Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘Pazani Subramaniya Pillai’

சென்ற வாரம் தொடங்கி இன்மதியில் ஒரு தொடர் எழுதுகிறேன்.

இந்தக் கட்டுரை முதலில் இங்கு வெளியானது

இசைக் கருவிகளை வசித்தவர்களைத் தெரியும் அளவுக்கு அவற்றை செய்தவர்களைப் பற்றி அதிகம் வெளியில் தெரிவதில்லை. மரத்தின் கனியின் மீது கவனம் செல்லும் அளவிற்கு வேரின் பெயரில் கவனம் செல்லாது என்பதுதான் நடைமுறை. இருப்பினும் ஒரு சிலரின் திறன் நடைமுறை வழக்கங்களையும் மீறி வெளிச்சத்துக்கு வந்துவிடும். அப்படிப்பட்ட அரிய மிருதங்க வினைஞர்தான் பர்லாந்து.

கடந்த சில நூற்றாண்டு கால வரலாற்றை பார்க்கும் போது, மிருதங்க வித்வானாய் நமக்குக் கிடைக்கும் முதல் பெயர் தஞ்சாவூர் நாராயணசாமியப்பா. மிருதங்க வினைஞர்களை பார்க்கும் போது நமக்குக் கிடைக்கும் முதல் பெயர் செவுத்தியான் என்றறியப்பட்ட செபஸ்டியன். செபஸ்டியன் நாராயணசாமியப்பாவுக்கு வேலை செய்தாரா என்று தெரியவில்லை. அவர் சமகாலத்தில் இருந்த மான்பூண்டியாபிள்ளை, அதற்கு அடுத்த தலைமுறையினரான தட்சிணாமூர்த்தி பிள்ளை, தஞ்சாவூர் வைத்தியநாத ஐயர் போன்றோருக்கு வேலை செய்தவர் என்று தெரிய வருகிறது.

செபஸ்டியனின் மகன்கள் செங்கோல், பர்லாந்து, செட்டி ஆகிய மூவரும் தஞ்சாவூரில் இருந்தபடி வாத்தியங்களுக்கு வேலை செய்து வந்தனர். தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரின் வீட்டிலேயே பெரும்பாலும் இந்த வேலைகள் நடை பெறும்.

சாதி/மத பாகுபாடுகள் மலிந்திருந்த காலகட்டத்திலும்,  இந்த சகோதரர்களின் கைவண்ணம் சமூக அடுக்குகளை தளர்த்தியது.  தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரின் வீட்டில் தலித் கிருஸ்துவ பின்னணியில் இருந்து வந்த இவர்கள் நினைத்த வண்ணம் புழங்க முடிந்ததை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்த சங்கீத கலாநிதி டி.கே.மூர்த்தி, “நாங்க இன்னிக்கு வேளா வேளைக்கு சாப்பிடறோம்-னா அதுக்கு இவங்களை மாதிரி மிருதங்க வேலை செஞ்சு தரவங்களும் தான் காரணம்”, என்று ஒருமுறை உருக்கமாய் கூறியது அன்று அந்த அரங்கில் இருந்தவர்களை சற்றே அசைத்தது.

miruthangam

புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளைக்கு வெகு நாட்களாய் தொல்லைக் கொடுத்துக் கொண்டிருந்த மிருதங்கத்தை ஒரே நாளில் சரிபடுத்திக் கொடுத்த இளவயது பர்லாந்தின் கைகளில் தெய்வீகத்தன்மை நிறைந்திருப்பதாக தட்சிணாமூர்த்தி பிள்ளை கூறியுள்ளார் என்று ஒரு நேர்காணலில் சங்கீத கலாநிதி திருச்சி சங்கரன் கூறியுள்ளார்.

இந்தச் சகோதரர்களுள் பர்லாந்து என்கிற ஃபெர்னாண்டிஸுக்குத் தனி இடமுண்டு.

தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரிடம் இசை பயின்ற போதும், மணி ஐயரின் வீடு பாலக்காட்டில் தான் இருந்தது. மணி ஐயருக்கு கச்சேரிகளில் வாசிப்பதை விட, மிருதங்கம் என்கிற வாத்தியத்தை மேம்படுத்துவதில் ஈடுபாடு அதிகம். அவர் அந்த வாத்தியத்தில் செய்த பரிசோதனை முயற்சிகள் ஏராளம். இதனால் இயற்கையாகவே அவருக்கும் பர்லாந்துக்கும் ஒரு நெருங்கிய உறவு ஏற்பட்டது. நாளடைவில் தான் பாலக்காட்டிலும், மிருதங்க வேலை தஞ்சாவூரிலும் நடைபெறுவதை பொறுக்க முடியாமல் தன் இருப்பிடத்தையே தஞ்சைக்கு மாற்றிக் கொண்டார் அந்த மேதை.

