Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘Mysore Srikanth’

பொதுவாக எனக்கு ஜுகல்பந்தி என்றால் அலர்ஜி. கர்நாடக இசையில் உள்ள அளவுக்கு ஹிந்துஸ்தானி கேட்பதிலும் எனக்கு ஈடுபாடு உண்டு என்ற போதும், இரு வழிகளில் இருந்து கலைஞர்கள் சேர்ந்து இசைக்கும் கச்சேரிகளை பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். இரு கலைஞர்களும் தனித் தனியாய் இசைக்கும் கச்சேரிகளில் கிடைக்கும் நிறைவை விட இருவரும் சேர்ந்து இசைக்கும் கச்சேரிகளில் ஏற்படும் நிறைவு சில மாற்றுகள் குறைவென்றே எனக்குத் தோன்றும்.

ஜுகல் பந்திகள் சில சமயங்கள் துவந்த யுத்தமாக மாறி இசையை செவிட்டில் அரையும் நிகழ்வுகளாக மாறிவிடுவதுண்டு. சில கச்சேரிகளிலோ இரு கலைஞர்களும் ரொம்பவே அடக்கி வாசித்துவிடுவதும் உண்டு. இன்னொரு சங்கடம் என்ன்வென்றால், ஹிந்துஸ்தானி கலைஞர் அவர் வழியில் பாடுவார், கர்நாடக கலைஞர் தென்னிந்திய முறையில் பாடாமல் வட நாட்டு வழியிலேயே பாட முயல்வதுண்டு. 23-ம் தேதி சஷாங்கும் ஷாஹித் பர்வேஸும் வாசித்த கச்சேரியில் இருவருமே பூர்ய தனஸ்ரீ-தான் வாசித்ததாக கேட்ட நண்பர் கூறினார்.

இது போன்ற காரணங்களினால் நான் ஜுகல்பந்திகளைத் தவிர்த்துவிடுவேன் என்ற போதும், சில சமயங்களில் அந்தக் கச்சேரிகளுக்கு சென்றுதான் ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுவிடுவதுண்டு. அதற்கு முக்கிய காரணம் ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர் சார்ந்ததாக இருக்கும். கர்நாடக இசைக் கலைஞரை கேட்கும் வாய்ப்பு நிறைய கிடைக்கும். அஜய் சக்ரபர்த்தி போன்ற பாடகர்களைக் கேட்கவும் வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும். ஆனால், சில கலைஞர்கள் சென்னைக்கு வருவதே அபூர்வம். அவர்கள் கச்சேரி நடக்கும் போது ஜுகல் பந்தி கச்சேரி என்ற போதும் தயங்காமல் சென்றுவிடுவதுண்டு.

அப்படி ஒரு கலைஞர்தான் ஜெய்தீர்த் மேவுண்டி. அப்துல் கரீம் கான், பீம்ஸேன் ஜோஷி போன்ற ஜாம்பவான்கள் வந்த கிரானா கரானாவின் எதிர்காலம் இவர்தான். சிறு வயது பீம்ஸேனை கேட்காதவர்கள் இவர் பாடுவதைக் கேட்டுக் கொள்ளலாம். யானை அரபிய குதிரை வேகத்தில் ஓடி நீங்கள் பார்த்ததுண்டா? ஜெய்தீர்த்தின் குரலில் நீங்கள் அதைப் பார்க்கலாம். அவ்வளவு கனத்தில் அவ்வளவு வேகம். யூட்யூபில் அவர் ரோனு மொஜும்தாருடன் வாசித்துள்ள நட்பைரவ் (நம்ம ஊர் ஸரஸாங்கி) விடியோவைப் பார்த்ததிலிருந்து இவர் இசைக்கு நான் அடிமை.

நேற்று பார்த்தசாரதி சபாவில் அபிஷேக் ரகுராமுடன் சேர்ந்து ஜெய்தீர்த் படுவதாக அறிவிக்கப்படிருந்தது.

