இன்று ரகு சாரின் பிறந்த நாள். அவரைப் பற்றி எழுத வேண்டுமானால் பதிவெல்லாம் எழுத முடியாது. நாவல்தான் எழுத வேண்டும். நாவல் எழுத எனக்கு வணங்குமா தெரியவில்லை. ஆனால் 2013-ல் நடந்த ஒரு சம்பவத்தை மட்டும் ஒரு அத்தியாயமாக அவர் பிறந்த நாளில் எழுதிக் கொள்கிறேன்.

***************************************
அதுவரை எங்களுக்குக் கச்சேரி கேட்டுதான் பழக்கம். கச்சேரியை ஏற்பாடு செய்வதில் ஆனா ஆவன்னா கூடத் தெரியாது.
நான் கேட்க விரும்பிய சில கலைஞர்கள் அந்த டிசம்பரில் எங்கும் பாடவில்லை என்கிற அதிர்ச்சியில் அவசரமாய் ஐந்து நாட்களுக்கு நாளுக்கு இரண்டு கச்சேரிகள் (இளைஞர் கச்சேரி ஒன்று/ சீனியர் கச்சேரி ஒன்று) வீதம் ஒரு கச்சேரித் தொடரை ஏற்பாடு செய்தோம்.
டிசம்பர் கச்சேரிகளை ஜூன் மாசமே ஏற்பாடு செய்யும் சென்னை சபாகளுக்கு மத்தியில் எங்களுக்கு இந்த எண்ணம் தோன்றியதே நவம்பர் கடைசியில்தான். சென்னையில் மொட்டைமாடிகள் கூட காலியில்லாத நிலையில், ஐந்து நாட்களுக்கு மூன்று இடங்களில் அரங்குகளைப் பிடித்து கச்சேரிகள் ஏற்பாடு செய்தோம். அந்த மூன்றிலொரு இடம் பெரிய குடியிருப்பு ஒன்றின் கம்யூனிடி ஹால். அங்கு வெளியிலிருந்து ஒலிபரப்பு சாதனங்கள் எடுத்து வர அனுமதியில்லை. அவர்களிடம் இருந்த அரதப்பழசு ஆம்ப்ளிஃபையரும் மைக்குகளும்தான் உபயோகித்து ஆகவேண்டும் என்று நிபந்தனை.
எனக்கோ மைக் என்றால் கேட்டிங்கா ஹஸ்ஸியா என்று கேட்கும் அளவிற்குத்தான் ஒலி உபகரணங்களைப் பற்றிய அறிவு. எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று குழம்பியபடி மைலாப்பூரின் ஒரு உணவகத்தில் நானும் என் தம்பியும் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு பரிச்சியமான குரல் சத்தமாகச் சிரிப்பது காதில் விழுந்தது. அங்கு ரகு ஸார் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்.
நாங்கள் அவரிடம் சென்றதும் உற்சாகமாய் இன்னும் இரண்டு நாற்காலிகளை இழுத்துப் போட்டு வரவேற்றார். அவரிடம் அதுவரை பேசிக் கொண்டிருந்தவர் விடைபெற்றுக் கொள்ளவும், நான் ஜி.என்.பி-யின் கல்யாணியில் நிஷாத சஞ்சாரத்துக்கு பேச்சைத் திருப்பினேன். அதை ரகு சார் பாடி இன்னொருமுறை கேட்க வேண்டும் போலிருந்தது. அங்கு தொடங்கி அவர் இசை மனத்தின் அலையடிப்பில் நாங்கள் சவாரி செய்தோம். பேச்சுவாக்கில் நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிற கச்சேரிகள் பற்றி சொன்னேன். அடுத்த நாள் வந்துவிடுவதாய் சொன்னார். நான் அவரை வாருங்கள் என்றோ, வந்தால் உதவியாக இருக்குமென்றோ சொல்லவில்லை. அவராகவே வருகிறேன் என்று சொன்னாலும் அதை நான் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. எத்தனையோ பேர் அவரை அழைக்கக் கூடும், அதன் மூலம் பாடல்புனைவிலோ அல்லது ஒலிப்பதிவிலோ அவர் மூழ்கிவிடக் கூடும் என்று அறிந்தவன் என்பதால் நான் பெரியதாக அலட்டிக் கொள்ளவில்லை.
