Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for மே, 2020

இந்தப் பதிவை பல மாதங்களுக்கு முன்னால் எழுத நினைத்தேன். என்னமோ கைவரவேயில்லை.

இன்று மறைந்த மேதை இலுப்பூர் பஞ்சாமியின் பிறந்த நாள் என்று இப்போது தெரிந்ததும், கையோடு எழுத வேகம் பிறந்தது.

panjami

மலைக்கோட்டை பஞ்சாமியைப் பற்றி முன்பே இங்கு எழுதியுள்ளேன்.

அந்தப் பதிவில்,

‘நிரவதிஸுகதா’, ‘மரியாதகாதுரா’, பலுகவேமி’ போன்ற கிருதிகளுக்கு இவர் அமைத்த சிட்டை ஸ்வரங்கள் இன்றளவும் மிகப் பிரபலமாய் உள்ளன. ராஜரத்னம் பிள்ளை நிரவதிஸுகதா பாடலை கிராமஃபோன் ரிக்கார்டாக வெளியிட்டுள்ளார். அது அவர் பஞ்சாமிக்கு செய்த காணிக்கை என்றே சொல்லலாம்.

ஏனெனில், ஒரு பாடலில் அனுபல்லவிக்கும் சரணத்துக்கும் (சரணம் முடிந்ததும் பல்லவிக்கு முன்னும்) இடையில் ஒரு சிட்டை ஸ்வரம் வாசிப்பதே வழக்கம். இந்த இசைப்பதிவில் சரணத்துக்குப் பின் பஞ்சாமி அமைத்த மூன்று சிட்டை ஸ்வரங்களை வாசித்துள்ளார்

ஒரு கிருதியில் பல சிட்டை ஸ்வரங்கள் உள்ள பாடல்கள் உள்ளனவா என்று நானறியேன். அப்படியே இருப்பினும் அவை அரியவை என்று தைரியமாகக் கூறலாம்.

அந்தப் பதிவில் அவர் வாசித்துள்ள சிட்டை ஸ்வரங்களுள், முதல் சிட்டை ஸ்வரம் மட்டும் இன்று புழக்கத்தில் உள்ளது. மற்ற சிட்டை ஸ்வரங்களை யாராவது பாடியுள்ளனரா என்ற கேள்வி சில மாதங்களுக்கு முன் உதித்தது.

என்னுடைய சேகரிப்பில் உள்ள இந்தப் பாடல் பதிவுகளை தேடிப்பார்த்தேன். அனைத்து பதிவுகளிலும் ஒரு சிட்டை ஸ்வரமே இடம் பெற்றிருந்தது. இணையத்தில் தேடிய போது, வித்வான் சஞ்சய் சுப்ரமண்யத்தில் பதிவு கிடைத்தது. அதில் அவர் மூன்று சிட்டை ஸ்வரங்களையும் பாடியிருந்தார்.

கடந்த 25 ஆண்டுகளில் பலதரப்பட்ட ரசிகர்களை சந்தித்ததுண்டு. அவர்களில் சஞ்சய் பக்தர்கள் உண்டு. சஞ்சய் என்றால் காத தூரம் ஓடுபவர்களும் உண்டு. அவரவர்க்கு அவரவர் ருசி.

அது எப்படி இருப்பினும், அனைவரும்  வித்வான் சஞ்சயைப் பற்றி  ஒருமித்த கருத்தாய்ஒப்புக் கொள்ளும் விஷயம் அவருடைய உழைப்பு. பாடுகின்ற பொருளைப் பற்றிய சிறுசிறு நுணுக்கங்களைக் கூடி தேடி எடுத்து கச்சேரியில் வெளியிடும் அவர் முனைப்பு பிரமிக்கத்தக்கது. இந்தச் சிட்டை ஸ்வரங்களும் அதற்கு ஒரு அத்தாட்சி.

இணையத்தில் அவர் பாடியதைக் கேட்டதும், அவருக்கு எழுதி இதைப் பற்றிக் கேட்டேன். ராஜரத்தினம் பிள்ளையின் ரிக்கார்டைக் கேட்டு ஸ்வரப்படுத்தி, தன் குருவிடம் பாடிக் காண்பித்து, அவரது ஒப்புதல் கிடைத்ததும் கச்சேரியில் பாடிவருவதாகக் கூறினார்.

பிரபலங்களாக இருப்பதில் ஒரு சிக்கல் நேரமின்மை. தொடர்ந்து பாடிக் கொண்டிருக்கும் சூழலில் புதியதைத் தேடுவதில் நேரமின்மையில் தொடங்கி, கால்ப்போக்கில் தெரிந்ததைப் பாடினால் போதும் என்கிற தேக்க நிலை பல பிரபலங்களுக்கு ஏற்படுவதுண்டு. அதற்கு விதிவிலக்கானவர்களே காலத்தைக் கடந்து நிற்கின்றனர்.

இணையத்தில் இருந்த பதிவு சுமாரான ஒலித்தரத்தில் இருந்ததால் நண்பர் எஸ்ஸல் நரசிம்மனைத் தொடர்பு கொண்டேன். அவர் அற்புதமான ஒலித்தரத்தில் ஒரு பதிவை அனுப்பி வைத்தார்.

30 வயது நிறைவடையும் முன் மறைந்துவிட்ட மேதை பஞ்சாமியின் பிறந்த நாளில், அவருடைய மேதமைக்கும், அதை இன்றளவும் மேடைகளில் ஒலிக்கச் செய்யும் சஞ்சயின் முனைப்புக்கும் தலைவணங்கி இந்த ஒலிப்பதிவை (அனுமதியுடன்) வலையேற்றுகிறேன்.

கேட்டு மகிழுங்கள்.

 

 

Read Full Post »