Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘Music’

நாலாம் திருநாள் அன்று வாசிக்கப்படும் ராகம் ஹம்ஸபிரம்மரி.

ஹேமவதியின் ஜன்யமான இந்த அரிய ராகத்தை அனேகமாய் கச்சேரிகளில் யாரும் பாடுவதில்லை. இருப்பினும் நாகஸ்வர மரபில் முக்கிய ராகமாய் கருதப்பட்டு வருகிறது. நாகஸ்வர சக்ரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை இந்த ராகத்தில் அசாத்தியமாய் ஆலாபனை செய்திருப்பதாகவும் அந்தக் கால ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இந்த ராகத்தில் சுருக்கமான ஆலாபனையையும், ஒரு பல்லவியையும் காணலாம்.

இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.

விவரங்கள் இங்கே. 

Advertisements

Read Full Post »

முதலாம் திருநாளில் உற்சவ மூர்த்திகள் தேரடியை அடையும் போது அந்த நாளுக்குரிய ராகம் இசைக்கப்படும். முதல் நாளுக்குரிய ராகம் சங்கராபரணம் (அல்லது ஹம்ஸத்வனி).

இந்தக் காணொளியில் சங்கராபரண ராக ஆலாபனையைக் கேட்கலாம். நிஜமான உற்சவத்தில் ஆலாபனை மட்டுமே மணிக்கணக்கில் வாசிக்கப்படும்.

ஆலாபனையைத் தொடர்ந்து தானமும்:

தானத்தை தொடர்ந்து ரக்தியும் வாசிக்கப்படும். உருப்படிகளில் மல்லாரியைப் போலவே – ரக்தியும் நாகஸ்வரத்துக்கே உரிய ஒன்று. ஏழு எண்ணிக்கை கொண்ட தாளத்தில் ‘தீம் தக த தி தை’ என்கிற தத்தகார அமைப்பை ரக்தியாக வாசிப்பர். முதல் பார்வைக்கு எளிமையாகத் தோன்றினாலும், பல்லவிகளைப் போலவே ரக்தியும் நுணுக்கங்கள் நிறைந்த உருப்படியாகும்.  பல்லவிகளில் ‘பூர்வாங்கம், அருதி கார்வை, உத்ராங்கம்’ என்று பகுதிகள் இருப்பது போன்று அல்லாமல் ஒரே பகுதியாய் ஏழு அட்சர தாளத்தில் ரக்தி அமைந்திருக்க அனைத்து ராகங்களிலும் இடம் பெருவதில்லை. சங்கராபரண ராகத்தில் பொதுவாக ரக்தி வாசிப்பதுண்டு.

ரக்தியைத் தொடர்ந்து பல்லவியும் (நேரத்துக்கு ஏற்ப) இடம் பெருவதுண்டு. இந்தப் பல்லவிகள் தத்தகாரமாகவோ, சாஹித்ய பல்லவியாகவோ அமைந்திருக்கலாம்.

இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.

விவரங்கள் இங்கே. 

Read Full Post »

கோயில்களில் நடக்கும் புறப்பாடுகளில் வாசிக்கப்படும் உருப்படி மல்லாரி. கம்பீர நாட்டை ராகத்தில் அமைந்த மல்லாரியில் வாசிக்கின்ற தருணத்திற்கும், கலைஞரின் திறனுக்கேற்றும் சுருக்கமாகவோ, விரிவாகவோ மல்லாரிகள் வாசிக்கப்படும். சாஹித்யங்களின்று தத்தகாரங்களினால் இசைக்கப்படும் மல்லாரியை முதலில் ‘அல்லாரிப்பு’ (கண்ட நடையில்) வாசித்து தவில் கலைஞரே தொடங்கி வைப்பார். தத்தகார அமைப்பை திஸ்ரம் செய்வது, திரிகாலம் செய்வது, கல்பனை ஸ்வரம் வாசிப்பது போன்ற மேன்மெருகேற்றல்களும் நடைபெருவதுண்டு.

பதினொரு நாள் நடைபெரும் திருவிழாவில், பெரும்பாலான நாட்களில் பஞ்ச மூர்த்திகளின் உலா இடம் பெறும். சிதம்பரத்தை பொருத்தமட்டில், உற்சவ மூர்த்திகள் புறப்பட்டு வீதிக்கு வரும் வரையில் ஒரு மல்லாரியும் (ஒப்பீட்டளவில் எளிமையான ஒன்று), வீதிக்கு வந்ததும் வேறொரு மல்லாரியும் (ஒப்பீட்டில் நுணுக்கங்கள் நிறைந்த ஒன்று – உ.தா. – திரிபுட தாள மல்லாரி) இடம் பெறும். இந்த மல்லாரி உற்சவர் தேரடி அடைந்து மாட வீதிகளில் திரும்பும் வரை வாசிக்கப்படும்.

