Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘Tribute’

Adieu Prof. T.N.Krishnan

I was asked to write a tribute to T.N.Krishnan by a friend in Scroll.in.

As I was wrapping it up, I remembered his Sangita Kalanidhi speech. I quoted a few lines from it. I think those lines define his music. Rest of what I wrote, I felt, was redundant.

“Sometimes even a most simple turn of a phrase will bring out more ‘raga rasa’ and ‘raga bhava’ than elaborate virtuosic display. The fundamental music aim is to evoke response in the rasika. The rapport can be achieved easily by simple but beautiful statements of music.”

If you still feel like reading my tribute – you can read it here.

Read Full Post »

மேற்கத்திய வாத்தியங்கள் தென்னாட்டு செவ்வியல் இசையில் பிரவேசித்து, காலப்போக்கில் கர்னாடக இசையின் ஓர் அங்கமாகவே மாறிவிடுவதைக் கடந்த சில நூற்றாண்டு வரலாற்றைப் பார்த்து உணர்ந்துகொள்ளலாம். வயலினில் தொடங்கி, கிளாரினெட், மாண்டலின் வரிசையில் சாக்ஸஃபோனுக்கும் அந்த இடம் கிடைக்கச் செய்தவர் கத்ரி கோபால்நாத்.

நாகஸ்வரப் பரம்பரையில் தோன்றிய கோபால்நாத், ஆரம்பத்தில் தன் தந்தையிடமே நாகஸ்வரம் பயின்றார். தனது பதினைந்தாவது வயதில் மைசூர் அரண்மனையில் பாண்டு வாத்தியங்களில் ஒன்றாக சாக்ஸஃபோன் இசைப்பதைக் கேட்டு அதன்பால் ஈர்க்கப்பட்டுள்ளார். முன்னோடிகள் இருக்கும் வாத்தியத்தை எடுத்துக்கொள்ளும்போது செல்ல வேண்டிய பாதை ஓரளவாவது தெளிவாக இருக்கும். தணியாத வேட்கையால் செலுத்தப்படும் வெகு சில கலைஞர்களே முன்னோடிகளாகும் கடினமான பாதையைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

அடிப்படையில், சாக்ஸஃபோன் என்பது இந்திய செவ்வியல் இசைக்கான கருவியன்று. மேற்கத்திய இசையில் ‘ஸ்டக்காட்டோ’ எனப்படும் தனித்தனியாய் ஒலிக்கும் ஸ்வரங்களை வாசிக்க முடியுமே அன்றி, இந்திய இசையின் உயிரான கமகங்களை வாசிப்பது மிகக் கடினம்.

 

இன்னிசை சவால்

ஒரு முழு நேர இசைக் கலைஞனின் முதல் கச்சேரி பெரும்பாலும் அவனது பதின்ம வயதில் நிகழ்ந்துவிடும். கத்ரி கோபால்நாத் முதன்முதலில் சாக்ஸஃபோனைக் கேட்டதற்கும், அவரது 28-வது வயதில் நடந்த அவரது முதல் கச்சேரிக்கும் இடையில் 12 ஆண்டுகள் உருண்டோடியுள்ளன.

kadri

இந்தக் காலத்தில் மூன்று முக்கிய மாற்றங்களை கோபால்நாத் சாக்ஸஃபோனில் செய்துள்ளார்.

1) வழமையான சாக்ஸஃபோனில் 3.5 ஸ்தாயிகள் வரை வாசிக்க முடியும். பெரும்பாலான கர்னாடக இசைக் கிருதிகளை இரண்டு ஸ்தாயியில் வாசித்துவிட முடியும். கற்பனைகளைப் பறைசாற்றும் ஆலாபனைகள், ஸ்வரங்கள் போன்றவற்றில்கூட பெரும்பாலான விஷயங்கள் இரண்டு ஸ்தாயிக்குள் அடங்கிவிடும். இதை உணர்ந்து கருவியில் சில விசைகளைக் களைந்து வாசிப்பதற்கு லகுவாக வாத்தியத்தை மாற்றியுள்ளார். 2) இரும்பினாலான இணைப்புகளை ரப்பர் இணைப்புகளாய் மாற்றி கமகங்கள் வாசிக்க ஏதுவாக்கியுள்ளார். 3) விசைகளை அழுத்தும்போது கருவியில் உள்ள துளைகள் திறக்கவும் மூடவும் பயன்படும் தோலினாலான பட்டைகளை மிருதுவான ஃபெல்ட் பேப்பரால் மாற்றியுள்ளார்.

