப் பற்றி பல அமானுஷ்ய குறிப்புகள் கிடைக்கின்றன. 90 வயசைத் தாண்டியும் கம்பீரமாக மிருதங்கம் வாசிக்கும் மதராஸ் கண்ணனை நான் சந்தித்த போது, “மிருதங்கத்துல எவ்வளவோ மஹா வித்வான்கள் இருந்திருக்காங்க. ஆனால் தட்சிணாமூர்த்தி பிள்ளை அவங்களுக்கெல்லாம் மேல இருந்தவர். நம்ம பூஜை அறையில இருக்க வேண்டியவர்” என்று சொன்னார். அவர் வாசிப்புக்கும் அமானுஷ்ய சக்திக்கும் தொடர்பைப் பற்றி என்னால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. இருப்பினும் அவர் கச்சேரியில் பங்கு பெருகிறார் என்றாலே கூட்டம் பன் மடங்கு வந்தது என்பதை 1930-களில் வெளியாகுயுள்ள பல குறிப்புகள் உணர்த்துகின்றன.

எனக்குள் பல எண்ணங்கள் அலை மோதிய போதும், என் கைகள் நான் சேகரித்த குறிப்புகளையும், படங்களையும் ஒன்றொன்றாய் பெரியவரிடத்தில் கொடுத்து வந்தன. ஒரு ஃபுல் பெஞ்ச் கச்சேரியின் படத்தைப் பார்த்ததும் பெரியவர் மௌனத்தைக் கலைத்தார்.

full_bench-1

“அந்தக் காலத்துல ஃபுல் பெஞ்ச் கச்சேரி ரொம்பப் பிரபலம்.”

“அந்தக் கச்சேரிகளில் ‘ரிங் மாஸ்டர்’ போன்றவர் தட்சிணாமூர்த்தி பிள்ளை-னு நாயனாப் பிள்ளை சிஷ்யரே ஆனந்த விகடன்-ல எழுதியிருக்காரே.”

“அவரோட வெற்றிக்கு பல காரணங்கள் இருந்தாலும், எல்லாத்தையும் விட முக்கியமான காரணம் ஒண்ணு இருக்கு”

“…..?”

“இந்தப் புத்தகத்துல எவ்வளவோ மஹா வித்வான்கள் எழுதின கடுதாசி எல்லாம் இருக்கு.”, சில மணி நேரங்கள் ஆன பின்னும் பெரியவர் கையிலிருந்து தாயுமானவனின் புத்தகம் இறங்கவில்லை.

“அதுல திரும்பத் திரும்ப வர விஷயம் ஒண்ணுதான். பொறாமை, பூசல், கோபம், பாரபட்சம் எல்லாத்துக்கும் மீறினவர் தட்சிணாமூர்த்தி பிள்ளை-னு எல்லாருமே சொல்லி இருக்காங்க. அவரை விரும்பாத ஆட்களே இல்லை-னு பாபநாசம் சிவன் சொல்லி இருக்கார். ‘சதாகாலமும் முருகனிடம் கொண்டிருந்த திடபக்தி, பரோபகார சிந்தை, மகான்களைப் பின்பற்றி நடப்பது இம் மூன்றும்தான் அவருக்கு அழியாப் புகழைத் தந்தன’-னு காரைக்குடி சாம்பசிவ ஐயர் எழுதியிருக்கார்.”

பிள்ளையைப் பற்றி பலர் வித்வான்கள் எழுதியிருந்த கடிதங்கள் எனக்கு அடுத்த கேள்வியை எடுத்துக் கொடுத்தன.

“தட்சிணாமூர்த்தி பிள்ளை யாருக்கெல்லாம் தொடர்ந்து வாசிச்சார்.”

“அவர் யாருக்கு தம்பி வாசிக்கலை? அந்தக் காலத்துல மான்பூண்டியா பிள்ளையோட சேர்ந்து கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயருக்கு நிறைய வாசிச்சு இருக்கார். அதுக்குப் பிறகு நிறைய வாசிச்சது காஞ்சிபுரம் நாயினாப் பிள்ளைக்குதான்.”

“நாயினாப் பிள்ளைக்கு வாசிக்கறது ரொம்ப கஷ்டமாமே!”

