Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘review’

டிசம்பர் 11 அன்று சென்னை ராக சுதா அரங்கில் துருவ நட்சத்திரம் வெளியானது.

ஞாயிறு காலை 9.00 மணிக்கு அவ்வளவு பேர் கூடி அரங்கை நிறைத்தது ஆச்சர்யமாக இருந்தது.  இந்த விழாவுக்காகவே பெங்களூர், ஓசூர் போன்ற ஊர்களில் இருந்து நண்பர்கள் வந்து நெகிழ வைத்தனர்.

விழாவைப் பற்றி கிரியும், சுகாவும் விவரமாகவே எழுதியுள்ளனர்.

அன்றைய கச்சேரியில் பழனி வழியில் வந்திருக்கும் இரு இளம் வித்வான்களின் தனியை இங்கு காணலாம்.

நூல் வெளியான அன்று ஹிந்துவில், கோலப்பன் புத்தகத்தைப் பற்றியும் என்னைப் பற்றியும் எழுதியிருந்தார். சில நாட்களில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலும் ஒரு கட்டுரை வெளி வர, “என்ன செய்யற-னு தெரியல. ஆனா என்னமோ செய்யர போல இருக்கு”, என்கிற ரீதியில் பல நண்பர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்தன.

இந்த இரு கட்டுரைகளின் உபயத்தில், ம்யூசிக் அகாடமியில் கர்நாடிக் ம்யூசிக் புக் ஸ்டோரின் ஸ்டாலில் புத்தகம் எதிர்பார்த்ததை விட நன்றாகவே விற்றது என்றால், இணையத்தில் நண்பர் சொக்கன் எழுதிய அறிமுகத்தினால் இந்தப் புத்தகத்தை வாங்கினோம் என்று பலர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பினர்.  “இந்தப் புத்தகத்துக்கு இவ்வளவு ஆர்டரா?” என்று உடுமலை.காம் சிதம்பரம் அதிர்ச்சியில் பல நாட்கள் இருந்தார். சில நாட்களாய் ஆர்டர் இல்லை என்று நேற்று பேசும் போது சொன்னார். அப்போதுதான் அவர் குரலில் கொஞ்சம் ஆசுவாசம் தெரிந்தது.

புத்தகம் எழுதும் போது, கதை போல எழுதிய அத்தியாயங்கள் எல்லாம் அதிகப் பிரசங்கம் ஆகி விடுமோ என்ற பயம் எனக்கு இருந்தது. இத்தனைக்கும் மான்பூண்டியா பிள்ளை, தட்சிணாமூர்த்தி பிள்ளை போன்ற அத்தியாயங்கள் சொல்வனத்திலும், இந்த வலைப்பூவிலும் வெளியானவைதான். புத்தகத்தைப் படித்தவர்கள் அனைவருக்கும் அந்தப் பகுதிகளே பெரிதும் பிடித்திருக்கின்றன. பிரபல எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்ரன், இரா.முருகன் போன்றோரும் லா.ச.ரா-வின் மகன் சப்தரிஷி போன்ற தேர்ந்த ரசிகர்களும் இதனை உறுதி செய்தனர்.  இதுவரை இணையத்தில் வெளியாகாத ஓர் அத்தியாயம் சில நாட்களுக்கு முன் (சேதுபதியின் பதிப்புரையோடு) தமிழ் பேப்பரில் வெளியானது.

இ.பா-வும் அ.மி-யும் புத்தகத்தைப் பற்றிச் சொன்னவை இந்த வார சொல்வனம் இதழில் வெளியாகியுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன் தினமணியிலும் புத்தகத்தில் இருந்து ஒரு சிறிய பகுதி வெளியாகியிருந்தது.

இந்தப் புத்தகத்துக்கு இவ்வளவு விளம்பரம் நான் எதிர்பார்க்காத ஒன்று.

எல்லாவற்றையும் விட,  “இணையத்தில் ஓர் ஓரத்தில் எழுதவதன் மூலம் இவ்வளவு நண்பர்களா”, என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது.

அந்த நண்பர்களுள் பலரை புத்தகக் கண்காட்சியில் சந்திக்க நினைத்திருந்தேன். ஆனால், பணி நிமித்தமாக இந்த வாரக் கடைசியில் வெளிநாடு செல்ல வேண்டி உள்ளது. திரும்ப ஒன்றரை மாதங்கள் ஆகும்.

புத்தகங்களுடனும், நண்பர்களுடனும் உறவாடும் அரிய வாய்ப்பை இழக்கத்தான் வேண்டி உள்ளது 😦

புத்தகக் கண்காட்சியில் டிஸ்கவரி புக் பேலஸின் ஸ்டாலில் (ஸ்டால் எண் 334)  ‘துருவ நட்சத்திரம்’ புத்தகம் கிடைக்கும்.

இணையத்தில் பெற: http://udumalai.com/?prd=thuruva+natchatram&page=products&id=10381

Read Full Post »

வலைப்பூக்களுக்கு நான் ஒரு late entrant.. 2003-லிருந்து 2005 வரை நிறைய கட்டுரைகளை (பெரும்பாலும் இசை விமர்சனங்கள்) தெரிந்த சில நண்பர்களுக்கு மட்டும் மின்னஞ்சலில் அனுப்பி வைத்துக் கொண்டிருந்தேன். அப்படி அனுப்பிய மின்னஞ்சல்களில் ஒன்று கூட கைவசம் இல்லை.

அப்படி அனுப்பிய ஒரு மடலை பிரகாஷ் அவர் வலைப்பூவில் போட்டார். (இங்கு படிக்கலாம்).

15-20 கட்டுரைகள் காணாமல் போனதே என்றெண்ணி அவ்வப்போது வருந்துவதுண்டு. யாருக்கும் பெரிய இழப்பில்லை எனினும், அந்த கட்டுரைகளைத் திருபிப் பார்க்கும் பொது, நினைவில் நிற்கும் அக் கச்சேரிகளை மீண்டும் ஒருமுறை கேட்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்படுமே, அந்த அனுபவத்தை இழந்துவிட்டோமே என்று நினைத்துக் கொள்வேன்.

நேற்று, a blast from the past, அன்பது போல, 2003-ல் நான் எழுதிய மின்னஞ்சல் ஒன்று கிடைத்தது. மீண்டும் தொலையாமல் இருக்க, இங்கு போட்டு வைக்கிறேன்.

Dear Lakshmi,

Hope everything is fine at your end. I’m having some free time today, thought I would write about the TNK concert I attended.

It was on 27th dec. 2003 @ Nada Inbam, Raga Sudha hall.

It was heartening to see a full house for a TNK concert (which unfortunately is a rarity these days). Violinist Shriramkumar and vocalist Chengalpet Ranganathan were also among the fortunate few to have listened to this amazing concert.

Concert started with the begada varnam rendered in 2 speeds. I was expecting “entharO” to follow. But, TNK played “Nadha thanumanisham” in his own bhava-laden style. He surprised me with several rounds of brisk kalpana swarams.

Duo-concerts become a problem when one of the 2 artistes is of a higher calibre. Viji might be a good violinist, but when playing with TNK, esp. during the kalpana-swarams, one gets a ‘sine curve’ feeling.

Although I had told u in my earlier mail that the kalyaNi aalapanai I heard that day was easily one of the best ever, for me the highlight of the concert was the 2-min. raga sketch of saramathy. I’m sure it would have melted the hardest of the hearts. Just a few strokes brilliantly brought out the pathos feel of saramathy. After the aalapanai I thought there was nothing left in that raagam to be explored. Such was the ‘niRaivu’. The best thing about TNK is his krithi rendition. I would be stating the obvious if I say that the “mokshamu galadha” was rich in emotional content. (TNK was in such a form that I dint even feel like opening my eyes to ‘sight-adichufy’ a ‘sooper-figure’ sitting beside me;-)

Without wasting anytime, he started playing kalyaNi. When I think about that aalapanai, I could imagine a beautiful painting unfolding in front of my eyes. If you imagine TNK as a painter and raga kalyani as the painting, he drew a few sketches here and there on the canvas(his violin) outlining the length and breadth (scope) of the painting(raga). Then he started painting (playing) the details with finnesse and precision. His fingers were weaving several beautiful patterns soaked with a very very pleasant bhavam. One could really feel the first few lines grow into a amazingly colourful, highly imaginative, captivating painting. (huh! I’m running out of adjectives.)

After the kalyani aalapnai, Chengalpet Ranganathan rose from his seat and made a statement from the bottom of his heart. “ithuthaan uNmaiyaana kalyaaNi, intha maathiri kEttu romba varusham aachu.” TNK seemed to be extremely happy after the aalapanai as he won several rounds of applause from the audience.

He dedicated all the applause to his guru semmangudi. He also recollected his initial days when he played kalyani with a flat nishadam. “oru thadavai appadi vaasichapOthu avar mugham suLichathai paarthen, aprum flat-aa vaasikkavE illai, as far as kalyaNi is concerned upper-sa is the nishadam and the madhyamam should be almost near panchamam”

He also demonstrated the kalyaNi “ni” with a flat note and with the gamakam.

He followed the aalapanai with “birana brova” and when he started the kriti almost everone in the hall let out a cry -recollecting the epic rendition of this krithi by semmangudi. Guruvayur Dorai’s accompaniement during the swarams was enjoyable.  Especially his anticipation requires a special mention.

When the kriti and the kalpana-swarams were over, I couldn’t believe that TNK had played kalyani only for about 32 mins. I was left wondering how he managed to fit in so much in such a short time.

Saveri is another bhava-laden raagam. I need not say it would only be a treat if someone like TNK plays it. He took it for elobarating as an RTP. Thanam is a wonderful part of our music, which unfortunately most people do for the sake of doing it. The semi-rythmic syllables are such a pleasure to listen. I was a little disappoined when TNK after a few short-rounds of thanam started to play the pallavi.

When he started the pallavi, it reminded me a lot of the ARI’s saveri pallavi which we were debating on. However, when I went asked the sahithyam for the pallavi after the concert, he said it was “kari mora vina ledhaa hare krishna”, which I dont think is the pallvi line of the ARI concert. The pallavi neraval was pretty elaborate and he did tri-kaalam on it. He played several rounds of swarams at the slower speed and I would pick that as the best part of the RTP. After playing swarams at the faster speed, he played ragamalika swarams in sahana, poorvi kalyani and sree.

After the RTP, the percussionists got a chance to prove their prowess in the thani-aavarthanam. Guruvayur Dorai and Vaikom Gopalakrishnan were very enthusiastic in playing the 2-kaLai aadhi thani. After several aavarathanam in chatrusra nadai, the duo played a few aavarthanams in tisra-nadai. The kuraippu was delectable, especially when Guruvayur Durai played several aavarthanam pre-dominantly with his left hand. His subtle variations on the ‘thoppi-side’ of the mridangam was extremely good.

After the thani, SVK started to speak and he was showering TNK with accolades. Although, TNK deserved that and much more, I felt irritated listening to someone speak in the middle of a great concert. The only good thing he did was requesting TNK to play raagams like “kaapi, yadhukula kambhoji” etc. Which, TNK promptly obliged a played a garland of raga-sketches on ragas kapi, mohanam, thodi (in thodi he made 1 stroke with his bow and said”oru stroke-la raagam vanthudanum, raagam enga-nu thEdindu irukkak koodaathu”), Neelambari, Atana and behag.

