Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜனவரி, 2021

இருவாட்சி இலக்கியத் துறைமுகம்பொங்கல் 2021 சிறப்பிதழில் வெளியான கட்டுரை.

நண்பருடன் ஒரு நாகஸ்வர கச்சேரிக்குச் சென்றிருந்தேன். வாசித்த கலைஞர்களின் திறமைக்கு குறைவேயில்லை. இருந்தாலும் அந்தக் கச்சேரியை ரசிப்பது சிரமமாகயிருந்தது.

கச்சேரியில் ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை தவில் வித்வான் தனது சிஷ்யனை ஏவி தனக்கு வைக்கப்பட்ட மைக்கின் ஒலியளவை ஏற்றச் சொல்லிக் கொண்டிருந்தார். தவிலின் ஒலியளவு ஏற அதற்கு ஏற்றவாறு நாகஸ்வரத்தின் ஒலியை ஏற்றாவிட்டால் தார ஸ்தாயி சஞ்சாரங்கள் கூட சன்னமாய்க் கேட்கும் அபாயத்தை உணர்ந்து தனது ஒலியளவை ஏற்றச் சொன்னார் நாகஸ்வர வித்வான்.

நாகஸ்வரம் வெளியில் கேட்டதும் தவில் வித்வான் மீண்டும் சிஷ்யனை ஏவினார். இப்படி மாறி மாறி ஏற்றியதில் – ஒரு கட்டத்தில் அத்தனை விசைகளையும் உச்ச அளவில் வைத்துவிட்டு கேண்டீனுக்குச் சென்றுவிட்டார் சபாவின் ஒலியமைப்பாளர்.

அந்த சிறிய கூடத்தில் சத்தம் மண்டையைப் பிளக்க, நானும் நண்பரும் கேண்டீனுக்கு நகர்ந்தோம்.

கள்ளிச் சொட்டுக் காப்பியை உறிஞ்சியபடி நண்பர் சொன்னார். “தவில் எப்படி உருவாச்சுனு ஒரு செவிவழிக் கதையுண்டு. ராமாயண யுத்தத்தின்போது வெவ்வேற விதமா கும்பகர்ணனை எழுப்பினாங்களாம். வாசிச்சா ஊருக்கே கேட்கறா மாதிரியான வாத்தியத்தை அவன் காதுகிட்ட கொண்டு போய் அடிச்சா முழுச்சிப்பான்னு செஞ்ச வாத்யமாம் தவில். இப்ப வாசிக்கற தவில் வித்வானுக்கு வைத்தீஸ்வரன்கோயில்ல நாடி பார்க்கணும். பூர்வ ஜென்மத்துல அவர் பிறந்த ஊர் இலங்கை. கும்பகர்ணனை எழுப்ப தவில் வாசிச்சது அவர்தான்னு நாடி சொல்லும்.”

அவர் இப்படிச் சொன்னதும், அவர் சொன்ன கதையின் நம்பகத்தன்மையை ஆராயவோ, அல்லது அதை ஒட்டி அவர் செய்த நக்கலை ரசிக்கவோ மனம் செல்லவில்லை. இலங்கையில் உருவான ஓர் உன்னத தவில் வித்வானைப் பற்றி மனத்தில் அலையடித்தது.

இந்த வருடம் நூற்றாண்டு காணும் வலங்கைமான் ஷண்முகசுந்தரம் பிள்ளைதான் அந்தக் கலைஞர். ”இலங்கையில் ஏது வலங்கைமான்?” என்று கேள்வி எழலாம். அவரைப் பற்றி தமிழிசைச் சங்க மலரில் வெளியாகியிருக்கும் குறிப்பு, அவர் பிறந்தது திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள சேகல் மடப்புரத்தில் என்றும், அவருடைய ஐந்தாவது வயதில் குடும்பம் இலங்கைக்குக் குடிபெயர்ந்துவிட்டது என்றும் கூறுகிறது.

தவிலின் ஆரம்பப் பாடங்களைத் தந்தையிடமும், அதன்பின் இணுவில் சின்னத்தம்பி பிள்ளையிடமும், இராஜகோபால பிள்ளையிடமும் யாழ்ப்பாணத்தில் பயின்றார் ஷண்முகசுந்தரம். சிறப்புத் தேர்ச்சிக்காக பின்னாளில் தவில்மேதை நாச்சியார்கோயில் ராகவப் பிள்ளையிடம் குருகுலவாசம் செய்த போதும், அவர் கச்சேரி வாசிக்க ஆரம்பித்த நாட்களில் ‘யாழ்ப்பாணம் ஷண்முகசுந்தரம்’ என்றே அறியப் பட்டிருக்கிறார்.

குருகுலவாசம் முடிந்து மீண்டும் யாழ்ப்பாணம் சென்று நல்லபடியாய்த் தொழில் செய்துகொண்டிருந்த போதும் அவர் மனமெல்லாம் தஞ்சை ஜில்லாவும், அங்கு நடக்கும் கச்சேரிகளும் நிரம்பியிருந்தன. அதனால் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள வலங்கைமானுக்குக் குடிபெயர்ந்தார். சில காலங்களில் அது அவருடைய நிரந்தர இடமாகியது. நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை,  நாச்சியார்கோயில் ராகவப் பிள்ளை வரிசையில் தவில் உலகில் முதன்மைக் கலைஞர் என்ற ஸ்தானம் அவருக்குக் கிடைத்த போது அவர் ‘வலங்கைமான்’ ஷண்முகசுந்தரமாக மாறி இருந்தார்.

அவர் வாசிப்பை நான் முதன் முதலில் மேண்டலின் ஸ்ரீநிவாஸின் இசைப் பதிவுகளில் கேட்டேன். மேண்டலினின் தொனிக்கு அத்தனை பாந்தமாய்ப் பொருந்தியிருந்தது அந்தத் தவில். 1994-ல் அவர் மறைந்த போது ஷண்முகா இதழில் அவர் மேண்டலினுக்கு வாசித்ததைப் பற்றி ஒரு குறிப்பு வெளியாகியுள்ளது. மேண்டலின் கச்சேரிக்குத் தலைமை தாங்கச் சென்ற ஷண்முகசுந்தரம் பிள்ளை, “இது போன்ற திறமைசாலிக்கு பெரிய பக்கவாத்தியங்கள் முன்வந்து வாசித்து முன்னேற்றிவிட வெண்டும்,” என்று கூறியுள்ளார். அப்போது கூட்டத்திலிருந்து யாரோ எழுந்து, “அப்படியெனில் நீங்களல்லவா முதலில் வாசிக்க வெண்டும்,” என்று கூறியிருக்கிறார். அதில் இருந்த நியாயத்தை உணர்ந்து அந்தக் கச்சேரியிலேயே மேண்டலினுக்கு வாசித்துள்ளார். 1985-க்குள் ஸ்ரீநிவாஸனுக்கு மட்டும் 100 கச்சேரிகளுக்கு மேல் வாசித்து ‘செஞ்சுரி’ அடித்துள்ளதாகக் கூறுகிறது அந்தக் குறிப்பு.

