Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘solvanam’

அப்படி இப்படி தட்டித் தடவி நான்கு வருடமாய் சிறியதும் பெரியதுமாய் இதையும் சேர்த்து நூறு பதிவுகள்.

‘புதுமை’யாய் இருக்கட்டுமே என்று அருண் நரசிம்மனுடன் இணைந்து எழுதியுள்ளேன்.

tkr-011

1912இல் திருச்சி மாவட்டம் வராஹனேரியில் ஜூன் மூன்றாம் தேதி பிறந்த ஒரு கர்நாடக சங்கீத வித்வானின் நூற்றாண்டு நினைவு விழாவிற்கு நேற்று மாலை சென்றிருந்தோம். சென்னை போக்குவரத்தை எங்கள் வாகனத்தில் கலந்தாலோசித்துக் கதைத்துக் கலைந்து சற்று தாமதமாக சபாவை அடைகையில், ஐந்தரை மணி என்று சொன்ன நேரத்திற்கு விழாவை தொடங்கிவிட்டிருந்தனர் என்பது தெரிந்தது. அவ்விழாவின் சொற்பமான நேர்த்தியான நிகழ்வுகளில் அது முதன்மையானது.

அரங்கினுள் ரசிகர்களாய் நாங்கள் எதிர்பார்த்ததைவிடவே நல்ல கூட்டம். அடாணா, கருடத்வனி, கௌரிமனோஹரி, வாகதீஸ்வரி, மாஞ்சி, நீலாம்பரி என்று கச்சேரி மேடைகளில் அரிதான ராகங்களின் ஆலாபனைகளில் சிறந்த நூற்றாண்டு விழா நாயகரின் இன்றும் மனத்தில் நிறையும் இசையின் ஆகர்ஷணம் என்றே எடுத்துக்கொள்வோம். விழா நாயகரின் கொடை பற்றி ஒரு கானொளி பிரஸண்டேஷன் ஓடிக்கொண்டிருந்தது. தோடி மற்றும் கல்யாணி ஆலாபனைகளை அவர் கையாண்ட விதத்திற்கு உதாரணங்களாய் அடுத்தடுத்து ஒலித்த இசைத்துண்டுகள் மனதை நிறைத்தது. ஒரு ராகத்தின் சுருதி பேதம் கேட்டது போலவும் உற்சாகமாகவே இருந்தது.

தொடர்ந்து படிக்க இங்கே க்ளிக்கவும்

Read Full Post »

டிசம்பர் 11 அன்று சென்னை ராக சுதா அரங்கில் துருவ நட்சத்திரம் வெளியானது.

ஞாயிறு காலை 9.00 மணிக்கு அவ்வளவு பேர் கூடி அரங்கை நிறைத்தது ஆச்சர்யமாக இருந்தது.  இந்த விழாவுக்காகவே பெங்களூர், ஓசூர் போன்ற ஊர்களில் இருந்து நண்பர்கள் வந்து நெகிழ வைத்தனர்.

விழாவைப் பற்றி கிரியும், சுகாவும் விவரமாகவே எழுதியுள்ளனர்.

அன்றைய கச்சேரியில் பழனி வழியில் வந்திருக்கும் இரு இளம் வித்வான்களின் தனியை இங்கு காணலாம்.

நூல் வெளியான அன்று ஹிந்துவில், கோலப்பன் புத்தகத்தைப் பற்றியும் என்னைப் பற்றியும் எழுதியிருந்தார். சில நாட்களில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலும் ஒரு கட்டுரை வெளி வர, “என்ன செய்யற-னு தெரியல. ஆனா என்னமோ செய்யர போல இருக்கு”, என்கிற ரீதியில் பல நண்பர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்தன.

