Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘Music’

நேற்று சின்மயி கர்நாடக சங்கீத உலகில் பெண்களிடம் வரம்பு மீறியவர்களென்று ஒரு பெயர் பட்டியல் வெளியிடத் தொடங்கியுள்ளார்.

இந்த விஷயத்தில், எது வரம்பு? பாதிக்கப்பட்டது உண்மையா? அவதூறாக இருக்க முடியாதா? பாதிக்கப்பட்டவர் விவரம் வெளியில் தெரியாத போது, யாரைப் பற்றி வெண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்று ஆகிவிடாதா?

என்றெல்லாம் பல கேள்விகள்…

 

2951080-KWGMGAQN-32

Source: https://www.saatchiart.com/art/Painting-stop-child-abuse/999085/3690152/view

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதிலை சுலபமாக கண்டடைய முடியாது. இதற்கெல்லாம் பதில் தெரிந்த பின்தான் நாம் வரம்பு மீறலைப் பற்றி பேச வேண்டும் என்றால் இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு மௌனமாகத்தான் இருக்கமுடியும்.

கர்நாடக இசையின் தீவிர ரசிகனாக பல ஆண்டுகளாய் இருப்பவன் என்கிற வகையில் பல கலைஞர்களுடனும், மாணவர்களுடனும் பழக வாய்ப்பு எனக்கு அமைந்துள்ளது. பரிவாதினியைத் தொடங்கிய பின் பல சபாகள், அதன் நிர்வாகிகள் , நிர்வாகிகளாக இல்லாத போதும் அதிகாரம் செலுத்தும் நிழல் மனிதர்கள் என்று பல நாவல்களுக்கு உரிய மனிதர்களுடன் பழக நேர்ந்தது.

அந்த அனுபவத்தில், பெண்களிடம் வரம்பு மீறி நடப்பதில் இந்தத் துறை எந்தத் துறைக்கும் குறைந்ததல்ல என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

இசையைப் பொருத்தவரை (மற்ற துறையிலும் இது பொருந்தலாம்) கலை காட்டும் உயரத்தில் கலைஞனையும் வைத்துப் பார்ப்பது நமது பிழையே. தூரத்தில் அமர்ந்து போலி வெளிச்சத்தில் மேடையில் அமர்ந்திருக்கும் கலைஞனைக் காணும்போது இசையின் உன்னதம் கலைஞனையும் கலையையும் இரண்டரக் காட்டும் மாயவித்தை இயற்கையானதே. ஆனால் தோற்றமயக்கங்கள் என்றைக்கு நிதர்சனங்களாயிருக்கின்றன. மேடை இறங்கயதும் அரிதாரம் கலைந்துதானே தீரவேண்டும்?

கலைஞர்கள் மட்டும்தானா இதில் அடக்கம்?

குரு ஸ்ருதி சேர்த்துக் கொள்ளும் போது,  ”சிஷ்யையை அனுப்பு, உனக்காக ஸ்பெஷல் சீரக வெந்நீர் போட்டு வைத்திருக்கிறேன்”, என்று அறைக்குள் அழைத்துப் போகும் காரியதரிசிக்கு பயந்து சங்கீதமே வேண்டாம் என்று முடிவெடுத்த பெண்ணை எனக்குத் தெரியும்.

“எனக்கு எப்போ வேணாலும் நேரம் கிடைக்கும். நான் பாதி ராத்திரிக்கு கூப்பிட்டாலும் பெண்ணை அனுப்பி வெக்கணும். சங்கீதம்-னா சும்மா இல்லை”, என்று முதல் நாளே பெற்றோரிடம் நிபந்தனை போட்டுக் கொள்ளும் வாத்தியார்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

என்னதான் திறமை வாய்த்தாலும்,  இசையை மட்டும் தொழிலாக வைத்துக் கொள்ள ஒரு கலைஞன் என்னென்னமோ சமரசங்களை செய்துகொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. ஐந்து வருடங்களாக மட்டுமே, அதுவும் மிகச் சிறிய அளவில் கச்சேரிகள் ஒருங்கிணைத்து வரும் பரிவாதினிக்கே வாரம் தவறாமல் வாய்ப்புகள் கேட்டு எங்கிருந்தெல்லாமோ அழைப்புகள் வந்தபடியிருக்கின்றன. அந்த அழைப்புகளில் பலநேரம் “எத்தைத் தின்றால் பித்த தெளியும்” என்கிற பதட்டமும் சேர்ந்து ஒலிக்கும்.