When he played the mangalam, I’m sure all the hearts in that room would have been filled with extreme happinness.

regards,
Ram.

Read Full Post »

பதிவிட முடியாமல் வேலை பளு. இது போன்ற நிகழ்ச்சிகளைக் கண்டுகொள்ளாமல் விடக் கூடாது என்பதற்காக, அவசர கதியில் ஒரு பதிவு.

பாரதிய சங்கீத வைபவம் என்ற அமைப்பு கடந்த 4 வருடங்களாக தீட்சிதர் கிருதிகளுக்காக அகண்டம் நடத்தி வருகிறது. அகண்டத்தில், காலையில் தொடங்கி தொடர்ந்து 12 மணி நேரம் தீட்சிதரின் பாடல்கள் பாடப்படுகின்றன. ”இது வரை நடந்த அகண்டங்களில் மட்டும், குறைந்த பட்சம் 280 தீட்சிதர்களாவது பாடப்பட்டு ஆவணப்படுத்தப்படூள்ளன. இன்னும் சில ஆண்டுகளில் , தீட்சிதர் கிருதிகள் முழுவதையும் ஆவணப்படடுத்தி விட முடியும்” என்கிறார் இந் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் குமார்.

வருடா வருடம் நடக்கும் இந்த அகண்டம், தீட்சிதர் கிருதிகளை ஆவணப்படுத்துவதோடு அல்லாமல், வளர்ந்து வரும் கலைஞர்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் களமாகவும் விளங்குகிறது. நேர்த்தியான முறையில் செயலாக்கப்பட்டு வரும் இந் நிகழ்ச்சிக்குப் பின் அசுர உழைப்பு பொதிந்துள்ளது. அகண்டத்துக்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே பங்கு பெறுபவரைத் தொடர்பு கொண்டு, யார் யார் எந்தெந்த பாடல்களைப் பாடுவது என்ற திட்டம் தயாராக ஆரம்பித்துவிடுகிறது. நாள் முழுதும் பாடும் போதும், ஒருவர் பாடிய பாடலை மற்ற கலைஞர் பாடுவதில்லை. கடந்த வருடங்களில் இடம் பெற்ற பாடல்களை முடிந்த வரைத் தவிர்க்கவும் கலைஞர்கள் கூடுமானவரை முயல்கின்றனர்.

2010-ம் ஆண்டுக்கான அகண்டம் ஃபெப்ரவரி 28-ம் தேதி சிவகாமி பெத்தாச்சி அரங்கில் நடை பெற்றது. கிருதிகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கிக் கொண்டே போகாமல், தீட்சிதர் கிருதிகளைக் கொண்டு கச்சேரியாகவே பெரும்பாலானோர் பாடினர்.

காலையில் சில வேலைகள் இருந்ததால் முதல் கச்சேரி முடியும் போதுதான் செல்ல முடிந்தது. நான் அரங்கில் நுழையும் போது லட்சுமி ரங்கராஜன் சவுக்க காலப்ரமாணத்தில் ‘ஏஹி அன்னபூர்ணே’ பாட ஆரம்பித்தார். அவர் பாடிய புன்னாகவராளி இன்னும் பல நாட்களுக்கு காதுகளில் ஒலிக்கும்.

அடுத்து பாடிய ஜி.ரவிகிரண் நிறைய அரிய கிருதிகளைப் பாடினார். ஆர்த்ர தேசி, மார்க தேசி போன்ற அபூர்வ ராகங்களில் பாடினார். கச்சேரியில் பிரதான ராகங்களாக தாமவதியையும், காம்போஜியையும் எடுத்துக் கொண்டார். இரண்டு ஆலாபனைகளுமே சற்று அதீதமாகப் பாடியதாகத் தோன்றியது. இரண்டு ஆலாபனைகளிலுமே போதிய அளவில் கார்வைகள் கொடுக்கப்படவில்லை என்றே தோன்றியது. குறிப்பாக காம்போதியில், தார ஸ்தாயி காந்தாரத்தில் நின்று நிதானமாய் ராகத்தை வளர்க்காதது அத்தனை நிறைவாக இல்லை. காம்போதியில் கண்ட ஜாதி அட தாளத்தில் அமைந்த ‘காசி விஷ்வேஸ்வர’ பாடலை முதல் முறையாய் கேட்டேன். காம்போதியின் கம்பீரம் நன்றாக வெளிப்படும் வண்ணம் உழைத்து இழைத்துப் பாடினார் ரவிகிரண்.

ரவிகிரண் கச்சேரி முடிந்ததும் அளிக்கப்பட்ட மதிய உணவுக்கு ஏகக் கூட்டம். ஒரு வழியாய் உண்டு வருவதற்குள் சீதா ராஜன் தன் மாணவியருடன் சில பாடல்கள் பாடிவிட்டிருந்தார். அடுத்த ஆண்டு அகண்டத்தில் 2-3 கவுண்டர்களில் உணவு பரிமாற ஏற்பாடு செய்யலாம். கனமும் கம்பீரமும் நிறைந்த கிருதிகளை ஒன்றன் பின் ஒன்றாக, ஆர்பாட்டமே இல்லாது, கிருதியின் முழு அழகும் பரிமளிக்கும் வண்ணம், ஒரே குரலில் சீதா ராஜனும் அவர் சிஷ்யைகளும் பாடியது மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது. ஒவ்வொரு கிருதிக்கு முன்னும், அந்தப் பாடலைப் பற்றிய சிறு குறிப்பையும் சொன்னது, கேட்டவர்களின் ரசிகானுபவத்தை அதிகப்படுத்தியிருக்கும்.

மதிய வேளையில், சவிதா ஸ்ரீராம், சங்கரி சுப்ரமணியம், பாரதி ராமசுப்பன் என்று மூன்று இளம் கலைஞர்களின் கச்சேரி இடம் பெற்றது. மூவரையும் முதல் முறையாய் கேட்டேன். சவிதாவின் கச்சேரி விறுவிறுப்பாக அமைந்தது. குறிப்பாக ‘ரேணுகா தேவி’ என்ற கன்னட பங்காள கிருதியை வெகு சிறப்பாகப் பாடினார். வேகமான சங்கதிகளில் ஒரு சில ஸ்ருதி விலகல்களை மட்டும் அவசியம் சரிபடுத்திக் கொள்ள வேண்டும்.

சங்கரி சுப்ரமணியத்துக்கு நல்ல குரல் இருக்கிறது. நாஸாமணி போன்ற விவாதி ராகங்களைக் கூட நாசூக்காக கையாளும் திறனும் இருக்கிறது. ஆனாலும், இளைஞர்தானே, அதனால் கொஞ்சம் தயங்கிப் பாடினார் போல இருந்தது. பயிற்சியும், அனுபவம் தரும் முதிர்ச்சியும் இவரை ஒரு தேர்ந்த கலைஞராக ஆக்கும்.

பாரதி ராமசுப்பனுக்கு கணீர் குரல்! மூன்று ஸ்தாயிகளிலும் நன்றாகப் பேசுகிறது. தீட்சிதர் கிருதிகள் பாடத் தேவையான அழுத்தம் இவருக்கு நிறையவே இருக்கிறது. வாயைத் திறந்து, வார்த்தைகள் புரியும்படி பாடுகிறார். ‘மானஸ குருகுஹ’, ‘ஸ்ரீதும் துர்கே’ என்று அவர் பாடிய அத்தனை கிருதிகளும் மணி மணியாய் ஒளிர்ந்தன.

மாலையில் நெய்வேலி சந்தானகோபாலன், விஜயலட்சுமி சுப்ரமணியம், டி.எம்.கிருஷ்ணா ஆகிய மூன்று பிரபல வித்வான்களின் கச்சேரிகள் நடைபெற்றன. நெய்வேலி சின்னதும் பெரியதுமாய் நிறைந்த (சிஷ்யப்) படையோடு வந்திருந்தார். கர்நாடக ராகங்கள், ஹிந்துஸ்தானி ராகங்கள், வெவ்வேறு காலப்ரமாணத்தில் அமைந்த கிருதிகள் என்று தேர்வு செய்து, அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பாகப் பாடும் வகையில் உழைத்துச் சொல்லிக் கொடுத்திருப்பதற்குப் பெரிய சபாஷ்!

விஜயலட்சுமி சுப்ரமணியம், எஸ்.ராஜத்தின் சிஷ்யை. அதிகம் தெரியாத கிருதிகளைப் பாடுவதே பாணியாகக் கொண்ட வழியில் வந்தவர். சாமந்தா, கோகிலாரவம் போன்ற அரிய ராகங்களையும், ’மரகத லிங்கம்’ என்ற வசந்தா ராக அரிய கிருதியையும் அவர் பாடியது ஆச்சரியம் ஒன்றுமில்லை. ‘பஜரே ரே’ என்ற பிரபல கல்யாணி கிருதியை பிரதானமாகப் பாடினர். ‘தேவீம் ஷக்தி பீஜோத்பவ’ என்ற இடத்தில் செய்த நிரவல் அளவாகவும் அருமையாகவும் இருந்தது.

‘Grand Finale’ என்ற முன்னறிவிப்புடன் டி.எம்.கிருஷ்ணாவின் கச்சேரி தொடங்கியது. ரயிலைப் பிடிக்க நேரமாகிவிட்டதால் அவர் பாடிய தரங்கிணியை மட்டுமே கேட்க முடிந்தது. ”செஞ்சுருட்டி போல இந்த ராகத்தைக் கையாள்கிறார்கள். ஆனால் இதுதான் சரியான முறை.”, என்று தரங்கிணியை விளக்கி, கிருதிக்கு விறுவிறுப்பாக கல்பனை ஸ்வரங்களும் பாடினார். கச்சேரியை முழுமையாகக் கேட்டவர்கள், அன்று “ஸ்ரீநாதாதி குருகுஹோ” கிருதியை வைத்துக் கொண்டு எம்.ஃபில் தீஸிஸே படித்து விட்டார் கிருஷ்ணா என்றனர்.

காலையில் அரங்கை நிறைத்த கூட்டம், நாள் முழுவதும் தொடர்ந்து இருந்ததைக் காண நிறைவாக இருந்தது.

Read Full Post »

முடிந்த சீஸனில் சௌம்யா, மேண்டலின் ஸ்ரீனிவாஸ், சஷாங்க், லால்குடி டூயட், அபிஷேக் ரகுராம் போன்றவர்களை கேட்க முடியாமல் போனது வருத்தம்தான். அந்த வரிசையில் நான் அதிகம் கேட்க விரும்பி, ஆனால் கேட்க முடியாமல் போனவருள் இன்னொருவர் காயத்ரி வெங்கடராகவன். இன்று அவருடைய கச்சேரி இருப்பதை பேப்பரில் பார்த்ததும், நிச்சயம் போய்விட வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

நல்ல கனமான சாரீரம். லயத்தில் நல்ல பிடிப்பு. பாவபூர்வமான சங்கீதம் என்று இவருடையதைக் கூறலாம். நிறைய கே.வி.நாராயணசாமி வழியில் பாடுகிறார் என்று எனக்குத் தோன்றும். ஒவ்வொரு ராகத்தையும், கீர்த்தனையையும் திளைத்து, ருசித்து, ரசித்துப் பாடுகிறார் என்று கேட்பவருக்கு நன்றாக விளங்கும்.