படம்: வித்வான் மேண்டலின் ராஜேஷ் அளித்தது

1990-களில் சிறு விழாக்களில் அல்லது திருமண விடியோ பதிவுகளில் மங்கல இசையாக மேண்டலின் இடம்பிடித்ததைக் காணலாம். மேண்டலினின் இனிமையான நாதமும், விறுவிறுப்பும் இதற்குக் காரணங்கள் என்றாலும், வலங்கைமானாரின் வாசிப்பு சேர்த்த கம்பீரத்துக்கும் குளுமைக்கும் அந்தப் பதிவுகளை மங்கல வாத்தியமாக்கியதில் சமபங்கு உண்டு.

இதைச் சொல்லும் போது தவில் வாசிப்பைக் குறிப்பிடும் இடத்தில் குளுமை என்ற சொல் எத்தனை கலைஞர்களின் வாசிப்புக்குப் பொருந்தும் என்று சிந்தித்துப் பார்க்க வெண்டும். அதிலும் கம்பீரத்தை விட்டுவிடாத குளுமை. அந்த அபூர்வ கலவையே அவரை தனித்துக் காட்டியது.

நாச்சியார்கோயில் ராகவப் பிள்ளையின் இன்னொரு சீடரும், இன்றைய முன்னணி வித்வான்களில் ஒருவருமான தஞ்சாவூர் கோவிந்தராஜன், “தவிலில் ‘தா’ என்கிற சொல்லுக்குச் சொந்தக்காரர் என்று பெயர் வாங்கியவர் ராகவப் பிள்ளை. அவருக்குப் பின் அந்தச் சொல் ஷண்முகசுந்தரம் அவர்களுக்குத்தான் அமைந்தது. தவில் வாசிப்பது என்பது தாளத்துக்கு சரியாக வரும் கணக்கு வழக்குகள் மட்டுமல்ல. நாகஸ்வரக்காரருக்கு, அவர் இசைக்கும் பாட்டுக்கு, உடன் வாசிக்கும் தவில் கலைஞரின் திறனுக்கு ஏற்றாற்போல் வாசித்தால்தான் பரிமளிக்கும். எங்கள் தலைமுறை வித்வான்கள் அதை ஷண்முகசுந்தரம் பிள்ளையின் வாசிப்பைத் தேடித் தேடிச் சென்று கேட்டுத் தெரிந்து கொண்டோம்,” என்கிறார்.

கோவிந்தராஜன் சொல்வதன் முழுவீச்சை உணர இந்த உதாரணம் உதவும். இணையத்தில் நாகஸ்வர வித்வான் ஆண்டான்கோயில் செல்வரத்தினம் வாசித்திருக்கும் சங்கராபரணம் ராகத்தின் பதிவு உள்ளது. அந்த ஆலாபனையில் ஒலிக்கும் தவில் ஒரு நல்ல வாய்ப்பாட்டுக் கச்சேரியில் தேர்ந்த வயலின் வித்வானின் பங்களிப்பை ஒத்து இருப்பதை உணரலாம். வழக்கமாக ராக ஆலாபனையில் நாகஸ்வர வித்வான் ஒரு பகுதியை முடிக்கும் போது தவிலில் சில உருட்டுச் சொற்கள் வாசித்து ஒரு தீர்மானம் வைப்பதைக் கேட்க முடியும். இந்தப் பதிவில் அதற்கும் ஒரு படிக்கு மேல் சென்று நாகஸ்வரத்தை வாசித்துக் கொண்டிருக்கும் போதே சதுஸ்ரத்தில் அழகழகாய், விதவிதமாய் கோவைகளை பன்னீர் தெளித்தது போல வாசித்துள்ளது மொத்த அனுபவத்தை வேறு தளத்துக்கு நகர்த்தியுள்ளது.

வித்வான் ஆண்டான்கோயில் செல்வரத்னத்துடன்

ராகத்துக்கு வாசிப்பது என்பது ஷண்முகசுந்தரம் பிள்ளையின் சிறப்பு அம்சம் என்று எனக்குச் சொன்னவர் சங்கீத கலாநிதி ஷேக் சின்ன மௌலானாவின் பேரன், நாகஸ்வர வித்வான் காசிம்தான். அவர் கூறிய வேறு சில விஷயங்களிலும் ஷண்முகசுந்தரம் பிள்ளையின் அணுகுமுயை உணர உதவும்.

 “என் தாத்தாவும் வலங்கைமான் தாத்தாவும் 33 வருடங்கள் தொடர்ந்து ஒன்றாக கச்சேரி வாசித்துள்ளனர். ரேடியோவில் தாத்தாவின் கச்சேரி என்றால் தவில் யாரென்று கேட்கவே வேண்டாம். அது வலங்கைமான் தாத்தாவாக மட்டும்தான் இருக்கும். நான் பார்த்த வரையில் ‘என்ன வாசிக்கப் போகிறீர்கள்?’ என்றோ, ‘எந்தத் தாளத்தில் தனி வாசிக்க வெண்டும்?’ என்றோ, ‘எவ்வளவு நேரம் தனி வாசிக்க வேண்டும்?” என்றோ அவர் என் தாத்தாவைக் கேட்டதேயில்லை. மூன்று மணி நேரக் கச்சேரிக்கு எப்படி வாசிக்க வெண்டும். அரை மணி நேர தொலைக்காட்சிக்கு எப்படி வாசிக்க வேண்டும். இரண்டு மணி நேரம் வாசித்தாலும், இரண்டரை நிமிடங்கள் வாசித்தாலும் உடன்வாசிப்பவர் சாதாரண தவில் வித்வான் என்றாலும் கூட அவர் குறை வெளியில் தெரியாமல் கச்சேரி சிறப்பாக அமைந்தது என்று நினைக்கும்படி எப்படி வாசிக்க வேண்டும் என்று அவரைப் போல உணர்ந்து வாசித்த வேறொருவரை நான் கண்டதில்லை.