“வேற எதாவது பண்ணனுமா ஸார்…”, என்று ஒரு இளைஞனின் அப்பா இழுக்கும்போது தொடங்குகிறது இந்த அழுக்காட்டம். ”கச்சேரி நடத்தறது என்ன சுலபமாவா இருக்கு? கொஞ்சம் அழுக்கும் சேர்த்துக்கத்தான் வேண்டியிருக்கு”, என்றுதான் பின்னால் நிறைய அழுக்கையும் சேர்த்துக்கொள்ளும் அனைவரும் தொடங்குகின்றனர். எது கொஞ்சம், எது நிறையவென யார் வரையறுப்பது?

அவரவருக்குத் தக்கபடிதான்.

இந்த நிலையில் அறவுணர்வை மட்டும் நம்பி எல்லோரையும் பாதுகாத்துவிடலாம் என்று நம்புவது அப்பாவித்தனத்தின் உச்சம். என்னதான் பிரசாரம் செய்தாலும், ஹெல்மெட் போடாவிட்டால் நூறு ரூபாய் அபராதம் என்கிற விதியைக் கண்டு பயந்து தலைக்கவசம் அணிபவர்கள்தான் அதிகம். அந்த வகையில், எல்லை மீறினால் தன் பெயர் வெளியிடப்படும் என்கிற பயம் இன்றைய அவசியம் என்றே நினைக்கிறேன்.

இதனால் சிலர் மேல் அபாண்டமாய் பழிசுமத்தக்கூடும்தான். சூழலின் பெருநலன் கருதி இந்த விஷயத்தை சிறு சங்கடமாய் கடக்க வேண்டியதுதான் சரியென்றுபடுகிறது.

வெளியிடப்பட்டிருக்கும் பெயர்களும், அதன் நம்பகத்தன்மையும், அதையொட்டிக் கிடைக்கும் வம்புகளும் என்று விவாதங்களின் மையம் செல்லாமல், சங்கீதத்துறையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் தன்னைத்தானே கேள்வி கேட்டுக் கொண்டு நேர்மையாய் நமக்கு நாமே பதிலளித்துக் கொள்ளும் தருணமாய் இதை மாற்றிக்கொள்வதுதான் நாம் இப்போது செய்யக்கூடிய குறைந்தபட்ச பொறுப்புள்ள செயலாக இருக்கமுடியும்.

இதை நான் யாருக்கும் சொல்லவில்லை. எனக்கு நானே ஒருமுறை சொல்லிக் கொள்கிறேன்…

Read Full Post »

விவியன் ரிச்சர்ட்ஸ் என்றொரு கிரிக்கெட் வீரர்.

1974-ல் சர்வதேச அரங்குக்கு வந்தார்.

அவர் வந்த நாளில், குருகுலவாச முறையில் வந்த சாஸ்திரோக்தமான ஆட்டக்காரர்கள் பந்தை மட்டையால் தொடலாமா என்று யோசித்து முடிப்பதற்குள் பந்து கீப்பர் கைகளில் இருந்து மூன்று நான்கு கைகள் மாறி மிட் ஆஃப்-க்கு சென்றிருக்கும்.

அச்சூழலில் நுழைந்த ரிச்சர்ட்ஸை வினோதமாய் பார்த்தனர். பந்து பௌலரின் கையை நீங்கிய மறுகணத்தில் பவுண்டிரியில் இருக்க வேண்டும் என்கிற ஒரே லட்சியத்துடன் மட்டையைச் சுழற்றினார் ரிச்சர்ட்ஸ்.