இந்த இரு கட்டுரைகளின் உபயத்தில், ம்யூசிக் அகாடமியில் கர்நாடிக் ம்யூசிக் புக் ஸ்டோரின் ஸ்டாலில் புத்தகம் எதிர்பார்த்ததை விட நன்றாகவே விற்றது என்றால், இணையத்தில் நண்பர் சொக்கன் எழுதிய அறிமுகத்தினால் இந்தப் புத்தகத்தை வாங்கினோம் என்று பலர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பினர்.  “இந்தப் புத்தகத்துக்கு இவ்வளவு ஆர்டரா?” என்று உடுமலை.காம் சிதம்பரம் அதிர்ச்சியில் பல நாட்கள் இருந்தார். சில நாட்களாய் ஆர்டர் இல்லை என்று நேற்று பேசும் போது சொன்னார். அப்போதுதான் அவர் குரலில் கொஞ்சம் ஆசுவாசம் தெரிந்தது.

புத்தகம் எழுதும் போது, கதை போல எழுதிய அத்தியாயங்கள் எல்லாம் அதிகப் பிரசங்கம் ஆகி விடுமோ என்ற பயம் எனக்கு இருந்தது. இத்தனைக்கும் மான்பூண்டியா பிள்ளை, தட்சிணாமூர்த்தி பிள்ளை போன்ற அத்தியாயங்கள் சொல்வனத்திலும், இந்த வலைப்பூவிலும் வெளியானவைதான். புத்தகத்தைப் படித்தவர்கள் அனைவருக்கும் அந்தப் பகுதிகளே பெரிதும் பிடித்திருக்கின்றன. பிரபல எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்ரன், இரா.முருகன் போன்றோரும் லா.ச.ரா-வின் மகன் சப்தரிஷி போன்ற தேர்ந்த ரசிகர்களும் இதனை உறுதி செய்தனர்.  இதுவரை இணையத்தில் வெளியாகாத ஓர் அத்தியாயம் சில நாட்களுக்கு முன் (சேதுபதியின் பதிப்புரையோடு) தமிழ் பேப்பரில் வெளியானது.

இ.பா-வும் அ.மி-யும் புத்தகத்தைப் பற்றிச் சொன்னவை இந்த வார சொல்வனம் இதழில் வெளியாகியுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன் தினமணியிலும் புத்தகத்தில் இருந்து ஒரு சிறிய பகுதி வெளியாகியிருந்தது.

இந்தப் புத்தகத்துக்கு இவ்வளவு விளம்பரம் நான் எதிர்பார்க்காத ஒன்று.

எல்லாவற்றையும் விட,  “இணையத்தில் ஓர் ஓரத்தில் எழுதவதன் மூலம் இவ்வளவு நண்பர்களா”, என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது.

அந்த நண்பர்களுள் பலரை புத்தகக் கண்காட்சியில் சந்திக்க நினைத்திருந்தேன். ஆனால், பணி நிமித்தமாக இந்த வாரக் கடைசியில் வெளிநாடு செல்ல வேண்டி உள்ளது. திரும்ப ஒன்றரை மாதங்கள் ஆகும்.

புத்தகங்களுடனும், நண்பர்களுடனும் உறவாடும் அரிய வாய்ப்பை இழக்கத்தான் வேண்டி உள்ளது 😦

புத்தகக் கண்காட்சியில் டிஸ்கவரி புக் பேலஸின் ஸ்டாலில் (ஸ்டால் எண் 334)  ‘துருவ நட்சத்திரம்’ புத்தகம் கிடைக்கும்.

இணையத்தில் பெற: http://udumalai.com/?prd=thuruva+natchatram&page=products&id=10381

Read Full Post »

