
சில வாரங்கள் முன், டி.என்.கிருஷ்ணனின் அகாடமி கச்சேரிகள் பற்றி எழுதியிருந்தேன். ஜனவரி 1-ம் தேது அவர் அகாடமியில் (சில வருடங்களாக) வாசிக்காததால், அவர் கச்சேரிகள் கேட்டு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.
டி.என்.கிருஷ்ணனுக்கு மட்டும் என்ன வயது கொஞ்சமாகவா ஆகிறது? ரொம்ப அற்புதமாய் அவர் வாசித்தக் கச்சேரிகளைக் கேட்டுவிட்டு, இப்போது கேட்டு, அது சரியாக அமையவில்லை என்றால், மனதுக்கு கஷ்டமாக இருக்குமே என்ற எண்ணம் வேறு.
டிசம்பர் 25-ம் தேதி காலையில், அகாடமியில் லால்குடி ஜி.என்.பி-யைப் பற்றி பேசுவதாக இருந்ததால், காலையில் 8.00 மணிக்கே அகாடமியில் ஆஜர். நான் அரங்குக்குள் செல்வதற்குள், அரங்கம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. லால்குடி பல வருடங்களுக்கு முன் பேசிய ஒலிப்பதிவிலிருந்து சில பகுதிகள், லால்குடியும் ஜி.என்.பி-யும் சேர்ந்து வாசித்த கச்சேரிகளில் இருந்து சில பகுதிகள் என்று ஜி.ஜே.ஆர்.கிருஷ்ணன் அற்புதமாய் தொகுத்து வழங்கினார். குறிப்பாக, ஜி.என்.பி-க்கு லால்குடி வாசித்த முதல் கச்சேரி, ஸ்வரம் பாடும் போது ஜி.என்.பி வைக்கும் பொருத்தங்கள், சிவசக்தி ராகம் உருவான கதை, பக்கவாத்தியங்களை உற்சாகப்படுத்திப் பாராட்டும் பாங்கு போன்ற விஷயங்களைப் பற்றி கூறிய விதம் ரொம்பவே ரசிக்கும்படி இருந்தது.
lec-dem முடிந்ததும் டி.என்.கிருஷ்ணன் கச்சேரிக்கு செல்லலாமா வேண்டாமா என்று குழப்பம். காலையில் எதுவும் சாப்பிடாததால் காண்டீனுக்குச் செல்லலாம், சாப்பிட்ட பின் முடிவு செய்து கொள்ளலாம் என்று காண்டீனுக்குச் சென்றேன். அங்கு போனால், அனுமார் வால் போல் கூட்டம். இது சரிப்படாது என்று அரங்கினுள் நுழைந்தேன். நான் நுழைந்த போது, கல்யாணி ராக வர்ணம் தொடங்கியது. வர்ணத்திலும், அதனைத் தொடர்ந்த ‘எந்தரோ’-விலும் கால்ப்ரமாணம் கொஞ்சம் முன்னும் பின்னுமாக இருந்தது போலத் தோன்றியது. ‘சீக்கிரம் கிளம்பவேண்டியதுதான்’, என்று நினைக்கும் போது, பூர்வி கல்யாணி ராகம் வாசிக்க ஆரம்பித்தார் கிருஷ்ணன். மேல் ஷட்ஜத்தை நோக்கி நகர்ந்து, கடைசியில் ஷட்ஜத்தில் நின்று கார்வை கொடுக்கும் போது, வயலினின் ஒலியை பாதியாக்கி, மெல்லினமாய் ஸ்ருதியோடு இழைய விட்டவுடன், பசி பறந்தோடிவிட்டது. கச்சேரியில், இந்த இடத்திலிருந்து Krishnan of the past கேட்கக் கிடைத்தார்.
