அன்புள்ள ஜானித் தாத்தா,
உங்களைப் பற்றி கடந்த சில நாட்களில் நிறைய கட்டுரைகள், இணையப் பதிவுகள், நினைவலைகள் வெளிவந்துள்ளன. ஒவ்வொன்றும் நீங்கள் இல்லாததன் வெறுமையை ஒருபக்கம் அதிகரித்தாலும் இன்னொரு பக்கம் இத்தகைய மனிதரிடம் நெருங்கிப் பழக முடிந்ததே என்ற உவகையும் பெருகியது.

உங்களை முதன் முதலில் உங்கள் வீட்டில் 2005-ல் நண்பர்கள் சிலருடன் சந்தித்தது இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது. உண்மையை அறிதலின் பேரில் இருந்த காதலும், அயராத உழைப்பும், சிரிக்கும் கண்களும், நமுட்டுச் சிரிப்பும் நன்றாய் நினைவில் இருக்கிறது. கூடத்திலிருந்த புத்தக அலமாரியில் இருந்த கிருதிமணிமாலையின் முதல்பதிப்பை நான் பார்க்க விரும்பினேன். அதனை எடுத்து முதல் பக்கத்தை நீவியபடி “கௌரி அம்மாவின் புத்தகம்”, என்று நீங்கள் சொன்னபோது வழிந்தோடிய காதலில் நானல்லவா கரைந்து போனேன்.
கௌரி அம்மாவை சந்திக்கும் பேறை நான் பெறவில்லை. ஆனால் உங்கள் வீட்டுக்கு வந்த போதெல்லாம் அவரைப் பற்றிய நினைவலைகளில் நீங்கள் மூழ்குவீர்கள். காலப்போக்கில் எனக்கென்னவோ அவர் நன்கு பரிச்சயமானவர் என்ற மாயத்தோற்றம் ஏற்பட்டுவிட்டது.
பின்னாளில் ஐராவதிக்காக உங்களை நேர்காணல் எடுத்தபோதும் கௌரியம்மாவைப் பற்றி எவ்வளவு உணர்ச்சிபூர்வமாய் பேசினீர்கள். நான் எழுதிய அந்தப் பகுதிகளை நீக்கச் சொன்னதில் எனக்கு இன்றுவரை உங்கள் மேல் கோபம்தான். உங்கள் காதல் ஊருக்குத் தெரிய வேண்டிய காதலில்லையா? எனக்குத் தெரிந்த அத்தனையும் சொல்லாவிட்டாலும் சிலவற்றையாவது சொல்லத்தான் போகிறேன். உங்கள் பேரனாக எனக்கு அந்த உரிமையுண்டு – உங்களுக்கு சம்மதமில்லாத போதும்.
ஐ.ஏ.எஸ்-ஐ குறி வைத்துதான் சட்டம் பயின்றீர்களா என்று நான் கேட்டதற்கு, சிரித்தபடி இல்லையென்றீர்கள்.
“வாயிருந்தா வக்கீலா பொழச்சுக்கலாம்-னுதான் சட்டம் படிச்சேன். பார்-க்கு போனாதான் வக்கீலா முன்னுக்கு வர எவ்வளவு வருடங்கள் ஆகும்-னு புரிஞ்சுது. அப்போ எனக்கு 23 வயசு. என் உறவுக்காரப் பெண் – கௌரி – அவளோட காதல். எங்க வீட்டுல எங்க கல்யாணத்தை யாரும் ஒத்துக்கல. எதிர்த்துக் கல்யாணம் பண்ணிண்டோம். வீட்டை விட்டு வெளிய வந்தாச்சு. வக்கீல் தொழிலை நம்பி குடும்பம் நடத்தற நிலைமையில்லை.”
“அதனால ஐ.ஏ.எஸ் பரிட்சை எழுதினீங்களா?”
