Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஏப்ரல், 2010

ஒரு விளையாட்டை நுட்பமாக ரசிப்பது என்பது ஒரு வகை இசையை ஆழ்ந்து அனுபவிப்பதற்கு நிகரான அனுபவம்.  போரிஸ் பெக்கரும், ஸ்டிஃபான் எட்பர்கும் ஆடும் போது, ஆலத்தூர் சகோதரர்கள் மாறி மாறி ஸ்வரம் பாட்வது போல இருக்கும். ஃபெடரரின் backhand winner-கள் மதுரை மணியின் தார ஸ்தாயி கார்வைகள் போலத் துல்லியமானவை. சமீபத்தில், ஆர்ஸெனலுக்கு எதிரான ஆட்டத்தில், மெஸ்ஸி கோல்கீப்பரின் தலைக்கு மேல், அநாயசமாக பாலை உந்திவிட்ட போது, யாருமே எதிர்பார்க்காத சமயத்தில் வந்து விழுந்த மோராவைப் போலத் தோன்றியது.  சரி சொல்லவந்து விஷயத்தை விட்டு எங்கெங்கோ செல்கிறேன்..

புது வீட்டுக்கும் அவ்வப்போது வாருங்கள் நண்பர்களே.

Read Full Post »

சிந்துஜாவை இங்கு ஏற்கனெவே அறிமுகம் செய்துள்ளேன்.

சில நாட்களுக்கு முன், “ஜி.என்.பி-யின் நூற்றாண்டில், அவரது பாடல்கள் சிலவற்றைப் பாடி என் வலைப்பூவில் வருடம் முழுவதும் போடலாம் என்று நினைத்துள்ளேன். அவற்றைப் பற்றி எழுத முடியுமா?”, என்று சிந்துஜா கேட்டார். கரும்பு தின்னக் கூலியா வேண்டும்? உடனே ஒப்புக் கொண்டேன்.

முதல் பாடலாய், சிவசக்தி ராகத்தில் அமைந்துள்ள ‘ஸ்ரீ சக்ர ராஜ’ பாடலைப் பாடியுள்ளார். பாடலுக்குள் செல்வதற்கு முன்னால், ஜி.என்.பி என்ற வாக்கேயக்காரரைப் பற்றி ஒரு சிறு அறிமுகம்.

பிரபல வாக்கேயக்காரர்களாய் விளங்கியவர்கள் அதம் கச்சேரி செய்து புகழ் பெற்றவராக இருப்பதில்லை. அப்படி இருந்த ‘மஹா வைத்தியநாத சிவன்’, ‘பட்டிணம் சுப்ரமணிய ஐயர்’, ‘பூச்சி ஸ்ரீநிவாஸ ஐயங்கார்’, ‘ஹரிகேஸநல்லூர் முத்தையா பாகவதர்’ போன்றோர் அடங்கிய elite list-ல் ஜி.என்.பி-க்கும் தனி இடமுண்டு. அவரது கச்சேரிகளைப் போலவே, அவரது பாடல்களும், அறிவுத் திறனும், அழகுணர்ச்சியும் சேர்ந்த அழகிய கலவைகள். சாம்பமூர்த்தி, “ஜி.என்.பி-யின் ப்ரந்த கச்சேரி அனுபவங்களும், அந்த அனுபவங்கள் மூலம் ரசிகர்களுக்கு பிடித்தவை எவை, பிடிக்காதவை எவை என்று உணர்ந்திருப்பதும், அவருடைய கிருதிகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது”, என்கிறார். பல சமயங்களில், அறிவுத் திறனை வெளிக்காட்ட நினைக்கும் போது அது அழகுணர்ச்சிக்கு எதிராக அமைந்துவிடுகிறது. ஜி.என்.பி, தனது கிருதிகளில், ஸ்வராக்ஷரப் பிரயோகங்கள், நெருடலான சிட்ட ஸ்வரங்கள், அது வரை கையாளப்படாத எடுப்புகள், அவர் உருவாக்கிய ராகங்கள், என்று பல அறிவுப் பூர்வமான முயற்சிகளைக் கையாண்ட போதும் அவரது பாடல்களைக் கேட்கும் போது ‘natural’-ஆகவே ஒலிக்கின்றன.

