Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜூன், 2010

இசைத் துறையில் பல ஆய்வுகள் செய்த திருமது வித்யா சங்கர் நேற்று இயற்கை எய்தினார்.

டாக்டர் சி.வி. ராமன், டாக்டர் சந்திரசேகர் என்று நோபல் பரிசு வாங்கியோர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.  இவர் குடும்பத்தில் பலர் வெவ்வேறு துறைகளில் உச்சங்களைத் தொட்டவர்கள். மியூசிக் அகாடமி தொடங்கப்பட்ட காலத்தில் பல வித்வான்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய சி.எஸ்.ஐயர் – வித்யா சங்கரின் தகப்பனார்.

எனக்கு வித்யா சங்கரைப் பற்றி அதிகம் தெரியாவிடினும் அவரது இரண்டு அற்புதமான புத்தகங்களைப் பல முறை படித்து பெரும் பயன் அடைந்திருக்கிறேன்.

Musicology-ல் ஆர்வம் ஏற்பட அவருடைய எளிமையான நடையில் எழுதப்பட்ட “Scientific and aesthetic values in carnatic music” முக்கிய காரணம்.

Art and Science of carnatic music என்ற மற்றொரு புத்தகமும் அனைவராலும் படிக்கப்ப்பட வேண்டிய ஒன்று.

இவ்விரு நூல்களைப் பற்றியும் விரைவில் தனிப்பதிவு ஒன்றைப் போடுகிறேன்.

அன்னாருக்கு அஞ்சலி செய்ய என்னால் இயன்ற ஏதோ ஒன்று.

Photo courtesy: http://homepage.mac.com/ludwigpesch/sampurna/index.html

Read Full Post »

ஜி.என்.பி நூற்றாண்டு ஆர்பாட்டங்கள் (அர்த்தம் புரிந்துதான் இந்தப் பிரயோகம்) முடிந்து மாதங்கள் கடந்த நிலையில் கந்தர்வ கானம் பற்றி கிரிதரனின் விமர்சனம் ஒரு Pleasant Surprise.

இன்னும் சில வாரங்கள் நேரம் இருந்திருப்பின், பிழைகளை இன்னும் கவனமாகக் களைந்திருக்கலாம். நிறைய புகைப்படங்களை பதிப்பித்த போதும், பெரும்பாலானவற்றுக்கு கேப்ஷன் எழுதாதது பெரும் குறைதான்.

அடுத்த எடிஷனில் திருத்தலாம் என்றெல்லாம் கூறப்போவதில்லை. இந்த எடிஷனே விற்றுத் தீரும் என்று தோன்றவில்லை.

கிரிதரனின் கட்டுரை இங்கு.

Related Posts: https://carnaticmusicreview.wordpress.com/2009/12/31/gnb-centenary-2/ & https://carnaticmusicreview.wordpress.com/2010/04/03/kalidas-review/

Read Full Post »

சென்ற வருடம் டிசம்பர் மாதம், சதுரம் பதிப்பகம் ‘குருவே சரணம்’ என்ற நூலை பதிப்பித்துள்ளது. இந் நூலில், ‘தாம்பரம் மியூசிக் கிளப்’ நடத்தி வரும் பாஷ்யம் தம்பதியினர் கண்டுள்ள நேர்காணல்களை, கிருஷாங்கினி தொகுத்துள்ளார். இதில் பத்தொன்பது மூத்த கலைஞர்களின் நேர்காணல்கள் இடம் பெற்றுள்ளன.

