Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘Neyveli Narayanan’

வருடா வருடம் பரிவாதினி கச்சேரிகளை ஒருங்கிணைப்பது எவ்வளவுக்கெவ்வளவோ மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்றோ அதே அளவுக்கு ஆயாசம் அளிக்கும் வேலையும்கூட. இருப்பினும், மண்டி வரும் சோம்பலை உலுக்கித் துரத்த வைக்க வருடாந்திர பர்லாந்து விருதை நினைத்தாலே போதும். மனம் குதூகலிக்கத் தொடங்கிவிடும். அதிகம் கண்டுகொள்ளப்படாத விருதுதான் என்றாலும் என்னளவில் பெருமகிழ்ச்சியை அளிக்கும் நிகழ்விது. வருடம்தோரும் வாத்தியம் செய்யும் ஒரு வினைஞரை கௌரவித்து அவரை வாழ்நாள் நண்பராக்கிக் கொள்ளும் தருணமது.

இந்த வருடம் கஞ்சிரா மேதை ஹரிசங்கர் அவர்களின் அறுபதாவது பிறந்த வருடம் என்பதால், அவருக்கு வாத்தியங்கள் செய்து கொடுத்த வினைஞரை கௌரவிக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. ஹரிசங்கர் அவர்களின் சீடர்களுடன் பேசுகையில் திரு.முருகானந்தமே ஹரிசங்கருக்கு வேலை செய்த வினைஞர்களுள் முதன்மையானவர் என்று தெரிய வந்தது. அவருடைய மகன் நவநீதம் சென்னையில் மிருதங்கவேலை செய்து வருகிறார் என்கிற தகவலும் கிடைக்க – கூகிள் உபயத்தில் நவநீதத்தின் தொலைபேசி எண் கிடைத்தது. அவரிடம் பேசுகையில் முருகானந்தம் இப்போது தொழிலிலிருந்து ஓய்விபெற்று தன் சொந்த ஊரான வலங்கைமானில் உள்ளார் என்று தெரிய வந்தது.

DSC_0097

வலங்கைமான் என்ற பேரைக் கேட்டதுமே அந்த ஊர் சங்கீதத்துக்கு அளித்த தவில் மேதை சண்முகசுந்தரம் அவர்களின் வாசிப்பு காதில் ஒலித்தது. குறிப்பாக மேண்டலின் ஸ்ரீனிவாஸுக்கு அவர் வாசித்த கச்சேரிகள்! மேண்டலின் ஸ்ரீனிவாஸ் உச்சிக்கு வரும்போது நிறைய வீடுகளில் மங்கலவாத்யமாக டேப்ரிக்கார்டர்களில் ஒலித்துக் கொண்டிருந்த நாகஸ்வரத்தின் இடத்தை மேண்டலின் பிடித்துக்கொண்டது. அதற்கு முக்கிய காரணம் சண்முகசுந்தரம் அவர்களின் வாசிப்பு என்பது என்னுடைய துணிபு. மேண்டலினின் இனிமையான நாதத்தையும், விறுவிறுப்பான காலபிரமாணத்தையும் மீறி அந்த ஒலிநாடாக்களுக்கு மங்கல வாத்யத்தின் தன்மையைக் கொடுத்ததில் தவிலின் நாதத்திவலைகளுக்கும் முக்கியப்பங்கு உண்டு.

இந்த எண்ணங்களை எல்லாம் அசை போட்டபடி முருகானந்தம் அவர்களை அழைத்து அவருக்கு விருது வழங்க விரும்பவதைச் சொன்னேன். “எனக்கு விருதா? நான் அப்படி ஒன்னும் பண்ணலியே”, என்றவரிடம் ”ஹரிசங்கரின் அறுபதாவது பிறந்த ஆண்டில் உங்களுக்கு கொடுப்பதுதான் சரியாக இருக்கும்”, என்றவுடன் ஒப்புக் கொண்டார்.

அதன்பின் அவரை வலங்கைமானில் சென்று காண நான் திட்டமிட்ட போதெல்லாம் ஏதோவொரு காரணத்தால் தட்டிக்கொண்டே போனது. விருது கொடுக்க இரண்டு நாட்களே உள்ள நிலையில் தொலைபேசியிலாவது அவரிடம் பேட்டி எடுத்தவிடலாம் என்று இன்று அழைத்தேன்.

எனக்குவோர் இன்ப அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

“என்னை அப்பா தவில் கத்துக்க சொன்னாங்க. நான் மாட்டேனுட்டேன். நாகஸ்வரம் கத்துக்கப் போனேன்.”, என்று பேட்டியைத் தொடங்கினார்.

பெரும்பாலும் வாத்தியம் செய்யும் வினைஞர்களுக்கு இசைப்பயிற்சி இருப்பதில்லை என்பதால் எனக்கு ஆவல் மிகுந்தது.

“அப்பாவுக்கு தவிலில் ஆர்வமா?”

“என்ன இப்படி கேட்கறீங்க. அவரு பெரிய வித்வானாச்சே”

என் ஆவல் அடுத்த நிலையை எட்டியது.

