Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘musicfest09’

Season Teaser

இந்த சீஸன் எனக்கு 19-ம் தேதி ஆரம்பிக்கிறதென்றாலும். போன வார இறுதியை சென்னையில் கழித்தேன்.

ஜி.என்.பி நூற்றாண்டு மலர் தயாரிக்கும் வேலையே வார இறுதியை எடுத்துக் கொண்டு விட்டது. கையில் ஒன்றுமே இல்லாமல் தொடங்கி, சில மாதம் விடாமல் பலரைத் துரத்தி, கிடைத்தவற்றை சீர்படுத்தித் திரும்பிப் பார்த்தால், ஐம்பது கட்டுரைகளுக்கு மேல் கைவசம்! சரி, மலர் கதை விவரமாக வேறொரு பதிவில்.

கிடைத்த சொல்ப சமயதல்லி (பெங்களூரு வாசம்) கால் கச்சேரியைக் (சனிக் கிழமை) கேட்கவும், ஓர் அற்புதமான ஓவியக் கண்காட்சியைப் (ஞாயிறு) பார்க்கவும் முடிந்தது. மணியம் செல்வனின் குடும்பத்தினரின் ஓவியங்கள் பற்றி விவரமாகச் சொல்ல வேண்டும். (ஹி!ஹி! இப்படிச் சொல்லியே ஒப்பேத்தறது வசதியாத்தான் இருக்கு;-))

3.45-க்கும் – 5.00 மணிக்கும் இடையே கிடைத்த நேரத்தில் பக்கத்திலிருந்த பிரம்ம கான சபாவில் நுழைந்தேன். சகேதராமன் பாட்டு. நான் நுழையும் போது, ஹால் almost full. காலியாய் இருந்த இருக்கைகளைக் காத்தபடி அடுத்த இருக்கைக்காரர்கள். மாடிக்குச் சென்று பால்கனியில் செட்டில் ஆவதற்குள் (நான் போனதே லேட்) வர்ணமும் கல்யாணி ஆலாபனையும் முடிந்துவிட்டன. ‘வாசுதேவயனி’ என்று ஆரம்பித்தது, ‘அட! நம்ம பாட்டு’, என்று ஒரு முறை புன்னகைத்தேன்.

ஜி.என்.பி இந்தப் பாடலைப் பாடிய ரிக்கார்டை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று கணக்கேயில்லை. அனுபல்லவயில் தார ஷட்ஜம், நிஷாதம், தார ரிஷபம் என்றி வெவ்வேறு இடங்களில் நிறுத்திக் குழைக்கும் அழகுக்கு ஈடேயில்லை.

அந்த சங்கதிகளை சாகேதராமன் அழகாகவே பாடினார். அன்று சாகேதராமனுக்கு குரல் சற்று சரியில்லை. அவ்வப்போது அவர் மனம் நினைத்ததை குரல் பேச மறுத்தது. பாடும் போது, குரல் உடைவதை ‘வெள்ளி விழுவது’ என்று குறிப்பதுண்டு. அன்று கொஞ்சம் அதிகமாகவே குரலில் வெள்ளி விழுந்ததாகத் தோன்றியது.

கல்யாணியில் நிரவல் ஆரம்பிக்கும் போது, பால்கனிக்கு குழந்தையுடன் விசாகா ஹரி (சாகேதராமனின் அக்கா) நுழைந்தார். உடனே ரசிகர்களிடையே ஒரு சலசலப்பு அலை எழும்பி ஓய்ந்தது. மடிசாரின் மேல், woolen jacket, தலைக்கு மஃப்ளர் என்று ஏசியிலிருந்து சரீரத்தையும் சாரீரத்தையும் காத்துக் கொள்ள ஆயத்தமாய் வந்திருந்தார். உட்கார்ந்து அரைநிமிஷம் போயிருக்கும், குழந்தை வீலிட்டது. உடன் வந்த சகேதராமனின் அப்பா (என்று நினைக்கிறேன்) குழந்தையை வெளியில் எடுத்துப் போக முயன்றார். உடனே 2-வீல் ட்ரைவ் 4-வீல் ட்ரைவாக மாறியது. வெறு வழியில்லாமல், விசாகாவும் அரங்கை விட்டு நீங்கினார். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் இதே நாடகம் மீண்டும் அரங்கேறியது. இனி இருந்தால் என்னைப் போன்றோரின் கடும் சாபத்துக்கு ஆளாவோம் என்பதை உணர்ந்ததாலோ என்னமோ, வெளியில் சென்றவர், மூன்றாவது முறையாகத் திரும்பி வரவில்லை.

பிரம்ம கான சபாவில் ஒன்னொரு சங்கடம், அங்கிருக்கும் கதவு. கதவு தானாய் மூடிக் கொள்ள வேண்டி பொருத்தப்பட்டிருக்கும் ஸ்ப்ரிங்கின் stiffness அதீதமாய் இருப்பதால், ஆள் நுழைந்ததும் படார் என்று மூடிக் கொல்கிறது (எழுத்துப் பிழை அல்ல). நிமிஷத்துக்கு மூணு டரம் கதவை யாராவது திறப்பதால், கச்சேரியில் கவனம் செலுத்துவது கடினமாகிறது.

