Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘Interview’ Category

98-வது வயதில் அடியெடுத்து வைக்கும் டாக்டர் பினாகபாணிக்கு வாழ்த்துகள். சதம் அடிக்க பிரார்த்தனைகள். அதற்குள் இன்னும் சில முறையாவது அவரைச் சந்தித்து விட வேண்டும்.

ஐந்து வருடங்களுக்கு மேலாக படுக்கையில் கிடக்கிறார் என்ற போதும் கிட்டத்தட்ட 90 ஆண்டு விஷயங்களை மனதில் பசுமையாய்த் தேக்கி வைத்துள்ளார். முடிந்த வரை தெரிந்து கொள்ள இறையருள் வேண்டும்.

சென்றாண்டு அவரளித்த விரிவான நேர்காணலை இங்கும், இங்கும் படிக்கலாம்.

Read Full Post »

தினமணி இசை விழா மலர் 2009-ல் வெளியான கட்டுரை

சங்கீத கலா ஆசார்யா எஸ்.ராஜம் ஒரு பல் துறை வல்லுனர். அற்புதமான பாடகர், சிறந்த ஓவியர், அட்டகாசமான ஃபோட்டோகிராபர். இன்று உயிரோடு இருக்கும் தமிழ்த் திரைப்பட கதாநாயகர்களுள் மூத்தவர். இதில் ஆச்சரியம் என்னவெனில், இவரை ஓவியராய் அறிந்தவர் பலருக்கு இவரின் சங்கீத ஆளுமை தெரியாது. சங்கீததில் பரிச்சயம் உள்ளவர்கள், பாடகரான எஸ்.ராஜம்தான் ஓவியமும் தீட்டுகிறார் என்று அறிந்திருப்பதில்லை.அறுபதைத் தாண்டினால் தன் பெயரே மறந்து போகும் நிலையில் பலர் இருக்க, 91-ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் ராஜத்தின் நினைவாற்றல் அபாரமானது. தனது பத்தாவது வயதில் கேட்ட தனம்மாள் வீணையையும், நாயினாப் பிள்ளை பாட்டையும் நேற்று கேட்டது போல நினைவு கூர்ந்து பாடியும் காட்டக் கூடியவர். மயிலாப்பூர் நடுத் தெருவில் இருக்கும் அவருடைய வீடு ஒரு சங்கீதத் தலம். அம்பி தீட்சிதர், பாபநாசம் சிவன், மதுரை மணி போன்ற மேதைகளின் சங்கீதம் ஒலித்த இடம். அங்கு அவரைப் பல முறை சந்தித்துப் பெற்ற முத்துக்களின் சில சிதறல்கள் இங்கே:

எங்கள் பூர்வீகம் ஸ்ரீவாஞ்சியம். ஸ்ரீவாஞ்சியம் சுப்பராம ஐயர் என் கொள்ளுத் தாத்தா. அவர் நிறைய தமிழ்ப் பதங்கள் செய்துள்ளார். என் தந்தையார் வி.சுந்தரம் ஐயர் வக்கீலுக்குப் படித்தார். அவர் கோர்ட்டுக் கச்சேரிக்குச் சென்றதை விட, சங்கீதக் கச்சேரிக்குச் சென்றதுதான் அதிகம். பெரிய ஞானஸ்தரான அவரைத் தெடி அக் கால பிரபல வித்வான்கள் வந்த வண்ணம் இருப்பர். நான் இப்போது இருக்கும் வீட்டை எனது ஐந்தாவது வயதில் வாங்கினார். இந்தத் தெருவில்தான் (நடுத் தெரு) மயிலாப்பூர் சங்கீத சபா இருந்தது. அங்கு பிடாரம் கிருஷ்ணப்பா, பாலக்காடு ராம பாகவதர், நாயினாப் பிள்ளை, மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளை போன்ற ஜாம்பவான்களின் கச்சேரிகளை என் சிறு வயது முதல் கேட்டிருக்கிறேன். சரஸ்வதி பாய் நந்தனார் சரித்தரம் சொன்னார் என்றால் கண்முன்னே வேதியரும் நந்தனும் வந்து நிற்பர். அப்பேர்ப்பட்ட சொல்லாற்றல். அற்புதமான பாட்டு!

கச்சேரிக்கு வரும் வித்வான்கள் எல்லாம் எங்கள் வீட்டில் தங்குவர். அப்படித் தங்கும் போது எனக்கு பல கீர்த்தனங்களைச் சொல்லிக் கொடுப்பர். என் தந்தைக்கு இருந்த செல்வாக்கால், நான் எங்கேயும் போகாமல் நல்ல சங்கீதம் என் வீட்டுக்கே வந்து என்னை ஆட்கொண்டது. குறிப்பாக அன்றைய ஹரிகதை விற்பனர்களிடமிருந்து எண்ணற்ற பாடல்களைக் பாடம் செய்தேன். அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் என் தந்தைக்கு மிகவும் நெருக்கமானவர். அவரிடமே 200 கீர்த்தனங்கள் கற்றுக் கொண்டேன். அவரது சிஷ்யை சௌந்திரம் எனது முதல் குரு. காயக சிகாமணி முத்தையா பாகவதருக்கு என் மேல் தனி பிரியம். ‘வல்லி நாயகனே’ போன்ற அவரது சொந்த சாஹித்யங்கள் பலவற்றை எனக்கு சொல்லிக் கொடுத்துள்ளார். என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இசை திருவாலங்காடு சுந்தரேச ஐயரின் வயலின் இசை. அரை நிமிடம் வாசித்தாலும் ராகத்தின் ஜீவனை முழுமையாய் காட்டிவிடும் வாசிப்பு அது! விடியற்காலை என் மூக்கினுள் வயலின் வில்லை நுழைத்து எழுப்பி, பேகடையும் சங்கராபரணமும் சொல்லிக் கொடுத்ததை என்னால் எப்போதும் மறக்க முடியாது.

மதுரை மணி எங்களுக்கு உறவினரும் கூட. சங்கீத உலகில் ஞானி என்றால், அது அவர்தான். “ராஜு! ராகம் எல்லாம் குளிச்சிட்டு வரா மாதிரி சுத்தமா இருக்கணும். ஸ்வரம் பாடறது எப்படி இருக்கணும் தெரியுமா? தங்கச் சங்கிலி மாதிரி இருக்கணும். ஒவ்வொரு ஸ்வரமும் கோத்துக் கோத்து இருக்கணும். ஸ்ருதியில் இம்மி பிசகாம நிற்கணும்”, என்று அடிக்கடி கூறுவார். அவரின் ஸர்வலகு வழியே என்னைப் பெரிதும் கவர்ந்தது. நான் யாரிடம் கற்றேன் என்று சொல்வதைவிட யாரிடமெல்லாம் கற்கவில்லை என்று சுலபமாகச் சொல்லி விடலாம். இருப்பினும், மூவரைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

முதலாமவர் அம்பி தீட்சிதர். முத்துஸ்வாமி தீட்சிதரின் வம்சத்தில் வந்தவர். அவரும் மயிலாப்பூரிலேயே தங்கி இருந்தார். என் தந்தையாரின் வேண்டுகோளுக்கு இணங்கி எனக்குச் சொல்லிக் கொடுத்தார். எங்கள் வீட்டுக்கு வந்த முதல் நாள் சுத்த தன்யாசி ராகத்தை லேசாக இழுத்தார். ‘சுப்ரமண்யேன’ அல்லது ‘ஸ்ரீ பார்த்தசாரதி’ போன்ற ஒரு தீட்சிதர் கிருதியைத்தான் சொல்லிக் கொடுப்பார் என்று என் அப்பா நினைத்தார். அவரோ, ‘எந்த நேர்ச்சினா’ என்று தியாகராஜ கிருதியை ஆரம்பிக்கவும் என் தந்தைக்கு ஆச்சரியம் தாளவில்லை. பத்து வயது கூட நிரம்பியிராத எனக்கு, தீட்சிதர் கிருதிகள் போன்ற கஷ்டமான உருப்படிகளில் பாடத்தை தொடங்கியிருந்தால் பாட சிரமப்பட்டிருப்பேன். தியாகைய்யர் எளிமையாவும், ராக ரசம் சொட்டும் படியாகவும் அற்புதமாய் அமைத்திருக்கும் பாடல்களை குழந்தை கூடப் பாடிவிட முடியும். இதனை உணர்ந்துதான் அவர் ‘எந்த நேர்ச்சினா’-வில் பாடத்தைத் தொடங்கினார். அதன் பின், எண்ணற்ற தீட்சிதர் கிருதிகள் கற்றேன். அவர் பைரவியில் பாடிய ‘பால கோபால’ இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. ஒரு பலகை எடுத்து வரச் சொல்லி, அதில் வெவ்வேறு கோள்களின் நிலைகளை வரைந்து விளக்கி, எனக்கு தீட்சிதரின் நவகிரஹ கிருதிகளைச் சொல்லிக் கொடுத்தார். பின்னாளில், நவகிரஹங்களை ஓவியமாய்த் தீட்ட அந்தக் கிருதிகள் என் மேல் ஏற்படுத்திய தாக்கமே காரணம். கமலாம்பா நவாவர்ணம், பஞ்சலிங்க கிருதிகள் போன்றவற்றை எல்லாம் சொல்லிக் கொடுத்ததோடு மட்டுமின்று ஸ்வரப்படுத்தி எழுதியும் கொடுத்துள்ளார். அன்று அம்பி தீட்சிதர் எழுதிக் கொடுத்த புத்தகத்தை இன்றும் பொக்கிஷமாய்ப் பாதுகாத்து வருகிறேன்.

இரண்டாமவர் பாபநாசம் சிவன். அவர் சென்னைக்கு வந்தவுடன் எங்கள் வீட்டுக்குத்தான் வந்தார். மிக மிக எளிமையானவர். கையில் பணமிருந்தாலும் சரி, இல்லாவிடினும் சரி ஒரே விதமாய்த்தான் நடந்து கொள்வார். நாதோபாசனையைத் தவிர வேறொன்றின் மேலும் நாட்டமில்லாதவர். சென்னையில் அவரின் முதல் மாணவனாகும் பெறு எனக்குக் கிடைத்தது. அவரே நூற்றுக் கணக்கில் பாடல்கள் புனைந்திருப்பினும், பெரும்பாலும் தியாகராஜர், கோபாலகிருஷ்ண பாரதி, அருணாசல கவி போன்றோரின் பாடல்களைத்தான் சொல்லிக் கொடுப்பார். ‘நகுமோமு’ கிருதியை, இன்று பாடுவது போல் அல்லாமல் ‘சுத்த தைவதத்தில்’ எனக்குச் சொல்லிக் கொடுத்தது பசுமரத்தாணியாய்ப் பதிந்தது. அம்பி தீட்சிதர் ஸ்வரப்படுத்தி எழுதிக் கொடுப்பார் என்றால், சிவனோ பேனாவைக் கையால் கூடத் தொட மாட்டார். அவர் பாடப்பாட சங்கதிகள் மலர்ந்த வண்ணம் இருக்கும். அதைக் கவனமாகக் கேட்டு மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். அவரைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியவர் என் தந்தையார்தான்.