“ஆமாம். அப்பல்லாம் 23 வயசு வரைக்கும்தான் ஐ.ஏ.எஸ் பரிட்சை எழுத முடியும். எனக்கு இருந்த கடைசி வாய்ப்பு அதுதான். அந்தப் பரிட்சையில முதல் ஆளா தேறினேன்.”, என்று சொன்ன போது கொஞ்சம் வெட்கத்தோடு வார்த்தைகளை நிறுத்திக்கொண்டீர்களே.
காமராஜர் ஆட்சியில் அமராவதி அணை திறப்பில் டி.டி.கிருஷ்ணமாச்சாரி வந்து உங்களை தில்லிக்கு அழைத்துச் சென்றதால் வரலாற்றின் பக்கம் சென்றேன் என்றீர்கள். உண்மையில் திருப்புமுனை அதுவல்ல. உங்கள் காதல்தான்!
கௌரி அம்மாவின் காதல் இல்லையென்றால் நீங்கள் ஐ.ஏ.எஸ் இல்லை! உங்கள் வாழ்க்கை இந்தப் பாதையில் போயிருக்காதுதானே?
உங்கள் வீட்டில் மட்டுமே கிடைக்கக்கூடிய, கௌரி அம்மா வைத்த அந்த ஆரஞ்சு மரத்தில் வந்த பழங்களிலிருந்து சாறை நீங்கள் ஒவ்வொரு முறை அளிக்கும் போது உங்கள் முகம் மலர்ந்து ஜொலிக்கும். உங்களை எதுவெதற்கெல்லாமோ அறிஞர்கள் நினைவில்வைத்துக் கொள்வார்கள் தாத்தா. எனக்கு உங்களைப்பற்றி முதலில் நினைவுக்கு வருவது உங்கள் காதல்தான்.
உங்கள் இருவரின் விளையாட்டில் நீங்கள் இருவருமாய் சேர்ந்து நாட்டுக்கு அள்ளிக் கொடுத்ததைச் சொன்னீர்களே. அந்த நிகழ்வு அலையடிக்கிறது.
1965-ல் பாகிஸ்தானுடன் போர் நடந்து கொண்டிருந்த போது லால் பகதூர் சாஸ்திரி கேட்டுக் கொண்டதன் பேரில் வீட்டிலிருந்த தங்கத்தையெல்லாம் நிதியாய் கொடுக்க நீங்கள் முடிவெடுத்தீர்கள். கௌரி அம்மா தன் நகையையெல்லாம் கொண்டுவந்து உங்களிடம் கொடுத்த போது, “எல்லாம் குடுத்தியே, உன் தாலியில் இருக்கும் தங்கத்தைக் கொடுப்பியா”, என்று சீண்டியதை என் முன் வாழ்ந்து காண்பித்தீர்கள்.

கௌரி அம்மாவும் லேசில்விடுவாரா என்ன?, “இத்தனை வருஷங்களா ஆயிரக்கணக்கில் நாணயங்கள் சேர்த்துவெச்சு இருக்கீங்களே. அதுல எவ்வளவோ தங்க நாணயங்கள் இருக்கும். அதையெல்லாம் நீங்க நாட்டுக்கு கொடுப்பீங்கன்னா நான் தாலியில் இருக்கும் தங்கத்தைக் கொடுப்பேன்”, என்றார்.
அடுத்த நாளே, தேசிய அருங்காட்சியகத்தில் தங்க நாணயங்களை ஒப்படைத்து அதன் மதிப்புக்கு தங்கக் கட்டிகளைப் பெற்று, மற்ற நகைகள் – தாலித் தங்கமும் சேர்த்துத்தான் – பிரதமரிடம் தம்பதியாய் சென்று ஒப்படைத்தீர்கள். நல்லகாலம் அன்று பிரதமருடன் கௌரி அம்மா இருக்கும் படத்தை பத்திரப்படுத்தி வைத்திருந்தீர்கள். ஐராவதியில் வெளியிட்டு நாங்கள் மகிழ்ந்தோம்.