“கார்டே சரியா எடுக்கத் தெரியலை. பந்து படாத எடத்துல பட்டு பொட்டுனு போய்ச் சேற போறான்! ஆஃப் ஸ்டம்புக்கு வெளில விழற பாலை பூனை மாறி குறுக்க பூந்து அடிச்சுண்டு! எல்லாம் கலி காலம்”, என்று முணுமுணுக்க ஆரம்பித்தனர்.

அதையெல்லாம் பொருட்படுத்தாத ரிச்சர்ட்ஸ் ஆத்திரமேபடாமல் அடித்துத் துவைத்தார். ரசிகர்கள் ஆனந்தக் கூத்தாடினர். பாரம்பரிய மொண்ணைகளின் குரல் ரசிகர்களின் ஆரவாரத்தில் மூழ்கிப் போனது.

அடுத்த பதினைந்து வருடங்கள் உச்சாணிக் கொம்பில்தான் ரிச்சர்ட்ஸ்.

மற்ற ஆட்டக்காரர்களும் ஆடினார்கள். ஆடாத போது வருங்காலத்தைப் பற்றி வருந்தினார்கள். சிலர் ரேடியோவில் பாடினார்கள். சிலர் வயிற்றுப் பிழைப்புக்காக சிஷ்ய கோடிகளை சேர்த்துக் கொண்டு ஆதிகால சங்கதிகளை அனவரதம் பாடி கருங்கல்லில் நார் உரித்தார்கள். சிலர் டிராமாவில் கூட நடித்தார்கள்.

”இது அவுட் ஆகிற வரைக்கும் காஜடிக்கிற ஆட்டமில்லையாம்பா! அம்பது ஓவர் ஆனா ஆட்டம் முடிஞ்சுதாம்!” – என்று இவர்கள் புரிந்துகொள்வதற்குள் இரண்டு உலகக் கோப்பைகள் வென்று ஆறாயிரம் ஓட்டங்களுக்கு மேல் குவித்துவிட்டார் ரிச்சர்ட்ஸ்.

ஆனால் பாருங்கள், ரிச்சர்ட்ஸும் மனுஷன்தானே. அவரும் சற்று தளர்ந்தார். பதினைந்து வருட ருத்ர தாண்டவம் சற்று அடங்கி ஒலித்தது.

முப்பது யார்ட் சர்க்கிளைத் தாண்டி பந்தை செலுத்தியிராதவர்கள் எல்லாம் துள்ளிக் குதித்தனர், “பார்த்தியா! பார்த்தியா! நாங்கதான் அப்பவே சொன்னோமே”, என்று தன் தலையில் தானே அட்சதை போட்டுக் கொண்டனர்.

ரிச்சர்ட்ஸை ஆதர்சமாய் கொண்டு அடித்து விளாசியபடி வளர்ந்து வந்த அடுத்த தலைமுறையின் தலைமயிரைக் கொத்தாய் பிடித்தபடி, “போடா போ! இப்படியே போனா ரிச்சர்ட்ஸ் கதிதான் உனக்கு”, என்றார் ஒரு மஹானுபாவர்.

“என்ன மாமா ரிச்சர்ட்ஸுக்கு?”, என்றது அந்த அபலை.

“என்னவா? நாசமாப் போச்சு!”

“….”

“என்னடா முழிக்கற?”

“….”

“ரெண்டு வருஷத்துல எத்தனை செஞ்சுரி அடிச்சான் உங்க ரிச்சர்ட்ஸ்?”

“நீங்க எவ்வளோ செஞ்சுரி அடிச்சேள்”, என்று கேட்க நினைத்து வாயையடைத்துக் கொண்டது அந்தத் தளிர்.

“மாமாவால் அடிக்க முடியாத சிக்ஸரா? அப்படியெல்லாம் வீர்யத்தை வீணாக்கக் கூடாது-னு வைராக்யமா இருக்கார்”, என்று எடுத்துக் கொடுத்தது ஒரு ஜால்ரா.

