இன்று டாக்டர் ராகவனின் நினைவு நாள். அதையொட்டி முன்பெழிதிய சிறு குறிப்பை இங்கு இடுகிறேன்.
‘சாம வேதமும் இசையும்’, ‘மேற்கத்தியர்களின் நாட்டியமும் இசையும்’, ‘ஐம்முக முழவு’, ‘ஹீப்ரூக்களின் இசை’, ‘நேபாள பௌத்த தாந்த்ரீகர்களின் இசைக் கருவிகள்’, ‘ஆனை ஐயாவின் கீர்த்தனைகள்’, ‘லிங்கபுராணத்தில் இசைக் குறிப்புகள்’, ராமாமத்யரின் ஸ்வரமேவ கலாநிதி’.
மேற்கண்ட தலைப்புகளைப் படிக்கும் போது ஏதோ ஒரு இசை மலருக்காக பல அறிஞர்கள் எழுதிய கட்டுரைகளின் விவரம் என்று நினைக்கக் கூடும். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இந்தத் தலைப்புகளை விரிவான கட்டுரைகள் எழுதியவர் ஒருவர்தான். அவர்தான் இந்த ஆண்டின் நூற்றாண்டு நாயகராய்த் திகழும் டாக்டர் வே.ராகவன்.

சென்னையில் கர்நாடக இசை என்றதும் மனதில் தோன்றும் முதல் இடம் மியூசிக் அகாடமி. மியூசிக் அகாடமி என்றதும் முதலில் தோன்றும் பெயர் வே.ராகவனாகத்தான் இருக்க முடியும். 50 வருட காலத்துக்கு சங்கீதம், நாட்டியம், நாடகம் தொடர்பாக ஆங்கிலத்திலும், தமிழிலும் எண்ணற்ற கட்டுரைகளைச் சமைத்து இசைத் துறைக்கு செரிவைச் சேர்த்தவர் டாக்டர் ராகவன். 1930-களில், நூலகங்களில் மட்டுமே இருந்த, அச்சில் வராத சங்கீத நாட்டிய சம்பந்தமான புத்தகங்களை முதன் முதலில் அறிமுகம் செய்வித்த பெருமை இவரையே சேரும். Journal of music academy தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளிலேயே முடங்கியும் போனது. அதனை மீட்டுருவாக்கியதில் முதன்மைப் பங்கு இவருடையதே.
அகாடமியின் இயக்கத்துக்கு அச்சாணியாய் திகழ்ந்த டாக்டர் ராகவனின் முயற்சியால், ‘சங்கீத சுதா’, ‘சதுர்தண்டி பிரகாஸிகா’, ‘சங்கீத சாராம்ருதம்’ போன்ற புத்தகங்கள் அகாடமி வெளியீடாக வந்தன. இவை தவிர, சுப்பராம தீட்சிதரின் சங்கீத சம்பிரதாய பிரதர்ஷிணி என்ற நூலை தமிழில் கொண்டு வரும் பெரும் முயற்சியை எஸ்.இராமநாதன், பி.கிருஷ்ணமூர்த்தி, பி.ராஜம் ஐயர் ஆகியோருடன் சேர்ந்து தொடங்கி, தனது வாழ்நாளுக்குள் அந்நூலின் நான்கு தொகுதிகளையும் வெளியிட்டார். ஐந்தாம் தொகுதி அவர் மறைவுக்குப் பின் டி.எஸ்.பார்த்தசாரதியின் முயற்சியில் வெளியானது.
சங்கீத மும்மூர்த்திகளைப் பற்றி எவ்வளவோ பேர் எழுதியிருப்பினும், ஐம்பது வருடங்களுக்கு முன் அவர் எழுதிய கட்டுரைகளுக்கு இணையாக அதற்கு முன்னால் உள்ளவற்றையோ, அதற்கு பின்னால் வந்தவற்ரையோ கூற முடியாது. இராமகிருஷ்ணா மடம் வெளியீடாகக் கிடைக்கும் ‘Spiritual Heritage of Tyagaraja’, என்ற புத்தகம் பல பதிப்புகள் பெற்றிருக்கிறது. பாரதி ஏன் தியாகராஜரை ‘ரஸக் கடல்’ என்கிறான் என்று இந்தப் புத்தகத்தைப் படித்தால் நன்குணரலாம். சரணாகதி தத்துவத்தைத் தவிர, அழகான உவமைகள், நிந்தா ஸ்துதியில் அமைந்த பாடல்கள், போலித்தனத்தை சாடும் சாட்டையடிப் பாடல்கள், பிரம்மானந்த அனுபவத்தைப் பறை சாற்றும் அத்புத ரஸம் ததும்பும் பாடல்கள் என்று டாக்டர் ராகவனின் அலசல், பல கோணங்களில் தியாகராஜரின் கிருதிகளை ரசிக்க உதவிகிறது. முத்துஸ்வாமி தீட்சிதரின் பற்றி டாக்டர். ராகவனின் எண்ணற்ற கட்டுரைகள் கிடைக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று “தீட்சிதரும் கோயில்களும்” என்ற