21 Dec 2009 @ Krishna Gana Sabha, T.N.S Krishna, M.Chandrasekaran, Umayalpuram Sivaraman, E.M.Subramaniam
எனக்கு சேஷகோபாலன் பாட்டென்றால் உயிர். 2004 வரை சென்னையிலும், பெங்களூரிலும் பல இடங்களில் அவர் கச்சேரிகளைக் கேட்டிருக்கிறேன். தஞ்சாவூரில் படித்த போது, திருச்சிக்கு, இவர் கச்சேரி கேட்பதற்காகவே சென்றிருக்கிறேன்.
சில வருடங்களாய் இவரைக் கேட்க வேண்டுமென்றால், ஒலிப்பதிவுகளை நாடுவேன். நேரில் கேட்கும் அனுபவத்துக்கு ஏங்கும் போது டி.என்.எஸ் கிருஷ்ணாவின் கச்சேரிகளுக்குச் செல்கிறேன்.
பல சமயங்களில் பாத்திரம் பொன்னால் ஆனதாக இருக்கும், பண்டம் பழையதாய் இருக்கும். அல்லது, பண்டம் பாயசமாக இருக்கும், பாத்திரம் ஓட்டை விழுந்த தகரமாக இருக்கும். எப்போதாவது ஒரு முறைதான் பொற் பாத்திரத்தில் நற் பாண்டம் அமையும். கிருஷ்ணாவின் விஷயத்தில் அது நடந்துள்ளது.
கிருஷ்ண கான சபையில் காலை வேளை கச்சேரி. எம்.சந்திரசேகரன், உமையாள்புரம் சிவராமன், ஈ.எம்.சுப்ரமணியம் என்று பக்க வாத்தியங்கள் பட்டியலே கச்சேரிக்கு என்னை இழுத்தது. அண்ணான் சாலையிலிருந்து, பனகல் பார்க் வரை, காலை ஒன்பது மணிக்கு மேல், ஒரு முறை கூட நிற்காமல் பாண்டி பஜாரைக் அடைந்த போதே, இந்த நாள் இனிய நாள் என்று உள்ளுக்குள் பட்சி கூவியது.
விடுமுறை நாட்கள் நீக்கி, மற்ற நாட்களில் காலை வேளை கச்சேரிகளை அனைத்து சபையினரும் இலவச கச்சேரிகளாக்கி விடலாம். ரிடையர் ஆன மாமிகளும், மாமாகளும் காசு கொடுத்து கச்சேரி கேட்பார்கள் என்று சபாகள் நினைப்பதுதான் ஆச்சர்ய்மாக இருக்கிறது. கிருஷ்ண கான சபை மாதிரி பெரிய அரங்குகளில் 50-60 இருந்தாலே கூட்டம் குறைச்சலாய்த்தான் தோன்றும். இன்று 20 பேர் கூட தேறி இருக்கமாட்டார்கள். சில வருடங்கள் முன், நாரத கான சபையில், இதே போன்ற நிலையில் பாடிய கிருஷ்ணா, “வந்து கேட்பார் இல்லையோ” என்று ஊர்த்துக்காடு பாடலை பாடிய போது it became an unintentional situation song.
கூட்டம் இருக்கோ இல்லையோ, மேடை ஏறிவிட்டால் 100% உழைத்துப் பாடுகிறார் கிருஷ்ணா. இன்று பக்கவாத்தியங்களின் உற்சாகமும் சேர்ந்து கொண்டிருக்கும். தர்பார் ராகத்தை இழை ஓட விட்டு, வர்ணத்தை ஆரம்பித்த போது, சாகேதராமனுக்கு செய்தது போல இவருக்கும் குரல் மக்கர் செய்யுமோ என்று பயந்தேன். வர்ணத்தைப் பாடி, சில கல்பனை ஸ்வரங்களையும் அள்ளி வீசிய போது குரல் ஓரளவு பதத்தை அடைந்தது. பாதி கச்சேரி வரை தார ஸ்தாயியில் பாடிய போது ஒரு வித strain தென்பட்டது. பிரதான ராகம் பாடும் போது, குரல் நல்ல பதத்தை அடைந்திருந்தது.