”சொல்றதை சொல்லிட்டேன். நம்ப பெரியவா எல்லாம் முட்டாளில்லை. அவாள்ளாம் ஒரு வழியை உண்டு பண்ணியிருக்கான்னா அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும். அதை மாத்தினோம்னா அடியோட கவுத்துடும். அதையும் மீறி நான் சீறித்தான் பாய்வேன்னா! பேஷா பண்ணு. அதுக்கு முன்னால ஒரு பென்ஷன் ஸ்கீம்-ல காசை போட்டுக்கோ”, என்று தன் ஹாஸ்யத்தை எண்ணி தானே சிரித்துக் கொண்டது அந்தரோ!

விரைவிலேயே ரிச்சர்ஸும் ரிட்டையர் ஆனார். மற்ற ஆட்டக்காரர்கள் மட்டுமென்ன மார்கண்டேயர்களா என்ன? அவர்களும் ரிட்டையர்தான் ஆனார்கள்.

ரிச்சர்ட்ஸுக்கு பென்ஷன் இல்லாமலேயே சுகஜீவனம் நடந்தது. பந்துக்கு பயந்து ஹெல்மெட் மாட்டிக்கொண்டவர்களுக்கு வருடத்துக்கு ஒருமுறை இருப்பைத் தெரிவித்து கையெழுத்துப் போட்டு பென்ஷன் வாங்க வேண்டிய நிலையே வாய்த்தது.

காலம் உருண்டோடியது.

ரிச்சர்ட்ஸுக்குப் பின் சச்சின், சேவாக், கில்கிரிஸ்ட், கோலி என்ற வீரர்கள் சக்கை போடு போட்டனர்.

ரிச்சர்ட்ஸின் ஓய்வுக்குப் பின் பிறந்தவர்களின் ஆட்டத்தை, அவர்கள் உணராத போதும், ரிச்சர்ட்ஸின் ஆட்டம் பாதித்துதான் இருந்தது.

இதற்கிடையில் மஹானுபாவரின் நூற்றாண்டும் வந்தது. அவரது பங்களிப்பு என்ன என்பதை ஒரு பெரிய விசாரணை கமிஷன் பரிசீலித்தது. அந்தக் கமிஷனின் கண்டுபிடுப்புகளை, காலை வேளை டிஃபனுக்குக் கூடிய காதுகேளா ரசிகர்களின் பலத்த கரகோஷத்துக்கிடையில் மஹானுபாவரின் மகன் கூறிக்கொண்டிருந்தார்.

“நம்ப பெரியவா எல்லாம் முட்டாளில்லை…

#purinjavanpistha

Read Full Post »

நாலாம் திருநாள் அன்று வாசிக்கப்படும் ராகம் ஹம்ஸபிரம்மரி.

ஹேமவதியின் ஜன்யமான இந்த அரிய ராகத்தை அனேகமாய் கச்சேரிகளில் யாரும் பாடுவதில்லை. இருப்பினும் நாகஸ்வர மரபில் முக்கிய ராகமாய் கருதப்பட்டு வருகிறது. நாகஸ்வர சக்ரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை இந்த ராகத்தில் அசாத்தியமாய் ஆலாபனை செய்திருப்பதாகவும் அந்தக் கால ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இந்த ராகத்தில் சுருக்கமான ஆலாபனையையும், ஒரு பல்லவியையும் காணலாம்.

இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.

விவரங்கள் இங்கே. 

Read Full Post »

முதலாம் திருநாளில் உற்சவ மூர்த்திகள் தேரடியை அடையும் போது அந்த நாளுக்குரிய ராகம் இசைக்கப்படும். முதல் நாளுக்குரிய ராகம் சங்கராபரணம் (அல்லது ஹம்ஸத்வனி).

இந்தக் காணொளியில் சங்கராபரண ராக ஆலாபனையைக் கேட்கலாம். நிஜமான உற்சவத்தில் ஆலாபனை மட்டுமே மணிக்கணக்கில் வாசிக்கப்படும்.

