Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜூலை, 2009

a9இந்தியப் பாரம்பரிய இசையையும், இசைக் கலைஞர்களையும் பற்றிய ஆவணப் படங்கள் அரிது. அப்படியே வந்தாலும் அவற்றில் என்ன இருக்கும்?

இந்த வருடம், இந்த நாளில் இவருக்கும் அவருக்கும் மகனாகவோ  மகளாகவோ பிறந்தார் என்று தஞ்சாவூர் ஜில்லா கிராமத்து வீட்டை லாங் ஷாட்டில் காட்டுவர். அதன் பின், பிறந்த சில நாட்களிலேயே காலையில் கல்யாணியையும், மதிய உணவுக்கு மத்யமாவதியையும், சாயங்காலமாக சாயா தரங்கிணியும், ராத்திரிக்கு ராகவர்த்தினியையும் உட்கொள்ள ஆரம்பித்தார் என்று காலம் காலமாக அவ்விசைக் கலைஞரின் குடும்பத்தில் சுழன்று வரும் கட்டுக்கதையை கர்ம சிரத்தையாய் பதிவு செய்வர். அக் கலைஞரின் குருவின் மங்கிப் போன புகைப்படத்தைக் காட்டிய பின், அவர் முதல் கச்சேரி நடந்த இடம், தேதி எல்லாம் பட்டியலிடுவர். முதல் பத்து நிமிடம் இவை எடுத்துக் கொள்ள, அடுத்த 50-60 நிமிடங்களோ அந்தக் கலைஞரின் உறவினர், உடன் இசைத்தோர், பழகியோர், நண்பர்கள், சீடர்கள் என்று பலரின் நேர்காணல்களின் தொகுப்பாக அமையும். இந்தத் தொகுப்பில் மிஞ்சிப் போனால் ஐந்து நிமிடங்களுக்குத்தான் கலைஞரின் இசையைப் பற்றிய செய்திகள் இடம் பெறும். மற்ற நேரமெல்லாம் ‘trivia’ எனப்படும் உப்பு பெறாத சமாசாரங்கள் இடம் பெறும். அவர் உபயோகித்த தட்டு வெள்ளியில் தங்க முலாம் பூசியிருக்கும், அவர் ஆந்திராவுக்கு சென்ற போது உப்புமாவை விரும்பி சாப்பிட்டார், குடுமி வைத்துக் கொண்டல்தான் சிஷ்யனாக சேர்த்துக் கொள்வார், போன்ற அவசியமே இல்லாத செய்திகள்தான் நேரத்தை வீணடிக்கும். இவற்றின் நடுவே சேர்க்கப்பட்டிருக்கும் கலைஞரின் இசையும், புகைப்படங்களுமே அந்த ஆவணத்தை ஒரு முறை முழுமையாக காண வழி செய்யும். கடைசி வரை, அந்த இசைக் கலைஞரின் இசைச் சிறப்பு என்ன? அவர் மறைந்து பல ஆண்டுகள் கழித்தும் அழியாமல் இருக்கும் அவர் இசையின் கூறுகள் எவை, என்றெல்லாம் மருந்துக்கும் செய்தியிராது.

மேற் சொன்ன விமர்சனம் பொதுவான ஒன்று. அதைப் பொய்யாக்கும் வகையில் சமீபத்தில் ஒரு ஆவணப் படத்தைக் காண நேரிட்டது. ‘Sanskriti Series’-ல் வெளியாகியிருக்கும் ‘Ramanathapuram Krishnan – The Musician’s Musician’ என்ற ஆவணப் படம்தான் அது. மதுரை மணி ஐயர், அரியக்குடி, ஜி.என்.பி, செம்மங்குடி போன்ற ஜாம்பவான்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த போதும், தனக்கென ஒரு முத்திரை பதித்து, இசை ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பெற்ற இராமநாதபுரம் கிருஷ்ணனின் இசையை அழகாகப் படம் பிடித்திருக்கிறது இவ்வாவணம்.