“ஐயா பேரென்னங்க…”

“வலங்கைமான் சண்முகசுந்தரம்….”

“ஆ!!!…”

தூக்கிவாரிப் போட்டது. என்னை சிறுவயதில் இசையின் பால் இழுத்த அந்த வாசிப்புக்கு சொந்தக்காரரின் வாரிசுக்கு விருதளிக்கப் போகிறோம் என்றெண்ணி புளகாங்கிதமடைந்தேன்.

“இவ்வளவு நாளா அவர்தான் உங்க அப்பானு தெரியாம இருந்துட்டேன். மேண்டலினுக்கு அவர் வாசிச்ச பதிவுகளை டேப் தேயத் தேயக் கேட்டிருக்கேன்.”

“அவர் வாசிப்பு பெரிய வாசிப்பு. நானும் வாசிச்சு அந்த அளவுக்கு வரலைன்னா அவர் பேர் கெட்டுபோயிடும்-னு தவில் கத்துக்கமாட்டேனுட்டேன்.”

“அதனால நாகஸ்வரம் கத்துக்கிட்டீங்களா?”

“ஆமாம். ஆண்டான்கோயில் செல்வரத்தினம் எனக்கு தாத்தா முறை. வயசு வித்தியாசம் அவ்வளவு இல்லைனாலும் முறைப்படி தாத்தா. அவர்கிட்ட கத்துகிட்டேன். கோயில்ல எல்லாம் வாசிச்சுப் பழகுவேன். பதினைஞ்சு வயசிருக்கும் போது கொஞ்டம் உடம்பு சரியில்லாம போச்சு. டாக்டர் பாத்துட்டு இதயம் வலுவில்லாம இருக்கு. நாகஸ்வர பயிற்சி கூடாதுனு சொல்லிட்டாரு.”

“அதுனால வாத்தியம் பண்ண ஆரம்பிச்சீங்களா?”

“இல்லை. அம்மையப்பன், வலங்கைமான்-ல எல்லாம் கொஞ்சம் நிலமிருந்தது. அதைப் பார்த்துகிட்டு இரண்டு வருஷம் விவசாயம் பண்ணினேன்”

“அப்புறம் எப்படி இந்தத் தொழிலுக்கு வந்தீங்க?”

“என் தங்கையை மிருதங்க வித்வான் தஞ்சாவூர் உபேந்திரனுக்கு கொடுத்திருந்தோம். அவர் தொழில்ல முன்னேறி சென்னைக்கு குடிபோயிட்டாரு. அவர்தான் என்னையும் சென்னைக்கு வரச் சொன்னாரு.”

தஞ்சாவூர் உபேந்திரன் இன்று முன்னணியில் விளங்கும் கலைஞர்களை மட்டுமல்ல, ஓர் அற்புதமான வினைஞரையும் இசையுலகுக்கு இட்டு வந்திருக்கிறார்.

“அவருக்கு அப்போ ராமகிருஷ்ணன்-னு வண்ணாந்துறையில ஒருத்தர் மிருதங்க வேலை செஞ்சுகொடுத்துகிட்டு இருந்தார். அவர் அண்ணனும் பக்கத்துலையே கடை வெச்சு இருந்தார். அவங்க கிட்ட வேலை செய்ய ஆரம்பிச்சேன். தவில்ல இப்பதான் நட் போல்ட் போட்டு முடுக்கறோம். அப்பல்லாம் வார் பிடிக்கணும். அது அவ்வளவு சுலபமான வேலையில்ல. அப்பாவுக்காக நான் பலமுறை வார்பிடிச்சு கொடுத்து இருக்கேன். அந்த அனுபவத்துனால மிருதங்கத்துக்கு வார்பிடிக்கறது, மூட்டு அடிக்கறது எல்லாம் சுலபமாவே வந்துடுச்சு. கொஞ்ச நாள்ல நானே சொந்தமா கடைவெச்சுட்டேன்.”

“உங்க கடை எங்க இருந்தது?”

“மாதவ பெருமாள் கோயில் பக்கத்துல. அங்க வேதமூர்த்தி-னு ஒரு மெக்கானிக் கடை வெச்சு இருந்தார். அவருக்கு சங்கீதம்னா உயிர். அவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டு, அவர் கடையிலேயே பாதியை எனக்குக் கொடுத்தார். அங்கதான் என் தொழில் தொடங்கிச்சு.”

இசை எப்படி சம்பந்தமில்லாத இருவரை இணைக்கிறது என்று வியந்தபடியே அடுத்த கேள்வுக்குச் சென்றேன்.

”தஞ்சாவூர் உபேந்திரனுக்குதான் முக்கியமா மிருதங்கம் செஞ்சுகொடுக்க ஆரம்பிச்சீங்களா?”