தலைப்பில் ஆனந்த விகடன் தீபாவளி மலரில் வெளியான கட்டுரை. ஊர் ஊராய்ப் போய்ப் பாடிய நாயன்மார்களோடும், ஆழ்வார்களோடும் தீட்சிதரை ஒப்பிட்டு, அவர் பல்வேறு இடங்களில் பாடியிருக்கும் கிருதிகளை அழகுற விளக்கியுள்ள விதம் மிகவும் ரசிக்கத்தக்கது. தீட்சிதரின் கிருதிகளில் உள்ள சங்கீதமாக மட்டுமின்றி, ஆகமங்கள், ஸ்தல புராணங்கள், வழிபாட்டு முறைகள் போன்றவற்றை எடுத்துக் கூறும் கருவூலமாகவும் காணலாம் என்ற பார்வையை முதன் முதலில் வைத்தவர் டாக்டர். ராகவன்தான். இதே கட்டுரையில், சில கிருதிகள் குறிக்கும் விஷயங்கள் சரிவர விளங்கவில்லை என்று தயக்கமின்று கூறுவதிலிருந்து ராகவனின் எழுத்திலுள்ள நேர்மையை நாம் உணரலாம். சியாமா சாஸ்திரியின் கீர்த்தனங்களில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த ராகவன், ‘சியாமா சாஸ்திரின் நமோஸ்துதே’ என்ற கிருதியைக் கவனம் செய்துள்ளார். இந்தக் கிருதியை சாமா ராகத்தில், மிஸ்ர சாபு தாளத்தில் எம்.எல்.வசந்தகுமாரி பாடியுள்ளார்.
“காஞ்சி பரமாச்சாரியாருக்கு சமஸ்கிருதத்தில் ஏதேனும் சந்தேகம் ஏற்படின் டாக்டர் ராகவனைத்தான் கேட்பார். அப்பேர்ப்பட்ட சமஸ்கிருத ஞானி அவர். ரேடியோவில் அவர் ஆற்றிய உரைகளில் பாடல்களைப் பாடும் பேறு எனக்குக் கிடைத்துள்ளது. ஒரு முறை தீட்சிதரின் நவகிரக கிருதியான சூர்யமூர்த்தே பாடலுக்கு எப்படி சரியாகப் பதம் பிரிப்பது என்று விளக்கினார். சின்னச் சின்ன விஷயங்களில் கூட தவறு வராமல் இருக்க முனைந்து செயல்படுவார். மியூசிக் அகாடமி இன்று அடைந்து இருக்கும் உயர்வான நிலைக்கு முக்கிய காரணம் ராகவனின் ஆளுமைகள்தான். அகாடமி expert’s committee விவாதங்களை கௌரவமாய் அவர் வழி நடத்திய விதத்தை என்றும் மறக்க முடியாது”, என்று ஸ்ருதியில் வந்த நேர்காணலில் வித்வான் எஸ்.ராஜம் கூறியுள்ளார்.
அகாடமி கருத்தரங்கில் கர்நாடக இசை மட்டுமின்றி, ஹிந்துஸ்தானி இசை பற்றியும் பல விவாதங்களுக்கு வழி வகுத்தார். அசாம் மாநில கிராமிய இசை, ஒரிசாவின் நடனமான ஒடிசி, என்று இந்தியாவின் பல்வேறு கலைகளை சென்னைக்குக் கொண்டு வந்த பெருமை டாக்டர் ராகவனையே சேரும். இந்தியாவின் சார்பாக பல நாடுகளுக்குச் சென்று நம் இசையைப் பற்றியும் நாட்டியத்தைப் பற்றியும் பல கட்டுரைகள் வாசித்த டாக்டர் ராகவன், மேற்கத்தியவரை அகாடமிக்கு அழைத்து, இந்தியாவுக்கு உலக இசை வடிவங்களை அறிமுகப்படுத்தவதிலும் பெரும் பங்கு ஆற்றியுள்ளார். யுகாஸ்லாவியா, ரொமேனியா போன்ற நாடுகளின் இசை வடிவங்களை அறிமுகம் செய்ய டாக்டர் ராகவன் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகள் இன்றளவும் பேசப்படுகின்றன. நிகழ்ச்சிகள் நடத்தியதோடன்றி, பல்வேறு இசை வடிவங்களைப் பற்றி அவர் எழுதியுள்ள கட்டுரைகள் இன்றைய தலைமுறையினருக்கு reference material-ஆக பயன்படுகின்றன.
ஐம்பது வருடங்களுக்கு அகாடமி என்றால் அது ராகவன்தான் என்ற நிலையாக இருந்தது. இன்றும், மார்கழி இசை விழாவில் அகாடமியின் காலை வேளை கருத்தரங்க நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது, டாக்டர் ராகவனின் ஆன்மா அங்கிருக்கும் அவரது அழகிய உருவப்படத்தின் வழியாக நிகழ்வுகளைக் கவனித்தபடிதான் இருக்கும்.