மூன்றாமவர் மயிலாப்பூர் கௌரியம்மாள். கபாலீஸ்வரர் கோயில் சேவையில் ஈடுபட்டிருந்தவர். அபிநயத்தில் பெரும் பேரைப் பெற்ற பாலசரஸ்வதியே கௌரியம்மாளிடம் கற்றுக் கொண்டிருக்கிறார். தாயைப் போல வாஞ்சையுடன் என்னை நடுத்துவார். பதங்கள் பாடி அபிநயம் பிடிப்பதில் கௌரியம்மாளுக்கே நிகரேயில்லை. ‘எத்தனை சொன்னாலும்’ என்று சாவேரியில் பாடினார் என்றால், பாடல் வரிகளின் பாவம் இசையிலும் அபிநயத்திலும் அப்படிப் பரிமளிக்கும். அவரிடம் கேட்டுதான் பாவப்பூர்வமாய்ப் பாடும் முறையை அறிந்து கொண்டேன். அவருக்கு தெரிந்த பதங்கள் சங்கீத வித்வான்களுக்குக் கூடத் தெரியாது. நிறைய தமிழ்ப் பதங்களையும், §க்ஷத்ரக்ஞரின் பதங்களையும் அவரிடம்தான் கற்றேன்.

இவர்களைத் தவிர காஞ்சிபுரம் நாயினாப் பிள்ளையும், வீணை தனம்மாளும் என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினர். ஏகலைவ பாவத்தில், அவர்கள் கச்சேரிகளில் இருந்து பல விஷயங்களைக் கற்றுக் கொண்டுள்ளேன். நாயினாப் பிள்ளை ‘அம்ப பரதேவதே’ என்று ருத்ரப்ரியாவில் பாடக் கேட்டு, அந்த ராகத்தின் மேல் பைத்தியமானேன். வீணை தனம்மாள் ‘அக்ஷயலிங்க விபோ’ வாசித்துக் கேட்டவர்கள் சங்கீதத்தின் உச்சத்தைக் கேட்டு மகிழ்ந்தவர்கள் என்று கொள்ளலாம்.

எனது முதல் கச்சேரி சித்தூருக்கு அருகில், பரமாச்சாரியாரின் முன், எனது பதிமூன்றாவது வயதில் நடை பெற்றது. என் கச்சேரிக்கு முந்தைய நாள் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் பாடினார். அவர் கச்சேரிக்கே முப்பது பேர் கூட இல்லை. அப்படியெனில் என் கச்சேரிக்கு எத்தனை பேர் இருந்திருக்கக் கூடும்? பத்து பேர் கூட இல்லாத நிலையில், எனக்குத் தம்புரா போடக் கூட ஆள் இல்லை. நிலைமையைக் கண்ட அரியக்குடி, “ராஜு! நான் தம்புரா போடறேன். நீ தைரியமாப் பாடு.”, என்று உற்சாகப்படுத்தினார். பொடிப்பயல் சிஷ்யன் பாடுகிறான், அவனுக்குப் போய் தம்புரா போடுவதா என்று எண்ணாமல், ஒரு மகானுக்கு முன் நடக்கும் கச்சேரி நன்றாக அமைய வேண்டும் என்று நினைத்த அரியக்குடியின் செயலை எண்ணும் போதெல்லாம் என் நெஞ்சம் நெகிழ்கிறது.

மியூசிக் அகாடமி தொடங்கப்பட்ட காலமது. அங்கு நடக்கும் இசைப் போட்டிகளில் பத்து வயது முதல் ஐம்பத்தைந்து வயது வரை யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம். நான் 1928 முதல் அந்தப் போட்டிகளில் கலந்து கொண்டேன். 1931-ல் தொடங்கி மூன்று முறை முதல் பரிசைப் பெற்றேன். அதில் ஒரு வருடம் புரந்தரதாஸர் கிருதிகளிக்கான போட்டி நடந்தது. அதற்காக எம்.எல்.வசந்தகுமாரியின் தாயார்  லலிதாங்கியை அணுகி அவரிடம் பல கிருதிகளைக் கற்றேன். போட்டியில் நுழைந்து பார்த்தால் லலிதாங்கியும் போட்டிக்கு வந்திருந்தார்.  டைகர் வரதாச்சாரி, முத்தையா பாகவதர், சரஸ்வதி பாய் ஆகிய மூவரும் போட்டியின் நடுவர்களாக அமர்ந்திருந்தனர். போட்டியின் முடிவில் எனக்கு 72 மதிப்பெண்கள். என் குருவான லலிதாங்கிக்கும் 72 மதிப்பெண்கள் கிடைத்திருந்தது. முதல் பரிசி யாருக்கென்று முடிவுக்கு வர முடியாத நிலை. அதனால், அடுத்த நாள் எங்கள் இருவரையும் மீண்டும் ஒரு முறைப் பாடச் செய்தனர். என் அதிர்ஷ்டம், எனக்கு முதல் பரிசும் லலிதாங்கிக்கு இரண்டாம் பரிசும் என்று முடிவானது. எனக்கு முதல் பரிசு கிடைத்ததை எண்ணி என்னைவிட அதிகம் மகிழ்ந்தது லலிதாங்கிதான். எவ்வளவு பெரிய மனது!

நான் மியூசிக் அகாடமியில் பரிசு பெற்ற செய்தி ஹிந்து செய்தித்தாளில் என் படத்துடன் வந்தது. அதுவே எனக்குத் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. வி.சாந்தாராம் தயாரித்த ‘சீதா கல்யாணம்’ என்ற படத்தை பாபுராவ் பெண்டார்கர் இயக்கினார். நான் ராமனாகவும், என் தங்கை ஜெயலட்சுமி சீதையாகவும், என் தந்தையார் ஜனகராகவும், என் தம்பி பாலசந்தர் ராவணன் தர்பாரில் கஞ்சிரா வாசிப்பவனாகவும் நடித்தோம். இதுதான் பாபநாசம் சிவன் இசை அமைத்த முதல் படமாகும். ‘அம்ம ராவம்மா’ மெட்டில் ‘நல்விடை தாரும்’ என்று சிவன் அமைத்து, நான் பாடிய பாடல் அன்று பெரும் வரவேற்பைப் பெற்றது. வெற்றிப் படமாக அமைந்த சீதா கல்யாணத்துக்குப் பின், எனக்கு பல கச்சேரி வாய்ப்புகள் அமைந்தன. படம் ஓடும் இடங்களில் எல்லாம், என்னையும் என் தம்பியையும் அழைத்து கௌரவப்படுத்தி, படத்தின் இடைவேளையின் போது எங்களின் கச்சேரிக்கு ஏற்பாடு செய்தனர். அதன் பின், இந்தியா முழுவதும் நானும் என் தம்பியும் கச்சேரிகள் செய்தோம். நான் பாட, என் தம்பி பாலசந்தர் கஞ்சிரா, தபலா மற்றும் ஹார்மோனியம் வாசிப்பான். பின்னாளில்தான் வீணையில் நல்ல தேர்ச்சியைப் பெற்று பெரும் புகழை அடைந்தான். சீதா கல்யாணத்துக்குப் பின், ‘ராதா கல்யாணம்’, ‘ருக்மிணி கல்யாணம்’ என்று இரு படங்களில் நடித்தேன். அதன் பின் நிஜ கல்யாணம் நடந்ததால் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டேன். 1942-ல் ‘சிவகவி’ படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதரின் ஜோடியாக என் தங்கை ஜெயலட்சுமி நடித்தாள். அவளுக்குத் துணையாக நானும் என் தந்தையும் படப்பிடிப்புக்குச் சென்றோம். சென்ற இடத்தில் முருகனின் மூன்று வடிவங்களில் நானும், ஆசிரியராக என் தந்தையும் நடித்தோம்.

இசையில் இருந்தது போலவே எனக்கு ஓவியத்திலும் நாட்டம் இருந்தது. அதற்கு முக்கிய காரணம் என் தாயார். அவர் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் நகாசு தெரியும். கோலமிட்டாரெனில் நாள் முழுதும் பார்த்துக் கொண்டிருக்கலாம். வரலட்சுமி விரதத்தின் போது முகமெழுதிக் கொடுக்க பலர் என் அன்னையை அழைப்பார்கள். எனக்கு லிங்கையா என்றொரு நண்பன் இருந்தார். அவர் பிரபல ஓவியர் (கல்கி புகழ்) மணியத்தின் சித்தப்பா. படம் வரைவதில் அவருக்கு இருந்த ஆர்வம் என்னையும் தொற்றிக் கொண்டது. என் குடும்பத்தினரும் என்னைப் படம் வரைய உற்சாகப்படுத்தினர். பள்ளிப் படிப்பை முடித்த பின், ஓவியக் கல்லூரியில் சேர முடிவெடுத்தேன். இந்தக் காலத்தைப் போல, பிள்ளைகள் எல்லோரும் டாக்டராகவும் இஞ்சினியராகவும் மட்டுமே ஆக வேண்டும் என்று நினைக்காத காலமது. இரண்டாம் வருடப் படிப்புக்குப் பின் எனக்கு டபுள் பிரமோஷனும் டாக்டர் ரங்காச்சாரி ஸ்காலர்ஷிப்பும் கிடைத்தன. கல்லூரியில் முதல் மாணவனாக தேறிய போதும், அங்கு சொல்லித் தரப்பட்ட மேற்கத்திய ஓவிய முறை என்னைப் பெரிதும் கவரவில்லை. இந்தியக் கலைப்பாணியே என்னைப் பெரிதும் ஈர்த்தது. பல்லவர்களின் சிற்பங்களும், சோழர்களின் செப்புப் படிமங்களும் என் ஓவியங்களைப் பெரிதும் பாதித்தன. அஜந்தா ஓவியங்களைக் கண்டதும் அரண்டு போனேன். அவற்றக் கண்ட பின், பல மாதங்களுக்கு பிரஷ்-ஐ கையால் கூடத் தொடவில்லை.