ஸ்ரீ ரகுகுல ஹம்சத்வனியில் பாடி, துரித கதியில் நிரவலும் ஸ்வரமும் பாடினார். ‘பகரி நிபக கநிரி ரிநிப’ என்று மும்மூன்று ஸ்வரங்களாய் பற்பல கோவைகள் அமைத்துப் பாடிய ஸ்வரங்கள் அற்புதமாய் இருந்தன.
ஹம்சத்வனியைத் தொடர்ந்து, பூர்வி கல்யாணியை விஸ்தாரமாக ஆலாபனை செய்தார். அவசர அவசரமாய் பஞ்சமத்துக்குச் சென்று கார்வை கொடுக்காமல், மந்த்ர ஸ்தாயியிலே விஸ்தாரமாகப் பாடியது சிறப்பு. ஸ்வரம் ஸ்வரமாய் ஆலாபனையை நகர்த்தி வளர்க்கும் போதே, ஆலாபனையின் மையத்திலிருந்து தள்ளி இருக்கும் ஸ்வரங்களுக்கும் அவ்வப்போது தாவி, கேட்பவரை வியப்பில் மாழ்த்துவது TNS பாணி.
இதனை நால், macroscopically linear and microscopically non-linear என்பேன். கிருஷ்ணாவின் ஆலாபனையும் இவ்வகையில்தான் அமைந்திருந்தது. ரப்பராய் இழுத்து,நிறுத்திப் பாடிய சஞ்சாரங்களோடு, துரித கால சஞ்சாரங்களைக் கோத்து அமைந்த ஆலாபனை பூர்வி கல்யாணையை உருக்கமாகவும், அதே சமயத்தில் அழுது வடியாமல் இருக்கும் படியும் மிளிரச் செய்தது. காந்தாரத்தில் மையம் கொண்டு, சுழற்றி சுழற்றி பல அலைகளை எழுப்பி, இறுதியில் அடுத்த ஸ்த்தைத் தொட்ட போது என்னை அறியாமல் கைகளைத் தட்டினேன். இப்போது தொட்டுவிடுவார் என்று எதிர்பார்த்திருக்கும் போது தொடாமல், தவிப்பை அதிகமாக்கி, இறுதியில் தொடும் போது, ஒரு வித relief ஏற்படுகிறது. அதுவே என்னை கைதட்ட வைத்தது என்று நினைக்கிறேன்.
கச்சேரி முழுவதும் சந்திரசேகரன், அழகாய் அளவாய் வாசித்தார். கிருஷ்ணாவின் சாகசங்களில் கலந்து கொள்ளாவிடுனும், தன் வாசிப்பால் அந்த சாகசங்களுக்கு சங்கடம் வராமல் பார்த்துக் கொண்டார்.
ஆலாபனையைத் தொடர்ந்து நினுவினாகமரி தொடங்கிய போது, காலப்ரமாணத்தை ஒரு இழை குறைத்துக் கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று தோன்றியது. ஸ்வரத்தில் கொஞ்சம் விவகாரங்கள் ரொம்பவும் தலை காட்டாமலும் அரவும் நீக்காமலும் பாடியது நன்றாக இருந்தது.