“தட்சிணாமூர்த்தி பிள்ளையும் நாயினாப் பிள்ளையும் வெளிப் பார்வைக்கு நிறைய போட்டி போட்டது போலத் தோணினாலும் ரொம்ப அன்யோன்யமானவங்க. ஒரு கச்சேரியில நாயினா பிள்ளை சங்கராபரண ராகத்தை விஸ்தாரமா பாடிகிட்டு இருந்தார். தட்சிணாமூர்த்தி பிள்ளைக்கோ மிருதங்க ஸ்ருதி மேல திடீர்-னு சந்தேகம். பாடகர், மேடை, கச்சேரியெல்லாம் மறந்து வாத்யத்தை ஸ்ருதி சேர்க்க ஆரம்பிச்சுட்டார். நாயினா பிள்ளை என்ன செஞ்சும் தட்சிணாமூர்த்தி பிள்ளை கவனிக்கறதா தெரியலை. உடனே, “ஸ்வர ராக ஸுதா” பாட ஆரம்பிச்சுட்டார். பிள்ளையும் பிரமாதமா பாட்டுக்கு வாசிச்சார். பல்லவி, அனுபல்லவி முடிஞ்சு சரணம் பாடும் போது வழக்கமா பாடற, “மூலாதாரஜ நாதமெறுகுடே” சரணத்தைப் பாடாம, “மத்தள தாளகதுல தெலியக” சரணத்தைப் பாடினார். “தாளம் புரியாம மத்தளத்தை அடிச்சா அதுல சுகம் உண்டா”-னு அர்த்தம் வர சரணம். சரணத்தைக் கேட்ட அடுத்த நிமிஷம் பிள்ளை வாத்யத்தை நிமித்திட்டார்.”

“ஐயயோ! அப்புறம்?”

“நாயனாப் பிள்ளை, சிரிச்சுகிட்டே “என்ன ஆச்சு”-ன்னார். “இத்தனை நாளா இல்லாத சரணம் எங்கேந்து வந்ததுங்கறேன்”-னு பொரிஞ்சார் தட்சிணாமூர்த்தி பிள்ளை. நாயனா பிள்ளையும் சளைக்காம, “நீங்க இன்னிக்கு தவில் சம்பிரதாயமா ராகம் பாடும் போது மிருதங்கத்தை ஸ்ருதி சேர்த்தீங்களே, அது மட்டும் புதுசில்லையா”-ன்னார். பிள்ளை உடனே, “ஆண்டவனே! மன்னிகணும்”-னு சந்தோஷமா வாசிக்க ஆரம்பிச்சுட்டார்.”

mali-cartoon-1936

“நாயினாப் பிள்ளை தவிர வேற யாருக்கு நிறைய வாசிச்சார்?”

“காரைக்குடி பிரதர்ஸுக்கு அவர் வாசிச்ச அளவு வேற யாரும் வாசிக்கலை. பாட்டுக்கு வாசிக்கறதும் வீணைக்கு வாசிக்கறதும் ஒண்ணில்லை. வீணைக்கு நிறைய அடக்கி வாசிக்கணும். தட்சிணாமூர்த்தி பிள்ளை வாசிப்பை ‘மூணாவது வீணை’-னு சொல்லி இருக்காங்கனா அவர் எப்படி வாசிச்சு இருப்பாருனு புரிஞ்சுக்கலாம். அதுலையும் அவங்க 8-களை சவுக்கத்தில பல்லவி வாசிக்கும் போது, தங்கு தடையில்லாம ஒவ்வொரு ஆவர்த்தத்துக்கும் நகாசை கூட்டிக்கிட்டே வாசிக்கற அழகுக்கு ஈடே கிடையாது.”

காரைக்குடி பிரதர்ஸ் என்றதும் என் மனம் சென்னை சம்பிரதாயாவுக்குத் தாவியது. இராமநாதபுரம் முருகபூபதியின் நேர்காணலில் தட்சிணாமூர்த்தி பிள்ளை காரைக்குடி பிரதர்ஸுக்கு வாசித்ததைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பேசி இருந்தார்.

“காரைக்குடி பிரதர்ஸ் கச்சேரியில தட்சிணாமூர்த்தி பிள்ளை மிருதங்கம். வர்ணம் முடிஞ்சு, ரெண்டாவது கிருதி வாசிக்கும் போதே மிருதங்கம் மக்கர் பண்ண ஆரம்பிச்சுடுச்சி. பாட்டு வாசிக்கும் போதே பிள்ளை இன்னொரு மிருதங்கத்தை எடுத்து பக்கத்துல நிமிர்த்தி வெச்சு, தபலா மாதிரி தொப்பிக்கு ஒரு வாத்யம், வலந்தலைக்கு ஒரு வாத்யமா வாசிச்சார். காரைக்குடி பிரதர்ஸுக்கு கேட்கக் கேட்க ஒரே ஆனந்தம். பாட்டு முடிஞ்சதும் தீர்மானம் வெச்சு முடிக்கப் போனவரைத் தடுத்து, “பிள்ளைவாள்! அப்படியே ஒரு தனி வாசிக்கணும்”-ன்னார் காரைக்குடி சுப்பராம ஐயர். கணக்கு வழக்குல எல்லாம் நுழையாம, டேக்காவும், குமுக்கியுமா வாசிக்க வாசிக்க கூட்டம் கூத்தாட ஆரம்பிச்சிடுச்சு. அப்படி ஒரு வாசிப்பை ஜென்மத்தில் கேட்டதில்லை”

மஹாவித்வான் முருகபூபதியில் குரல் மீண்டும் செவிகளுள் ஒலித்தது.