நிறைய ஷட்ஜ, பஞ்சம வர்ஜமாகவும், அவ்வப்போது தொட்டுக் கொண்டும் பாடிய கல்பனை ஸ்வரங்கள் வெகுவாக ரசிக்கும்படி இருந்தன. கச்சேரியில் கால்வாசி நேரம்தான் கேட்டபடியால், பக்கவாத்யங்கள் யாரென்று அறிந்திருக்கவில்லை. H.K.வெங்கட்ராமன் வயலின். பல்லடம் ரவி மிருதங்கம் என்று இணையத்தில் படித்து, இன்றுதான் தெரிந்து கொண்டேன். மிருதங்கம் வாசித்தவரின் கையில் நல்ல நாதம் வாய்த்திருக்கிறது. மிருதங்கத்தை அடிக்காமல், வாசிக்கிறார். ”மயிருள்ள சீமாட்டி! பின்னினாலும் அழகு, முடிஞ்சுண்டாலும் அழகு”, என்று பாட்டி சொல்வார். அந்த மிருதங்க வாசிப்பைக் கேட்ட போது அதுதான் நினைவுக்கு வந்தது. வேகமாய் வெளுத்து வான்கிய போது சரி, மெலியதாய் கும்காரங்களை தொப்பியில் உதிர்த்த போதும் சரி, இனிமையாக ஒலித்தது.

எனக்குப் பிடித்த ராகங்களுள் ஒன்று முகாரி. இழைத்து இழைத்துப் பாடிய அந்த ராக ஆலாபனை, சாகேத்ராமனின் சாரீரத்தில் தெரிந்த strain-ஐயும் மீறி கேட்க அற்புதமாய் இருந்தது. ஆலாபனையின் போதே சாகேத்ராமனின் குரல் ஓரளவு நல்ல பதத்தை அடைந்த்திருந்தது.

ஆலாபனை முடிந்ததும், “கன்றின் குரலைக் கேட்டு” என்று ஆரம்பித்தார் பாருங்கள். த்சொ, த்சொ….இந்த சீஸனுக்கு அந்த அனுபல்லவி போதும். முசிறியின் ரிக்கார்டில் இந்தப் பாடலைக் கேட்டவர்களுக்கு, இந்தப் பாடலின் மேல் காதல் வராமல் இருக்க முடியாது (பாடலின் முதல் வரி என்றைக்கு சிவ கிருபை வருமோ). அப்படியொரு பாவம். ”உண்டான”, “கொண்டாடி”, “கண்டாலும்”, “சண்டாளன்” என்று வந்து விழும் எதுகைகளும், முகாரியின் உருக்கமும் நம்மை வேறொரு உலகத்துக்கு எடுத்துச் சென்றுவிடும்.

“கொண்டாடி கொண்டாடிக் கொள்வார் – தனம் குறைந்தால்
கண்டாலும் பேசார்”

என்ற இடத்தைப் சாகேத்ராமன் பாடியதை வர்ணிக்கவே முடியாது.
முகாரி ராக ஆலாபனையின் போது, ஒரு மாமி பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். வயலின் காரர் சாகேத்ராமனைத் தொடர்ந்தாரோ இல்லையோ, இந்த மாமி பாடகர் pause பண்ணிய போதெல்லாம் பாடி நிரப்பிக் கொண்டிருந்தார். கையில் ஒரு நோட்புக். கச்சேரிக்ககவே என்று பிரத்யேகமான நோட்புக் இருக்கிறது போலும். ஒரு வரியில் நான்கு கோடுகள். முதல் கோட்டில் பாடல் வரி, இரண்டாவதில் ராகம், மூன்றாவதில் தாளம், நான்காவதில் வாக்கேயக்காரர் பெயர், என்று எழுதிக் கொள்ள வசதியாய் வடிவமைத்திருக்கிறார்கள். அதில் ஒவ்வொரு பாடலாய் எழுதிக் கொண்டிருந்தார். நாள் முழுவதும் கச்சேரிகள்தான் போலும். நோட்டு நிரம்பியிருந்தது. கொடுத்த வைத்த மகராசி!

முகாரியைத் தொடர்ந்து, “சாகேத நிகேதன” என்று பாடலை ஆரம்பித்த போது, மாமிக்கு என்ன ராகம் என்று புரியவில்லை. அவர் படும் அவஸ்தை பார்க்க கஷ்டமாயிருந்ததால், “கன்னட” என்றேன். “யாரோட சாஹித்யம்?”, என்றார். “தெரியலையே”, என்றேன். “அது தெரியாம என்ன பண்றது? எழுதியாகணுமே?”, என்று கடுப்பாய்ச் சொன்னார். இது என்னடா வம்பாய்ப் போச்சு என்று நான் நினைக்கையில், தன் பையில் இருந்து துழாவி பாக்யலட்சுமியின் கிருதிகள் அட்டவணை அடங்கிய புத்தகத்தை எடுத்தார். “படிக்க முடியலை. இதுல பார்த்துச் சொல்லு”, என்றார். அதற்குள் நல்ல காலமாக, பாடலின் சரணத்தில் தியாகராஜரின் முத்திரை வந்துவிட்டது. இவ்வளவு meticulous-ஆக எழுதி என்ன செய்வார் என்று கேட்க நினைத்தேன். (நானும் இப்படி எழுதிக் கொள்வேன், என்பது வேறு விஷயம்). அதற்குள் அடுத்த வேலைக்கு நேரம் ஆகிவிட்டதால் இடத்தைவிட்டு எழுந்தேன். அப்போது, மோகனத்தை மெல்லிய கீற்றாய் ஆலாபனை செய்ய ஆரம்பித்தார் சாகேத்.