ஆலாபனையைத் தொடர்ந்து தானமும்:

தானத்தை தொடர்ந்து ரக்தியும் வாசிக்கப்படும். உருப்படிகளில் மல்லாரியைப் போலவே – ரக்தியும் நாகஸ்வரத்துக்கே உரிய ஒன்று. ஏழு எண்ணிக்கை கொண்ட தாளத்தில் ‘தீம் தக த தி தை’ என்கிற தத்தகார அமைப்பை ரக்தியாக வாசிப்பர். முதல் பார்வைக்கு எளிமையாகத் தோன்றினாலும், பல்லவிகளைப் போலவே ரக்தியும் நுணுக்கங்கள் நிறைந்த உருப்படியாகும்.  பல்லவிகளில் ‘பூர்வாங்கம், அருதி கார்வை, உத்ராங்கம்’ என்று பகுதிகள் இருப்பது போன்று அல்லாமல் ஒரே பகுதியாய் ஏழு அட்சர தாளத்தில் ரக்தி அமைந்திருக்க அனைத்து ராகங்களிலும் இடம் பெருவதில்லை. சங்கராபரண ராகத்தில் பொதுவாக ரக்தி வாசிப்பதுண்டு.

ரக்தியைத் தொடர்ந்து பல்லவியும் (நேரத்துக்கு ஏற்ப) இடம் பெருவதுண்டு. இந்தப் பல்லவிகள் தத்தகாரமாகவோ, சாஹித்ய பல்லவியாகவோ அமைந்திருக்கலாம்.

இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.

விவரங்கள் இங்கே. 

Read Full Post »

கோயில்களில் நடக்கும் புறப்பாடுகளில் வாசிக்கப்படும் உருப்படி மல்லாரி. கம்பீர நாட்டை ராகத்தில் அமைந்த மல்லாரியில் வாசிக்கின்ற தருணத்திற்கும், கலைஞரின் திறனுக்கேற்றும் சுருக்கமாகவோ, விரிவாகவோ மல்லாரிகள் வாசிக்கப்படும். சாஹித்யங்களின்று தத்தகாரங்களினால் இசைக்கப்படும் மல்லாரியை முதலில் ‘அல்லாரிப்பு’ (கண்ட நடையில்) வாசித்து தவில் கலைஞரே தொடங்கி வைப்பார். தத்தகார அமைப்பை திஸ்ரம் செய்வது, திரிகாலம் செய்வது, கல்பனை ஸ்வரம் வாசிப்பது போன்ற மேன்மெருகேற்றல்களும் நடைபெருவதுண்டு.

பதினொரு நாள் நடைபெரும் திருவிழாவில், பெரும்பாலான நாட்களில் பஞ்ச மூர்த்திகளின் உலா இடம் பெறும். சிதம்பரத்தை பொருத்தமட்டில், உற்சவ மூர்த்திகள் புறப்பட்டு வீதிக்கு வரும் வரையில் ஒரு மல்லாரியும் (ஒப்பீட்டளவில் எளிமையான ஒன்று), வீதிக்கு வந்ததும் வேறொரு மல்லாரியும் (ஒப்பீட்டில் நுணுக்கங்கள் நிறைந்த ஒன்று – உ.தா. – திரிபுட தாள மல்லாரி) இடம் பெறும். இந்த மல்லாரி உற்சவர் தேரடி அடைந்து மாட வீதிகளில் திரும்பும் வரை வாசிக்கப்படும்.

இந்த இணைப்பில் முதலில் புறப்பாட்டின் தொடக்கத்தில் வாசிக்கப்படும் மல்லாரியும், அதனைத் தொடர்ந்து திரிபுட தாள மல்லாரியும் இடம்பெற்றுள்ளன.

இது போலவே வைணவ மரபையும் ஆவணமாக்க முயன்று வருகிறோம்.

விவரங்கள் இங்கே. 