அபிஷேக் கர்நாடக உலகின் நம்பிக்கை நட்சத்திரம். பாலக்காடு ரகுவும், லால்குடியும் தந்தை வழியாகவும், தாய் வழியாகவும் முன்னோர்களாய் பெற்றிருக்கும் கலைஞர். இளைஞர் என்ற போதும், அதற்குள் தனக்கென்று ஒரு பாணியை வகுத்துக் கொண்டிருக்கிறார். குறிப்பாக ராகம் பாடும் போது, இது வரை கேட்டிராத பல புதிய இடங்களை தேடிப் பிடிக்கிறார்.

’மடி’-யான ஆசாமிகளுக்கு இவர் பாட்டு பிடிக்குமா என்று தெரியவில்லை. புதுமைகளைக் கேட்க மனத்தடை இல்லாதோருக்கு இவர் பாட்டு நிச்சயம் பிடிக்கும்.

நல்ல குரலுடன் நல்ல மூளை அடிக்கடி சேர்வதில்லை. ஜி.என்.பி, பாலமுரளி, சேஷகோபாலன் வரிசையில் இவருக்கு அமைந்துள்ளது.

எல்லாம் சரி. இவ்விரு கலைஞர்களும் தனித்தனியே அற்புதக் கலைஞர்கள்தான் சேர்ந்து பாடும் போது?

பயந்து கொண்டுதான் போனேன். எதற்கும் இருக்கட்டும் என்று கச்சேரிக்கு முன் கேண்டீனில் அடை அவியல் சாப்பிட்டுவிட்டுப் போனேன். ஒரு வேளை கச்செரி எடுபடவில்லை என்றால், அந்த மாலைப் பொழுதில் ஒரு சுகானுபவமாவது கிட்டயதே என்ற நிறைவு இருக்கட்டும் என்ற தற்காப்பு நடவடிக்கை அது. நாரத கான சபாவில் இந்த முறை கெண்டீன் வழக்கம் போல் இல்லை என்று கேள்விப்பட்டேன். அவர்கள் நிச்சயம் பார்த்தசாரதி சபாவில் சாப்பிட்டுப் பார்க்கலாம். குறிப்பாக அடை அவியல் பிரமாதம். பாதாம் அல்வாவும் சூப்பரென்று ஒரு செவி வழிச் செய்தி தெரிவிக்கிறது.

வயிற்றுக்கு உணவிட்ட பின் செவிக்கு உணவிற்காக அரங்கை அடைந்த போது, ஓரளவு நல்ல கூட்டம் கூடியிருந்தது. 6.30 மணிக்கு முன்னரே வந்துவிட்ட கூட்டம், 6.50 வரை திரை விலக்கப்படாததால் கொஞ்சம் சலசலத்தது.

திரை விலகிய போது ஜெய்தீர்த், வயலின், ஆர்மோனியம், தபலா சமேதராய் அமர்ந்திருந்தார். அபிஷேக்கை காணவில்லை. திரை மறைவிலிருந்து ஒரு குரல் வெளியூர் கலைஞர்களை வரவேற்றது. அது அபிஷேகின் குரல் என்று பலருக்குப் புரியாததால், “அபிஷேக் இல்லையா? வெறும் ஹிந்துஸ்தானி கச்சேரியா? இன்னிக்கு வந்தது வீணா?”, என்றெல்லாம் கூட்டம் புலம்ப ஆரம்பித்துவிட்டது. பூர்யா கல்யாண் ராகத்தில் ஜெய்தீர்த் முதலில் பாட, நம்ம ஊர் பூர்வி கல்யாணியை தான் பாடப்போவதாக அபிஷேக் அறிவித்ததை பலர் கவனித்ததாகத் தெரியவில்லை. காதில் வாங்கியவர்கள் மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தியவுடன் கூட்டம் ஆசுவாசப்பட்டது.