கதவை மிகப் பொறுமையுடன், சத்தமே வராமல் மூடிவிட்டுக் கிளம்பினேன்.

பி.கு: ம.சே-யின் ஓவியக் கண்காட்சி, 26-ம் தேதி வரை எல்டாம்ஸ் ரோடில், கிழக்கு பதிப்பகத்துக்கு எதிர் பில்டிங்கில் நடக்கிறது

Read Full Post »

December Music Festival Calendar 2009

சீசனில் எந்த நாள் எந்தக் கச்சேரிக்குப் போகலாம் என்று பல நாட்களுக்குத் திட்டமிட்டு, “அப்போ பார்த்துக்கலாம்”, என்று விட்டுவிடுவது வழக்கமாய் நடக்கும் விஷயம். முடிவுக்கு வர முடியாவிடினும், “21-ம் தேதி கிருஷ்ண கான சபா-ல விஜய் சிவா கேட்டுட்டு அப்படியே இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸுக்கு போனா கணேஷ்-குமரேஷ் கேட்கலாம். Alternatively, பரத் கலாசார்-ல சஷாங்க் கேட்டுட்டு, நுங்கம்பாக்கம் கல்சுரல்-ல ஓ.எஸ்.டி கேட்கலாம்”, என்றெல்லாம் பிளான் பண்ணிக் குழம்புவதே ஒரு சுகமான அனுபவம்.

2003-க்கு முன் எஸ்.கண்ணன் என்பவர் வருடா வருடம் வெளியிடும் சீஸன் (இலவச) கையேடே இதற்குப் பயன்பட்டது. வலைத்தளங்கள் பல வந்துவிட்ட போதும் கூட, இன்றும் சீஸனில் சென்னைக்குச் சென்றதும், நல்லி கடைக்குச் சென்று இந்த கையேட்டை வாங்கிவிடுவேன். பல வகை வரிசைப்படுத்தல்களுடன் இவர் வெளியிடும் கையேட்டுக்கு நிகரேயில்லை எனலாம். இந்த வருடமும் ஒரு காப்பி வாங்க வேண்டும். உங்களுக்கும் வேண்டுமெனில் ‘நல்லி’ ஷோ ரூம் அல்லது கண்ணனின் வீட்டில் (S. Kannan, 2nd Floor, Sundaram Apartment, No. 3,
Anandapuram, Off Dr. Rangachari Road, Mylapore, Chennai – 4) பெற்றிடலாம்.

சில வருடங்களாய், என் வெட்டி கற்பனைகளுக்குச் சில வலைத்தளங்களை நம்பியுள்ளேன். ரொம்ப வருஷமாய் டிசம்பரில் மட்டும் நான் மேயும் வலைத்தளம் Kutcheribuzz . மார்கழியில் நாளுக்கு இரு பக்கங்கள் (சில நாட்கள் 4 பக்கங்கள்) சீஸன் சம்பந்தமான விஷயங்களை நியூஸ் லெட்டராக அச்சிட்டு, கச்சேரி நடக்கும் இடங்களில் இந்த வலைத்தளம் நடத்துபவர்கள் விநியோகிப்பதை பார்த்திருக்க முடியும். கலைஞர் வாரியாக, சபா வாரியாக, நாள் வரியாக என்று எப்படி வேண்டுமானாலும் வரிசைப் படுத்திப் பார்த்துக் கொள்ளக்கூடிய வசதியுடன் கச்சேரி விவரங்களை இங்கு காணலாம். சீஸன் நிகழ்வுகள் பற்றி செய்திகள் இங்குக் காணக் கிடைத்தாலும், இவர்களுடைய ரிப்போர்டிங் முறை, மேம்போக்காக இருப்பதால், நான் அவற்றை அதிகம் கவனிப்பதில்லை.

இந்த வருடம் புதியதாக இரண்டு தளங்கள் முளைத்துள்ளன. Chennai December Season என்பது முதல் தளம். இது பார்க்க தளம் போல அல்லாமல் வலைப்பூவைப் போலுள்ளது. கச்சேரி விவரங்களைப் பார்ப்பது, kutcheribuzz தளத்தைப் போல அவ்வளவு சுலபமாக இல்லை என்ற போதும், கூகுள் காலெண்டரில் விவரங்களை ஏற்றியிருப்பது வசதியாக இருக்கும் என்று நம்புகிறேன். நேற்று எழுதியிருந்த ஜெயா டிவி கச்சேரிகள் ஒலிபரப்பாகும் நேரங்களின் தகவல்கள் கூட இந்தத் தளத்தில் கிடைக்கிறது. கச்சேரி விவரங்களை விட, கச்சேரி அனுபவம், அறிவிப்புகள், நேர்காணல்கள் என்று இவர்கள் செய்தியைப் பகிர்ந்து கொள்ளும் முறை என்னைக் கவர்ந்தது. செய்திகளைக் கொடுக்க வேண்டுமே என்று கடமைக்குச் செய்யாமல், ஒரு அனுபவப் பகிர்தலாய் இருப்பதால் இவர்களின் எழுத்து நன்றாக அமைகிறது.