புகழ் பெற்ற ஹரிகதை விற்பனரான பாலகிருஷ்ண சாஸ்த்ரிகளின் மகன் எஸ்.பி.காந்தன் இயக்கியிருக்கும் இந்தப் படம், இராமநாதபுரம் கிருஷ்ணனின் அழகிய சஹானா ராக ஆலாபனையை, நித்யஸ்ரீ, சௌம்யா, ஹரிஹரன், ரவிகிரண், உமையாள்புரம் சிவராமன் போன்ற பிரபல கலைஞர்கள் கேட்டு ரசிப்பது போன்ற காட்சியமைப்புடன் தொடங்குகிறது. பைரவி ராக தானம் பின்னணியில் ஒலிக்க கிருஷ்ணனின் பூர்வீக ஊர், பிறந்த ஊர், பெற்றோர் பற்றிய செய்திகள் நிமிட நேரத்துக்குள் விரிந்து மறைகின்றன. கிருஷ்ணனை செதுக்கிய இராமநாதபுரம் சங்கர சிவ பாகவதரைப் பற்றிய சிறு குறிப்புக்குப் பின், கிருஷ்ணனின் இசைக்கு அடித்தளம் வகுக்கும் வகையில் அமைந்த ஜி.என்.பி-யின் இசையும், வீணை தனம்மாளின் கச்சேரிகளும் அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடந்தவற்றை விவரிக்க ஓவியங்களை உபயோகித்திருக்கும் உத்தி அற்புதம். மணியம் செல்வனின் ஓவியங்கள், ஜி.என்.பி கச்சேரியின் முதல் வரிசையில் உட்கார்ந்து ரசிக்கும் கிருஷ்ணனையும், வீணை தனம்மாளின் வாரக் கச்சேரிகளில் தன்னை இழக்கும் கிருஷ்ணனையும் அழகுற கண்முன் கொணர்ந்து நிறுத்துகின்றன. அதைப் போலவே கிருஷ்ணனின் ரேடியோ கச்சேரியை கேட்கும் பிருந்தாவின் வரைபடமும், நாராயண தீர்த்தரின் பாடல்களான ‘கோவர்த்தன கிரிதாரா’ மற்றும் ‘கலைய யசோதே’ பாடல்களில் கண்ணன் செய்யும் லீலைகளை எழிலுற படம்பிடித்திருக்கும் ம.செ-வின் ஓவியங்கள் பேரழகு. சமஸ்கிருதம் தெரியாதவரையும் கிருஷ்ணனின் குரல் காட்டும் பாவங்கள் அடைந்து மனதை ஆட்கொள்ளும் என்ற போதும், அவர் குரலுடன் சேர்ந்து பாடலின் பொருளையும் மனதில் பதிக்க இந்த ஓவியங்கள் பெரிதும் உதவுகின்றன.

ஓவியங்கள் கொண்ட காட்சிகளைப் போலவே, மற்ற காட்சிகளிலும் சொல்ல வந்த கருத்து தெளிவாக பார்ப்பவரைச் சென்றடைய வேண்டுமென்பதில் இயக்குனரின் ஈடுபாடு தெளிவாகத் தெரிகிறது. இராமநாதபுரம் கிருஷ்ணனின் சாயலில் ஒருவரை தேர்வு செய்து, அவரை நிழலுருவாய் காட்டி, பின்னால் ஒலிக்கும் இசையை கிருஷ்ணனே பாடுவது போன்ற மாயையை உருவாக்கியிருப்பது மகத்தான சாதனை. பெருக்கெடுக்கும் ராகப்ரவாகத்தில் தெரிக்கும் கமகங்களும், பிருகாக்களும், இதர சஞ்சாரங்களும் ஒலிக்க மட்டும் செய்தால் கேட்பவர் பாடுவதை அவரவர் சௌகரியத்துக்கு கற்பனை செய்து கொள்ளலாம். அதையே ஒருவர் நடித்துக் காட்டுதல் என்பது சிக்கல்கள் பலவுண்டு. நெருடலான பல இடங்கள் ஒலிக்கும் போது அவ்விசைக் கேற்ப நடித்திருப்பவரின் அங்க அசைவும் அமைவது மிகக் கடினம். அதைச் செய்து காட்டியிருக்கும் இயக்குனரை எத்தனை புகழ்ந்தாலும் தகும். அதே போல, இசை ஒலிக்கும் போது தோன்றும் காட்சிகளும் கச்சிதமாய் பொருந்துகின்றன. இராமநாதபுரம் கிருஷ்ணனின் பேகடை ஒலிக்கும் போது காட்டப்படும் அருவியின் பெருக்கெடுப்பின் பல பரிமாணங்கள், ஒலிக்கும் ராகத்தின் பல பரிமாணங்களை பரிமளிக்க வைப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. ‘சங்கராபரணம்’ ராகம் ஒலிக்கும் போது, ராகத்தின் பெயருக்கு ஏற்ப சங்கரனை நடராஜ மூர்த்தியாய் காட்டி, அந்த சங்கரன் பூணும் ஆபரணமாய் பாடகரின் இசையை ஒலிக்கச் செய்திருப்பது நல்ல symbolic portrayal. அவரின் இசை மற்றவர்களை எப்படி பாதித்தது என்று மூத்த புல்லாங்குழல் கலைஞர் ரமணி, அவரை நேரில் கண்டிராத போதும் அவர் இசைக்கு வசப்பட்ட சௌம்யா, கர்நாடக இசைக் கலைஞராக இல்லாத போதும் அவரின் இசையிலிருந்து பாடங்கள் கற்ற கஜல் மற்றும் திரையிசைப் பாடகர் ஹரிஹரன் போன்றோரின் விளக்கங்களும் நன்றாக அமைந்துள்ளன.