இருவரும் தனித் தனியே பாடப் போகிறார்கள் என்று கேட்டவுடன் எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்தது. இருவரும் அவரவர் இஷ்டத்துக்கே பாடலாம். ஒருவர் பாடும் போது மற்றவர் குறுக்கிட மாட்டார். ரொம்ப நேரம் ஒருவரை சும்மா உட்கார வைக்க முடியாது என்பதற்காக கற்பனையைத் துண்டிக்கத் தேவையில்லை. ஒருவர் மிகக் கடினமான சங்கதியைப் பாடிவிட்டால், மற்றவரால் முடிகிறதோ இல்லையோ முயன்றுதான் தீருவேன் என்று பாடி, சில சமயம் சொதப்பவும் தேவையில்லை. இது போன்ற பல சாதகங்கள் தனித் தனியே பாடுவதில் உள்ளன.

என்ன ஒரே பிரச்னை எனில், இப்படிப் பாடினால் அது ஜுகல்பந்தி ஆகாது. இரண்டு மினி கச்சேரிகள் என்று சொல்வதே சரியாக இருக்கும்.

ஜெயதீர்த் மந்திர ஸ்தாயியில் நின்று ஸ்ருதியோடு இணைந்து ஐக்கியமான பின், விளம்பித் பாட ஆரம்பித்தார். ஒவ்வொரு ஸ்வரமாய் நின்று நிதானமாக ராகத்தினுள் மூழ்கினார்.

அவர் பாடும் போது குரலுக்கான ஸ்விட்சை கையில் வைத்திருக்கிறாரோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. கை செல்லும் திக்கிலெல்லாம் குரல் செல்கிரது. கை மேலிருந்து கீழே சென்றால், குரலும் அந்தர் பல்டி அடித்து தார ஸ்தாயியிலிருந்து மந்திர ஸ்தாயி வரை மின்னல் வேகத்தில் செல்கிறது. மந்திர ஸ்தாயி ஷட்ஜத்திலிருந்து தார ஸ்தாயி பஞ்சமம் வரை எந்த ஒரு சங்கடமும் இன்றி சுலபமாக செல்லும் சாரீரம். கேட்கக் கேட்க பரமானந்தமாய் இருந்தது.

துரித காலத்தில், ஜண்டை, வக்ரம், வர்ஜம் என்று எதைப் பாடினாலும் சுஸ்வரமாய் பாடி. அதீத வேகத்திலும் வெளிப்பட்ட அவரது துல்லியம் வார்த்தைகளால் விவரிகக் முடியாதது.

அவர் பாடியதையெல்லாம் அப்படியே வாங்கி வாசித்து, இட்டு நிரப்பிய மைசூர் ஸ்ரீகாந்தும் பாராட்டுக்குரியவர்.

ஜெய்தீர்த் பாடி முடித்ததும், நீண்டதொரு கர கோஷத்தை அவருக்கு அளிக்கும் வேலையில், இதற்குப் பின் இந்த மேடையில் ஒருவர் பாடி ஒப்பேற்ற முடியுமா என்ற ஐயம் தோன்றாமலில்லை.

அந்த ஐயம் அடுத்த ஐந்து நிமிடங்களில் காணாமல் போனது.

அபிஷேக் வழக்கமாய் பாடும் ஸ்ருதியை விட அதிகமான ஸ்ருதியில் பாடினார். இதனால் தார ஸ்தாயியில் அவருக்கு இடைஞ்சல் இருந்ததென்ற போதும், மந்திர ஸ்தாயியில் வெகு சுலபமாக பாட முடிந்தது.

பூர்வி கல்யாணியில், வழக்கமாய் அசைவுடன் ஒலிக்கும் காந்தாரத்தை நிறைய கமகமின்றி பாடி, மந்திர பஞ்சமத்திலிருந்து மத்ய ஸ்தாயி மந்தயமத்துக்குள் நிறைய நேரம் நின்று பாடினார். ஜுகல் பந்தி என்பதற்காக தானும் ஹிந்துஸ்தானி முறையில் இறங்கி விடவில்லை.