‘இசைக் கனவுகள்’ என்று தன் பாடல்களைக் குறிப்பிடும் ஜி.என்.பி, “எனக்கு சில சமயங்களில் ஸ்வரக் கோவைகள் கண் முன் உருவங்களாய் தெரிவதுண்டு. அவற்றை எழுதி வைத்துக் கொள்வேன். காலப் போக்கில் அவற்றை மறந்தும் விடுவேன். அப்படி மறக்காமல், நிரந்தரமாய் உரு கொடுப்பதற்காகவே அவற்றை கீர்த்தனைகளாக புனைந்தேன். அதன் பின், அவற்ரை சிஷ்யர்களிடம் விட்டுவிடுவேன். நான் அவற்றை திரும்பிப் பார்ப்பதில்லை.”, என்கிறார். ( “அவர் தன் கிருதிகளைப் பாடாமல் விட்டது, சங்கீத உலகத்துக்கு அவர் இழைத்த பெரும் துரோகம்”, என்பார் எஸ்.ராஜம்) அவர் திரும்பிப் பார்க்காத போதும், அவர் இருந்த போது அவருடைய கிருதிகள் சில பிரபலமாய் விளங்கின. அதற்குக் காரணம் அவருடைய சிஷ்யர்கள் டி.ஆர்.பாலசுப்ரமணியமும், எம்.எல்.வசந்தகுமாரியுமே.

ஜி.என்.பி, 250 பாடல்களுக்கு மேல் புனைந்தார் என்று பல குறிப்புகள் கூறுகின்றன. 1948-ல் சுதேசமித்ரன் ஆசிரியர் நீலத்துக்கு ஜி.என்.பி எழுதிய கடிதத்தில், அப்போதே 50 கிருதிகளுக்கு மேல் இருப்பதை அவரே குறிப்பிட்டுள்ளார். எம்.எல்.வி ஒரு நேர்காணலில், அவர் 1950-களில்தான் நிறைய பாடல்கள் புனைந்தார் என்கிறார். ’கான பாஸ்கர மணிமாலையில்’ (ஜி.என்.பி பாடல்களின் முதல் தொகுதி) “அவர் இஷ்ட தெய்வம் ராஜராஜேஸ்வரியின் மேல் மட்டுமே நூற்றுக் கணக்கான பாடல்கள் புனைந்துள்ளார்”, என்கிறார் மைசூர் வாசுதேவாச்சாரியார். ஜி.என்.பி பாடல்கள் இது வ்ரை மூன்று தொகுதிகளாக வெளியாயுள்ளன. அவற்றுள், 7 வர்ணங்கள், 73 கிருதிகள், 1 தில்லானா ஆகியவை ஸ்வரப் படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. அவர் புனைந்தவற்றில், 50 விழுக்காடுக்கு மேல் தொலைந்து விட்ட போது, கிடைக்கின்றன கிருதிகளே அவரின் கற்பனைத் திறனையும், நுண்ணறிவையும் பறை சாற்றுகின்றன.

“Sahithya in Krithis” என்ற கட்டுரையில் “Dikshitar’s kritis are detached and impersonal description and stothras of the hindu panthoen while those of Tyagaraja are records of his personal and emotional experience of God”, என்கிறார் ஜி.என்.பி. ஜி.என்.பி-யின் கிருதிகள் இரு வகையிலும் உள்ளன. அவர் ‘தன்மையில்’ (first person) எழுதிய கீர்த்தனைகள் அனைத்தும் அவரது சொந்த உணர்ச்சிகளையும், அனுபவங்களையும் குறிக்கின்றன என்று சொல்வதற்கில்லை. ஜி.என்.பி-யின் கீர்த்தனைகளின் சாஹித்ய பாவத்தை விட, இசை நயம் பலராலும் போற்றப்பட்டுள்ளது. காவதி, ஆந்தோளிகா, கதனகுதூகலம் போன்ற அரிய ராகங்களிலும், ஹிந்தோளம், வராளி, ரஞ்சனி, யதுகுலகாம்போதி போன்று பிரபல வர்ணங்கள் ஏதும் அமையாத ராகங்களிலும் அமைந்துள்ளன.

அட தாளத்தில் அமைந்திருக்கும் யதுகுல காம்போதி வர்ணத்தைத் தவிர, அனைத்து வர்ணங்களும் ஆதி தாளத்தில் அமைந்துள்ளன. ‘அம்போருஹ’ என்ற ரஞ்சனி வர்ணம் இன்று பிரபலாமடைந்திருக்கிறது.

கதனகுதூகலம் ராகத்தை முதலில் கையாண்டவர் பட்டணம் சுப்ரமணிய ஐயர். அவரது ‘ரகுவம்ஸ ஸுதா’ என்ற கிருதி, மேற்கத்திய இசையை நினைவூட்டும் சங்கதிகள் நிறைந்து, வாத்திய இசைக்கென்றே அமைக்கப்பட்டது போலிருக்கிறது. ஜி.என்.பி-யின் கதனகுதூகல வர்ணம், பல அழகிய கோவைகளுடன், பாடுவதற்கேற்ப அமைந்துள்ளது. விஜயலக்ஷ்மி சுப்ரமணியம் தனது கட்டுரையில், “The popular composition in this raga has virtually been hijacked by the instrumentalists, if I may be permitted to use such a word. GNB’s handling, is beautiful, melodic and quite different from Raghuvamsa Sudha”, என்கிறார்.