இன்று ஸ்ரீ பார்வதி கூடத்தில், பத்மா வீரராகவனின் கிருதிகளைப் பாடினார். பத்மா வீரராகவன் என்ற பெயரை நான் கேள்விப்பட்டதே இல்லை. ஸ்ரீபார்வதி அரங்கம் கச்சேரிக்கு அவ்வளவு உகந்தததல்ல. இருப்பினும் காயத்ரியின் கச்சேரியை தவறவிடக்கூடாது என்றே சென்றேன்.

தற்கால வாக்கேயக்காரரான பத்மா வீரராகவன், காயத்ரியின் முதல் குருவாம். நிறைய திவ்யபிரபந்தங்களுக்கு மெட்டமைத்திருக்கிறாராம். திருவிண்ணகரத்து ஒப்பிலியப்பன் மேல் நிறைய பாடல்கள் புனைந்திருக்கிறாராம். சமீபத்தில் ஸவர சாஹித்யங்களுடன் அவருடைய உருவாக்கங்கள் ”ஒப்பிலியப்பன் மலர்கள்” என்ற பெயரில் புத்தகமாய் வெளியாயுள்ளன. 72 மேளகர்த்தா ராகங்களிலும், ராக முத்திரையோடு, எளிமையான தமிழில் பாடல்கள் புனைந்துள்ளார்.

கச்சேரி கீரவாணி வர்ணத்துடன் தொடங்கியது. சில ஆவர்த்தங்கள் கல்பனை ஸ்வரங்களும் பாடினார். ’வானத்தின் மீதொரு அதிசயம்’ என்ற மோகன ராக கிருதி, நல்ல விறுவிறுப்பான காலப்ரமாணத்தில் அமைந்திருக்கிரது. ’நட்சத்திரங்கள்’ என்ற வார்த்தையில் அழகழகாய் சங்கதிகள்! அதற்கடுத்து ‘கம்பீர நடை காண’ என்ற பாடலை கம்பீர நாட்டை ராகத்தில் பாடினார். அதன்பின், கமாஸ் சாயல் அடிக்காமல், காம்போஜியின் பிரயோகங்கள் புகாமல் ஹரிகாம்போஜியை தனித்தன்மையுடன் மிளிரும் வகையில் short and sweet-ஆக ராகம் பாடினார். அதுவரை வயலினில் ரூபா ராஜகோபாலன் என்ன வாசித்தார் என்று கேட்கவில்லை. இந்த ராகத்தின் போது, கேட்க ஆரம்பித்தது. காயத்ரி பாடியதை, இவரும் பிரமாதமாய் வாங்கி வாசித்தார். ‘வருவாரோ வரம்’ என்ற பாடல் is a welcome addition to the raga. கச்சேரிகளில் பந்துவராளிக்கும், ஆனந்த பைரவ்களுக்கும் பதிலாக இந்த ராகத்தைப் பாடலாம். பாடலின் சரணத்தின் ராகத்தின் பெயரும் அழகாக பொருந்தியுள்ளது.

’பட்டாபிஷேகம் காண’ என்ற அடுத்த பாடல் ரசிகப்ரியா ராகத்தில் அமைந்துள்ளது. பாடலின் பல்லவி, இன்று பிரபலமாய் இருக்கும் ‘அருள் செய்ய வேண்டுமையா’ பாடலின் பல்லவியை நிறைய நினைவுபடுத்தியது. காயத்ரியின் பெரிய பலம் அவர் கொடுக்கும் பாவம். அவர் இழுத்து இழுப்புக்கெல்லாம் குரல் போகிறது. பிருகாவா, கார்வையா, ஜாருவா…நினைத்ததெல்லாம் பேசுகிறது. இன்று சாருகேசியில், தார ஸ்தாயியில் நின்று கார்வைகள் கொடுத்த பின், மத்ய ஸ்தாயி தைவதத்தை நோக்கி அவரோஹணித்து (புது பிரயோகம்! சரியா என்று தெரியவில்லை) கடைசியில் பல அழகிய கோவைகள் பாடி தார ஷட்ஜத்தில் ஆலாபனையை நிறைவு செய்த அழகிருக்கிறதே…த்சொ… த்சொ…அப்படி ஒரு உருக்கம். சாருகேஸி ராகம் பிரவாகமாய் ஓடியது. ‘நாவினிக்க மனமினிக்க’ என்று தீந்தமிழில் இசைமாறி பொழிந்தார். கல்பனை ஸ்வர பொருத்தங்களுக்கு பெயர் எடுத்த டி.ஆர்.சுப்ரமணியம்தான் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர். அவர் முன்னிலையில் காயத்ரி சாருகேஸியில் வைத்த பொருத்தங்கள் would have definitely made TRS proud.

ஈரோடு நாகராஜ் மிக உற்சாகமாய் மிருதங்கத்தில் பக்கபலமாக இருந்தார். வழக்கமாய் தொப்பியில் வாசிப்பவைகள், நம்மூரில் இருக்கும் ஒலியமைப்பால் கேட்காது. இன்று, தொப்பி நன்றாகக் கேட்டது. வலந்தலையில் வாசித்த ஃபரன்கள் எல்லாம் சுத்தமாய் கேட்கவில்லை. இன்று வாசித்த தனியில், திஸ்ர நடை கதி-பேதம் நன்றாக இருந்தது. கடைசியில் வைத்த கேர்வையும் ப்ளிச்சென்று இருந்தது.

சாருகேஸியைத் தொடர்ந்து தோடியிலும், ஷண்முகப்ரியாவிலும் கிருதிகளைப் பாடினார். தோடி கீர்த்தனை மிஸ்ர சாபுவில் அமைந்துள்ளது. நிச்சயம் மெயின் கிருதியாகக் கூட இதைப் பாடலாம் என்றே தோன்றியது. அமீர்கல்யாணியில் ‘நீல வண்ணக் கண்ணா’ என்று தாலட்டு பாடலொன்றில் கண்ணனை கொஞ்சிய போது, ஒவ்வொரு ‘தாலேலோவுக்கும்’ அரங்கிலிருந்த ஒவ்வொரு மனமும் தூளியாடின!

சிவரஞ்சனியில் தில்லானா பாடிய போது, அதற்குள் கச்சேரி முடிந்துவிட்டதே என்று தோன்றியது! பத்மா மெட்டமைத்துள்ள இரண்உ பாசுரங்களைப் பாடினார் காயத்ரி. அரியக்குடி அமைத்துள்ள சிந்து பைரவி மெட்டை விட, ‘அன்று இவ்வுலகம்’ பாசுரத்துக்கு, பேகடாவில் அமைக்கப்பட்டுள்ள மெட்டு எடுப்பாக உள்ளது. ‘அன்று இவ்வுலகம் அளந்தாய்’ என்ற வரியில் ‘அளந்தாய்’ என்ற வார்த்தையை கீழ் நோக்கி பிரயோகிக்குமாறு அரியக்குடி அமைத்துள்ளார். அவ்வார்த்தை மேல் நோக்கி செல்வது போல் அமைத்திருக்கிறார் பத்மா வீரராகவன். உலகளந்தவன் என்றது, தூக்கிய திருவடியே நினைவுக்கு வருவதால், புதிய மெட்டு இன்னும் நன்றாய் பொருந்துகின்றது.

நிறைவாக மங்களம் பாடினார். இந்த ‘மங்களம்’-தான் ஹம்சத்வனியில் அமைந்துள்ள ஒரே மங்களமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தப் பாடல்தான் பத்மா வீரராகவன் புனைந்த முதல் பாடலாம்.

ஸ்பென்சர் வேணுகோபால், ராஜி கிருஷ்ணன், அஷோக் மாதவ் போன்ற தற்கால வாக்கேயக்காரர் வரிசையில் பத்மா வீரராகவனையும் இன்று அறிய முடிந்தது. காயத்ரி போன்ற அவரது சிஷ்யர்கள் நிறைய பாடினால் நிச்சயம் இவரது புனைவுகள் காலத்தைத் தாண்டி நிற்கும்.

கச்சேரி முடிந்ததும், ‘உப்பிலியப்பன்’ என்று பாடுவதை விட ‘ஒப்பிலியப்பன்’ என்று பாடினால் இன்னும் நன்றாக இருக்கும் என்று காயத்ரியிடம் கூறினேன். “அதற்கென்ன, அடுத்த கச்சேரியில் மாற்றிவிடலாம்”, என்று அவருடைய ட்ரேட் மார்க் புன்னகை ஒன்றை வீசியபடி.

கச்சேரி முடிந்ததும் பேசிய டி.ஆர்.எஸ், காயத்ரிக்கு, melody princess’ (queen என்றால் வயதானவர் என்று தோன்றுகிறதாம்), என்று பட்டம் கொடுக்கலாம் என்றார்!

கச்சேரியில் ஒரே ஒரு குறைதான். ‘அதிசயம்’, ‘இசை’, ‘சேய்’, ‘சில’ போன்ற பதங்கள் ‘அதிஷயம்’, ‘இஷை’, ‘ஷேய்’, ‘ஷில’ என்று பாடப்பட்டன. இந்த ஒரு குறையை மட்டும் களைந்துவிட்டால், காயத்ரி நிச்சயம் melody princess-தான்!

Read Full Post »

ஜி.என்.பி நூற்றாண்டு மலர், கந்தர்வ கானம், பற்றிய விமர்சனம் இங்கே

Read Full Post »

லா.ச.ரா-வின் புதல்வர் சப்தரிஷி எழுதியுள்ள விமர்சனம் இந்த மாத அமுதசுரபியில். என் புத்தகம் வெளியான போது எனக்கொரு கடிதம் எழுதியிருந்தார். அதைப் படித்ததும், “கடிதம் என் புத்தகத்தை விட நன்றாக இருக்கிறது”, என்றேன். இப்போதும் அதைத்தான் சொல்லத் தோன்றுகிறது. லா.ச.ரா-வும் சுஜாதாவும் கலந்த கலவையாக சப்தரிஷியின் பிரயோகங்கள் ஜொலிக்கின்றன.

டிவிடியை இங்கே வாங்கலாம்

Read Full Post »

இம்மாதம் அம்ருதாவிலே வெளியான கட்டுரை (வெளியாகியிருக்கும் என்று நம்புகிறேன்)

வாருங்கள் செல்வோம் 1992-ம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதிக்கு. நேற்றும், அதன் முன் தினமும், ஸ்ருதி ·பௌண்டேஷன், ஜி.என்.பி-யின் இசையைப் பற்றிய ஆய்வின் முடிவுகளை நாரத கான சபையில் நடந்த கருத்தரங்கில் வெளியிட்டது. அதைப் பற்றி உங்களுக்குச் சொல்கிறேன். குறுக்கிடாமல் கேளுங்கள்.

ஸ்ருதி பத்திரிகையின் நிறுவனர் என்.பட்டபிராமன் தலைமையில், எஸ்.ராஜம், கல்கட்டா கிருஷ்ணமூர்த்தி, என்.ராமநாதன், ரிதா ராஜன், சுலோசனா பட்டாபிராமன் போன்ற கலைஞர்களும், இசை ஆய்வில் பல சாதனைகளைப் புரிந்தவர்களும் இருந்த குழு, ஆய்வின் முடிவுகளை ஜி.என்.பி இசைப் பதிவுகளின் வழியாக நிறுவியது.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள், சுமார் 150 மணி நேரம் செலவு செய்து, ஸ்ருதியின் ஆய்வுக் குழு ஜி,என்.பி-யின் இசையின் பல்வேறு கூறுகளைப் பற்றி ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளது.