முதலில் வாத்தியத்தைக் கைவரப் பெற்று, அதன் பின் அதன் எல்லைகளை உணர்ந்து, பிறகு அதன் போதாமைகளை நீக்கப் பரிசோதனைகள் செய்து, இறுதியில் கர்னாடக இசைக்கு ஏற்றதாய் மாற்ற வேண்டிய கடினமான பாதையைக் கடந்துள்ளார்.

துணிச்சலான பரிசோதனைகள்

கத்ரி கோபால்நாத்தின் இந்த முயற்சியின் வீச்சை உணர அதன் காலத்தில் வைத்துப் பொருத்திப் பார்க்க வேண்டும். அவர் சாக்ஸஃபோனில் பரிசோதனை முயற்சிகள் செய்துகொண்டிருந்த சமயத்தில் சென்னையில் கிதாரில் கர்னாடக இசைக் கச்சேரிகள் செய்ய முயன்றுவந்தார் இசைக் கலைஞர் சுகுமார் பிரசாத். இன்று கிடைக்கும் அவரது இசைப் பதிவுகள் அவரை உன்னதக் கலைஞராகவே காட்டுகின்றன. இருப்பினும், அன்றைய சூழலில் புதியதொரு மேற்கத்திய வாத்தியத்தை கர்னாடக சங்கீத மேடையில் ஏற்றக சபாக்களுக்கும், ரசிகர்களுக்கும்கூட மனத்தடை இருந்துள்ளது. வாத்தியத்தை வசப்படுத்திய பின்னும் மேடையேற்ற முழு நேரம் எதிர்நீச்சல் போட வேண்டியிருந்த சூழலில், எண்பதுகளின் கடைசியில் சுகுமார் பிரசாத் இசைத் துறையை விட்டு முற்றிலும் நீங்கிவிடுகிறார்.

இந்தச் சூழலில்தான் சாக்ஸஃபோனை ஒரு கர்னாடக இசைக் கருவியாக கோபால்நாத் முன்னிறுத்தியுள்ளார் என்பது பிரமிப்பாக இருக்கிறது. தன் முடிவின் மீது அசாத்திய நம்பிக்கையும், எடுத்ததை சாதித்தே ஆக வேண்டும் என்ற பிடிவாதமும் இன்றி வெளி மாநிலத்தவர் ஒருவர் கர்னாடக இசையுலகின் மையமான சென்னையில் காலூன்றுவது சாத்தியமே அல்ல. தனக்குப் பின்னால் வந்த/வரப்போகிற கீபோர்ட் முதலான மேற்கத்திய வாத்தியங்களில் செவ்வியல் இசை வாசிப்பவர்களுக்காகச் செழுமையான பாதையை அமைத்துக்கொடுத்தவர்களுள் முக்கியமான ஆளுமை என்றும் இசையுலகம் அவரை நினைவில் கொள்ளும்.

 

திரையுலகப் பிரவேசம்

கத்ரி கோபால்நாத்தின் வாழ்வில் திருப்புமுனை அவர் ‘டூயட்’ திரைப்படத்தில் வாசித்ததுதான் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், அந்தப் படம் வந்த 1994-க்கு முன்னாலேயே அகில இந்திய வானொலியின் ஏ-டாப் கலைஞர் என்கிற அங்கீகாரம். மியூசிக் அகாடமி முதலான பிரதான சபைகளில் வாசிக்கும் வாய்ப்பு, அமெரிக்கா, இங்கிலாந்து முதலான நாடுகளுக்குச் சென்று வாசிக்கும் வாய்ப்பை அவர் பெற்றிருந்தார் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