படம்: வித்வான் எஸ்.காசிம்

… தாத்தாவின் உடல்மொழியைப் பார்த்தே எப்படி வாசிக்க வெண்டும் என்று அவருக்குப் புரிந்துவிடும். ஒருமுறை சென்னை கந்தசாமி கோயிலில் புறப்பாட்டிற்கு தாத்தாவின் கச்சேரி ஏற்பாடாகியிருந்தது. பல ஊர்களுக்குச் சென்று அடுத்தடுத்து கச்சேரி செய்துவிட்டு சென்னைக்கு வர நேர்ந்தது. அதனால் சற்று தளர்ந்திருந்தார். அன்று தோடி ராகத்தைப் பிரதானமாக எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். அவர் வாசிப்பில் அந்தத் தளர்ச்சி தெரிந்தது. அதை உணர்ந்த வலங்கைமான் தாத்தா, அனல் பறக்கும் ஃபரன்களாக சில நிமிடங்களுக்கு வாசித்து ஒரு மோராவை வாசித்தார். அவர் முடித்த போது மொத்த சூழலே மாறிவிட்டது. தாத்தாவுக்கு இருந்த களைப்பெல்லாம் போன இடமே தெரியவில்லை. அதற்குப் பின் வாசித்த தோடியை வாழ்நாளில் மறக்க முடியாது,” என்கிறார் காசிம்.

ஷண்முகசுந்தரம் பிள்ளையைப் பற்றி பலர் சொல்லும் விஷயம் ஒன்று உண்டு. பெரிய ஜாம்பவான்களுக்கு வாசித்தாலும், தன்னைவிட வயதிலும் அனுபவத்திலும் மிகக் குறைந்தவர்களுக்கு வாசித்தாலும் அவருடைய அணுகுமுறை ஒரே மாதிரிதான் இருக்கும். சிறியவர்கள் என்பதற்காக  தன்னை அவர் ஒருநாளும் முதன்மைப் படுத்திக் கொண்டதில்லை. வெளியிலிருந்து கச்சேரி பார்ப்பவர்களுக்குத் தெரியாமல் தன் வாசிப்பின் மூலம் அனுபவத்தில் குறைவானவர்களை இன்னும் சில நிலைகள் உயர்த்தி வாசிக்கச் செய்தார் என்பதைப் பலர் கூறியுள்ளனர்.

உதாரணமாக வயலின் கலைஞர் குமரேஷ், “நாங்கள் வளர்ந்து வந்த காலத்தில் எங்களுக்கு மகிழ்ச்சியோடு பல கச்சேரிகள் வாசித்திருக்கிறார். ஒரு கச்சேரி அவர் ஊரில் அவரே ஏற்பாடு செய்து எங்களை அழைத்திருந்தார். நகர சபைகளில் வாசிப்பது போலவே வலங்கைமான் கிராமத்திலும் வாசிக்க வேண்டுமா என்று நாங்கள் யோசிப்பதை உணர்ந்து, “இங்க வாசிக்காத பெரிய நாயனக்காரங்களே இல்லை. இங்க வந்திருக்கறவங்க எல்லாம் அவங்களைக் கேட்டு வளர்ந்தவங்க. கேதாரகௌளை ராகத்தை நல்லா விஸ்தாரமா வாசிங்க தம்பி,” என்று வழிகாட்டினார். அன்று நாங்கள் வாசித்த ராகத்தை அந்த கிராமத்தில் வெகுவாக ரசித்தார்கள். இள வயதில் எங்களுக்கு அது ஒரு பாடமாகவும் அமைந்தது. அவர் பங்கு பெற்ற கச்சேரிகளில் அவர் பக்கவாத்யம் வாசித்தார் என்று சொல்வதைவிட பீஷ்மர் போல கச்சேரியை வழிநடத்தினார் என்று சொல்வதே சரியாக இருக்கும்,” என்கிறார்.

இன்று தவில் என்பது நாகஸ்வரத்துடன் வாசிக்கக் கூடிய துணைக் கருவி என்ற நிலையில்லை. தவிலுடன் சேர்ந்து வாசிக்காத வாத்யங்களே இல்லை எனலாம். வாய்ப்பாட்டுக் கச்சேரிகளில் கூட தவில் பக்கவாத்யமாய் இடம்பெறும் நிகழ்ச்சிகளும் அவ்வப்போது காணக் கிடைக்கின்றன. தவில் கலைஞர் கச்சேரியின் நாயகனாய் அமர்ந்து வழிநடத்தும் கச்சேரிகளும் உலகின் பல இடங்களில் இன்று சாதாரணமாய் நடப்பவையே. இந்த மாற்றத்துக்கான முதல்படியை எடுத்து வைத்தது வலங்கைமான் ஷண்முகசுந்தரம் பிள்ளைதான். எல்.வைத்தியநாதன், எல்.சுப்ரமண்யம், எல்.சங்கர் சகோதரர்களுக்கு வாசிப்பதில் தொடங்கி, மாலியின் குழலுக்கு, ஸ்ரீநிவாஸின் மாண்டலினுக்கு, கணேஷ்-குமரேஷ் சகோதரர்களின் வயலினிசைக்கு என்று அவர் வாசித்த கச்சேரிகள் ஏராளம். எண்பதுகளில் ஒரு கட்டத்தில் அவர் நாகஸ்வரத்துக்கு வாசிப்பதே அரிது என்ற நிலை கூட இருந்துள்ளது.