மாளவி. செஞ்சு காம்போதி, நாராயணி, கதனகுதூகலம், ஸரஸ்வதி, ரஞ்சனி, தேவ மனோகரி, நளின காந்தி, பூர்ண சந்திரிகா போன்ற கிருதிகள் குறைவாக அமைந்த ராகங்களில் ஜி.என்.பி அமைத்துள்ள கிருதிகளை ‘a welcome addition’, என்று கூறலாம். ரஞ்சனியில் அமைந்த ‘ரஞ்சனி நிரஞ்சனி’ கிருதியும் ஸரஸ்வதி ராகத்தில் அமைந்த ‘ஸரஸ்வதி நமோஸ்துதே’ கிருதியும் நவராத்திரியின் போது அதிகம் கேட்கக் கிடைக்கும் பாடல்களாகக் திகழ்கின்றன. இவை தவிர, ‘வீணாதரி’, ‘ஸாரங்க தரங்கிணி’ போன்று புத்தகங்களில் மட்டுமே இருந்த ராகங்களில் கிருதி அமைத்த பெருமையும் ஜி.என்.பி-க்கு உண்டு.

அரிய ராகங்களிலும், புதிய பிடிகளிலும் கிருதிகள் அமைத்ததைத் தவிர, ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரைப் போல் புதிய ராகங்களை உருவாக்கி, அவற்றிலும் கிருதிகள் அமைத்துள்ளார். ‘அமிர்த பெஹாகும்’, ‘சிவசக்தியும்’ இவரது கண்டுபிடிப்புகளே.

ஜி.என்.பி-யின் சாஹித்யங்களின் விசேஷமான அம்சம் என்று அவரது ஸ்வராக்ஷர பிரயோகங்களைக் கூறலாம். ‘நீ பாதமே கதி’, ‘ஸதா பாலய’, ‘பாத பஜன’ போன்ற கிருதிகளை அழகான ஸ்வராக்ஷரங்களில் தொடங்கியுள்ளார். பல கிருதிகளில் ராகத்தின் பெயர் சாஹித்யத்தில் வரும் வகையிலும் அமைத்துள்ளார். சில கீர்த்தனைகள் சிட்டை ஸ்வரங்களுடன் அமைந்துள்ளன. இச் சிட்டை ஸ்வரங்களில், தாட்டு வரிசை பிரயோகங்கள் கோபுச்ச யதி போன்ற கோவைகளை அழகுற பயன்படுத்தியுள்ளார்.

ஜி.என்.பி, மற்ற வாக்கேயக்காரர்கள் போல முத்திரை வைக்கவில்லை என்பது பரவலான கருத்து. ஆனால், ஒரு நிகழ்ச்சியில் விதுஷி எஸ்.ஏ.கே.துர்கா, “அவர் பாடல்களே அவருடைய முத்திரைதான். அந்தப் பாடல்களைக் கேட்டாலே அவை ஜி.என்.பி பாடல்கள்தான் என்று சந்தேகமின்றி தெரிந்து கொள்ளும் வகையில் இருக்கின்றன. அதை மீறி தனியாக ஒரு முத்திரை எதற்கு?”, என்று அழகாக விளக்கினார்.

ஜி.என்.பி கிருதிகளைப் பற்றிய இந்த அறிமுகத்துடன், இந்த வரிசையில் மலர்ந்திருக்கும் முதல் பாடலைப் பார்ப்போம்.

ஜி.என்.பி உருவாக்கிய ராகங்களுள் ஒன்றான சிவசக்தி, கரஹரப்ரியாவின் ஜன்யம். அரோஹணத்தில் ‘ஸ,க,ம,த’ என்ற நான்கு ஸ்வரங்களும், அவரோஹணத்தில் ‘ஸ,நி,த,ம,க’ என்ற ஐந்து ஸ்வரங்களுடன் அமைந்துள்ள ராகம்.

ஒரு ராகத்தில், அரோஹணத்திலும் அவரோஹணத்திலும் குறைந்த பட்சம் ஐந்து ஸ்வரங்களாவது இருக்க வேண்டும் என்றொரு லட்சணம் உண்டு. பாலமுரளிகிருஷ்ணா இந்த லட்சணத்தை உடைத்து, ‘மஹத்தி’ போன்ற ராகங்களை உருவாக்கிய போது பெரும் எதிர்ப்பை சந்திக்க நேரிட்டது. ஆனால், இதையே ஜி.என்.பி செய்த போது பெரிய எதிர்ப்பொன்றும் கிளம்பவில்லை. அதற்கு முக்கிய காரணம், அவரது கிருதியைக் கேட்கும் போது, unconventional-ஆன ஒன்றை கேட்கிறோம் என்ற உணர்வு சற்றும் ஏற்படாமல் இருப்பதே.