கர்நாடக வழக்கம் போலவே, அலாபனையை விளம்ப காலம், மத்யம காலம், துரித காலம் எல்லாம் கலந்தே பாடினார்.

‘ம க ரி ஸ’ என்ற பிரயோகத்தை கமகம் ஏதுமின்று பாடிய போது இது வரை கேட்டிராத பூர்வி கல்யாணியாக ஒலித்தது. ராகத்தில் உத்ராங்கம் செல்லாமல், பூர்வாங்கத்திலேயே ப்;ஆடிய போது நாம் கேட்பது கமனஸரம ராகமோ என்ற எண்ணமும் எழுந்து கொண்டே வந்தது.

தார ஸ்தாயியில் ரிஷபம் வரை சுலபமாகப் பாடிய அபிஷேக், காந்தாரத்தை எட்டிய விதம் மெச்சும் படியாய் அமைந்தது. முதலில் காந்தாரத்தை கண நேரத்தில் தொட்டு வந்தார். பிறகு, அடிக்கடி தொட்டுக் கொண்டு வந்தார். குரல் நிச்சயம் அந்த ஸ்வரத்தை அடைகிறது என்று உறுதி செய்து கொண்ட பின், அங்கு நின்று பாடினார். மூன்று ஸ்தாயிகளையும் இணைத்து, பற்பல இசைக் கோவைகளை மின்னல் வேகத்தில் அவர் அளித்த போது அரங்கே வாயடைத்துப் போனது.

ஆலபானையைத் தொடர்ந்து மூன்று காலங்களில் விஸ்ஹாரமாக தானம் பாடினார்.

முதலில் ஒரு ராகத்தை இருவரும் தனித் தனியே பாடி, அதன் பின் முக்கிய ராகமாக வேறொன்றை இணைந்து பாடுவார்களோ என்ற சந்தேகம் முதலில் இருந்தாலும். இரு வரும் ஒரு ராகம் பாடி முடிக்கவே 2 மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டதால் அந்த சந்தேகம் நீங்கியது.

இரண்டு களை ஆதி தாளத்தில் “உன் தரிசனம் கிடைக்குமோ நடேசா – தயாநிதே” என்ற அதீத எடுப்பு அமைந்த பல்லவியை பாடி, விஸ்தாரமாய் நிரவல் செய்து, திஸ்ர நடையில் பல்லவியை சில ஆவர்த்தங்கள் பாடிய பின், கல்பனை ஸ்வரங்கள் பாடினார்.

ராகம் தானம் பல்லவி ஆகிய மூன்று அங்கங்களிலும் எந்தக் குறையும் வரா வண்ணம் விரிவாகப் பாடினார் அபிஷேக்.

தன் வழக்கமான ஸ்ருதியை விட அதிகமான ஸ்ருதியிலும் தைரியமாக அவர் பாடிய தார ஸ்ஹாயி பிரயோகங்களுக்காகவே அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நீண்ட கரகோஷம் அடங்கிய பின், இருவரும் சேர்ந்து கமாஸிலும், சிந்து பைரவியிலும் சிறு பாடல்கள் பாடினர்.

சிந்து பைரவியில் ஜெய்தீர்த் பர்வீன் சுல்தானா பிரபலப் படுத்திய ‘பவானி தயானி’ பாட, அபிஷேக் அதே தாள கதியில் ஒரு தமிழ்ப் பாடலை பாடினார்.

கச்சேரி முடிந்த போது அரங்கம் Standing Ovation அளித்து தன் நிறைவை வெளிப்படுத்தியது. அரங்கில் கேட்கும் கைதட்டல் என்னுடையதாக இருக்கும் வரை கரகோஷம் எழுப்பிய பின் அரங்கை விட்டு நீங்கினேன் நிறைவாக.

இருவரும் சேர்ந்து பாடப் போவதில்லை என்ற போது, இருவரும் ஒரே ராகத்தைப் பாடியிருக்க வேண்டுமா என்ற எண்ணம் வரும் வழியில் தோன்றியது.