திரையிசையில் வாசித்தது இவரைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கலாம். அந்தத் தொடக்கப்புள்ளியைத் தொடர்ந்து அவரைக் கேட்க வைத்தது அவர் வாசிப்பில் இருந்த ஜிலுஜிலுப்பு. இயற்கையாகவே கம்பீரமான தொனியில் ஒலிக்கும் வாத்தியத்தில் குழைவையும் வெளிப்படுத்திய விந்தை மக்களைக் கட்டிப்போட்டது. அவரது மந்திர ஸ்தாயிப் பிரயோகங்கள் ஆழமும் மென்மையும் சேர்ந்த அபூர்வக் கலவையாக்கி சொக்க வைத்தன. உச்சஸ்தாயியில் ஒற்றை ஸ்வரத்தில் காலக்கடிகாரத்தைக் கேலிசெய்தபடி அவர் நின்றபோது ரசிகர்களுக்குள் எழுந்த மனவெழுச்சி எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத அனுபவமாய் அமைந்தது. நான் நேரில் கேட்ட பல கச்சேரிகளில் எந்தக் கச்சேரியிலும் அவர் திரையில் வாசித்ததையோ அல்லது வேறு திரையிசைப் பாடல்களையோ வாசிக்கவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

எளிமையும் பணிவும்

 

2000-ல் தன் புகழின் உச்சியில் இருந்தபோது, ஒரு நிகழ்ச்சியில் கத்ரி தன் பயணத்தைத் திரும்பிப் பார்த்தபடி இப்படிக் கூறுகிறார், “என் முயற்சியாலும், குருவின் அருளாலும் இந்தக் கருவியில் சாதகம் செய்து, கர்னாடக இசைக்குத் தகுந்தவாறு மாற்றங்கள் செய்து வாசித்துவருகிறேன். இருப்பினும், சில சிரமங்கள் இருக்கத்தான் செய்கின்றன. உதாரணமாக, சாதாரண காந்தாரத்தை இன்னும் சரளமாக வாசிக்க முடிவதில்லை” என்கிறார். சிகரங்களைத் தொட்டபோதும் போக வேண்டிய தூரத்தைப் பற்றிய தெளிவும், அதை வெளிப்படுத்தக்கூடிய நேர்மையும் பகட்டும் படாடோபமும் நிறைந்த இந்தத் துறையில் அதிகம் காணக்கிடைக்காதவை.

அவரது விமர்சகர்கள், அவர் கச்சேரியில் தோடி, தன்யாஸி, சஹானா போன்ற ராகங்களை அதிகம் கையாளாததைக் குறிப்பிடுவர். அது வாத்தியத்தின் தற்கால எல்லைக்கு அப்பாற்பட்டதே அன்றி, கலைஞனின் குறையல்ல என்று சொல்லத் தோன்றுகிறது. ஆரம்பத்தில், நாகஸ்வர கச்சேரிகள்போல இன்னொரு சாக்ஸஃபோனைத் துணைக் கருவியாகக் கொண்டு தவிலுடன் கச்சேரிகள் செய்தாலும், காலப்போக்கில் வயலின், மிருதங்கம், மோர்சிங்குடன் அவர் கச்சேரிகளைத் தனக்கேயுரிய பாணியில் அமைத்துக்கொண்டார். குறிப்பாக, வயலின் விதுஷி கன்யாகுமரிக்கு சம பங்களித்தபடி அவர் வாத்தியத்தின் எல்லைக்கு உட்பட்ட மோகனம், ஆபேரி, கல்யாண வசந்தம் போன்ற ராகங்கள் காலம் கடந்தும் நிற்கக்கூடியவை.