கச்சேரி விவரங்களுடன், கச்சேரி நடக்கும் இடங்களுக்குச் செல்லும் வழி, தோராயமாக ஆகும் செலவு, தங்கும் இடங்கள், பசியாற்றிக் கொள்ள உதவும் இடங்கள் என்று புதிதாய் வந்திருக்கும் மற்றொரு தளம் பின்னியெடுக்கிறது. பல்வேறு தளங்களில் கிடைக்கும் அட்டவணைகளுள், எனக்கு இந்தத் தளத்தின் அட்டவணையே வசதியாக இருக்கிறது. இந்தியப் பெயர்களை சரியான spelling-ல் கொடுத்தால்தான் அட்டவணையைத் தருவேன் என்று அழிச்சாட்டியம் செய்வதை மட்டும் தவிர்த்திருந்தால் இன்னும்
நன்றாக இருந்திருக்கும். U. Shrinivas என்று அடிக்காமல், U. Srinivas என்றோ U.shrinivas (No space after the dot) என்றோ அடித்தால் தளம் ஆளேயில்லை என்று அடித்துச் சொல்கிறது. My Calendar-ல் கச்சேரிகளைக் குறித்துக் கொள்ளக் கூடிய வசதி நன்றாக இருக்கிறது. Login Id கேட்காததால் கணிணியைக் கொண்டு நம் திட்டத்தை தளம் ஞாபகம் வைத்துக் கொள்ளும் என்று நினைக்கிறேன். நான் சென்னைக்குச் சென்றதும் வேறு கணிணியில் தளத்தைப் பார்த்தால் நான் போட்ட திட்டமெல்லாம் வீணாகுமா என்ற கேள்வியும் எழுகிறது.

உண்மைக்கு ஒரு உருவம். கற்பனைகளுக்கு கணக்கில்லாத உருவங்கள் என்று இந்தத் தளங்கள் மூலம், நான் கேட்காத கச்சேரிகளை கற்பனை செய்து பார்க்கும் போது உணர்கிறேன்.

Read Full Post »

வரவேற்பறைக்கு வீட்டின் மற்ற அம்சங்களை விட மவுசு கொஞ்சம் அதிகம்தான். இருப்பினும், வீட்டின் தாங்குதளமும், மேல்தளமும், வரவேற்பறையின் நகாசுகளை விட மிக முக்கியமானவை. இசைத் துறையில் கச்சேரி மேடை என்பது வீட்டின் வரவேற்பறையைப் போன்றது. அதன் மேல் கவனம் அதிகம் செலுத்தப்படும் என்றாலும், இசையின் வளர்ச்சிக்கும் தொடர்ச்சிக்கும் மேடைக் கச்சேரிகளைத் தாண்டி பல விஷயங்கள் தேவைப் படுகிறது. சென்னையில் தெருவுக்கு ஒரு சங்கீத சபை முளைத்திருப்பினும், கச்சேரிகளைத் தாண்டி இசையின் ஆழங்களுக்கு செல்ல நினைக்கும் அமைப்புகளைக் காண்பது அரிது. 1980-ல் லுட்விக் பெச் (Ludwig Pech) மைக்கேல் நிக்ஸன் (Michael Nixon) ஆகியோரின் துணையுடன் வைணிகை சாவித்ரி ராஜனால் ஒரு கார் ஷெட்டில் தொடங்கப்பட்டு, இன்று வரை அரியனவற்றை ஆவணப்படுத்துவதற்காகவே தன்னை அர்பணித்திருக்கும் அமைப்பே சம்பிரதாயா.

நமது பாரம்பரிய இசையில் பல வகையான பத்ததிகள் உண்டு. இவையெல்லாம் ஒரு சில கலைஞர்களின் இதயங்களில் மட்டுமே இருக்கக் கூடிய விஷயங்கள். இந்தக் கலைஞர்களுள் பலர் மேடைக் கச்சேரிகளில் அதிகம் கேட்க முடியாதவர். இப்படிப் பட்ட கலைஞர்கள் மறையும் போது, அவர்களுடன் சேர்ந்து அவர்கள் கட்டிக் காத்த பத்ததியும் அடுத்த சந்ததிக்குப் போய்ச் சேராமல் மறைந்துவிடுகிறது. இந்த வகையில், நாம் இழந்த பொக்கிஷங்களுக்கு அளவே இல்லை. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற எண்ணமே சம்பிரதாயா உருவாகக் காரணம்.

