Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஓகஸ்ட், 2020

இன்று நாகஸ்வர ஏகசக்கராதிபதி ராஜரத்தினம் பிள்ளையின் பிறந்த நாள்.

அவரை நினைத்தால் திருவிடைமருதூர் வைத்தா மாமாவை நினைக்காமல் இருக்க முடியாது. வைத்தாவை போன்ற கதைசொல்லியை நான் கண்டதில்லை.

சிம்ப்ஸன் வைத்தா – அந்தக் கால தஞ்சாவூர் சங்கீத வாசத்தின் துகளாக சென்னையில் இருந்து வந்தார். மதுரை மணி ஐயரின் உறவினர். மாலியின் அத்யந்த சினேகிதர். ராஜரத்தினம் பிள்ளை ‘கொளந்த’ என்று வாஞ்சையாய் விளிக்கும் பேறுடன் வளைய வந்தவர். அவர் பகிர்ந்து கொண்ட அனுபவங்களைப் பற்றி தினமணி சிவகுமார் நினைத்தால் புத்தகமே எழுதலாம்.

அவர் சொன்னவற்றை விவரமாக வேறு சில சந்தர்ப்பங்களில் எழுத வேண்டும். இன்று அவர் ராஜரத்தினம் பிள்ளையின் கடைசி கச்சேரி பற்றி விவரித்தது நினைவுக்கு வருகிறது.

அந்தக் கானடா? ஆம் கானடாவேதான்!

நான் என்ன ஏதோ நேரில் கேட்டது போல பூரித்துப் போகிறேன்? வைத்தாவின் விவரிப்பு அப்படி! நானே கால இயந்திரத்தில் பயணித்து கச்சேரி கேட்ட மாயத்தோற்றம்.

ராஜரத்தினம் பிள்ளையின் உடல்நிலை தளர்ந்திருந்த காலம். அடையாற்றில் தங்கியிருந்தார். சில தெருக்கள் தள்ளி ஜி.என்.பி குடியிருந்தார். தினமும் ரேடியோ ஸ்டேஷனுக்குப் போகும் போது பிள்ளையைச் சந்தித்துவிட்டுப் போவாராம். கச்சேரி செய்ய முடியாத நிலையில் வித்வான்கள், சங்கீத அபிமானிகள் என்று பலரின் உதவியில்தான் ராஜரத்தினம் பிள்ளையின் செலவுகள் ஈடுகட்டப்பட்டு வந்தன.

அவருடைய நிலையை உணர்ந்து அன்றைய வானொலி நிலைய நடத்துனர் ஒரு திட்டத்துடன் வந்தார். அவருடைய கச்சேரியை ஏற்பாடு செய்து அதை சாக்காக வைத்து வானொலி நிலையத்திலிருந்து ஒரு கணிசமான தொகையை அவருக்கு அளிக்க நினைத்தார்.

ராஜரத்தினம் பிள்ளைக்கோ வாசிக்க முடியாத நிலை. வானொலி நிலையத்தினர் விடவில்லை. “நீங்கள் சும்மா வந்து அமர்ந்திருந்தால் போதும். காருகுறிச்சி அருணாசலம் வாசிக்கட்டும். இந்த ஏற்பாடில்லாமல் உங்களுக்கு உதவி செய்ய முடியாது”, என்று வற்புறுத்தவும் – கச்சேரிக்கு ஒப்புக்கொண்டார்.

எழும்பூரில் ஒரு மண்டபத்தில் கச்சேரி. ராஜரத்தினம் பிள்ளை வாசிக்கிறார் என்றதும் அன்றைய சூழலில் முதன்மை வித்வான்கள் அத்தனை பேரும் முதல் வரிசையில். ரசிகர் கூட்டமோ அலை மோதுகிறது.

தளர்ந்த ராஜரத்தினம் பிள்ளை மேடையெறி கைகூப்பி கண்கலங்குகிறார். “நீங்களெல்லாம் வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு திருப்தி ஏற்படும் வகையில் வாசிக்கும் நிலையில் நான் இன்று இல்லை.’, என்றவுடம் அரங்கம் முழுவதும் விசும்பல் ஒலி நிறைகிறது.