“நாயினாப் பிள்ளைக்கும், காரைக்குடி பிரதர்ஸுக்கு அடுத்த தலைமுறைக்கு தட்சிணாமூர்த்தி பிள்ளை நிறைய வாசிச்சு இருக்காரில்லையா?”

“ 1910-ல இருந்து 1930 வரைக்கும் முன்னுக்கு வந்த முக்கியமான பாட்டுக்காரங்களை தூக்கி விட்டதே தட்சிணாமூர்த்தி பிள்ளைதானே.”

அரியக்குடி, செம்பை, ஆலத்தூர் சகோதரர்கள் போன்றவர்களின் வாழ்க்கையைப் பற்றி நான் அறிந்தவன்தான் என்ற போதிலும், இவர்கள் இளமைப் பருவமெல்லாம் தட்சிணாமூர்த்தி பிள்ளை என்ற பொன் சரடால் இணைக்கப் பட்டதென்பதை நான் அது நாள் வரை சிந்த்தித்துப் பார்த்ததில்லை.

“1918-ல திருப்பரங்குன்றத்துல ஒரு கச்சேரி. அன்னிக்கு மதுரை புஷ்பவனம் பாடியிருக்கணும். அவரால வர முடியலை.தட்சிணாமூர்த்தி பிள்ளைதான் கச்சேரி கேட்க வந்திருந்த அரியக்குடியை மேடை ஏத்தி பாட வெச்சார்.”

பெரியவர் சொல்லச் சொலல் எல்லார்வி அரியக்குடி புத்தகத்தில் எழுதியுள்ள வரிகள் என் மனதில் ஓடின.

“செம்பை பாகவதர் முன்னுக்கு வர தட்சிணாமூர்த்தி பிள்ளை எவ்வளவோ பாடு பட்டார். மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளையை, செம்பைக்கு வாசிக்கச் சொல்லி தானும் வாசிச்சு, அவருக்கு ஓஹோ-ன்னு பேர் வாங்கி வெச்சவர் பிள்ளைதான்.”

பெரியவர் மீண்டும் புத்தகத்தைப் பிரித்து, “முதல் முதலாகப் பிள்ளையவர்கள் எங்களுக்கு ஏற்பாடு செய்த கச்சேரி 1929-ம் ஆண்டு திருவாரூரில் நடந்தது. அன்று எங்கள் கச்சேரிக்கு கஞ்சிரா வாசித்தார். அன்று முதல் அவர் காலமாகும் வரை நாங்கள் அவராலேயே சங்கீத உலகில் முன்னணிக்கு வந்ததை என்றென்றும் மறக்க முடியாது” என்று ஆலத்தூர் பிரதர்ஸ் எழுதியிருந்ததையும் முடிகொண்டான் வெங்கடராம ஐயர் முதன் முதலில் சென்னையில் பாடிய போது உடன் வாசித்தது தட்சிணாமூர்த்தி பிள்ளைதான் என்பதையும் படித்துக் காட்டினார்.

“அந்தக் காலத்துல தட்சிணாமூர்த்தி பிள்ளைதான் ‘கிங் மேக்கர்’ போல இருக்கு.”

“ஆமாம். பாலக்காடு மணி ஐயர், தட்சிணாமூர்த்தி பிள்ளையை ‘இசையரங்குக்கு சேனாபதி’-னு சொல்லி இருக்கார். மணி ஐயருக்கு அவர் மேல தேவதா விசுவாசம்.”

“1942-ல மணி ஐயர் எழுதின கட்டுரைலையே, “என்னை விட வயதிலும் அனுபவத்திலும் பெரியவராயிருந்த ஸ்ரீ பிள்ளை அவர்களுடன் பல கச்சேரிகளுக்குச் சென்று வாசிக்க நேர்ந்ததை என் வாழ்க்கையின் விசேஷ பாக்யமாகக் கருதுகிறேன்”-னு எழுதியிருக்கார். “தட்சிணாமூர்த்தி பிள்ளையையே மிஞ்சினவர் மணி ஐயர்”-னு சொன்னதைக் கேட்டு, “மகா பாவம் அது!”-னு மணி ஐயர் உணர்ச்சிவசப்பட்டிருகார்.”

மணி ஐயரைப் பற்றி பேச்சு வந்ததும் என் மனதை சில விஷயங்கள் நெருட ஆரம்பித்தன.