முதன்மைக் கலைஞராகவும் புதிய தடங்களை அமைத்தவராகவும் இருந்த ஷண்முகசுந்தரம் பிள்ளைக்கு பல அங்கீகாரங்களும் பட்டங்களும் தேடி வந்ததில் ஆச்சரியமில்லை. 1985-ல் மத்திய அரசு அளிக்கும் சங்கீத நாடக அகாடமி விருதைப் பெற்றார். அந்த கௌரவத்தைப் பெற்ற முதல் தவில் கலைஞர் அவர்தான். புகழின் உச்சியில் இருந்த போதும் எந்தக் கச்சேரியிலும் தன்னை முன்னிருத்துக் கொள்ள அவர் முயன்றதில்லை. தனக்குத் தெரிந்த அனைத்தையும் வாசிப்பில் கொட்டிவிட வேண்டும் என்று அவசியமில்லை என்பதில் ஸ்திரமாக இருந்துள்ளார். லயத்தில் ஆழ்ந்த தேர்ச்சியைப் பெற்றிருந்த சீதாராம பிள்ளையிடம் அதிகம் வழக்கில் இல்லாத 108 தாளங்கள் உட்பட பல நுணுக்கங்களில் சிறப்பான தேர்ச்சியைப் பெற்றவர் என்றாலும், “சாகஸத்துக்காக மற்ற நடைகளையோ, அரிய தாளங்களையோ பிரஸ்தாபிப்பதை விட கச்சேரியைப் பரிமளிக்க வைக்க என்ன தேவையோ அதைத்தான் வாசிக்க வேண்டும். நெருடலான விஷயங்களை அவ்வப்போது தொட்டுக் காட்டலாமேயின்றி அவற்றுக்கே பிரதான இடம் அளிப்பதில் எனக்கு ஒப்புதலில்லை,” என்று ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

உயரங்களைத் தொட்ட போதும் சக கலைஞர்களை அவர் மதிக்கத் தவறியதில்லை. அதே வேளையில் தன்மானத்தைக் காத்துக் கொள்ளவும் அவர் தவறியதில்லை. அவருடன் நெருங்கிப் பழகக் கூடிய வாய்ப்பைப் பெற்ற திருப்பூரைச் சேர்ந்த இசை ஆர்வலர் வி.கோ.செந்தில்குமார் நினைவுகூரும் நிகழ்ச்சியை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

“தில்லானா மோகனாம்பாள் படத்தில் தவில் கலைஞரை அச்சு அசலாகப் பிரதியெடுத்துக் காண்பித்ததற்காக நடிகர் பாலய்யா இன்றும் பேசப்படுகிறார். அவர் அப்படி நடிக்க முன்மாதிரியாகக் கொண்டது வலங்கைமான் ஷண்முகசுந்தரம் பிள்ளையைத்தான். பாலய்யா இந்த விஷயத்தை ஷண்முகசுந்தரம் பிள்ளையிடம் கூறியபோது, எல்லாம் சரிதான். நான் எப்ப கக்கத்துல துண்டையிடுக்கிட்டு நாயனக்காரர்கிட்ட கையைக் கட்டி நின்னு இருக்கேன், என்று கேட்டாராம். இதை அவர் என்னிடம் நேரில் சொல்லியிருக்கிறார்,” என்கிறார்.

அழகுணர்ச்சியைக் கெடுக்காமல் வாசித்த போதும் தன் இருப்பை மனத்தில் பதியும்படி வாசித்த ஷண்முகசுந்தரம் பிள்ளையின் வாசிப்பை நினைக்கும் போதும் இன்னொரு கச்சேரிப் பதிவு நினைவுக்கு வருகிறது.

சங்கீத கலாநிதி மதுரை டி.என்.சேஷகோபாலனும் நாகஸ்வர வித்வான் மாம்பலம் சிவாவும் சேர்ந்து செய்த கச்சேரியின் பதிவு இணையத்தில் கிடைக்கிறது. லயத்துணைக்கு தவிலில் ஷண்முகசுந்தரம் பிள்ளையும், மிருதங்கத்தில் பெங்களூர் பிரவீனும் சேர்ந்துள்ளனர்.

கச்சேரியில் அவர்கள் வாசித்தது இருக்கட்டும். வாய்ப்பாட்டுக் கச்சேரியில் ஒலிப்பெருக்கியை தவிலுக்கு வைத்தால் பாடுவது எடுபடாமல் போய்விடும் என்பதற்காக ஒலிப்பெருக்கியே வைத்துக் கொள்ளாமல் அவர் வாசித்திருக்கும் காட்சியை இன்னொருமுறை மனத்தில் ஓட்டிப் பார்க்கிறேன்.

நாங்கள் அமர்ந்திருந்த கேண்டீனில் யாரோ ஸ்பீக்கருக்கு உயிரூட்டி யிருக்கிறார்கள். கச்சேரிக் கூடத்தில் கேட்ட நாராசம் எங்களைக் கேண்டீனிலும் துரத்துகிறது.

 ‘வலங்கைமானாரே! உங்கள் நூற்றாண்டிலாவது உங்கள் வாரிசுகளுக்கு உங்கள் அடக்கமும் அழகுணர்ச்சியும் வாய்க்க ஆசிர்வதியுங்கள்,’ என்று வேண்டியபடி மிஞ்சியிருந்த காப்பியை ஒரே மடக்கில் முழுங்கி வீதியில் இறங்கினோம்.

Read Full Post »

இன்று ஜி.என்.பி-யின் பிறந்த நாள். அதை முன்னிட்டு அவரைப் பற்றி நான் எழுதிய நூலிலிருந்து ஒரு பகுதியை இங்கு வெளியிடுகிறேன். இந்தச் சம்பவத்தை சங்கீத கலாநிதி டி.எம்.தியாகராஜன் ஜி.என்.பி-யின் எண்பதாவது பிறந்த நாள் விழாவில் கூறியுள்ளார்.

“என்னையா சுத்தப் பைத்தியக்காரனா இருக்க? புதுக்கோட்டை-ல இருந்து கும்மோணத்துக்குள்ள எத்தனை வித்வான்கள் இருக்கா! 10 ரூபாய் சன்மானம் கொடுத்தா மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயரையோ, அரியக்குடி இராமானுஜ ஐயங்காரையோ கூட்டிண்டு வந்து ராத்திரி முழுக்க ஆனந்தமா பாட்டு கேட்கலாம். எவனோ டாக்கி பாடகனை எல்லாம் மெட்ராஸ்-ல இருந்து கூட்டிண்டு வர அளவுக்கா நம்ம தஞ்சாவூர் கௌரவம் குறைஞ்சு போச்சு?”, என்று பொறுமினார் ஆஞ்சனேயர் கோயில் உத்சவ கமிட்டி மெம்பர்.