கடந்த சில மாதங்களாகவே இங்கு எதுவும் எழுதவில்லை. அதற்கு முக்கிய காரணம் நான் எழுதிக் கொண்டிருந்த நூல்.
ஸ்ருதி பத்திரிகையின் பழைய இதழ்களைப் படிப்பது எனக்குப் மிகவும் பிடித்த பொழுது போக்கு.  ஒரு முறை 1987-ல் வந்த ஸ்ருதி இதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்த போது, மிருதங்க வித்வான் தஞ்சாவூர் உபேந்திரன் எழுதியிருந்த கடிதம் கண்ணில் பட்டது.   “இடது கைப்பழக்கம் உள்ள ஒவ்வொரு மிருதங்க வித்வானும், ஒவ்வொரு வேளை சாப்பிடும் போது பழனி சுப்ரமணிய பிள்ளையை நன்றியுடன் நினைத்துக் கொள்ள வேண்டும்” என்று அவர் எழுதியிருந்தது மனதில் ஆழமாகப் பதிந்தது.  அன்று விழுந்த முதல் விதை, காலப் போக்கில் பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாசிப்பைக் கேட்கக் கேட்க விருட்சமாய் வளர்ந்தது.
இந்த நூலை எழுத ஆரம்பிக்கும் போது, இதை யாருக்காக எழுதுகிறேன் என்ற கேள்வி எழுந்தது.  கர்நாடக இசையில் தேர்ச்சி உடையவர்களுக்காகவா? அல்லது பரிச்சயம் மட்டும் உள்ளவர்களுக்காகவா? அல்லது பரிச்சயமே இல்லாமல், பழனி சுப்ரமணிய பிள்ளையின் பெயரைக் கேள்வியே பட்டிருக்காதவர்களுக்காகவா? இந்தக் கேள்விக்கு பதில் காண்பது சுலபமாக அமையவில்லை.  ஒருவருக்காக எழுதி மற்றவரை விடுவதற்கு மனம் ஒப்பவில்லை.  எல்லோருக்குமாக எழுதுவது என்பதோ இயலாத காரியம் என்ற போதும் அதைச் செய்யவே விரும்பினேன்.  இதன் விளைவாக இந் நூலின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு விதங்களில் அமைந்திருக்கின்றன.  குறிப்பாக, பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாசிப்பை நன்கு உணர்ந்தவருக்கு, கற்பனையாய்க் காட்சி விரித்து கதை போல எழுதப்பட்டிருக்கும் பகுதிகள் எரிச்சலூட்டக் கூடும்.   “என்னவோ நேரில் இருந்து பார்த்தா மாதிரி எழுதியிருக்கான்” என்று இளக்காரப் பார்வை வீசக் கூடும் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறேன்.  இந்த நூலில் கற்பனைகளைக் கலந்து நான் எழுதியிருக்கும் பகுதிகளில் பெரும்பாலானவை சொல்வனம் இணைய இதழில் தனிக் கட்டுரைகளாக வெளியாகியுள்ளவை.  அவை வெளியான போது பெற்ற வரவேற்பே என்னை அந்தப் பகுதிகளை மாற்றாமலேயே புத்தகத்தில் சேர்த்துக்கொள்ளத் தூண்டின.
துருவ நட்சத்திரம்
பழனி சுப்ரமணிய பிள்ளையின் பங்களிப்பை முழுமையாக உணர அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையும் வாசிப்பும் மட்டும் போதாது, அவர் வாசித்த வாத்யம்; அதன் வரலாறு; அவருக்கு முன்னால் இருந்த நிலை; அவர் வாசிப்பை பாதித்தவர்கள்; அவர் சம காலத்தினர் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போதுதான் முழுமையான பார்வை கிடைக்கும்.  இவற்றை எல்லாம் இந்த நூல் முழுமையாகப் பதிவு செய்திருக்கிறது என்று சொல்ல முடியாது.  மேலே குறிப்பிட்ட அனைத்திலும் ஒரு பறவைப் பார்வையை அளிக்கவே முயன்றிருக்கிறேன்.