தன் வீட்டிலேயே இடம் ஒதுக்கி எந்த நேரமும் மிருதங்க வேலை நடக்கும்படி பார்த்துக் கொண்டார். பல ஊர்களுக்கு கச்சேரி சென்றுவிட்டு வரும் போது சற்று ஓய்வெடுக்க மதியம் ஓய்வெடுக்கும் போதும், பர்லாந்து வேலை செய்து முடித்த பின் அந்த வாத்தியத்தை சரிபார்க்க சில நாத திவலைகளை எழுப்பினால் களைப்பைத் தூக்கி எறிந்துவிட்டு புத்துணர்ச்சியுடன் கிளம்பிவிடுவார் மணி ஐயர். எப்படித் தோல் பார்ப்பது, எந்த அளவில் வலந்தலை வைத்துக் கொள்வது, சாதம் எப்படி போடுவது, எப்படி மூட்டடிப்பது என்றெல்லாம் பர்லாந்துடன் கலந்து பேசி எண்ணற்ற மிருதங்க பரிசோதனைகளை மணி ஐயர் மேற்கொண்டுள்ளார்.

மணி ஐயரின் சமகால மேதையான பழனி சுப்ரமண்ய பிள்ளைக்கும் பர்லாந்துதான் மிருதங்க வேலை செய்து வந்தார். இந்த மூவரைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பாலக்காடு மணி ஐயரின் மகன் ராஜாராம் கூறுகையில்:

ஒரு முறை, சில நாட்களுக்கு பர்லாந்து எங்கள் வீட்டுப் பக்கம் வரவேயில்லை.

அவர் திரும்ப வந்த போது, பழனி ஐயாவுக்கு வேலை பார்க்கப் போயிருந்ததாகக் கூறினார்.  உடனே அப்பாவும் பழனியின் வாத்யத்தைப் பற்றி ஆர்வமாகக் விசாரித்த பின், “பழனியின் தொப்பி இவ்வளவு சுகமா இருக்கே. அது மாதிரி எனக்கு வேலை செஞ்சு தர மாட்டேங்கறியே”, என்றார்.

“அதுக்கென்ன ஐயா! அடுத்த மிருதங்கத்துல செஞ்சுட்டா போச்சு.”, என்றார் பர்லாந்து.

சில நாட்களுக்கெல்லாம், சொன்னது போலவே பழனி தொப்பி போல செய்திருப்பதாகச் சொல்லி ஒரு மிருதங்கத்தை பர்லாந்து எடுத்து வந்தார்.

அப்பா வாசித்துப் பார்த்து விட்டு, “இல்லைடா! பழனி தொப்பி மாதிரி இது இல்லையே.”, என்றார்.

“பழனி ஐயாவுக்கு செய்யறா மாதிரித்தான் செஞ்சேன். ஆனால், உங்களுக்காக கொஞ்சம் மாத்தினேன். அடுத்த தடவை அப்படியே செஞ்சு கொண்டு வரேன்.”

சொன்னாரே தவிர அதன் பின் அப்படி ஒரு மிருதங்கத்தை பர்லாந்து கொண்டு வரவே இல்லை. அப்பா பர்லாந்தைப் பார்க்கும் போதெல்லாம் பழனி தொப்பியைப் பற்றி கேட்டுக் கொண்டே இருந்தார்.

சில மாதங்களில் பொறுமை இழந்தவராய், “நீ எப்போ பண்ணி தரப் போறாய்? இப்ப தரேன், அப்ப தரேன்னு ஏமாத்திண்டே வரியே!”, என்றார்.

அப்போது அப்பா பாம்பே கச்சேரிகளுக்காக கிளம்பிக் கொண்டிருந்தார்.

“புதுத் தோல் வந்திருக்குங்க. நீங்க ஊருக்குப் போயிட்டு வாங்க. வரும் போது பழனி தொப்பியோட மிருதங்கம் தயாரா இருக்கும்.”, என்றார் பர்லாந்து.