முதலில், ஜி,என்.பி பாட வந்த காலகட்டம், அப்போது வெகு பிரபலமாக இருந்த அரியக்குடியின் கச்சேரி முறை, ஜி.என்.பி-யின் கச்சேரி முறை அவருக்கு முன் இருந்தவர்களின் முறையைத் தொடராமல், அறிவுப் பூர்வமாய் அணுகி, பல புதுமைகளைப் புகுத்தியது என்று பல விஷயங்களைத் தொட்ட பின், ஜி.என்.பி-யின் கச்சேரியின் பல்வேறு அம்சங்கள் ஆழமாக அலசப்பட்டன.

ஆரம்ப காலத்தில் ஜி,.என்.பி-யின் குரல், காலப்போக்கில் அது அடைந்த மாற்றங்கள் ஜி.என்.பி-யின் கச்சேரி தொடக்கம், ஒரு கச்சேரியை எப்படித் தொடங்கினாலும் அது கச்சேரியை எப்படி களை கட்ட வைத்தது போன்ற பல விஷயங்கள் அழகான ஆங்கிலத்தில் தெளிவாக விளக்கப்பட்டன.

ஜி.என்.பி-யின் ஆலாபனைகள், ராகத்தின் சிறு சித்திரம் (sketch), பிரதான கிருதிகளுக்கு முன் பாடும் ராகம், ராகம் தானம் பல்லவியின் பாடப்படும் ராகம், விருத்தங்களில் பாடும் ராகம் என பகுப்பட்டு, இவை ஒவ்வொன்றிலும் அவரின் அணுகு முறை எப்படி இருந்தது என்று தெளிவாக, உரிய எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளன.

முதல் பிடியிலேயே ராக சாயலைக் காட்டுதல், மாளவி, செஞ்சு காம்போதி போன்ற அபூர்வ ராகங்களைப் பாடும் போதும் கேட்பவருக்கு ராக லட்சணம் பதியும் படியாகப் பாடுதல், பாடுகின்ற கிருதிக்கு ஏற்ப ஆலாபனையை அமைத்துக் கொள்ளுதல், பல்லவிக்கு ராகம் பாடுவதில் தனக்கென்று ஒரு வழியை வகுத்து, நாதஸ்வரத்தில் மட்டும்தான் விஸ்தாரமான ராக ஆலாபனைகள் கொடுக்க முடியும் என்றிருந்த நிலையை மாற்றி, ராகத்தில் வெவ்வேறு இடங்களில் ஆலாபனையின் மையத்தை இருத்தி, அந்த மையத்தைச் சுற்றி சுற்றி பல நகாசு வேலைகள் செய்து, படிப் படியாய் வெவ்வேறு ஸ்தாயிகளில் ராகத்தின் ஸ்வரூபத்தை ஜி.என்.பி வெளிப்படுத்தியதை வெகு அழகாக விளக்கினர் ஸ்ருதி ஆய்வுக் குழுவினர்.

ஜி.என்.பி-யின் தானம், அவர் எடுத்துக் கொண்ட பல்லவிகள், பல்லவிக்கு எடுத்துக் கொண்ட ராகங்கள், ராகமாலிகை ஸ்வரங்கள் போன்றவற்றை அக்கு வேறு ஆணி வேறாக அலசிய விதம் மிகவும் ரசிக்கும்படி இருந்தது. ஜி.என்.பி கிருதிகளை அணுகிய விதம், பெரும்பாலும் பதச் சேதம் இன்றிப் பாடும் அவர் முறை (மறுகேலரா பாடலில் தவறாக பதம் பிரித்து இருப்பதையும் இந்தக் குழு சுட்டிக் காட்டத் தவறவில்லை), ஒரே அடியை பல முறை பாடும் போது வேறாக ஒலிக்கும் சங்கதிகளை அவருக்கு உரிய வகையில் அமைத்துக் கொண்ட விதம், அவர் அமைத்த சிட்டை ஸ்வரங்கள் ஆகிவற்றை அவர் பாடியிருக்கும் கிருதிகளின் ஒலிபரப்பின் மூலம் அழகாக விளக்கினர்.

நிரவலுக்கு அவர் எடுத்துக் கொண்ட அலாதியான இடங்கள், ஸ்வரப் ப்ரஸ்தாரத்தில் அவர் உபயோகித்த ஸர்வலகு முறை, பொருத்தங்கள் அமைப்பதில் முன்னோடியாக விளங்கிய விதம், ஸ்வராக்ஷரங்களின் மேல் அவருக்கு இருந்த காதல் என்பதையெல்லாம் விளக்கிய பின் ஜி.என்.பி இசையின் கூறுகள் என்று தவறாக நம்பப்பட்டு வந்த பல பரவலான கருத்துகளை உடைத்தெரிந்தன அந்தக் குழுவின் முடிவுகள்.

ஜி.என்.பி கிருதிகள் பாடிய விதம் அதீத வேகம் என்ற கருத்தை மறுத்து பாலகோபால, மாமவ பட்டாபிராமா, ஸ்ரீ சுப்ரமண்யாய போன்ற கிருதிகளை அவர் கே.வி.என், டி.கே.பி போன்ற விளம்ப காலத்துக்கு பெயர் போன வித்வான்களை விட குறைந்த வேகத்தில் பாடியிருப்பதை அறிவியல்பூர்வமாய் நிறுவினார்கள். Speed என்பது வேறு tempo என்பது வேறு. Speed என்பது நிஜம். Tempo என்பது போலி (Perception). ஜி.என்.பி-யின் இசையின் விறுவிறுப்பே வேகமென தவறாக் கருதப்பட்டது, என்கிறது ஆய்வுக் குழு.

ஜி.என்.பி-யின் ஸ்ருதி சுத்தத்தை அலசி, அவரது கடைசி காலத்தில் தள்ளாமையால் ஸ்ருதி விலகல்கள் ஏற்பட்டிருப்பது உண்மையெனினும், அவருக்கு ஸ்ருதி ஞானம் கிடையாது என்ற கூற்றில் உண்மை ஏதுமில்லை என்பது குழுவின் ஒருமித்த கருத்தாக இருந்தது. பிருகா என்றால் அது ஜி.என்.பி பாடுவதுதான் என்பது உண்மைதான் என்ற போதும், பிருகா மட்டுமே அவர் சங்கீதம் ஆகாது என்பதை விளக்கி, அவர் ஆலாபனையில் இருந்த சுத்த ஸ்வரங்களையும் கமகங்களையும் விளக்கி, குறிப்பாக ஜாருவை அவர் பயன்படுத்திய விதத்தை சாவேரி ராகத்தின் மூலம் வெளிப்படுத்திய விதம் வெகு ஜோர்.

சிறந்த பாடகராய் விளங்கியதைத் தவிர சிறந்த வாக்கேயக்காரராகவும் விளங்கிய ஜி.என்.பி-யின் கற்பனையில் உருவான கிருதிகளின் விரிவான அலசல் இடம் பெற்றது. அரிய ராகங்கள், தெரிந்த ராகங்களில் புதிய பிரயோகங்கள், அரிய ஸ்வராக்ஷரங்கள், கிருதிகளின் சங்கதி அமைப்பு, சிட்ட ஸ்வரங்கள், அவர் வழியைப் பின்பற்றுவோர் மட்டும் என்று இல்லாமல், மற்ற பாணியைப் பின்பற்றுவோரும் விரும்பிப் பாடும் பாடல்களாய் ஜி.என்.பி-யின் கிருதிகள் விளங்குவது என்று பல கருத்துகளை சுவை படக் கூறி, மாணவர்களைக் கொண்டு அவர் கிருதிகளை இசைக்கவும் வைத்ததைக் கேட்க கர்ணாம்ருதமாய் இருந்தது.

அவர் வழி நிலைக்கும் படி மாணவர்களை உருவாக்கியவர் ஜி.என்.பி. அவரின் பிரதான சிஷ்யர்களான எம்.எல்.வி மற்றும் தஞ்சாவூர் கல்யாணராமனின் இசையில் உள்ள ஜி.என்.பி பாணியின் கூறுகளையும், ஜி.என்.பி-யின் பாணியிலிருந்து வேறுபடும் கூறுகளையும் விளக்கி, ஒரு நல்ல சீடன், குருவின் பாணியை முழுவதுமாக பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லாததை படம் பிடித்துக் காட்டினர்.

கடைசியாக, ஜி.என்.பி இசைத் துறையில் ஆற்றிய பங்கையும், அவர் இசை இன்றும் ஏற்பொஅடுத்தும் தாக்கத்தைப் பற்றியும் அவருடன் பல முறை மேடையைப் பகிர்ந்து கொண்ட லால்குடி ஜெயராமன் விரிவாகப் பேசி, “சங்கீதத்துக்கு அழகும் புதுமையும் புத்துணர்ச்சியும் கொண்டு வந்து சங்கீதத்தின் எல்லைகளை விஸ்தரித்தவர் ஜி.என்.பி” என்று உரையை முடித்த போது அரங்கம் அதிர்ந்தது.

ஜீலியஸ் சீஸரின் ‘வினி விடி விஸி’ ஜி.என்.பி-க்கும் பொருந்தும் என்ற உமையாள்புரம் சிவராமன், பக்கவாத்தியங்களை ஊக்கப்படுத்துவதில் ஜி.என்.பி-க்கு நிகர் ஜி.என்.பி-தான் என்றார். இளம் பாடகரான சஞ்சய் சுப்ரமணியம், ஜி.என்.பி-யின் இசை எப்படியெல்லாம் தன்னை நெறிப்படுத்திக் கொள்ளவும், புதியதை நோக்கி பயனிக்கவும் உதவுகிறது என்பதை உணர்ச்சி பொங்கப் பேசியும் பாடியும் காண்பித்தார்.

“He had his faults but they fall into insignificance before his achievements. He himself knew to seperate the sand from gold. We must also do so”, என்று முடிவுரையுடன் கருத்தரங்கம் இனிதே முடிந்தது. கருத்தரங்கில், நான் கேட்டு மனதில் பதித்துக் கொண்டவற்றை விட தவறவிட்டவை அதிகம். நான் மனதில் ஏற்றிக் கொண்டவற்றுள் சொன்னதை விட சொல்லாமல் விட்டவை அதிகம். அப்படியென்றால் எப்பேர்ப்பட்ட தகவல் சுரங்கமாய் அந்தக் கருத்தரங்கம் இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்களேன்.

வயிற்றெரிச்சலாய் இருக்கிறதா?

“இந்தப் படுபாவி, பின்னோக்கி கூட்டிப் போனதுதான் போனான், இன்னும் இரண்டு நாள் பின்னாடி சென்றிருக்கக் கூடாது. நானும் கருத்தரங்கை நேரில் கண்டு களித்திருப்பேனே. ஜாங்கிரி நன்றாக இருந்தது என்று எழுதியதைப் படித்தால் ஜாங்கிரியின் சுவை தெரிந்துவிடுமா என்ன? நமக்குக் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம்தானே மிஞ்சும்”, என்று நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது.

காரணமாகத்தான் உங்களைக் கூட்டிச் செல்லவில்லை. 2009-ல் அமர்ந்து கொண்டே, நினைத்த மாத்திரத்தில் அந்தக் கருத்தரங்கைக் கண்டு களிக்கும் வசதி இருக்கும் போது, பின்னோக்கிப் போவானேன்?