இந்த நூலுக்கான அடித்தளமாக, பழனியுடன் நேரில் பழகியர்களின் நேர்காணல்களே அமைந்துள்ளன.  நேர்காணல்களை என்னால் இயன்றவரை நானே எடுத்தேன் என்றாலும் கணிசமான நேர்காணல்களை ஏற்கெனவே கே.எஸ்.காளிதாஸ் எடுத்து வைத்திருந்தார்.  அவர் பேட்டி கண்டிருந்தவர்களுள் பெரும்பாலானவர்கள், நான் தகவல் சேகரிக்க ஆரம்பிக்கும் போது உயிருடன் இல்லாதவர்கள்.  காளிதாஸ் சிறந்த மிருதங்க வித்வான் மட்டுமன்றி தெளிவாகவும் சுவையாகவும் எழுதக் கூடியவர்.  நினைத்திருந்தால், பழனியைப் பற்றிய நூலை என்னை விட சிறப்பாக அவர் எழுதியிருக்க முடியும்.  ஆனால், ஏனோ என் மூலமாகத்தான் இந்த நூல் வெளிவர வேண்டும் என்பதில் என்னை விட அதிக ஆர்வமாக இருந்தார்.  சில வாரங்களுக்கு ஒரு முறை தொலைபேசி மூலமும், நேரில் சந்திக்கும் போதும் தூண்டிக் கொண்டே இருந்தார்.  அவரது வழிகாட்டலும் தூண்டுதலும் இல்லாமல் இந்த நூலை எழுதியிருக்க முடியாது என்பதில் சந்தேகமே இல்லை.
காளிதாஸ் கொடுத்த தகவல்களை மட்டும் வைத்து இந்த நூலை எழுதியிருந்தாலும் இப்போதுள்ள நூலிலுள்ள வடிவத்திலிருந்து அது அதிகம் வேறுபட்டிருக்காது.  இருப்பினும், எனக்குத் தெரிந்த அத்தனை வழிகளிலும், சுமார் நான்கு ஆண்டுகள் தகவல்களைச் சேகரித்த பின்னரே இந்த நூலை எழுதியுள்ளேன்.  கருத்திலோ, தகவல்களிலோ பிழை வராமலிருக்க முடிந்த வரை முயன்றுள்ளேன்.  இதையும் மீறி தகவல் பிழைகளோ, கருத்து முரண்களோ இருப்பின், வாசகர்கள் தயங்காமல் தெரிவிப்பார்களானால் அடுத்த பதிப்புகளில் திருத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்.
இந்நூல் மலரக் காரணமானோர் பலர். என் தம்பியின் மிருதங்க ஆசானாய் அறிமுகமாகி, எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே ஆகிவிட்டவர் திரு. திருவையாறு பாலசுப்ரமணியம். லயம் என்றால் என்னவென்றே அறியாத நிலையில் மிருதங்க வாசிப்பின் அடிப்படைகளையும், கச்சேரியில் கேட்டு ரசிக்க வேண்டிய அம்சங்களையும் இவரிடம்தான் அறிந்து கொண்டேன்.
1962-ல் மறைந்து விட்ட பழனியை இன்றளவும் கேட்டு ரசிக்கக் காரணமாக இருப்பவை கச்சேரி ஒலிப்பதிவுகள். அவற்றை அரும்பாடுபட்டு சேர்த்திருப்பினும், எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் என்னிடம் பகிர்ந்து கொண்ட திரு.நாராயணசாமி, திரு.சிவராமகிருஷ்ணன், திரு.லக்ஷ்மி நரசிம்மன், திரு.கிருஷ்ண பிரசாத் ஆகியோரிடம்பட்டுள்ள கடனை இந்த ஜென்மத்தில் அடைக்க முடியாது.
நூலை எழுதும் போது பல சமயங்களின் எப்படி மேலே கொண்டு செல்வது என்ற குழப்பங்கள் ஏற்பட்டன. அத்தகைய சமயங்களில் எல்லாம் ‘தினமணி’ சிவகுமாரிடம் உரையாடித் தெளிவடைந்துள்ளேன். இந்த நூலுக்கு வேராய் பத்திரிகை செய்திகளும், நேர்காணல்களுமே அமைந்துள்ளன. பழைய பத்திரிகைக் களஞ்சியங்களில் தேட, ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தினர் அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தனர்.