அப்பா பாம்பே டூர் போய்விட்டு திரும்பியதும் வீட்டுக்குள் நுழையவில்லை. தோட்டம் தாண்டியதும், வீட்டுக்கு வலப்புறத்தில் ஒரு கொட்டகை உண்டு. அங்கு 20-25 மிருதங்கங்கள் இருக்கும். வேலையெல்லாம் அங்குதான் நடக்கும். பர்லாந்து அங்கு இருந்ததைப் பார்த்ததும், அப்பா நேராக கொட்டகைக்குள் சென்றுவிட்டார். பெஞ்சின் மேல் ஒரு மிருதங்கத்தை தயாராக வைத்திருந்தார் பர்லாந்து.

“இது பழனி தொப்பி மாதிரி பண்ணி இருக்கியா?”

“நீங்க வாசிச்சு பாருங்க ஐயா! அப்படியே பண்ணி இருக்கேன்”

அப்பா எடுத்து வாசித்துப் பார்த்தார். அவருக்குத் திருப்தியில்லை.

“ஏய்! இதுல அந்த சுகம் கிடைக்கலையேடா!”, என்றார்.

பர்லாந்து மெதுவாக சிரித்த படி, “அது அவர் கை வாகுங்க”, என்றான்.

“அப்ப எனக்கு வராதா!”, என்று குழந்தையைப் போல அப்பா கேட்டார்.

இந்த சம்பவம், மிருதங்க கலையில் உச்சத்தில் இருந்த மணி ஐயர் தன் சக கலைஞரிடமும் தனக்கு வேலை செய்த வினைஞரிடமும் வைத்திருந்த பெருமதிப்பை அழகாகப் படம்பிடிக்கிறது.

பலமுறை கச்சேரிக்குப் பின் தனக்கு அளிக்கப்பட்ட சால்வை போன்ற மரியாதைகளை பர்லாந்துவுக்கு அளித்து மகிழ்ந்துள்ளார் மணி ஐயர்.

“சொர்க்கம் என்றால் அது நல்ல சந்தன மரத்தில் சோமு ஆசாரி கடைந்து, பர்லாந்து வாத்தியத்தை மூட்டடித்து தயார் செய்து, அதில் அரியக்குடி ராமானுஜ ஐயங்காருக்கு வாசிக்க நேர்வதுதான்”, என்றும் மணி ஐயர் கூறியுள்ளார்.

பர்லாந்துவின் வேலையின் விசேஷத்தைப் பற்றி கூறும் பல கலைஞர்கள், “அவரிடம் எந்தப் பாடகருக்கு கச்சேரி என்று சொல்லிவிட்டால் போதும். எந்த ஸ்ருதி என்று கூடச் சொல்ல வேண்டாம். மிருதங்கம் தேவையான ஸ்ருதியில் தயாராக இருக்கும். இத்தனைக்கும் அவரிடம் தம்புராவோ ஸ்ருதி பெட்டியோ இருந்ததில்லை. அத்தனை ஸ்ருதியும் அவர் மனத்தில் அத்துப்படியாய் இருந்தது”, என்கின்றனர்.

”ஒருமுறை முசிறி சுப்ரமண்ய ஐயருக்கு வாசிக்க வந்தபோது, என்னை செண்ட்ரல் காலேஜில் அன்று சாயங்காலம் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு வாசிக்கச் சொன்னார். நான் முசிறிக்கு வாசிக்க எடுத்து வந்த இரண்டு வாத்யங்களை சில மணி நேரங்களில் பர்லாந்துவும் செட்டியும் எம்.எஸ்-க்கு வாசிக்கத் தோதாய் தயார்படுத்திவிட்டனர்.”, என்கிறார் டி.கே.மூர்த்தி.

பொதுவாக புது மிருதங்கத்தை நேரடியாக கச்சேரிகளில் வாசிக்க முடியாது. அதில் சிஷ்யர்கள் வாசித்து பழகுவர். முதல் சாதம், இரண்டாம் சாதம் உதிர்ந்து மூன்றாம் சாதம் போட்டவுடனேயே கச்சேரி மிருதங்கமாக அந்த வாத்யம் தகுதியுறும். பர்லாந்துவின் வேலையின் விசேஷத்தால் புது மிருதங்கமே பக்குவமான மிருதங்கம் போல இருக்கும். அப்படிப்பட்ட புது மிருதங்கத்தை வைத்துக் கொண்டு பாலமுரளி கிருஷ்ணாவுக்கு நேஷனல் புரோகிராம் வாசித்ததாகவும், அந்த வாசிப்பைக் கேட்டவர்கள் வாத்தியத்தின் நாதத்தை வெகுவும் புகழ்ந்ததையும் திருச்சி சங்கரன் நினைவுகூர்ந்துள்ளார்.

