Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜூன், 2021

இன்று எழுத்தாளர் பா.ராகவன் தனது பேஸ்புக் பதிவில் மூக்குப்பொடியைப் பற்றி எழுதியிருந்தார். எனக்கு நான் பல ஆண்டுகளுக்கு முன்னால் மரத்தடிக்காக எழுதிய இந்தக் கட்டுரை நினைவுக்கு வந்தது. தூசிதட்டி இங்கு இடுகிறேன்.

ஆளை மயக்கச சொக்குப் பொடி போடுவது வழக்கம். ஆனால் சங்கீதத்தால் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை மயக்கியவர்களை ஆராய்ந்து பார்த்தால், அவர்களுக்குக் கைகொடுத்தது சொக்குப் பொடியல்ல, மூக்குப்பொடி என்று தெரிய வரும். மும்மூர்த்திகளுக்கும் மூக்குப் பொடிக்கும் சம்பந்தம் உண்டா என்று நான் அறியேன். மும்மூர்த்திகளுக்குப் பிறகு வாழ்ந்த இசை வல்லுனர்களைப் பற்றி நமக்குக் கிடைக்கும் தகவலின்படி, மானோம்புச்சாவடி வெங்கட சுப்பைய்யரே மூக்குப் பொடிக்கும் கர்நாடக இசைக்கும் உள்ள உன்னத பந்தத்தை தொடங்கி வைத்த மஹானுபாவர்.

மானோம்புச்சாவடி வெங்கட சுப்பைய்யர் என்றதும் முதலின் நினைவுக்கு வருவது அவரது குருவான ‘தியாகராஜர்’, அதன்பின் நினைவுக்கு வருவது, அவரது இரு பிரதான சிஷ்யர்களான மஹாவைத்தியநாத சிவனும் பட்டணம் சுப்ரமண்ய ஐயரும். மஹா வைத்தியநாத ஐயர் மூக்குப்பொடி போட்டதற்கான தகவல் ஏதும் இல்லாததால், அவரை உடைப்பில் தூக்கி போட்டுவிட்டு, பட்டணம் சுப்ரமண்ய ஐயரைப் பார்ப்போம். குருவிடமிருந்த கற்ற அவரது சங்கீதம் எப்படி உலகப் பிரசித்தியை அடைந்ததோ அதே அளவிற்கு குருவின் தாக்கத்தால் விளைந்த அவரது மூக்குபொடியின் மகத்துவமும் பெரும் பிராபல்யத்தையடைந்தது.

குருவும் சிஷ்யரும் ஒரு பிரயாணத்தின் பொழுது பொடிமட்டை கிடைக்கா அத்துவானக் காட்டில் மாட்டிக் கொண்டனர். கையிருப்பிலிருந்த பொடி அத்தனையும் தீர்ந்த போக, எத்தனை காசு கொடுத்தாலும் பொடி கிடைக்காத நிலை. பார்த்தார் சிஷ்யர், தனக்குப் பிடித்த இரு விஷயங்களுள், ஒன்றின் மேலிருந்த ஏக்கதை மற்றொன்றின் வழியாய் வெளிப்படுத்த ஆரம்பித்தார். அதாவது, அவருக்குப் பிடித்தமான பொடி இல்லாத ஏக்கத்தை, அவருக்கு பிடித்தமான சங்கீதத்தின் மூலம் வெளிப்படுத்த ஆரம்பித்தார். இப்படியாகப் பிறந்ததுதான் “தூம பத்ர தூளி” என்ற சாவேரி ராகக் கீர்த்தனை. (தூமபத்ரம் என்றால் புகையிலை, தூளி என்றால் பொடி).

எதையோ தேடும்போது ரோஜா முத்தைய்யா நூலகத்தில் 1933-ம் வருட ஜூலை ஆனந்த விகடனில் எனக்கு அந்தப் பாடல் கிடைத்தது. இந்தக் கிருதியைப் பற்றி பல இடங்களில் குறிப்புகள் கிடைக்கக் கூடும். எனினும், இந்தக் கிருதியின் முழு சாஹித்யம் இங்குதான் வெளியாகியுள்ளது.