1992-ல் நிகழ்ந்த கருத்தரங்கின் விடியோ பல வருடங்களாய் ஒரு சிலரிடம் மட்டுமே இருந்து வந்தது. ஜி.என்.பி-யின் நூற்றாண்டை உலகமே கொண்டாடும் இவ்வேளையில், ஸ்ருதி பத்திரிகையே அந்தக் கருத்தரங்கின் பதிவை, “The Music of GNB”, என்ற பெயரில் டிவிடி-களாக வெளியிட்டுள்ளது. அதை வாங்கினால் (விலை ரூ. 2000), வேண்டிய போதெல்லாம் பார்த்து மகிழலாமே. 

டிவிடி வாங்க விழைவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: தி ஸ்ருதி ·பௌண்டேஷன் 9, கதீட்ரல் சாலை, சென்னை – 600 086 தொ: 044 28128070 மி: sruti.magazine@gmail.com

Read Full Post »

பால ‘சேஷு’

21 Dec 2009 @ Krishna Gana Sabha, T.N.S Krishna, M.Chandrasekaran, Umayalpuram Sivaraman, E.M.Subramaniam

எனக்கு சேஷகோபாலன் பாட்டென்றால் உயிர். 2004 வரை சென்னையிலும், பெங்களூரிலும் பல இடங்களில் அவர் கச்சேரிகளைக் கேட்டிருக்கிறேன். தஞ்சாவூரில் படித்த போது, திருச்சிக்கு, இவர் கச்சேரி கேட்பதற்காகவே சென்றிருக்கிறேன்.

சில வருடங்களாய் இவரைக் கேட்க வேண்டுமென்றால், ஒலிப்பதிவுகளை நாடுவேன். நேரில் கேட்கும் அனுபவத்துக்கு ஏங்கும் போது டி.என்.எஸ் கிருஷ்ணாவின் கச்சேரிகளுக்குச் செல்கிறேன்.

பல சமயங்களில் பாத்திரம் பொன்னால் ஆனதாக இருக்கும், பண்டம் பழையதாய் இருக்கும். அல்லது, பண்டம் பாயசமாக இருக்கும், பாத்திரம் ஓட்டை விழுந்த தகரமாக இருக்கும். எப்போதாவது ஒரு முறைதான் பொற் பாத்திரத்தில் நற் பாண்டம் அமையும். கிருஷ்ணாவின் விஷயத்தில் அது நடந்துள்ளது.

கிருஷ்ண கான சபையில்  காலை வேளை கச்சேரி. எம்.சந்திரசேகரன், உமையாள்புரம் சிவராமன், ஈ.எம்.சுப்ரமணியம் என்று பக்க வாத்தியங்கள் பட்டியலே கச்சேரிக்கு என்னை இழுத்தது. அண்ணான் சாலையிலிருந்து, பனகல் பார்க் வரை, காலை ஒன்பது மணிக்கு மேல், ஒரு முறை கூட நிற்காமல் பாண்டி பஜாரைக் அடைந்த போதே, இந்த நாள் இனிய நாள் என்று உள்ளுக்குள் பட்சி கூவியது.

விடுமுறை நாட்கள் நீக்கி, மற்ற நாட்களில் காலை வேளை கச்சேரிகளை அனைத்து சபையினரும் இலவச கச்சேரிகளாக்கி விடலாம். ரிடையர் ஆன மாமிகளும், மாமாகளும் காசு கொடுத்து கச்சேரி கேட்பார்கள் என்று சபாகள் நினைப்பதுதான் ஆச்சர்ய்மாக இருக்கிறது. கிருஷ்ண கான சபை மாதிரி பெரிய அரங்குகளில் 50-60 இருந்தாலே கூட்டம் குறைச்சலாய்த்தான் தோன்றும். இன்று 20 பேர் கூட தேறி இருக்கமாட்டார்கள். சில வருடங்கள் முன், நாரத கான சபையில், இதே போன்ற நிலையில் பாடிய கிருஷ்ணா, “வந்து கேட்பார் இல்லையோ” என்று ஊர்த்துக்காடு பாடலை பாடிய போது  it became an unintentional situation song.

கூட்டம் இருக்கோ இல்லையோ, மேடை ஏறிவிட்டால் 100% உழைத்துப் பாடுகிறார் கிருஷ்ணா. இன்று பக்கவாத்தியங்களின் உற்சாகமும் சேர்ந்து கொண்டிருக்கும். தர்பார் ராகத்தை இழை ஓட விட்டு, வர்ணத்தை ஆரம்பித்த போது, சாகேதராமனுக்கு செய்தது போல இவருக்கும் குரல் மக்கர் செய்யுமோ என்று பயந்தேன். வர்ணத்தைப் பாடி, சில கல்பனை ஸ்வரங்களையும் அள்ளி வீசிய போது குரல் ஓரளவு பதத்தை அடைந்தது. பாதி கச்சேரி வரை தார ஸ்தாயியில் பாடிய போது ஒரு வித strain தென்பட்டது. பிரதான ராகம் பாடும் போது, குரல் நல்ல பதத்தை அடைந்திருந்தது.

ஸ்ரீ ரகுகுல ஹம்சத்வனியில் பாடி, துரித கதியில் நிரவலும் ஸ்வரமும் பாடினார். ‘பகரி நிபக கநிரி ரிநிப’ என்று மும்மூன்று ஸ்வரங்களாய் பற்பல கோவைகள் அமைத்துப் பாடிய ஸ்வரங்கள் அற்புதமாய் இருந்தன.

ஹம்சத்வனியைத் தொடர்ந்து, பூர்வி கல்யாணியை விஸ்தாரமாக ஆலாபனை செய்தார். அவசர அவசரமாய் பஞ்சமத்துக்குச் சென்று கார்வை கொடுக்காமல், மந்த்ர ஸ்தாயியிலே விஸ்தாரமாகப் பாடியது சிறப்பு. ஸ்வரம் ஸ்வரமாய் ஆலாபனையை நகர்த்தி வளர்க்கும் போதே, ஆலாபனையின் மையத்திலிருந்து தள்ளி இருக்கும் ஸ்வரங்களுக்கும் அவ்வப்போது தாவி, கேட்பவரை வியப்பில் மாழ்த்துவது TNS பாணி.

இதனை நால், macroscopically linear and microscopically non-linear என்பேன். கிருஷ்ணாவின் ஆலாபனையும் இவ்வகையில்தான் அமைந்திருந்தது. ரப்பராய் இழுத்து,நிறுத்திப் பாடிய சஞ்சாரங்களோடு, துரித கால சஞ்சாரங்களைக் கோத்து அமைந்த ஆலாபனை பூர்வி கல்யாணையை உருக்கமாகவும், அதே சமயத்தில் அழுது வடியாமல் இருக்கும் படியும் மிளிரச் செய்தது. காந்தாரத்தில் மையம் கொண்டு, சுழற்றி சுழற்றி பல அலைகளை எழுப்பி, இறுதியில் அடுத்த ஸ்த்தைத் தொட்ட போது என்னை அறியாமல் கைகளைத் தட்டினேன். இப்போது தொட்டுவிடுவார் என்று எதிர்பார்த்திருக்கும் போது தொடாமல், தவிப்பை அதிகமாக்கி, இறுதியில் தொடும் போது, ஒரு வித relief ஏற்படுகிறது. அதுவே என்னை கைதட்ட வைத்தது என்று நினைக்கிறேன்.

கச்சேரி முழுவதும் சந்திரசேகரன், அழகாய் அளவாய் வாசித்தார். கிருஷ்ணாவின் சாகசங்களில் கலந்து கொள்ளாவிடுனும், தன் வாசிப்பால் அந்த சாகசங்களுக்கு சங்கடம் வராமல் பார்த்துக் கொண்டார்.

ஆலாபனையைத் தொடர்ந்து நினுவினாகமரி தொடங்கிய போது, காலப்ரமாணத்தை ஒரு இழை குறைத்துக் கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என்று தோன்றியது. ஸ்வரத்தில் கொஞ்சம் விவகாரங்கள் ரொம்பவும் தலை  காட்டாமலும் அரவும் நீக்காமலும் பாடியது நன்றாக இருந்தது.

அடுத்ததாக, நல்ல சவுக்கமன காலப்ரமாணத்தில் நீலாம்பரியை இழைத்து இழைத்து ‘அம்ப நீலாயதாக்ஷி’ பாடினார். அவ்வப்போது விழுந்த ஜாரு பிரயோகங்கள் சொக்க வைத்தன. பிரதான ராகத்துக்கு முன் விறுவிறுப்பான பாடல் ஒன்றைப் பாடியிருக்கலாம். கிருஷ்ணா தோடியை பிரதான ராகமாக எடுத்துக் கொண்டார்.  டி.என்.எஸ் தன் முப்பதாவது வயதில் எப்படிப் பாடியிருப்பார் என்று இன்று கிருஷ்ணா பாடிய தோடியைக் கேட்டிருந்தால் உணரக் கூடும். இதை நான் சொல்லவில்லை, ஆலாபனை முடிந்ததும் உமையாள்புரம் சிவராமன் கூறினார். ஆலாபனையில் அசைந்தாடும் கமகங்களையும், அசையாத சுத்த

ஸ்வரங்களையும் அழகாக கோத்து அளித்தது என்னை வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக தோடியின் தைவதத்தைச் சுற்றிச் சுற்றிப் பாடியது என்னை வெகுவாகக் கவர்ந்தது. தோடியின் போது கிருஷ்ணாவின் குரல் அற்புதமான நிலையில் இருந்ததால், ரவை சங்கதிகள் எல்லாம் அநாயாசமாய் விழுந்தன. கிருஹ பேதம் செய்து, மோஹன கல்யாணியை கோடி காட்டிவிட்டு மீண்டும் தோடிக்கு வந்தார். ஷட்ஜ பஞ்சம வர்ஜமாய் பிருகா மழை பொழிந்த போது, நிஜமாகவே மனதாரக் கைதட்டினேன்.

பட்டம்மாள் ஸ்பெஷல் ‘தாசுகோவ’ பாடி, ‘சௌமித்ரி தியாகராஜு’-வில் நிரவலும் ஸ்வரங்களும் பாடினார். மிஸ்ர ஜம்பை தாள அமைப்பைக்குள் பல்வேறு சிக்கலான அமைப்புகளை நிர்வகித்த போதும் தோடியின் ராக பாவம் கெடாமல் பாடியது அற்புதம். கிருஷ்னாவின் அப்பா ஜூனியராய் இசைத் துறையில் இருந்த காலத்துக்கு பல காலம் முன்னரே பிரபல வித்வானாகிவிட்ட சிவராமன், இன்றும் உற்சாகமாய் வாசித்ததைக் காண நன்றாக இருந்தது. இன்று அவருக்கே அவரது மிருதங்கத்தின் மேல் திருப்தி இல்லை. பாதி கச்சேரிக்கு மேல் இரண்டாவது மிருதங்தங்கதில் வாசித்தார். தனியில், சிவராமன் வாசித்த மோராவை சுப்ரமணியன் வாசிக்க முடியாமல் தவித்த போது, “இன்னும் கொஞ்சம்தான் வந்துடும். மறுபடியும் வாசி”, என்று சொல்லி, தானும் பாதி வழியில் உதவி கடம் வித்வானுக்குப் பாடம் நடத்தினார். ராகமாலிகை விருத்தமும், ஹரிகேசநல்லூரின் ஹம்சானந்தி தில்லானாவும், சிந்து பைரவியில், ஐயப்பன் மேல் ஒரு தமிழ்ப் பாடலும் பாடி, கச்சேரியை நிறைவு செய்தார் கிருஷ்ணா.