இந்த இணைப்பில் முதலில் புறப்பாட்டின் தொடக்கத்தில் வாசிக்கப்படும் மல்லாரியும், அதனைத் தொடர்ந்து திரிபுட தாள மல்லாரியும் இடம்பெற்றுள்ளன.

இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.

விவரங்கள் இங்கே. 

Read Full Post »

தியாகராஜர் “எவர நீ” என்ற பாடலில் ‘ராம’ என்ற சொல்லுக்கு அழகிய அர்த்தத்தைக் கூறுகிறார். சிவனுக்கு உகந்த பஞ்சாக்ஷர மந்திரமான “நமசிவாய” என்பதில் ‘ம’ என்ற எழுத்தே ஜீவன். அது இல்லாவிடில் ‘ந சிவாய’ (அதாவது “சிவம் இல்லை” என்ற பொருள்) ஆகிவிடும். விஷ்ணுவிற்கு உகந்த “நாரயணாய” என்ற மந்திரத்தில், ‘ரா’ என்ற எழுத்தே ஜீவன். அதை நீக்கிவிட்டால் ‘நா அயனாய’ என்று ஆகிவிடும். நாராயணன் என்றால் எங்கும் நிறைந்தவன் என்று பொருள். ‘நா அயனன்’ என்றால் எங்குமே இல்லாதவன் என்று பொருள். இந்த இரு ஜீவ எழுத்துக்களைக் கோத்து ‘ராம’ என்ற பெயர் பிறந்தது என்கிறார்.

இப்படியாகவோ, அல்லது வேறு எப்படியாகவோ பிறந்த பெயர் ராமன். சிறு வயதில் ‘ஆ-அம்’ ஊட்ட ஆரம்பிக்கும் போதே ராமனின் கதையும் நம்மூரில் ஊட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.

வட நாட்டுக்குப் போனால், காலை எழுந்தவுடன் முகமனே ‘ராம் ராம்’ என்கிறார்கள்.

“இப்ப அதுக்கு என்ன?”, என்றுதானே கேட்கிறீர்கள். சொல்கிறேன்.

இப்படிப்பட்ட பெயர் என்னுடையதும்தான். ஆனால் என்னுடையது மட்டுமே அல்ல.

மூன்று வருடங்களுக்கு முன்னால் இந்தப் பெயரால் ஒரு பிரச்னை. நான் எழுதிய புத்தகமும், எல்லே ராம் எழுதிய புத்தகமும் ஒன்றாய் விகடனில் வெளியாயின. அந்தச் செய்தி ஹிந்து நாளிதழில் வெளியானது.  அதைப் படித்தவரெல்லாம், எல்லே ராமின் மனைவி லலிதா ராம் என்றும். கணவனும் மனைவையும் ஜோடியாக புத்தகங்கள் வெளியிட்டுளனர் என்றும் எண்ணத் தொடங்கினர்.  “நீங்க ராம். டிசம்பர் தர்பார் எழுதியிருக்கேள். உங்க ஆத்துக்காரி லலிதா வரலியா?”, என்றெல்லாம் என்னைக் கேட்ட போது காமெடியாக இருந்தது.

சில மாதங்களாக, அடிக்கடி யாராவது ஒருத்தர்  “நீங்கதான் ஜெயமோகனுக்கு இசையைப் பத்தி லெட்டர் எழுதற ராமா?”, என்று கேட்கிறார். ஆரம்பத்தில் விளையாட்டாகத்தான் எடுத்துக் கொண்டேன். நாட்பட நாட்பட, விசாரிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. கூடிய விரைவில் டீசல் ஆட்டோ வீட்டிற்கு வருமோ என்று கூடத்தோன்றுகிறது.

ஐயா பொது ஜனங்களே! நம் நாட்டில் கூட்டத்தில் நின்றபடி “ராம்” என்று உரக்கக் கூவிப் பாருங்கள். நூற்றுக்கு முப்பது பேர் திரும்பிப் பார்க்கக் கூடும். ராமநாராயணன், ராமசுப்பு, ராமகிருஷ்ணன், ராமராஜன், ராமசந்திரன் என்று பலதரப்பட்ட பெயர்களின் சுருக்கம் ‘ராம்’-ஆக இருக்கக் கூடும். இணையத்திலேயே கூட எத்தனையோ ‘ராம்’-கள் இருக்கிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், அடிக்கடி எழுதிய போதும் சரி, ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை பதிவிட்ட போதும் சரி, ‘லலிதா’ என்ற முன்னொட்டு இல்லாமல் என் பெயரில் எழுத்து வெளி வந்ததில்லை. இருப்பினும், நானே அவன், என்று பலர் உறுதியாக நம்புவது ஆச்சர்யமாக இருக்கிறது.

