Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘Prodigies’

பூனைக்கு மணி

சென்னை சீஸனுக்கு இணையாக உலகத்தில் வேறெந்த இடத்திலும் இசைத் திருவிழா நடக்கிறதா என்று சந்தேகமே. சென்ற ஞாயிற்று கிழமை ஹிண்டுவின் நான்காம் பக்கம் முழுவதுமே கச்சேரி விவரங்களுக்காக ஒதுக்கும் அளவிற்கு கச்சேரிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. சந்தோஷம்தான், ஆனால்….

கச்சேரி நடந்தால் போதுமா? Does quantity matter more than quality?

இப்படிச் சொன்னதற்காக கச்சேரிகளின் தரமெல்லாம் மோசம் என்று சொல்கிறேன் என்று நினைக்கக் கூடாது.

இளம் வித்வான்களுக்கு முன்னொரு காலத்தில் இருந்தது போல, திறமையைக் காட்ட மேடைகள் இல்லை என்று இன்று சொல்ல முடியாது. 10 வர்ணம், 30 கிருதி பாடம் ஆன வாண்டுக்குக் கூட எங்கோ ஒரு மூலையில் கச்சேரி நடக்கிறது. அது நல்ல விஷயம்தானே!

நல்ல விஷயம்தான். ஆனால் யாருக்கு நல்லது?

“இந்தக் கல்லை கையில போட்டா நல்லது நடக்கும்”, என்பவர் யாருக்கு நல்லது என்றே சொல்ல மாட்டார். அவருக்கு நல்லது என்பதுதான் அவ்வாக்கின் தாத்பர்யம் என்று கூட ஒரு பாஷ்யம் உண்டு. அதைப் போலத்தான் இந்தக் கச்சேரிகளில் குழந்தைகளைப் பாட வைப்பதும். பழைய படங்களில் கதாநாயகன் தறுதலையாய் இருந்தால் “ஒரு கல்யாணத்தை பண்ணி வெச்சுட்டா எல்லாம் சரியாகிவிடும்”, என்றொரு வசனம் வரும். அது மாதிரி இன்று சங்கீதம் சரியாக வரவில்லை என்றால், “டிசம்பர்-ல கச்சேரில பாட வெச்சுட்டா எல்லாம் சரியாகிவிடும்”, என்று இசை வட்டாரங்களில் வசனங்கள் உண்டு போலும். இன்று Child Prodigy பட்டம் கலைமாமணியை விட சீப்பாகக் கிடைக்கிறது.

இந்த டிராஜிடிகள் செய்யும் கச்சேரியை யார் கேட்கிறார்கள். இசைக் கலைஞர்களின் உறவினர், மைக் ஸெட்காரர், வீட்டில் மருமகள் வாய்க்கு பயந்து சபாவுக்குள் தஞ்சம் புகும் மாமிகள் சிலர். சபா செகரட்டரி நிச்சயம் தனி ஆவர்த்தனம் முடியும் போது வந்துவிடுவார். கச்சேரி ஆனதும், “உம்ம பிள்ளைதான் சார் அடுத்த மாண்டலின் ஸ்ரீனிவாஸ்”, ரேஞ்சிற்கு ஏத்திவிடுவார்.

குழந்தைக்கு நல்லதும் அல்லதும் தெரிகின்ற வயதா என்ன? பெற்றோருக்கோ அது ‘தம் மக்கள்’ (வள்ளுவர் பின்னிட்டார்) பாடிய கச்சேரி. குழலையும் யாழையும் விட இனிமையாகத்தான் இருந்திருக்கும். சந்தோஷமாய் தேங்காய் மூடியுடன் வீட்டிற்குச் சென்று, அடுத்த நாள் அரைத்து விட்ட சாம்பார் சாப்பிடலாம்.

அப்படி என்றால் காலை வேளை கச்சேரிகளே கூடாதா? இளைஞர்கள் பாடவே கூடாதா?