பரவலாய் அறிந்தவர்களை மட்டும் நேர்காணல் செய்யாமல், அறிவும், திறனும் முழுமையாய் வாய்த்திருந்த போதும் அதிகம் அறியப்பட்டிராத அரிய கலைஞர்களையும் தேடிப் பிடித்து, அவர்களிடமிருந்தும் தகவல்களைச் சேகரித்திருக்கும் பாஷ்யம் தம்பதியினர் பாராட்டுக்குரியவர்கள். நேர்காணல் கொடுத்திருக்கும் கலைஞர்கள் அனைவரும், ‘கர்நாடக சங்கீதத்தின் பொற்காலம்’ என்று குறிக்கப்படும் 1930-1960 வரையிலான காலகட்டத்தில் வளர்ந்தவர்கள்.

கச்சேரி இசைப் பதிவுகள் 1950-களின் கடைசியில்தான் சாத்தியமாயின. இந் நிலையில், அதற்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த ஜாம்பவான்களின் இசையைப் பற்றி, இந் நூலில் இடம் பெற்றிருப்பவர்களைப் போன்றவர்களிடமிருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது.அனைத்து கலைஞர்களிடமும் ஏறக் குறைய ஒரே விதமான கேள்விகளே கேட்கப்பட்டுள்ளன. கலைஞர்களின் இளமைக் காலம், அவர்களுக்கு சங்கீதத்துடன் ஏற்பட்ட முதல் ஸ்பரிசம், அவர்களுடைய குருவுடனான பந்தம், கலைப் பயணத்தில் மறக்க முடியாத அனுபவங்கள், மடங்களுடனான தொடர்பு ஆகியவை பெரும்பாலான நேர்காணல்களில் விவரமாக இடம் பெற்றுள்ளன. சில வித்வான்களின் விவரிப்பில் பல அரிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன.

1. சாத்தபுரம் சுப்பா ஐயர் காலத்தில் தனி ஆவர்த்தனத்தின் போது மோரா வாசித்த பின் ஒரு கோர்வையை மூன்று முறை வாசிக்கும் பழக்கம் இல்லை.
2. பாவேந்தரின் ‘துன்பம் நேர்கையில்’ பாடலுக்கு இசை அமைக்க, தண்டபாணி தேசிகர் இரண்டாண்டு காலம் உழைத்தார்.
3. ஏ.கே.சி நடராஜன் வாசிப்பது வழக்கமான கிளாரினெட் அன்று. அவருடைய கிளாரினெட்டில் 5-6 keys மட்டும் கொண்டு, நாதஸ்வரத்தைப் போலவே பாவிப்பதால்தான் கமகங்களை சுலபமாகக் கொண்டு வர முடிகிறது.

போன்ற தகவல்களை, இந் நூலில் இடம் பெற்றுள்ள அரிய தகவல்களுக்கு உதாரணமாகக் கூறலாம்.

தண்டபாணி தேசிகர், டைகர் வரதாச்சாரியார், காரைக்குடி சாம்பசிவ ஐயர் போன்றவர்களைப் பற்றிய குறிப்புகள் இதற்கு முன் அதிகம் வெளி வராதவை. தந்தையே குருவாகவும், குருவே வ்ளர்ப்புத் தந்தையாகவும் மாறி, அன்பைப் பொழிந்த நிகழ்வுகளைப் படிக்கும் போது நெகிழ்ச்சி ஏற்படுகிறது. எவ்வளவுதான் அன்பு வைத்திருந்த போதும், இசை என்று வரும் போது, குரு சிஷ்யரிடம் காட்டிய கண்டிப்பு கவனிக்கப் பட வேண்டியது. அடைந்திருக்கும் உயரங்களுக்குப் பின் இருக்கும் அயராத உழைப்பும், வளர்ந்து வரும் இளம் கலைஞர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது.