அஜந்தா, சிகிரியா, தஞ்சாவூர், காஞ்சிபுரம் என்று பல ஊர்களுக்குச் சுற்றி, நமது கலைப் பொக்கிஷங்களைக் கண்டு களித்தேன். அப்போதெல்லாம் மகாபலிபுரம் செல்வதென்றால் பகிங்காம் கால்வாயில் இரவு முழுதும் படகுச் சவாரி செய்ய வேண்டும். பால், ரொட்டி போன்றவற்றை எடுத்துக் கொண்டு மாமல்லபுரத்தில் இரண்டு மூன்று நாட்கள் கூடத் தங்கி படம் வரைவேன். 1940-களின் ஆரம்பத்தில் மியூசிக் அகாடமிக்காக சங்கீத மும்மூர்த்திகளை ஓவியமாகத் தீட்டினேன். இன்று அந்த ஓவியம் இல்லாத இசை ரசிகர்கள் இல்லமே இல்லை எனலாம். கலைமகள் பத்திரிக்கையில் ஆசிரியராக இருந்த கி.வ.ஜகன்னாதன் என் ஓவியங்களை விரும்பித் தொடர்ந்து பிரசுரித்தார். இலக்கியங்கள், புராணங்கள் தொடர்பாக பல ஓவியங்கள் வரைய அது ஒரு வாய்ப்பாக அமைந்தது. சங்கீதத்தில் உள்ள தேர்ச்சியால், சங்கீத சம்பந்தமான ஓவியங்கள் பல வரைய முடிந்தது. வாக்கேயக்காரர்கள், கீர்த்தனங்கள், ஸப்தஸ்வரங்கள் என்று சங்கீத சம்பந்தமாய் எண்ணற்ற ஓவியங்களை பத்திரிக்கைகளுக்காகவும் என் தனிப்பட்ட நிறைவுக்காகவும் வரைந்துள்ளேன். சுமார் நூறு கீர்த்தனங்களை கோட்டோவியமாய் வரைந்து, தக்க விளக்கங்களுடன் நான் வடிவமைத்த லெட்டர் பேட்-கள் இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

1943-ல் அகில இந்திய வானொலியில், ‘சிலம்பு’ என்ற பெயரில் ஒரு ஒபேரா நிகழ்ச்சி தயாரானது. சிலப்பதிகாரக் கதையை இசை வடிவில் கொடுக்கும் நிகழ்ச்சியான அதில், தண்டபாணி தேசிகர், மதுரை சோமசுந்தரம், பி.ஏ.பெரியநாயகி முதலானோர் பங்கு பெற்றனர். ஒபேராவுக்கான முதல் முயற்சி என்பதால் பலருக்கு அந்த வடிவம் பிடிபடவில்லை. ஒத்திகையின் போது நான் வாத்தியக்காரர்களுக்கும் பாடகர்களுக்கும் புரியும்படி விளக்கினேன். இதனைக் கண்ட நிலைய இயக்குனர், என்னை அகில இந்திய வானொலியில் சேரச் சொன்னார். அந்த நிகழ்வு என் வாழ்வில் பெரிய திருப்புமு¨னெயாக அமைந்தது.

அகில இந்திய வானொலியில் நிரந்தர வருவாய் தரும் வேலை ஒன்று கிட்டியதால் கச்சேரிகள் செய்து பிழைக்க வேண்டியிருக்கவில்லை. அதனால், பல புதுமைகளைப் புகுத்தவும், பரீட்சார்த்த முயற்சிகளில் ஈடுபடவும் முடிந்தது. கச்சேரியில் பாடும் போது, கேட்க வருபவர்களுக்காகப் பாட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நமக்குப் பிடித்ததைப் பாடினால், பலர் ஆட்சேபிக்கக் கூடும். ரேடியோவில் பாடும் போது அந்த இடைஞ்சல் இல்லை. அதிகபட்சம், நாம் பாடுவது பிடிக்கவில்லை என்றால் வானொலியை அணைத்துவிடக்கூடும். வானொலி வேலையில் வந்த வருவாய் போதுமானதாக இருந்ததால், ஓவியத்திலும், எனக்குப் பிடித்த வகை ஓவியங்களை மட்டும் வரைந்தால் போதும். காசுக்காக என் மனம் ஒவ்வாத ஓவியங்களை வரையத் தேவையிருக்கவில்லை. இதைத் தவிர, வானொலிக்கு வராத இசைக் கலைஞர்களே கிடையாது. அவ்வாறு வருபவரிடமிருந்து எண்ணற்ற சங்கீத விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. ஒரு முறை மைசூரிலிருந்து ஒரு பெண், “ஸ்ரீகாந்த எனக்கிஷ்டு” என்ற புரந்தரதாசர் பாடலை வழக்கமாகப் பாடும் கானடா ராகத்தில் பாடாமல் கன்னட ராகத்தில் பாடினார். கேட்டதும் மெய் சிலிர்த்துப் போனேன். உடனே அவரை அணுகி பாடலைக் கேட்டறிந்து, அதைப் பல கச்சேரிகளில் பாடினேன். பெரிய பாடகர்கள், அதிகம் தெரியாத பாடகர்கள், மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று எண்ணற்ற பேர்களைச் சந்தித்து, அவர்களிடமிருந்து எல்லாம் அரிய கிருதிகளைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ரேடியோவின் மூலம்தான் கிடைத்தது.

நவராத்திரியின் போது நவாவர்ண கிருதிகள், கபாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தின் போது அந்தக் கோயில் சம்பந்தப்பட்ட கிருதிகள் என்று பல வகையான நிகழ்ச்சிகளை உருவாக்கவும், பாடவும் எனக்கு வாய்ப்புகள் கிடைத்தன. மாயூரம் விஸ்வநாத சாஸ்திரி திருக்குறளுக்கு அழகான ராகங்களின் மெட்டமைத்துள்ளார். முன்கோபியும், கோபம் வந்தால் அடிக்கக் கூடியவருமான அவரிடம் பாடம் கேட்க எல்லோரும் தயங்கினர். நான் துணிந்து அவரிடம் கற்று, அவற்றை வானொலியில் பாடிப் பரப்பினேன். பல பாடல்களுக்கு மெட்டமைக்கவும், மெல்லிசை நிகழ்ச்சிகளுக்கு இசையமைக்கவும் அநேக வாய்ப்புகள் வானொலி மூலம் கிடைத்தன.

இத்தனை ஆண்டு கால கலை வாழ்க்கையில் எனக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன. அவற்றுள் நான் மிகவும் உயர்வாகக் கருதும் விருது எனக்கு அமெரிக்காவில் கிடைத்தது. 1982-ல் அமெரிக்கா சென்று 30 கச்சேரிகள் செய்தேன். கடைசி கச்சேரி வாஷிங்டனில் நடந்தது. அன்று, சுத்த சீமந்தினி ராகம் பாடி ‘ஜானகி ரமண’ கிருதியை விஸ்தாரமாகப் பாடினேன். கச்சேரி முடிந்ததும்,  இரு வயதானப் பெண்கள் என்னை அணுகி, “சுத்த சீமந்தினி ரொம்ப நன்றாக இருந்தது. நீங்கள் பாடுவதைக் கேட்ட போது, அந்தக் காலத்தில் நாங்கள் கேட்ட நாயினாப் பிள்ளையின் ஞாபகம் வந்தது.”, என்றனர். நான் பாடுவதைக் கேட்டு, என் மானசீக குருவான நாயனாப் பிள்ளையின் ஞாபகம் வந்திருக்கிறதென்றால், இதைவிட எனக்கு என்ன பெருமை கிடைத்துவிட முடியும்?

ராகங்கள் அனைத்துமே அற்புதமானவை. ஆனால், சிலர் விவாதி ராகங்கள் என்று அழைக்கப்படும் ராகங்களை, தோஷ ராகங்கள் என்று ஒதுக்கி வந்தனர். காலப்போக்கில், இந்த ராகங்களை யாருமே தீண்டாத நிலை ஏற்பட்டுவிட்டது. உண்மையில் அந்த ராகங்களைப் பாடினால் தோஷம் வராது. சந்தோஷம்தான் வரும்! எனக்கு, வழக்கமான கல்யாணி, காம்போதி பாடுவதை விட விவாதி ராகங்களைப் பாடவே விருப்பம். கோடீஸ்வர ஐயரின் கீர்த்தங்கனளில் ஆழ்ந்து ஊரியது அதற்குக் காரணம். கோடீஸ்வர ஐயர், ‘கந்த கானாமுதம்’ என்ற பெயரில் 72 மேளகர்த்தா ராகங்களிலும் பாடல் புனைந்துள்ளார். அவற்றை துணை நிலைய இயக்குனராக இருந்த த.சங்கரன் எனக்களித்துப் பாடச் சொன்னார். நானும், வானொலி நிலையத்தில் இருந்த வைதேகி என்ற பாடகியும் வாரம் இரு பாடல்களாக தொடர்ந்து வானொலியில் பாடினோம். அன்று தொடங்கி கோடீஸ்வர ஐயரின் பாடல்களையும், விவாதி ராகங்களையும் பரப்புவது என் வாழ்வின் முக்கிய லட்சியங்களாகக் கொண்டேன். இந்த 72 கிருதிகளை, ராகம் நிரவல் கல்பனை ஸ்வரங்களுடன் பாடி குறுந்தகடுகளாக வெளியிட்டுள்ளேன். எண்ணற்ற பேர்களுக்கு, “நிச்சயம் ஒவ்வொரு கச்சேரியிலும் பாடுவேன்”, என்று சத்தியம் வாங்கிக் கொண்டு, கோடீஸ்வர ஐயரின் கிருதிகளைச் சொல்லிக் கொடுத்துள்ளேன். இன்று முன்னணி வித்வான்களாய் விளங்கும் பலர் கோடீஸ்வர ஐயரின் கிருதிகளைப் பரவலாகப் பாடுவதைக் காண நிறைவாக இருக்கிறது.

விவாதி ராகங்களைப் பாடினால் ஆகாது என்பவர்களின் வாக்கில் உள்ள பொய்யை என் வாழ்வே எடுத்துக்காட்டும். எத்தனையோ ஆண்டுகளாய் விவாதி ராகங்களைப் பாடி வருகிறேன் என்ற போதும், 90 வயதைத் தாண்டிவிட்ட போதும் என் வாழ்வு நிறைவானதாகவே அமைந்துள்ளது.

Read Full Post »

இந்த சீசனில் 14 இடங்களில் கச்சேரி செய்யும் அம்ருதாவுக்கு வயது 21. பெங்களூர் வாழ் பாடகர். சொல்வனம் இசைச் சிறப்பிதழுக்காக  இவரிடம் தொலை பேசினேன்.

முதலில் கொஞ்சம் பேசத் தயங்கினாலும்,  போகப் போக சரளமாகப் பேசினார். நேர்காணல் செய்யத்தான் நினைத்திருந்தேன். கடைசியில், அது உரையாடலாக முடிந்தது. உரையாடல் (எனக்கு) சுவாரஸ்யமாக அமைந்ததால், அப்படியே இங்கு அளிக்கிறேன்.

உரையாடலைப் படிக்க இங்கு செல்லவும்.

Read Full Post »

மைக்கில்லாத காலத்திலும் கச்சேரிகள் கேட்டவர் நீங்கள். மைக் சங்கீதத்தை எப்படி பாதித்துள்ளது. மைக் இல்லாத காலத்தில் ஆண்கள் கூட 4-5 கட்டை ஸ்ருதியில் பாடுவார்களாமே?

மைக்கின் வருகை சங்கீதத்துக்கு சாதகமாய்த்தான் அமைந்திருக்கிறது. அரியக்குடி, நாயினாப் பிள்ளை போன்றவர்கள், மைக் இல்லாத காலத்தில் 2-2.5 கட்டை ஸ்ருதியில்தான் பாடினார்கள். கச்சேரிகளுக்கு வரும் கூட்டம், மைக் வந்தவுடன்தான் அதிகரித்திருக்கிறது. பாடகர் உயிரைக் கொடுத்துப் பாடினால்தான் கேட்கும்.

அப்படியெனில், ராகம் பாடும் போது கையாளப்படும் நெளிவுசுளிவுகளான ‘சின்னது பெரியது’ சமாச்சாரங்கள், மைக் வரும் முன் அதிகம் இல்லையா?

ஆமாம். ‘சின்னது பெரியது’ பேதங்களை குரலில் காட்ட ஒலிப்பெருக்கி இருந்தால்தான் முடியும். ஒலிப்பெருக்கியால்தான் கச்சேரிகளுக்கு அதிக கூட்டம் கூட ஆரம்பித்தது. அதற்கு முன், சபா கச்சேரிகளுக்குக் கூட ஐம்பது பேருக்கு மேல் வர மாட்டார்காள். அதற்கு மேல் வந்தால், பின்னால் இருப்பவர்களுக்கு கச்சேரி சரியாகக் கேட்காது

மைக்கால் சங்கீதம் பாழாகிவிட்டது என்ற கருத்து பற்றி?