ஞானமொஸகராதா வாசித்து, நிதானமாய் “பரமாத்முடு ஜீவாத்முடு”-வில் நிரவல் வாசித்தார். கண்ணை மூடினால், வாசிப்பது கிருஷ்ணனா, விஜி-யா என்று கண்டுபிடிக்க முடியாதபடி இருந்தது விஜி-யின் வாசிப்பு. எண்பதைத் தாண்டியும் கிருஷ்ணனின் கைகளில் பேசும் துரிதம் பிரமிக்க வைத்தது. பக்தவத்சலத்தின் வாசிப்பு அன்று sweetness personified. இவர் அடியாய் அடித்துத் தொப்பியைக் கிழித்த கச்சேரிகள் சிலவும் நான் கேட்டுள்ளேன். ஆனால், கிருஷ்ணனுக்கு வாசித்த கச்சேரிகள் அனைத்திலும் இவர் வாசிப்பு பரிமளிக்கும். சுநாதமாய்த் குமுக்கி, ஸ்ருதியோடு குழையும் மீட்டு, கம்பீரமாய் ஒலிக்கும் டேக்கா என்று கச்சேரியை வேறொரு தளத்துக்கு இட்டுச் சென்றது பக்தவத்சலத்தில் வாசிப்பு.
கச்சேரிக்கு நடுவில், வலையப்பட்டி வந்து முதல் வரிசையில் உட்கார்ந்த போது, தவில்காரரைப் பார்த்ததும், பக்தவத்சலம், (வாத்தியத்தின்) மிருதவுவான அங்கங்களைப் புண்ணாக்கி விடுவாரோ என்று பயந்தேன். நல்ல வேலையாக அப்படி ஒன்றும் ஆகவில்லை.
கச்சேரியை, எக்கெச்சக்க உருப்படிகள் கொண்டு அடைக்காமல், கச்சேரி தொடம்ங்கிய முக்கால் மணி நேரத்துக்குள், மெயின் உருப்படியை வாசிக்க ஆரம்பித்தார். பைரவியை, ஆர அமர மூன்று ஸ்தாயிகளிலும் வாசித்து ஒரு meditative mood-ஐ உருவாக்கி, அது கெடாத வண்னம் “காமாட்சி” (பைரவி ஸ்வரஜதி) வாசித்தார். இதைக் கேட்டே பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
அடிக்கடிப் பாடிக் கொண்டிருந்த டி.எம்.கிருஷ்ணா கூட சமீபகாலமாய், இதைப் பாடுவதாகத் தெரியவில்லை. “ஷ்யாம கிருஷ்ண சகோதரி” என்ற வரியை நிரவலுக்கு எடுத்துக் கொண்டார். கல்பனை ஸ்வரங்களை, சர்கஸ் ஜாலங்கள் ஏதுமின்றி, பைரவியின் பாவங்கள் சொட்டச் சொட்ட வாசித்து, தனி ஆவர்த்தனத்துக்கு விட்டார்.
ஆதி தாள தனி ஆவர்த்தங்களையே கேட்டு கேட்டு அலுத்த நிலையில், மிஸ்ரத்தில் தனி கேட்க நன்றாக இருந்தது. (தனி முடிந்ததும், கிருஷ்ணனே இதைச் சொன்னார்). குறிப்பாக, மிஸ்ர சாபு-வுக்குள், ஒவ்வொரு தட்டையும் திஸ்ரமாக்கி, வாசித்த அமைப்புகள், கரணம் தப்பினால் மரணம் வகை என்றாலும், கேட்க சுகானுபவமாகவே அமைந்தன. பக்தவத்சலமமும், கோபாலகிருஷ்ணனும் எத்தனை துரிதமாக வாசித்தும் , வாத்தியத்தை அடிக்கமால் வாசித்தது தனிச் சிறப்பு. இறுதியில் வைத்த கோர்வையும் வெகு அழகாக இருந்தது (என்பதற்கு மேல், எனக்குச் சொல்லத் தெரியவில்லை.).