9.30 மணிக்கு ஆரம்பித்த கச்சேரி, 11.30-க்கே முடிந்துவிட்டது. சபையின் அடுத்த கச்சேரி 2.00 மணிக்குத்தான் என்ற போதும், கச்சேரியை இவ்வளவு சீக்கிரம் முடித்திருக்க வேண்டாம். இன்னும் அரை மணி நிச்சயம் பாடியிருக்கலாம். குரல் நன்றாக பதம் அடைந்த சற்றைக்கெல்லாம் கச்சேரி முடிந்துவிட்டதுதான் கொஞ்சம் வருத்தம். பாடுவதற்கு சிரமமான சேஷகோபாலன் பாணி சங்கீதம் அவரோடு முடிந்துவிடாது. நிச்சயம் வாழையடி வாழையாய்த் தொடரும் என்பதை இன்றைய கச்சேர்யினைக் கேட்ட அனைவரும் ஒப்புக் கொள்வர்.

Verdict: Great concert. Brilliant thodi. Could have sung for at least another 30 mins.

Read Full Post »

Trichur Brothers (Srikrishna Mohan, Ramkumar Mohan), Trchur Mohan, D.V.Venkatasubramanian @ Brahma Gana Sabha

சீஸனில் நடக்கும் கச்சேரிகளின் எண்ணிக்கையைப் பார்த்தால், ப்ரைம் ஸ்லாட் இல்லாத கச்சேரிகள் நடக்கும் சமயத்தில், பாட்டு கேட்பவர்களை விட பாடுபவர்கள் அதிகம் இருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இள பாடகர்களுக்கு இவை பெரும் வாய்ப்புகளாய் அமைகின்றன. என்னைப் போன்ற கர்ம சிரத்தையாய் கேட்பவர்கள் பாடுதான் திண்டாட்டம். எங்கே போவது என்று குழப்பம் தீராத ஒன்று.

நான் இதுவரை கேட்காதவர்கள் பலர் இருப்பதால், இளம் பாடகர்களின் கச்சேரிகளை யாரேனும் பரிந்துரைக்காமல் செல்வதில்லை. எப்படியும், நன்றாகப் பாடுவார் என்று நான் நினைப்பவரின் கச்சேரி, எங்கேயாவது இருக்கும் போது, பாடகரைப் பற்றி ஒன்றும் தெரியாமல் ஏன் செல்ல வேண்டும் என்ற எண்ணம்.

அந்த வகையில், இத்தனை நாள் திருச்சூர் சகோதரர்களின் கச்சேரியை கேட்காமல் இருந்தேன். சில நாட்கள் முன் சிமுலேஷன் ஒரு பின்னூட்டத்தில் இவர்களைப் பற்றி சொல்லியிருந்ததாலும், இவர்கள் கச்சேரி செய்த அரங்கில் இவர்களுக்குப் பிறகு காயத்ரி வீணை வாசித்ததாலும் இன்று பிரம்ம கான சபா சென்றேன்.

காயத்ரியின் வாசிப்பைப் பற்றி சொல்ல எனக்குக் கொஞ்சம் கூட அருகதை கிடையாது. வீணைக்கு வாணி எல்லாம் உல்லாலகாட்டிக்கு. வீணை என்றால் அது காயத்ரிதான் என்பது என் துணிபு. பந்துவராளி, ஆரபி, பிருந்தாவன சாரங்கா, தோடி, கோசலம் ஆகிய ராக தேவதைகள் புண்ணியம் செய்தவை. அதனால்தான், இன்று காய்த்ரியால் விஸ்தாரமாய் வாசிக்கப் பெற்றன. இத்துடன் அந்தக் கச்சேரியைப் பற்றி நிறுத்திக் கொள்கிறேன்.

இன்று திருச்சூர் சகோதரர்களுக்கு நாகை ஸ்ரீராம் வயலின் வாசிப்பதாய் இருந்ததாம். ஏதோ காரணத்தினால் அவர் வாசிக்க முடியாததால், கடைசி நிமிஷத்தில் கண்டதேவி விஜயராகவன் வாசிக்க ஒப்புக் கொண்டாராம். கச்சேரி தொடங்கும் முன், சகோதரர்களில் மூத்தவராய் தெரிந்தவர் இந்த விஷயத்தைக் கூறி, விஜயராகவனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இருவருக்கும் நல்ல சாரீரம். மூத்தவரின் குரலில் நல்ல கனம். இளையவர் குரல் comparitively சன்னமாய் ஒலிக்கிறது. இருவரின் குரலும், மந்திர ஸ்தாயி மத்ய்மத்தை சுலபமாகத் தொடும் போதும் கூட, நல்ல கனத்துடன் ஒலிக்கிறது.

வர்ணங்களில் எனக்கு மிகவும் பிடித்தவை கமாஸில் “மாதே”, பைரவியில் “விரிபோனி”. இன்று கச்சேரி கமாஸ் வர்ணத்துடன் தொடங்கியது. முக்தாயி ஸ்வரத்தில், ஸ்வரத்தை முதல் காலத்திலும், சொற்கட்டுகளை திஸ்ரத்திலும், சாஹித்யத்தை இரண்டாம் காலத்திலும் பாடியது அற்புதமாய் அமைந்தது.

வர்ணத்தைத் தொடர்ந்து நடநாராயணியில் “மஹா கணபதே” பாடினர். இந்தக் கிருதியை வாத்யத்தில்தான் கேட்டுள்ளேன். நான் கேட்ட வரையில், இந்தக் கிருதியின் காலப்ரமாணம் துரிதமாகவே இருந்தது. இன்று, துரிதமும் இல்லாமல், ஒரேடியாய் சவுக்கமுமாய் இல்லாமல், இவர்கள் பாடிய கால்ப்ரமாணம்,  “இந்த அழகையா இவ்வளவு நாள் ரசிக்காமல் இருந்தோம்”, என்று எண்ண வைத்தது.

அடுத்து பாடிய பந்துவராளி sketch-ஐ தொடர்ந்து, “பரிபாலய” என்ற சுவாதி திருநாள் கிருதி பாடி, சரனத்தில் நிரவல் செய்தனர். நிரவல் விறு விறுப்பாக அமைந்து கச்சேரியை களை கட்ட வைத்தது. வயலினில் விஜயராகவன், பக்க பலமாய் விளங்கினார். அவரது மந்திர ஸ்தாயியும் கேட்க இனிமையாய் இருந்தது.

கச்சேரியின் முதல் பிரதான ராகமாக வசந்தாவை எடுத்து ஆலாபனை செய்தனர். ஆலாபனை வெகு நன்றாக அமைந்தது. இருவரின் குரலும் சர்க்கரை கரைச்சலாக இருக்கிறது. அகாரத்தில் கேட்க வெகு அற்புதமாய் இருக்கிறது. தார பஞ்சமத்தை அநாயாசமாக தொட்டுவிடும் சாரீரத்தை வைத்துக் கொண்டு, தார ஷட்ஜத்தில் நின்றபடி ‘ம்-காரத்தில்’ சஞ்சாரங்கள் தேவையா? வாயைத் திறந்து பாடினால் இன்னும் கூட நன்றாக இருந்திருக்குமே. இது ஒரு குறை அல்ல. அவர்கள் பாடியது அற்புதமாகத்தான் இருந்தது. இன்னும் கூட நன்றாக இருக்க வாய்ப்புகள் இருந்தனவோ என்று தோன்றியது. இன்னும் சில விஷயங்கள் கூட நெருடின. அவை, இன்று பாடப்பட்ட எல்லா ராகங்களுக்கும் பொருந்தும் என்பதால் கடைசியில் சொல்கிறேன்.

“ஹரிஹர புத்ரம்” என்ற தீட்சிதரின் கிருதி வசந்தாவின் இமயம். சவுக்க காலத்தில், கண்ட ஏகத்தில், கம்பீரமாய் மிளிரும் கிருதியை அற்புதமாய் பாடினர். இது போன்ற கிருதிகளுக்கு, நிட்ரவல் ஸ்வரம் எல்லாம் தேவையே இல்லை. கிருதியை ஒழுங்காகப் பாடினாலே ராக பாவம் முழுமையாய் வந்துவிடும். இதனை உணர்ந்து, அளவோடு நிறுத்திக் கொண்ட சகோதரர்களுக்கு சபாஷ்!

ஜி.என்.பி பல கிருதிகளை கச்சேரி மேடையில் புழங்கச் செய்துள்ளார். அவற்றை, அவர் பாடிய விதத்தில் கேட்கத்தான் எனக்கு விருப்பம். ஒரு கிருதியை மட்டும் அவர் பாடிய விதத்தில் பாடாமல் இருந்தால் நன்றாயிருக்குமே என்று எனக்குத் தோன்றும். பூர்ணசந்திரிகாவில் “தெலிஸி ராம”-தான் அந்த கிருதி.  “ராமா என்றால் பரப்பிரம்மம் என்றும் பொருள், ஆனால் சிலர், பெண் என்றொரு அர்த்தமும் அதற்கு இருப்பதாகக் கூறுவர். அவர் காமாந்தகராய் இருந்தாலன்றி அவருக்கு இந்த அர்த்தம் தோன்றாது”, என்று கடுமையான சாடல் நிறைந்த பாடல். அதை அதி துரிதத்தில் சிட்டை ஸ்வரம் எல்லாம் போட்டுப் பாடும் போது, ஏதோ சந்தோஷமான பாடல் போன்ற எண்ணம் ஏற்படுகிறது. இந்தக் காரணத்தால், இன்று திருச்சூர் சகோதரர்கள், இந்தப் பாடலை துரித காலத்தில் பாடியதை என்னால் அதிகம் ரசிக்க முடியவில்லை. (அது அவர்கள் குற்றமல்ல.)

பொதுவாக, கச்சேரிகளில் சுத்த மத்யம ராகங்கள் ஒலிக்கும் அளவுக்கு பிரதி மத்யம ராகங்கள் ஒலிப்பதில்லை. இன்று விரிவாகப் பாடப்பட்ட ராகங்கள் முன்றுள், இரண்டு பிரதி மத்யம ராகங்களாக அமைந்ததைக் காண மகிழ்ச்சியாக இருந்தது. 