நிச்சயம் சங்கீதம் மைக்கால் நன்மைதான் அடைந்திருக்கிறது. சிலர், தங்களுடைய இயலாமைக்கு மைக்கின் மேல் பழியைப் போட்டிருக்கலாம். வாத்தியங்களின் உண்மையான நாதம் மைக்கால் பாதிக்கப்பட்டது என்ற வாதத்தில் வேண்டுமானால் உண்மை இருக்கலாம். இன்று இருக்கும் தொழில்நுட்பத்தில், இவை பெரிய பிரச்னைகள் அல்ல என்றுதான் நினைக்கிறேன்.

சில கச்சேரிகளில், மேடையில் இருப்பவர்கள், தங்களுடைய ego-வை மைக்கை வைத்தும் திருப்திப் படுத்திக் கொள்ள நினைக்கிறார்கள். சில மிருதங்க வித்வான்களுக்கு, ஒலியின் அளவை எவ்வளவு அதிகப்படுத்தினாலும் போதவில்லை. சில பாடகர்கள் வயலினே கேட்காமல் இருக்க வழி செய்கின்றனர். இவை எல்லாம் மைக்கின் குற்றம் அல்ல, மனிதர்களின் குற்றம்தான்.

மைக் இல்லாத காலத்தில் கேட்டதில் நினைவில் இருக்கும் பாட்டு?

நாயினாப் பிள்ளை ‘ஜானகி ரமண’ பாடுவார். அவர் பாடினால், மந்த்ர ஸ்தாயி பஞ்சமத்தில் இருந்து தார பஞ்சமம் வரை நன்றாகக் கேட்கும்.

அந்த நாளுக்கும், இந்த நாளுக்கும் வித்தியாசம்?

அப்போது இவ்வளவு சபாக்கள் இல்லை. இன்று இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பல சபாக்கள் செயல்படுகின்றன. என் இள வயதில் எனக்கு 22 வர்ணங்கள் தெரிந்திருந்தது என்பது மிகப் பெரிய விஷயம். இன்று, நூற்றுக் கணக்கில் வர்ணங்கள் மட்டுமே கற்கக் முடியும். புதிது புதிதாய் நிறைய கிருதிகள், ராகங்கள் என்று சங்கீதம் விருத்தி அடைந்திருக்கிறது. சங்கீதத் துறை அகலமானாலும், இப்போது பாடப்படும் சங்கீதத்தில் ஆழம் கொஞ்சம் குறைந்துள்ளதாகப் படுகிறது.

இன்னொரு முக்கியமான வித்தியாசம், அந்த நாளில் ஹரிகதை காலட்சேபங்கள் மிகப் பிரபலமாய் இருந்தன. முத்தையா பாகவதர் போன்ற சங்கீத மேதைகள் எல்லாம் ஹரிகதை விற்பன்னர்களாக இருந்தனர். கல்யாணங்களில் கூட, பாட்டுக் கச்சேரி இருக்கிறதோ இல்லையோ, ஹரிகதை கச்சேரி நிறைய உண்டு.  அந்தக் காலத்தில், ஹரிகதை பாகவதர்களுக்கு தெரிந்த அளவு கீர்த்தனங்கள், விட்வான்களுக்குக் கூடத் தெரியாது. நானே எக்கெச்செக்க அரிய கீர்த்தங்களை ஹரிகதை பாகவதர்களிடன் இருந்துதான் கற்றுக் கொண்டேன். அவர்களுக்கு சங்கீதம், பல பாஷைகளில் தேர்ச்சி, பாடல் புனையும் தகுதி, சரித்திரம், சாஸ்திரம் எல்லாம் தெரிந்திருந்தது. சரஸ்வதி பாய் கதை சொன்னார் என்றால் கண் முன்னே ஒவ்வொரு பாத்திரத்தையும் நிறுத்திவிடுவார். அவர் கதைக்கு தட்சிணாமூர்த்திப் பிள்ளை முதற் கொண்டு பக்கவாத்தியம் வாசித்திருக்கிறார்கள். இன்று ஹரிகதை கிட்டத்தட்ட வழக்கொழிந்த நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.

நிறைய கீர்த்தனங்கள் வந்திருந்தாலும், இன்னும் கல்யாணி, காம்போதி, பைரவி, தோடி, சங்கராபரணம், கரஹரப்ரியா, மோகனம் தாண்டி அதிக ராகங்கள் விஸ்தாரமாய் பாடப்படுவதில்லையே?

இந்த ராகங்கள் time-tested என்பதால், இவற்றையே நிறைய பாடுகின்றனர். இதையே பாடினால் அலுப்புதான் வரும். இன்னும் எத்தனையோ அற்புதமான ராகங்களும் இருக்கின்றன.

பாட்டு கேட்பவர்களும், தவளாம்பரியையோ, சித்ராம்பரியையோ அதிகம் விரும்புவதில்லையே? தெரிந்த ராகமாய்ப் பாடுபவர்கள் கச்சேரிகளுக்குத்தானே கூட்டம் கூடுகிறது? “ராஜமா? அவர் தெரியாததைப் பாடுவாரே?”, என்ற பெயர் வந்த அளவுக்கு, உங்கள் கச்சேரிகளுக்குக் கூட்டம் வரவில்லையே?

அதுவும் உண்மைதான். பாடகர் தெரிந்ததைப் பாட வேண்டும் என்ற எண்ணம் நிறைய பேருக்கு இருக்கிறது. புதியதாய்த் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அதிகம் பேரிடம் இல்லை. இப்போது நிலை மாறி வருகிறது. இப்போது,  “விவாதி பாடுங்கள். அதுக்காகவே உங்கள் கச்சேரிக்கு வந்திருக்கிறோம்”, என்று என் மாணவர்களைக் கேட்கும் ரசிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்களாம்.

Read Full Post »

[ இது இம்மாத அம்ருதா இதழில் பிரசுரமான நேர்காணலில் மீள்பிரசுரம். அம்ருதா இதழுக்கு நன்றியுடன் ]
நேர்காணலின் முதல் பகுதி

லட்சுமண ராவைத் தொடர்ந்து வேறு யாரிடம் சங்கீதம் கற்றீர்கள்?

ஒரு முறை துவாரம் வெங்கடசாமி நாயுடுவின் கச்சேரிக்குச் என் குருவுடன் சென்றிருந்தேன். நாயுடு காருவை என் குரு அறிந்திருந்ததால் அவரிடம் சென்று பேசினோம். அப்போது என்னைப் பற்றி விசாரித்தார். நூறு கிருதிகளுக்கு மேல் நான் அறிந்து வைத்திருந்ததை என் குரு சொன்னதும் ஆச்சரியம் அடைந்த துவாரத்திடம், ராக ஆலாபனை, ஸ்வர கல்பனை முதலியவற்றைக் கற்றுத் தருமாரு என் குருநாதர் வேண்டிக் கொண்டார். அதற்கு சம்மதித்த துவாரம், அடுத்த கோடை விடுமுறையில் விஜயநகரம் வந்துவிடுமாறு என்னிடம் கூறினார்.

1932-ல் எனது இண்டர்மீடியட் படிப்பு முடிந்ததும், விஜயநகரம் சென்று மூன்று மாதங்கள் நாயுடுகாருவின் வீட்டில் தங்கினேன். ஒரு நாள் இரவு, உணவருந்திய பின் ‘ஆரகிம்பவே’ கிருதியைப் பாடி நிரவல் செய்ய ஆரம்பித்தார், அவர் சில ஆவர்த்தங்கள் பாடிய பின், நான் தொடர்ந்தேன். அவர் நினைத்ததை உள்வாங்கி நான் பாடியதைக் கேட்டு மகிழ்ந்த துவாரம், தினமும் பலப் பல ராகங்களை வாசித்து, என்னை கூர்ந்து கவனிக்கச் சொன்னார். விஜயநகரம் இசைக் கல்லூரியில் முதல்வராக இருந்த துவாரம் தினமும் கல்லூரியில் இரு முறை, வீட்டில் இரு முறை தவறாமல் சாதகம் செய்வார். அவர் பயிற்சியில் ஈடுபடும் போது அவரிடம் கற்றவர்களை அருகிலிருந்து கேட்க அனுமதிப்பார். அவர் சாயங்கால வேளையில் செய்யும் பயிற்சி ஒரு முழு கச்சேரியை சபையில் வாசிப்பது போலவே அமைந்திருக்கும்.

ஒரு முறை அவர் வீட்டில் வாசிக்கும் போது, என்னையறியாமல் ‘சபாஷ்’ என்றேன். அவர் வாசிப்பதை நிறுத்தி, ‘பாணி, நீ ஒரு மாணவன். சாதாரண ரசிகனைப் போல சபாஷ் என்ற்படி ரசிக்காமல், கூர்ந்து கவனி’, என்று தொடர்ந்தார். சற்றைக்கெல்லாம் என்னையும் அறியாமல் இன்னொரு சபாஷ் என் உதட்டிலிருந்து வெளிப்பட்டது. நாயுடு காரு என்னைப் பார்த்து, நான் வாசித்ததைப் பாடு என்றார். நான் அதைச் சரியாகப் பாடியதும், ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு வாசிப்பைத் தொடர்ந்தார். அவர் வீட்டுல் இருந்த மூன்று மாதங்களில், எனக்கு பல வருடங்களுக்கு தேவையான விஷயங்கள் கிடைத்தன. குறிப்பாக ராகம் பாடும் போது தேவையான punctuation-ஐ அவரிடம்தான் கற்றேன். (துவாரம் தோடி ராகத்தைக் கையாள்வதைப் பாடிக் காண்பிக்கிறார்.)

சென்னையின் பெருமையாய் விளங்கும் இசை விழாவிற்கு தாங்கள் வந்ததுண்டா?

1930-ல் என் பெற்றோர் ராமேஸ்வரம் சென்றனர். அது டிசம்பர் மாதம் என்பதால், என்னை சென்னையில் என் அத்தை வீட்டில் விட்டுவிடுமாறு வேண்டிக் கொண்டேன். அரியக்குடி, ஃப்ளூட் சாமிநாத பிள்ளை, காரைக்குடி சகோதரகள் போன்றவர்களின் கச்சேரிகள் என் செவிகளுக்குத் தீனி போட்டன. முசிறி ‘எந்த வேடுகோ’ பாடலில் பாடிய நிரவல் என்னை பல நாட்களுக்கு ஆட்கொண்டது. அவர் இசையிலிருந்துதான் விளம்ப கால கிருதிகள் பாடவும், நிரவல் பாடவும் கற்றுக் கொண்டேன். செம்பை நாலு களை பல்லவியில் ஒவ்வொரு முறையும் லாவகமாய் எடுப்பைப் பிடிப்பதைக் கேட்டுச் சொக்கிப் போனேன். நான் ஊருக்குக் கிளம்புவதற்கு முன் வெங்கடசாமி நாயுடுவிடம் விடைபெறச் சென்றேன். அவர், “இன்னம் ஒரு நாள் இருந்துவிட்டுப் போக முடியாதா? நாளை வீணை தனம்மாளின் கச்சேரி இருக்கிறது. அதைக் கேட்டுவிட்டுப் போ.”, என்றார். இசையின் மொத்த அழகையும் கொட்டிச் சேர்த்த தனம்மாளின் வீணை இசையை நான் தங்கிக் கேட்டேன். அதன் பாதிப்பு இன்று வரைத் தொடர்கிறது.

