Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for நவம்பர், 2009

December Music Festival – A curtain raiser

தமிழிசை தழைக்க

இந்த வருட சங்கீத சீஸன் கூப்பிடு தூரத்தில் இருக்கிறது. டிசம்பர் 19 முதல் 27 வரை சங்கீதத்தில் மூழ்க நான் தயாராகிவிட்டேன். ஒவ்வொரு வருடமும் சங்கீத விழாவின் போது கச்சேரிக்கு கூட்டம் வருகிறதோ இல்லையோ, இணையத்தில் தமிழிசை பற்றிய சர்ச்சைக்கு கூட்டம் நிறைய கூடுவதுண்டு. இதைப் பற்றி இரண்டு வருடங்களுக்கு முன் எழுதிய பதிவு இன்றும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.

மாதங்களில் சிறந்த மார்கழி என்றதும் மனதில் தோன்றும் எண்ணங்களுள் ஒன்று ‘இசை விழா’வைப் பற்றியதாக நிச்சயம் இருக்கும். உலகின் எந்த இடத்திலும் காண முடியாத படி, சென்னையில் ஐந்து கி.மீ பரப்பளவுக்குள், ஒரே நாளில் கிட்டத்தட்ட நூறு இடங்களில் இனிய இசை ஒலிப்பதை எண்ணி நாம் அனைவரும் பெருமைப் பட்டுக் கொள்ளலாம். வருடா வருடம் ஒலிக்கும் இசையைப் போலவே, வருடம் தவறாமல் டிசம்பர் மாதங்களில் நம் காதுகளில், தமிழிசையின் துயர் நிலையைப் பற்றிய செய்திகளும், தமிழ்ப் பாடல்கள் கச்சேரிகளில் அதிகம் ஒலிக்க வேண்டி கோரிக்கைகளும், ஒலிக்கத் தவறுவதே இல்லை.

இந்த வருடமும் ஆனந்த விகடன், குங்குமம் போன்ற பத்திரிக்கைகளின் தலையங்கங்கள் தமிழ் இசை வளர்ச்சியின் தேவையை வலியுறுத்தின. இவற்றைப் படிக்கும் போது, தமிழ்ப் பாடல்களின் வளர்ச்சி வெறும் இசைக் கலைஞர்களின் கையில் மட்டுமே இருப்பது போலவும், இசை ரசிகர்களுக்கோ, பத்திரிக்கைத் துறைக்கோ எந்தவிதப் பங்கும் இருக்க முடியாது என்பது போலவும் தோன்றுகிறது.

முதலில், உண்மை என்ன? தமிழ்ப் பாடல்களின் நிலை என்ன? அவை பாடப்படுவதில்லையா? இந்த மார்கழியில் கிட்டத்தட்ட முப்பது கச்சேரிகள் கேட்ட நிலையில், தமிழ்ப் பாடல்கள் கணிசமான அளவு பாடப்படுகின்றன என்றே தோன்றுகிறது. இன்றைய நிலையில், முதன்மைப் பாடகர் என்று கருதக் கூடிய நிலையில் உள்ள சஞ்சய் சுப்ரமணியம், ஒரு பேட்டியில், “நான் என் கச்சேரிகளில் தமிழ்ப்பாடல் பாடாமல் இருக்கவே மாட்டேன்”, என்று கூறியுள்ளார். கூறியதோடு நில்லாமல், திருவருட்பா பாடல்களை மட்டும் வைத்துக்கொண்டு அவர் நிகழ்த்திய கச்சேரியை, உலகத் தமிழர்கள் அனைவரும் தொலைக்காட்சியில் கண்டு களித்திருப்பார்கள். அக்கச்சேரியைத் தவிர, அவரின் வேறு இரண்டு கச்சேரிகளை இந்த மார்கழியில் கேட்டேன். அவற்றுள் ஒன்றை ‘தமிழிசைக் கச்சேரியாகவும்’, மற்றொன்றில் கணிசமான அளவு தமிழ்ப் பாடல்களுடனும் பாடினார். டி.என்.சேஷகோபாலன் தமிழ்ப் பாடலே இல்லாது பாடிய கச்சேரிக்கு கணிசமான கூட்டமும், திய்வ பிரபந்தப் பாடல்களை மட்டும் வைத்துப் பாடிய கச்சேரியில் பத்து பேர் கூட இல்லாத நிலையும் கண்கூடாகக் கண்டேன். தெளிவான உச்சரிப்பும், நெஞ்சைத் தொடும் உருக்கமும் நிறைந்த விஜய் சிவவவின் கச்சேரியில் பிரதான ராகமாக சங்கராபரணத்தைப் பாடி, பலர் அரைத்த மாவைத் திரும்பி அரைக்காமல் ‘தூக்கிய திருவடி’ என்று தமிழில் பாடிப் பரவசப்படுத்தினார். இந்த ஆண்டும் தமிழிசைச் சங்கத்தில், முதன்மை ஸ்தானத்தில் இருக்கும் அனைத்துப் பாடகர்களும் தமிழ்ப் பாடல்களைக் கொண்டு கச்சேரிகள் செய்தனர். தமிழிசைச் சங்கத்தைத் தவிர, கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸிலும் தமிழிசை விழா நடந்தது. அவ்விழாவிலும், பிரபல பாடகர்கள் பலர் தமிழ்ப் பாடல்களை மட்டும் பாடி நிறைவான கச்சேரிகள் செய்தனர்.