“மணி ஐயரும் பிள்ளையும் ஒருவரை மற்றவர் எப்படி மிஞ்சலாம் என்று சதா சர்வ காலம் எண்ணினர். ஒரு கச்சேரியில் தட்சிணாமூர்த்தி பிள்ளை இரண்டாம் காலம் வாசிக்கத் தவித்தார் அதை மணி ஐயர் வாசித்துக் காண்பித்தார். தட்சிணாமூர்த்தி பிள்ளைக்கு தேவையான போது மணி ஐயர் தாளம் போட்டு உதவினார், அனால் மணி ஐயருக்கு தேவைப்பட்ட போது பிள்ளை உதவி செய்யாமல் நழுவினார்.”, என்றெல்லாம் சமீபத்தில் வந்த மணி ஐயரின் வாழ்க்கை வரலாறு குறிக்கிறது. வேறொரு கச்சேரியில் தட்சிணாமூர்த்தி பார்வை மூலம் என்ன மணி ஐயரிடம் பேசினார் என்பதை அப்போது பிறந்திருக்காத நூல் ஆசிரியர் உணர்ந்து எழுதியிருக்கிறார்.

மணி ஐயர் தட்சிணாமூர்த்தி பிள்ளையைப் பற்றி வைத்திருந்த எண்ணங்களை உணர அவரே எழுதியுள்ள கட்டுரையையும், அவர் பேசி இன்று நமக்குக் கிடைக்கக் கூடிய பேச்சையும் கேட்டாலே தெரியும்.

மணி ஐயர் லயத்தைப் பற்றி பேசும் போது, “அப்படி என்ன தட்சிணாமூர்த்தி பிள்ளை வாசிச்சுட்டார்-னு எல்லாம் கேட்கிறா. இராமநாதபுரம் மகாராஜா முன்னிலைல ஒரு முசிறி கச்சேரி. அடுத்த நாள் எனக்கு மெட்ராஸுல கச்சேரி. ராத்திரி 9 மணிக்கு ரயிலைப் பிடிச்சாகணும். கச்சேரி த்டங்கவே 6.30 மணிக்கு மேல ஆயாச்சு. கச்சேரி அமோகமா நடந்து, பல்லவி முடிஞ்சு தனியெல்லாம் ஆயாச்சு. நான் முன்னாலையே சொல்லியிருந்தபடி, “நான் உத்தரவு வாங்கிக்கறேன்”-னேன். ராஜா, ‘மணி ஐயருக்கு என்ன உண்டோ கொடுத்தனுப்புங்கோ. அவர் கிளம்பட்டும், ஆனால் கச்சேரி நடக்கட்டும்’-னார். நான் மிருதங்கத்தை தட்சிணாமூர்த்தி பிள்ளை கிட்ட கொடுத்தேன். ‘ஆண்டவனே! அடுத்து மெட்ராஸுல பார்க்கும் போது வாத்யத்தை சேர்பிச்சுபிடறேன்’-ன்னார். நானும் கிளம்பி சாமானை எல்லாம் வண்டியில ஏத்தப் போனேன். அப்ப முசிறி ‘திருவடி சரணம்’ பாட ஆரம்பிச்சார். தட்சிணாமூர்த்தி பிள்ளை மிருதங்கத்தை எடுத்து வாசிக்க ஆரம்பிச்சார். நான் அப்படியே நின்னுட்டேன். அவர் ஒண்ணும் வாசிக்கலை. கணக்கு வாசிச்சாரா? கோர்வை வெச்சாரா? சொல்லு போட்டாரா? ஒண்ணுமேயில்லை. குமுக்கி, மீட்டு, சாப்புதான் வாசிச்சார். பல்லவி முடியும் போது ஒரு சாதாரண முத்தாய்ப்புதான் வெச்சார். அப்படியே ஒரு அஞ்சு நிமிஷம் கேட்டுட்டுதான் என்னால அந்த இடத்தைவிட்டுப் போக முடிஞ்சுது. அதுதான் தெய்வீகம். சிலவாளுக்குத்தான் அது வரும். எல்லாருக்கும் வராது.”, என்று அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

என் லாப்டாப்பைத் திறந்து மணி ஐயரின் பேச்சை போட்டுக் காண்பித்தேன். அவர் கண்கள் கலங்கின.

“மணி ஐயரோட கடைசி நினைவுல கூட தட்சிணாமூர்த்தி பிள்ளைதானே இருந்தார். ஆஸ்பத்திரியில இருந்த மணி ஐயர் திடீர்-னு எழுந்து, “சீக்கிரம் போய் டாக்ஸி கொண்டா. கச்சேரிக்கு நேரமாச்சு. தட்சிணாமூர்த்தி பிள்ளை காத்துண்டு இருக்கார்”-னு சிஷ்யன் கிட்ட சொல்லி இருக்கார்.”, என்று மணி ஐயரின் மகன் என்னிடம் சொன்ன விஷயத்தையும் சொன்ன போது பெரியவர் என் கையைப் பிடித்துக் கொண்டார்.