தங்கள் முதல் கச்சேரி எப்போது நடந்தது?

நான் சிறு வயதிலேயே கல்யாணங்களிலும் சிறு சிறு விழாக்களிலும் பாடிக் கொண்டிருந்தேன். கல்லூரி நாட்களில் ரேடியோவில் கச்சேரி செய்துள்ளேன். கடைசி வருட படிப்பின் போது, சென்னைக்குச் சென்று கச்சேரி செய்வதை அறிந்தால் காலேஜில் பிரச்னை வருமோ என்று எண்ணி, ‘வஸந்த்’ என்ற பெயரில் ரேடியோ கச்சேரி செய்துள்ளேன். ஒரு சபாவில் முதன் முதலில் பாடியது என்பது 1939-ல்தான். எனது கடைசி வருட மருத்துவப் படிப்பை முடிக்கும் தருவாயில் விசாகப்பட்டினத்தில் அந்தக் கச்சேரி நிகழ்ந்தது.

அந்தக் கச்சேரிக்கு, அடுத்த நாள் கச்சேரி செய்யவிருந்த மைசூர் சௌடையா வந்திருந்தார். முன் வரிசையில் அமர்ந்து முழு மனதுடன் உற்சாகப்படுத்திய அந்த மாமேதையைக் கண்டதும், நானும் மிகவும் உழைத்துப் பாடினேன். கச்சேரி முடிந்ததும் சௌடையாவை அணுகி வணங்கினேன். அங்கு குழுமியிருந்த பலருக்கு சௌடையா என்ன சொல்லப் போகிறார் என்று அறிய ஆவலாக இருந்ததால், ஒரு கூட்டமே எங்களைச் சூழ்ந்தது. என்னை அணுகி, “நாங்கள் பல வருடம் உழைத்துப் பெற்ற விஷயங்கள் பல உனக்கு இள வயதிலேயே வாய்த்திருக்கின்றன. துவாரம் வெங்கடசாமி நாயுடுவால் ஆந்திராவுக்கு நிறைய பெருமை கிடைத்துள்ளது. அதே போல உன்னாலும் கிடைக்கும்”, என்று வாழ்த்தி என்னை மைசூருக்கு வருமாறு அழைத்தார் சௌடையா.

அவர் அழைப்பை சம்ப்ரதாயமான ஒன்றாகத்தான் நான் எண்ணினேன். இரண்டு நாள் கழித்து நடந்த செம்மங்குடியின் கச்சேரிக்கும் சௌடையாவே பக்கவாத்தியம் வாசித்தார். அந்தக் கச்சேரியைக் கேட்கச் சென்ற என்னைச் சுட்டிக் காட்டி, “நான் தங்களிடம் இந்த இளைஞனைப் பற்றித்தான் சொன்னேன்”, என்றார் செம்மங்குடியிடம். அடுத்த நாள், என் உணவை முடித்துத் திரும்புகையில், ஒரு கார் என்னைக் கடந்தது. அதிலிருந்த சௌடையா, என்னைக் கண்டதும் காரை நிறுத்தி, “நான் சொன்னது நினைவிருக்கட்டும். அவசியம் மைசூருக்கு வா.”, என்றார். அப்போதுதான் அவர் உண்மையிலேயே மைசூருக்கு அழைத்தார் என்று உணர்ந்தேன்.

அவர் அழைப்பைத் தாங்கள் ஏற்றீர்களா?

ஆமாம். மைசூருக்குச் சென்று சௌடையாவின் வீட்டிலேயே தங்கினேன். நிறைந்த அரங்கில் என்னை மைசூருக்கு அறிமுகப்படுத்தி எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தார் சௌடையா. கச்சேரி முடிந்து வீடு திரும்புகையில், “கச்சேரி நன்றாக இருந்தது. ஆனால் நான் ஒரு தவறு செய்துவிட்டேன். கச்சேரியில் நானே பக்கவாத்தியம் வாசித்திருக்க வேண்டும்”, என்றார். எந்த ஒரு விஷயத்திலும் உள்ள நல்லவற்றை மனதாறப் பாராட்டுவதில் அவருக்கு நிகர் அவர்தான். ஒவ்வொரு நாளும் அவர் என்னைப் பாடச் சொல்லிக் கேட்பார். ஒரு முறை ‘இந்த சௌக்ய’ கிருதியை, சேலம் கிருஷ்ண ஐயங்காரின் கிராம·போனைக் கேட்டறிந்த விதத்தில் பாடினேன். பொதுவாகப் பாடும் முறையை விட அது வித்தியாசமாக இருந்ததால் என்னை தினமும் பாடச் சொல்லி, தானும் உடன் வாசிப்பார்.

ஒரு நாள், நான் மாடியில் குளித்துக் கொண்டிருந்த போது யாரோ பாடுவது என் காதில் விழுந்தது. கீழே இறங்கிப் பார்த்த போது, இரு பெண்கள் பாடிக் கொண்டிருந்தனர். பெற்றோருடன் வந்திருந்த பெண்கள் சௌடையா மூலம் சபாக்களின் அறிமுகம் பெற்று கச்சேரி வாய்ப்பு பெற வந்திருந்தனர். அவர்களுக்கு கச்சேரி வாய்ப்புகள் அதிகம் கிடைக்காவிடினும், அந்தப் பெண்களுள் ஒருவருக்கு கணவன் கிடைத்தார். அவர்களும் தெலுங்கர் என்பதால் சௌடையாவின் பரிந்துரையில் என் திருமணம் 1940-ல் நடைபெற்றது.

ரங்கராமானுஜ ஐயங்காரையும், டி.எஸ்.வாசுதேவனையும் தங்களுக்கு சங்கீதம் கற்றுக் கொடுத்தவர்கள் என்று ஒரு நேர்காணலில் கூறியுள்ளீர்கள். சென்னையில் இருந்த அவ்விருவரிடம் எப்படி கற்றுக் கொண்டீர்கள்?

முன் சொன்ன ஆசிரியர்களிடம் நான் பள்ளிப் படிப்பு படித்தேன் என்று வைத்துக் கொண்டால், பட்டப்படிப்பைப் படித்துத் தேறியது என்பது ரங்கராமானுஜ ஐயங்காரின் வழிக்காட்டலில்தான். நான் கடைசி வருட எம்.பி.பி.எஸ் படிக்கும் போது, மகப்பேற்றில் பயிற்சி பெற சென்னைக்கு வந்தேன். எனது குரு லட்சுமண ராவ் என்னை டி.எஸ்.வாசுதேவனை சந்தித்து பயன்பெறும் படிக் கூறியிருந்தார். எனது மருத்துவப் படிப்புக்குப் போக எஞ்சிய வேளையில் வாசுதேவனிடம் கிருதிகள் கற்கப் போவேன். தவறாமல் வீணை தனம்மாளின் வெள்ளிக் கிழமைக் கச்சேரிகளுக்குச் செல்வேன். ஒரு நாள், இரவுச் சாப்பாட்டை முடித்து திரும்புகையில் சைக்கிளில் இருந்தபடி ஒருவர் என்னை கதட்டி அழைத்தார். அவரை அணுகிய போது, தன்னை ரங்க ராமானுஜ ஐயங்கார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, எனக்கு தியாகராஜரின் ஆஹிரி ராகக் கிருதி தெரியுமென்று கேள்விப்பட்டதாகவும், அதைத் தான் அறிய விரும்புவதாகவும் கூறினார்.

எனக்கு ஆஹிரியில் ‘தீன ரக்ஷகா’ என்ற கிருதி தெரியும். ஆனால் அது தியாகராஜரின் கிருதி அல்ல என்று கூறினேன். அந்தக் கிருதியை தான் அறிய விரும்புவதாகவும், அதற்காக தன் வீட்டிற்கு வர முடியுமா என்றும் கேட்டார். அவர் வீட்டில் சென்று கிருதியை நான் பாட, அவர் ஸ்வரப்படுத்தி எழுதிக் கொண்டார். அதன் பின், எனக்குத் தெரிந்த கிருதிகளை எல்லாம் பட்டியலிட்டு எழுதிக் கொண்டார். அவருக்குத் தெரியாத கிருதிகளை என்னிடம் கேட்டுக் கொள்வதாகவும், பதிலுக்கு அவருக்குத் தெரிந்த கிருதிகளை எனக்குச் சொல்லித் தருவதாகவும் கூறினார்.

தனம்மாளின் சிஷ்யரான அவரிடம் பல கிருதிகள், பதங்கள் போன்ற அரிய பொக்கிஷங்களைப் பெற்றேன். அதைத் தவிர எங்களுக்கு முன்னிருந்த இசைக் கலைஞர்களைப் பற்றியும், அவர்கள் இசைக்கும் முறைகளைப் பற்றியும் விரிவாக அவர் பேசுவார். அப்படித்தான் கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர், சிமிழி சுந்தரம் ஐயர் போன்றோரின் இசையின் நுணுக்கங்களை அறிந்து கொண்டேன். நல்ல இசையின் பரிமாணங்களை நேறிப்படுத்திக் கொள்ள எனக்கு ரங்கராமானுஜ ஐயங்கார் பெரிதும் உதவினார்.

பல கலைஞர்களின் இசையைப் பற்றி அலசிய ரங்கராமானுஜ ஐயங்கார் தங்களின் இசையைப் பற்றி ஏதாவது கூறினாரா?

என்னைப் பாராட்டியோ, என் இசையை விமர்சித்தோ அவர் ஒரு போதும் எதுவும் கூறவில்லை. என் கச்சேரிகளை அவருடன் சேர்ந்தே கூட ரேடியோவில் கேட்டு இருக்கிறேன். எத்தனையோ பெரிய வித்வான்களை கேட்ட அவர் காதுகளை என் இசையா நிறைத்துவிடும் என்று நானும் இருந்துவிட்டேன். ஒரு முறை ‘மஹாசுரம்’ கிருதியை ரேடியோ கச்சேரியில் பாடி, ‘குருகுஹ சாமர ப்ரணம்’ என்ற இடத்தில் நிரவல் பாடினேன், அடுத்த நாள் ரங்கராமானுஜ ஐயங்காரைச் சந்தித்த போது, “கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயரே வந்து பாடியது போல உன் நிரவல் இருந்தது”, என்றார். அதுதான் அவர் என்னைப் பாராட்டிய ஒரே தருணம். அந்த ஒரு பாராட்டே இந்தப் பிறவிக்குப் போதும். (என்று கண் கலங்குகிறார்).

ஆந்திரத்தில் சிறந்த இசைக் கலைஞராகத் திகழ்ந்த தங்களை தமிழ்நாட்டில் பெரும்பாலும் இசை ஆராய்ச்சியாளர் (musicologist) என்று முத்திரை குத்திவிட்டனரே. இது எப்படி நடந்தது?