“மகாலிங்கம் பிள்ளைவாள்! ரெண்டு வருஷமா நான் சொல்லிண்டே இருக்கேன். நானும் காவேரி தண்ணி குடிச்சு வளர்ந்தவன்தாங்காணும். எனக்கும் ஏதோ கொஞ்சம் சங்கீத ஞானம் இருக்கறதாலதான் இத்தனை வருஷம் கமிட்டியில குப்பை கொட்டியிருக்கேன். ஒரே ஒரு தடவை கூப்பிட்டு”, வாக்கியத்தை தண்ணித்தொட்டி வெங்கடராம ஐயர் முடிப்பதற்குள் பத்ம வியூகத்தில் அகப்பட்ட அபிமன்யுவைச் சூழ்ந்தது போல பலர் சூழ்ந்து கொண்டனர்.

“ஐயர்வாள்! உம்ம ஆளு நடிச்ச டாக்கிய நானும்தான் பார்த்தேன். நாரதர்-னா தாடியும் மீசையும் வெச்சுண்டு, தம்புராவை மீட்டிண்டு நாராயணன் நாமம் பாடுவார். உம்ம பி.ஏ ஹானர்ஸ் நாரதர், நாகரீகமா ஷவரம் பண்ணிண்டு அழகுக்காக தம்புராவை தொங்க விட்டுண்டு, ‘நாரதரோட சிஷ்யரான தியாகராஜர் பாட்டு-னு’ கூட தெரியாம, அபத்தக் களஞ்சியமா “கோடினதுலு தனுஷ்கோடி” பாட்டை பாடினவர்தானே. அவர் பாட்டை போய் வெக்கச் சொல்லி ரெண்டு வருஷமா சிபாரிசு பண்றீரே. நாளைக்கு கச்சேரி நன்னா இல்லைன்னா தஞ்சாவூரே நம்மைக் கமிட்டியைப் பார்த்து வழிச்சுண்டு சிரிக்கும்.”

வெங்கடராம ஐயரின் முகம் சுண்டிப் போனதைக் கண்டு வருந்திய மஹாலிங்கம் பிள்ளை, “இந்த வருஷத்துக்குதான் 8 கச்சேரிக்கு பணம் இருக்கே. ஒரு கச்சேரிதான் மோசமா போனா என்ன குறைஞ்சுட போறது. வெங்கடராமனும் சும்மா சொல்லக் கூடிய ஆளில்லை. கேட்ட பாட்டையே கேட்டுண்டு இருக்கறதுக்கு பதிலா ஒரு தடவை பட்டணத்து பாட்டையும்தான் கேட்டுப் பார்ப்போமே. வைத்தியநாத ஐயர்வாள் நீர் என்ன சொல்றீர்?”

“புது ஆளைக் கூப்பிடறதுல எனக்கு ஒண்ணும் துவேஷம் இல்லை. என் சிஷ்யன் பாலக்காட்டு மணி 15 வயசுக்குள்ள சூராவளியா புறப்படையா என்ன? இருந்தாலும் கும்மோணத்துல இருந்தோ, மாயவரத்துல இருந்தோ ஆளைக் கூப்பிட்டா ரயில் டிக்கெட் ஏழறையணா, வண்டிச் சத்தம் ஒரணாவோட போச்சு. மெட்ராஸ்-ல இருந்து வந்தா போட் மெயில் டிக்கெட்டே நாலே முக்கால் ரூபா செலவு”, என்று தன்னுடைய எண்ணத்தை சூசகமாக தெரிவித்தார் வைத்தியநாத ஐயர்.

“தெருவுல போற மாடு எல்லாம் கஷ்டப்படாம இருக்கணுமேன்னு தண்ணித் தொட்டி கட்டி, தினம் ரெண்டாளு கூலி கொடுத்து தண்ணி இறைக்கறேன்யா நான். போட் மெயில் டிக்கெட்தான் பிரச்சனைனா, இன்னும் 10 நாளைக்குச் சேர்த்து கூலி கொடுத்ததா நினைச்சுக்கறேன்” என்று மீண்டும் சீறினார் தண்ணித்தொட்டி வெங்கடராம ஐயர்.

“அப்படியென்னங்காணும் அந்த கண்றாவிப் பாட்டுல கண்டுட்டீர்”

“பாட்டைக் கேட்காமலே நாக்கு மேல பல்லைப் போட்டு பேசற உம்ம கிட்டபேச எனக்கு போது இல்ல. மகாலிங்கம் பிள்ளைவாள்! நீர் சொல்லும், கடைசியாக் கேட்கறேன். மணியை கச்சேரிக்குக் கூப்பிட முடியுமா? முடியாதா?”

“ஐயர்வாள்! நீங்க நிம்மதியா வீட்டுக்குப் போங்க. உம்ம இஷ்டப்படியே மணி கச்சேரிக்கு ஏற்பாடு பண்ணிடலாம்.”, என்று அத்தனை எதிர்ப்பையும் மீறி ஸ்திரமாகக் கூறினார் மகாலிங்கம் பிள்ளை.

பலர் முகத்தில் அதிருப்தி வெளிப்பட்டாலும், வீடு செல்லும் வெங்கடராம ஐயரின் முகத்தில் தெரிந்த நிறைவைக் கண்டு மகாலிங்கம் பிள்ளைக்கு மகிழ்ச்சி. ஆனால், அம்மகிழ்ச்சி நெடு நேரம் நிலைக்கவில்லை.

“நாலு கால் மண்டபக் கச்சேரினா உமக்கு கிள்ளுக் கீரையா போச்சா? எந்த ஊரில பேர் வாங்கினவனும் தஞ்சாவூருக்கு வர்ரதுன்னா பயப்படுவான். வெங்கடேச பெருமாள் கோயில் மேல் படியில உட்கார்ந்து நாம லேசா தலையை ஆட்ட மாட்டோமா? நம்ம பாட்டுக்கு சாபல்யம் கிடைக்காதான்னு பெரிய பெரிய ஆளெல்லாம் தவம் கிடக்கறான். நீர் என்னடான்னா டாக்கி பாட்டுக்காரனையெல்லாம் கூப்பிடறேன்னு சொல்றீர்?”