அழுதுவிடுவார் என்று தோன்றியதால் பேச்சை மாற்றினேன்.

“தட்சிணாமூர்த்தி பிள்ளையிங்கற வித்வானைப் பத்தி நிறைய பேசினோம். அவருடைய வாழ்க்கை முறை எப்படி இருந்தது?”

“அவரு பெரிய செலவாளி. ஆனால் எல்லாச் செலவும் நல்ல வழியிலதான். பெரிய முருக பக்தர். திருப்புகழ் அவ்வளவு அழகாப் பாடுவார். எம்.எஸ்.சுப்புலட்சுமிக்குக் கூட திருப்புகழ் கத்துக் கொடுத்து இருக்கார். அறுபடை வீட்டுக்கும் போய், ஒரு மண்டலம் மௌன விரதம் இருந்து மணிக் கணக்கா கஞ்சிரா வாசிப்பாராம். சின்மயாநந்த மௌனகுரு சுவாமிகள்-ங்கிற பேருல இல்லற துறவியா வாழ்ந்தவர். இன்னிக்கு புதராக் கெடக்கற இடத்துலதான் அவர் கட்டின தண்டபாணி கோயில் கம்பீரமா இருந்தது. தெருத் தெருவா அலைஞ்சு காசு சேகரிச்சு எழுப்பின கோயில் அது.”

செல்ஃபோன் சிணுங்கி பெரியவர் பேச்சைத் துண்டித்தது. என்னுடன் புதுக்கோட்டை வந்திருந்த நண்பர் திரும்பிப் போகத் தயாராய் இருந்தார். சில நிமிடங்களில் மீண்டும் தட்சிணாமூர்த்திப் பிள்ளை சமாதி கோயிலில் அவருடன் சேர்ந்து கொள்வதாய் கூறி இணைப்பைத் துண்டித்து பெரியவரிடம் விடை பெற ஆயத்தமானேன்.

பெரியவர் கோயில் வரை தானும் வருகிறேன் என்றார்.

பிரிய மனமில்லாததால் இருவரும் முடிந்த வரை மெதுவாக நடந்தோம். பெரியவர் பேச்சைத் தொடர்ந்தார்.

“எப்பப் பார்த்தாலும் தட்சிணாமூர்த்தி பிள்ளையைச் சுத்தி பெரிய கூட்டமே இருக்கும். யாராவது சாமியாரைப் பார்த்துட்டா பரம சந்தோஷம். ‘ஒரு சமயம் பொன்னமராவதியில் நாயினா பிள்ளை கச்சேரிக்கு இவர் பஸ்ஸில் போகிறார். நானும் அதே பஸ்ஸில் கதைக்குப் போகிறேன். வழியில் மரத்தடியில் யாரோ ஒரு சாமியார் உட்கார்ந்திருப்பதைப் பார்த்துவிட்டார். உடனே பஸ்ஸை நிறுத்து அந்த சாமியாரை ஏறச் சொன்னார். பஸ்காரன் இடமில்லை என்றான். இவர், ‘அப்படியானா சரி, பஸ் முன்னால போகட்டும். நான் பின்னால வந்து சேர்றேன்.’ என்று அங்கேயே இறங்கிவிட்டார். அன்று அவர் பாதிக் கச்சேரியில்தான் கலந்து கொண்டாராம்.”-னு சரஸ்வதி பாய் எழுதியிருக்காங்க.”

பெரியவர் தன் புத்தகத்தை கையோடு எடுத்து வந்திருந்தார்.

“விந்தையான மனுஷர்தான்.”, என்றேன்.

“மனுஷர்-னா சொன்னீங்க? தப்பு தம்பி. மனுஷனால அவர் செஞ்சதையெல்லாம் செய்ய முடியுமா? இந்தப் புத்தகத்துல அவர் வாழ்க்கைல நடந்த பல் ஆமானுஷ்ய விஷயங்கள் பத்தி இருக்கு. அவ்வளவு ஏன் தம்பி, மனுஷனால தன் கடைசி நேரத்தை தெரிஞ்சுக்க முடியுமா?”

“அதெப்படி முடியும்?”

“தாது வருஷம், வைகாசி 13-ம் தேதி 6.30 மணிக்கு தன்னுடைய நேரம்-னு முன்னாலையே எல்லார் கிட்டயும் சொல்லி இருக்கார். பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் வந்து சமாதி காரியமெல்லாம் செஞ்சு வெச்சு, “இவர் மரணம் அடையவில்லை. ஜீவனை அடக்கி வைத்திருக்கிறார்.”-னு சொன்னார்.”

“……”

“நான் சொல்றதுல நம்பிக்கை இல்லைன்னா இந்தாங்க புத்தகம். பொறுமையா படிச்சுப் பாருங்க.”, என்று அவர் பொக்கிஷமாய் வைத்திருந்த புத்தகத்தை க்ஷண நேரத்தில் என் கையில் திணித்தார்.