1980-களில் பல கச்சேரிகளை ஏற்பாடு செய்து, அரிய ராகங்கள், அரிய கிருதிகள், அதிகம் கேட்க முடியாத ஆனால் அற்புதமான கலைஞர்கள் என்று எண்ணற்ற ஆவணங்களை ஏற்படுத்தி, அதை எல்லோரும் கேட்கும் வாய்ப்பையும் சம்பிரதாயா ஏற்படுத்திக் கொடுத்தது. கச்சேரிகள், கருத்தரங்குகள், பயிற்சி முகாம்கள் என்று சம்பிரதாயா ஆவணப்படுத்தியிருக்கும் ‘ஒலி நூலகத்தை’ முழுவதும் கேட்க குறைந்த பட்சம் 5000 மணி நேரமாவது தேவைப்படும். கர்நாடக சங்கீதம் மட்டுமின்றி, கிராமிய இசை, கோயிலில் ஒலிக்கும் இசை, பஜனைகள், நாடகத்துக்குரிய இசை, நாட்டிய இசை, தேவாரம் என்று பல தரப்பட்ட இசை வடிவங்களும் அற்புதமாய் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

தனம்மாள் பாணி, ஓதுவார்களின் தேவார முறை, தவில் பயிற்சி முகாம், அன்னமாச்சாரியா கிருதிகள் என்று பல்வேறு தலைப்புகளில் பயிற்சி முகாம் அமைத்து, திறமையான இளம் கலைஞர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்ததன் மூலம் நம் சங்கீத விருட்சத்தின் வேர்களை இன்னும் உரமாக்கியது. காலப்போக்கில், பிரதி கிடைக்காத பல நூல்களைத் திரட்டி, 2000-க்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட களஞ்சியமாக மாறிய சம்பிரதாயாவுக்கு இந்தியாவின் அனைத்து மூலைகளில் இருந்தும் அறிஞர்கள் வருகை தந்து, தம் ஆய்வுகளை நெறிப்படுத்திக் கொண்டனர்.

கலைஞர்களின் இசையைத் தவிர, அவர்களின் வரலாறு, இசை குறித்த கருத்துகள் எல்லாம் விரிவான நேர்காணல் வாயிலாக பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹரிகதையில் சிறந்து விளங்கிய பன்னி பாய், நாட்டியத்தில் புகழுச்சிகளைத் தொட்ட மயிலாப்பூர் கௌரி அம்மாள், சங்கீத கலாநிதி எம்.எல்.வசந்தகுமாரி, பாடகரும் வாக்கேயக்காரருமான தஞ்சாவூர் சங்கர ஐயர், பல மேதைகளை உருவாக்கிய சி.எஸ்.சங்கர சிவம், பல துறைகளில் இணையற்றவராய் விளங்கும் எஸ்.ராஜம் என்று சம்பிரதாயா பதிவு செய்திருக்கும் நேர்காணல்களின் பட்டியல் பல
பக்கங்களுக்கு நீளுகிறது.

சம்பிரதாயாவே நடத்திய நிகழ்ச்சிகளின் பதிவைத் தவிர, 1930-களில் பதிவு செய்யப்பட்ட 78 rpm ரெக்கார்டுகளில் தொடங்கி டைகர் வர்தாச்சாரியார், அரியக்குடி, முசிறி, ஜி.என்.பி, மதுரை மணி என்று எண்ணற்ர இசை ஜாம்பவான்களின் கச்சேரிகளின் கருவூலமாகவும் சம்பிரதாயா மாறியது. இவ்வளவு நல்ல விஷயங்களுக்குப் பின்னால், தெளிவான திட்டமிடலும், அயராத உழைப்பும் இருந்ததே, சம்பிரதாயாவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணங்கள்.

சென்னையின் இசைப் பேட்டையான மயிலாப்பூரில் இருந்த சம்பிரதாயாவுக்கு புகழ் கிடைத்த அளவுக்குப் பொருள் கிடைக்க்வில்லை. லாப நோக்கில்லாத நிறுவனங்கள் எல்லாம் கொடைகளின் மூலம்தானே ஜீவிக்க முடியும். கொடைகள் அருகிப் போன நிலையில், மயிலாப்பூரில் இருந்த கட்டிடத்துக்கு வாடகை கூட செலுத்த முடியாத நிலைக்கு சம்பிரதாயா தள்ளப்பட்டது. இதனால், சம்பிரதாயாவுக்குப் பெயர் வாங்கிக் கொடுத்த பல தரப்பட்ட நடவடிக்கைகளும் முடங்கிப் போய், இருப்பதை மட்டுமாவது எப்படியாவது காப்பாற்றிக் கொண்டால் போதும் என்ற நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், கலாக்ஷேத்ராவின் இயக்குனர் லீலா சாம்சன் கை கொடுத்தார். ருக்மிணி தேவி உபயோகித்த அலுவலகத்தை சம்பிரதாயாவுக்காக அளித்தார். நூல்களைப் பாதுகாக்க வசதி, அரிய ஒலிப்பதிவுகள் அழியாமல் இருக்கத் தேவைப்படும் குளிர்பதன வசதியுள்ள அறைகள் என்று சம்பிரதாயா மீண்டும் சரியான பாதைக்கு திரும்ப ஆரம்பித்தது.

கடந்த இரண்டு வருடங்களில் தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்ட நிலையில், இன்று பிரபல பாடகர் டி.எம்.கிருஷ்ணாவின் தலைமையில் சம்பிரதாயாவின் நடவடிக்கைகளுக்கு மீண்டும் புத்துயிர் கிடைத்துள்ளது. “பாம்பே ஷண்முகாநந்த சபையின் உதவியுடன், சம்பிரதாயாவில் இருக்கும் அத்தனை ஒலிப்பதிவுகளும் டிஜிட்டல் பதிவுகளாக மாற்றப்பட்டு வருகின்றன. உலகின் எந்த மூலையில் இருந்தாலும், சம்பிரதாயாவின் உறுப்பினர்களால் இணையத்தின் வழியாக எந்த ஒரு ஒலிப்பதிவையும் கேட்கும் நிலையை உருவாக்குவதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம்”, என்கிறார் கிருஷ்ணா.