“உம்ம ருசிக்கு ஏத்தாப் போல முடிகொண்டான் வெங்கடராமையர் பாட்டை ஏற்பாடு பண்ணிடறேன். போறுமா? இந்த கச்சேரி வைக்க எனக்கு மட்டும் என்ன வேண்டுதலா? தண்ணித்தொட்டி வெங்கடராம ஐயர் நம்ம ஊருக்காகவும் உத்சவத்துக்காகவும் எவ்வளவோ பண்ணி இருக்கார். இரண்டு வருஷமா வேற கேட்கறார். ஒரு தடவை அவருக்காகத்தான் அந்த மணியை கூப்பிட்டுதான் தொலைப்போமே. நமக்கு ஆயிரம் வேலை இருக்கு. இங்க ஒரு நாள் பாட்டை எவனோ பாடிட்டு போய் தொலையட்டும். நம்ம மத்த வேலையைப் பார்ப்போம்.”, என்று சமாதானம் சொன்னார் மஹாலிங்கம் பிள்ளை.

ஒரு வழியாய் மெட்ராஸ¤க்கு பணமும் அனுப்பி கச்சேரிக்கும் நாள் குறித்தாயிற்று. உத்சவத்துக்கு நோட்டீஸ் அடிக்கும் நேரத்தில், ‘அரியக்குடிக்கு நான் வாசிக்கறேன்’, ‘முசிறிக்கு நான் வாசிக்கறேன்’, என்று பக்கவாத்தியக்காரர்கள் போட்டி போட்ட படி இருந்தார்கள். மெட்றாஸிலிருந்து வரும் ‘டாக்கி புகழ்’ வித்வானுக்கு வாசிக்க ஒருவர் கூட முன் வரவில்லை.

வைத்தியநாத ஐயரிடம் கேட்டதற்கு, “ஆமாம்! நான்தான் என் சிஷ்யப் பயலுவளை வாசிக்க வேண்டாம்னும் சொன்னேன். மூர்த்தி சின்னவனா இருந்தா என்ன? அவனுக்கும்தான் நல்ல பேர் இருக்கு. இந்த மாதிரி அரைவேக்காட்டு பாகவதருங்களுக்கு எல்லாம் அவன் ஏன் வாசிக்கணும்.”

“ஐயர்வாள். ‘அரைவேக்காடு’-னு எல்லாம் வார்த்தையை இறைக்கலாமா?, அந்த டாக்கி விளம்பரத்துலேயே ஹட்சின்ஸ் ப்ளேட் புகழ் சங்கீத வித்வான்-னுதான் விளம்பரம் பண்ணி இருக்காளாம்”, என்றார் மஹாலிங்கம் பிள்ளை

“நான் என்ன தப்பா சொல்லிட்டேன்? நீரும்தான் சங்கீத வித்வான். நம்மை மாதிரி உங்க டாக்கி வித்வான் குருகுலவாசம் பண்ணியா சங்கீதம் கத்துண்டார்? என்னமோ காதுல விழுந்ததைக் கேட்டும், சினிமாவும் சொல்லித் தரவங்களைக் கேட்டும் பாடறவரு லட்சணம் எப்படி இருக்கும்னு நான் சொல்லி உமக்குத் தெரியணுமா என்ன? இந்த வித்துவான் கத்துவானுக்கு எல்லாம், உம்ம பையனையும் சேர்த்து, என் எந்த சிஷ்யனையும் வாசிக்க நான் அனுமதிக்கவே மாட்டேன்.”, என்று சூடாகவே கூறினார் தஞ்சாவூர் வைத்தியநாத ஐயர்.

எந்த பிரபல பக்கவாத்தியக்காரரும் முன் வராததால், வேறு வழியில்லாமல் தனது சிஷ்யர் நடராஜசுந்தரம் பிள்ளையை மிருதங்கம் வாசிக்க ஏற்பாடு செய்தார். பலரிடம் கேட்டுச் சலித்தபின் பத்மநாப சராலயா என்ற வயலின் வித்வானை ஒரு வழியாய் சம்மதிக்க வைத்தார் மஹாலிங்கம் பிள்ளை.

உத்சவமும் ஆரம்பித்து கச்சேரிகளும் இனிதே நடந்த வண்ணம் இருந்தன. முடிகொண்டான் வெங்கடராம ஐயரின் கச்சேரிக்கு அடுத்த தினம் ஹட்சின்ஸ் ப்ளேட் புகழ் ‘பி.ஏ. ஹானர்ஸ்’ வித்வானின் கச்சேரி.

‘கச்சேரியை வெக்கவே கூடாது’, ‘இந்தக் கச்சேரி பக்கம் தலை வெச்சுப் படுக்க மாட்டேன்’, ‘டாக்கியில கூட டூயட் பாடினாரே கிருஷ்ணமூர்த்தி, அவரையும் அழைச்சுண்டு வருவாரோ?’, என்றெல்லாம் தஞ்சாவூருக்கேவுரிய கிண்டலுடன் பேசிய அத்தனை வீரர்களும் வெங்கடேச பெருமாள் கோயில் மேற்படியில் ஆஜரானார்கள்.

“என்னதான் பாடிடப் போறான் இந்தப் புதுப் பயல், பூச்சி ஸ்ரீநிவாச ஐயங்கார் காலத்துல இருந்து பாட்டு கேட்கறவனாக்கும்”, என்று ஜம்பம் பேசினர் சிலர். “எப்படாப்பா தப்பு பண்ணுவான். நம்மை தலையை பலமா ஆட்டி, இவனை அடியோட கவுத்து, தஞ்சாவூர் பக்கமே இனி தலை வெச்சு படுக்க விடாம செய்யலாம்”, என்று காதைத் தீட்டிக் கொண்டனர் சிலர். “பாட்டு கிடக்குது கழுத. டாக்கியில நடிச்சவர் எப்படியிருக்கார்-னு பார்க்கலாம்” என்று கச்சேரியைப் பார்க்க வந்தனர் சிலர். “பட்டணத்து காலேஜ் கிராஜுவேட்டுக்கு எப்பேற்பட்ட ஷோக்கு இருக்கும்” என்றறியும் ஆவலால் உந்தப் பட்டு சபைக்கு வந்தோர் சிலர். எது எப்படியிருப்பினும் கச்சேரி ஆரம்பிப்பதற்கு அரை மணிக்கு முன்பே சபை நிறைந்துவிட்டது.