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான சாக்ஸஃபோன் கலைஞர்கள் உருவாகியிருப்பது கண்கூடு. குறிப்பாக, கர்நாடகத்தில் வீட்டு விழாக்களிலும், கோயில் திருவிழாக்களிலும் மங்கல வாத்தியமாக நாகஸ்வரத்துக்கு இணையாக சாக்ஸஃபோன் ஒலிப்பதைக் காணலாம். பரபரப்பான கச்சேரி வாழ்வுக்கு இடையிலும் தன் குருநாதர் டி.வி.கோபாலகிருஷ்ணனின் மகன் ஜி.ராமநாதன் போன்ற அற்புத சீடர்களை அவர் உருவாக்கத் தவறவில்லை. அவர் சாதனைகள் அத்தனையையும் ஒதுக்கினாலும்கூட, கர்னாடக சங்கீதம் என்றால் என்னவென்றே தெரியாத எத்தனையோ ரசிகர்களை, குறிப்பாக இளைஞர்களை இசையின்பால் ஈர்த்தவர் என்கிற ஒரு காரணத்துக்காகவே அவர் ஒரு நிரந்தரர்.

நன்றி: இந்து தமிழ் திசை

Read Full Post »

ஜி.என்.பி கிருதிகள் வரிசையில் வெகு நாள் கழித்து மூன்றாவது பாடலை இன்றுதான் வெளியிட முடிகிறது.

பல வேலைகளில் மாட்டிக் கொண்டிருப்பதால் இம் முறை தமிழிலும் கிருதி பற்றி எழுத முடியவில்லை.

சிந்துஜாவின் பாட்டையும், பாடல் பற்றிய என் குறிப்பையும் இங்கு கேட்கலாம்/படிக்கலாம்.

http://octaves.blogspot.com/2010/09/celebrating-gnb-3-nee-padame-gathi-in.html

வரும் வாரங்களில் ஒரு கிருதிக்கும் அடுத்த கிருதிக்கும் உள்ல லீட் டைமை குறைக்க நினைத்துள்ளோம். ஜனவரிக்குள் சிந்துஜாவுக்கு தெரிந்த பாடல்கள் அனைத்தையும் வலையேற்ற திட்டம்.

முந்தைய பாடல்கள்: https://carnaticmusicreview.wordpress.com/2010/05/21/gnb-kritis-nee-daya-varnam/ & https://carnaticmusicreview.wordpress.com/2010/04/12/gnb-kritis-srichakra/

பார்ப்போம்.

Read Full Post »

சங்கீத கலாநிதி பட்டம்மாளின் மறைவு சங்கீத உலகத்துக்குப் பெரும் இழப்பு. தெளிவு, கச்சிதம், சுத்தம் போன்ற குணங்களுக்கு இலக்கணமாக விளங்கிய பட்டம்மாளின் பணி அளப்பெரியது. அவருக்கு அஞ்சலி செய்யும் வகையில் ஒரு சிறப்பு நேர்காணலை இங்கு வழங்குகிறோம்.

90 வயது இளைஞரான ‘எஸ்.ராஜம்’ இசையிலும் ஓவியத்திலும் என்றும் அழியா இடத்தைப் பெற்றுள்ளவர். காஞ்சிபுரனm நயினாப் பிள்ளை காலத்து இசையில் தொடங்கி, இசையுலக ஜாம்பவான்கள் அனைவரையும் கேட்டவர். இன்று இருப்பவரிடையே பட்டம்மாளின் பெருமையைக் கூற இவரைத் தவிர தோதானவர் என்று வேறொருவரையும் கூற முடியாது. பட்டம்மாள் பற்றிய சிறப்பு நேர்காணலை கேட்டு மகிழுங்கள்.

Read Full Post »

எம்.எஸ். சுப்புலட்சுமியின் நினைவு நாளையொட்டி வரலாறு.காமில் வெளியான எனது அஞ்சலியை இங்கு வெளீயிடுகிறேன். 