“இல்லையில்லை! அவர் சிஷ்யர் நெய்வேலி நாராயணனுக்குதான் முதல்ல செஞ்சு கொடுத்தேன். அப்புறம் இன்னொரு சிஷ்யர் முருகபூபதிக்கு செஞ்சு கொடுத்தேன். அப்படி கொஞ்சம் கொஞ்சமா என் நிறைய பேருக்கு செய்ய ஆரம்பித்தேன். காரைக்குடி மணி, திருவாரூர் பக்தவத்சலம், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ்-னு நிறைய பெரிய வித்வான்களுக்கு செஞ்சு கொடுத்திருக்கேன்.”

”ஹரிசங்கர் அவர்களை எப்படி சந்திச்சீங்க?”

“அவரை உபேந்திரன் அத்தான்தான் வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்தாங்க. மேடலின் கச்சேரிக்கு அப்போ இவங்க எல்லாம்தான் செட்டு. அப்பா, அத்தான், ஹரிசங்கர், விநாயக்ராம் சேர்ந்து வாசிப்பாங்க. பல ஊர்கள்ல, கல்யாணங்கள்ல கச்சேரி நடக்கும். அப்படி சந்திச்சுப் பழக்கம். அப்பா மேல ஹரிசங்கருக்கு ரொம்ப மரியாதை. என்கிட்டையும் ரொம்ப பிரியமா நடந்துப்பாங்க.”

“கச்சேரிகள் நிறைய கேட்டு இருக்கீங்க. உங்களைக் கவர்ந்த கச்சேரி?”

“நிறைய போவேன். எல்லாம் கேட்பேன். அதுக்கு மேல சொல்ற அளவுக்கு நுணுக்கமெல்லாம் தெரியாது. பாட்டைவிட கலைஞர்களைப் பார்த்து பழகறதுலதான் எனக்கு கவனமிருந்தது.”

”ஹரிசங்கருக்குனு ப்ரத்யேகமா ஏதாவது செய்யச் சொல்லுவாரா?”

“அப்படி ஒண்ணும் இல்லை. அவர் முக்கியமா என்கிட்ட தோலைத்தான் வாங்கிப்பாரு. நான் கட்டையில் ஒட்டிக் கொடுத்த வாத்தியங்களும் அவர் வாங்கிக்கிட்டிருந்தாலும் அவருக்கு அவரே தோலை ஒட்டினாத்தான் பிடிக்கும். ஃபெவிக்காலை வெச்சு ஒட்டறது அவருக்குப் பிடிக்காது. சாதத்தை வெச்சே ஒட்டிப்பாரு. அது அவருக்குத்தான் முடியும்.”

“கஞ்சிராவுக்கு அப்பல்லாம் உடும்புத் தோல் உபயோகிச்சீங்க இல்லையா?”

“ஆமாம். அதுலதான் அந்த நாதம் கிடைக்கும். வேற தோலுல கிடைக்காது. எஙக் ஊர்ல, வேதாரண்யத்துல, ஆடுதுறைல எல்லாம் மாமிசத்துக்காக உடும்பு அடிப்பாங்க. அதனால் தோல் சுலபமா கிடைக்கும்.”

“இப்ப உடும்பு அடிக்கறது தடை பண்ணிட்டாங்களே”

“ஆமாம்.”

“இப்ப என்ன தோலு உபயோகிக்கறீங்க?”

“நான் தொழில் பண்ணின வரைக்கும் உடும்புதோல்தான் உபயோகிச்சேன். இப்ப என்ன பண்றாங்கனு தெரியலை”

”ஹரிசங்கரோட அறுபதாவது பிறந்த வருடமிது, அவரைப் பற்றி வேற எதாவது சொல்ல விரும்பறீங்களா?

“அவருக்கும் எனக்கும் முதலாளி தொழிலாளி உறவில்ல. நண்பர்கள் மாறிதான் பழகினோம். அவரும் நானும் அடிக்கடி வெத்தலை கடையில சந்திச்சுப்போம். அவர் அன்பா பழகினதை வாழ்நாள் முழுக்க மறக்கமுடியாது.”

“இந்த விருதை மிருதங்கம் செய்வதுல நிபுணரா இருந்த பர்லாந்து அவர்கள் பேருல கொடுக்கறோம். அவரை நீங்க சந்திச்சதுண்டா?”

“ஒரு முறை பார்த்து இருக்கேன். உபேந்திரன் அத்தான் தஞ்சாவூர்ல இருந்தபோது அவர் வீட்டுக்கு வந்து பர்லாந்து வேலை செய்வாரு. அப்ப பார்த்து இருக்கேன். அன்னிக்கு எனக்குத் தெரியாது நானும் இந்தத் தொழிலுக்குத்தான் வருவேன்னு.”

“ஒரு பெரிய இசை பரம்பரைல வந்த நீங்க வாத்தியங்கள் செய்யறதை தொழிலா எடுத்துக்கிட்டீங்க. இப்ப உங்க வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் போது நிறைவா இருக்கா?”