“இன்று தம்பி வாசிப்பான்”, நீங்கள் கேட்டு ஆசிர்வதிக்க வேண்டும் என்று நாகஸ்வரத்தை காருகுறிச்சியாரிடம் கொடுக்கிறார்.

அருணாசலம் அதை வாங்கி சீவாளியை சரிபார்த்துவிட்டு ஒரு சங்கதி வாசிக்கிறார். ஒரே ஒரு சங்கதிதான். கானடாவில் ஒரு சங்கதி.

எங்கிருந்தோ வந்த வேகத்தில் ராஜரத்தினம் பிள்ளை அருணாசலத்தின் கையிலிருந்து நாயனத்தைப் பிடுங்குகிறார்.

“என்னடா சங்கதி இது? ம்?” , என்றபடி வாசிக்கத் தொடங்குகிறார். அடுத்த ஒரு மணி நேரத்துக்கு சூராவளியாய் கானடா அங்கு அலையடித்து எழும்புகிறது.

உடலில் ஒட்டியிருந்த உயிரின் ஒவ்வொரு சொட்டையும் பிதுக்கிச் செய்த கானடா!

அப்போது நான் பிறக்காவிட்டால்தான் என்ன? என்னுள் அந்த கானடாவின் துகள் என் வாழ்நாள் வரை வரும்படி வைத்தா விதைத்துவிட்டாரே. இந்த ஜென்மத்துக்கு அவர் விவரிப்பு போதும்!

Read Full Post »

மனிதருள் பார்த்ததும் காதல் என்பதை நான் படங்களில் பார்த்ததுண்டு. ஆனால் பாடல்களில் அதை அனுபவித்ததுண்டு. காதலுக்கு கண்ணில்லை என்பது போலத்தான் பாடல்களுக்கும். சில பாடல்கள் ஏன் நம்மை உலுக்குகின்றன என்று குறிப்பிட்டுக் கூற முடியாது.

அப்படியொரு பாடல் பாபநாசம் சிவனின் ‘கடைக்கண் பார்வை’. கமாஸ் ராகத்தில் எத்தனையோ பாடல்கள் உள்ளன. தனிச்சிறப்பாய் இந்தப் பாடலில் ஏதேனும் உண்டா என்று எனக்குக் குறிப்பிட்டுக் கூறத் தெரியவில்லை.

2007-ல் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸில் வித்வான். சஞ்சய் சுப்ரமண்யன் பாடி இதை முதன் முதலில் கேட்டேன். எனக்குப் பாடல்களை கேட்பதில்தான் ஆர்வம். பாடுவதில் அல்ல. பாடும் திறனும் இல்லை என்பது வேறு விஷயம். இருந்தும் சில பாடல்களை எனக்கே எனக்காய் ஏகாந்தமாய் பாடிக் கொள்ளத் தோன்றும். இந்தப் பாடல் ஏனோ அப்படித் தோன்றியது.

அவர் கச்சேரியில் அன்று பாடப்பாட வரிகளை டயரியின் கடைசி பக்கத்தில் கிறுக்கல்களுக்கிடையில் எழுதிக் கொண்டேன். அதன் மெட்டு மறக்காது என்று தோன்றியது.

அன்று எழுதிக் கொண்டதற்குப் பின் அந்தப் பாடலை நான் மீண்டும் கேட்கவுமில்லை. மீண்டுமொரு முறை எழுதியதைப் பார்க்கவுமில்லை.

சில நாட்களுக்கு முன்னால் அந்தப் பாடலின் காணொளியை தன் தளத்தில் சஞ்சய் வலையேற்றியுள்ளார்.

கேட்டதும் அன்று கேட்ட கச்சேரியும் எழுதி வைத்த டைரியும் நினைவுக்கு வந்தன.

என்றாவது பாட வேண்டும்.

Read Full Post »