அப்படிச் சொல்லவில்லை. இன்று முன்னிலையில் விளங்கும் பாடகர்கள் பாடுவதை விட இளைஞர்கள் பாட்டை கேட்பதையே அதிகம் விரும்புபவன் நான். அப்படி நிறைய இளைஞர்கள் நிச்சயம் இருக்கிறார்கள். காவேரி தண்ணி குடித்தால்தான் சங்கீதம் வரும் என்ற காலம் எல்லாம் போய், தேம்ஸ், ஹட்ஸன் கரையோரம் வளர்ந்தும் கூட அற்புதமாய் இசைக்கும் கலைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் வாய்ப்பளிக்கலாம்.

ஆனால், இந்தக் கலைஞர்கள் ஒரே நாளில் எவ்வளவு இடங்களில்தான் பாட முடியும்? 55 சபாகளில் கூப்பிட்டால் அவர்கள் எவ்வளவு சபைக்குத்தான் மறுப்பு தெரிவிக்க முடியும்? வளர்ந்து வரும் சமயத்தில் வரும் கச்சேரியை வேண்டாம் என்றால், மாமா கோவித்துக் கொண்டு அடுத்த வருடம் ‘தன்னால் இயன்றதை’ செய்துவிடுவாரோ என்ற பயம் இவர்களுக்கு வருவது நியாயம்தானே?

தன் சபாவில் நடக்கும் ஒவ்வொரு கச்சேரியும் தரமானதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் சபா காரியதரிசிகளுக்கு உண்டா? அகாடமியில் நாள் முழுவதும் ஐந்து வேளையும் கச்சேரிகள் நடப்பது போல், தன் சபாவிலும் நடக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தால் போதுமா? என் பாட்டி சொல்வார், ‘கழுதை விட்டை கை நிறைய’, என்று. அப்படி கச்சேரிகள் வைப்பதற்கு வைக்காமல் போனால்தான் என்ன குடி முழுகிப் போய்விடும்?

இன்றைய நிலையில் திறமையானவர்கள் கச்சேரி ஒவ்வொன்றுக்கும் இணையாக தகுதியே இல்லாது மேடையேறும் கச்சேரிகளையும் நிச்சயம் அடையாளம் காண முடியும்.

தகுதி என்றால்? சிம்மநந்தனத்தில் பல்லவி பாட வேண்டும் என்றா சொல்கிறோம்? இல்லை. ஸ்ருதியுடன் பாட வேண்டும்.

கர்நாடக இசையில் ஸ்ருதியுடன் பாடுபவர்கள் குறைச்சல் என்று சொன்னால் நிறைய பேருக்கு கோபம் வருகிறது. அப்படிச் சொல்ல, தீவிர கர்நாடக சங்கீத ரசிகனான எனக்கும்தான் வலிக்கிறது. ஆனாலும், எவ்வளவு நாள்தான் denial-ல் வாழ்வது? பூனைக்கு என்றேனும் மணி கட்டித்தானே ஆக வேண்டும்?

இன்று பாடுபவர்கள் பலருக்கு மந்திர ஸ்தாயியில் காற்றுதான் வருகிறது. பஞ்சமம் வேண்டாமையா, நிஷாதம் தைவதமாவது கேட்க வேண்டாமா? தார ஸ்தாயியில் கண்ணை மூடி, கையைத் தூக்கி, கழுத்தைச் சாய்த்துக் கத்துவதுதான் சங்கீதமா? ’கூரை ஏறி கோழி பிடிக்காதவன் கோபுரம் ஏறி வைகுண்டம் போனானாம்’ என்பது போல, ஆதார ஷட்ஜத்தில் தஸ வித கமகமும் பாடி விட்டு, காம்போதியில் தார காந்தாரத்தில் கால் மணி நேரம் கார்வை (அதுவும் கள்ளக் குரலில்) கொடுக்கிறேன் என்று மல்லு கட்டுவது தேவைதானா?