நான் நீங்கள் சாதித்த துறைகளில் மாணவன் கூட இல்லை. உங்களைச் சந்தித்த காலங்களில் ஆர்வலனாக இருந்தேன் என்று வேண்டுமானால் சொல்லலாம். இருந்தாலும் ஏன் என் மேல் உங்களுக்கு இத்தனை பிரியம்? ஒருவரை மதிக்க வேண்டுமானால் அதற்கு புலமைத் தேவைப்படலாம். அன்பிற்கு எதற்கு அளவுகோல்? என் பேறு நீங்கள் என்னைச் சந்திக்கும் போதெல்லாம் பேரன் என்று வாயார அழைத்துக் கட்டிக்கொண்டீர்கள்.
உங்களைச் சந்தித்த சில நாட்களில் உங்களுக்கு ஒரு கடிதமெழுதினேன். சிந்து சமவெளி முருகன் பேயுருவானவன் என்ற கருத்து அவ்வளவு ஏற்புடையதாக என் சிற்றறிவுக்குப்படாததைப் பற்றி பல சங்கப்பாடல்களைக் குறிப்பிட்டு உங்களுக்கு ஒரு நெடிய கடிதம் எழுதினேன். அதற்கு பொறுமையாய் பதிலளித்திருந்தீர்கள். பின்னாளில் உங்களைச் சந்தித்த போதும் என் ஆர்வத்தைப் பாராட்டினீர்களே தவிர நான் உங்கள் முடிவுகளைப் பற்றி கேள்வியெழுப்பியதைப் பொருட்படுத்தவேயில்லை.
2003-ல் இருந்து 2010- வரை வாராவாரம் ஒரு குழுவாக ஏதோவொரு இடத்துக்குச் சென்று வரலாறைக் கற்றுக் கொண்டிருந்தோம். அபப்டியொரு பயணத்தில்தான் டாக்டர் கலைக்கோவன் உங்களுக்குவொரு பணிப்பாராட்டு மலரைக் கொண்டு வரவேண்டும் என்று சொன்னார். வேறு துறையில் நல்ல வேலையில் இருந்த எங்களால் ஆளுக்குக் கொஞ்சம் பணம் ஒதுக்க முடிந்தது. அந்தப் பணமே இந்தத் தொகுதிக்கு போதுமானதாய் இருந்தது.
பணம் கொடுத்துவிடலாம். நூலை யார் தொகுப்பது.
கலைக்கோவன் சொன்னார், ”எனக்கு அவருடன் நல்ல பழக்கம் உண்டே தவிர, இந்தத் துறையில் அவருடன் சேர்ந்து பணியாற்றவர்கள் என்று பார்த்தால் அது தொல்லியல் கழகத்தில் உள்ள அறிஞர்கள்தான். அவர்கள் டாக்டர் சுப்பராயுலுவுக்கு செய்தது போல ஐராவதம் மகாதேவனுக்கும் செய்வதுதான் சரியாக இருக்கும்”.
அந்த சமயத்தில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைகழகத்தில் ஒரு கருத்தரங்கம் நடந்தது. அதில் நீங்களும் பங்கேற்றீர்கல். அந்த சமயத்தில்தான் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி பற்றிய செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. ஒரு பானையின் உட்பறத்தில் தமிழ் பிராமி எழுத்துகள் இருப்பதாகவும். அந்தப் பானையின் காலம் கி.மி 5-ம் நூற்றாண்டு என்றும் அப்போது தொல்லியல் அளவீட்டுத் துறையில் தலைமைப் பொறுப்பில் இருந்த திரு. சத்தியமூர்த்தியின் பேட்டிகள் சில வெளிவந்திருந்தன.
அந்தப் பானையை ‘தமிழ் பிராமியின் தந்தை’ என விளங்கிய உங்களைப் பார்க்கவே விடவில்லை என்கிற செய்தி என் போன்ற ஆர்வலர்களை கொதிப்புறச் செய்தது.