இன்றும் பர்லாந்தின் சந்ததியினர் சென்னையில் இருந்தபடி அனைத்து முன்னணி வித்வான்களுக்கும் மிருதங்கம் தயார் செய்து கொடுக்கின்றனர். 2013-ல் பர்லாந்தின் பெயரில் விருது ஒன்று நிறுவப்பட்டு ஒவ்வொரு வருடமும் ஒரு சங்கீத வாத்யம் தயாரிக்கும் வினைஞருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. முதல் பர்லாந்து விருதை அவரது மகன் செல்வம் பெற்றார்.

Read Full Post »

கச்சேரி செய்யும் கலைஞர்கள் வீட்டின் அறைகள் என்றால், அவர்களை உருவாக்கும் பணியைச் செய்பவர்கள் (சில ஹை-டெக் வாத்தியார்கள் நீக்கி) வீட்டின் அஸ்திவாரம் போன்றவர்கள். இவர்கள் கண்ணில் பட மாட்டார்கள். இவர்களைக் கண்டாக வேண்டுமெனில் நிச்சயம் செய்முறை (லெக்-டெம்) விளக்க நிகழ்வுகளுக்காகக் காத்திருக்க வேண்டும்.

22-ம் தேதி லெக் டெம்-க்காக வந்திருந்த ஜெ.வி என்று பரவலாய் அழைக்கப் படும் திருச்சி ஜெ.வெங்கடராமன் இவர்களுள் ஒருவர். ஆலத்தூர் வெங்கடேச ஐயரிடம் குருகுலவாசம் செய்தவர். சௌக்யத்துக்கு மதுரை மணி, பளிச்சென்று பாடுவதற்கு செம்பை, புதுமைகளைப் புகுத்த ஜி.என்.பி என்றிருந்த காலத்தில் லயத்துக்காக உழைத்துப் பெயர் பெற்று விளங்கியவர்கள் ஆலத்தூர் சகோதரர்கள். அந்த வழியில் வந்துள்ள ஜெவி-யும் லய சமாசாரங்களில் அசுர சாதகம் செய்துள்ளார். கரணம் தப்பினால் மரணம் வகை கணக்குகளை அநாயாசமாகப் பாடக் கூடியவர். கச்சேரி செய்யும் ஆற்றல் வாய்த்ததும் வழைமை போல் சென்னைக்குக் குடி பெயராமல், இன்றளவும் திருச்சியில் இருந்து வருபவர். அரை நூற்றாண்டுக்கு மேலாகப் பல மாணவர்களைத் தயார் செய்து வருபவர். சில வருடங்களாய் கச்சேரி உலகில் பிரபலமடைந்து வரும் பிரதீப் குமார் இவரது சீடர்தான்.

இள வயது நினைவுகளை அசை போடும்போது, “என் தாத்தா வெங்கடராம தீட்சிதர் ஃபிடில் வாசிப்பார். எங்கள் குடும்பத்தில் முதன் முதலில் இசையில் ஈடுபட்டவர் அவர்தான். அவர் வழியில் என் அப்பா ஜெயராமனும் வயலின் வித்வானாக விளங்கினார். அவருடைய சிறு வயதிலேயே தாயை இழந்துவிட்ட நிலையில், என் அப்பா பல இடர்களுக்கிடையில் சங்கீதத்தைக் கற்று அத்துறையில் ஈடுபட்டு வந்தார்.”, என்கிறார்.

இள வயது முதல் தந்தையாரிடம் சங்கீதம் பயின்று வந்த ஜெவி, எஸ்.எஸ்.எல்.சி முடித்து, தட்டச்சில் உயர்நிலைப் பிரிவிலும் தேறியிருந்த போதும் வேறு வேலைக்குச் செல்லவில்லை.  “நீ சங்கீதத்தில் முழு நேரம் ஈடுபட்டால்தான் எனக்கு நிறைவாக இருக்கும் என்று அப்பா சொன்னார். என் அம்மாவுக்கு அதில் விருப்பம் இல்லை என்ற போதும் நான் அதன்படி நடந்தேன்.”, என்கிறார்.