புத்தகம் என் கையில் பட்ட போது சன்னமாக என் காதுகளுள் அந்த தீம்காரம் கேட்டது. நாங்கள் சந்தித்த புதரை நெருங்கியிருந்தோம். என் விரல்கள் தன்னிச்சையாய் தாளம் போட ஆரம்பித்தன.

**************************************************************************************

உதவி:

  • நேர்காணல்கள்: கே.எஸ்.காளிதாஸ், திருச்சி தாயுமானவன், பி.எம்.சுந்தரம், மதறாஸ் கண்ணன், காரைக்குடி கணேசன், பாலக்காடு மணி ஐயரின் மகன் ராஜாராமன்.
  • சம்பிரதாயாவில் கிடைக்கும் மிருதங்க வித்வான் முருகபூபதியின் நேர்காணல்
  • தட்சிணாமூர்த்தி பிள்ளை வாழ்க்கை வரலாறு, திருச்சி தாயுமானவன்
  • பழநி சுப்ரமணிய பிள்ளை ரேடியோ உரை
  • Personalities in Present Day MUsic, E.Krishna Iyer
  • லயத்தைப் பற்றி பாலக்காடு மணி ஐயரின் உரை
  • இசை மேதைகள், த.சங்கரன்
  • அரியக்குடி, எல்லார்வி
  • செம்பை செல்வம், எல்லார்வி
  • பாலக்காடு மணி ஐயர், சாருகேசி
  • அபிநவ நந்திகேசுவரர், பி.ப.ஸ்ரீநிவாஸ ஐயங்கார், ஆனந்த விகடன் தீபாவளி மலர், 1939
  • ஆடல் பாடல், கர்நாடகம், ஆனந்த விகடன், பெப்ரவரி 1934, ஏப்ரல் 1934, ஜூன் 1936

Read Full Post »

Lec Dem by Shri. Guruvayur Durai @ Tag Centre

என் டிசம்பர் நேற்று பிறந்தது.

காலை எழுந்தவுடன் ஹிண்டுவை நோட்டம் விட்டேன்.  ஒரே நாளில், ஒரே சமயத்தில் 30 இடங்களில் நாள் முழுவதும் கச்சேரிகள். யாரைக் கேட்பது என்பதை விட, யாரை கேட்காமல் விடுவது என்பது பெரிய கேள்வி. ஒவ்வொரு வருடமும் இது ஒரு சுகமான சங்கடம். இரவு பஸ் பிரயாணம் தந்த அசதியால், எட்டு மணிக்குள் ஏதேனும் ஓர் அரங்குக்குச் செல்ல முடியவில்லை.  10.15-க்கு இருந்த லெக்-டெம் சுண்டி இழுத்தது.

ம்யூசிக் ஃபோரம், டேக் சென்டருடனும், ஸ்ருதி இதழுடனும் சேர்ந்து நடத்திய லெக்-டெம் மேளாவின் கடைசி தினம் இன்று. வெவ்வேறு உருப்படிகளுக்கு வாசிப்பது பற்றி குருவாயூர் துரை பேசினார். சீனியர் வித்வான். புதுக்கோட்டை வழியில் வந்தவர். செம்மங்குடியில் இருந்து ஸ்ரீநிவாஸ் வரை, ராஜரத்தினம் பிள்ளையில் இருந்து கதிரி கோபால்நாத் வரை அனைவருக்கும் வாசித்து இருப்பவர். அவருக்கு மெருகூட்டும் கும்காரங்களும், நாதத் திவலைகளாய் மீட்டுச் சொற்களும் கச்சேரியை வேறு நிலைக்கு உயர்த்துவதை பல முறை உணர்ந்திருக்கிறேன். அவர் பேசுகிறார் என்றதும், என் சீஸன் தொடக்கம் எங்கு என்ற சங்கடம் தீர்ந்தது.

“கச்சேரியில பாட்டுக்கு எப்படி வாசித்தால் சரியாக இருக்கும் என்று என் அபிப்ராயத்தைச் சொல்லச் சோன்னார்கள். நானும் தெரியாத்தனமாய் ஒப்புக் கொண்டு விட்டேன். இப்போது ஏன் ஒப்புக் கொண்டோம் என்று இருக்கிறது”, என்று ஹாஸ்யமாக பேச்சைத் தொடங்கி, “இப்படித்தான் வாசிக்கணும் என்று சொல்ல முடியாது. அவரவருக்கு ஏற்றபடி வாசித்துக் கொள்ளலாம். பாடகர் மனோதர்மமாய் ராகம் பாடுவது போலத்தான். ஒரே கரஹரப்ரியாவை ஒவ்வொரு வித்வானும் தன் குரலுக்கும், திறமைக்கும், கற்பனைக்கும் ஏற்றார் போல பாடுவதைப் போலத்தால் மிருதங்கம் வாசிப்பதும். ஆதலால் எப்படி வேண்டுமானாலும் வாசிக்கலாம்.இருந்தாலும் என் அனுபவத்தில் அறிந்து கொண்ட சில விஷயங்களைச் சொல்கிறேன்”, என்றார்.