இவற்றை நோக்கும் போது,

1. தமிழில் நல்ல பாடல்கள் உள்ளன!
2. தமிழ்ப் பாடல்கள் ஏனோ தானோ என்று துக்கடாவாகப் பாடும் நிலையில் நலிந்து காணப்படுவதில்லை!
3. நிறைவான கச்சேரிகள் பல செய்யக் கூடிய நிலையில் நிறைய பாடல்கள் உள்ளன!
4. அவை பாடகர்களிடையே புழக்கத்திலும் உள்ளன!

என்பவை தெளிவாகின்றன. வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் முழுநேரத் தமிழ்க் கச்சேரி செய்ய முதன்மைப் பாடகர்கள் அனைவரும் தயாராக இருக்கும் பட்சத்தில், தமிழிசையை வளர்க்கும் பணியை யார் செய்வதில்லை? பாடகர்களா? அல்லது தமிழ்ப் பாடல்கள் ஒலிக்க நிறைய மேடைகள் ஏற்படுத்திக் கொடுக்காதவர்களா?

தமிழிசைக் கச்சேரிகளை நடத்திய இடங்களை மேலே குறிப்பிட்டோம். அவை தவிர, எந்த மொழியில் பாடினாலும் ஏற்கக் கூடிய சபைகள் பலவிலும் தமிழ்ப் பாடல்கள் பல ஒலித்ததைக் கேட்டவர்கள் அறிவார்கள். ‘ஆசாரம் என்ற பெயரில் பல கட்டுப்பெட்டித்தனங்களைச் சுமக்கும் இடம்’ என்று பலரால் வர்ணிக்கப்படும் இடமான ம்யூசிக் அகாடமியில், நான் கேட்ட கச்சேரிகளில் பல தமிழ்ப்பாடல்கள் ஒலித்தன. சிக்கல் குருசரண் என்ற இளைஞர் தனது கச்சேரியை, ஓர் அரிய (தமிழ்) வர்ணத்தில் தொடங்கினார். வளர்ந்து வரும் கலைஞரான ஸ்வர்ண ரேதஸ், தனது கச்சேரியின் முதல் பிரதான உருப்படியை ‘சற்றே விலகி இரும் பிள்ளாய்’ என்று தமிழில் பாடினார். அதற்காக, அவர்களுக்குத் தனியாக ஏதேனும் பாராட்டு கிடைத்ததா? குறைந்த பட்சம், பத்திரிகை விமர்சனங்களாவது, இவ்விஷயங்களைக் குறிப்பிட்டு, உற்சாகப்படுத்தினவா? உண்மையில், அந்த அகாடமி கூட்டத்தில், சீன மொழியில் பாடினாலும், தமிழில் பாடினாலும் பெரிய வித்தியாசம் ஒன்றும் ஏற்படாது என்றே தோன்றுகிறது.