தஞ்சாவூர் கருத்தரங்கம் நடந்த போது திருமதி.சத்யபாமா தொல்லியல் அளவீட்டுத் துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார். அவரும் அந்தக் கருததரங்கிற்கு சிறப்பு விருந்தினராய் வந்திருந்தார். உங்கள் கட்டுரையை வாசித்த பிறகு மதிய உணவு வேளையில் உங்களைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தேன், எதிரில் வந்த திருமதி.சத்தியபாமாவிடம் இருகரம் கூப்பி வணங்கியபடி, “எனக்கு அந்த பானையோட்டைக் காட்டக்கூடாதா?”, என்றீர்கள்.
“எப்ப வேணும்னாலும் வந்து பாருங்க. ஆனால் அதில் எந்த எழுத்தும் இல்லை”, என்றார்.
அசத்யத்தின் வலியுடன் கன்னத்தில் கையை வைத்தபடி சுற்றி ஒரு பார்வை பார்த்தீர்கள். அப்போதே இந்தத் துறையின் முடைநாற்றத்தை உணர்ந்திருக்க வேண்டும். உணராமல் உங்கள் பணிப்பாராட்டு மலருக்காக அறிஞர்களை அணுகினோம்.
”பணம் நாங்கள் தருகிறோம். எங்கள் பெயரே வரவேண்டாம். உங்கள் விருப்பம்போல் தொகுத்து வெளியுடுங்கள்”, என்றோம்.
அவர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதிப்பார்கள் என்றெண்ணினோம். அவர்களோ சாதாரணமாய், “அப்புறம் பார்க்கலாம்”, என்றனர். அவர்கள் பரவாயில்லை, உங்களைக் நேரில் கண்டபோது குழைந்த அறிஞர்களில் சிலர் நாங்கள் அணுகிய போது வெறுப்பைக் கக்கினர். சரி போகட்டும் பொறாமைபிடித்த ஜீவன்களையா உலகம் நினைவில் வைத்துக்கொள்ளப் போகிறது. உங்கள் பெயர் சொல்ல உங்கள் ஒரு புத்தகம் போதுமே. நாளாக நாளாகக் கிணற்றில் போட்ட கல்லாகவே அந்தப் பணிப்பாராட்டு மலர் இருந்து வந்தது.
2006-ல் இதை டாக்டர் கலைக்கோவனின் வழிகாட்டலிலேயே செய்துவிடுவது என்று முடிவெடுத்தோம். அதன்பின் சந்தித்த சிக்கல்களை எல்லாம் கமலக்கண்ணன் ஐராவதியின் வரலாறு என்று அப்போது விரிவாக பதிவு செய்துள்ளார்.
அந்த முடிவுதான், என்னை உங்களுக்கு நெருக்கமாக்கியது. ஐராவதி தயாரான போது பலமுறை உங்களை நறுமுகை அபார்ட்மெண்டில் சந்திக்க வைத்தது. அப்படிப்பட்ட ஒரு சந்திப்பில் அப்போது வெளியாகியிருந்த என் ஜி.என்.பி புத்தகத்தை உங்களுக்கு அளித்தேன்.
அடுத்த நாளே என்னையழைத்து வெகுநேரம் பேசினீர்கள். அது என் எழுத்தின் மேல் எழுந்த உவகையென்பதைவிட என் மேல் இருந்த பிரியத்தின் வெளிப்பாடு என்று நானறிவேன்.
அந்த நூலை உங்கள் நண்பரும் அப்போது ஸ்ருதி இதழின் ஆசிரியருமாக இருந்த கே.வி.ராமனாதனுக்கு பரிந்துரைந்ததாகவும், அவர் “வாட் நான்சென்ஸ்! ஜி.என்.பி-யைப் பார்க்காத ஒருத்தர் அவரைப் பற்றி எப்படி எழுதமுடியும்?”, என்று கேட்டதாகவும், அதற்கு நீங்கள், “உங்கப் பத்திரிக்கையில் தியாகராஜரைப் பற்றி எழுதறவங்க எல்லாம் அவரைப் பார்த்துப் பழகினவங்களா?”, என்று கேட்டதாகவும் கூறினீர்கள். உங்கள் பதிலை நினைத்தால் இப்போதுகூட அடக்கமுடியாமல் சிரிப்புவருகிறது.