சொல்ல வேண்டிய விஷயங்களை முன்னரே திட்டமிட்டு, இன்னார் இதை இதைச் சொல்ல வேண்டும் என்று நிர்ணயித்து, சொல்லப்பட்ட கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இசைச் செருகல்களை அமைத்திருப்பது அழகு. உதாரணமாக ராகம் தானம் பல்லவியில் அவருக்கு இருந்த ஆளுமையைக் கூறும் இடத்தில் ஒலிக்கும் கண்ட ஜாதி திரிபுடை தாளத்தில் அமைந்த வராளி ராக பல்லவி, “காணக் கிடைக்கும் சபேசன் தரிசனம்”, மற்றும், அவர் பாடும்போது ஒலிக்கும் வல்லின மெல்லினங்களைப் பற்றி சௌம்யா கூறிய பின் ஒலிக்கும் “துளஸம்மா” பாடல், பாபநாசம் சிவன் இவருக்காகவே எழுதியது போன்ற “கற்பகமே” பாடல், சஹானா கிருஷ்ணன் என்ற பெயர் இருந்தது சரிதான் என்று எளிதாக உணரும் வகையில் ஒலிக்கும் ‘ஸரியெவ்வரே’ பாடல், லயத்தில் நல்ல தேர்ச்சி இருந்த போதும் ஸர்வலகு ஸ்வரங்களை அரிய கோவைகளாக்கும் கிருஷ்ணனின் கல்பனை ஸ்வரங்களை லால்குடி விஜயலட்சுமி கூறிய பின் ஒலிக்கும் “அம்ம ராவம்ம” பாடல் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

* 1957-ல் அகாடமி கச்சேரியில் கண்ட நடை பல்லவியை கிருஷ்ணன் பாடிய போது, ரசிகர்களில் ஒருவர் அதே பல்லவியை சங்கீர்ண நடையில் பாடுமாறு கேட்டுக் கொள்ள, அதே கணத்தில் பாடியதைக் கேட்ட மைசூர் சௌடையா, “இப்படிப்பட்ட திறமைசாலி எல்லாம் அகாடமியின் ப்ரைம் ஸ்லாட்டில் அல்லவா பாட வேண்டும்”, என்று கூறியதும் அடுத்த வருடமே அகாடமியில் சாயங்கால கச்சேரியில் கிருஷ்ணன் பாட, அவருக்கு சௌடையாவே பக்கவாத்யம் வாசித்தார்.

