டிசம்பர் சீஸன் கச்சேரி கேட்க மட்டுமின்றி, பல வித்தியாசமான ஆளுமைகளை சந்திக்கும் களமாகவும் விளங்குகிறது.
நீங்கள் கச்சேரிக்குச் செல்பவரென்றால் அகிரா இயோவை (Akira Io) நிச்சயம் பார்த்திருப்பீர்கள். சிரிக்கும் கண்களை உடைய ஜப்பானியர். கிட்டத்தட்ட நாட்டிய முத்திரை போலக் கைகளை வைத்துக் கொண்டு தாளம் போடுவதையும் நீங்கள் கண்டு களிக்கக் கூடும். அப்படித் தாளம் போடாத நேரத்தில் அவர் கைகள் காமிராவுடன் உறவாடிக் கொண்டு இருக்கும்.
பல நாட்களாகவே இவருடன் பேச வேண்டும் என்றிருந்த ஆசை நேற்றுதான் நிறைவேறியது.
“நான் ஒரு ஃப்ரீலான்ஸ் போட்டோகிராபர். ஆனால் முறையாக நான் போட்டோகிராபி படிக்கவில்லை. நான் டோகியோவில், வஸெடா (Waseda) பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் பட்டம் பெற்றுள்ளேன். 1996-ல் எக்ஸ்சேஞ்ச் ஸ்டூடண்டாக ரஷ்யா சென்றேன். ஜப்பான் திரும்பி ‘freelance Russian interpretor’ ஆனேன்”, எனும் அகிரா, “என் நண்பர்கள் பலர் புகைப்படம் எடுப்பதில் ஆர்வமாயிருந்தனர். 1994-ல் இருந்து எனக்கும் அந்த ஆர்வம் தொற்றிக் கொண்டது. அவர்கள் கொடுத்த ஊக்கம் என்னை ஃப்ரீலான்ஸ் போட்டோகிராபராகவும் ஆக்கியது. 1999-ல் பேங்காகில் நடந்த சர்வதேச புகைப்படக் கண்காட்சியில் என் படமும் தேர்வாகி அதற்கு பரிசும் கிடைத்தது. அதன் பின் ஒரு ஜப்பானிய இணையப் பத்திரிகை எனக்கு ‘escape’ என்ற பெயரில் ஒரு Photo Column வழங்கியது.”, என்கிறார்.
சென்னைக்கு முதன் முதலில் வந்ததை நினைவு கூறும் அகிரா, “2001-ல் இந்தியாவுக்கு இரண்டாவது முறையாக வந்தேன். முதன் முறை வட இந்தியாவை மட்டும் பார்த்திருந்ததால், இம் முறை தென்னிந்தியா வந்தேன். நான் வந்த நேரத்தில் சென்னையில் மார்கழி இசை விழா நடந்து கொண்டிருந்தது. ஜப்பானில் ஹிந்துஸ்தானி இசையுடன் இருக்கும் பரிச்சயம் தென்னிந்திய இசைக்குக் கிடையாது. வித்தியாசமான அனுபவம் என்பதால் கச்சேரி சென்று கேட்க நினைத்தேன். நான் கேட்ட முதல் கச்சேரி ம்யூசிக் அகாடமியில் மதுரை டி.என்.சேஷகோபாலனுடையது. எம்.சந்திரசேகரன், குருவாயூர் துரை மற்றும் ஹரிசங்கர் உடன் வாசித்த கச்சேரி அது.” என்கிறார்.

“எனக்கு அப்போது கர்நாடக இசை பற்றி ஒன்றுமே தெரியாத போதும் அந்த அனுபவம் மிகுந்த பரவசத்தை ஏற்படுத்தியது. ஸ்டேஜ் டிக்கெட் வாங்கியிருந்ததால், மேடையில் கலைஞர்களை வெகு அருகில் இருந்து பார்க்கும் அனுபவமும் கிட்டியது. குறிப்பாக குருவாயூர் துரையும், ஹரிசங்கரும் வாசித்த தனி ஆவர்த்தனம் என்னை இசையின்பால் இழுத்தது. அதே வருடம் திருவையாறு தியாகராஜர் உற்சவத்திலும் கலந்து கொண்டேன். இவ்வளவு பேர் ஒன்றாகக் கூடிப் பாடுவதையும் கேட்பதையும் பார்க்கவே ஆனந்தமாக இருந்தது. அதன் பின் வருடா வருடம் வந்து இசையை அனுபவிக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன். 2005 வரை நான் வந்ததெல்லாம் பாட்டைக் கேட்டு ரசிக்க மட்டுமே.” என்று நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்.