 

Read Full Post »

நேற்று காலை சாஸ்திரி ஹாலில் டி.வி.ராம்பிரசாதின் கச்சேரி. கச்சேரிக்குள் சொல்வதற்கு முன் இரு விஷயங்கள்.

22-ம் தேதி பாரதி ராமசுப்பனுக்கு வயலின் வாசித்த இளைஞரின் பெயர் ராகுல். சாஸ்திரி அரங்கத்தில் கழிப்பறையைப் பூட்டி வைத்துவிடுகிறார்கள் என்று கூறி இருந்தேன். அது தவறு. கீழே இருக்கும் அறைதான் பூட்டி இருக்கிறது. அரங்கிலிருந்து செல்லுமாறு வேறொரு கழிப்பறை இருக்கிறது.

ராம்பிரசாதின் குரலில் அசாத்திய கனம். நல்ல குரல் அமைந்த போதும் அதை வைத்துக் கொண்டு சர்க்கஸ் ஜாலங்கள் செய்ய மாட்டார். கிருதிகளை பாவம் கெடாமல் பாடும் சிலரில் இவரும் ஒருவர்.

நேற்று கச்சேரியை ’வல்லப நாயகஸ்ய’ என்ற பேகடா கிருதியில் ஆரம்பித்தார். இந்த மார்கழி, பாடகர்களைப் பாடாய்த்தான் படுத்துகிறது. யாரைக் கேட்கப் போனாலும் இருமல், தொண்டைக் கட்டு போன்ற உபாதைக்கிடையிலேயே பாடுகின்றனர். ராம்பிரசாத் நன்கு தேர்ந்த கை என்பதால் நன்றாகச் சமாளித்தார். குரல் ஓங்கி ஒலித்தால் போதும், ஸ்ருதி விலகல் பற்றி எல்லாம் கவலை இல்லை என்று ராம்பிரசாத் நினைக்காமல், குரல் ஒத்துழைத்த அளவில் நிறைவாகப் பாடினார்.

ராம்பிரசாத் தார ஸ்தாயியில் பாடுவதில்தான் சங்கடம் இருந்ததே தவிர, மந்த்ர ஸ்தாயி சஞ்சாரங்களை அநாயாசமாகவே பாடுகிறார். சமீப காலத்தில், காதில் ரீங்காரமிட்டு ஒலிக்கும் மந்த்ர பஞ்சமத்தை இவர் குரலில் கேட்டது போல வேறெவரும் பாடிக் கேட்கவில்லை.

கிருதியில் ‘பல்லவ பத’ என்ற வரியில் மலர்ந்த வெவ்வேறு சங்கதிகள் மிகவும் ரசிக்குமபடி அமைந்தன. கிருதியைத் தொடர்ந்து அடுக்கடுக்காய் மத்யம காலத்தில் கற்பனை ஸ்வரங்கள் பாடினார். வயலின் வாசித்த மைசூர் ஸ்ரீகாந்த் பாடகரை நிழலெனத் தொடர்ந்தார். இவரது வாசிப்பில் கிரீச் ஒலியோ, அபஸ்வரமோ மருந்துக்கும் கேட்கக் கிடைக்காது. பேகடாவில் அவர் கொடுத்த ரெஸ்பான்ஸ்கள் கச்சிதமாய் அமைந்தன.

கச்சேரி முடிந்ததும் இவருடன் பேசிக் கொண்டிருந்தேன், 1993-ல் சென்னை சீஸனுக்கு வந்தாராம். கச்சேரிகளைப் பார்த்து மயங்கிப் போய், அப்போது படித்துக் கொண்டிருந்த இஞ்சினியரிங்குக்கு ஒரு முழுக்குப் போட்டுவிட்டாராம். முழு நேரம் இசையை எடுத்துக் கொண்டு, படிப்படியாய் ஜூனியர், சீனியர், சூப். சீனியர் என்று முன்னேறி, இன்று பல சீனியர்களுக்கு வாசிக்கும் முன்னணி வித்வானாக விளங்குகிறார். இளைஞரின் அசுர சாதகம் கைகளில் நன்கு வெளிப்படுகின்றன. சீஸனில் நாளுக்குக் குறைந்த பட்சம் இரண்டு கச்சேரிகளாவது வாசிக்கிறார். வருங்காலத்தில் இன்னும் பல உயரங்களை இவர் தொடப்போவது உறுதி.