அதன் பின் ஆலத்தூர் சுப்பையரின் தந்தையாரிடம் (வெங்கடேச ஐயர்) குருகுல வாசம் செய்து வந்த போதும் வறுமை இவரைப் பெரும் மன இறுக்கத்துக்குள் தள்ளியது. அதிலிருந்து விடுபடக் காரணமாய் இருந்தவர் பழநி சுப்ரமணிய பிள்ளை.  “திருச்சி வந்திருந்தபோது நான் பாடுவதைக் கேட்டு என்னை அகாடமிக்கு எழுதிப் போடச் சொன்னார். பிறகு என்ன தோன்றியதோ தெரியவில்லை,  ‘அதெல்லாம் ஒன்றும் எழுத வேண்டாம்! நான் பாத்துக்கறேன்’, என்று சென்றுவிட்டார். அந்த வருடம் அகாடமியில் பாட வாய்ப்பு கிடைத்தது. பாடிய பின் அந்த வருடத்தில் நான் பாடிய ஸ்லாட்டுக்கான சிறந்த கச்சேரிக்காகத் தம்புரா பரிசு கிடைத்து. அது என் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அவர் எனக்கு உதவியிருக்க வேண்டிய அவசியமே இல்லை. பாட்டைக் கேட்டுவிட்டு ஒற்றை வார்த்தையில் நன்றாயிருக்கிறது என்று சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்.”, என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஜெவி.

சென்னையில் வந்து பாடிய சீஸனில், 15 நாட்களுக்கும் மேல் பழநி சுப்ரமணிய பிள்ளை வீட்டிலேயே தங்கியது அவருக்கு பல படிப்பினைகளை அளித்தது. பழநியின் வாசிப்பும், ஜெவி-யின் பாட்டைக் கேட்டு மேலும் பல புதிய கல்பனைகள் செய்ய தூண்டுதலாய் அமையும் படி அவர் கூறிய விஷயங்களும், ஜெவி-யை லயத்தினுள் இழுத்தன.

“லயத்தில் அதிகம் ஈடுபட்டால் சௌக்கியம் போய்விடும் என்று சொல்கிறார்கள். அதை விட ஒரு பெரிய பொய் இருக்கவே முடியாது. இன்னும் சொல்லப் போனால் லயத்தில் ஈடுபாடு இருந்தால்தான் சௌக்யமாகப் பாட முடியும். நாம் நடந்து செல்லும்போது, நடை சீராக இல்லை என்றால் விழுந்துவிட மாட்டோமா? அந்த சீரான நடைதான் லயம்.  பழநி அவர்களுக்கு உடம்பு முழுவதும் கணக்குதான், ஆனால் அவர் மதுரை மணிக்கு வாசிக்கும்போது சௌக்யத்தின் சிகரமாகத்தானே வாசித்துள்ளார்? லயத்தில் ஈடுபட்டதால் அவர் வாசிப்பில் சௌக்யம் குறைந்தா போய்விட்டது”, என்று எதிர்கேள்வி எழுப்புகிறார்.

“தாங்கள் போன வருடம் செய்த சாவேரி வர்ண லெக்-டெம், பாடுவதைப் போலவே கேட்டு ரசிக்கவும் மிகக் கடினமானதாக விளங்கியதே”, என்று கேட்டதற்கு, “அது மாணவர்களுக்காகச் செய்த விளக்கம். லயத்தில் தேர்ச்சி ஏற்பட, காலப்ரமாணம் சீராய் அமைய மாணவர்கள் பயிற்சி செய்ய வேண்டிய முறை. அப்படி கச்சேரியில் பாட வேண்டும் என்று ஒரு நாளும் சொல்லவில்லை. பாடினால் நன்றாகவும் இருக்காது”, என்று தெளிவுபடுத்துகிறார் ஜெவி.

சென்னையில் தங்கினால் நல்ல எதிர்காலம் அமையும் என்று பழநி கூறிய போதும், குடும்பச் சூழல் ஜெவி-யை திருச்சியை நீங்க விடவில்லை. எஸ்.வி.பார்த்தசாரதி என்ற மியூசிக் புரொட்யூசரின் உதவியால் கிடைத்த ஆல் இந்தியா ரேடியோ வேலை, சமய சஞ்சீவினியாய் இவருக்கு அமைந்துள்ளது. “நான் நிறைய கஷ்டங்களைப் பார்த்துவிட்டதால், கேட்டவருக்கெல்லாம் தடையின்றி பாடம் சொல்லி வைக்க வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையை வளர்த்துக் கொண்டேன்”, என்கிறார் காவேரிக் கரைக்குரிய நக்கலுடன்.