டிசம்பர் 12-ஆம் தேதி அன்று வந்த செய்தித்தாள்கள் அனைத்தும் முதல் பக்கத்தில் ரஜினிகாந்தின் பிறந்த நாள் பற்றிய செய்தியைத் தாங்கி வராமல், சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனை படைத்த 34-ஆவது சதத்தை வெளியிடாமல், 88 வருடங்கள் வாழ்ந்து வரலாறு படைத்த எம்.எஸ்-இன் மறைவைத் தெரிவித்தன. அன்றிலிருந்து, தூர்தர்ஷனிலும், பல தனியார் தொலைக்காட்சிகளிலும் எம்.எஸ்-இன் வாழ்வைப் பற்றிய நிகழ்ச்சிகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

கடந்த ஆண்டு மட்டும் எம்.எஸ்-இன் வாழ்வை மூன்று புத்தகங்கள் பதிவு செய்ய முயன்றன. அக்டோபர் 1986-ஆம் ஆண்டு, ‘ஸ்ருதி’ பத்திரிகை, எம்.எஸ்-இன் 70-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு பல கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்தது. இன்னும் எத்தனையோ பத்திரிகைகளில், நாளிதழ்களில், புத்தகங்களில் எல்லாம் பதிப்பித்தும் முழுமையடையாத சகாப்தமாக எம்.எஸ்-இன் வாழ்க்கை விளங்குகிறது.

அவரவர் விருப்பம் போல எம்.எஸ்-இன் வாழ்வை பதிவு செய்துகொண்டிருக்கும் இன்றைய நிலையில், எம்.எஸ்-இன் வாழ்வு எதைப் பதிவு செய்தது என்பதைப் பார்ப்போம். எம்.எஸ்-இன் கச்சேரி அணுகுமுறை, அவரது ஆலாபனை, அவரது ஸ்வரப்ரஸ்தாரம், அவரது லய விந்யாசம், பக்திப் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது என்பதைப் பற்றியெல்லாம் அவருக்குச் சாதகமாகவும், பாதகமாகவும் பேசுபவர்களைக் காண முடியும். ஆனால், அவரது குரல்வளத்தை, கீர்த்தனைகள் பாடிய விதத்தை, பாடல்களில் இருக்கும் விஸ்ராந்தியைப் பற்றி ஒரு கருத்துதான் இருக்க முடியும்.

மேல்கூறிய மூன்றில், குரல் வளத்தைப் பற்றி சொல்வது ஒரு பெரிய நதியில் கால் டம்ப்ளர் தண்ணீர் ஊற்றுவது போன்றதாகும்.

விஸ்ராந்தி என்பது ஒரு அனுபவம், அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஆகையால், எம்.எஸ் பாடிய கீர்த்தனைகளைப் பற்றி ஆராய்வோம்.

கீர்த்தனை என்பது ராகம் என்னும் அரசன் தடங்கலின்றி உல்லாசமாய் பவனி வரத் தோதான ராஜபாட்டை. கீர்த்தனைகள் பாடும் பொழுது, ஒரே வரியை பல முறை வேறு வேறு விதமாகப் பாடுவார்கள். இதற்குச் சங்கதிகள் என்று பெயர். இந்த சங்கதிகளை ஒரு நல்ல பேட்ஸ்மேனின் திறமைக்கு ஒப்பிடலாம். ஒரு கிரிக்கெட் மேட்ச் நடக்கிறது, ஒரு திறமையான பேட்ஸ்மேன் ஒரு சுழற்பந்து வீச்சாளரை சந்திக்கிறார். முதல் பந்து ‘குட்-லெங்ந்தில்’ விழுகிறது, நமது பேட்ஸ்மெனின் கால்கள் பந்தை நோக்கி துரிதமாகச் சென்று மிட்-ஆனுக்கு மேல் பந்தைத் தூக்கி அடிக்கின்றன. விளைவு – 4 ரன்கள். அடுத்த பந்தும் அதே இடத்த்ல் விழுகிறது, ஆனால் இம்முறை லாங்-ஆனில் ஒருவர் இருக்கிறார். நமது ஆட்டக்காரர் சற்று நகர்ர்ந்து காலியாக இருக்கும் ‘பாயிண்ட்’ திசையில் ‘கட் செய்கிறார். விளைவு – 4 ரன்கள். இம்முறை டீப்-பாயிண்ட் இருக்கிறது, பந்து அதே இடத்தில் விழுந்து வருகிறது, பேட்ஸ்மேன் பந்து தன்னை கடக்கும் வரைக் காத்திருந்து, விக்கட்-கீப்பரின் கையுரையில் செல்லும் முன் செல்லமாக தடவிக் கொடுப்பது போல பந்தை லேட்-கட் செய்கிறார். விளைவு – 4 ரன்கள்.