மொழியையும் தாண்டி இசையை ரசிக்கும் கூட்டம் ஒன்று இருக்கிறது. அக்கூட்டமே இன்று சபைகளை நிரப்புகிறது. அவர்களுக்கு ‘கத்தன வாரிகி’ பாடினாலும் ஒன்றுதான், ‘காண வேண்டாமோ! இரு கண் இருக்கும் போதே விண்ணுயர் கோபுரம்’ என்று தமிழ்த் தேனில் குளிப்பாட்டினாலும் ஒன்றுதான். அந்தக் கூட்டமே ம்யூசிக் அகாடமி கச்சேரிகளுக்கும் வருகிறது, தமிழிசைக் கச்சேரிகளுக்கும் வருகிறது. வருடா வருடம் நம் காதுகளில் விழும் புலம்பல்கள் உண்மையெனில், ம்யூசிக் அகாடமி கூட்டத்தை விட, அண்ணா நகரில் நடைபெறும் தமிழிசைக் கச்சேரிகளுக்கு, கணிசமான அளவில் கூட்டம் கூட வேண்டாமோ? அல்லது, தமிழில் பாட வேண்டி தலையங்கங்கள் எழுதும் பத்திரிக்கைகள்தான், தமிழில் பாடுபவர்களுக்காக தனிப்பக்கங்கள் ஒதுக்கியிருக்க வேண்டாமோ? ஒரு பிரபல பத்திரிகையில் வந்த இசை விமர்சனம், பாடகர் ஒரு தமிழ்ப் பாடலைத் தவறாகப் பாடியதாகச் சாடியது. அப்பாடகர் புத்தகத்திலிருந்து நகல் எடுத்து அனுப்பி, தான் பாடியது சரி என்று நிலைநாட்டிய பின்னும், “பாடகர் நகல் அனுப்பியிருந்தார். இருப்பினும் அந்தக் காலத்தில் நான் கேட்டது வேறு மாதிரி இருந்தது.”, என்ற விமர்சகரின் சப்பைக்கட்டே பத்திரிக்கையில் வெளியாகியிருந்தது. இதே பாடகர் புரியாத பாஷையில் பாடியிருந்தால் இந்தப் பிரச்னை எழுந்திருக்காது என்ற நிலையில், பாடகர் அடுத்த கச்சேரியில் தமிழில் பாட யோசிப்பார்தானே?

கர்நாடக இசைத்துறையும் ஒரு தொழிலே! அங்கு பாடுபவர்களும், பொருள் ஈட்டி, நல்ல முறையில் வாழ்க்கை நடத்த வேண்டியே பாடுகிறார்கள். மென்பொருள் விற்பன்னரைப் போல, பங்குச் சந்தை நிபுணரைப் போல, கர்நாடக இசைப் பாடகரும் ஒரு professional-தான். அப்படிப்பட்ட நிலையில், எவையெல்லாம் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறதோ, எவையெல்லாம் கிடைப்பதற்குச் சுலபமாக உள்ளதோ, அவற்றை வைத்துத் தனது கச்சேரியை அமைத்துக் கொள்ளும் பாடகரை நாம் எப்படித் தவறு சொல்ல முடியும்? எந்த மொழிப் பாடல்கள் வேண்டுமானாலும் விற்கும் என்றால், சுலபமாகப் பாடம் செய்யக்கூடிய தெலுங்கு கீர்த்தனைகளையே பாடகர்கள் நாடுவதில் வியப்பொன்றுமில்லை. தமிழ்ப் பாடல்களுக்குத் தனிப்பட்ட வரவேற்பு கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டால், தமிழிசை பரவுவதை யாராலும் தடுக்க முடியாது. இந்த மார்கழியில், மூன்று கச்சேரிகளில், கச்சேரிக்கு முன் பாடகர்களைச் சந்தித்து எங்களுக்குப் பிடித்தமான தமிழ்ப் பாடல்களைப் பாடுமாறு வேண்டினேன். அம்மூன்று பாடகர்களுமே என் கோரிக்கைக்கு இணங்கினர்.