அடுத்த நாள் மாலை நான்கு மணிக்கு கச்சேரி தொடக்கம். மூன்று மணிக்கே கலைஞர்கள் வந்துவிட அவர்களை வரவேற்க நான் வாசலுக்குச் சென்றேன். அப்போது ரகு சார் தன்னுடைய டிவிஎஸ் 50-ஐ நிறுத்திக் கொண்டிருந்தார். என் தம்பி கலைஞர்களைப் பார்த்துக் கொள்ள நான் ரகு சாரை நோக்கி ஓடினேன். எதிரொலிக்கவென்றே பார்த்துக் கட்டின அரங்கில் அந்த அரதப் பழசான மைக்குகளை நான் ரகு சாரிடம் காட்டினேன். “பாட்டு நன்னா இருந்தா மைக் என்ன பண்ணும்?” என்று சிரித்தபடி ஸ்டாண்டை எடுத்துக் கொண்டு மேடைக்கருகில் சென்றார்.
அன்று பாடவிருந்த கலைஞர்களுக்கு ரகு சாரிடம் பரிச்சியமில்லை. சங்கீத மேதை என்றால் பளபளக்கும் மேலாடையும், அகல ஜரிகையும் என்று நிலைபெற்றுவிட்ட நிலையில் – வெய்யிலில் வந்ததில் வேர்த்த முகமும், அணிந்திருந்த பழைய அரைக்கை சட்டையும் ரகு சாரின் மேதமையை பார்த்த மாத்திரத்தில் கண்டுகொள்ள உதவியிருக்காது.
அவர் மைக் ஸ்டாண்டை தூக்கிக் கொண்டு வரவும், இவர் யாரோ அந்த சமுதாயக் கூடத்தில் வேலை செய்பவர் என்று அந்தப் பாடகி நினைத்திருக்கக் கூடும். அந்தப் பெண் இவரைப் பொருட்படுத்தாமல் பக்கவாத்தியக் கலைஞர்களோடு பேசிக் கொண்டிருந்தார்.
ரகு சார் மைக்கை அந்தப் பெண்ணின் முன்னால் வைத்துவிட்டு அவளிடம் எதோ சொல்ல நினைத்தார். அந்தப் பெண் இவர் பக்கம் திரும்புவதாகவே இல்லை. நானும் குறுக்கிட சங்கோஜப்பட்டு நின்றுகொண்டிருந்தேன்.
கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு, “அம்மா! மைக் சரியா இருக்கானு பாரும்மா”, என்றார் ரகு சார்.
அந்தப் பெண் மைக்கின் உயரத்தை கொஞ்சம் தாழ்த்திவிட்டு, சரியாகயிருக்கிறது என்பது போல தலையை ஆட்டினாள்.
“இல்லம்மா, ஏதாவது பாடு.”, என்றார் ரகு சார்.
அந்தப் பெண் வாயைத் திறக்காமல் மெல்லிய குரலில், ‘ம்ம்ம்ம்’ என்று ஸ்ருதி காண்பித்தது.
ரகு சார் தோள்களை கொஞ்சம் சிலுப்பியபடி இரண்டடி பின்னால் நகர்ந்தார். எல்லாம் சரியாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு அவர் நகர்ந்துவிடுவார் என்று நினைத்தேன்.
ஆனால் அவர் அந்தப் பெண்ணைப் பார்த்து, “இன்னிக்கு என்னம்மா பாடப் போற?”, என்று சத்தமாகக் கேட்டார்.
அந்தப்பெண்ணிற்கு தூக்கி வாரிப்போட்டது. ‘ம்?’, என்று கண்களை அகல விரித்தாள்.
’கச்சேரின்னா மெயின் சப்-மெயின்-னு எதாவது தயார் பண்ணிண்டு வந்திருப்பியே! அதைக் கேட்கறேன்.’’
கச்சேரிக்குக் கூப்பிட்டவர்கள் கூட என்ன பாடப் போகிறாய் என்று கேட்கவில்லை. மைக்கைத் தூக்கி வைப்பவர் இப்படி புகுந்து பேசுகிறாரே! அவருக்குப் பின்னால் நம்மைக் கச்சேரிக்குக் கூப்பிட்டவர் கைகட்டி நிற்கிறாரே.’ – என்று அந்தப்பெண் குழம்பித் தவிப்பது நன்றாய் புலப்பட்டது.
ரகு சார் பதிலுக்குப் பொறுமையாகக் காத்திருந்தார்.
