
International Foundation for Fine art, Music Forum சார்பில் வழங்கும் Media Award, இந்த ஆண்டு ஸ்ருதி பத்திருக்கையின் ஆசிரியர் வி.ராம்நாராயணுக்குக் கிடைத்துள்ளது. இவரை சில மாதங்கள் முன்தான் நேரில் முதன்முதலில் சந்தித்தேன் என்ற போதும், ஜி.என்.பி நூற்றாண்டு மலரை இருவரும் சேர்ந்து தொகுத்ததால், சில மாதங்களிலேயே மிக நெருக்கமாகிவிட்டதாய் உணர்கிறேன்.
ராம் இந்தத் துறையில் மிகவும் சீனியர் என்ற போதும் மிக மிக அடக்கமானவர். பேசுகின்ற பத்தாவது வார்த்தையில் தன்னைப் பற்றிப் பேசிக் கொள்பவர் மலிந்திருக்கும் நேரத்தில், அவரைப் பற்றி பேச ஆரம்பித்தால், பேச்சை ஸ்ருதியைப் பற்றித் திருப்பிவிடுவார். இன்றைய நிலையில், சங்கீதத்துக்காகவும், நாட்டியத்துக்காகவும் நடத்தப்படும் ஒரே தரமான இந்திய இதழ் ஸ்ருதிதான். அந்த இதழுக்கு ஆசிரியர் என்ற கர்வம் ஒரு துளி கூட தென்படாத மனிதர். பல விழாக்களில் கடைசி வரிசையில் உட்கார்ந்து குறிப்பெடுத்துக் கொண்டிருப்பார். கூச்ச சுபாவம் நிறைந்தவர்.
முதலில் ஒரு நல்ல இசை ரசிகர். எந்த ஒரு கலைஞரின் பாட்டையும் திறந்த மனதோடு அணுகுபவர். இளம் கலைஞர்களை ஊக்குவிப்பதை ஸ்ருதியின் முக்கிய கொள்கைகளுள் ஒன்றாக கருதுபவர். தன் கருத்துகளையும், ஸ்ருதி ஆசிரியர் பொறுப்பையும் அவர் அழகாக வேறுபடுத்தி வைத்திருப்பதைக் காண ஆச்சரியமாய் இருக்கிறது.
ஸ்ருதியில் profile செய்ய விட்டுப் போன இசை மேதைகளை எப்படியும் செய்துவிட வேண்டும் என்று நினைப்பவர். இவரது முயற்சியால்தான் மதுரை மணி, பாலக்காடு மணி பொன்றவர்களைப் பற்றிய இதழ்கள் (இவ்வளவு ஆண்டுகள் கழித்து) வெளியாயின. இதையெல்லம அவரிடம் சொன்னால், இன்னும் என்னென்ன செய்திருக்க வேண்டும், எங்கெல்லாம் தவறுகள் நுழைந்துவிட்டன என்று மட்டுமே பேசுவார்.
சம கால கலைஞர்களைப் பற்றி இவர் ஸ்ருதியில் செய்யும் பதிவுகள் மிகவும் முக்கியமானவை. விஜய் சிவாவும், ஜெயஸ்ரீ-யும் மறைந்த பின், அவர்களைப் பற்றி கிளருவதை விட, அவர்கள் உச்சியில் இருக்கும் போதே அவர்களைப் பற்றிய விவரங்களை வெளியிடுவது மிகவும் அவசியம் என்றே கருதுகிறேன்.
இசைத் துறைக்கு வருவதற்கு முன், கிரிக்கெட்டில் ஆட்டக்காரராகவும், எழுத்தாளராகவும் நிறைய சாதித்தவர் ராம். தமிழ்நாடு கிரிக்கெட் வரலாற்றைப் பற்றி இவர் எழுதியுள்ல நூல் மிக அரிய பதிவு. இந்தத் துறையிலும் இவர் தொடர்ந்து எழுதுவார் என்று நம்புகிறேன்.
ஸ்ருதியைப் பொறுத்த மட்டில், ராம்நாராயணுக்கு இன்னும் நிறைய கனவுகள் இருக்கின்றன. இசை உலகுக்கு பேறிருந்தால் அவை மெய்ப்படும்! தன்னை முன் நிறுத்திக் கொள்ளாமல் பத்திரிக்கையை முன் நிறுத்தும் இவர் பணியை உணர்ந்து, இவருக்கு இந்த வருடம் விருது வழங்கிய அமைப்புக்கு பாராட்டுகள்.
Read Full Post »