“நிச்சயமா நிறைவா இருக்கு. இந்தத் தொழில்தான் என்னை ஒருமனுஷனா ஆக்கி இருக்கு. எந்தக் குறையுமில்லாம நிம்மதியா இருக்க வெச்சிருக்கு. என்  பசங்க – நவநீதம், தனபால் – ரெண்டு பேரும் இன்னிக்கு இந்தத் தொழில்தான் பண்ணிகிட்டு இருக்காங்க”

நான் பர்லாந்து அவர்களைப் பார்த்ததில்லை. அவர் மகன் செல்வத்தைப் பார்த்து கௌரவித்த போது பர்லாந்து அவர்களையே பார்த்த உணர்வு ஏற்பட்டது. இன்னும் இரண்டு நாட்களில் முருகானந்தம் அவர்களைப் பார்க்கும் போது மேதை வலங்கைமான் சண்முகசுந்தரம் அவர்களையே பார்த்த நிறைவு ஏற்படும் என்று தோன்றியது. அந்த மகிழ்ச்சியில் துளிர்த்த புன்னகையோடு பேட்டியை முடித்துக்கொண்டேன்.

நன்றி: இன்மதி.காம்

Read Full Post »

கர்நாடக சங்கீதத்தில் இவர்கள் கச்சேரி எங்கு நடந்தாலும் நிச்சயம் சென்று கேட்பேன் என்று சொல்லும் வகையில், மூன்று பேர் என் பட்டியலில் உண்டு. ஒருவர் அபிஷேக் ரகுராம், மற்றவர் அம்ருதா வெங்கடேஷ், மூன்றாமவர் மதுரை டி.என்.எஸ்.கிருஷ்ணா.

பொதுவாக, ஒரு பாடகரைப் போலவே இன்னொருவர் பாடினால், originality இல்லை என்று குறை கூறுவது வழக்கம்.

அவர் பாடுவதை கண்ணை மூடிக் கேட்டால் இள வயது சேஷகோபாலன் பாடுவது போலவே இருக்கிறது. இருந்தாலும், கிருஷ்ணாவை வழக்கம் போல குறை கூற முடியாது. ஏனெனில், ஒரு கிரிக்கெட் வீரரை இவரது ஆட்டம் டெண்டுல்கரைப் போலவே உள்ளது என்று சொன்னால் அது குறையாக இருக்குமா? ஒரு டென்னிஸ் வீரரின் பேக்-ஹேண்ட் ரோஜர் ஃபெடரரைப் போலவே உள்ளது என்று சொன்னால் அது குறையாகுமா? அது போலத்தால் கிருஷ்ணா பாடுவது சேஷகோபாலன் பாடுவது போலவே உள்ளது என்று சொல்வதும் குறையாகாது. இன்னும் சொல்லப் போனால், சேஷகோபாலனுக்குப் பின்னும் அவர் பாணி சங்கீதத்தை அதே வீச்சோடு (இதுதான் முக்கியம்) கேட்க முடியும் என்பதே இசை ரசிகர்களுக்கு ஒரு நற்செய்திதான்.

இந்த வருடம் பல இளைஞர்களுக்கு அகாடமி ப்ரைம் ஸ்லாட் அளித்தபோது, இவரையும் அந்தப் பட்டியலில் சேர்க்காததில் வருத்தமே. அந்த வருத்தம், நேற்று காலை இவர் கிருஷ்ண கான சபையில் பாடிய போது அதிகரித்தது.

காலை வேளை கச்சேரிகளை, போன வருடம் போல டிக்கெட் கச்சேரியாக வைக்காமல், மினி ஹாலில் ஃப்ரீ கச்சேரியாக இந்த வருடம் வைத்திருப்பது நல்ல விஷயம். அரங்கம் சின்னதென்பதால் ஈயடித்தாற் போல் காட்சியளிக்கவில்லை. டிக்கெட் இல்லை என்பதால், ஓரளவு கூட்டமும் இருந்தது.

நேற்று உடன் வாசித்தவர்கள் டில்லி சுந்தர்ராஜன் (வயலின்), நெய்வேலி நாராயணன் (மிருதங்கம்), பேப்பரில் கடம் வாசிப்பதாக செய்தி வரவில்லை என்ற போதும் நேற்று கடம் வித்வானும் கச்சேரியில் வாசித்தார். அவர் பெயரை கேட்க மறந்துவிட்டது.

கச்சேரியை நவராகமாலிகை வர்ணத்தில் தொடங்கினார். சிட்டை ஸ்வரங்களுக்குப் பின், ஒன்பது ராகங்களிலும் கல்பனை ஸ்வரங்கள் பாடியது நல்ல விறுவிறுப்பான தொடக்கத்தை அளித்தது. ஒரு ராகத்திலிருந்து இன்னொரு ராகத்துக்குத் தாவும் அநாயாசம் பெரிதும் கவர்ந்தது.

’மேரு ஸமான’ பாடலில் அடுக்கடுக்காய் நிறைய சங்கதிகள் கிருஷ்ணா போட, அதை பெரும்பாலும் சரியாக ஊகித்து வாசித்தார் நெய்வேலி நாராயணன். பாடலின் பல்லவியில் பாடிய கல்பனை ஸ்வரங்களில் சௌக்யமும் இருந்தது விவகாரமும் இருந்தது. ஸ்வரத்தை முடிக்கும் போது வைத்த கோர்வை – fitting climax.