‘சம்வாதா’ என்ற பெயரில் மூத்த கலைஞர்களின் கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் உரையாடல் நிகழ்ச்சிகள் பல திட்டமிடப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களில் ஆர்.கே.ஸ்ரீகண்டனும் சித்ரவீணை ரவிகிரணும் கலந்து கொண்ட நிகழ்ச்சியும், டி.கே.மூர்த்தியும் பாலக்காடு ராஜாமணியும் கலந்து கொண்ட நிகழ்ச்சியும் இனி வரப்போகும் பல நல்ல நிகழ்ச்சிகளுக்கு கட்டியம் கூறும் வகையில் அமைந்தன.

பல அரிய விஷயங்களை பலர் அறிய வைக்கும் நோக்குடன் நடத்தப்படும் சம்பிரதாயாவில் சில நூறு உறுப்பினர்களே இருப்பது வருத்தமளிக்கிறது. “உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட அதிகம் வருத்தம் தரும் விஷயம் எங்கள் நடவடிக்கைகளில் பங்கு கொள்ள வெகு சிலரே முன் வருகின்றனர். நாங்கள் செய்வது சரியா, இப்போது செய்வதை விடச் சிறப்பாகச் செய்ய முடியுமா, என்று குறை நிறைகளைச் சுட்டக் கூட அதிகம் பேர் இல்லை. இருப்பினும், இந்த நிலை விரைவில் மாறும்.”, என்று உற்சாகமாய் கூறுகிறார் சம்பிரதாயாவின் நிர்வாக இயக்குனர் கீதா ராஜகோபால்.

( டைகர் வர்தாச்சார்யார் புகைப்படம் உதவி : sampradaya.org )

Read Full Post »

December Music Festival – A curtain raiser

தமிழிசை தழைக்க

இந்த வருட சங்கீத சீஸன் கூப்பிடு தூரத்தில் இருக்கிறது. டிசம்பர் 19 முதல் 27 வரை சங்கீதத்தில் மூழ்க நான் தயாராகிவிட்டேன். ஒவ்வொரு வருடமும் சங்கீத விழாவின் போது கச்சேரிக்கு கூட்டம் வருகிறதோ இல்லையோ, இணையத்தில் தமிழிசை பற்றிய சர்ச்சைக்கு கூட்டம் நிறைய கூடுவதுண்டு. இதைப் பற்றி இரண்டு வருடங்களுக்கு முன் எழுதிய பதிவு இன்றும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.

மாதங்களில் சிறந்த மார்கழி என்றதும் மனதில் தோன்றும் எண்ணங்களுள் ஒன்று ‘இசை விழா’வைப் பற்றியதாக நிச்சயம் இருக்கும். உலகின் எந்த இடத்திலும் காண முடியாத படி, சென்னையில் ஐந்து கி.மீ பரப்பளவுக்குள், ஒரே நாளில் கிட்டத்தட்ட நூறு இடங்களில் இனிய இசை ஒலிப்பதை எண்ணி நாம் அனைவரும் பெருமைப் பட்டுக் கொள்ளலாம். வருடா வருடம் ஒலிக்கும் இசையைப் போலவே, வருடம் தவறாமல் டிசம்பர் மாதங்களில் நம் காதுகளில், தமிழிசையின் துயர் நிலையைப் பற்றிய செய்திகளும், தமிழ்ப் பாடல்கள் கச்சேரிகளில் அதிகம் ஒலிக்க வேண்டி கோரிக்கைகளும், ஒலிக்கத் தவறுவதே இல்லை.

இந்த வருடமும் ஆனந்த விகடன், குங்குமம் போன்ற பத்திரிக்கைகளின் தலையங்கங்கள் தமிழ் இசை வளர்ச்சியின் தேவையை வலியுறுத்தின. இவற்றைப் படிக்கும் போது, தமிழ்ப் பாடல்களின் வளர்ச்சி வெறும் இசைக் கலைஞர்களின் கையில் மட்டுமே இருப்பது போலவும், இசை ரசிகர்களுக்கோ, பத்திரிக்கைத் துறைக்கோ எந்தவிதப் பங்கும் இருக்க முடியாது என்பது போலவும் தோன்றுகிறது.