தமிழிசையில் உண்மை நாட்டம் உள்ளவர்கள் கச்சேரிகளுக்கு வர வேண்டும். தயங்காமல் தங்கள் விருப்பத்தைப் பாடகருக்குத் தெரியப்படுத்த வேண்டும். தமிழிசைக் கச்சேரிகள் நிகழும் இடங்களில் கூட்டம் குவிய வேண்டும். கச்சேரி நிகழ்த்தும் சங்கங்களுக்கு லாபம் பெருக வேண்டும். அச்சபைகளின் வளர்ச்சி, மற்ற சபைகளை அவ்வழிக்கு இட்டுச் செல்ல வேண்டும். பத்திரிக்கைகள், வருடம் ஒரு முறை நிகழ்த்தும் திவசம் போல, ‘ஒரு தலையங்கம் எழுதினால் எங்கள் கடன் தீர்ந்தது’, என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். தமிழ்ப் பாடல்கள் பாடுபவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். அந்த உற்சாகம் பாடகர்களைப் பல புதிய பாடல்களைத் தேட நிச்சயம் செலுத்தும். அப்போது, புதைந்து கிடக்கும் பல மாணிக்கங்கள் வெளிக்கொணரப்படும்.

சீஸன் முடிந்தவுடன் புலம்புவதை விட, சீஸனுக்கு முன்னால் பதிவிடுவது சரியென்று தோன்றியது. தமிழில் பாடல் கேட்க விழைவோர் இம்முறையாவது அரங்கத்துக்கு வருவீர்களா?

Read Full Post »

திரு. எஸ்.ராஜம் ஒரு பல் துறை வல்லுனர். அற்புதமான பாடகர், சிறந்த ஓவியர், அட்டகாசமான ஃபோட்டோகிராபர். இதைத் தவிர இன்று உயிரோடு இருக்கும் தமிழ்த் திரைப்பட கதாநாயகர்களுள் மூத்தவர் (வயது 90). இதில் ஆச்சரியம் என்னவெனில், இவரை ஓவியராய் அறிந்தவர் பலருக்கு இவரின் சங்கீத ஆளுமை தெரியாது. சங்கீதத்தில் பரிச்சயம் உள்ளவர்கள், பாடகரான எஸ்.ராஜம்தான் ஓவியமும் தீட்டுகிறார் என்று அறிந்திருப்பதில்லை. இவ்விரண்டு துறைகளிலும், தனித் தனியாக அவர் செய்திருக்கும் சாதனைகள் பல இருப்பினும், இவரின் இரு துறை ஆளுமைகளும் இணைந்து உருவாகியுள்ள படைப்புகள் தனிச் சிறப்பு வாய்ந்தவை.