நேற்று கிருஷ்ணா பாடிய ஹம்ஸநாதம் அதிகம் கேட்கக் கிடைக்காதது. ஹம்ஸநாதத்தின் உண்மையான வடிவில் தைவதம் உண்டு. காலப்போக்கில் அந்த தைவதம் தொலைந்து விட்டது. இது எஸ்.ஆர்.ஜானகிராமன் போன்ற ஆய்வாளர்கள் ஒப்புக் கொண்டது. தஞ்சாவூர் கல்யாணராமன் போன்றோர் இந்த தைவத்ததுடனேயே இந்த ராகத்தைப் பாடியுள்ளனர் என்ற போதும் கச்சேரியில் இதைக் கேட்பது அபூர்வம். நேற்று கிருஷ்ணா சிறு கோட்டோவியமாய் ராகத்தை தெளிவாக சில நிமிடங்களுள் ஆலாபனை செய்து, முத்தையா பாகவதரின் ‘கிருபாநிதே’ பாடினார். ஆலாபனையிலும், கிருதியிலும், சிட்டை ஸ்வரங்களிலும் கிருஷ்ணா அந்த தைவத்தை மிக நேர்த்தியாய் கையாண்டார்.

நேற்றைய பிரதான ராகம் மோகனம். கிருஷ்ணாவின் குரல் மந்திர பஞ்சமத்தில் இருந்து, தார பஞ்சமம் வரை சுலபமாக சஞ்சரிக்கிறது. டி.என்.எஸ் பாணி ஆலாபனையில், ராகத்தின் மையத்தை ஓரிடத்தில் நிறுத்தி, அந்த மைத்தை வெவ்வேறு இடத்தில் இருந்து தொடுவது சிறப்பம்சமாகும். உதாரணத்துக்கு மோகனத்தின் தைவதத்தில் ஆலாபனையின் மையத்தை நிறுத்தி, அந்த தைவதத்தை ‘க-த’, ‘ரி-த’, ‘ஸ-த’ என்று மத்ய ஸ்தாயி ஸ்வரங்களில் இருந்தும் தார ஸ்தாயி ஸ்வரங்களில் இருந்தும் தொடும் போது, எண்ணற்ற பரிமாணங்கள் பிறந்து கொண்டே இருக்கும். Linear exposition-க்குள் non-linear exposition-ம் பொதிந்திருப்பது இந்தப் பாணிக்கே உரிய தனிச் சிறப்பு. இப்படி பாடுவதை கேட்டுப் புரிந்து கொள்வதற்கே நிறைய கவனம் தேவை என்னும் போது, அதைப் பாட எத்தகைய நிர்ணயமும் துல்லியமும் தேவை என்பதை உணர்ந்து கொள்ளலாம். இது போன்ற கற்பனைகளை அள்ளிக் கொடுக்கும் அறிவு பலருக்கு உண்டு எனினும், அதை குரலில் சாத்தியமாக்குவது சிலருக்குத்தான் முடிகிறது. அந்த வகையில் கிருஷ்ணா புண்ணியம் செய்தவர். அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் குரல் செல்கிறது.

அடிக்கடி கேட்கக் கிடைக்கும் பாடல்களைப் பாடாமல், தஞ்சாவூர் ராமஸ்வாமி பிள்ளையின் ‘ஜெகதீஸ்வரி’ பாடினார். மோகனத்தின் தைவதத்தைக் கொஞ்சிய படியே ஒலிக்கும் சிட்டை ஸ்வரத்தையும், சரணம் முடிந்ததும் அந்த சிட்டை ஸ்வரங்களுக்கு உரிய சாஹித்யத்தையும் கிருஷ்ணா வெகு அற்புதமாகப் பாடினார். வேறெந்த மோகன கிருதிக்கும் குறைச்சல் இல்லை என்னும் படியாக மிளிரும் இந்தத் தமிழ்ப் பாடலை இன்னும் நிறைய பேர் பாடலாம்.

‘கதி என்று நம்பினோரை காப்பதே உன் வைராக்யம்’ என்ற வரியில் விஸ்தாரமாய் இரண்டு காலங்களில் நிரவல் பாடிய பின் கல்பனை ஸ்வரங்கள் பாடினார். அவற்றில் சில ஆவர்த்தங்கள் முழி பிதுங்கும் கணக்குகளும் அடக்கம்.

பாடல்களிலும் சரி, தனியிலும் சரி நெய்வேலி நாராயணனின் மிருதங்கம் சுநாதமாய் ஒலித்தது.

தனி முடியும் போது கச்சேரி முடிய 30 நிமிடங்களே எஞ்சி இருந்தன.

அப்போது ஹேமவதி ராகத்தை எடுத்து பத்து நிமிடங்கள் விஸ்தாரமாக ஆலாபனை செய்தார், நேரம் இருந்தால் இன்னும் ஒரு மணி நேரத்துக்குக் கூட ஆலாபனை செய்வார் என்றே தோன்றியது. நேரம் இல்லாதததால் வயலினில் பேருக்கு வாசித்து முடித்தார் டில்லி சுந்தரராஜன்.