Read Full Post »

தியாகராஜர் “எவர நீ” என்ற பாடலில் ‘ராம’ என்ற சொல்லுக்கு அழகிய அர்த்தத்தைக் கூறுகிறார். சிவனுக்கு உகந்த பஞ்சாக்ஷர மந்திரமான “நமசிவாய” என்பதில் ‘ம’ என்ற எழுத்தே ஜீவன். அது இல்லாவிடில் ‘ந சிவாய’ (அதாவது “சிவம் இல்லை” என்ற பொருள்) ஆகிவிடும். விஷ்ணுவிற்கு உகந்த “நாரயணாய” என்ற மந்திரத்தில், ‘ரா’ என்ற எழுத்தே ஜீவன். அதை நீக்கிவிட்டால் ‘நா அயனாய’ என்று ஆகிவிடும். நாராயணன் என்றால் எங்கும் நிறைந்தவன் என்று பொருள். ‘நா அயனன்’ என்றால் எங்குமே இல்லாதவன் என்று பொருள். இந்த இரு ஜீவ எழுத்துக்களைக் கோத்து ‘ராம’ என்ற பெயர் பிறந்தது என்கிறார்.

இப்படியாகவோ, அல்லது வேறு எப்படியாகவோ பிறந்த பெயர் ராமன். சிறு வயதில் ‘ஆ-அம்’ ஊட்ட ஆரம்பிக்கும் போதே ராமனின் கதையும் நம்மூரில் ஊட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.

வட நாட்டுக்குப் போனால், காலை எழுந்தவுடன் முகமனே ‘ராம் ராம்’ என்கிறார்கள்.

“இப்ப அதுக்கு என்ன?”, என்றுதானே கேட்கிறீர்கள். சொல்கிறேன்.

இப்படிப்பட்ட பெயர் என்னுடையதும்தான். ஆனால் என்னுடையது மட்டுமே அல்ல.

மூன்று வருடங்களுக்கு முன்னால் இந்தப் பெயரால் ஒரு பிரச்னை. நான் எழுதிய புத்தகமும், எல்லே ராம் எழுதிய புத்தகமும் ஒன்றாய் விகடனில் வெளியாயின. அந்தச் செய்தி ஹிந்து நாளிதழில் வெளியானது.  அதைப் படித்தவரெல்லாம், எல்லே ராமின் மனைவி லலிதா ராம் என்றும். கணவனும் மனைவையும் ஜோடியாக புத்தகங்கள் வெளியிட்டுளனர் என்றும் எண்ணத் தொடங்கினர்.  “நீங்க ராம். டிசம்பர் தர்பார் எழுதியிருக்கேள். உங்க ஆத்துக்காரி லலிதா வரலியா?”, என்றெல்லாம் என்னைக் கேட்ட போது காமெடியாக இருந்தது.

சில மாதங்களாக, அடிக்கடி யாராவது ஒருத்தர்  “நீங்கதான் ஜெயமோகனுக்கு இசையைப் பத்தி லெட்டர் எழுதற ராமா?”, என்று கேட்கிறார். ஆரம்பத்தில் விளையாட்டாகத்தான் எடுத்துக் கொண்டேன். நாட்பட நாட்பட, விசாரிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. கூடிய விரைவில் டீசல் ஆட்டோ வீட்டிற்கு வருமோ என்று கூடத்தோன்றுகிறது.

ஐயா பொது ஜனங்களே! நம் நாட்டில் கூட்டத்தில் நின்றபடி “ராம்” என்று உரக்கக் கூவிப் பாருங்கள். நூற்றுக்கு முப்பது பேர் திரும்பிப் பார்க்கக் கூடும். ராமநாராயணன், ராமசுப்பு, ராமகிருஷ்ணன், ராமராஜன், ராமசந்திரன் என்று பலதரப்பட்ட பெயர்களின் சுருக்கம் ‘ராம்’-ஆக இருக்கக் கூடும். இணையத்திலேயே கூட எத்தனையோ ‘ராம்’-கள் இருக்கிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், அடிக்கடி எழுதிய போதும் சரி, ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை பதிவிட்ட போதும் சரி, ‘லலிதா’ என்ற முன்னொட்டு இல்லாமல் என் பெயரில் எழுத்து வெளி வந்ததில்லை. இருப்பினும், நானே அவன், என்று பலர் உறுதியாக நம்புவது ஆச்சர்யமாக இருக்கிறது.