முதலில், உண்மை என்ன? தமிழ்ப் பாடல்களின் நிலை என்ன? அவை பாடப்படுவதில்லையா? இந்த மார்கழியில் கிட்டத்தட்ட முப்பது கச்சேரிகள் கேட்ட நிலையில், தமிழ்ப் பாடல்கள் கணிசமான அளவு பாடப்படுகின்றன என்றே தோன்றுகிறது. இன்றைய நிலையில், முதன்மைப் பாடகர் என்று கருதக் கூடிய நிலையில் உள்ள சஞ்சய் சுப்ரமணியம், ஒரு பேட்டியில், “நான் என் கச்சேரிகளில் தமிழ்ப்பாடல் பாடாமல் இருக்கவே மாட்டேன்”, என்று கூறியுள்ளார். கூறியதோடு நில்லாமல், திருவருட்பா பாடல்களை மட்டும் வைத்துக்கொண்டு அவர் நிகழ்த்திய கச்சேரியை, உலகத் தமிழர்கள் அனைவரும் தொலைக்காட்சியில் கண்டு களித்திருப்பார்கள். அக்கச்சேரியைத் தவிர, அவரின் வேறு இரண்டு கச்சேரிகளை இந்த மார்கழியில் கேட்டேன். அவற்றுள் ஒன்றை ‘தமிழிசைக் கச்சேரியாகவும்’, மற்றொன்றில் கணிசமான அளவு தமிழ்ப் பாடல்களுடனும் பாடினார். டி.என்.சேஷகோபாலன் தமிழ்ப் பாடலே இல்லாது பாடிய கச்சேரிக்கு கணிசமான கூட்டமும், திய்வ பிரபந்தப் பாடல்களை மட்டும் வைத்துப் பாடிய கச்சேரியில் பத்து பேர் கூட இல்லாத நிலையும் கண்கூடாகக் கண்டேன். தெளிவான உச்சரிப்பும், நெஞ்சைத் தொடும் உருக்கமும் நிறைந்த விஜய் சிவவவின் கச்சேரியில் பிரதான ராகமாக சங்கராபரணத்தைப் பாடி, பலர் அரைத்த மாவைத் திரும்பி அரைக்காமல் ‘தூக்கிய திருவடி’ என்று தமிழில் பாடிப் பரவசப்படுத்தினார். இந்த ஆண்டும் தமிழிசைச் சங்கத்தில், முதன்மை ஸ்தானத்தில் இருக்கும் அனைத்துப் பாடகர்களும் தமிழ்ப் பாடல்களைக் கொண்டு கச்சேரிகள் செய்தனர். தமிழிசைச் சங்கத்தைத் தவிர, கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸிலும் தமிழிசை விழா நடந்தது. அவ்விழாவிலும், பிரபல பாடகர்கள் பலர் தமிழ்ப் பாடல்களை மட்டும் பாடி நிறைவான கச்சேரிகள் செய்தனர்.

இவற்றை நோக்கும் போது,

1. தமிழில் நல்ல பாடல்கள் உள்ளன!
2. தமிழ்ப் பாடல்கள் ஏனோ தானோ என்று துக்கடாவாகப் பாடும் நிலையில் நலிந்து காணப்படுவதில்லை!
3. நிறைவான கச்சேரிகள் பல செய்யக் கூடிய நிலையில் நிறைய பாடல்கள் உள்ளன!
4. அவை பாடகர்களிடையே புழக்கத்திலும் உள்ளன!

என்பவை தெளிவாகின்றன. வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் முழுநேரத் தமிழ்க் கச்சேரி செய்ய முதன்மைப் பாடகர்கள் அனைவரும் தயாராக இருக்கும் பட்சத்தில், தமிழிசையை வளர்க்கும் பணியை யார் செய்வதில்லை? பாடகர்களா? அல்லது தமிழ்ப் பாடல்கள் ஒலிக்க நிறைய மேடைகள் ஏற்படுத்திக் கொடுக்காதவர்களா?

தமிழிசைக் கச்சேரிகளை நடத்திய இடங்களை மேலே குறிப்பிட்டோம். அவை தவிர, எந்த மொழியில் பாடினாலும் ஏற்கக் கூடிய சபைகள் பலவிலும் தமிழ்ப் பாடல்கள் பல ஒலித்ததைக் கேட்டவர்கள் அறிவார்கள். ‘ஆசாரம் என்ற பெயரில் பல கட்டுப்பெட்டித்தனங்களைச் சுமக்கும் இடம்’ என்று பலரால் வர்ணிக்கப்படும் இடமான ம்யூசிக் அகாடமியில், நான் கேட்ட கச்சேரிகளில் பல தமிழ்ப்பாடல்கள் ஒலித்தன. சிக்கல் குருசரண் என்ற இளைஞர் தனது கச்சேரியை, ஓர் அரிய (தமிழ்) வர்ணத்தில் தொடங்கினார். வளர்ந்து வரும் கலைஞரான ஸ்வர்ண ரேதஸ், தனது கச்சேரியின் முதல் பிரதான உருப்படியை ‘சற்றே விலகி இரும் பிள்ளாய்’ என்று தமிழில் பாடினார். அதற்காக, அவர்களுக்குத் தனியாக ஏதேனும் பாராட்டு கிடைத்ததா? குறைந்த பட்சம், பத்திரிகை விமர்சனங்களாவது, இவ்விஷயங்களைக் குறிப்பிட்டு, உற்சாகப்படுத்தினவா? உண்மையில், அந்த அகாடமி கூட்டத்தில், சீன மொழியில் பாடினாலும், தமிழில் பாடினாலும் பெரிய வித்தியாசம் ஒன்றும் ஏற்படாது என்றே தோன்றுகிறது.