தண்ணித்தொட்டி வெங்கடராமையர் இருகிய முகத்துடன் வர, அவரைத் தொடர்ந்து அனைவரும் எதிர் நோக்கிக் காத்திருக்கும் ‘டாக்கி பாடகனும்’ வந்து சபையை வணங்கி மேடையேறினான். சிவந்த மேனியும், கூரிய மூக்கும், சற்றே துருத்தலாக அமைந்த காதுகளும், நீண்ட விரல்களும், மின்னலடிக்கும் வைரக் கடுக்கண்களும், அழகிய ஜவ்வாதுப் பொட்டும், அந்த இருபத்தைந்து வயது இளைஞனுக்கு அங்கு நடப்பவைகள் புரியாமல் இல்லை. தண்ணித்தொட்டி வெங்கடராமையர் தான் பட்ட கஷ்டங்களை மதியம் கூறியதிலிருந்து மனதை யாரோ பிழிவது போன்ற ஒரு உணர்ச்சி. ஒரு நிமிடம், தனது வீட்டிச் சூழலை நினைத்துப் பார்த்தான் அந்த இளைஞன். தன் தந்தை நாராயணசாமி ஐயர் தலையாட்டலுக்கு காத்திருந்த வித்வான்களை நினைத்தான். பார்த்தசாரதி சங்கீத சபாவின் காரியதாரிசியாய் தந்தை இருக, சபையே தனக்குச் சொந்தம் போல திரிந்த நாட்களை நினைத்துக் கொண்டது அவன் மனம். அரியக்குடி இராமானுஜ ஐயங்காரும், பல்லடம் சஞ்சீவ ராயரும், ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரியும், அவனைப் பாராட்டி ஊக்குவித்த கணங்களை எல்லாம் அவன் மனக்கண்ணில் தோன்றி மறைந்தன. வித்வான்களின் ஊக்கத்தையும், நண்பர்களின் பாராட்டையும், எதிர்பாராமல் வந்த வாய்ப்புகளில் பாடிய போது கிடைத்த கைதட்டல்களையும் மட்டுமே பார்த்திருந்த அவனுக்கு காவிரி பாயும் தஞ்சை தரணியின் வேற்று முகம் ஜீரணிக்கக் கடினமாகத்தான் இருந்தது.

‘பி.ஏ படித்தற்கும் நான் பாடப் போகும் பைரவிக்கும் என்ன சம்பந்தம்? நான் டாக்கியில் பாடியதில் என்ன குறை என்று இது நாள் வரை ஒருவரும் கூறக் காணோம். நாரதராய் நடித்து தியாகராஜர் கிருதி பாடியது என் குற்றமா என்ன? நாடக மேடையில் நுழையும் போது பாடும் பாடல் எடுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, ‘ஸ்ரீ வள்ளி’ நாடகத்தில் “அம்ம ராவம்மா” பாடி இவர்கள் கேட்டதில்லையா என்ன? ஒருவேளை அப்பா சொன்னதுதான் சரியோ? சங்கீத வித்வான் எல்லாம் நம் முன் கைகட்டி நிற்கும் நிலைக்கு உயரும் வகையில் வக்கீலுக்கே படிக்கவே போயிருக்கலாமோ? இந்த நிமிஷத்தில் கூட,உங்க ஊரும் வேண்டாம், சம்பாவனையும் வேண்டாம் என்று உதறிவிட்டுப் போய்விடலாம். அப்படிச் செய்தால், இத்தனை நாள் நான் நினைச்சது எல்லாம் தவறென்றல்லவா ஆகிவிடும். அப்பாவை எதிர்த்துப் போட்ட சண்டைகள், பிடித்த பிடிவாதங்கள் அனைத்தும் வீணல்லவா?’

‘இந்தக் கச்சேரியை ஒழுங்காப் பாடிட்டா இந்த வருஷம் திருவையாற்றில் பாடலாம் என்றுதானே கனவு கண்டோம். ஆனது ஆகட்டும்! நான் சபைக்காகப் பாடவில்லை. தியாகப் பிரும்மத்துக்கு அஞ்சலி செய்யும் வேட்கையில்தான் இங்கு பாட வந்தேன். ஒரு வேளை திருவையாற்றில் பாடும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காமலே போய்விடலாம். அதனால், இந்தக் கச்சேரியையே எனது அஞ்சலியாக பாவிச்சுப் பாடறேன். அதன்பின் நடப்பது தியாகப்ரும்மத்தின் செயல்’, என்று மனதை திடப்படுத்திக் கொண்டான். மனதிலே உண்டான தெளிவு அவன் உதட்டில் புன்னகையாய்ப் பரவ, “இவர் பாடிக் கேட்கவே வேண்டாம். இந்த முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலே கூட போதும்”, என்று கூட சிலர் நினைத்தனர்.

தன் பக்கவாத்தியக்காரர்களைப் பார்த்து ஒருமுறை புன்னகைத்த பின் நாலரைக் கட்டை ஸ்ருதியில் சேர்ந்து, மனதுள் தியாகபிரம்மத்தை தியானித்தபடி வர்ணத்தைத் தொடங்கினான். அந்த கனமான சாரீரத்தில், மத்யம கால வர்ணம் அழகுற பவனி வர ஆரம்பிக்க வெஙகடேச பெருமாள் கோயில் படிக்கட்டுகளில் லேசான சலசலப்பு ஆரம்பமானது.

‘குரல் பேசறது! ஆனா, வர்ணம் எல்லாம் குழந்தை கூடப் பாடும். டாக்கியில பாடறவாளுக்கு கல்பித சங்கீதம் நன்னாதான் வரும். நம்ம இசைல கல்பிதத்தைவிட கல்பனைக்குதானே முக்கியத்துவம்?’, என்றார் ஒரு படிக்கட்டு விமர்சகர்.

விறுவிறுவென மத்யம காலத்தில் 3 கீர்த்தனைகள் பாடிவிட, ‘பத்ததி எல்லாம் அரியக்குடி பாணியில இருக்கு. ஆனால், இன்னும் ராகம் பாடவேயில்லையே’, என்றார் கேட்கவே மாட்டேன் என்று சத்தியம் செய்த ரசிக சிகாமணி.

மெல்லிய கீற்றாய் ராகத்தை கோடி காண்பித்தவுடன், படிக்கட்டு சலசலப்பு சற்று அதிகமாகவே கேட்டது.