அவர் சொன்ன மற்றவை பின் வருமாறு:

– பாடகர்களுக்கு சுதந்திரம் இருக்கும் போதும், ஒரு பொதுவான சம்பிரதாயம் இருப்பது போலவே மிருதங்கம் வாசிப்பதிலும் சில சம்பிரதாயங்கள் உண்டு. இவை கல்லில் பொறிக்கப்பட்ட நியதிகள் அல்ல என்ற போதும், பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பல பெரிய கலைஞர்களால் அழகாக கையாளப்பட்டவை.

– ஜி.என்.பி-க்கு முதன் முதலில் வாசித்த போது, “ரகுவர” கிருதியில் நிரவல் பாடும் போது மத்யம கால நிரவலில், உணர்ச்சி வசப்பட்டு நிறைய ஃபரன்ஸ் வாசித்துவிட்டேன். கச்சேரி முடிந்ததும்,  ”இரண்டாம் காலம் பாடினால் அந்த கால சொற்கள்தானே வாசிகக் வேண்டும். உங்கள் வாத்யார் அப்படி வாசிக்காமல் இருந்து நீ கேட்டதுண்டா?”, என்று ஜி.என்.பி கேட்டது பாடமாக அமைந்தது.

– மிருதங்கக் கலைஞர் எவ்வளவுதான் திறமையானவர் என்ற போதும் மேடையில் நடுவில் அமர முடியாது. பாடகருக்கு துணையாக இருப்பதுதான் மிருதங்கக் கலைஞரின் தலையாய வேலை என்பதை அவசியம் உணர்ந்து வாசிக்க வேண்டும். அதீதமாய் மேக் காலம் வாசித்தால் பாடுபவர் கவனத்தை சிதைப்பதாய் அமையும்.

– வர்ணத்துக்கு வாசிக்கும் போது (சஹானா வர்ணத்துக்கு வாசித்துக் காண்பித்தார்), பாடப்படும் காலபிரமாணத்திலேயே வாசித்தல் உசிதம். பாடகரே ஓட்டிப் பாடினால் ஒழிய காலப்ரமாணத்தை மிருதங்கக் கலைஞர் ஓட்டக் கூடாது.

– பெண்களுக்கு வாசிக்கும் போது, முதலிலேயே நிறைய துரிதமான சொற்களைப் போட்டுவிட வேண்டும் என்று சிலர் நினைக்கின்றனர். இது தேவையற்றது. பாடகிகளும் இப்படி வாசிப்பதை எதிர்பார்க்காமல் இருப்பதுதான் சரி.

– இதற்கு முன் இருந்தவர்கள், அவரவர் வந்த வழியில் அழகாக முறைகள் அமைத்துள்ளுனர். புதுக்கோட்டை வழியில் பல்லவி, அனுபல்லவி, சரணம் ஆகிய கிருதியின் அங்கங்கள் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு வகையில் வாசிக்க ஒரு ‘பந்தா’ உண்டு.

– மத்யம கால கிருதிக்கு வாசிக்கும் போது (ஓரஜூபு கிருதிக்கு வாசித்துக் காண்பித்தார்) பல்லவியின் தொடக்கம் கீழ் காலத்திலும், சங்கதிகள் வர வர கொஞ்சம் மத்யம காலமும் கலந்து வாசிக்கலாம். அனு பல்லவியில், நிறைய மத்யம காலமாக வாசிக்கலாம். ஓர ஜூபு, ப்ரோவ பாரமா போன்ற பாடல்களில் மிருதங்கக்காரர் வெவ்வேறு அழகிய நடைகள் மூலம் பாட்டை போஷித்து வந்தால் ரசிகர்களுக்கு நிச்சயம் உற்சாகமாக இருக்கும். பழநி சுப்ரமணிய பிள்ளை வாசிக்கும் போது, மதுரை மணி ஐயர் பல கச்சேரிகளில் பாட்டை நிறுத்திவிட்டு, மிருதங்கத்தைக் கேட்க ஆரம்பித்துவிடுவார். சரணமும் மத்யம காலத்தில் வாசித்த போதும், அதற்கான ‘patterns’ அனுபல்லவி போலல்லாமல் வேறுபட்டிருக்கும். (அவர் வாசித்தது காதில் இருக்கும் போதும், அவற்றை இதற்கு மேல் எழுத்தில் பதிவு செய்ய முடியவில்லை)