அடுத்ததாக, நல்ல சவுக்கமன காலப்ரமாணத்தில் நீலாம்பரியை இழைத்து இழைத்து ‘அம்ப நீலாயதாக்ஷி’ பாடினார். அவ்வப்போது விழுந்த ஜாரு பிரயோகங்கள் சொக்க வைத்தன. பிரதான ராகத்துக்கு முன் விறுவிறுப்பான பாடல் ஒன்றைப் பாடியிருக்கலாம். கிருஷ்ணா தோடியை பிரதான ராகமாக எடுத்துக் கொண்டார். டி.என்.எஸ் தன் முப்பதாவது வயதில் எப்படிப் பாடியிருப்பார் என்று இன்று கிருஷ்ணா பாடிய தோடியைக் கேட்டிருந்தால் உணரக் கூடும். இதை நான் சொல்லவில்லை, ஆலாபனை முடிந்ததும் உமையாள்புரம் சிவராமன் கூறினார். ஆலாபனையில் அசைந்தாடும் கமகங்களையும், அசையாத சுத்த
ஸ்வரங்களையும் அழகாக கோத்து அளித்தது என்னை வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக தோடியின் தைவதத்தைச் சுற்றிச் சுற்றிப் பாடியது என்னை வெகுவாகக் கவர்ந்தது. தோடியின் போது கிருஷ்ணாவின் குரல் அற்புதமான நிலையில் இருந்ததால், ரவை சங்கதிகள் எல்லாம் அநாயாசமாய் விழுந்தன. கிருஹ பேதம் செய்து, மோஹன கல்யாணியை கோடி காட்டிவிட்டு மீண்டும் தோடிக்கு வந்தார். ஷட்ஜ பஞ்சம வர்ஜமாய் பிருகா மழை பொழிந்த போது, நிஜமாகவே மனதாரக் கைதட்டினேன்.
பட்டம்மாள் ஸ்பெஷல் ‘தாசுகோவ’ பாடி, ‘சௌமித்ரி தியாகராஜு’-வில் நிரவலும் ஸ்வரங்களும் பாடினார். மிஸ்ர ஜம்பை தாள அமைப்பைக்குள் பல்வேறு சிக்கலான அமைப்புகளை நிர்வகித்த போதும் தோடியின் ராக பாவம் கெடாமல் பாடியது அற்புதம். கிருஷ்னாவின் அப்பா ஜூனியராய் இசைத் துறையில் இருந்த காலத்துக்கு பல காலம் முன்னரே பிரபல வித்வானாகிவிட்ட சிவராமன், இன்றும் உற்சாகமாய் வாசித்ததைக் காண நன்றாக இருந்தது. இன்று அவருக்கே அவரது மிருதங்கத்தின் மேல் திருப்தி இல்லை. பாதி கச்சேரிக்கு மேல் இரண்டாவது மிருதங்தங்கதில் வாசித்தார். தனியில், சிவராமன் வாசித்த மோராவை சுப்ரமணியன் வாசிக்க முடியாமல் தவித்த போது, “இன்னும் கொஞ்சம்தான் வந்துடும். மறுபடியும் வாசி”, என்று சொல்லி, தானும் பாதி வழியில் உதவி கடம் வித்வானுக்குப் பாடம் நடத்தினார். ராகமாலிகை விருத்தமும், ஹரிகேசநல்லூரின் ஹம்சானந்தி தில்லானாவும், சிந்து பைரவியில், ஐயப்பன் மேல் ஒரு தமிழ்ப் பாடலும் பாடி, கச்சேரியை நிறைவு செய்தார் கிருஷ்ணா.
9.30 மணிக்கு ஆரம்பித்த கச்சேரி, 11.30-க்கே முடிந்துவிட்டது. சபையின் அடுத்த கச்சேரி 2.00 மணிக்குத்தான் என்ற போதும், கச்சேரியை இவ்வளவு சீக்கிரம் முடித்திருக்க வேண்டாம். இன்னும் அரை மணி நிச்சயம் பாடியிருக்கலாம். குரல் நன்றாக பதம் அடைந்த சற்றைக்கெல்லாம் கச்சேரி முடிந்துவிட்டதுதான் கொஞ்சம் வருத்தம். பாடுவதற்கு சிரமமான சேஷகோபாலன் பாணி சங்கீதம் அவரோடு முடிந்துவிடாது. நிச்சயம் வாழையடி வாழையாய்த் தொடரும் என்பதை இன்றைய கச்சேர்யினைக் கேட்ட அனைவரும் ஒப்புக் கொள்வர்.
Verdict: Great concert. Brilliant thodi. Could have sung for at least another 30 mins.
Read Full Post »