எப்படி ஒரே பந்தை வெவ்வேறு விதமாக பவுண்டரிக்கு அனுப்பி, தன் திறமையின் பரிமாணங்களை பேட்ஸ்மேன் வெளிப்படுத்தினாரோ, அதே போல, ஒரு ராகத்தின் பல பரிமாணங்களை வெளிக்கொணர்வதே சங்கதிகளின் வேலை. காம்போஜி ராகக் கிருதியான ‘ஓ ரங்க சாயி’ என்ற பாடலின் பல்லவியை எம்.எஸ் பாடும் விதத்தைக் கேட்டால், நான் கூறிய ‘cricket analogy’ புரியும். ‘ஓ ரங்கசாயி’ என்ற வரியில் ‘ஓ’ என்ற சொல் (எழுத்து) மட்டும் இரண்டு களை ஆதி தாளத்தின் 3 இடங்களுக்கு வரும். அந்த ஒரு எழுத்தை முதலில் காம்போஜியின் சில ஸ்வரங்களில் மட்டும் பாவவிட்டுப் பாடுவார். அடுத்த சங்கதியில் முன்னல் பாடிய ஸ்வரங்கள் எல்லாம் ஒன்றை ஒன்று அன்புடன் அணைத்துக் கொள்ளும். அடுத்த சங்கதியில் வேறு சில ஸ்வரங்கள் சேர்ந்து கொள்ளும். அடுத்த சங்கதியில் காம்போஜியின் மொத்த உருவம் லேசாக பவனி வர ஆரம்பிக்கும், இப்படி படிப்படியாய் வளர்ந்து வளர்ந்து, ‘ஓ ரங்க சாயி’ என்ற வரி சில மின்னல் வேக ப்ருகாக்களுடன் காம்போஜி ராகத்தை ரோலர் கோஸ்டரில் இட்டுச் செல்லும். பேட்ஸ்மெனின் ஒவ்வொரு அடியும் எப்படி பவுண்டரியில் முடிந்ததோ அதே போல எம்.எஸ்-இன் சங்கதிகள் எத்தனை எத்தனை இருப்பினும் அவற்றின் விளைவு, கேட்பவர் மனத்தில் மகிழ்ச்சிதான்.

டெஸ்ட் மேட்ச் போன்ற ‘ஓ ரங்க சாயிக்கும்’, ஒரு நாள் போட்டி போன்ற, ஒரு களையில் அமைந்த ‘திருவடி சரணத்திற்கும்’ இடையில் எம்.எஸ் காட்டும் difference in approach-ஐ அவரது கச்சேரிகளில் தெளிவாகக் காணலாம். கீர்த்தனைகளில் உச்சரிப்பு, பாவம், சாஹித்ய சுத்தம் என்ற அனைத்து இலட்சணங்களையும் எம்.எஸ்-இன் கச்சேரிகளில் பார்க்க முடியும். சௌந்தர்ய லஹிரியில் ஒரு ஸ்லோகத்தைப் பாடிவிட்டு, எம்.எஸ் பாடும் ‘ஹிரண்மயீம் லக்ஷ்மீம்’ என்ற லலிதா ராகப் பாடல் கல்லையும் உருக்கிவிடும். இன்னும் ‘சரோஜ தள நேத்ரி’, ‘யாரோ இவர் யாரோ’, ‘தேவி ப்ரோவ’, ‘குறையொன்றுமில்லை’ என்று பல கீர்த்தனைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இன்றைய நிலையில், எம்.எஸ்-இன் சுப்ரபாதம் போன்ற ஒலிநாடாக்களும், கல்கியின் பாடல்கள் கொண்ட ஒரு துக்கடா collection-உம், மீரா பஜன், சூர்தாஸ் பஜன் போன்ற ஒலிநாடாக்களும்தான் அதிகம் கிடைக்கின்றன. எம்.எஸ்-ஐப் பற்றி அடுத்த தலைமுறைக்கு இவை தவறான ஒரு அபிப்ராயத்தை உருவாக்கும் அபாயம் உள்ளது. வெறும் பஜன்களாலும், துக்கடாக்களாலும்தான் எம்.எஸ் உலகப் புகழ் பெற்றார் என்ற எண்ணம் பரவினால் கூட வியப்பதற்கில்லை. ‘ராகம் தானம் பல்லவி’ கொண்ட பல கச்சேரிகள், இன்றும் சில இசை ஆர்வலர்களிடம் கிடைக்கிறது.