தனி முடிந்த போது மணி 11.00. கச்சேரி நிறைவாக இன்னும் 45 நிமிடங்கள் இருந்தது. “இந்த பைரவிக்கு மேல் கேட்க என்ன இருக்கிறது?”, என்று நினைத்து, வயிற்றுக்குத் தீனி போட எண்ணிக் கிளம்பினேன். வாயிலை அடையும் போது, காபி ராகம் இழையோட ஆரம்பித்தது. அடுத்த நாலு நிமிடங்களுக்குள் எனக்கேற்பட்ட உணர்வுகளைச் சொல்ல தியாகராஜரிடம் இருந்து கடன் வாங்க வேண்டும். “இந்த சௌக்யமனினே ஜெப்ப ஜால எந்தோ ப்ரேமோ எவரிகி தெலுஸுனோ?” என்ற கிருதியில் “ராமன் என்ற பிரம்மானந்தத்தை, அவனது அன்பின் அளவை, இவ்வளவு என்று யாரால் நிர்ணயித்துச் சொல்ல முடியும்?”, என்கிறார். இதைச் சொல்ல அவர் காபி ராகத்தைத்தான் உபயோகிக்கிறார். அன்று கிருஷ்ணன் வாசித்த காபி, தியாகராஜ அனுபத்தின் வேறொரு copy. ஆனால், என் அனுபவமோ copy அல்ல நிஜம்:-). எப்பேர்பட்ட வாசிப்பு என்றால் யாரால் சொல்ல முடியும்? கேட்டவர்கள் புண்ணியம் செய்தவர்கள்!
வழக்கமாய், பதினைந்து நிமிடங்களுக்குள் பாடும் சம்பிரதாய ராகம் தானம் பல்லவியை, நான் சிறிதும் விரும்ப மாட்டேன். அன்று கிருஷ்ணன் சரியாய் 15 நிமிடங்கள்தான் RTP வாசித்தார். அதுவே காபியின் மொத்த அழைகையும் குழைத்துக் கொடுக்கப் போதுமானதாய் இருந்தது.
காபி-யைக் கேட்ட பின், அகாடமி கேண்டீனில், மிளகு குழம்பு சாதத்தை ஒரு பிடி பிடித்தே, இரண்டு ப்ளேட் கபளீகரம் செய்துவிட்டு, அரங்கினுள் திரும்பி நுழைவத்ற்குள், சுருட்டி ராகத்தில் திருப்பாவை வாசித்து முடித்துவிட்டு, கிருஸ்துமஸ்-காக ‘jingle bells’ வாசித்தார். எனக்கென்னவோ அது உறுத்தலாக இல்லை. ஆனால், பலர் கச்சேரி முடிந்ததும், ‘சாஸ்த்ரோக்தமா வாசிக்கற ஆள், இப்படி ஜிங்கிள் பெல் எல்லாம் வாசிக்கணுமா?’, என்று அங்கலாய்த்தனர்.
சிந்து பைரவி ஒரு ‘TNK special’ ராகம். அவரது usual standard-ல் வாசித்து என்னைக் கண் கலங்கச் செய்தார். சிந்து பைரவி முடிந்தும், கொஞ்சம் நேரம் இருந்ததால், ஆர அமர சவுக்கமான கால்ப்ரமாணத்தில் மங்களம் வாசித்தார். “அட! இவ்வளவு அழகான பாடலையா, ராஜதானி வேகத்தில் எல்லோரும் பாடுகின்றனர்!”, என்று வியந்தேன்.
கச்சேரி முடிந்ததும், மூன்று நிமிடங்கள் விடாமல் கரகோஷம் எழுப்பி standing ovation கொடுத்தனர் அகாடமி ரசிகர்கள்.
என் பல வருட ஜனவரி-1 அனுபவம் தொலைந்து போகவில்லை! சற்றே இடம் மாறியிருக்கிறது.
Read Full Post »