“என்ன ஓய்! மத்யமாவதி எடுக்கறான் போல இருக்கு”

“நாசமாப் போச்சு! மத்ய்மாவதிக்கு ஏது ஓய் தைவதம். அவரோகணத்துல தெளிவா தைவதம் கேட்கற்தே”

“தவறிடுத்தோ என்னமோ! அதான் அப்போவே அடிச்சுண்டேனே, இந்த கச்சேரி வேண்டாம்-னு. யாரேனும் கேட்டேளா”

“ஓய்! அவன் பாடறதைப் பார்த்தா, தெளிவா பாடறாப்லதான் இருக்கு. ஆரோஹணத்துல நிஷாதம் கேட்கறது, அவரோஹணத்துல தைவதம் கேட்கறது. தப்பாப் பாடினா, ஒவ்வொரு முறையும் இதே போல வராது. அவன் ஆரம்பத்துல காட்டின ராக ஸ்வரூபத்தோட சாயல்ல சுவாமிகள் பாட்டு கூட ஒண்ணு இருக்கு. என்னனுதான் சட்டுனு நியாபகம் வரலை.”

படிக்கட்டு கோஷ்டி என்ன ராகம் என்று மண்டையை உடைத்துக் கொண்டிருக்கும் வேளையில், ஏற்கனவே ஆரோஹணம் ஒரு ஸ்வரக் கோவை, அவரோஹணத்தில் வேறு ஸ்வரக் கோவை என்று வக்கிரமாக இருக்கும் ஆந்தோளிகா ராகத்தில், இன்னும் சில வக்கிரப் பிடிகளையும், சில ஸ்வரங்களை விடுத்துப் பிடிக்கும் வர்ஜப் பிடிகளையும், பிடித்து உலுக்கி தன் கற்பனைத் திறனை கோடிட்டுக் காட்ட ஆரம்பித்தான் அந்த இளைஞன். நினைத்த மாத்திரத்தில், மந்திர ஸ்தாயி, மத்ய ஸ்தாயி, தார ஸ்தாயிகளில் எந்த ஸ்வரத்திலிருந்து எந்த ஸ்வரத்துக்கு வேண்டுமானாலும் பாலம் அமைத்து, அதுவரைக் கேட்டிராத அபூர்வ பிடிகளை எல்லாம் தன் அதி துரித பிருகாக்கள் மூலம் படம்பிடித்துக் காட்டினான் அவ்விளைஞன்.

குத்தலும் கிண்டலுமாய் பேசிக் கொண்டிருந்த கூட்டம் சட்டென்று வாயடைத்துப் போனது. அவ்விளைஞன் அடுத்து என்ன செய்யப் போகிறான் என்று ஆவலுடன் நோக்க ஆரம்பித்தது.

‘ராகஸ¤தா ரச’ கீர்த்தனம் பாடி, ஸ்வரம் பாடிய பின். பிரதான ராகமாக ‘காம்போதி’ ராகத்தை எடுத்துக் கொண்டான் மணி. காம்போதியின் காந்தாரத்திலும், பஞ்சமத்திலும் நின்று, சுற்றி சுற்றி பல அழகிய ச்வரப் பின்னல்களை இழையோட விட்ட போது, வாய்விட்டே கூட்டம் ரசிக்க ஆரம்பித்தது. ‘பேஷ்களும்’, ‘பலேக்களும்’ சபையெங்கும் ஒலிக்க ஆரம்பித்தது. தன்னை மறந்த நிலையில் அவ்விளைஞன் காம்போதியின் ஒவ்வொரு ஸ்வரமாய் இழைத்து, தார ஸ்தாயியில் நீண்ட கார்வைகள் கொடுத்து, அங்கிருந்தபடிய கொஞ்சம் கொஞ்சமாய் பிருகாக்கள் கொடுத்து, பிறகு ராகத்தின் மூலை முடுக்கெல்லாம் மின்னல் வேகத்தில் சஞ்சாரம் செய்து, தார ஸ்தாயி மத்யமம், பஞ்சமம் என்று தொட்டு, அதுவரை யாரும் கேட்டிறாத தைவதம், நிஷாதத்தையெல்லாம் கூட எட்டிப்பிடித்தது அந்த கந்தர்வக் குரல். தஞ்சவூர் வைத்தியநாத ஐயர் ஒரு கட்டத்தில் பெருமாள் கோயில் படிக்கட்டை விட்டெழுந்து, மேடைக்கருகே விரைந்தார். அவரைத் தொடர்ந்து ‘அரண்டு போன’ கூட்டமும் மேடையருகே சென்றமர்ந்து, ராகக் கடலில் மூழ்கியது.

அந்த மகத்தான கச்சேரி முடிந்த போது தண்ணித்தொடி வெங்கடராம ஐயரின் முகம் பெருமிதத்தில் மிதந்தது. “பத்து ரூபாய் கொடுத்து இந்த பாட்டைக் கேட்கத் தயங்கினோமே”, என்றொரு கூட்டம் வெட்கியது. “இப்படிப் பாடுபவரின் கச்சேரியை வைக்கவே இத்தனை எதிர்ப்பென்றால், நாமெல்லாம் எங்கு பாடி, என்றைக்கு பேர் வாங்குவது”, என்று சிலர் கவலையில் ஆழ்ந்தனர். “இந்த மனுஷன் எங்கையாவது இன்னிக்கே மெட்ராஸ¤க்கு கிளம்பிடப் போறார். இவரை எப்படியும் இன்னும் ஒரு வாரம் இங்கயே மடக்கிப் போட்டு, இன்னும் நாலு தடவையானும் இவர் கச்சேரியைக் கேட்கணும்”, என்று திட்டமிட்டனர் சிலர்.

அன்றிலிருந்து தொடங்கி எத்தனையோ அலைகளின் மேல் பயணம் செய்து பல உச்சிகளைத் தொட்டு, பல அலைகளுக்குள் மூழ்கிப் போராடி எதிர் நீச்சலிட்டு, தான் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பின் பிறந்தோரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தச் செய்யும் ஆகர்ஷண சக்தியுடன் வாழ்ந்த அந்த இளைஞனே ‘ஜி.என்.பி’ என்று பரவலாக அழைக்கப்படும் கூடலூர் நாராயணசாமி பாலசுப்ரமணியம்.

Read Full Post »