பல்லவி

தூமபத்ரதூளி தகலுனா
ஈ தரித்ர ஊரிலோ
தயதோனிபுடு தெலுபவய்யா

அனு பல்லவி

காமிதார்த்தபல முவிச்சுனே
ஒகசிமிடாதூளி
பூமிலோனு லக்ஷகுடுனு
பிக்ஷகுடுனு விச்வஸிஞ்சே (தூம)

சரணம

மெப்புகைன மொகடநின்னு
கொனுடஸம்ப்ரதாயமே
அப்புதீஸி வெனுகநின்னு
புச்சுகொண்டே நியாயமா
நிப்புநீள்ளு காலிவலெனு
நீவுப்ராணாதாரமே
கொப்பவரத வெங்கடேச
ஸுப்ரஸாத ஸாரமே (தூம)

அந்த பாடலில், “ஐயா! இந்த தரித்திர ஊரில் மூக்குப்பொடி கிடைக்குமா? தயவுடன் இயம்புவாய்! ஒரு சிட்டிகை பொடி, ஆண்டியையும் அரசனையும் பாரபட்சமின்றி பரவசப்படுத்தும். ஏ பொடியே! உன்னை இயன்றவரை கையிருப்பில் வைத்திருப்பது உத்தமம். அப்படியில்லாத பட்சத்தில், இருப்பவரிடம் கையேந்தி பெற்றாலும் பாதகமில்லை. நீர், காற்று, நெருப்பு போல நீயும் ஒரு அத்தியாவசியப் பொருள்! என்னய்யன் திரு வேங்கடமுடையான் அருளிய பிரசாதம் நீ!” என்கிறார் பட்டணம்.

கர்ணனனுக்குக் கவச குண்டலத்தைப் போல, பட்டணம் சுப்ரமண்ய ஐயருக்கு அவரது பொடிடப்பா. ஒருமுறை மைசூர் மகாராஜா முன்னிலையின் பட்டணம் பாடிக் கொண்டிருக்கும் போது, தனது ஆருயிர் பொடியைக் காணாமல் பதறிப் போய், பாட்டை நிறுத்திவிட்டுப் பொடி-டப்பாவைத் தேட ஆரம்பித்துவிட்டார். இதனைப் பார்த்த மகாராஜா, அவருக்கு ஒரு ‘தங்க பொடி டப்பாவை’ பரிசாகக் கொடுத்ததுமே சாந்தமடைந்து கச்சேரியைத் தொடர்ந்தார்.

.சேலம் மீனாட்சி அம்மாள் என்ற பிரபல நடனக் கலைஞரின் புதல்விகளுக்குப் பாட்டு கற்று கொடுக்க வேண்டி, சென்னைப்பட்டணத்தில் சில ஆண்டுகள் தங்கியிருந்ததே அவர் பெயருக்கு முன் “பட்டணம்” முளைக்கக் காரணம் என்று சில வரலாற்று அறிஞர்கள் கூறினாலும், ‘பட்டிணம்’ பொடிக்கும் அந்த முன்னொட்டுக்கும் ஏதாவது தொடர்பிருக்கும் என்று உள்ளுணர்வு உணர்த்துகிறது. தன் குருவிடமிருந்து கற்றதை தனது சிஷ்யருக்குச் சேர்ப்பதைக் கடமையாகக் கருதிய ‘பட்டணம்”, தனது பிரதான சிஷ்யரான பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்காருக்கு, முகாரி ராக மகிமையுடன் முக்குப் பொடியின் மகோன்னதத்தைப் பற்றியும் போதித்தார்.