கர்நாடக இசை பற்றி அறிமுகம் இல்லாத போதும், எந்த விஷயம் அவரைக் கவர்ந்தது என்று கேட்டதற்கு, “ஜப்பானில் பாரம்பரிய இசை உண்டென்ற போதும், அங்குள்ள ரசிகர்கள் கர்நாடக சங்கீத ரசிகர்களைப் போல ஆழ்ந்து ரசிப்பதில்லை. முதன் முதலில் எஸ்.என் ம்யூசிகல்ஸில் ‘ரசிகா டயரியை’ பார்த்த போது ஆச்சர்யப்பட்டு போனேன். கச்சேரியில் பார்த்தால், பல ரசிகர்கள் கிருதி, ராகம், தாளம், வாக்கேயக்காரர் பெயர் என்று குறிப்பெடுத்துக் கொள்வதைக் காண முடிந்தது. பாட ஆரம்பித்த சில நொடிகளுக்குள் ராகத்தை கண்டுபிடித்துவிடும் ரசிகர்கள் என்னை ஆச்சர்யப்படுத்தினர். ஒவ்வொரு கச்சேரியிலும், மேடையில் நடப்பதைக் கேட்பவர்கள் நன்கு உணர்ந்து ரசிப்பது என்னை மிகவும் கவர்ந்தது. மேடையில் பாடுபவர்களும் சரி, அரங்கில் அமர்ந்திருப்பவர்களும் சரி, கச்சேரியின் போது ஒருவித பரவச நிலையை (trance) அடைவதை என்னால் உணர முடிந்தது. ஜப்பானுக்கு இந்த இசையையும், இது தொடர்பான விஷயங்களையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதனால் என் படங்களில் ‘தீம்’ ஆக கர்நாடக இசையைத் தேர்வு செய்தேன்.” என்கிறார்.
“காலப் போக்கில், இசையைப் பற்றி மட்டுமின்றி, சபாக்கள், நிகழ்ச்சி வடிவமைப்பு, வாத்தியங்கள், அவற்றைச் செய்யும் முறைகள், பாடகர்கள் பயிற்சி செய்யும் முறைகள், கச்சேரியை நிர்வகித்தல் என்று முழுமையாக கர்நாடக சங்கீதத்தை ஒரு ‘Photo Book’-ஆக வெளியிட்டு ஜப்பானுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அந்தத் திட்டத்துக்கு ‘Focus Carnatica’ என்று பெயரிட்டேன்.” என்றார் காபியை அருந்திய படி.
இந்தத் திட்டத்தை செயலாக்க நிறைய செலவாகி இருக்குமே, உங்களுக்கு ஸ்பான்ஸர்கள் உண்டா என்று கேட்டதற்கு, “நான் சென்ற
கச்சேரிகள் பலவற்றில் ஸ்பான்ஸராக நல்லியின் பெயரைக் கண்டேன். ஒரு முறை ஸ்ரீ பார்த்தசாரதி சாமி சபாவில் அருணா சாய்ராம் கச்சேரிக்கு நான் படமெடுக்கப் போயிருந்தேன். அன்று நல்லியும் வந்திருந்தார். என்னைக் கண்டததும், கூப்பிட்டு விசாரித்து அவரது விசிடிங் கார்டை அளித்து விட்டுப் போனார். என் திட்டம் மனத்துக்குள் உருவானதும், அவற்றைச் செயலாக்க நிச்சயம் ஸ்பான்ஸர் தேவை என்று தோன்றியது. உடனே நான் எடுத்த படங்கள் சிலவற்றை ஒரு நூல் போல அச்சடித்து, நல்லிக்கு ஜப்பானிலிருந்து அனுப்பி வைத்தேன். அதன் பின், நேரிலும் சென்று அவரைச் சந்தித்து என் திட்டத்தை விளக்கினேன். நல்லியும் என் திட்டத்தை ஆமோதித்ததும், 2008-ல் முழு ஆண்டும் இந்தியாவிலேயே தங்கிப் படமெடுத்தேன். டிசம்பரில் மட்டுமின்றி, ஆண்டு முழுவதும் கர்நாடக சங்கீதம் சென்னையில் எப்படி நடக்கிறது என்று படம் பிடிக்க அது உதவியாய் இருந்தது.”
2008-ல் இருந்து விசாவுக்காக மட்டும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஜப்பான் சென்று இரண்டு மாதங்கள் தங்கி வரும் அகிரா, இப்போது ஆழ்வார்பேட்டையில் வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கியுள்ளார். 2011-ல் ஜூன் மாதத்துக்குள் தன் கனவு பிராஜக்ட் நிறைவேறிவிடும் என்கிறார்.