இந்த நூலுக்காக திரு. திருச்சி சங்கரனை நேர்காணல் எடுத்த போது, டிசம்பர் சீஸன் களேபரத்துக்கு இடையிலும் இரண்டு முறை நேரம் ஒதுக்கி, தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். புதுக்கோட்டை லய பரம்பரையின் முதன்மைக் கலைஞர்களுள் ஒருவரான திரு.சங்கரனுக்கு ‘சங்கீத கலாநிதி’ விருது கிடைத்துள்ள வேளையில் என் புத்தகம் வெளிவருவதை எண்ணி மகிழ்கிறேன்.
முனைவர் பி.எம்.சுந்தரத்தின் ஆய்வுகள் நான் ஆதர்சமாகக் கருதுபவை. ஒரு முறை நேரிலும் பல முறை தொலைபேசியிலும், கலைஞர்கள் பற்றியும், சென்ற நூற்றாண்டின் சங்கீத உலக நிகழ்வுகள் பற்றியும் எனக்கெழுந்த சந்தேகங்களை பொறுமையாகப் போக்கினார். பழனி என்ற அற்புத மனிதரைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியவர் திரு.ஜெ.வெங்கடராமன், பழனியைப் பற்றிய நினைவுகளை அவர் கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்டது என்னுள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. பழனி என்ற கலைஞன் காலம் கடந்து நிற்பதை உணரும் வகையில் பழனிக்கு அடுத்த தலைமுறை வித்வானான மதுரை டி. சீனிவாஸனும், அதற்கு அடுத்த தலைமுறை வித்வான் அருண்பிரகாஷும் பேசினர். பாலக்காடு மணி ஐயரின் மகன் திரு. ராஜாராம் கூறிய தகவல்கள் மணி ஐயர் – பழனி உறவைப் புரிந்து கொள்ள ஏதுவாய் அமைந்தன.
நூலின் சில பகுதிகளை, எல்லோரும் படிக்கும் விதமாய் இருக்க வேண்டும் என்பதற்காக, கொஞ்சம் கற்பனை கலந்து கதை போல எழுதய போதும், கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. அப்படி எழுதிய பகுதிகளுள் ஒன்றான மான்பூண்டியா பிள்ளையின் கதையைப் பாராட்டி எழுத்தாளர் ஜெயமோகனும், எழுத்தாளர் விமலாதித்த மாமல்லனும் வெளியிட்ட குறிப்புகள் எனக்குத் துணிச்சலை அளித்தன.
இதுவரை சொல்வனம் பதிப்பகம் வெளியிட்டு இருக்கும் இரு புத்தகங்களும் பொக்கிஷங்கள். மூன்றாவதாய் என் புத்தகம் வெளி வருவதில் எனக்குப் பெருமகிழ்ச்சி. நூலை நேர்த்தியாய் வடிவமைத்த திரு.மணிகண்டனும், அவசரம் என்ற போதும் நூலைத் தரமாக அச்சடித்துக் கொடுத்த நண்பர் ஜெயராமனும் ஆபத்பாந்தவர்கள்.
நான் முறையாகத் தமிழ் பயின்றவன் அல்லன். என் எழுத்தை செம்மைப்படுத்தியதில் பெரும் பங்கு திரு. ஹரிகிருஷ்ணனையே சேரும். என் தாயார் ஆர்.விஜயலட்சுமி, தந்தையார் ஆர்.மகாதேவன், என் தம்பி டி.எம்.சாய்ராம், நண்பர்கள் ஷீலா ராமன், முரளி, அருண் நரசிம்மன், ராமச்சந்திர ஷர்மா, சிந்துஜா, திரு.பாரதி மணி, ஷங்கர் இராமநாதன் ஆகியோர் பல்வேறு அத்தியாயங்களைப் படித்துக் குறை, நிறைகளைச் சுட்டினர்.
தகவல் சேகரிக்க வேண்டி பல பயணங்களை மேற்கொண்ட போதும், எழுதுகிறேன் என்ற பெயரில் பல மாதங்கள் கழித்த போதும், “என்னைக் கவலைகள் தின்னத் தகாமல்” பார்த்துக்கொண்டவர் என் மனைவி ஆர்.கிருத்திகா.
அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
டிசம்பர் 11-ம் தேதி அன்று இந்த நூல் சென்னை ராக சுதா அரங்கில் (மயிலாப்பூர், நாகேஸ்வரன் பூங்கா அருகில்) காலை 9.00 மணிக்கு வெளியாகிறது. வாசகர்கள் அனைவரையும் இந்நிகழ்வுக்குப் பணிவுடன் வரவேற்கிறேன்.

Read Full Post »