சில நிமிட தானத்துக்குப்பின், மிஸ்ர திரிபுடையில் பல்லவி பாடினார்.

என்னுடைய யூகம் யாதெனில், இந்தப் பல்லவியை இரண்டு களையில் தயாரித்துக் கொண்டு வந்திருக்க வேண்டும்.

நேரம் இல்லாததால் ஒரு களைக்குத் தாவினார்.

விரைவாகப் பாட வேண்டி இருந்ததால் சாஹித்யம் செம உதை வாங்கியது. சாஹித்யம் தமிழில் என்பதால், அது சிதைகிறது என்பதை ரசிகர்களால் உணர முடிந்தது.

“இட்ட மருந்தென்னவோ அறியேன் – கண்ணே பெண்ணே நீ” என்ற சாஹித்யத்தில் கண்ணே, பெண்ணே தவிர ஒன்றுமே விளங்கவில்லை. கீழ் காலத்தில் பல்லவியை பாடிய போதுதான் கொஞ்சம் புரிந்தது. கடிகாரத்தைப் பார்த்த படியே பல்லவியையும், ஸ்வரங்களையும் பாடி முடித்தார்.

இவ்வளவு நன்றாகப் பாடிவிட்டு, கிருஷ்ணா சாஹித்யத்தை சிதைப்பவர் என்ற அவப் பெயரை வாங்கியிருந்திருக்க வேண்டாம். அதற்கு முன் பாடிய பாடல்கள் அனைத்திலும் சாஹித்யம் நன்றாகத்தான் புரிந்தது. இரண்டு மணி நேரத்துக்குள் விஸ்தாரமாக ஒரு ராகத்தை நிரவல் ஸ்வரங்களுடனும் பாடிவிட்டு, ராகம் தானம் பல்லவியும் பாடுவது முடியாத காரியம். அதை தவிர்த்திருந்தால், இந்த அவசர ப்சமையலை தவிர்த்திருக்கலாம்.

அரங்கில் சிலருக்கு இதனால் அதிருப்தி என்ற போதும் எனக்கு அது குறையாகத் தோன்றவில்லை.

பல்லவிக்குப் பின், ‘வந்து கேட்பார் இல்லையோ’ என்று பாடியபோது என் மனத்திலும் அந்த வரிகளே தோன்றின. இந்த சங்கீதத்தைக் கேட்க இவ்வளவு பேர்தானா? கூட்டம் கூட்டமாக ‘வந்து கேட்பாரில்லையே’ என்ற வருத்தமும் மேலிட்டது.

அடுத்த வருடமாவது இந்த இளைஞருக்கு ப்ரைம் ஸ்லாட் கிடைக்க வேண்டும். ப்ரைம் ஸ்லாட் கிருஷ்ணாவுக்கு பெயரையும் புகழையும் கொடுக்கும் என்பதை விட, நினைத்ததைப் பாடும் அளவிற்கு நிச்சயம் அவகாசத்தை அளிக்கும்.

ஓர் அற்புதமான கச்சேரியுடன் என் டிசம்பர் நிறைவுக்கு வந்தது.

இந்த சீஸன் கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து, ஊக்கம் அளித்த அனைத்து வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

Read Full Post »

இவர் கச்சேரிக்கு நம்பிப் போகலாம், minimum guarantee சங்கீதம் என்று சிலரைத்தான் சொல்ல முடியும். ஒரு சிலர் ஷேவாக் ஆட்டம் போல. ஒரு நாளைக்கு 300 ரன்னும் கிடைக்கும் அடுத்த நாள் முதல் பாலை தெர்ட் மேனில் கைக்கு அப்பர் கட் செய்வதும் நடக்கும். வேறு சிலர் மைக் ஹஸ்ஸி ரகம். எந்த ராஜா எந்தப் பட்டினம் போனாலும், ஆட்டம் முடியும் போது 50 ரன்களாவது இவர் பெயருக்கு எதிரில் வந்துவிடும். அந்த ரக பாடகர்களுள் ஒருவராக ஓ.எஸ். தியாகராஜனைக் கூறலாம். கடந்த பத்து வருடங்களில் 20 முறையாவது இவரை நேரில் கேட்டிருப்பேன். ஒரு கச்சேரி கூட சோடை போய் நான் கேட்டதில்லை.

