Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘centenary’

ஜி.என்.பி-யின் கற்பனைக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டாக ‘கமல சரணே’ கிருதியை சொல்லலாம். இவர் உருவாக்கிய ராகங்களுள் ஒன்றான அம்ருதபெஹாகில் இந்தக் கிருதி அமைந்துள்ளது.

“ஸ ம க ப நி த ஸ” என்ற வக்ர ஆரோகணமும் “ஸ நி த ம க ஸ” என்ற அவரோகணமும் பெற்றுள்ள இந்த ராகம், 65 மேளகர்த்தாவான மேஷகல்யாணியின் ஜன்யம்.

நாதஸ்வர மேத ராஜரத்தினம், கல்யாணி ராகத்தில் சில வர்ஜ வக்ர சஞ்சாரங்கள் வாசித்ததைக் கேட்டே ஜி.என்.பி இந்த ராகத்தை உருவாக்கினார் என்றும் சில கூறுகின்றனர். ராகங்கள் வெறும் ஸ்வரங்களால் ஆகியிருந்தால் மட்டுமே இது சாத்தியம். கல்யாணி போன்ற ராகங்களில் ஸ்வரங்கள் வெறும் கூடுதான். அதன் ஜீவன் என்பது ஸ்வரங்கலையும் தாண்டிய ஒன்று.

அம்ருத பெஹாக், கல்யாணி scale-ல் இருந்து பிறந்த ராகம் என்று சொல்லலாமே தவிர, கல்யாணி ராகத்துக்கும் இதற்கும் அதிக சம்பந்தம் இல்லை.  இந்த ராகம் சில இடங்களில் அமிர்தவர்ஷிணியை நினைவூட்டுகிறது.

‘கமல சரணே’ கச்சேரிகளில் பெரும்பாலும் பிரதான உருப்படிக்கு முன் பாடப்படும் வேகமான ஃபில்லராகப் பாடப் படுகிறது. வேகமான காலப்ரிமாணத்தில், குரலின் சர்வ வல்லமையும் காட்ட ஏதுவாய், பல துரித கால, ரவை ஜாதி சங்கதிகளுடன் உள்ள கிருதிகளுள் ‘கமல சரணே’ கிருதியும் அடங்கும்.  (Interestingly, இந்த வகை கிருதிகள் பல ஆதி தாளத்தில் ஒன்றரை இடம் தள்ளி எடுப்பில் அமைந்துள்ளன.)

அடுக்கடுக்காய் மலரும் சங்கதிகள், இந்த ராகத்திலுள்ல ஸ்வரங்களின் கொண்டாட்டத்தின் வெளிப்படாய் அமைந்துள்லன. தைவதத்தை சுற்றி  அமைந்த சில சங்கதிகள் பாவபூர்வமாகவும் அமைந்துள்ளன. அழகாக கோர்க்கப்பட்டிருக்கும் சிட்டை ஸ்வரம், இந்த ராகத்தை எளிதாகவும் சரியாகவும் புரிந்து கொள்ள பெரிதும் உதவுகிறது.

இந்தப் பாடலில் வரும் ‘விமர்சனானந்த’ என்ற பெயர் ஜி.என்.பி-யின் ‘தீக்ஷா நாமம்’ என்று அவர் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

சிந்துஜா இந்தப் பாடலை, வ்ழைமையாய் கேட்கும் break-neck speed-ல் பாடாமல், நிதானமாய் பாடி இருப்பது, இந்த ராகத்தின் எழிலை வெளிக் கொணரும் வகையில் அமைந்துள்ளது.

பாடலைக் கேட்கவும் தரவிறக்கவும் இங்கு செல்லவும்.

Read Full Post »

ஜி.என்.பி கிருதிகள் வரிசையில் வெகு நாள் கழித்து மூன்றாவது பாடலை இன்றுதான் வெளியிட முடிகிறது.

பல வேலைகளில் மாட்டிக் கொண்டிருப்பதால் இம் முறை தமிழிலும் கிருதி பற்றி எழுத முடியவில்லை.

சிந்துஜாவின் பாட்டையும், பாடல் பற்றிய என் குறிப்பையும் இங்கு கேட்கலாம்/படிக்கலாம்.

http://octaves.blogspot.com/2010/09/celebrating-gnb-3-nee-padame-gathi-in.html

வரும் வாரங்களில் ஒரு கிருதிக்கும் அடுத்த கிருதிக்கும் உள்ல லீட் டைமை குறைக்க நினைத்துள்ளோம். ஜனவரிக்குள் சிந்துஜாவுக்கு தெரிந்த பாடல்கள் அனைத்தையும் வலையேற்ற திட்டம்.