நான் அடிப்படையில் ஒரு மருத்துவன். அதனால், கச்சேரிகளை வலிந்து சென்று பெருவது எனக்கு அவசியமில்லாத ஒன்று. சென்னை சபைகளில் கச்சேரி வாய்ப்புகள் பெற பலரை அணுக வேண்டும். அப்படி அணுக எனக்கு விருப்பமில்லாததால், கிடைத்த வாய்ப்புகளில் மட்டும் பாடி, அதில் நிறைவை அடைந்தேன். என் காலத்தில், படித்த இசைக் கலைஞர்கள் மிக மிகக் குறைவு. அழகாகப் பாடும் பலரால் இசையின் நுணுக்கங்களை தெளிவாக விளக்க முடியாது. இசை நுணுக்கங்களை ஆராய்ந்து விளக்கக் கூடியவர்கள் மேடைக் கச்சேரியில் ஈடுபடுபவர்களாக இல்லை. எனக்கு சங்கீதத்தின் கூறுகளை அலசி அதைப் பற்றி தெளிவாகவும் பேச முடிந்ததால் என்னை musicologist வகுப்பில் சேர்த்துவிட்டனர் என்று நினைக்கிறேன்.

அதனால்தான் தங்களை அலங்கரிக்கும் பட்டங்கள் பல தாமதமாக வந்தடைந்தனவோ என்னமோ.

இருக்கலாம். 1970-லேயே இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸின் இசை விழாவுக்கு தலைமை வகித்தேன். அவர்கள் கூட, என்னை 1992 வரை மீண்டும் கச்சேரி செய்ய அழைக்கவில்லை.

என் கச்சேரி ரேடியோ நேஷனல் ப்ரோக்ராமில் வர வேண்டும் என்று பலர் கேட்டுக் கொண்டதற்கு, “அவர் musicologist. கச்சேரி செய்யும் வித்வான் அல்ல.”, என்றாராம் அன்று டெல்லியில் பொறுப்பில் இருந்த ஈமணி சங்கர சாஸ்திரி. இத்தனைக்கும் அவரும் ஆந்திரத்தைச் சேர்ந்தவர். பின்பு, 1972-ல் என்னை கச்சேரி செய்ய அவரே அழைப்பு விடுத்த போது, “If I was not fit twenty years before, my music has not become any better now”, என்று பதிலெழுதி மறுத்துவிட்டேன். என்னை மீண்டும் ஒரு முறை பரிசீலிக்கச் சொன்ன போது, “My previous reply stands good for now and for ever”, என்று எழுதினேன்.

1983-ல் எனக்கு சங்கீத கலாநிது பட்டம் வழங்கப்பட்டது. அந்த வருடம் கூட, கச்சேரி செய்யும் வாய்ப்பை எனக்கு சங்கீத வித்வத் சபை அளிக்கவில்லை. ஏனென்று சில கேட்டதற்கு, “பினாகபாணி போன்ற உயர்தரக் கலைஞரை, வெறும் மேடைக் கலைஞருள் ஒருவராகச் சேர்க்க வேண்டாம்”, என்று சாமர்த்தியமாய் கூறினார்களாம். அந்த ஆண்டில் நடந்த காலை வேளை விரிவுரைகளுக்கு மட்டும் தலைமை ஏற்று வந்தேன். திடீர் என்று ஒருநாள், எம்.டி.ராமநாதனுக்கு உடல் நலமில்லை என்பதால், என்னை கச்சேரி செய்யச் சொன்னார்கள். “இப்போது மட்டும் எனது சங்கீதம் மேடைக் கலைஞரின் நிலைக்குத் தாழ்ந்துவிட்டதா”, என்று கேட்டேன். அவர்கள் தொடர்ந்து வற்புறுத்தியதால் கச்சேரி செய்தேன்.

ஒரு கச்சேரியில் தாங்கள் பாடிய பல்லவியை, தங்களுக்கு சங்கீத கலாநிதி விருது வழங்கிய போது வாழ்த்திப் பேசிய லால்குடி ஜெயராமன் நினைவு கூர்ந்துப் பேசியதைப் பற்றி, அவரே என்னிடம் கூறியிருக்கிறார். அதைப் பற்றி கூறுங்களேன்.

கர்னூலில் ஒரு சபையை என் நண்பர் வெங்கடரங்கம் ஐயங்கார் நடத்தி வந்தார். அந்த சபையில் வோலேட்டி, நேதனூரி போன்றோரின் கச்சேரிகளை நான் ஏற்பாடு செய்து கொடுத்தேன். சபை தொடங்கிய மூன்றாம் ஆண்டு, “நீங்கள் ஏன் நம் சபையில் கச்சேரி செய்வதில்லை”, என்று கேட்டார் வெங்கடரங்கம் ஐயங்கார். “உங்களுக்கு வேண்டுமானால் நான் வீட்டுக்கு வந்து பாடுகிறேன். அப்படி என் பாட்டு சபையில் ஒலிக்க வேண்டுமானால் நான் கேட்கும் பக்கவாத்தியங்களை எனக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும்”, என்று கூறினேன். அதற்கு அவர் இசையவும், லால்குடி ஜெயராமனை வயலினுக்கும், நாகர்கோயில் கணேச ஐயரை மிருதங்கத்துக்கும் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டேன். சென்னை சென்று லால்குடியை சந்தித்த வெங்கடரங்கம் ஐயங்காரிடம், அது வரை என் பாட்டைக் கேட்டிராத லால்குடி, ஆந்திராவுக்கு வந்து எனக்கு பக்கவாத்தியம் வாசிக்க தயங்கினாராம். அவரை எப்படியோ சம்மதிக்க வைத்துவிட்டார் சபா காரியதரிசி.

கர்னூலில் இருந்து 60 மைல் தூரத்தில் ஆதோனே என்றொரு ஊர் இருக்கிறது. அந்த நாளில் கர்னூலுக்கு கச்சேரி செய்ய யாரை அழைத்தாலும், அவரை ஆதோனேயில் இருந்த சபாவிலும் ஒரு கச்சேரி செய்யச் சொல்வோம். இதனால், செலவுகளை இரண்டு சபாக்களும் பகிர்ந்து கொள்ள முடிந்தது. லால்குடி ஜெயராமன், கணேச ஐயருடன் என் முதல் கச்சேரி அதோனேயில் நடந்தது.

அன்று கச்சேரியில் பல கிருதிகள் பாடி, பிரதான ராகமாக சங்கராபரணம் பாடி, “சரவணபவ குருகுஹ” என்ற பல்லவி பாடினேன். சதுஸ்ர நடை பல்லவியை மூன்று காலங்களில் பாடி த்ரிகாலம் செய்து அதன் பின் திஸ்ர நடையில் பாடி மறுபடியும் சதுஸ்ர நடைக்கு வருவது வழக்கமான ஒன்று. இந்தக் கச்சேரியில், திஸ்ர நடையில் பாடிய பின் கண்ட நடையிலும் அந்தப் பல்லவியைப் பாடினேன். இந்த நிகழ்ச்சியை எனது சங்கீத கலாநிதி பட்டமளிப்பு விழாவில் நினைவு கூர்ந்து, பாடியும் காண்பித்த லால்குடி ஜெயராமன், அதுவரை யாரும் அது போல பாடிக் கேட்டதில்லை என்றும் கூறுனார்.

நல்ல இசைக்கு எவையெல்லாம் அவசியம் என்று நினைக்கிறீர்கள்?

இது ஒரு முக்கியமான கேள்வி. இதில் இரண்டு விஷயங்கள் உண்டு. ஒன்று, நல்ல இசையின் கூறுகள். இன்னொன்று அவற்றிலன் சரியான கலவை. சரியான விஷயங்கள் சரியான அளவில் இருக்கும் போதே நல்ல இசை பிறக்க முடியும். ராகம் பாடும் போது, ஒவ்வொரு மூச்சிழுப்பிலும் ராக பாவம் சொட்ட வேண்டும். Every breath must contain melodious material. What is not melodious is not music. பாடும் போது ஒரு சங்கதிக்கும் அடுத்த சங்கதிக்கும் இடைப்பட்ட இடைவெளி சரியாக அமைவது மிக மிக முக்கியம். (சாவேரி ராகத்தை இடைவெளி இல்லாமலும், அளவான இடைவெளிகள் விட்டும் பாடுகிறார்.) இடைவெளி இல்லாமல் பாடும் போது ராக பாவம் அரவே நீங்கிவிடுகிறது. ஒவ்வொரு பிரயோகத்துக்கும் ஏதுவான காலப்ரமாணம் உண்டு. சில பிரயோகங்களை வேகமாகப் பாடும் போது நன்றாக ஒலிக்கும். அதே பிரயோகத்தை ஒரு இழை மெதுவாகப் பாடினால் பன் மடங்கு அதிகமாய் மெருகேறி ஒலிக்கும். அதீத வேகம் என்பது பாடகரின் திறமையை வேண்டுமானால் காட்டுமே தவிர, அழகுணர்ச்சியை வெளிப்படுத்த மெதுவான காலப்ரமாணமே சிறந்தது. நடனமாட வேண்டுமென்றால் முதலில் நிற்க வேண்டும். ஓடும் போது நடனமாடினால் பார்க்க நன்றாகவா இருக்கும்?

பாடும் ராகத்தின் தீர்க ஸ்வரங்கள் (நிற்கக் கூடிய ஸ்வரங்கள்), ரவை ஜாதி சங்கதி என்று கூறப்படும் துரிதமான பிரயோகங்கள், இந்திய இசையின் உயிரெனக் கருதப்படும் கமகங்கள், இவை அனைத்தும் சரியான அளவில் (right proportion), அவற்றுக்குரிய இடத்தில் (appropriate place), உரிய காலப்ரமாணத்தில் (correct kalapramana) அமைதல் வேண்டும். ராகம் பாடும் போது கேட்பவருக்கு குழப்பம் வரா வண்ணம் தெளிவான, பிரபலமான சங்கதிகள் பாடுவது மிக அவசியம். அதற்காக கற்பனையை பறை சாற்றும் புதிய சங்கதிகளை அரவே ஒதுக்கிவிடவும் கூடாது. ராகமோ, கீர்த்தனையோ, ஸ்வரமோ எதைப் பாடினாலும், சங்கதிகள் பாடலின் பொருள் அமைத்துள்ள பாவத்திலேயே இருத்தல் அவசியம். இவை அனைத்தும் நல்ல இசையின் முக்கியமான கூறுகள் எனலாம்.

தாங்கள் ஒரு சிறந்த இசைக் கலைஞராக உச்சங்களைத் தொட்டது போலவே, மருத்துவத் துறையிலும் சிறந்து விளங்கியுள்ளீர்கள். தங்களுக்கு இருந்த நேரத்தை இரண்டு துறையிலும் எவ்வாறு பங்கிட்டீர்கள்?