கரணம் தப்பினால் மரணம் என்ற வகை ராகம் சுசரித்ரா. சுத்த ஸ்வரங்களை நன்றாக சாதகம் செய்திருந்தால்தான், இது போன்ற ராகங்களை கையாள முடியும். சிலர், இது போன்ற ராகங்களை கஷ்டப் பட்டு பாடுவார்கள். அதைக் கேட்பதும் கஷ்டமாகவே இருக்கும். இன்று இவர்கள், தோடி, கல்யாணி, பைரவி பாடுவது போல, பிரதான ராகமாக சுசரித்ராவை  அநாயசமாக ஆலாபனை செய்தனர்.  அரைத்த மாவையே அரைக்காமல், புதியதாய் பாட முயன்றதற்கே இவர்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். இருவரும் சேர்ந்து 16 நிமிடங்கள் ஆலாபனை செய்தனர்.அவர்கள் பாடியதை எல்லாம் பத்து நிமிடத்துக்குள் அடக்கி, அற்புதமாய் வாசித்தார் விஜயராகவன். சுசரித்ராவை ஆரம்பித்ததும், “வேலும் மயிலுமே” பாடப் போகிறார்கள் என்று நினைத்தேன். ஆலாபனையைத் தொடர்ந்து, தானம் பாட ஆரம்பித்ததும், சற்றே வியந்தேன்.  தானத்தை, பெயருக்குப் பாடாமல், மத்யம காலத்தில், ராகம் முழுமையாய் வெளிப்படும் படி பாடியது நிறைவாய் இருந்தது. ஆனால் தானம் பாடி முடிக்கும் போதே, நேரம் நிறைய ஆகிவிட்டது.

“ராமா ராகவா பாஹிமாம். சுசரித்ர பட்டாபி”, என்ற ஆதி தாள பல்லவி. (2 களை, சமத்தில் எடுப்பு). நேரக் குறைச்சலால் நிரவல் செய்யாமல் நேரே ஸ்வரத்துக்குத் தாவிவிட்டனர். கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும், புரிந்து கொள்ள முடிந்தது. நிரவல் செய்யவே நேரம் இல்லாத போது, ஸ்வரப்ரஸ்தாரத்தை சுசரித்ராவிலேயே நிறைய பாடி இருக்கலாம். ஒரு ராகத்தை வெகு நேரம் பாடினால் அலுப்பு ஏற்படும் என்பதனால், ராகமாலிகை ஸ்வரங்கள் பாடும் பழக்கம் ஏற்பட்டது. சுசரித்ராவே முழுமையாகப் பாட நேரமில்லாத போதும், ஆனந்த பைரவி, வலஜி, ரேவதி போன்ற ராகங்களில் ராகமாலிகை தேவைதானா, என்ற கேள்வி எழுந்தது. அதுவும் ஆனந்த பைரவியின் mood-ம் சுசரித்ராவின் mood-ம் முற்றிலும் வேறுபட்டு இருந்தன. இதனால், நல்ல கனவு, திடீர் என்று கலைந்த உணர்வு ஏற்பட்டது.

கடைசியில் வைத்த கோர்வையில் ராக ஆரோகண, அவரோகணம் வரும்படியாக வைத்தது, நன்றாக இருந்தது. இது போன்ற அரிய ராகங்கள், ரசிகர் மனதில் புரிய ஏதுவாயிருக்கும். எனக்குப் பக்கத்தில் இருந்தவருக்கும், இந்த கோர்வையை கேட்டவுடன்தான், இது மேளகர்த்தா ராகம் என்று விளங்கியது.

ஸ்வரங்களுக்குப் பின், பல்லவியை திரிகாலம் செய்து, திஸ்ரமும் செய்தனர். கச்சேரியின் கடைசிக்குத் தனி தள்ளப்பட்டதால், crisp-ஆக அமைந்தது. மிருதங்கம் வாசித்தவர் சகோதரர்களின் தந்தை திருச்சூர் மோகன் என்பதால், வருத்தப்பட்டிருக்க மாட்டார். கடம் வாசித்தவர் டி.வி.வெங்கடசுப்ரமணியம். இருவரும் திஸ்ர நடையில் கொஞ்சம் கோடி காட்டிவிட்டு, சௌக்யமாக வாசித்தனர். தனியில் குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றுமில்லை என்றாலும், பாடல்களுக்கு நல்ல போஷாக்கு அளிக்கும் வகையில் வாசித்தனர்.

சரி, முன்னால் சொன்ன நெருடல்களுக்கு வருவோம்.

இரட்டையர்கள் கச்சேரிகளில், பொதுவாய், ஒருவர் ஒரு ராகத்தையும், மற்றவர் இன்னொரு ராகத்தையும் ஆலாபனை செய்வர். அன்றைய ஆலத்தூரிலிருந்து, இன்றைய லால்குடி siblings வரை இதுதான் நடைமுறை. இல்லாவிடில், பாதி ராகத்தை ஒருவர் நிர்வகிக்க, மீதியை மற்றவர் நிர்வாகம் செய்வார். திருச்சூர் சகோதரர்கள், நிமடத்துக்கு ஒரு தரம் மாறி மாறிப் பாடுகின்றனர். பெரியவரின் குரலில் அழகாக உருவாகும் வடிவம், முழுமை பெறும் முன்னரே அடுத்தவரின் குரல் கேட்கும் போது, கொஞ்சம் தொடர்ச்சி அடி வாங்குகிறது. உதாரணமாக, ஆலாபனையின் ஒரு இடத்தில் ஒரு வர்ஜ பிரயோகத்தை ஒருவர் ஆரம்பிக்க,அது முழுமையாய்ப் பாடு முன்னரே மற்றவர் வேறொரு பிரயோகத்தை ஆரம்பித்துவிட்டார். சில இடங்களில், இருவருமே ராகத்தின் ஒரே மாதிரியான பிடிகளை, அவரவர் பாணியில் அடுத்தடுத்து பாடுகின்றனர். இது போன்ற ஆலாபனை ஜுகல்பந்திகளுக்குப் பொருத்தமாக இருக்கும். அங்கு ‘sawal jawab’ வகையிலான விரிவாக்கங்களை எதிர்பார்த்துப் போவோம். ஆதலால், ஒருவர் பாடிய இடத்தை, அடுத்தவரும் பாடினாலும் அலுப்பு ஏற்படுவதில்லை. ஒருவர் பாடினால் 10 நிமிடத்தில் முடியும் ஆலாபனை, இருவரும் பாடுவதால் 15 நிமிடங்களுக்கு  நீட்டிக்கப் படுகிறது.

இன்னொரு விஷயம். ஆலாபனையின் ஆரம்பத்தில் நிதானமாகப் பாடினாலும், சில இடங்களில் கற்பனையில் உதிப்பதை எல்லாம் கொட்டித் தீர்த்துவிட வேண்டும் என்கிற வேகம் தென்பட்டது. மைசூர் பாகு செய்வதைப் பார்த்திருக்கிறீர்களா? பாகாக்கி ஊற்றினால் மாடும் சாப்பிட முடியாது. உலரும் முன், அதை துண்டங்களாக்க வேண்டும். ஒரே பாகு என்றாலும், துண்டங்களுக்கு இடையில் கொஞ்சம் இடைவெளி வேண்டும். அளவும் சீராக இருக்க வேண்டும். அப்போதுதான் பார்க்கவும், சுவைக்கவும் ஏற்றதாய் இருக்கும். இது ராகங்களுக்கும் பொருந்தும். குறிப்பாக, இருவரில் மூத்தவர் இதை நன்குணர வேண்டும். ஆலாபனையில் பல அழகிய கோவைகளுக்கு இடையே கொஞ்சம் நிறுத்தங்கள் (pause) கொடுத்துப் பாடினால், ராகத்தின் விரிவாக்கத்தை ரசிகர்கள் உள்வாங்கிக் கொள்ள ஏதுவாய் இருக்கும். இல்லையெனில்,  ஒரு சங்கதியை ரசிப்பதற்குள், மூன்று சங்கதிகள் கடந்து சென்றுவிடும்.

இவை எல்லாம் கொஞ்சம் நெருடினாலும், கச்சேரி ரொம்பவே ரசிக்கும் படி இருந்தது. சீஸனில் நிச்சயம் கேட்க வேண்டும் என்று நான் வைத்திருக்கும் பட்டியலில், இவர்களுக்கும் நிச்சயம் ஒரு இடமுண்டு.

Read Full Post »

a9இந்தியப் பாரம்பரிய இசையையும், இசைக் கலைஞர்களையும் பற்றிய ஆவணப் படங்கள் அரிது. அப்படியே வந்தாலும் அவற்றில் என்ன இருக்கும்?

இந்த வருடம், இந்த நாளில் இவருக்கும் அவருக்கும் மகனாகவோ  மகளாகவோ பிறந்தார் என்று தஞ்சாவூர் ஜில்லா கிராமத்து வீட்டை லாங் ஷாட்டில் காட்டுவர். அதன் பின், பிறந்த சில நாட்களிலேயே காலையில் கல்யாணியையும், மதிய உணவுக்கு மத்யமாவதியையும், சாயங்காலமாக சாயா தரங்கிணியும், ராத்திரிக்கு ராகவர்த்தினியையும் உட்கொள்ள ஆரம்பித்தார் என்று காலம் காலமாக அவ்விசைக் கலைஞரின் குடும்பத்தில் சுழன்று வரும் கட்டுக்கதையை கர்ம சிரத்தையாய் பதிவு செய்வர். அக் கலைஞரின் குருவின் மங்கிப் போன புகைப்படத்தைக் காட்டிய பின், அவர் முதல் கச்சேரி நடந்த இடம், தேதி எல்லாம் பட்டியலிடுவர். முதல் பத்து நிமிடம் இவை எடுத்துக் கொள்ள, அடுத்த 50-60 நிமிடங்களோ அந்தக் கலைஞரின் உறவினர், உடன் இசைத்தோர், பழகியோர், நண்பர்கள், சீடர்கள் என்று பலரின் நேர்காணல்களின் தொகுப்பாக அமையும். இந்தத் தொகுப்பில் மிஞ்சிப் போனால் ஐந்து நிமிடங்களுக்குத்தான் கலைஞரின் இசையைப் பற்றிய செய்திகள் இடம் பெறும். மற்ற நேரமெல்லாம் ‘trivia’ எனப்படும் உப்பு பெறாத சமாசாரங்கள் இடம் பெறும். அவர் உபயோகித்த தட்டு வெள்ளியில் தங்க முலாம் பூசியிருக்கும், அவர் ஆந்திராவுக்கு சென்ற போது உப்புமாவை விரும்பி சாப்பிட்டார், குடுமி வைத்துக் கொண்டல்தான் சிஷ்யனாக சேர்த்துக் கொள்வார், போன்ற அவசியமே இல்லாத செய்திகள்தான் நேரத்தை வீணடிக்கும். இவற்றின் நடுவே சேர்க்கப்பட்டிருக்கும் கலைஞரின் இசையும், புகைப்படங்களுமே அந்த ஆவணத்தை ஒரு முறை முழுமையாக காண வழி செய்யும். கடைசி வரை, அந்த இசைக் கலைஞரின் இசைச் சிறப்பு என்ன? அவர் மறைந்து பல ஆண்டுகள் கழித்தும் அழியாமல் இருக்கும் அவர் இசையின் கூறுகள் எவை, என்றெல்லாம் மருந்துக்கும் செய்தியிராது.

மேற் சொன்ன விமர்சனம் பொதுவான ஒன்று. அதைப் பொய்யாக்கும் வகையில் சமீபத்தில் ஒரு ஆவணப் படத்தைக் காண நேரிட்டது. ‘Sanskriti Series’-ல் வெளியாகியிருக்கும் ‘Ramanathapuram Krishnan – The Musician’s Musician’ என்ற ஆவணப் படம்தான் அது. மதுரை மணி ஐயர், அரியக்குடி, ஜி.என்.பி, செம்மங்குடி போன்ற ஜாம்பவான்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த போதும், தனக்கென ஒரு முத்திரை பதித்து, இசை ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பெற்ற இராமநாதபுரம் கிருஷ்ணனின் இசையை அழகாகப் படம் பிடித்திருக்கிறது இவ்வாவணம்.