முந்தைய பாடல்கள்: https://carnaticmusicreview.wordpress.com/2010/05/21/gnb-kritis-nee-daya-varnam/ & https://carnaticmusicreview.wordpress.com/2010/04/12/gnb-kritis-srichakra/

பார்ப்போம்.

Read Full Post »

MKT 100

ஏழிசை மன்னர் எம்.கே.டி-யின் நூற்றாண்டு நேற்று தொடங்கியுள்ளது.

எம்.ஜி.ஆர், ரஜினி போன்ற மூன்றெழுத்து சூப்பர் ஹீரோக்களுக்கு எல்லாம் முன்னோடியாக விளங்கிய எம்.கே.டி-யின் நூற்றாண்டு இவ்வளவு அமைதியாகத் தொடங்கியிருப்பது நம்ப முடியாமல் இருக்கிறது!

பாகவதர் நூல் எழுதிய ஜெ.ராம்கியுடன் சில முறை எம்.கே.டி பற்றி சக விசிறியாய்ப் பேசியுள்ளேன். அவர்தான் மின்னஞ்சல் அனுப்பி நினைவுபடுத்தினார்.

பெற்றோர்கள் வேலைக்கு செல்பவர்கள் என்பதால், அதிகம் நான் தாத்தாவிடம்தான் வளர்ந்தேன். என் அப்பாவின் அப்பா பெரிய எம்.கே.டி ரசிகர். நன்றாகப் பாடக் கூடியவர். காலை எழுந்தது முதல் எம்.கே.டி பாடல்களாய் பாடிக் கொண்டே இருப்பார். சிறு வயதில் எனக்கு சிவகவி பாடல்கள் எல்லாம் அத்துப்படி. யாரேனும் பாடச் சொன்னால் “அம்பா மனம் கனிந்து” என்று ஆரம்பித்துவிடுவேனாம்.

எனக்குப் பத்து வயதாகும் போது தாத்தா மறைந்தார். அவர் மறைவுக்குப் 10 ஆண்டுகளுக்குப் பின் கர்நாடக இசையில் ஆர்வம் ஏற்பட்டது. அப்போதுதான் மீண்டும் எம்.கே.டி பாடல்கள் கேட்க ஆரம்பித்தேன்.

ஹரிதாஸ், சிந்தாமணி, சிவகவி பாடல்களை நூற்றுக் கணக்கான முறை கேட்டிருப்பேன். “கவலையைத் தீர்ப்பது நாட்டியக் கலையே” பாடலைல் சுழற்று சழற்றி சங்கதி அடிப்பார் பாருங்கள்! ஆஹா…எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது.

இந்த ஆண்டு முழுவதும் நூற்றாண்டுதானே! நிச்சயம் அவரைப் பற்றி உருப்படியாய் எதாவது எழுத வேண்டும்!

தமிழ்ப் பத்திரிக்கை உலகும் விரைவில் விழித்துக் கொண்டு, ஒரு மாபெரும் கலைஞரின் நூற்றாண்டை சிறப்பான முறையில் கொண்டாடும் என்று நம்புவோமாக!

Read Full Post »

ஜனவரி நாலாம் தேதியும், ஐந்தாம் தேதியும், ஜி.என்.பி-யின் நூற்றாண்டு விழா இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸில், நடை பெறவுள்ளது. முதல் நாளில் ஜி.என்.பி-யைப் பற்றிய ஆவணப் படம் வெளியாகிறது. மூன்று வருடங்களுக்கு முன் நான் எழுதிய  ‘இசையுலக இளவரசர் ஜி.என்.பி’ என்ற புத்தகம், இந்தப் படத்துக்கான script-ஆக அமைந்துள்ளது. எந்தெந்தப் பகுதியை யாரை வைத்துப் பேச வைக்கலாம், எந்தெந்த விஷயங்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும், பல நூறு மணி நேர ஒலிப்பதிவுகளிலிருந்து, எந்தெந்த ஒலிப்பதிவுகளை, எவ்வளவு கால அளவுக்குச் சேர்க்க வேண்டும் என்றெல்லாம் மண்டையை உடைத்துக் கொண்டோம். இவை தவிர, ஜி.என்.பி-யின் biographer என்ற வகையில் நானும் இந்தப் படத்தில் பேசியுள்ளேன்.