இவர் வரைந்திருக்கும் சங்கீத மும்மூர்த்திகள் படம் இல்லாத கர்நாடக இசைக் கலைஞர் இல்லமோ, இசை ரசிகர் வீடோ கிடையவே கிடையாது என்றே கூறலாம். பிரபலமான இந்த மூவரைத் தவிர சீர்காழி மூவர், கோபால கிLetter pad a (1)ருஷ்ண பாரதி, புரந்தரர் என்று எத்தனையோ வாக்கேயக்காரர்களை வண்ணங்களால் மிளிர வைத்துள்ளார். ஆர்.டி.சாரி என்பவருக்காக பல மாதங்கள் பாடு பட்டு, மிகப் பிரம்மாண்டமான அளவில், அறுபதுக்கும் மேற்பட்ட வாக்கேயக்காரர்களைத் தீட்டியிருப்பது இவரின் சாதனைகளின் உச்சகளுள் ஒன்று. இது தவிர, எத்தனையோ பாடல்களை ஓவியமாய் தீட்டியிருக்கிறார். கல்கி, கலைமகள் தீபாவளி மலர்களில் இந்த வகை ஓவியங்கள் பல வெளியாகியுள்ளன. ராஜத்தின் water colour fresco ஓவியங்கள் போலவே அவருடைய line-drawing-ம் நளினமானவை. இந்த வகை ஓவியங்கள் கொண்டு அவர் உருவாக்கியிருக்கும் musical letter pads தனித்துவம் வாய்ந்த படைப்பாகும்.
Letter pad b
நூறு பக்கங்கள் கொண்ட இந்த பேட்-களில் ஒவ்வொரு பக்கத்திலும் பெரும்பாலும் ஒரு கிருதியைப் பற்றிய சிறு விளக்கமும், அதனைச் சித்தரிக்கும் கோட்டோவியமும் இடம் பெற்றுள்ளன. தியாகராஜர், முத்துஸ்வாமி தீட்சிதர், ஸ்யாமா சாஸ்திரி மற்றும் புரந்தரதாஸரின் கிருதிகளே இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. ஏன், தமிழ்ப் பாடல்களை விட்டு விட்டீர்கள் என்று கேட்டதற்கு, “நான் தமிழுக்கு எதிரி இல்லை. கோபால கிருஷ்ண பாரதியின் பாடல்களை நான் மற்ற வாக்கேயக்காரர்களின் பாடல்களை விட உயர்வாக நினைக்கிறேன். இந்தத் தொகுப்பின் நோக்கம் தெரியாதவற்றை எடுத்துச் சொல்வதுதான். தெரிந்த பாஷையான தமிழில் இருக்கும் பாடல்களை விளக்குவதை விட, தெரியாத பாஷைகளில் உள்ள பாடல்களை தீட்டினால், பாடலோடு சேர்த்து அதன் பொருளையும் பார்ப்பவர்கள் உணர்ந்து இன்னும் அதிகமாக ரசிக்க முடியும், என்பதால்தான் வேற்று மொழிப் பாடல்களை விளக்கியுள்ளேன்.”, என்றார். அவர் கூற்றிலிருக்கும் உண்மையை நான் ‘வினநாசகொனி’ பாடலைச் சித்தரிக்கும் ஓவியத்தைக் கண்டபோது உணர்ந்தேன். அந்தப் பாடல் ப்ரதாபவராளி ராகத்தில் அமைந்தது என்று நான் அறிந்ததே. மதுரை மணி பிரபலப்படுத்திய இந்தப் பாடலில், ராமரும் சீதையும் பல்லாங்குழி ஆடும் காட்சி வர்ணிக்கப்பட்டுள்ளது என்ற விஷயம் ராஜத்தின் ஓவியத்தைப் பார்த்த பின்புதான் எனக்குத் தெரிய வந்தது. அதுவே என்னை அந்தப் பாடலை இன்னும் ஆழமாய் ரசிக்க உதவியது.
Rajam
‘ஸ்ரீ கணபதி’ என்ற தியாகராஜரின் சௌராஷ்டிரப் பாடல் கூறும் கணபதியாரின் எழில் நடனத்தைக் காட்டும் ஓவியத்துடன் லெட்டர் பேட் தொடங்குகிறது. தியாகராஜரின் மகளின் கல்யாணத்தின் போது அவரின் சிஷ்யர் தலையில் ராமர் படத்தை வைத்து எடுத்து வந்ததைக் கண்ட போது, ராமரே நடந்து வந்தது போல உணர்ந்து, ‘நன்னு பாலிம்ப’ கிருதியை தியாகராஜர் பாடினார் என்று குறிப்புகள் கிடைக்கின்றன. இந்தக் காட்சி எழிலுற தீட்டப்பட்டுள்ளது. இதே போல தீட்சிதரின் வாழ்வில் நடந்த சம்பவங்களைச் சித்தரிக்கும், ‘ஸ்ரீ நாதாதி குருகுஹோ’, ‘ஆனந்தாம்ருதகர்ஷிணி’ ‘மீனாட்சி மேமுதம்’, போன்ற கிருதிகளும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. தீட்சிதர் அவரது கிருதிகளில் 27 வகையான கணபதிகளைக் குறிக்கிறார். இந்தச் செய்தி ஒரு ஓவியத்திலும், தீட்சிதர் குறிப்பிட்டிருக்கும் கணபதிகள் தனித் தனி ஓவியங்களிலும் நேர்த்தியாக இடம் பெற்றுள்ளன. ராஜம் வரைந்திருக்கும் நவகிரக ஓவியங்கள் அவருக்கு ‘நவகிரக ராஜம்’ என்றே பெயர் வாங்கிக் கொடுத்துள்ளன. இந்தத் தொகுப்பிலும் நவகிரகங்கள், தீட்சிதர் பாடியிருக்கும் நவகிரக கிருதிகளைச் சித்தரிக்கின்றன.