* ஜி.என்.பி, அகில இந்திய வானொலியின் ஸ்டேஷன் டைரக்டராக இருந்த போது, கிருஷ்ணனுக்கு ராகம் தானம் பல்லவி கச்சேரி பாட contract அனுப்பினார். அந்த contract வருவதற்கு சில நாட்களுக்கு முந்தான் ரேடியோவில் ராகம் தானம் பல்லவி கச்சேரி ஒன்றை கிருஷ்ணன் பாடியிருந்தார். அதனால், பதிலளிக்காமல் காலம் கடத்த, ஒரு நாள் ஜி.என்.பி-யே நேரில் வந்து விசாரித்தார். விவரத்தை கிருஷ்ணன் கூறவும், “ஹாலந்தில் இருந்து அற்புதமான ஒலிநாடாக்கள் வந்துள்ளன. அவற்றில் உன் ராகம் தானம் பல்லவியை வருகின்ற சந்ததிக்காக வேண்டி பதிவு செய்ய நினைத்தேன். அதனால்தான் மீண்டும் ஒருமுறை ராகம் தானம் பல்லவிக்கே contract அனுப்பினேன்”, என்று ஜி.என்.பி கூறிய பின் ராமநாதபுரம் கிருஷ்ணன் பாடிக் கொடுத்தார்.

* மறைவதற்கு சில நாட்கள் முன், “அந்த அம்மா என் பாட்டை ஒத்துண்டுட்டா. அப்போ நான் நல்லாத்தான் பாடியிருப்பேன்.”, என்று பிருந்தாவின் அங்கீகரிப்பைப் பெருமையாக நினைத்தார் கிருஷ்ணன். அவர் மறைந்த பல ஆண்டுகள் கழித்து, பிருந்தாவின் சிஷ்யர் ஒருவர், கீரவாணி ராகத்தில் ‘ஒரு ராக கச்சேரி’ பாடியதாக பிருந்தாவிடம் கூற, சில நிமிடங்கள் கண்ணை மூடி தன்னை மறந்த நிலைக்குச் சென்ற பிருந்தா, கண் விழித்த பின், “கீரவாணி-னா ஐயர் பாடி கேட்கணும்”, என்று ராமநாதபுரம் கிருஷ்ணனைக் குறிப்பிட்டார்.

மேற்கூறியது போன்ற தகவல்கள் கலைஞரின் தரத்தை உணரும் வகையில் அழகுற பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இதைப் போன்ற anecdotes அளவு மீறாமல் செய்திருப்பது சிறப்பு.

இத்தனை சிறப்பாக அமைந்துள்ள ஆவணத்தில் சில குறைகள் இல்லாமல் இல்லை. சஹானா ராகம் Ramnad Krishnan’s speciality என்ற போதும், அதை பல இடங்களில் மீண்டும் மீண்டும் ஒலிக்கச் செய்யாது, அந்த நேரத்தில் வேறு சில ராகங்களை சேர்த்திருக்கலாம். பைரவி, அடாணா போன்ற ராகங்கள் கூட ஒரு முறைக்கு மேல் ஒலிப்பதை தவிர்த்திருக்கலாம். அவரது ஆலாபனைக்கு கொடுத்திருக்கும் முக்கியத்துவம் அவரின் இசையின் மற்ற பரிமாணங்களுக்கு கொடுக்கவில்லை என்றே தோன்றுகிறது. ஆலாபனையில் கூட கச்சேரியின் தொடக்கத்தில் பாடிய ராகங்கள், பிரதான ராகங்கள், ராகம் தானம் பல்லவியில் பாடிய ராகங்கள் ஆகியவற்றில் அவரது ஆலாபனை அணுகு முறை எப்படி அமைந்தது என்று கூறியிருக்கலாம். நிரவல், கல்பனை ஸ்வரம் பற்றியெல்லாம் குறிப்பிடுவதோடு நிறுத்தியிருக்காமல் அவற்றின் தனிக் கூறுகளை விளக்கி, அவர் பாடியிருக்கும் கிருதிகள் பற்றியும் இன்னும் ஆழமாக சென்றிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