நேற்று சிருங்கேரி மடத்தில் எம்.எஸ்.என்.மூர்த்தி, நெய்வேலி நாராயணன் சகிதம் ஓ.எஸ்.டி கச்சேரி. அரங்கில் எதிரொலி அதிகம் என்ற போதும் சூழல் ரம்மியமாய் இருந்தது. நான் தி.நகர் டிராபிக்கை குறைத்து மதிப்பிட்டு விட்டதால், நுழையும் போது ‘எவரநி’ கிருதியை முடித்துக் கொண்டிருந்தார். நான் கேட்டுள்ள ஓ.எஸ்.டி கச்சேரிகளில் பாதிக்கு மேற்பட்ட கச்சேரிகளில், ஆரம்பத்திலேயே விறுவிறு என்றொரு கல்யாணியைப் பாடிவிடுவார். பெரும்பாலும் அது ‘ஈஸ பாஹிமாம்’ கிருதியாக இருக்கும். அப்படி இல்லாத பட்சத்தில் ‘அம்ம ராவம்மா’ கிருதியாக இருக்கும். நேற்று தாயம் ‘தாமரஸ தள நேத்ரி’-யின் பக்கம் (எந்தக் கிருதி என்று கண்டுபிடித்துக் கொள்ள இந்த வரி போதாதா என்ன?) போதாது – ஆசிரியர்

கல்யாணியில் நிரவல் ஸ்வரம் பாடியபோதே கச்சேரி களை கட்டிவிட்டது. அனுபல்லவியில் “நெம்மதினி நீ விஹப”  “ரம்முலோ” என்றெல்லாம் சாஹித்யத்தை வெட்டிச் சாய்க்காமல், அற்புதமாய் பதம் பிரித்துப் பாடுவது ஓ.எஸ்.டி-யின் ஸ்பெஷாலிடி! தொடர்ந்து தேவகாந்தாரியைச் சுருக்கமாய் ஆலாபனை செய்து தமிழ் தியாகைய்யரின் சமஸ்கிருத பாடலான ‘ஷாரதே’ கிருதியை இழைத்துப் பாடினார். ஓ.எஸ்.டி-யின் கச்சேரியில் உள்ள அளவு, அலுப்பே தட்டாத வகையில் அவர் செய்யும் பங்கீடு அவரது பெரிய பலம்.

எந்த நேரத்தில் நான் பிலஹரி அதிகம் கேட்கக் கிடைக்கவில்லை என்று வி.வி.எஸ் கச்சேரி பற்றி எழுதியதில் சொன்னேனோ தெரியவில்லை. விட்டேனா பார் என்று சென்றவிடமெல்லாம் துரத்துகிறது. நேற்று சந்தீப் நாராயணனும், காயத்ரி வெங்கட்ராகவனும் விஸ்தாரமாக பிலஹரி பாடினர். இன்று ஓ.எஸ்.டி-யின் மெல்லிய கீற்றாய் பிலஹரியைத் தொடங்கியபோது நொந்தே போனேன். நல்ல காலம், கீற்று சற்றைக்கெல்லாம், ‘சந்திரசேகர யதீந்திரம்’ என்ற கிருதியாக மாறியது. கல்லிடைக்குறிச்சி வேத தாஸர் செய்த கிருதியாம். கச்சேரி முடிந்ததும் கேட்டுத் தெரிந்து கொண்டேன். தேவ காந்தாரியும், பிலஹரி கச்சேரி சிருங்கேரி மடத்தில் நடந்ததால் பாடப்பட்டவை என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

நேற்றைய பிரதான ராகம் தோடி. ஓ.எஸ்.டி ஆதார ஷட்ஜத்தில் நங்கூரம் பாய்ச்சியது போல நின்று கார்வை கொடுத்தார் பாருங்கள்! தார ஸ்தாயியில் குரலை உயர்த்தி, மந்திரத்தில் குரலைக் குறுக்குவோர் கச்சேரிகளையே கேட்டுப் புளித்துப் போயிருந்த என் செவிகள் நேற்று புளகாங்கிதம் அடைந்தன.

ஓ.எஸ்.டி-யின் ஆலாபனை அணுகுமுறை ராமநாதபுரம் கிருஷ்ணன் செய்வது போல, கீழ் ஸ்தாயியில் குரலை உயர்த்தியும், மேல் ஸ்தாயியில் குரலை அடக்கியும் விளங்குகிறது. தார ஸ்தாயியில் கத்தாமல், நளினமான பல சங்கதிகள் பாட இந்த அணுகுமுறை பெரிதும் உதவுகிறது. ராகத்தின் மையமாக தைவதம், முதல் தார ஷட்ஜம் வரையிலான இடத்தை வைத்துக் கொண்டு நிறைய பாடினார். நீண்டு ஒலித்த தார ஷட்ஜ கார்வையும், அதனைத் தொடர்ந்து வளைந்தும் நெளிந்தும் ஒலித்த தைவதத்தில் கமகங்களும் அடுத்தடுத்துப் பாடி அழகிய அலைகளை படர விட்டார். கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்களுக்கு நிறைவாக தோடியை அலசிவிட்டு, “ஏமிஜேசிதே” பாடினார்.