அந்தப் பெண் வேறு வழியில்லாமல், ‘லதாங்கியும், தோடியும்’, என்று முணுமுணுத்தது.
‘லதாங்கினா ‘அபராதமுல’ பாடப் போறியா?”, என்றார் ரகு சார்.
அந்தப் பெண் ஆமோதித்துத் தலையை ஆட்டினாள்.ரகு சார் ஒரே பாய்ச்சலில் மேடைக்கருகில் சென்றார். அந்தப் பெண் பயந்து ஓரடி பின்னால் நகரப் போகும் போது ரகு சார் மைக்கைக் ஸ்டாண்டிலிருந்து கழட்டி கையில் எடுத்துக் கொண்டார்.
“கிருபஜேசின மனவியாளகிஞ்சி”, என்று ஒருகுரல் ஓங்கி ஒலித்தது. அதிகமில்லை. இருபது நொடிகளுக்குள்தான் இருக்கும். அடுக்கடுக்காய் நான்கைந்து சங்கதிகள் அந்த அனுபல்லவியில் வந்து விழுந்தன. கடைசி சங்கதியில் நல்ல காத்துக்கு பவளமல்லியிலிருந்து கொத்துக் கொத்தாய் விழும் மலர்கள்போல அத்தனை மணமாய் ஸ்வரவர்ஷம். சத்தியமாய் சொல்கிறேன் – காலம் உறைந்து போனது.
”மைக் சரியா இருக்கானு பார்க்கணும்னா இப்படி வாயைத் திறந்துபாடினாத்தானேம்மா தெரியும்”, என்று ரகு சார் சொன்ன போதுகூட நான் அந்த லதாங்கியின் தார ஸ்தாயியில்தான் சஞ்சரித்துக் கொண்டிருந்தேன்.
ரகு சார் என்னைப் பார்த்து, “சிங்கர் மைக் ஓகே!”, என்று விட்டு வயலின் வாசித்த பெண்ணை நோக்கி “நீ கொஞ்சம் வாசிம்மா”, என்றார். அந்தப்பெண்ணும் உறைந்து போய்தான் அமர்ந்திருந்தாள்.
எனக்குப் பின்னாலிருந்து என் தம்பி கீழே விழாத குறையாய் சிரிக்க ஆரம்பித்தான். அப்போதுதான் எனக்கு அங்கு என்ன நடந்தது என்று கொஞ்சம் புரிபட ஆரம்பித்தது. இவன் சிரித்து வந்திருக்கும் கலைஞர்களின் வம்பை வாங்கிக் கொடுத்துவிடுவானோ என்று பயந்து அவனைப் பின்னுக்குத் தள்ளினேன்.
அடுத்த சில நிமிடங்களில் வயலின் மைக்கையும் மிருதங்கத்தின் மைக்கையும் சரிபார்த்துவிட்டு மேடையிலிருந்து ஐந்தாறு வரிசைகள் தள்ளிச் சென்று ஒரு இருக்கையில் அமர்ந்துகொண்டார் ரகு சார். அவரிடம் யாரோ வந்து பேச ஆரம்பித்தார்கள்.
நான் தண்ணீர் பாட்டில்களை எடுத்துக் கொண்டு மேடைக்குச் சென்றேன்.அன்று பாடவிருந்தப் பெண் மெதுவாக என்னை அழைத்து, “இப்பப் பாடினாரே, அந்த மாமா யாரு?”, என்று கேட்டாள்.
“அவர்தாம்மா எச்.எம்.வி.ரகு. ஜி.என் சார் சிஷ்யர்.”, என்று சொல்லிவிட்டு இறங்கும் போது எனக்கென்னமோ சங்கீத கலாநிதி கொடுத்து அதை நான் வாங்கிக் கொண்டு இறங்குவது போல இருந்தது.
என் பின்னாலேயே அந்தப் பெண்ணும் மேடையைவிட்டு இறங்கினாள்.
நான் வாசல் பக்கம் செல்ல அந்தப்பெண் ரகு சாரிடம் சென்று அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்.
********************************************************
உங்களுக்கு இன்னும் ஒரு நூறாண்டு நோயில்லா வாழ்வும் அந்த வாழ்வில் நீங்கள் பேசி நான் கேட்க எனக்குப் பேறும் ஆண்டவன் அருளட்டும் ரகு சார்!