படத்தில் ஒரு காட்சி தவறுதலாய் இரண்டு முறை வருகிறது. அவர் பாடுவதைக் கேட்டு ரசிப்பது போன்று அமைத்திருக்கும் காட்சியில், அவர்களின் ரசிகானுபவத்தை  super slow motion-ல் காட்டியிருப்பது சில சமயம் out of synch-ஆக தோன்றுகிறது. பஹ¤தாரி, பலமஞ்சரி, பூர்ண ஷட்ஜம் போன்ற அரிய ராகங்களை கிருஷ்ணன் அழகாகப் பாடுவார் என்று கூறிய பின் ஒலிக்கும் ராகம் எது பலர் குழம்பக் கூடும் (ஒலிப்பது பலமஞ்சரிதான்).   ‘Temple tower effect’ என்பதை passing mention-ஆக கூறிய பின் தொடரும் ராகத்தில், தஞ்சை பெரிய கோயில் விமானத்தை காட்டிய போதும், மேல் செல்லச் செல்ல குரலின் ஒலி குருகுவதை பின்னொலிக்கும் இசை தெளிவாகக் காட்டியிருக்கலாம். விஸ்தாரமாகப் பாடுவதற்கு ஏற்ற ராகங்களை பெரிய ராகங்கள் என்றும் அப்படி இல்லாத வற்றை சிறிய ராகங்கள் என்று பொதுவாகக் குறிப்பிடினும், அவற்றை ஆங்கிலத்தில் ‘Major Scales’ என்றும் ‘Minor scales’ என்றும் குறித்தல் குழப்பம் ஏற்படுத்தும். மேற்கத்தைய இசையில் இந்தப் பதங்களுக்கு வேறு அர்த்தம் இருப்பதை உற்று நோக்கின் இக் குழப்பம் புரியும். இசை ஒலிக்கும் போது, ஒலிக்கும் ராகம், கிருதி, பல்லவியின் தாளம் போன்ற செய்திகளையும் காட்டியிருப்பின், மாணவர்களுக்கும், இசைப் பயிற்சி அதிகம் இல்லாதோருக்கும் உதவியாக இருந்திருக்கும்.

இதைப் போன்ற சிறு சிறு குறைகள் இருக்கும் போதும், மொத்தத்தில் ராமநாதபுரம் கிருஷ்ணனின் இசை வாழ்வின் செம்மையான பதிவாகவே இந்தப் படைப்பு அமைந்திருக்கிறது. இதைப் போன்ற இன்னமும் பல ஆவணங்களை இந்த நிறுவனம் எடுக்க வேண்டும். அப்படிச் செய்ய இசை ரசிகர்களும், ஆர்வலர்களும் இது போன்ற முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும்.

நான் டிவிடி வாங்கிவிட்டேன். நீங்க?

மேலும் விவரங்கள்: http://www.kalakendra.com/shopping/ramanathapuramramnad-krishnan-musicans-musician-p-618.html

Read Full Post »

IMG_7633_2IMG_7633_2பேராசிரியர் மா.ரா.அரசு, புகழ் பெற்ற வரலாற்று அறிஞரும் தமிழ்ப் புலவருமான டாக்டர் மா. இராசமாணிக்கனாரின் மகன். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணி புரிந்த இவர், தமிழ் இதழியல் வரலாற்றை முறையாகத் தொகுத்து வெளியிடல், இதழியல் பற்றிய தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்துதல் இவற்றை நோக்கங்களாகக் கொண்டு 1983-ல் டாக்டர் மா.இராசமாணிக்கனார் இதழியல் ஆய்வு மையத்தை நிறுவினார். 1986-87-ல் திங்கள் ஒரு பொழிவென ஒரு வருட காலம் தமிழ் இதழியல் பற்றி ஆய்வுத் தொடரொன்றை இந்த மையம் நடத்தியது. தமிழ்நாட்டில் முதல் முறையாக இதழியல் பற்றி ஓராண்டு தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வுத் தொடர் இதுவேயாகும்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து இந்திய விடுதலைக்கு முந்தைய தமிழ் இதழ்கள், திராவிட இயக்க இதழ்கள், தமிழ் ஆய்வு இதழ்கள், பொதுவுடைமை இயக்க இதழ்கள், மகளிர் இதழ்கள், தமிழ் இலக்கிய இதழ்கள், தமிழ் இதழியல் என்னும் தலைப்புகளில் பதினொரு கருத்தரங்குகள் செம்மையாக நடத்தியதிலும், அக் கருத்தரங்கத் தொகுதிகளை எழிலுற அச்சிட்டதிலும் பெரும் பங்கு மா.ரா.அரசுவையே சேரும். ‘இதழாளர் இராஜாஜி’ எனும் ஆய்வு நூலையும் ‘இளமையின் குரல்’. ‘கொறிப்பு’ எனும் மாணவர்க்கான இதழ்களையும் இவர் நிறுவிய மையம் மூலம் வெளியிட்டுள்ளார். வ.உ.சி-யைப் பற்றிய ஓரு தரமான ஆய்வின் மூலம் முனைவர் பட்டத்தைப் பெற்ற இவர், பேராசிரியர் பணி மூலம் உருவாக்கியுள்ள தமிழறிஞர்கள் ஏராளம்.
சிறந்த எழுத்தாளர், ஆசிரியர் மட்டுமின்றி நயம்பட பேசுவதிலும் வல்லவர். ஆசிரியர் பணியிலிருந்து ஒய்வு பெரும் வேளை, அவர் சாதனைகளைத் திரும்பிப் பார்க்கத் தோதான ஒன்று. அதனால் http://www.varalaaru.com சார்பில் இவருக்காக சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளோம். இவருடைய நேர்காணலை இங்கு காணலாம்.