மொழியையும் தாண்டி இசையை ரசிக்கும் கூட்டம் ஒன்று இருக்கிறது. அக்கூட்டமே இன்று சபைகளை நிரப்புகிறது. அவர்களுக்கு ‘கத்தன வாரிகி’ பாடினாலும் ஒன்றுதான், ‘காண வேண்டாமோ! இரு கண் இருக்கும் போதே விண்ணுயர் கோபுரம்’ என்று தமிழ்த் தேனில் குளிப்பாட்டினாலும் ஒன்றுதான். அந்தக் கூட்டமே ம்யூசிக் அகாடமி கச்சேரிகளுக்கும் வருகிறது, தமிழிசைக் கச்சேரிகளுக்கும் வருகிறது. வருடா வருடம் நம் காதுகளில் விழும் புலம்பல்கள் உண்மையெனில், ம்யூசிக் அகாடமி கூட்டத்தை விட, அண்ணா நகரில் நடைபெறும் தமிழிசைக் கச்சேரிகளுக்கு, கணிசமான அளவில் கூட்டம் கூட வேண்டாமோ? அல்லது, தமிழில் பாட வேண்டி தலையங்கங்கள் எழுதும் பத்திரிக்கைகள்தான், தமிழில் பாடுபவர்களுக்காக தனிப்பக்கங்கள் ஒதுக்கியிருக்க வேண்டாமோ? ஒரு பிரபல பத்திரிகையில் வந்த இசை விமர்சனம், பாடகர் ஒரு தமிழ்ப் பாடலைத் தவறாகப் பாடியதாகச் சாடியது. அப்பாடகர் புத்தகத்திலிருந்து நகல் எடுத்து அனுப்பி, தான் பாடியது சரி என்று நிலைநாட்டிய பின்னும், “பாடகர் நகல் அனுப்பியிருந்தார். இருப்பினும் அந்தக் காலத்தில் நான் கேட்டது வேறு மாதிரி இருந்தது.”, என்ற விமர்சகரின் சப்பைக்கட்டே பத்திரிக்கையில் வெளியாகியிருந்தது. இதே பாடகர் புரியாத பாஷையில் பாடியிருந்தால் இந்தப் பிரச்னை எழுந்திருக்காது என்ற நிலையில், பாடகர் அடுத்த கச்சேரியில் தமிழில் பாட யோசிப்பார்தானே?

கர்நாடக இசைத்துறையும் ஒரு தொழிலே! அங்கு பாடுபவர்களும், பொருள் ஈட்டி, நல்ல முறையில் வாழ்க்கை நடத்த வேண்டியே பாடுகிறார்கள். மென்பொருள் விற்பன்னரைப் போல, பங்குச் சந்தை நிபுணரைப் போல, கர்நாடக இசைப் பாடகரும் ஒரு professional-தான். அப்படிப்பட்ட நிலையில், எவையெல்லாம் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறதோ, எவையெல்லாம் கிடைப்பதற்குச் சுலபமாக உள்ளதோ, அவற்றை வைத்துத் தனது கச்சேரியை அமைத்துக் கொள்ளும் பாடகரை நாம் எப்படித் தவறு சொல்ல முடியும்? எந்த மொழிப் பாடல்கள் வேண்டுமானாலும் விற்கும் என்றால், சுலபமாகப் பாடம் செய்யக்கூடிய தெலுங்கு கீர்த்தனைகளையே பாடகர்கள் நாடுவதில் வியப்பொன்றுமில்லை. தமிழ்ப் பாடல்களுக்குத் தனிப்பட்ட வரவேற்பு கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டால், தமிழிசை பரவுவதை யாராலும் தடுக்க முடியாது. இந்த மார்கழியில், மூன்று கச்சேரிகளில், கச்சேரிக்கு முன் பாடகர்களைச் சந்தித்து எங்களுக்குப் பிடித்தமான தமிழ்ப் பாடல்களைப் பாடுமாறு வேண்டினேன். அம்மூன்று பாடகர்களுமே என் கோரிக்கைக்கு இணங்கினர்.

தமிழிசையில் உண்மை நாட்டம் உள்ளவர்கள் கச்சேரிகளுக்கு வர வேண்டும். தயங்காமல் தங்கள் விருப்பத்தைப் பாடகருக்குத் தெரியப்படுத்த வேண்டும். தமிழிசைக் கச்சேரிகள் நிகழும் இடங்களில் கூட்டம் குவிய வேண்டும். கச்சேரி நிகழ்த்தும் சங்கங்களுக்கு லாபம் பெருக வேண்டும். அச்சபைகளின் வளர்ச்சி, மற்ற சபைகளை அவ்வழிக்கு இட்டுச் செல்ல வேண்டும். பத்திரிக்கைகள், வருடம் ஒரு முறை நிகழ்த்தும் திவசம் போல, ‘ஒரு தலையங்கம் எழுதினால் எங்கள் கடன் தீர்ந்தது’, என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். தமிழ்ப் பாடல்கள் பாடுபவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். அந்த உற்சாகம் பாடகர்களைப் பல புதிய பாடல்களைத் தேட நிச்சயம் செலுத்தும். அப்போது, புதைந்து கிடக்கும் பல மாணிக்கங்கள் வெளிக்கொணரப்படும்.

சீஸன் முடிந்தவுடன் புலம்புவதை விட, சீஸனுக்கு முன்னால் பதிவிடுவது சரியென்று தோன்றியது. தமிழில் பாடல் கேட்க விழைவோர் இம்முறையாவது அரங்கத்துக்கு வருவீர்களா?

Read Full Post »

« Newer Posts