கண்ட நாள் முதலாய் காதல்தான். 2006 விஜயதசமி அன்று அவரைக் கண்ட நாள் முதலாய் காதல்தான்.
அன்று பற்றிக் கொண்ட பிரமிப்பு அவரை அடுத்தடுத்து சந்தித்த பல நூறு முறைகளில் கூடித்தான் போனது.
”உங்கள் வாழ்க்கையை எழுதினால் அது இசையுலகின் ‘என் சரித்தரம்’ ஆகுமே. எழுதுகிறீர்களா?”, என்றதற்கு மையமாய்ச் சிரித்து மேஜையில் வரைந்து கொண்டிருந்த தட்சிணாமூர்த்தியில் மூழ்க ஆரம்பித்தார்.
அவரைப் பேச வைத்து பதிய வைத்துக் கொண்டால்?
அப்போது கூட படமாக்கிக் கொள்ள வேண்டும் என்று தோன்றவில்லை. நானும் என் வாய்ஸ் ரிக்கார்டரும் நினைத்த போதெல்லாம் அந்த வீட்டுக்குள் பிரவேசித்திருக்கிறோம். அவர் சொன்ன விஷயங்கள் என் கட்டுரைகளைச் செழுமைப்படுத்தின. அவரைப் பற்றி அவர் சொன்னதையே, அவர் வார்த்தை கொண்டே, எழுதிய போதும் பெயர் என்னவோ எனக்குத்தான் கிடைத்தது.
ஜி.என்.பி-யின் நூற்றாண்டின் போது அவரைப் பற்றிய ஆவணப் படம் உருவானது. என் புத்தகம் அதற்கு அடித்தலமாய் அமைந்தது. மாங்கு மாங்கென்று பக்கம் பக்கமாய் நான் எழுதியும் சொல்ல முடியாமல் போனதையெல்லாம் 30 வினாடி இசைத்துகளை இசைக்கவிட்டு பார்ப்பவர் மனதில் பதிய வைத்தார் இயக்குனர் எஸ்.பி.காந்தன்.
இப்படி மட்டும் ராஜத்தை பதிவு செய்ய முடிந்தா….ஆசை அரும்பியது.
அதிர்ஷ்டவசமாய் தமிழ்ஸ்டுடியோ அருணின் பரிச்சயம் கிடைத்தது. வழக்கமாய் வாரம் ஒரு கட்டுரை கேட்டு தொலைபேசுபவர், ஒருநாள் “யாரையாவது பதிவு செய்யணும்னு நினைச்சால் சொல்லுங்க. கேமிராவுக்கு நான் பொறுப்பு”, என்றார்.
படப்பிடிப்பை பற்றி ஆனா ஆவன்னா தெரியாமல் அவரை அணுகினேன். அவர் என்றைக்கு எனக்கு இல்லையென்றிருக்கிறார்?
அருண், ஸ்ரீசெந்தில்குமார், சுரேஷ் குமார் என்று ஒரு கூட்டமே படப்பிடிப்புக்குச் சென்றோம்.
ஆவணப்படம் எடுப்பதாக எல்லாம் உத்தேசம் இல்லை. கைவசம் இருந்த டேப்புகள் காலியாகும் வரை அவரைப் பேச வைத்து பதிவு செய்து கொண்டோம்.
இன்னும் அவரிடம் கேட்க நிறைய இருந்தது.
இன்னொரு நாளும் சென்றோம். நல்ல சென்னை வெயில். ஃபோகஸ் லைட்டின் உஷ்ணம் வேறு. மின்விசிறி படப்பிடிப்புக்கு இடைஞ்சல் என்று அணைத்தும் விட்டோம். தொண்ணூறு வயதில் தளராமல் பேசினார், பாடினார், வரைந்தார்.
ஆவணமாய் இருக்க பதிவு செய்தவற்றை ஆவணப்படமாய் ஆக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போது துளிர் விட்டு, கிளைவிட்டதோ. நானறியேன்.
அவரைப் பற்றி அவரை அறிந்த வேறு சிலரும் பேசினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அதற்கும் தமிழ்ஸ்டுடியோ நண்பர்கள் உதவினர்.
என் பழைய ஒலிப்பதிவுகளைக் கேட்க ஆரம்பித்தேன். இன்னும் நிறைய படப்பிடிப்பு செய்ய வேண்டும் என்று தோன்றியது.
மீண்டும் மீண்டும் அருணை அழைக்க கஷ்டமாய் இருந்தது.
அருணிடம் கூடச் சொல்லாமல், நாள் வாடகைக்கு காமிராவை எடுத்து படப்பிடிப்பைத் தொடர்ந்தேன். நான் செய்ததற்கு பெயரும் டைரக்ஷனாம். பின்னால் தெரிந்து கொண்டேன். செலவுகள் கைமீறிப் போகத் தொடங்கிய போது நண்பர்களுக்கு எழுதினேன். நான் பாக்கியசாலி. சாந்தகுமார், பக்தவத்சலம், ஷங்கர், ரமணன், நாதன் போன்ற நண்பர்கள் கேட்ட மாத்திரத்தில் உதவினர்.
30 மணி நேர படப்பிடிப்பு நிறைவடைந்ததும், அவருக்கு உடல்நலம் குன்றத் தொடங்கியது.
சாவகாசமாய் செய்து கொள்ளலாம் என்று நினைத்திருந்த ஆவணப்படத்தை உடனே முடித்தாக வேண்டிய சூழல்.