இறைவன் நமக்கு ஒரு நாளைக்கு 24 மணி நேரம் கொடுத்துள்ளான். இந்த நேரத்தில் டி.வி பார்க்காமலோ, திரைப்படங்களுக்கு போகாமலோ இருந்தால், இரண்டு துறைகள் அல்ல, நான்கு ஐந்து துறைகளில் கூட சிறந்து விளங்குவது சாத்தியமாகும். என்னைப் பொறுத்த வரையில், மருத்துவத் துறையில் என்னை வளர்த்துக் கொள்ள ஒரு நாளைக்கு 6-7 மணி நேரம் செலவிட்டாலே போதுமானதாக இருந்தது. இசை மற்றும் மருத்துவம் தவிர, உடற் பயிற்சியிலும் எனக்கு ஈடுபாடு உண்டு. International Journal of Health and Sciences போன்ற இதழ்களுக்கு நான் பலமுறை கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். ஒரு நண்பருடன் சேர்ந்து ‘ஹனுமான் ஜிம்னேஷியம்’ என்ற பயிற்சி கூடத்தைத் தொடங்கி ஆறேழு வருடங்கள் நடத்தியுள்ளேன். டென்னிஸ் விளையாடுவது என்றால் எனக்கு உயிர். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் இரண்டு மணி நேரமாவது நான் விளையாடாமல் இருந்ததில்லை. இதைத் தவிர, ஆன்மிகத்திலும் எனக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. சின்மயானந்தாவின் உரைகளை ஆழ்ந்து கேட்டதால் தோன்றிய ஈடுபாடு அது. கர்னூலில் சின்மயா மிஷனைத் துவக்கி அதன் தலைவர் பொறுப்பையும் பல காலம் வகித்துள்ளேன். இதையெல்லாம் ஏன் கூறுகிறேன் எனில், நமக்கு இருக்கும் நேரத்தை சரியாக உபயோகிப்போமெனில், பல துறைகளில் சிறந்து விளங்குவது அத்தனை கடினமான ஒன்றல்ல என்பதை அருதியிட்டுக் கூறத்தான்.

தாங்கள் இசையிலும் மருத்துவத்திலும் சிறந்து விளங்கியதால், Music Therapy-ஐப் பற்றிய தங்கள் கருத்து சரியானதாக இருக்கும் என்று நம்புகிறேன். இசையால் வியாதிகளை குணப்படுத்த முடியுமா?

இசையால் வியாதிகளை நிவர்த்தி செய்ய முடியும் என்று நான் நம்பவில்லை. ஒருவன் குடித்து தன்னுடைய கல்லீரலை கெடுத்துக் கொண்டுவிட்டான் என்று வைத்துக் கொள்வோம், அவனுடைய பழுதான உடலை இசையைக் கொண்டு எப்படி சரி செய்ய முடியும்? இசையைக் கேட்பதன் மூலம், அவஸ்தையை வேண்டுமானால் சில நேரம் மறந்திருக்கலாமே ஒழிய, வியாதியை குணப்படுத்த முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.

தாங்கள் மருத்துவராகவோ, இசைக் கலைஞராகவோ வர வேண்டும் என்று சிறு வயதிலேயே நினைத்தீர்களா?

அப்படி ஒன்றுமில்லை. பொறியியல், மருத்துவம் முதலான பல துறைகளுக்கு விண்ணப்பித்தேன். என் மதிப்பெண்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தது அதனால் சேர்ந்தேன். என் இசைப் பயிற்சியும் விளையாட்டாகத்தான் தொடங்கியது. நாட்பட, அதன் போக்கிலேயே இரு துறைகளுமே என்னை ஆகர்ஷித்துக் கொண்டன.

தங்கள் எழுதிய புத்தகங்களைப் பற்றி கூறுங்களேன்.

எல்லோரும் ஒரு நாள் மரணமடையப் போவது என்பது உறுதி. இறக்கும் போது எதையும் கொண்டு செல்ல முடியாது. அதனால், என் மனதில் புதைந்து இருக்கும் சங்கீத விஷயங்களை ஒரு இம்மி அளவு கூட மிச்சமில்லாமல் இந்த உலகில் வைத்து விட்டுப் போய்விட வேண்டும் என்பது என் எண்ணம். இதுவே என்னைப் புத்தகங்கள் எழுதத் தூண்டின.

என் புத்தகங்கள் பெரும்பாலும் தெலுங்கிலேயே வெளியாகியுள்ளன. ‘சங்கீத சௌரபம்’ என்ற பெயரில் நான்கு தொகுதிகள் வெளியிட்டுள்ளேன். அவற்றில் நானறிந்த பல கிருதிகள், பதங்கள், தில்லானாகள், திருப்புகழ் என்று ஆயிரத்துக்கு மேற்பட்ட பல வகைப் பாடல்களை ஸ்வரப் படுத்தி வெளியிட்டுள்ளேன். ‘பல்லவி கான ஸுதா’ என்ற புத்தகத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பல்லவிகளை, திஸ்ரம், த்ரிகாலம் போன்ற வின்யாஸங்களையும் மனதில் கொண்டு விவரமாக ஸ்வரப் படுத்தி வெளியிட்டுள்ளேன். சிம்ஹநந்தனம், சரபநந்தனம் போன்ற அரிய தாளங்களில் அமைந்துள்ள பல்லவிகளும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. இந்தப் புத்தகம் ஆங்கிலத்திலும் கிடைக்கிறது. ‘மனோதர்ம சங்கீதம்’ என்ற புத்தகத்தில் நமது சங்கீதத்தின் அடிப்படைகளுள் ஒன்றான கற்பனையைப் பற்றி எழுதியுள்ளேன். இந்தப் புத்தகம் சென்னையில் இருக்கும் ப்ருஹத்வனி வாயிலாக தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மஹா வைத்தியநாத சிவனின் மேள ராகமாலிகையை, 72 ராகங்களுக்கு உரிய சஞ்சாரி ஸ்வரங்களுடன் சேர்த்து மாணவர்களுக்கு எளிதாக விளங்கும் வகையில் வெளியிட்டுள்ளேன். இதைத் தவிர என் சங்கீத அனுபவங்களை நான் தொடராக எழுதியதும், இன்று தொகுப்பாகக் கிடைக்கிறது.

பல வருடங்கள் நான் திரட்டிய லய சம்பந்தமான விஷயங்கள் மட்டும் கையெழுத்துப் பிரதிகளாகவே உள்ளன. அவற்றையும் வெளியிட அந்திரப் பல்கலைக்கழக இசைத் துறையிலிருந்து சிலர் வருவதாகக் கூறியுள்ளனர். அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

97 வயதில், கடந்து வந்த வாழ்க்கைப் பாதையைத் திரும்பிப் பார்க்கும் போது என்ன நினைக்கிறீர்கள்?

தஞ்சாவூர் பாணி என்ற உயர்ந்த வகை இசையைக் கேட்டு, அதனால் ஈர்க்கப் பட்டு, அதில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற ஆசையால் அயராது உழைத்து, இசையில் உயர்வானதையெல்லாம் திரட்டி, எனக்கென்று ஒரு பாணியை வகுத்து, ஓரளவு வெற்றியுடன் அதைக் கச்சேரிகளுலும் பாடியுள்ளேன். நான் அறிந்தவற்றை எல்லாம் தகுதியுள்ள மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டு, தஞ்சாவூர் பாணியை ஆந்திராவில் நிறுவ என்னால் இயன்றதைச் செய்துள்ளேன். இதைத் தவிர எனது திரட்டல்களையும், கருத்துகளையும் புத்தகங்களாக வெளியிட்டுள்ளேன். இதை எல்லாம் நினைத்துப் பார்க்கும் போது, மிகுந்த நிறைவே ஏற்படுகிறது.

ஒரு புன்னகையுடன் கண்களை மூடிக் கொண்ட டாக்டர் பினாகபாணியிடம் விடை பெற்று, அன்று முழுவதும் என்னை உபசரித்த அவ்ர் குடும்பத்தாரிடம் சில நேரம் பேசிவிட்டு கர்னூலை விட்டு நீங்க, அந்தக் கலைஞரின் அறையைக் கடந்தேன். ஒரு நாள் முழுதும் பேசிய களைப்பை அவர் முகம் காட்டினாலும், அவர் வாய் மோகன ராகத்தை முணுமுணுத்தபடி இருந்தது.

Read Full Post »

[ இது இம்மாத அம்ருதா இதழில் பிரசுரமான நேர்காணலில் மீள்பிரசுரம். அம்ருதா இதழுக்கு நன்றியுடன் ]

சங்கீத கலாநிதி ஸ்ரீபாத பினாகபாணி இசைத் துறையின் உச்சங்களைத் தொட்டவர். பத்ம பூஷண் விருதினைப் பெற்ற இவர், தஞ்சாவூர் பாணியை ஆந்திரத்தில் நிறுவியவர். இன்று பிரபலமாய் விளங்கும் பல அன்னமாச்சாரியா கிருதிகளுக்கு மெட்டமைத்தவர். தான் கற்றவற்றை பரப்புவதை ஒரு தவமாகவே செய்து நேதனூரி கிருஷ்ணமூர்த்தி, வோலேட்டி வெங்கடேஸ்வருலு, ஸ்ரீரங்கம் கோபால்ரத்னம், நூகல சத்யநாராயணா போன்ற சங்கீத ஜாம்பவான்களை உருவாக்கியவர். இவரது பாணியைப் பற்றி முனைவர் பட்ட ஆய்வு வெளியாகும் அளவிற்கு சாதனைகள் புரிந்தவர். முதுமை உடலைத் தாக்கி ஐந்து வருடமாய் படுக்கையில் தள்ளிவிட்ட போதும், இசையில் ஊறிப் போன மனது, 97-ஆவது வயதிலும் இளமையாகத்தான் இருக்கிறது. 1930-களில் நடந்ததை கூட நேற்று நடந்தது போல நினைவு கூறும் பினாகபாணி ஓர் அதிசய மனிதர். கடந்த மாதம் கர்னூலில் அவரைச் சந்தித்து ஒரு நாள் முழுதும் அவருடன் கழிக்கும் பேறு கிடைத்தது. அன்று கிடைத்த பல முத்துகளின் சில சிதறல்களை இந்த நேர்காணலில் காணலாம்.

தங்கள் இளமைக் காலத்திலிருந்து பேட்டியைத் தொடங்கலாமே.

நான் 1913-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுலம் ஜில்லாவில் உள்ள பிரியாக்ரஹாரத்தில் பிறந்தேன். என் அப்பா, ஸ்ரீபாத காமேஸ்வர ராவ், ராஜமுந்திரியில் இருந்த கவர்மெண்ட் ட்ரெயினிங் காலேஜில் ஜூனியர் ப்ரொபசராக பணியாற்றினார். அவர் ஐந்திற்கும் மேற்பட்ட மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். பெங்காலியிலிருந்து தெலுங்கிற்கும், தெலுங்கிலிருந்து பெங்காலிக்கும் பல நாடகங்களை அவர் மொழி பெயர்த்துள்ளார். மேடை நாடகங்களில் ஆழ்ந்த ஞானம் கொண்டிருந்த அவரைக் காண அக் கால முன்னணி நடிகர்கள் பலர் வந்த வண்ணம் இருப்பர். அக் கால நாடகங்களில் இசை இன்றியமையாததாக இருந்ததால், எங்கள் வீட்டில் இசை ஒலித்த வண்ணம் இருக்கும். நான் சிறுவனாக இருந்த போது, பி.எஸ்.லட்சுமண ராவ் என்பவர் எங்கள் வீட்டிற்கு வந்து என் தமக்கைக்குப் பாட்டு கற்றுக் கொடுத்தார். அதைக் கேட்டுக் கேட்டு நானும் அவ்வழியே பாடுவேன். ஒரு முறை என் தமக்கை ஒரு சங்கதியைத் தவறாகப் பாடிய போது, வேறேதோ வேலையாக இருந்த நான் அந்தத் தவறைச் சுட்டிக் காட்டினேன். இதனைக் கண்டு மகிழ்ந்த லட்சுமண ராவ், என் பெற்றோரிடம் எனக்கு சங்கீத சிட்சை அளிக்க விரும்புவதாகக் கூறினார். அப்போது நான், சங்கீதமெல்லாம் பெண்களுக்குத்தான் என்று தட்டிக் கழித்தேன்.