சாதாரணமாய் பல மணி நேரம் ஜி.என்.பி-யைப் பற்றி வாய் ஓயாமல் பேசக் கூடியவன், என்ற போதும், கேமிரா முன் பேசுவது அத்தனை சுலபமாக இல்லை. நின்று கொண்டு பேசினால், “சார், இது ஃபோட்டோ இல்லை. சாதாரணமாய் இருங்க, இவ்வளவு விரைப்பு வேண்டாம்”, என்றனர். சரி இப்படிச் சொல்லிவிட்டார்களே, கொஞ்சம் நடந்தவாறு பேசினால், “சார்! ஃப்ரேமை விட்டு, ரொம்ப போறீங்க. கேமிராவைப் பார்த்து பேசுங்க. முகத்துல வேர்வை ரொம்ப இருக்கு (அசடு வழுவதைத்தான் சூசகமாகச் சொன்னார் போலும்)!”, என்றெல்லாம் சத்தாய்ப்புக்கு மத்தியில் பேச்சு எப்படி வரும். இரண்டு ஷாட்டுக்கு நடுவில் எதையேனும் சொன்னால், “சார்! இதை அப்டியே கேமிரா முன்னாடி சொல்லுங்க”, என்றார் இயக்குனர். அதை கேமிரா முன் சொல்லும் போது, முன்பு வந்த கோவையான மொழி மறுபடியும் வரமாட்டேன் என்று அழிச்சாட்டியம் பண்ணியது. 15 நிமிடப் பேச்சுக்கு, ஒன்றரை மணி நேரம் ஷூட்டிங். இயக்குனர் காந்தன்தான் பாவம். நாம் எவ்வளவு உளறினாலும், “ரொம்ப நல்லா பேசினீங்க”, என்றார்.

சென்ற வாரம், ப்ரிவ்யூ பார்த்து, சிற்சில இடங்களை மாற்றியமைத்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று கூறினேன். படம் எப்படி வந்திருக்கிறது என்று நான் சொல்லப் போவதில்லை. நாலாம் தேதி மாலை, வந்து பார்த்துவிட்டு, நீங்கள் சொல்லுங்களேன்!

ஜி.என்.பி நூற்றாண்டு மலர் வேலை, நான் எதிர்பாராமல் வந்த ஒன்று. யார் யாரோ செய்யப் போகிறார்கள் என்ற செய்தி, கடந்த ஒரு வருடமாகவே என் காதுகளில் விழுந்து கொண்டிருந்தன. ஆகஸ்ட் மாதம், ஜி.என்.பி-யின் பேரன் மகேஷ் தொலை பேசினார்.

“வழக்கமாய் வரும் souvenir-களில் விளம்பரங்களுக்கு இடையில், சில கட்டுரைகள் இருக்கும். அந்தக் கட்டுரைகளும், “ஜி.என்.பி பெல்லாரியில் உப்புமா சாப்பிட்டார்”, “மல் வேஷ்டியை மன்னார்குடியில் வாங்குவார்”, போன்ற செய்திகளும், சிரிப்பே வராத ஜோக்குகளும் நிறைந்திருக்கும். அப்படி இல்லாமல், ஜி.என்.பி என்ற கலைஞரின் கலையைப் பற்றி முழுமையான அலசல் இந்த நூலில் இடம் பெற வேண்டும். இரண்டாவதாக, ஜி.என்.பி-யும் அவரது தந்தையாரும் எழுதிய சங்கீதம் தொடர்பான அத்தனை கட்டுரைகளும் தொகுக்கப் பட வேண்டும். மூன்றாவதாக வேண்டுமானால், ஜி.என்.பி என்ற மனிதரைப் பற்றி, அவருடன் பழகிய குடும்பத்தினர், நண்பர்கள், சக கலைஞர்கள் ஆகியோரின் எண்ணங்கள் இடம் பெறட்டும்.”, என்றேன்.

மகேஷும் இதே எண்ணத்தில் இருந்ததால், என்னிடம் மலர் தொகுக்கும் பொறுப்பை அளித்தார். கட்டுரைகளின் தலைப்புகளை முதலில் முடிவு செய்து கொண்டு, ஒவ்வொரு தலைப்புக்கும் உரியவரைத் தொடர்பு கொண்டு கட்டுரை கேட்டோம். SAK Durga, N.Ramanathan, S.Rajam, MA Bhagerathi, TM Krishna, TR Subramaniam என்று ஒரு பெரிய அறிஞர் பட்டாளமே இந்த மலருக்காக எழுதியுள்ளது. லால்குடி ஜெயராமன், டி.என்.கிருஷ்ணன், உமையாள்புரம் சிவராமன் என்று இசைத் துறையின் உச்சங்களைத் தொட்டவர்களும் அவர்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். ஜி.என்.பி-யின் personal secretary-ஆக பல ஆண்டுகள் செயல்பட்ட அவரது மகள் சகுந்தலாவின் கட்டுரை மிகவும் உருக்கமாய் அமைந்துள்ளது.