பேகடாவுக்குப் பின் தேனுகாவில் ‘தெலியலேனு ராமா’ பாடினார் ராம்பிரசாத். விறுவிறுப்பு என்ற பெயரில் வேகத்தின் பின் ஓடாமல், குளிரும் இல்லாத வெயிலும் இல்லாத காலைப் பொழுதின் ஏகாந்தத்தை ஒத்து தன் கச்சேரியை அமைத்துக் கொண்டார் ராம்பிரஸாத். தேனுகா பாடலின் காலபிரமாணம் மத்யம காலம் என்ற போதும், ராம்பிரசாத் பாடிய போது அதில் நிதானம் பிரதானமாய் தெரிந்தது. சமயத்தில், ஆங்காங்கே அவர் போட்ட பிருகா சங்கதிகள் அவர் குரல் வளத்தை வெளிப்படுத்தின. சங்கதியே வராத போதும், கை அபிநயங்களின் மூலமும், முக பாவனைகள் மூலமுமே தேவையற்ற இடங்களில் கூட பிருகாக்களை அள்ளி வீசுபவர்களுக்கிடையில் நல்ல ரவை சங்கதிகள் பேசும் குரல் இருந்தும், அதைத் தேவையற்று உபயோகிக்காத ராம்பிரசாத் போற்றப்பட வேண்டியவர். பாடல்களில் வார்த்தை உச்சரிப்பும் மெச்சத் தக்கதாக அமைந்தது.

தேனுகா உருவாக்கிய ஏகாந்த நிலையைக் குலைக்கா வண்ணம் கானடாவை முதல் முக்கிய ராகமாக எடுத்துக் கொண்டு ஆலாபனை செய்தார். நல்ல ஸ்ப்ரிங் மெத்தையினமேல் குதிப்பது போன்று காந்தாரத்தில் அசைவுடன் முடியுமாறு அவர் பாடிய பல சங்கதிகள் மெச்சும்படி அமைந்தன. மேல் நோக்கிச் செல்லும்போது, குரலின் அளவைப் பாதிக்கும் குறைவாய்  ஒலிக்கச் செய்த, தார ஷட்ஜத்தோடு கலந்து ஸ்ருதியில் இருந்து இம்மி பிசகாது இணைந்தது உறுதியானவுடன், குரலைக் கொஞ்சம் கொஞ்சமாய் பெரிதாக்கி, நிறைய சங்கதிகள் பாடினார். தோடியும், பூர்வி கல்யாணியும் கோலோச்சும் சீஸனில், விஸ்தாரமான கானடா ஒரு நல்ல மாறுதல்.

மைசூர் ஸ்ரீகாந்தின் ஆலாபனையும் கச்சிதமாய் அமைந்தது.

ஆலாபனைக்குப் பின் ஸ்வாதி திருநாளின் ‘மாமவ ஸதா’ பாடினார். ‘மஹிஷாசுரசூதனி’ என்ற இடத்தில் சுருள் சுருளாய் அவர் அமைத்த பிருகா கலந்த சங்கதிகள், பல்லவிக்கு பிரம்மிப்பான கிளைமாக்ஸாக முடிந்தன. நிரவலுக்குப் பல்லவி வரியையே எடுத்துக் கொண்டார். எம்.எஸ் ‘ஸொகஸுகா ம்ருதங்க’ பாடலில் பல்லவியில் நிரவல் செய்ததைக் கேட்ட பின், இன்றுதான் ஒருவர் பல்லவியை நிரவலுக்கு எடுத்துக் கொள்வதைக் கேட்கிறேன்.