கர்நாடக இசையை, விறுவிறுப்பாகவும் விவகாரத்துடனும் கச்சேரியில் கொடுக்க ஒரு அற்புதமான முறையை வகுத்து முன்னோடியாய் விளங்கிய அரியக்குடி இராமனுஜ ஐயங்கார், மூக்குப் பொடி விஷயத்திலும் முன்னோடியாகவே விளங்கினார். “இன்றைய கச்சேரியில் எத்தனை புது கீர்த்தனங்கள் அரியக்குடி பாடினார்” என்று கணக்கு வைத்திருக்கும் பல இரசிகர்களைப் போலவே, “இன்றைய கச்சேரியில் எத்தனை முறை ஐயங்கார்வாள் பொடி போட்டார்” என்று கணக்கு வைக்கவும் ஏராளமான இரசிகர்கள் இருந்தனர். அப்படிப்பட்ட ஒரு இரசிக சிரோண்மணி, முதல் வரிசையில் உட்கார்ந்த படி, தாளத்தில் வரும் எண்ணிக்கைகளை எல்லாம் சட்டை செய்யாமல், அரியக்குடியின் ‘பொடிக் கணக்கை’ மட்டும் இம்மிபிசகாமல் கவனித்து, பக்கத்திலிருந்தவரிடம் அவ்வப்பொழுது வரும் எஸ்.எம்.எஸ் கிரிக்கெட் ஸ்கோர் அப்டேட்டைப் போல சொல்லிக் கொண்டிருந்தார். இதை கவனித்துக் கொண்டிருந்த அரியக்குடி, வழக்கம் போல பாடல் முடிந்ததும் பொடியை உறிஞ்சிவிட்டு, “இப்போ எட்டாவது தடவை. கணக்கு சரியா?, இனிமேலானும் பாட்டை கேளுங்காணும்” என்றாராம். என்னதான் முன்னோடி என்றாலும், சட்டியில் இல்லாமலா அகப்பையில் வரும்? அரியக்குடி வேறு யாருமில்லை; பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்காரின் சிஷ்யர்தான்.

அரியக்குடியின் சிஷ்யையான திருகோகர்ணம் கனகாம்புஜம் ஒரு கச்சேரியில் பாடிக் கொண்டிருந்த பொழுது, அவரது மூக்குத்தியின் திருகு சற்றே கழன்றுவிட, அவசர அவசரமாய் பாடிக்கொண்டிருந்த பாட்டை முடித்துவிட்டு, இடது கையால் மூக்கைப் பிடித்துக் கொண்டு, சற்றே கழுத்தைத் திருப்பியபடி வலது கையால் மூக்குத்தியை சரி செய்தாராம். இதனைப் பார்த்த இரசிகர்கள், அரியக்குடியின் அரிய கச்சேரி பாணியை பின்பற்றவதற்காக மூக்குப்பொடி போடுவதாக நினைத்து ஆரவாரம் செய்தார்களாம். “அரியக்குடியின் தாக்கத்தை, அவரது மானசீக சிஷ்யரான ஜி.என்.பி-யின் இசையில் எத்தனைத் தெளிவாகப் பார்க்க முடியுமோ, அதே அளவிற்கு, அவரது மூக்குப்பொடி போடும் இலாவகத்திலும் காண முடியும்”, என்று அவர் கச்சேரியை நேரில் கேட்ட பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

நாகஸ்வரச் சக்கரவர்த்தி ராஜரத்னம் பிள்ளையின் ராக வின்யாசம் எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரியது அவருடைய பொடிமட்டையின் அளவும். கர்நாடக சங்கீத உலகின் பீஷ்மராக விளங்கிய செம்மங்குடி சீனிவாச ஐயரின் சரீரத்தை விரும்பி அடிக்கடிப் பிடித்துக் கொண்ட சளியால் அவரது சாரீரம் பாதிக்கப்படாமல் காப்பற்றப்பட்டது ‘மூக்குப் பொடி’ என்னும் அருமருந்தால்தான். செம்மங்குடியின் பிரதான சிஷ்யரான ‘சங்கீத கலாநிதி’ டி.எம்.தியாகராஜன் குருவின் சங்கீதத்தை கிரஹித்ததைப் போலவே பொடியையும் கிரஹித்துப் பெரும் புகழ் பெற்றார். அபஸ்வரத்தைத் தொடாமல் இலாவகமாய் வில்லைப் போடுவதைப் போலவே, மீசை மேல் படாமல் இலாவகமாய் பொடி போடும் திறமை படைத்த ‘பாப்பா வெங்கடராமையாவின்’ திறைமை உலகப் பிரசித்தி பெற்றது.