“நீங்கள் சொல்வது போன்ற புத்தகம் ஜப்பானுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கு – குறிப்பாகச் சென்னைக்கு மிக அவசியம் என்றுதான் தோன்றுகிறது”, என்றதற்கு, “என் திட்டத்தைச் செயலாக்கும் முன் இது போன்ற புத்தகங்கள் கிடைக்குமா என்று தேடிப் பார்த்தேன். அப்படி ஒரு புத்தகத்தை நீ செய்தால்தான் உண்டு என்று பலர் கூறினர். இந்தியாவில் வரும் வெளிநாட்டவர் திரும்ப எடுத்துச் செல்லும் நல்ல Souvenir-ஆகவும் இந்தப் புத்தகம் அமையும் என்று நினைக்கிறேன். ஸ்ருதி ஆசிரியர் ராம் நாராயணுடன் சேர்ந்து இந்தப் புத்தகத்தை இந்தியாவிலும் வெளியிடும் திட்டம் இருக்கிறது.”, என்று அடுத்த கேள்விக்கு வசதியாய் லீட் கொடுத்தார்.
“ஸ்ருதி இதழில் உங்கள் பெயரும் புகைப்படக் கலைஞராக இடம் பெருகிறதே! அவ்விதழுடன் அறிமுகம் எப்படி கிடைக்கதது?”, என்றதற்கு, “டகாகோ இனொவுவே (Takako Inoue) என்ற ஜப்பான் நாட்டு இசை பேராசிரியருக்கு கர்நாடக சங்கீதத்தில் நிறைய ஆர்வம் உண்டு. அவருக்கு ஸ்ருதியில் எழுதும் மன்னா ஸ்ரீநிவாஸன், ஆசிரியர் குழுவில் இருக்கும் ஜானகி போன்றோர் நல்ல நண்பர்கள். அவர் கூறியதன் பேரில், சில படங்களுடன் ஸ்ருதி அலுவலகம் சென்றேன். அதன் பின் அவ்வப்போது என் படங்களும் அந்த இதழில் வந்து கொண்டிருக்கின்றன.”, என்கிறார்.
அகிரா இசை உலகின் கணங்களை பதிய வைக்க Canon EOS 5D கேமிராவை உபயோகிக்கிறார். இயற்கை வெளிச்சத்தில் ஃப்ளாஷ் உதவியின்றிப் படம் எடுப்பதையே விரும்புகிறார்.

அவர் எடுத்ததில் அவருக்குப் பிடித்த படங்களைப் பற்றி கேட்டதற்கு, ரொம்ப நேரம் யோசித்த பின், “எதைச் சொல்வதென்று தெரியவில்லை! ஆர்.கே.ஸ்ரீகண்டன், வேதவல்லி போன்ற சீனியர் வித்வான்களை படமெடுத்த அனுபவம் மிகுந்த மகிழ்ச்சியையும் நிறைவையும் கொடுத்தது என்று வேண்டுமானால் சொல்லலாம். 91 வயதில் ஸ்ரீகண்டன் ஸார் கணீரென்று பாடுவது பெரிய அதிசயம் என்கிறார் கண்கள் விரிய.
கச்சேரிகளில் படம் எடுப்பதோடன்றி, தேர்ந்த ரசிகர் போலத் தாளம் போட்டு ரசிப்பதையும் பார்க்க முடிகிறது. இது எப்படிச் சாத்தியமானது?, என்ற கேள்விக்கு, “இங்கிருந்தபோது கற்றுக் கொண்டதுதான். இப்போது மோகனம், ஹம்ஸத்வனி போன்ற எளிய ராகங்களைக் கண்டுபிடிக்க முடிகிறது. ‘நினுவினா’, ‘ஸோபில்லு’ போன்ற கிருதிகள் வாசிக்கப்படும் போது அடையாளம் காண முடிகிறது. தாளம் போடவும் ரசிகர்களைப் பார்த்துக் கற்றுக் கொண்டேன்”, என்று சற்று வெட்கத்துடன் சிரிக்கிறார்.
”போட்டோ புத்தகம் வெளியான பின்?”, என்றதற்கு, “ஜப்பானில் கர்நாடக இசை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். இந்தியாவுக்கு ஜப்பானியர்கள் வரும் வகையில் ‘Carnatic music tours’ இயக்க வேண்டும். கர்நாடக சங்கீதத்துக்கு என்னால் ஆனதை செய்ய வேண்டும்”, என்றார்.
அடுத்த கச்சேரிக்கு நேரமாகிவிட, “Of course we will run into each other quite often. Let us catch up then”, என்றபடி அரங்கிற்குள் நுழைந்தார் அகிரா.
[கட்டுரையில் இடம்பெற்ற படங்கள், அகிரா எடுத்தவை. அகிராவின் படம், ராம்பிரசாத் எடுத்தது.)