மஹா வைத்தியநாத சிவன் என்ற சங்கீத சிம்மம் 72 மேள கர்த்தாவையும் கொண்டு, அந்த ராகங்களின் பெயர்கள் சாஹித்யத்தில் வருமாறும், ஆழ்ந்த அத்வைத கருத்துக்களுடனும், 72 இராகங்களிலும் சிட்டை ஸ்வரங்களுடனும் ஓர் அரிய கிருதியை உருவாக்கினார். வெறும் புத்தகத்தில் மாத்திரம் இருந்த கிருதியைப் பாடம் செய்து, உலகுக்கு பரப்பும் வண்ணம் ம்யூசிக் அகாதமியின் துணையுடன் ஒரு ஒலிநாடாவை எம்.எஸ் கொடுத்திருக்கிறார். இந்த ஒலிநாடா இன்று எந்த கடையிலும் கிடைப்பதாகத் தெரியவில்லை. வெறும் ஒலிநாடாவில் கொடுத்ததோடு தன் வேலை முடிந்தது என்றெண்ணாமல், கம்பி மேல் நடப்பது போன்ற கடினமான அக்கிருதியை, தன் கச்சேரிகளில், 12 இராகங்கள் வீதம் பலமுறை பாடியிருக்கிறார் என்றும் தெரிய வருகிறது.

மதுரை ஷண்முகவடிவிடம் தொடங்கி, அரியக்குடி, செம்மங்குடி, முசிறி, வீணை தனம்மாள், பேகம் அக்தர் போன்ற ஜாம்பவான்களிடம் பாடம் கேட்கும் பெரும் பேரை எம்.எஸ் அடைந்தார் என்று கூறலாம். இதனாலேயே, இவரது கச்சேரிகளைப் பாதுகாப்பதும் வெளிக் கொணர்வதும் அவசியமாகிறது. அனைத்திந்திய அளவில் புகழ் பெற்றிருந்த எம்.எஸ்-இன் படாந்தரத்துக்கு ஈடு இணையாக வேறொருவரைக் காண்பது துர்லபம். இன்றைய நிலையில் அருணாசலக் கவி, முத்துத் தாண்டவர் போன்றோர்க்ளின் பல கீர்த்தனைகளை இழந்து நிற்கும் நமக்கு, எம்.எஸ்-இன் கச்சேரிகளின் திரட்டு ஒரு சிறந்த கருவூலத்தை உருவாக்கும். தமிழ், தெலுங்கு, கன்னடம் முதலிய அனைத்து மொழிகளிலும் 70 வருடங்கள் பாடி எம்.எஸ் வைத்துச் சென்றிருக்கும் செல்வம், அவர் கச்சேரிகள் செய்து பணமாய் கொடுத்த தானங்களை எல்லாம் மிஞ்சு செல்வமாகும். அதைப் பாதுகாத்தல் நமது கடமை.

முதல் கட்டமாக, எம்.எஸ்-இன் ஆல் இந்தியா ரேடியோ மற்றும் தூர்தர்ஷன் கச்சேரிகளை வெளியிடலாம்.

மனம் இருந்தால் மார்க்கம் இல்லாமலா போய்விடும்

Read Full Post »