தனது பத்தொன்பதாவது வயது தொடங்கி கிட்டத்தட்ட 59 வருடங்களாக ஆசிரியராய் விளங்கும் இவர் உருவாக்கிய மாணவர்கள் ஏராளம். இள வயதில் பல ஊர்களுக்குச் சென்றும் பாட்டு சொல்லி வைத்துள்ளார். இன்றோ பெங்களூர், பாம்பே, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று பல இடங்களிருந்து மாணவர்கள் இவரை நாடி வருகின்றனர். “அது என்னமோ கம்ப்யூடர்ல வெச்சு சொல்லிக் குடுக்கலாமாமே? அப்படிக் கூட சில பேர் கேட்கிறா!”, என்கிறார் வெகுளியாக.

லயத்தில் இன்று சிறப்புடன் திகழ்பவர் என்ற போதும் அனைத்து மாணவர்களுக்கும் கடும் லயப் பயிற்சிகள் அளிப்பதில்லை. அதில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மட்டுமே ஆழமான விஷயங்களைச் சொல்லித் தருகிறார். “எதைக் கேட்டு வருகிறார்களோ அதையே சொல்லி வைப்பதுதான் என் வழக்கம். ஒருவருக்கு நிரவல் பிடிக்கலாம். இன்னும் சிலருக்கு அரிய கிருதிகள் பிடிக்கலாம். அவர்களைப் போய் நடை பல்லவி பாடினால்தான் ஆச்சு என்று சொல்ல முடியாது.”, என்கிறார்.

இந்த லய நுணுக்கங்கள் எல்லாம் கைவருவது எல்லோருக்கும் சாத்தியமா என்ற கேள்வி அவரைக் கோபப் படுத்திவிட்டது. “கோயமத்தூரில் கிருஷ்ணமூர்த்தி என்றொரு வித்வான் இருக்கிறார். இரண்டு கையுமில்லை, இரண்டு காலும் இல்லை. இருந்தும் தளராமல் சங்கீதம் பயின்று, ஜனாதிபதி மாளிகையில் அழைக்கப்பட்டு கச்சேரி செய்யும் அளவுக்கு வந்திருக்கிறார்.  உழைப்பு மட்டும் இருந்தால் ‘வராது’ என்று எதுவுமே இல்லை.”, என்றார் சூடாக.

மாணவர்களுக்குச் சொல்லித் தருவதைத் தவிர, 90 திருப்புகழ்களுக்கும் பல திவ்ய பிரபந்தங்களுக்கும் மெட்டமைத்துள்ளார். “திருப்புகழில் ஈடுபாடு என் குருநாதரிடம் இருந்து வந்தது. அவர் கஞ்சிரா மகாவித்வான் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளையின் பக்தர் என்றே சொல்லலாம். தட்சிணாமூர்த்தி பிள்லை பெரிய முருக பக்தர். அற்புதமாய்த் திருப்புகழ் பாடுவார். அதனால் என் குருநாதர் திருப்புகழை விரும்பிச் சொல்லித் தருவார். ஆலத்தூர் சகோதரர்கள் திருப்புகழை வைத்தே கச்சேரிகள் செய்துள்ளனர். திருப்புகழில் விசேஷமே சந்த தாளம்தான். அந்த தாளங்களில், என்னால் இயன்ற வரை மெட்டமைத்துள்ளேன். குறைந்த பட்சம் 300 திருப்புகழ் பாடல்களுக்காவது மெட்டமைக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது.”, என்கிறார்.

வாழ்வில் பல ஏற்ற இறக்கங்களைப் பார்த்துவிட்ட ஜெவி, இன்னும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறாரா?

“நான் பாடம் செய்துள்ள கீர்த்தனைகள் குறைச்சல் என்றுதான் நினைக்கிறேன். இன்னும் நிறைய அரிய கீர்த்தனைகளை கற்றுக் கொள்ள வேண்டும். அவற்றை பல பேருக்குச் சொல்லித் தர வேண்டும். வாழ்வில் எப்போதும் சும்மா இருந்துவிடக் கூடிய நிலை வந்துவிடக் கூடாது. பாடம் சொல்லிக் கொடுக்கும் போதே என் உயிர் பிரிய வேண்டும் என்பதுதான் என் ஆசை”, என்று புன்னகைக்கிறார் ஜெவி.

Read Full Post »