அந்த சமயத்தில் அமெரிக்காவில் இருக்கும் வி.கே.விஸ்வநாதனின் தொடர்பு கிடைத்தது. அவரும் படப்பிடிப்பை பற்றி தெரியாமலே, உன்னத கலைஞனின் ஆளுமையால் கவரப்பட்டு தன் பணத்தையும் நேரத்தையும் செலவு செய்து பல ஆண்டுகள் முன்னாலேயே ஆவணப்படுத்தியுள்ளார். அவர் எடுத்தவற்றைப் பார்த்த போது, அவர் தொடங்கியதை முடித்தே தீர வேண்டும் என்ற உத்வேகம் பிறந்தது.
ஓர் அசட்டு தைரியத்தில் காந்தனிடம் பேசினேன். அவர் நான் எடுத்தவற்றை பார்ப்பாரென்று கூட நம்பிக்கையில்லை.
நான் நினைத்தபடியே அவரும் பார்க்கவில்லை. ஆனால் படத்தை செய்து முடித்துவிடலாம் என்றார்.
அவருக்கும் அசட்டு தைரியம் போலும்.
ஜி.என்.பி படத்தை வெளியிட்ட ஸ்வாதி நிறுவனத்தின் இயக்குனர் சுதாகரைப் பார்த்து பேசினேன். “இதெலலம் விக்காது சார்”, என்று சொல்லியிருந்தால் நான் ஏமாந்திருக்க மாட்டேன். “எனக்கு அவரைப் பற்றி தெரியாது. உங்களிடம் பேசி முடித்ததும் தெரிந்து கொள்வேன் என்று புரிகிறது.”, என்று பேச்சைத் தொடங்கினார். எடுத்த காட்சிகளில் சிலவற்றை என் லேப்டாட்டில் காட்டினேன். சுதாகருக்கு அவரைப் புரிந்தது. “காந்தனுக்கு சரியென்றால் எனக்கும் சரி”, என்றார்.
கதை முடிந்து கத்திரிக்காய் காய்க்கும் வேளை வரை காலனுக்குப் பொறுக்கவில்லை. சில வாரங்கள் கூட அல்ல. சில நாட்களில் அவர் மறைந்தார்.
அதன் பின் பல மாதங்களுக்கு அந்தப் படத்தைப் பார்க்கக் கூட பிடிக்கவில்லை. பழனி சுப்ரமணிய பிள்ளை பற்றி நூல் எழுதுவதில் கவனத்தைச் செலுத்தினேன்.
அந்த நேரத்தில் காந்தன் அவருடன் வாழ ஆரம்பித்திருந்தார்.
நான் கொடுத்த காய்கறியை தோல் சீவி, சின்னச் சின்னதாய் நறுக்கத் தொடங்கினார்.
சமைக்கப் போவது கூட்டா, வதக்கலா, வேகவைத்த கறியா என்று கலந்தாலோசிக்கத் தொடங்கினோம். நான் மீண்டு வந்தேன்.
மெது மெதுவாய், அணு அணுவாய் ரசித்து ரசித்து அவருடன் பல மாதங்களைக் கழித்தோம். படம் என்றால் என்னவென்றே தெரியாத நான், பல படங்களை இயக்கியிருக்கும் காந்தனிடம், என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று விலாவாரியாய் தொலைபேசியில் பேசுவேன். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு ஒற்றை வார்த்தை உதிர்ப்பார்.
‘ஓகே.’
காந்தனும், தொகுப்பாளர் கிருஷ்ணகுமாரும் நான் எடுத்த காட்சிகளை, அவர் பாடிய பாடலுடனும், அவர் தீட்டிய ஓவியங்களுடனும் கலந்து உருவாக்கிய அபூர்வ கோவைகள் எனக்கு நான் போகவேண்டிய தூரத்தைக் காட்டின.
கூடுதல் சந்தோஷமாய் என் நெடுங்கால இணைய நண்பர்கள் ஹரிகிருஷ்ணனையும், முரளியையும் இந்தப் படத்தில் பங்கெடுத்துக் கொண்டனர். ஹரியண்ணாவின் அற்புத மரபுக் கவிதைகளுக்கு, அரிய ராகங்களில் முரளி இசையமைத்தான். அவற்றை என்வேறு நண்பர்கள் சிந்துஜாவும், அதிதியும் பாடினர். இந்த முயற்சியால் நண்பர் ஆகியிருப்பவர் கார்த்திக்.
என்னை விட்டால் இன்னும் 200 பக்கங்களுக்கும் வளவளப்பேன். அதற்கு இது தருணமல்ல.
சிற்பத்தை சிற்பி உருகி உருகி செதுக்குவது எதற்காக? உலகத்தார் பார்த்து ரசிக்கத்தானே? செய்கின்ற செயலின் ஸ்வானுபவம் மேன்மையானதுதான் என்றாலும், அந்தச் செயலின் முற்றுப்புள்ளி அதை பொதுவில் வைப்பதில்தானே இருக்கிறது?
எங்கள் சிற்பமும் பொதுவிற்கு வருகிறது.

அவரை நீங்களும் பார்க்க வேண்டாமா? நிச்சயம் வாருங்கள்.
நிறைவாக ஒரு விஷயம்: இந்தத் தேரை ஊர்கூடித்தான் இழுத்திருக்கிறோம். இன்னும் சொல்லப் போனால் ஊர் கூடினதால்தான் இழுத்திருக்கிறோம். இழுத்தவர்கள் பற்றியெல்லாம் தனிக் கட்டுரைதான் எழுத வேண்டும். வெறும் ஒரு பெயர் பட்டியல் போதவே போதாது.
இப்போதைக்கு – ‘எந்தரோ மஹானுபாவுலு அந்தரிகி வந்தனமு’.
Read Full Post »