நேற்று கூட ஜெ.ராம்கி கேட்டார், “நீங்கதான் அவனா?”.

ராம்கியாவது நல்ல மனிதர். நான் அவனில்லை என்றதும் உடனே நம்பிவிட்டார். இன்னொரு நண்பர் ஜெயமோகன் தளத்தில் வந்த ஒரு வலை இதழின் விமர்சனத்தைப் படித்துவிட்டு பயங்கர கடுப்பிலிருக்கிறார். நான் என்ன சொல்லிப் பார்த்தும், “இசையைப் பற்றி இருக்கிறது. கடுமையான விமர்சனமாகவும் இருக்கிறது. இது நீயாகத்தான் இருக்க முடியும்”, என்கிறார். இத்தனைக்கும் எங்கள் நட்பு பள்ளி நாட்களில் முளைத்த ஒன்று. 

நானும் ஜெயமோகன் தளத்தை தினமும் பார்க்கிறேன். அவர் எழுத்தின் மேல் எனக்கு ஈர்ப்பு உண்டு. அவருடைய விஷ்ணுபுரம், காடு, ஏழாம் உலகம் புத்தகம் வைத்து இருக்கிறேன். அதை விட முக்கியம் – வாசித்திருக்கிறேன். அவர் காந்தியின் பிள்ளைகள் பற்றி எழுதிய கட்டுரைகளை சிலருக்கு forward செய்து இருக்கிறேன். ஜெயமோகன் தமிழ்ஸ்டுடியோ தளத்தைப் பற்றி எழுதிய 4 வரியில், ஒரு வரி நான் எழுதிய கட்டுரைகளைக் குறித்து இருந்ததைக் கண்டு இரண்டு நாட்கள் தலையில் கொம்பு முளைத்தது போல நடந்து கொண்டிருக்கிறேன்.

எனக்கும் ஜெயமோகனுக்கும் இருக்கும் சம்பந்தம் அவ்வளவே!

பொதுவாகவே எனக்குப் பிரபலங்களைப் பார்த்தால் ஒரு வித பயம். நெருங்கினால் குதறிவிடுவார்களோ என்று தோன்றும். அதுவும் இல்லாமல், அவர்கள் ஆளுமையைப் பார்த்து, கற்பனையாய் எனக்குள் இருக்கும் பிம்பம், அருகில் சென்றதும் தகர்ந்து விடுமோ என்ற அச்சம் வேறு. அதனாலேயே, நான் ரசிக்கும் பலரின் ஆளுமையை, எட்ட நின்று ரசித்து மகிழவே விரும்பிகிறேன். அப்படிப்பட்ட அளுமைகளுள் ஒன்றுதான் ஜெயமோகனின் எழுத்தும்.

இசை என்ன “எங்கப்பன் வீட்டு சொத்தா?”. என்னை விட கடுமையான வார்த்தைகள் கொண்டு விமர்சனம் செய்யும் ‘ராம்’-கள் இணையத்தில் இல்லையா?, என்ற கேள்விகள் எல்லாம் கேட்கப் போவதில்லை. கேட்டால் அதற்கும் தயாராக பதில் வைத்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இப்படியே போனால், நானே கூட “நான் யார்”, என்று தத்துவ விசாரத்தில் இறங்கக் கூடும். இறுதியில், நானும் கடவுள், அந்த ராமும் கடவுள், ஆதலால் நானும் அந்த ராமும் ஒன்றுதான் என்று அத்வைதத்தில் முங்கி, முடிவுக்குக் கூட வந்துவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது.

ஆதலால், நான் கூறிக் கொள்ள விரும்புவது யாதெனில், நான் ஜெயமோகனுக்கு கடிதம் எழுதினால், நிச்சயம் லலிதா ராம் என்ற பெயரிலேயே எழுவேன். மற்றபடி எந்தப் பெயரில் வந்தாலும் அது என்னுடைய கடிதம் இல்லை.

நண்பர்களே! நம்புங்கள்.

நான் அவனில்லை!

Read Full Post »