இந்தத் தொகுப்பில் என்னை வெகுவாகக் கவர்ந்த ஓவியம் ‘ஸ்ரீ பார்த்தசாரதி’ கிருதியைக் குறிக்கும் ஓவியம். தோள்களில் புரளும் முடி, தோளில் காண்டீபம், காலுக்கருகில் அம்புகள், கை வளை, தோள் வளை, சரப்பளி, அலங்காரமான தேர் என்று அமர்க்களமாய் இருக்கும் அர்ஜுனன் மண்டியிட்ட படி உபதேசம் கேட்க, அவனுக்கு கீதையைச் சொல்லும் கண்ணனோ தேர் பாகனாய் அமர்ந்திருக்கிறான். கண்ணனின் ஒரு கை கடிவாளத்தைப் பற்ற மறு கை அபய முத்திரையில் உள்ளது. அழகிய கிரீடம், அதன் மேல் மிளிரும் மயில் பீலி, செவிகளில் குண்டலங்கள் என்றிருக்கும் கண்ணனின் சற்றே திரும்பிய அமர்வு நிலை வெகு யதார்த்தமாய் அமைந்துள்ளது. இருவரும் அணிந்திருக்கும் ஆடைகள், அவற்றில் உள்ள வேலைப்பாடுகள், அணியும் போது ஏற்படும் மடிப்பு என்று நுட்பமான விஷயங்கள், தீர்க்கமான கோடுகள் மூலம் காட்டப்பட்டுள்ளன.

கலைக் களஞ்சியமான இந்தத் தொகுப்பை எல்லோரும் சுலபமாய் பெற வேண்டுமென்பது ஓவியர் ராஜத்தின் எண்ணம் என்பதால், இதன் விலை முப்பது ரூபாய் மட்டுமே. இசையில் நாட்டம் உள்ளவர்களுக்கு ‘தேசிய தோடி’, ‘குமுதக்ரியா’, ‘பூர்ண லலிதா’, ‘மனோஹரி’, போன்ற அரிய ராகங்களில் அமைந்துள்ள கிருதிகளுக்குக் கிடைக்கும் நல்ல அறிமுகமாக இந்தத் தொகுப்பு விளங்கக் கூடும். கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளுக்கு rough note book ஆக வாங்கிக் கொடுக்கலாம். என் அலுவலகத்தில் நடக்கும் சில மீட்டிங்குகளுக்கு லெட்டர் பேட் வைப்பது வழக்கம். அந்த சமயங்களில் லெட்டர் பேட்டாக இந்தத் தொகுப்பை வைக்கலாமே என்று சொல்லலாம் என்று இருக்கிறேன். லாண்ட்ரி லிஸ்ட், மளிகை சாமான் போன்ற சமாசாரங்களுக்குக் கூட இதைப் பயன் படுத்தலாம் என்று இருக்கிறேன்.

தொகுப்பு கிடைக்கும் இடம்:
ஓவியர் எஸ்.ராஜம்
41, நடுத் தெரு,
மயிலாப்பூர்
சென்னை 600004
ramchi@gmail.com என்ற எனது முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியும் இந்தத் தொகுப்பைப் பெறலாம்.

Read Full Post »