நெருங்கி வந்த சங்கீத சீசனுக்கு இடையில், பல கலைஞர்கள் கட்டுரை கொடுத்தது பெரிய விஷயம்தான். சிலரை, விடாக்கண்டன் கணக்காக, தொலைபேசியில் நச்சரிக்க வேண்டியிருந்தது.

வேலை ஆரம்பித்த இரண்டு மாதங்களிலேயே, இது ஒருவரால் ஆகக் கூடிய வேலை என்று புரிந்தது. அந்த நேரம் பார்த்து, என் புத்தகத்தை ஸ்ருதி பத்திரிக்கையில் மொழி பெயர்த்து, தொடராக வெளியிட, ஸ்ருதியின் ஆசிரியர் ராம்நாராயண் தொடர்பு கொண்டார். அவருடன் பேசிய முதல் நாளே, அவரை ரொம்ப வருடம் தெரியும் என்பது போன்ற நினைப்பு ஏற்பட்டது. ராம்நாராயணின் simple yet beautiful English அவருடைய பெரும் பலம். இனியவரும்,  இசை வளர்ச்சிக்காக முனைந்து செயல்படுபவரான அவரை விட சிறந்த co-editor-ஐ நான் பெற்றிருக்க முடியாது. ரொம்பவே சீனியர் என்ற போதும், என்னை நிகராக நடத்திய அவரின் பெருந்தன்மையைக் கண்டு பல கணங்களில் நெகிழ்ந்திருக்கிறேன்.

வந்த கட்டுரைகளை, ஆளுக்கு ஒரு முறை சரி பார்த்துச் செதுக்கினோம். ஆகஸ்டில் தொடங்கி டிசம்பருக்குள், அம்பது கட்டுரைகளுக்கு மேல் தொகுத்து, 264 பக்கங்களில், எக்கெச்செக்க புகைப்படங்களோடு அற்புதமான மலர் சென்ற வாரம் எங்கள் கணினியில் ஜனனித்தது. இந்த வாரம் அச்சில் வெளி வந்து கொண்டிருக்கிறது. முழுக்க முழுக்க art paper-ல் மலர் மலர்ந்து கொண்டிருக்கிறது என்று சற்று முன் கிடைத்த தகவல் கூறுகிறது.

மலர் எப்படி வந்திருக்கிறது?

நானே எப்படிச் சொல்வது? இருந்தாலும் மூன்று விஷயங்கள் சொல்கிறேன்.

1. ஓவியங்கள்: ஓவியர் மணியம் செல்வனின் அட்டைப்படம் – கண் முன் கலையுலக கந்தர்வரைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். ஓவியர் ராஜம், தொண்ணூறைத் தாண்டி விட்ட போதும், இந்த மலருக்காக பிரத்யேகமாய், ஜி.என்.பி பாடி பிரபலப்படுத்திய ‘வாஸுதேவயனி’ பாடலை ஓவியமாய்த் தீட்டியுள்ளார்.

2. ஜி.என்.பி-யின் கையெழுத்துப் பிரதிகள்: ஐம்பது வருடங்களாய் அச்சில் ஏறாமல், கையெழுத்துப் பிரதிகளாய் மட்டுமிருந்த மூன்று கட்டுரைகள் இந்த மலரில் அரங்கேறுகின்றன. இது தவிர, பரவிக் கிடந்த அவரின்ப் மற்ற கட்டுரைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த மலரின், மற்ற எல்லாப் பகுதியை நீக்கி விட்ட போதும் கூட, இந்த ஒரு பகுதியே நூலைத் தூக்கி நிறுத்தும் என்று நம்புகிறேன்.

3. ஜி.என்.பி இறப்பதற்கு சில மாதங்கள் முன், உடல்நிலை சரியில்லாத நிலையில், வெளிநாட்டில் ஆவரைக் கேட்க வந்த ரசிகருக்காகப் பாடிய ஒரு மணி நேர கச்சேரியின் ஒலிப்பதிவும், இந்தப் புத்தகத்துடன் இலவசமாக வழங்கப்படுகிறது. கச்சேரியைக் கேட்டால், “சாகப் போகும் மனிதனின் பாட்டு”, என்று நம்பவே முடியாது.

ஐந்தாம் தேதி மாலை, பால மந்திர் ஜெர்மன் ஹாலில் (தி.நகர்), புத்தகம் வெளியிடப்படுகிறது. இசைப் பிரியர்களும், புத்தகப் பிரியர்களும் நிச்சயம் வர வேண்டும்.

Read Full Post »