– சவுக்க கால பாடல்களுக்கு (ஸ்லோ டெம்போ) வாசிக்கும் போது (ஜம்பு பதே பாடலுக்கு வாசித்துக் காண்பித்தார்) ஜனங்களின் கவனமெல்லாம் பாடலிலேயே இருக்க வேண்டும். அவர்களின் கவனத்தை மிருதங்கத்தின் பக்கம் திருப்பக் கூடாது. பல்லவியை கீழ் காலத்திலேயே வாசிப்பது உசிதம். மேல் காலத்தில், ஃபரன்ஸ் வாசித்து திறமையை காட்ட கச்சேரியில் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். எல்லா நேரத்திலும் அப்படி வாசித்தால் கச்சேரி சோபிக்காது. அனு பல்லவிக்கு வாசிக்கும் போது, கீழ் காலத்தோடு சில மத்யம கால சொற்களையும் வாசிக்கலாம். கவனமெல்லாம் பாடகரின் பாட்டில் இருக்க வேண்டும். சங்கதிகள் எல்லாம் நிச்சயம் காது கொடுத்து கேட்க வேண்டும். இந்த சங்கதிக்குப் பின் இந்த சங்கதி என்று அனுமானித்து வாசிக்க வேண்டும். அது ஒரு வகையில் ஃப்ளுக்தான். ஆனால் அந்த ஃப்ளூக் எப்போதும் வொர்க்-அவுட் ஆகும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

– அதற்கு ஒரே வழி நிறைய கேட்க வேண்டும். ஒரு பாடலை நிறைய முறை கேட்கும் போது, அந்தப் பாடல் கச்சேரியில் வரும் போது, சங்கதிகள் எல்லாம் ஒரு கனவு போல கண் முன் தோன்றும். பாடல் தெரிந்தால் கவனம் முழுவதும் பாட்டில் இருக்கும். தெரியாத போதுதான் கவனம் மிருதங்கம் பக்கம் சென்று, இன்னும் சில ஃபரன்கள் வாசிக்கலாமா எனத் தோன்றும்.

– பாடல் தெரிந்து வாசிக்கும் போது, சில இடங்களில் பாடலை ஒட்டி சொற்கட்டுகளை போட்டால் ரசிகர்கள் மிகவும் ரசிப்பர். (பரமாத்முடு பாடலில் ‘ககனா’ என்ற இடத்தை எடுக்கும் போது சாஹித்யம் போலவே சொற்கட்டைப் போட்டு சரணத்தை எடுத்துக் காண்பித்தார்), பாடகர்களும் இதை உணர்ந்து பாடலை எடுக்க வேண்டும். மிருதங்கக்காரர் எடுக்கிறார் என்பதை தெரிந்து கொண்டு சிலர் பாடலை எடுக்காமல் இருந்துவிடுகின்றனர். பாடகர் உடன் வாசிப்பவர்களை ஒப்புக் கொள்வது போல நடந்து கொண்டால், ரசிகர்களும் அவர்கள் நன்றாக வாசித்தனர் என்று ஒப்புக் கொள்வர். பாடகர் அப்படி நடக்காத போது, மிருதங்கக்காரருக்கும் உற்சாகம் குறையும். கச்சேரி என்பது ஒரு கூட்டு முயற்சி.

– பஜன் போன்ற கனமில்லாத பாடல்களுக்கு வாசிக்கும் போது நிறைய கும்காரங்கள் கலந்து வாசிக்கலாம். (கண்டெனா கோவிந்தனா பாடலுக்கு வாசித்துக் காண்பித்தார்) நிறைய light touch-களுடன், கிட்டத்தட்ட தப்லா கேட்பது போன்ற பிரமை உருவாகும் வகையில் வாசிக்க வேண்டும். தீர்மானங்களில் சிறியதாய் இருப்பின் உசிதம்.

– துரித கால பாடல்களுக்கு இந்த கருத்துகள் பொருந்தா. கச்சேரியில் தொய்வில்லாமல் இருக்க சில நிமிடங்களுக்குப் பாடப்படும் பாடலில், முதலில் இருந்தே மேல் காலத்தில் வாசித்தால்தான் கச்சிதமாகப் பொருந்தும்.

“எல்லாரும் நிறைய கேட்கணும். பாடகர்களும் இளம் கலைஞர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.”, என்று உரையை நிறைவு செய்தார். அரங்கில் நிறைய இளைஞர்கள் தென்பட்டனர். அவர்களுக்கெல்லாம் ஒரு முக்கிய பாடமாக அந்த உரை அமைந்திருக்கும்.

சீஸன் அற்புதமாய் தொடங்கிவிட்ட மகிழ்ச்சியில் அடுத்த கச்சேரிக்காக சாஸ்திரி ஹால் கிளம்பினேன்.

 

 

Read Full Post »

Older Posts »