இந்த  ராகத்தை ஜி.என்.பி எப்படி அமைத்தார் என்பதை வீணை எஸ்.பாலசந்தர் ஒருமுறை விளக்கினார். “சிவசக்தி ராகம் ‘ஸ்ரீ சக்கரத்தை’ ஒத்து அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ சக்கரத்தின் ஒன்பது முகங்களில் நான்கு சிவனையும், ஐந்து சக்தியையும் குறிப்பது போல, சிவசக்தி ராகத்தின் அரோஹணத்தில் நான்கு ஸ்வரங்கள் சிவனையும், அவரோஹணத்தின் ஐந்து ஸ்வரங்கள் சக்தியையும் குறிக்கின்றன”. கிருதியில் வரும் ‘ஸ்ரீ சக்ர ராஜ நிலையே’, ‘சிவசக்தி ஐக்ய ரூபிணி’ போன்ற வரிகள் இந்த கூற்றை நிறுவும் வகையில் அமைந்துள்ளன.

மத்யம கால கிருதி என்ற போதும், இந்தப் பாடலை விஸ்தாரமாய்ப் பாடும் பாடல்களுக்கு இடையில் வரும் துரித காலத்திலும் கேட்டிருக்கிறேன். அனு பல்லவியின் அமைப்பு, துரித காலத்தில் பல சங்கதிகள் பாடத் தோதாய் அமைந்துள்ளது. இந்த ராகம் விஸ்தாரமாய் பாடுவதற்கும் நிறைய வாய்ப்பளிப்பதாய் அமைந்துள்ளது. நெஞ்சை உருக்கும் ‘hindholamish phrases’ நிறைந்த பூர்வாங்கமும், உற்சாகமான ‘aboghiyish phrases’ நிறைந்த உத்தராங்கமும், கலந்த ஒரு அரிய கலவையாக இந்த ராகம் (வரமு என்ற இதற்கு மிக நெருங்கிய ராகமும்) அமைந்துள்ளது.

‘த்விதியாக்ஷரப் ப்ராஸம்’ என்பது கிருதியின் சங்கீதத் தன்மையை மேம்படுத்தும் விஷயம். அதாவது வரிகளில் தொடங்கும் வார்த்தைகளில் இரண்டாவது எழுத்து rhyming-ஆய் அமைவதை இப்படிக் குறிப்பதுண்டு. இந்தப் பாடலின் அனு பல்லவியிலும் சரணத்திலும், எல்லா வரிகளிலுமே ‘த்விதியாக்ஷரப் ப்ராஸம்’ அமைந்திருப்பது சிறப்பாகும். வித்வான் டி.ஆர்.சுப்ரமணியம், “It is uncommon to find a composer using ‘dvitIyAkshara prAsam’ on all lines of a compositions. In GNB’s case it is a regular feature”, என்கிறார்.

எம்.எல்.வி வெளியிட்டு பிரபலமான குரு வந்தனம் என்ற கிராமஃபோன் ரிக்கார்டில் இந்தப் பாடல் இடம் பெற்றுள்ளது. இப்போது, சுதா ரகுநாதன் நிறைய கச்சேரிகளில் இந்த ராகத்தையும் பாடலையும் விஸ்தாரமாகப் பாடி வருகிறார். இதே ராகத்தில், ‘வினுத பாலினி’ என்ற பாடலையும் ஜி.என்.பி அமைத்துள்ளார். காலப் போக்கில், அந்தப் பாடலும், ‘ஸ்ரீ சக்ர ராஜ’ அடைந்துள்ள பிராபல்யத்தை அடையும் என்று நம்புவோம்.

இதே மேட்ட்ரை ஆங்கிலத்தில் படிக்கவும் பாடலைக் கேட்கவும் இங்கு க்ளிக்கவும்.

பாடலை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Read Full Post »

மிருதங்க வித்வானும், மிருதங்க மாமேதை பழநி சுப்ரமண்ய பிள்ளையின் சீடருமான திரு.கே.எஸ்.காளிதாஸ் அவர்களின் கந்தர்வ கானத்தைப் பற்றிய விமர்சனத்தை இங்கு படிக்கலாம்.

http://varalaaru.com/Default.asp?articleid=981

Read Full Post »