நிரவலைப் பற்றிச் சொல்லும்போது எஸ்.ராஜம், “நல்ல விஷயத்தை வைத்துதான் நிரவணும். ஏமி ஜேஸிதே பாடிவிட்டு “காம மோக தாஸுடை” என்று நிரவிக் கொண்டு இருக்கக் கூடாது.”, என்பார். நேற்று ஓ.எஸ்.டி அதைத்தான் செய்தார். காம மோகத்தைக் கடந்து “வர மந்த்ர”-வில் நிரவல் செய்தார். மைசூர் பாகை செய்யும் போது தாம்பாளம் முழுவதும் படர்ந்திருந்தாலும், அப்படியே சாப்பிட முடியாது. துண்டம் துண்டமாய் நறுக்கும்போது எடுத்து உண்ன வசதியாக இருக்கும். அப்படித்தான் நேற்று ஓ.எஸ்.டி தோடியை நிர்வாகம் செய்தார். கேட்ட ரசிகர்களும், உடன் வாசித்த வித்வான்களும், முழுமையாய் வாங்கி அனுபவிக்க வசிதயாக இருந்தது. ஸ்வரங்களில், ஓ.எஸ்.டி இரண்டு காலத்திலும் இடத்துக்குப் பாடிவிட்டு, அதன் பின் சமத்திற்கு வரும்படியாக குறைப்பு செய்தார். ஆலாபனையிலும் சரி, ஸ்வரங்களிலும் சரி ஷட்ஜ, பஞ்சம வர்ஜ இடங்கள் நிறைந்து இருந்தன. இந்த இடங்களே ராகத்தை உருக்கமாக ஒலிக்க வைத்ததாக எனக்குத் தோன்றியது. ஸ்வரங்களில், ஓ.எஸ்.டி பாடியதையெல்லாம் உடனுக்குடன் வாசித்து கலக்கினார் நெய்வேலி நாராயணன். அரங்கில் நேற்று அவரது தொப்பி சுத்தமாக கேட்க வில்லை. வலந்தலையின் நாதத்துடன் தொப்பியின் கும்காரங்களும் சேர்ந்து ஒலித்திருப்பின் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும்.

தனி ஆவர்த்தனத்திலும் இந்தக் குறை இருந்தது. குறிப்பாக டேக்கா சொல் வாசித்த போது, இதை உணர முடிந்தது. இருப்பினும், குறை தெரியாது நன்றாக வாசித்தார். நேற்று வாசித்த கோர்வைகள் எல்லாம் சரியாக இடத்துக்கு வந்தன என்று சொல்லுமளவிற்குத்தான் என் லய அறிவு இடமளிக்கிறது. ஆதி தாளம் புரியும் அளவிற்கு, மிஸ்ர சாபுவை தெரிந்து கொள்ளவில்லை. வரும் வருடங்களில் தெரிந்து கொள்ள வேண்டும்.

வயலின் வாசித்த எம்.எஸ்.என் மூர்த்தி இடைஞ்சல் இல்லாமல் வாசித்தார். அவருடைய வாய்ப்புகளை அளவாக வாசித்தார்.

தனி முடிந்ததும், சில சீட்டுகள் வந்தன. அவற்றைப் பாடும் முன் நிறைய யோசித்துவிட்டு. “சரவண பவ எனும் திருமந்திரம்” பாட ஆரம்பித்தார். பல்லவி முடிந்து மிருதங்கத்தில் தீர்மானம் வைத்தும் அனுபல்லவியை எடுக்கவில்லை. உடனிருந்த சிஷ்யருக்கும் சாஹித்யம் தெரியாததால் பாட்டு அப்படியே அந்தரத்தில் நின்றது. உடனே அரங்கில் இருந்து ஒரு கூட்டமே “புரம் எரித்த பரமன்” என்று அடியை எடுத்துக் கொடுத்ததும், பாடலைப் பாடி முடித்தார். “திடீர் என்று பாடச் சொன்னால் இதுதான் சங்கடம்”, என்றார்.

அடுத்து பாடிய “காண வேண்டாமோ” பாடல்தான் தமிழில் இது வரை வந்துள்ள பாடல்களுள் மிகச் சிறந்ததாக நான் கருதுவது. ஸ்ரீரஞ்சனியின் அத்தனை அழகும் குழைத்துச் செய்யப்பட்ட பாடல். “வீணில் உலகைச் சுற்றி சுற்றி” என்ற வரியில் உலகமும் சுற்றும், அவ்வுலகில் உரைபவரும் சுற்றுவர், அப்படி எக்கெச்செக்க நகாசு சங்கதிகள்! அவற்றை ஓ.எஸ்.டி பாடிய போது my day was made.

அடுத்து பாடிய ராகமாலிகை பாடும் முன், “முடிந்த வரை பாடுகிறேன். அனு பல்லவியில் மறந்தாலும் மறந்துவிடலாம்”, என்று எச்சரிக்கை விடுத்து ஆரம்பித்தார். அழகான ஹிந்துஸ்தானி ராகங்களால் ஆன ராகமாலிகை “அனுமனை அனுதினம் நினை மனமே” அவற்றை நல்ல பாவபூர்வமாக பாடி கச்சேரியை நிறைவு செய்த போது கேட்டவர்கள் அனைவரும் நிறைவாக வீடு சென்றிருப்பர் என்பது உறுதி.

 

Read Full Post »