கர்நாடக உலகின் பொற்காலம் போய்விட்டது என்று பிலாக்கணம் படிப்பவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான். அந்தப் பொற்காலம் திரும்பி வர ஒரே வழி எம்பருமான் அருளிய தூம பத்ர தூளியின் திருமகிமையை கலைஞர்களும் ரசிகர்களும் உணர்ந்துப் போற்றி அனுபவிக்கவேண்டும்.

Read Full Post »

இன்று பாலக்காடு மணி ஐயரின் பிறந்த நாள்.

ஒருமுறை தனிப் பேச்சில் அவருடைய மகன் வித்வான் ராஜாமணி சொன்ன விஷயத்தை (நினைவில் இருந்து எழுதுகிறேன்) இன்று பகிரலாம் என்று தோன்றியது.

அரசு அழைப்பின் பேரில் 1960-களின் லண்டனுக்கு வித்வான்கள் கே.வி.நாரயணசாமியுடனும் வித்வான் லால்குடி ஜெயராமனுடனும் மணி ஐயர் சென்று கச்சேரி செய்வதாக இருந்தது.

கச்சேரியில் பாட்டுக்கும் சரி, தனி ஆவர்த்தனத்துக்கும் சரி ஒற்றை மிருதங்கமாய் வாசிப்பதை விட கூட இன்னொருவர் வாசித்தால் மாறி மாறி வாசிப்பதற்கும், குறைப்பு முதலான நுணுக்கமான சமாசாரங்களை வெளிப்படுத்துவதற்கும் வசதியாக இருக்கும்.

அதனால் உடன் தன் மகனை இரண்டாவது மிருதங்கமாக வாசிக்க அழைத்துச் செல்ல மணி ஐயர் விரும்பினார். இந்த ஏற்பாடெல்லாம் இரண்டு அரசுக்கும் இடையிலான பியூரோக்ரடிக் சமாசாரம் என்பதால் அரசு அதிகாரியை அணுகியுள்ளார் மணி ஐயர். அதற்கு அந்த அதிகாரி, “நீங்கள் சொல்வதெல்லாம் சரி. ஆனால் இரண்டு பேர் மிருதங்கம் வாசிக்கப் போகிறார்கள் என்றால் ஒப்புதல் கொடுக்கும் அதிகாரி கேள்வி கேட்கக்கூடும். விண்ணப்பத்தில் உங்கள் மகன் கஞ்சிரா வாசிப்பார் என்று போட்டுவிடுங்கள்”, என்று அலோசனை கொடுத்துள்ளார்.

அவர் சொன்னபடி செய்ததோடு அதை அனைவரும் மறந்துவிட்டனர். அந்தக் குழு லண்டனுக்குச் சென்று கச்சேரியும் நல்லபடி நடந்தது.

அடுத்த நாள் பத்திரிகையில் ஒரு விமர்சனம் வெளியாகியுள்ளது.அது கச்சேரியை வானுயரப் புகழ்ந்துவிட்டு, லய வித்வான்களைப் பற்றிச் சொல்லும் போது இப்படிக் குறிப்பிட்டுள்ளது.

“பாலக்காட்டு மணி ஐயர் பிரமாதமாக மிருதங்கத்தில் வாசித்தார். அவருடைய மகனும் அவருக்கு ஈடுகொடுத்து வாசித்தார். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவெனில் ராஜாமணி வாசித்த கஞ்சிரா என்கிற கருவி பார்ப்பதற்கு மணி ஐயர் வாசித்த மிருதங்கத்தைப் போலவே இருந்தது. விவரம் அறியாதவர் பார்த்தால் அந்த கருவியின் அமைப்பிலோ, அதனின்று ஒலிக்கும் ஒலியிலோ சிறு வித்தியாசத்தைக் கூட கண்டுபிடிப்பது சிரமம்.”.

Read Full Post »