பேராசிரியர் மா.ரா.அரசு, புகழ் பெற்ற வரலாற்று அறிஞரும் தமிழ்ப் புலவருமான டாக்டர் மா. இராசமாணிக்கனாரின் மகன். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணி புரிந்த இவர், தமிழ் இதழியல் வரலாற்றை முறையாகத் தொகுத்து வெளியிடல், இதழியல் பற்றிய தலைப்புகளில் கருத்தரங்குகள் நடத்துதல் இவற்றை நோக்கங்களாகக் கொண்டு 1983-ல் டாக்டர் மா.இராசமாணிக்கனார் இதழியல் ஆய்வு மையத்தை நிறுவினார். 1986-87-ல் திங்கள் ஒரு பொழிவென ஒரு வருட காலம் தமிழ் இதழியல் பற்றி ஆய்வுத் தொடரொன்றை இந்த மையம் நடத்தியது. தமிழ்நாட்டில் முதல் முறையாக இதழியல் பற்றி ஓராண்டு தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வுத் தொடர் இதுவேயாகும்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து இந்திய விடுதலைக்கு முந்தைய தமிழ் இதழ்கள், திராவிட இயக்க இதழ்கள், தமிழ் ஆய்வு இதழ்கள், பொதுவுடைமை இயக்க இதழ்கள், மகளிர் இதழ்கள், தமிழ் இலக்கிய இதழ்கள், தமிழ் இதழியல் என்னும் தலைப்புகளில் பதினொரு கருத்தரங்குகள் செம்மையாக நடத்தியதிலும், அக் கருத்தரங்கத் தொகுதிகளை எழிலுற அச்சிட்டதிலும் பெரும் பங்கு மா.ரா.அரசுவையே சேரும். ‘இதழாளர் இராஜாஜி’ எனும் ஆய்வு நூலையும் ‘இளமையின் குரல்’. ‘கொறிப்பு’ எனும் மாணவர்க்கான இதழ்களையும் இவர் நிறுவிய மையம் மூலம் வெளியிட்டுள்ளார். வ.உ.சி-யைப் பற்றிய ஓரு தரமான ஆய்வின் மூலம் முனைவர் பட்டத்தைப் பெற்ற இவர், பேராசிரியர் பணி மூலம் உருவாக்கியுள்ள தமிழறிஞர்கள் ஏராளம்.

சிறந்த எழுத்தாளர், ஆசிரியர் மட்டுமின்றி நயம்பட பேசுவதிலும் வல்லவர். ஆசிரியர் பணியிலிருந்து ஒய்வு பெரும் வேளை, அவர் சாதனைகளைத் திரும்பிப் பார்க்கத் தோதான ஒன்று. அதனால் http://www.varalaaru.com சார்பில் இவருக்காக சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளோம். இவருடைய நேர்காணலை இங்கு காணலாம்.

Read Full Post »