பி.எஸ்.லட்சுமண ராவ் என் பள்ளியிலும் வாத்தியாராக இருந்தார். நான் முதல் ஃபாரத்தில் படித்த போது, எங்கள் தெலுங்கு வாத்தியார் வராத போதெல்லாம் இவர் பாடம் நடத்த வருவார். அவர் எப்போதுமே செய்யுள் பகுதிகளைத்தான் நடத்துவார். அப்படி நடத்தும் போது, ஒவ்வொரு பாடலையும் ராகத்துடன் பாடுவார். இப்படி ஒரு முறை, இரண்டு நாட்கள் நடத்திய பின், மூன்றாம் நாள் ஓரிடத்தில் நிறுத்திவிட்டு என்னைத் தொடர்ந்து பாடச் சொன்னார். அவர் பாடிய பைரவி ராகத்திலேயே நானும் தொடர்ந்து பாடினேன். இதனால் ஆச்சரியமடைந்த அவர், என் தந்தையாரிடம் வற்புறுத்தி, எனக்கு சங்கீத சிட்சை அளிக்குமாறு பரிந்துரைத்தார். 9 நவம்பர் 1924 எனது சங்கீதப் பயிற்சி தொடங்கியது.

உங்கள் குருநாதரின் சிட்சை முறையைப் பற்றிக் கூறுங்களேன்.

இசையின் பெருமைகளை நான் உணராத போதும், இசை என்னை காந்தமாய்க் கவர்ந்தது. ஒவ்வொரு நாளும் என் குருவின் வீட்டுக்குச் செல்வேன். எனக்கு சொல்லிக் கொடுப்பதை உள் வாங்கிய பின், மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதையெல்லாம் கூர்ந்து கவனிப்பேன். நாளடைவில், என் குரு யாருக்கு எதைச் சொல்லிக் கொடுத்தாலும், அதை அவர் புத்தகங்களில் ஸ்வரப்படுத்தி எழுதும் வேலை எனதானது. நான் என்ன செய்கிறேன் என்று அறியாமலே என்னுடைய சங்கீத அடித்தளம் பலமாக அமைந்தது.

எனது குரு மைசூரில் இசை பயின்றவர். அவர் ஆலாபனை, ஸ்வரப்ரஸ்தாரம் போன்றவற்றில் சிறந்து விளங்கவில்லை என்ற போதும் நிறைய அரிய கிருதிகளை நன்கறிந்திருந்தார். எது நல்ல இசை, எது நல்ல இசை அல்ல என்று நிர்மாணிப்பதில் அவர் சிறந்து விளங்கினார். ஒவ்வொரு கிருதியின் சங்கதிகளையும் முழுமையாகப் பாடும் வரை விட மாட்டார். ‘சக்கனி ராஜமார்கமு’ போன்ற கிருதிகளை மாதக் கணக்கில் நான் அவரிடம் கற்றதுண்டு. இப்படியாக 1924-லிருந்து 1929-க்குள் கிட்டத்தட்ட நூறு கிருதிகள் பாடம் செய்தேன். 1930-ல் காக்கிநாடாவில் எனது இண்டர்மீடியெட் படிப்பைத் தொடர்ந்தேன்.

காக்கிநாடாவில் சரஸ்வதி கான சபை அன்றே வெகு பிரபலமாய் விளங்கியதே.

ஆமாம். 1928-லிருந்து காக்கிநாடாவிலும், அதற்கு முன் ராஜமுந்திரியிலும் நிறைய கச்சேரிகள் கேட்டுள்ளேன். காக்கிநாடாவில் ஓவ்வொரு வருடமும் இசை விழா பத்து நாட்களுக்கு நடக்கும். முதல் ஐந்து நாட்களுக்கு ஆந்திரக் கலைஞர்களும், அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த கலைஞர்களும் கச்சேரி செய்வார்கள். இந்த விழாவில்தான் அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், காஞ்சிபுரம் நாயினாப் பிள்ளை, மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளை, கும்பகோணம் இராஜமாணிக்கம் பிள்ளை போன்றோரின் அற்புத இசையை முதன் முதலில் கேட்டேன். ‘ரா ரா மா இண்டி’, ‘ஸ்வர ராக ஸ¤தா’, ‘கிரி பை’ போன்ற கிருதிகளை தமிழ்நாட்டு வித்வான்கள் பாடிய முறை நான் கற்றிருந்த விதத்தில் அமையவில்லை. ஆந்திர வித்வான்களில் கச்சேரிகளை விட தமிழ்நாட்டு வித்வான்களின் கச்சேரிகள், கேட்பதற்கு நன்றாக இருந்தது. ஆந்திர வித்வான்கள் பாடும் போது சுமாராக வந்த கூட்டம், தமிழ்நாட்டு வித்வான்கள் பாடும் போது அரங்கை நிறைத்தது. இதனால், இள வயதிலேயே எனக்கு தஞ்சாவூர் பாணி என்றழைக்கப்படும் தென்னாட்டு இசை முறையே என்னை வெகுவாகக் கவர்ந்தது.

தஞ்சாவூர் பாணியை ஆந்திராவில் நிறுவியவர் என்று பலராலும் புகழப்படுபவர் நீங்கள். இன்று கேட்கும் போது, ஆந்திர வழி, தமிழ்நாடு வழி என்று இரண்டு வழிகள் இருப்பதாகவே தெரியவில்லை. தாங்கள் சங்கீதம் கற்க ஆரம்பித்த காலத்தில் ஆந்திர சங்கீதம் எந்த நிலையில் இருந்தது?

முதலில், தஞ்சாவூர் பாணியை ஆந்திராவில் நிறுவியவன் என்று யாரும் என்னைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பின் நான் என் வாழ்வின் பொருளை அடைந்துவிட்டதாக நினைத்துக் கொள்வேன்.

அந்தக் காலத்தில், இசையில் ஆர்வமுள்ள ஆந்திர தேசத்தவர், நல்ல தேர்ச்சியைப் பெற வேண்டுமெனில், தமிழ்நாட்டின் காவிரி கரையிலிருந்த கலைஞர்களிடன் சென்றே கற்க வேண்டிய நிலை இருந்தது. பயணங்கள் கடினமாய் இருந்த காலத்தில் அவ்வாறு இசை பயில்வதென்பது கடினமான காரியம். அப்படியும் சிலர் தமிழ்நாட்டில் தங்கி இசை பயின்று, அவர்களால் முடிந்த வரை ஆந்திராவில் பரப்பிய போதும், தஞ்சாவூர் பாணி அளவிற்கு அதிகம் வளர்ந்திராத பாணியாகவே ஆந்திர பாணி இருந்தது. என் இளமைக் காலத்தில், நிரவல் செய்தல், பல்லவி பாடுதல் போன்ற சமாசாரங்களில் ஆந்திர கலைஞர்கள் ஈடுபடமாட்டார்கள். கடந்த ஐம்பது ஆண்டுகளில், பயண வசதிகள், ரேடியோ போன்ற தொலை தொடர்பு வசதிகளும் தகவல் பரிமாற்றத்தை சுலபமாக்கியுள்ளன. இதனால் தமிழ்நாட்டு கலைஞர்களின் இசையை ஆந்திராவில் அதிகம் கேட்கவும், ஆந்திராவில் இருந்து கலைஞர்கள் தமிழ்நாட்டில் பாடி பெயர் வாங்கவும் வசதிகள் பெருகியுள்ளன. இதனால்தான் இன்று ஆந்திர இசையை தமிழ்நாட்டு இசையிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன், நீங்கள் சொன்ன வசதிகள் இல்லாத போதும் கூட, தாங்கள் தஞ்சாவூர் பாணியில் எப்படி தேர்ச்சியைப் பெற்றீர்கள்?

எங்கள் வீட்டருகில் தெலுங்கு வாத்தியாராக ஒருவர் இருந்தார். அவர் நல்ல பாடகர். அவர் என்னிடம் நான் கேட்ட கச்சேரிகளைப் பற்றி விசாரித்து, யார் யார் எப்படியெல்லாம் இசைத்தனர் என்று என்னைப் பாடச் சொல்லிக் கேட்பார். நாயினாப் பிள்ளை, கோவிந்தசாமி பிள்ளை, அரியக்குடி போன்றோரைப் போலவே நானும் பாட முயற்சி செய்வேன். குறிப்பாக அரியக்குடியின் இசைக்கு நான் அடிமையானேன். அவர் கிருதிகள் பாடிய அழகும், ராகம் பாடும் போது அவர் குரலில் பேசிய சங்கதிகளும், கமகமும், நிரவல், கல்பனை ஸ்வரங்களில் இருந்த நளினமும், அவர் கச்சேரியில் இருந்த கச்சிதமும் என்னை பெரிதும் பாதித்தன.

எனது பள்ளி நாட்களில் கிராமஃபோன் தட்டுகள் பிரபலமாக ஆரம்பித்தன. என் சகோதரனின் நண்பன் வீட்டில் ஒரு கிராம·போன் ப்ளேயர் இருந்தது. இசையில் ஆர்வமிருந்து அவர் வீட்டுக்கு அடிக்கடிச் சென்று பல இசைத் தட்டுகளைக் கேட்டு என் சங்கீதத்தை வளர்த்துக் கொண்டேன். இசைத் தட்டுகள் மூலம் வட நாட்டில் பிரபலமாயிருந்த பால கந்தர்வா (ஷ்யாம சுந்தர என்ற பால கந்தர்வா ரிக்கார்டைப் பாடிக் காட்டுகிறார்), அப்துல் கரீம் கான் போன்றோரின் இசையைக் கேட்டு, கேட்டவற்றை அப்படியே பாடவும் பழகிக் கொண்டேன்.

எனக்கு இயற்கையாகவே ஸ்வர ஞானம் அமைந்ததால், கிராமஃபோன் ரிக்கார்டில் கேட்ட ஒவ்வொரு சங்கதியையும் ஸ்வரப்படுத்தி எழுதிக் கொள்வேன். எந்த ஒரு கச்சேரிக்குச் சென்றாலும், கேட்பவற்றை விவரமாக குறிப்பெடுத்துக் கொள்வேன். கேட்டவற்றில் உள்ள நல்ல விஷயங்களை எல்லாம் குறித்துக் கொண்டு, அவற்றை என் இசையில் சேர்த்துக் கொண்டேன். நான் கேட்டதில் நல்லதையும் அல்லதையும் சீர் துக்கிப் பார்க்கும் ஆற்றல் எனக்கு இறைவன் கொடுத்த வரம். சரியானது என்று எனக்குத் தோன்றியதை நான் பாடுவதற்கு ஒரு போதும் திணறியதில்லை. கேட்டதை உடனே கிரஹிக்கும் திறனும், கிரஹித்ததை உடனே பாடக் கூடிய ஆற்றலும் எனக்கு இயற்கையிலேயே அமைந்திருந்தன.

Read Full Post »