பொதுவாக, இசைக் கலைஞர்களைப் பற்றிய புத்தகங்களில், கலைஞனைப் பற்றிய விவரங்கள் இருக்கும் அளவிற்கு, அவன் அந்தக் கலையில் விசேஷமாய் என்ன செய்து இன்றடைந்திருக்கும் உயரத்தை அடைந்தான் என்ற விவரங்கள் இருப்பதில்லை. இந்தப் புத்தகமும் அதற்கு விதிவிலக்காக அமையவில்லை. உதாரணமாக எம்.எஸ்.அனந்தராமனின் நேர்காணலில், ‘பரூர் பாணி’ என்பதை அவரது தந்தை உருவாக்கினார் என்ற விஷயம் இருக்கிறதே அன்றி. ‘பரூர் பாணி’ என்றால் என்ன என்ற விளக்கங்கள் இடம் பெறவில்லை. ஆனால், இதே நேர்காணலில் வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் போது விமான நிலையத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் பற்றி விஸ்தாரமான செய்திகள் இடம் பெற்றுள்ளன.

நூலைப் படித்து முடிக்கும் போது, திட்டமிட்டு உழைத்திருந்தால் இன்னும் பல அரிய தகவல்களை வெளிக் கொணர்ந்திருக்க முடியும் என்கிற எண்ணம் மேலெழுகிறது. மூத்த கலைஞர்களை பேட்டி காண்பதற்கு முன் ‘ஹோம் வொர்க்’ செய்வது மிக மிக அவசியம். அனைவரிடமும் ஒரே கேள்விகளைக் கேட்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், அந்தந்த கலைஞர்களுக்கென்று பிரத்யேகமாய் சில கேள்விகளையும் கேட்டிருக்கலாம். உதாரணமாக, “திருவையாறில் தமிழில் பாடியபின் தண்டபாணி தேசிகர் சந்தித்த சூழல் எப்படி இருந்தது”, என்ற கேள்வி நிச்சயம் அவரைப் பற்றிய முக்கியமான விஷயங்களை வெளிக் கொணர்ந்திருக்கும். “ஒரு காலகட்டத்தில் எம்.எஸ்.அனந்தராமனின் கச்சேரிகள் பற்றிய விமர்சனங்கள் அனைத்திலும், அவர் ஹிந்துஸ்தானி ராகங்களை கலந்து வாசிக்கிறார் என்ற குற்றச்சாட்டு இடம் பெற்றுள்ளது.”, அந்தக் குற்றச்சாட்டில் எதனால் பிறந்தது, அதனால் அவரது இசை வாழ்வுக்கு பாதகம் ஏற்பட்டதா?, போன்ற கேள்விகள் நிச்சயம் அவரிடம் கேட்கப்பட்டிருக்க வேண்டும்.

வயதானவர்களை நேர்காணல் செய்யும் போது மிகுந்த கவனம் தேவை. ஒரு வயதுக்கு மேல், கோவையாக விஷயங்களைக் கூறுவதென்பது எல்லோராலும் முடியாது. அதிலும், கலைஞர்களில் பெரும்பாலானவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். அவர்கள் கூறிய அனைத்தையும் அப்படியே எழுதிவிட வேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஒன்றுக்கு இரண்டு முறை சீர்தூக்கி, உண்மை எதுவோ அதை மட்டுமே பதிவு செய்தல் மிகவும் அவசியம். உதாரணமாக, டி.கே.மூர்த்தியின் நேர்காணலில், “மிருதங்கத்தில் ஒரு பாணி என்றால், அது தஞ்சாவூர் வைத்தியநாத ஐயர் பாணி மட்டும்தான். அந்த ஸ்டைல் ஒன்றுதான் உண்டு. வேறு ஒன்றும் கிடையாது. மாமுண்டியா பிள்ளை ஸ்டைல் ஒன்று இருந்தது. ஆனால் அதை வாசிப்பவர் இப்போது யாரும் இல்லை”, என்கிறார். ஆனால் இதே புத்தகத்தில் திருச்சி சங்கரன் மற்றும் குருவாயூர் துரை ஆகியோரின் நேர்காணலும் இடம் பெற்றுள்ளது. இவர்கள் இருவருமே மாமுண்டியா பிள்ளை ஏற்படுத்திய புதுக்கோட்டை வழியில் வாசிப்பவர்கள். இந்தத் தகவலும் அவர்களின் நேர்காணலில் இடம் பெற்றுள்ள நிலையில், சற்றே சீர்தூக்கிப் பார்த்திருந்தால், இது போன்ற தவறான செய்திகள் இடம் பெருவதைக் தவிர்த்திருக்கக் கூடும்.