உங்களை சந்தித்த நாட்களில் நீங்கள் சாதாரணமாய் சொல்வது என்னை புரண்டு புரண்டு சிரிக்க வைக்கும். உங்கள் வீட்டுக்கு மடல் கொண்டு வரும் தபால்காரர் ஆங்கிலத்தில் உள்ள பெயரை “ஈரவாதம்” என்று படிப்பதாகச் சொல்லிச் சிரித்தீர்கள். தினமணியில் வேலை நிறுத்தத்தில் அலுவலர்கள் ஈடுபட்ட போது ராம்நாத் கோயங்கா நான் வந்து சரிசெய்யவா என்று கேட்டதற்கு, ”You don’t need a watchdog if you are going to bark for it. Let me do my job”, என்று கூறியது பசுமையாய் நினைவிலிருக்கிறது.
உங்களுடன் கழித்த ஒவ்வொரு நாளும் தமிழில் ஏதோ ஒன்றை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். பழனி சுப்ரமண்ய பிள்ளை பற்றிய என் புத்தகத்தில் அவர் மாணாக்கர்களைப் பற்றி ஒரு பகுதி உண்டு. அதில் அவர்களின் மறைவை – மறைந்தார், மறைந்தார் என்று ஒரே வார்த்தையை மீண்டும் மீண்டும் உபயோகிக்க அலுத்துக் கொண்டு ஓரிடத்தில், “இயற்கை எய்தினார்”, என்று எழுதியிருந்தேன். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் தங்கள் சித்தாந்ததுக்குப் பொருத்தமாய் “இயற்கை எய்துதல்” என்கிற பதத்தை வகுத்துக் கொண்டதை விளக்கினீர்கள். ஒவ்வொரு வார்த்தையையும் எப்படி யோசித்து யோசித்து உபயோகிக்க வேண்டியிருக்கிறது என்று மலைத்தேன். மாறினேன் என்று சொல்வதற்கில்லை.
உங்களை சந்தித்த நாட்களில் இருந்தே உங்கள் உடல்நிலை முன்னும் பின்னுமாய்தான் இருந்துவந்தது. வெய்யில் நாட்களில் வியர்க்காத உடம்பென்பதால் அதிகம் அயர்ந்து போய்விடுவீர்கள். அத்தனையும் மீறி நீங்கள் உழைப்பதை காணொளியில் பதிவு செய்து வைக்காமல் போனோமே என்று இப்போது தோன்றுகிறது.
உங்கள் துறையென்று இல்லை, எந்தக் காரியம் எடுத்தாலும் அதற்கான முழு உழைப்பை நீங்கள் அளிப்பதை, வருடாந்திர உதவித் தொகை அளிக்க நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சியைக் கண்டவர்கள் அறிவார்கள்.
ஏழை மாணவர்களுக்கு ஐ.டி.ஐ-ல் படித்து தொழில் கற்கும் வகையில் உங்கள் டிரஸ்ட் மூலம் விண்ணப்பங்கள் கோரி, அதை ஒவ்வொன்றாய் பரிசீலித்து, மீண்டும் மீண்டும் சரிபார்த்து, சரியான ஆளுக்குப் போய் சேருமாறு பார்த்துக் கொள்ள உங்களையே கரைத்துக்கொள்வீர்கள். அதெல்லாம் உங்கள் தலைமுறைக்குத்தான் சரிவரும். இப்படியும் மனிதருண்டு என்று நான் பார்த்ததே என் அதிர்ஷ்டம்தான்.
என் ஆய்வுகளுக்காக ரோஜா முத்தையா நூலகத்தில் சில நாட்கள் கழித்ததுண்டு. அப்படியொரு நாளில் அங்கு நீங்கள் அமைத்த ‘இண்டஸ் ரிஸர்ச் செண்டர்’-க்கு வந்திருந்தீர்கள். நான் பழைய இதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்த போது நீங்கள் அறிஞர்களுடன் விவாதித்துக் கொண்டிருந்தீர்கள். நான் மதிய உணவை கையோடு எடுத்து வந்திருந்தேன். உங்களுக்கும் மற்ற அறிஞர்களுக்கும் மதிய உணவு வெளியில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்தது. நீங்கள் அவர்களையெல்லாம் உணவருந்தப் போகச் சொல்லிவிட்டு, உங்களுக்கு ஒரு அறையில் உணவை வரவழைத்து என்னை அந்த அறைக்குள் அழைத்தீர்கள். “வா சாப்பிடலாம்!”, என்றீர்கள்.