முதல் முக்கிய ராகத்துக்கு இரண்டாம் முக்கிய ராகத்துக்கும் இடையில் ’எந்தவேடுகொந்து ஓ ராகவா’ பாடினார். இதற்குள் அவர் குரலும் நல்ல பதமடைந்துவிட ‘சிந்த தீர்ச்சுட’ போன்ற தார ஸ்தாயி வரிகளை சுலபமாக, நிறைவாகப் பாடினார்.

மெயின் ராகமாக மாயாமாளவகௌளையைத் தேர்வு செய்து விஸ்தாரமாக ஆலாபனை செய்து, ‘மேருசமான’ பாடினார். ‘கலமுன ஷோபில்லு கனக பூஷணமுல’ என்ற இடத்திற்கு பாடிய ஸ்வரங்கள் வெகு நாட்கள் நினைவில் இருக்கும். மற்ற கிருதிகளுக்கு பெரும்பாலும் ஸர்வ லகுவாகவே ஸ்வரம் பாடியவர், இந்தப் பாடலில் சில கணக்குகள் வைத்து ஸ்வரம் பாடினார். அப்படிப் பாடிய போதும், ராக பாவம் கெடாமல் பாடியதுதான் தனிச் சிறப்பு. மைசூர் ஸ்ரீகாந்த் பெரும்பாலும் ராம்பிரசாத் பாடியதை அப்படியே வாசித்தார். சிறசில இடங்களில், தன் கற்பனையையும் சேர்த்து சில மாற்றங்களுடன் ஸ்வரங்களை மிளிரச் செய்தார்.

கச்சேரி முழுவதும் உமையாள்புரம் மாலியின் வாசிப்பு இடைஞ்சலின்றி அமைந்தது. மிருதங்கத்தின் தொப்பி தாழ்ந்து ஒலித்தால், அதன் சுநாதமே தனிதான். நேற்றைய கச்சேரியில் அவரது தொப்பி தாழ்ந்து, சமயங்களில் அவர் கொடுத்த கும்காரங்களில் நீண்டு ஒலித்து கச்சேரிக்கு வலு சேர்த்தது. தனி ஆவர்த்தனத்திலும் நீட்டி முழக்காமல், 5 நிமிடங்களுக்குள், சில கோர்வைகள், நடையை மாற்றி சில ஆவர்த்தங்கள், ஃபரன்கள் வாசித்து கோர்வை முடித்து நிறைவு செய்தார். கடைசியில் வாசிக்கும் மோராவை வழமையான ஒன்றாக வாசிக்காமல், சற்றே வித்தியாசமாக வாசித்தது நன்றாக இருந்தது.

சிந்து பைரவி ராகத்தில் ’தம்பூரி மீட்டிதவா’ என்ற புரந்தரதாசர் கிருதியுடன் கச்சேரியை நிறைவு செய்தார். ‘கெஜ்ஜையே கட்டிதவா’ என்ற வரிகளில் அவர் பாடிய சங்கதிகள் வெகு அற்புதமாய் அமைந்தன.

கச்சேரி முடிந்ததும், இந்த சீஸனில் இவரது இன்னொரு கச்சேரியைக் கேட்டுவிட வேண்டும் என்ற எண்ணத்தில், வேறெங்கு பாடுகிறார் என்று விசாரித்தேன். இந்த டிசம்பரில் இதுதான் அவருக்குக் கடைசி கச்சேரியாம். அடுத்து ஜனவரியில்தான் பாடுகிறாராம். என்னய்யா அநியாயம்  இது?

ஒரு பக்கம் நேற்று பிறந்த நண்டு சிண்டுகளை எல்லாம் ஊக்கு விக்கிறேன், ஊசி விக்குறேன் என்று கச்சேரிகளை அள்ளித் தெளிப்பது இருக்கட்டும், ராம்பிரசாத் போன்ற உழைப்பு, பாடாந்திரம், வித்வத் எல்லாம் நிறைந்திருக்கும் கலைஞர்களுக்கு வாய்ப்பை முதலில் அளியுங்கள்.

Read Full Post »