இன்றைய சஞ்சயானாலும் சரி, அன்றைய ஜி.என்.பி ஆனாலும் சரி, இளம் வயதில் நிறைய கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர்கள் எழுத்தே சாட்சி. ஒவ்வொரு வருடமும் தன் கச்சேரியே டஜன் கணக்கில் இருக்கும் போது, குழந்தைகள் எங்கிருந்து கச்சேரிகள் கேட்கும்? கச்சேரி என்பது உடல் அளவிலும் சரி, மனதளவிலும் சரி, பெரும் உழைப்புதான். மதியம் 2.00 மணிக்கு உழைத்து வாசித்த குழந்தையை சாயங்காலம் கச்சேரியில் திருச்சி சங்கரன் வாசிக்கும் கோர்வைகளை எல்லாம் பதிய வைத்துக் கொள் என்றால் நடக்கிற காரியமா?

பெற்றோர்களே! உங்கள் ஆசை புரியாமல் இல்லை. சேஷகோபாலன் மாலையில் பாடும் மேடையில் என் மகன் காலையில் பாடினான் என்றால் பெருமைதான். ஆனால் அவன் காலையில் நாலு சீஸன் பாடிவிட்டு காணாமல் போவதையா நீங்கள் விரும்புகிறீர்கள்? அவனும் சேஷகோபாலனாக வேண்டும் என்றுதானே நினைப்பீர்கள்.

அப்படி நினைப்பது உண்மையெனில், குழந்தையை நல்ல சங்கீதத்தை கேட்க விடுங்கள். 9 அயதில் கச்சேரி செய்ய எல்லோரும் ஸ்ரீநிவாஸ் அல்ல. எப்போது கச்சேரி செய்ய ஆரம்பிக்கிறார்கள் என்பதை விட, எங்கே சென்று முடிக்கிறார்கள் என்பதுதான் முக்கியம் . 20 வயதுக்கு மேல் கச்சேரி செய்ய ஆரம்பித்து, எல்லோரும் மதிக்க தக்க வகையில் வாழ்ந்தவர்கள்/வாழ்பவர்கள் பலர் உண்டு.

சபா நிர்வாகிகளே! நீங்கள் கலையை வளர்ப்பதாக நினைத்து உங்கள் அட்டவணையை இட்டு நிரப்புவதால் செய்யும் பாதகம்தான் அதிகம். மாலை கச்சேரிகளுக்கு மட்டும்தான் நல்ல கலைஞர்கள் கிட்டினர் என்றால், அது மட்டும் போதும். நாள் முழுவதும் நடந்தால்தான் உங்கள் சபையை மதிப்போம் என்று யாரும் சொல்லப் போவதில்லை. எப்படியும் காலை வேளை கச்சேரிக்கு நீங்களே வருவதில்லை.

புராதன கோயில்களை நாசம் செய்து விட்டு, ஒவ்வொரு தெருவிலும் புதிதாய் கோயிலெழுப்புவதற்கும், புதிது புதிதாய் சபா ஆரம்பிப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. உங்களிடம் பணமிருந்தால், ராணி சீதை அரங்கில் எழுந்திருக்கும் போதெல்லாம் ஸீட்டிலிருந்து கிரீச்சிடும் ஒலி எழாமல் இருக்க வழி செய்யுங்கள். சாஸ்திரி ஹாலில் போஸ் ஸ்பீக்கர் வாங்கித் தாருங்கள். மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸின் அரதப் பழைய பேனரில் ’வருடத்தை’ வருடா வருடம் ஒட்டு வேலை செய்து மாற்றுகிறார்களே, அவர்களுக்கு ஒரு புது பேனர் வாங்கிக் கொடுங்கள்.

சபா நடத்துவது பணத்தை செலவழிக்க அல்ல, பணம் சம்பாதிக்க என்று நீங்கள் கூறுவீர்களாயின், உமக்கு வாழ்த்துகள். காற்றுள்ள போது தூற்றிக் கொள்ளுங்கள். ஈஸ்வரோ ரக்ஷது.

ஒரே ஒரு விஷயம்.

அபஸ்வரம் கேட்டால் ஆயுசு குறையுமாம்.

கச்சேரிக்கு வரும் எங்களை இன்னும் சில வருடங்கள் வாழ விடுங்கள்!

 

Read Full Post »