“உங்களுக்காக வந்தவர்களோடு சாப்பிடாமல் ஏன் இங்கு சாப்பிடுகிறீர்கள்?, என்றேன்.
“அவர்களோடுதான் காலையிலிருந்து இருக்கேன். சாய்ங்காலம்வரை இருக்கப் போகிறேன். உன் வேலையைக் கெடுக்காமல் உன்னோடு இப்போதுதான் இருக்க முடியும்.”, என்றீர்கள்
நான் கலங்கிப்போனேன் தாத்தா. உள்ளூரில் உங்களைத் தெரியுமோ தெரியாது. உலகத்துக்கு உங்களைத் தெரியும். நீங்கள் என் வேலை கெடாமல் என்னுடன் இருக்க வேண்டும் என்று நினைத்தீர்களா தாத்தா! இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது.
அன்றிலிருந்து நான் எப்போது அந்த நூலகத்துக்குச் சென்றாலும் தனி மரியாதைதான்.
உங்களை அடிக்கடிச் சந்தித்ததால் ‘சிந்து சமவெளி ஆய்வுகள்’ பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. அப்போது நீங்கள் 1970 வெளியிட்ட Concordance எங்கும் கிடைக்கவில்லை. உங்களிடமும் ஒரே பிரதிதான் இருந்தது. நான் கேட்டேன் என்பதற்காக எப்படியோ ஒரு பிரதியை எனக்காக வரவழைத்துக் கொடுத்தீர்கள். அது அறிமுக நூலன்று. அறிஞர்கள் உபயோகிக்க வேண்டிய தொகுப்பு நூல். அடுத்த முறை உங்களை சந்திக்கும் போது, “இதை நான் உபயோகிக்க பல வருடங்கள் ஆகும். அதுவரைக்கும் இந்தத் தடி புத்தகத்தை கொலுப்படியின் உச்சத்தில் கலசப்படியா வேணா வெக்கலாம்”, என்று விளையாட்டாகச் சொன்னேன்.
என் பாதை மாறிவிட்டது. அந்தப் புத்தகம் நிச்சயம் ஒரு நல்ல ஆராய்ச்சி மாணவனிடம் சென்று சேர ஆசிர்வதியுங்கள்.
செம்மொழி நிறுவனம் உங்கள் Early Tamil Epigraphy புத்தகத்தை மிக நேர்த்தியாய், ஒவ்வொரு கல்வெட்டையும் மிகத் துல்லியமாய் வண்ணப் பதிப்பில் பிரசுரித்தது. அந்தப் புத்தகம் வெளியாவதற்கு முன் நீங்கள் சரிபார்க்கும் போது பார்த்திருக்கிறேன். அது வெளியானதும் எனக்கொரு பிரதி தருவதாகச் சொன்னீர்கள். அது வெளியாகி எத்தனையோ நாட்கள் ஆகிவிட்டன. நீங்கள் நிச்சயம் எனக்கொரு படி எடுத்து வைத்திருப்பீர்கள். நான்தான் இன்னும் வாங்கிக் கொள்ளவில்லை.
என் குறைதான். நம் உறவு ஜென்மாதிஜென்மமாய்த் தொடர விட்ட குறை, தொட்ட குறையாய் ஏதேனும் இருக்க வேண்டுமல்லவா? அப்படி அந்தப் புத்தகம் இருந்துவிட்டுப் போகட்டும்.
போய் வாருங்கள் ஜானித் தாத்தா!
கௌரி அம்மாவைக் கேட்டதாகச் சொல்லுங்கள்.
உங்கள் அன்புப் பேரன்
லலிதாராம்
Read Full Post »