நேற்று கூட ஜெ.ராம்கி கேட்டார், “நீங்கதான் அவனா?”.

ராம்கியாவது நல்ல மனிதர். நான் அவனில்லை என்றதும் உடனே நம்பிவிட்டார். இன்னொரு நண்பர் ஜெயமோகன் தளத்தில் வந்த ஒரு வலை இதழின் விமர்சனத்தைப் படித்துவிட்டு பயங்கர கடுப்பிலிருக்கிறார். நான் என்ன சொல்லிப் பார்த்தும், “இசையைப் பற்றி இருக்கிறது. கடுமையான விமர்சனமாகவும் இருக்கிறது. இது நீயாகத்தான் இருக்க முடியும்”, என்கிறார். இத்தனைக்கும் எங்கள் நட்பு பள்ளி நாட்களில் முளைத்த ஒன்று. 

நானும் ஜெயமோகன் தளத்தை தினமும் பார்க்கிறேன். அவர் எழுத்தின் மேல் எனக்கு ஈர்ப்பு உண்டு. அவருடைய விஷ்ணுபுரம், காடு, ஏழாம் உலகம் புத்தகம் வைத்து இருக்கிறேன். அதை விட முக்கியம் – வாசித்திருக்கிறேன். அவர் காந்தியின் பிள்ளைகள் பற்றி எழுதிய கட்டுரைகளை சிலருக்கு forward செய்து இருக்கிறேன். ஜெயமோகன் தமிழ்ஸ்டுடியோ தளத்தைப் பற்றி எழுதிய 4 வரியில், ஒரு வரி நான் எழுதிய கட்டுரைகளைக் குறித்து இருந்ததைக் கண்டு இரண்டு நாட்கள் தலையில் கொம்பு முளைத்தது போல நடந்து கொண்டிருக்கிறேன்.

எனக்கும் ஜெயமோகனுக்கும் இருக்கும் சம்பந்தம் அவ்வளவே!

பொதுவாகவே எனக்குப் பிரபலங்களைப் பார்த்தால் ஒரு வித பயம். நெருங்கினால் குதறிவிடுவார்களோ என்று தோன்றும். அதுவும் இல்லாமல், அவர்கள் ஆளுமையைப் பார்த்து, கற்பனையாய் எனக்குள் இருக்கும் பிம்பம், அருகில் சென்றதும் தகர்ந்து விடுமோ என்ற அச்சம் வேறு. அதனாலேயே, நான் ரசிக்கும் பலரின் ஆளுமையை, எட்ட நின்று ரசித்து மகிழவே விரும்பிகிறேன். அப்படிப்பட்ட அளுமைகளுள் ஒன்றுதான் ஜெயமோகனின் எழுத்தும்.

இசை என்ன “எங்கப்பன் வீட்டு சொத்தா?”. என்னை விட கடுமையான வார்த்தைகள் கொண்டு விமர்சனம் செய்யும் ‘ராம்’-கள் இணையத்தில் இல்லையா?, என்ற கேள்விகள் எல்லாம் கேட்கப் போவதில்லை. கேட்டால் அதற்கும் தயாராக பதில் வைத்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இப்படியே போனால், நானே கூட “நான் யார்”, என்று தத்துவ விசாரத்தில் இறங்கக் கூடும். இறுதியில், நானும் கடவுள், அந்த ராமும் கடவுள், ஆதலால் நானும் அந்த ராமும் ஒன்றுதான் என்று அத்வைதத்தில் முங்கி, முடிவுக்குக் கூட வந்துவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது.

ஆதலால், நான் கூறிக் கொள்ள விரும்புவது யாதெனில், நான் ஜெயமோகனுக்கு கடிதம் எழுதினால், நிச்சயம் லலிதா ராம் என்ற பெயரிலேயே எழுவேன். மற்றபடி எந்தப் பெயரில் வந்தாலும் அது என்னுடைய கடிதம் இல்லை.

நண்பர்களே! நம்புங்கள்.

நான் அவனில்லை!

Read Full Post »

« Newer Posts