நேர்காணல்களில் பல இடங்களின் பெயரும், கலைஞர்களின் பெயரும் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளன. உதாரணங்களாக, ‘மழவராயநேந்தல்’ என்ற ஊரின் பெயர் ‘மழவராயபுரம்’ என்றும் ‘மழவராய’ என்றும் குறிக்கப்பட்டுள்ளன. ’நன்றுடையான் பிள்ளையார் கோயில்’ என்ற இருக்க வேண்டிய தொடர் ‘நஞ்சுடையான் பிள்ளையார் கோயில்’ என்று இருக்கிறது. தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரை, ‘வைத்தியநாதன்’ என்று மட்டும் குறித்தால் (மஹா வைத்தியநாத ஐயர், கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர், செம்பை வைத்தியநாத ஐயர் போன்ற பல வைத்தியநாதன்கள் இருக்கும் சங்கீத உலகில்), யாரைக் குறிப்பிடுகிறார் என்பதில் பல குழப்பங்கள் நேரக் கூடும்.

பொதுவாகவே நூலில், இசை பற்றிய குறிப்புகள் அரிதாகவே இடம் பெற்றுள்ளன. அப்படி இடம் பெற்றிருக்கும் குறிப்புகளிலும் ஏராளமான தவறுகள் காணப்படுகின்றன. டி.கே.மூர்த்தியின் நேர்காணலில் ஓர் இடத்தில், “சில சாஹித்யங்கள் கீழ் ஸ்தாயியிலும், தாளம் மேல் ஸ்தாயியிலும், சில சாஹித்யங்கள் மேல் ஸ்தாயியிலும், தாளம் கீழ் ஸ்தாயியிலும் இருக்கும்.”, என்று பதிவாகியுள்ளது. தாளத்தில் மேல் ஸ்தாயி, கீழ் ஸ்தாயி என்ற பகுப்பு கிடையாது. ‘மேல் காலம்’, ‘கீழ் காலம்’, என்று இருக்க வேண்டிய தொடர்கள் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளன. “கால், அரை, முக்கால் என்று பாட்டுக்கு தனி ஆவர்த்தனம் விட்டால் சாபுதாளம் இடத்திற்கு வாசிக்கத் தெரிய வேண்டும்”, என்பது போன்ற முழுமை பெறாத வாக்கியங்களும் இடம் பெற்றுள்ளன. ‘சங்கீர்ண சாபு’ என்ற தாளத்தின் பெயர் ‘சங்கீத சாபு’ என்று பதிவாகியுள்ளது. ‘சேதுலார’ என்ற கிருதி ‘சேதுல்ல’ என்று தவறாகக் குறிக்கப்படுகிறது. இது போன்ற பல பிழைகள் புத்தகம் முழுதும் பரவிக் கிடக்கின்றன.

மொத்தத்தில், புத்தகம் ஒரு அரிய தொகுப்பு என்பதில் ஐயமில்லை. ஆனால், கலைஞர்களின் தனிப் பட்ட வாழ்க்கையை விட, அவர்களின் சங்கீதத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, பதிவு செய்யப்படும் தகவல்களில் தவறு வராமலிருக்க வேண்டிய முனைப்பு தொகுப்பாளருக்கு இருந்திருப்பின் இந்தத் தொகுப்பு காலத்தைக் கடந்து நின்றிருக்கும்.

பி.கு: புத்தகத்தில் வந்துள்ள ஒரு அரிய கட்டுரையை இங்கு படிக்கலாம்.

Read Full Post »