புகழ் பெற்ற ஹரிகதை விற்பனரான பாலகிருஷ்ண சாஸ்த்ரிகளின் மகன் எஸ்.பி.காந்தன் இயக்கியிருக்கும் இந்தப் படம், இராமநாதபுரம் கிருஷ்ணனின் அழகிய சஹானா ராக ஆலாபனையை, நித்யஸ்ரீ, சௌம்யா, ஹரிஹரன், ரவிகிரண், உமையாள்புரம் சிவராமன் போன்ற பிரபல கலைஞர்கள் கேட்டு ரசிப்பது போன்ற காட்சியமைப்புடன் தொடங்குகிறது. பைரவி ராக தானம் பின்னணியில் ஒலிக்க கிருஷ்ணனின் பூர்வீக ஊர், பிறந்த ஊர், பெற்றோர் பற்றிய செய்திகள் நிமிட நேரத்துக்குள் விரிந்து மறைகின்றன. கிருஷ்ணனை செதுக்கிய இராமநாதபுரம் சங்கர சிவ பாகவதரைப் பற்றிய சிறு குறிப்புக்குப் பின், கிருஷ்ணனின் இசைக்கு அடித்தளம் வகுக்கும் வகையில் அமைந்த ஜி.என்.பி-யின் இசையும், வீணை தனம்மாளின் கச்சேரிகளும் அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடந்தவற்றை விவரிக்க ஓவியங்களை உபயோகித்திருக்கும் உத்தி அற்புதம். மணியம் செல்வனின் ஓவியங்கள், ஜி.என்.பி கச்சேரியின் முதல் வரிசையில் உட்கார்ந்து ரசிக்கும் கிருஷ்ணனையும், வீணை தனம்மாளின் வாரக் கச்சேரிகளில் தன்னை இழக்கும் கிருஷ்ணனையும் அழகுற கண்முன் கொணர்ந்து நிறுத்துகின்றன. அதைப் போலவே கிருஷ்ணனின் ரேடியோ கச்சேரியை கேட்கும் பிருந்தாவின் வரைபடமும், நாராயண தீர்த்தரின் பாடல்களான ‘கோவர்த்தன கிரிதாரா’ மற்றும் ‘கலைய யசோதே’ பாடல்களில் கண்ணன் செய்யும் லீலைகளை எழிலுற படம்பிடித்திருக்கும் ம.செ-வின் ஓவியங்கள் பேரழகு. சமஸ்கிருதம் தெரியாதவரையும் கிருஷ்ணனின் குரல் காட்டும் பாவங்கள் அடைந்து மனதை ஆட்கொள்ளும் என்ற போதும், அவர் குரலுடன் சேர்ந்து பாடலின் பொருளையும் மனதில் பதிக்க இந்த ஓவியங்கள் பெரிதும் உதவுகின்றன.

ஓவியங்கள் கொண்ட காட்சிகளைப் போலவே, மற்ற காட்சிகளிலும் சொல்ல வந்த கருத்து தெளிவாக பார்ப்பவரைச் சென்றடைய வேண்டுமென்பதில் இயக்குனரின் ஈடுபாடு தெளிவாகத் தெரிகிறது. இராமநாதபுரம் கிருஷ்ணனின் சாயலில் ஒருவரை தேர்வு செய்து, அவரை நிழலுருவாய் காட்டி, பின்னால் ஒலிக்கும் இசையை கிருஷ்ணனே பாடுவது போன்ற மாயையை உருவாக்கியிருப்பது மகத்தான சாதனை. பெருக்கெடுக்கும் ராகப்ரவாகத்தில் தெரிக்கும் கமகங்களும், பிருகாக்களும், இதர சஞ்சாரங்களும் ஒலிக்க மட்டும் செய்தால் கேட்பவர் பாடுவதை அவரவர் சௌகரியத்துக்கு கற்பனை செய்து கொள்ளலாம். அதையே ஒருவர் நடித்துக் காட்டுதல் என்பது சிக்கல்கள் பலவுண்டு. நெருடலான பல இடங்கள் ஒலிக்கும் போது அவ்விசைக் கேற்ப நடித்திருப்பவரின் அங்க அசைவும் அமைவது மிகக் கடினம். அதைச் செய்து காட்டியிருக்கும் இயக்குனரை எத்தனை புகழ்ந்தாலும் தகும். அதே போல, இசை ஒலிக்கும் போது தோன்றும் காட்சிகளும் கச்சிதமாய் பொருந்துகின்றன. இராமநாதபுரம் கிருஷ்ணனின் பேகடை ஒலிக்கும் போது காட்டப்படும் அருவியின் பெருக்கெடுப்பின் பல பரிமாணங்கள், ஒலிக்கும் ராகத்தின் பல பரிமாணங்களை பரிமளிக்க வைப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. ‘சங்கராபரணம்’ ராகம் ஒலிக்கும் போது, ராகத்தின் பெயருக்கு ஏற்ப சங்கரனை நடராஜ மூர்த்தியாய் காட்டி, அந்த சங்கரன் பூணும் ஆபரணமாய் பாடகரின் இசையை ஒலிக்கச் செய்திருப்பது நல்ல symbolic portrayal. அவரின் இசை மற்றவர்களை எப்படி பாதித்தது என்று மூத்த புல்லாங்குழல் கலைஞர் ரமணி, அவரை நேரில் கண்டிராத போதும் அவர் இசைக்கு வசப்பட்ட சௌம்யா, கர்நாடக இசைக் கலைஞராக இல்லாத போதும் அவரின் இசையிலிருந்து பாடங்கள் கற்ற கஜல் மற்றும் திரையிசைப் பாடகர் ஹரிஹரன் போன்றோரின் விளக்கங்களும் நன்றாக அமைந்துள்ளன.

சொல்ல வேண்டிய விஷயங்களை முன்னரே திட்டமிட்டு, இன்னார் இதை இதைச் சொல்ல வேண்டும் என்று நிர்ணயித்து, சொல்லப்பட்ட கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இசைச் செருகல்களை அமைத்திருப்பது அழகு. உதாரணமாக ராகம் தானம் பல்லவியில் அவருக்கு இருந்த ஆளுமையைக் கூறும் இடத்தில் ஒலிக்கும் கண்ட ஜாதி திரிபுடை தாளத்தில் அமைந்த வராளி ராக பல்லவி, “காணக் கிடைக்கும் சபேசன் தரிசனம்”, மற்றும், அவர் பாடும்போது ஒலிக்கும் வல்லின மெல்லினங்களைப் பற்றி சௌம்யா கூறிய பின் ஒலிக்கும் “துளஸம்மா” பாடல், பாபநாசம் சிவன் இவருக்காகவே எழுதியது போன்ற “கற்பகமே” பாடல், சஹானா கிருஷ்ணன் என்ற பெயர் இருந்தது சரிதான் என்று எளிதாக உணரும் வகையில் ஒலிக்கும் ‘ஸரியெவ்வரே’ பாடல், லயத்தில் நல்ல தேர்ச்சி இருந்த போதும் ஸர்வலகு ஸ்வரங்களை அரிய கோவைகளாக்கும் கிருஷ்ணனின் கல்பனை ஸ்வரங்களை லால்குடி விஜயலட்சுமி கூறிய பின் ஒலிக்கும் “அம்ம ராவம்ம” பாடல் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

* 1957-ல் அகாடமி கச்சேரியில் கண்ட நடை பல்லவியை கிருஷ்ணன் பாடிய போது, ரசிகர்களில் ஒருவர் அதே பல்லவியை சங்கீர்ண நடையில் பாடுமாறு கேட்டுக் கொள்ள, அதே கணத்தில் பாடியதைக் கேட்ட மைசூர் சௌடையா, “இப்படிப்பட்ட திறமைசாலி எல்லாம் அகாடமியின் ப்ரைம் ஸ்லாட்டில் அல்லவா பாட வேண்டும்”, என்று கூறியதும் அடுத்த வருடமே அகாடமியில் சாயங்கால கச்சேரியில் கிருஷ்ணன் பாட, அவருக்கு சௌடையாவே பக்கவாத்யம் வாசித்தார்.

* ஜி.என்.பி, அகில இந்திய வானொலியின் ஸ்டேஷன் டைரக்டராக இருந்த போது, கிருஷ்ணனுக்கு ராகம் தானம் பல்லவி கச்சேரி பாட contract அனுப்பினார். அந்த contract வருவதற்கு சில நாட்களுக்கு முந்தான் ரேடியோவில் ராகம் தானம் பல்லவி கச்சேரி ஒன்றை கிருஷ்ணன் பாடியிருந்தார். அதனால், பதிலளிக்காமல் காலம் கடத்த, ஒரு நாள் ஜி.என்.பி-யே நேரில் வந்து விசாரித்தார். விவரத்தை கிருஷ்ணன் கூறவும், “ஹாலந்தில் இருந்து அற்புதமான ஒலிநாடாக்கள் வந்துள்ளன. அவற்றில் உன் ராகம் தானம் பல்லவியை வருகின்ற சந்ததிக்காக வேண்டி பதிவு செய்ய நினைத்தேன். அதனால்தான் மீண்டும் ஒருமுறை ராகம் தானம் பல்லவிக்கே contract அனுப்பினேன்”, என்று ஜி.என்.பி கூறிய பின் ராமநாதபுரம் கிருஷ்ணன் பாடிக் கொடுத்தார்.

* மறைவதற்கு சில நாட்கள் முன், “அந்த அம்மா என் பாட்டை ஒத்துண்டுட்டா. அப்போ நான் நல்லாத்தான் பாடியிருப்பேன்.”, என்று பிருந்தாவின் அங்கீகரிப்பைப் பெருமையாக நினைத்தார் கிருஷ்ணன். அவர் மறைந்த பல ஆண்டுகள் கழித்து, பிருந்தாவின் சிஷ்யர் ஒருவர், கீரவாணி ராகத்தில் ‘ஒரு ராக கச்சேரி’ பாடியதாக பிருந்தாவிடம் கூற, சில நிமிடங்கள் கண்ணை மூடி தன்னை மறந்த நிலைக்குச் சென்ற பிருந்தா, கண் விழித்த பின், “கீரவாணி-னா ஐயர் பாடி கேட்கணும்”, என்று ராமநாதபுரம் கிருஷ்ணனைக் குறிப்பிட்டார்.

மேற்கூறியது போன்ற தகவல்கள் கலைஞரின் தரத்தை உணரும் வகையில் அழகுற பதிவு செய்யப்பட்டிருந்தாலும், இதைப் போன்ற anecdotes அளவு மீறாமல் செய்திருப்பது சிறப்பு.

இத்தனை சிறப்பாக அமைந்துள்ள ஆவணத்தில் சில குறைகள் இல்லாமல் இல்லை. சஹானா ராகம் Ramnad Krishnan’s speciality என்ற போதும், அதை பல இடங்களில் மீண்டும் மீண்டும் ஒலிக்கச் செய்யாது, அந்த நேரத்தில் வேறு சில ராகங்களை சேர்த்திருக்கலாம். பைரவி, அடாணா போன்ற ராகங்கள் கூட ஒரு முறைக்கு மேல் ஒலிப்பதை தவிர்த்திருக்கலாம். அவரது ஆலாபனைக்கு கொடுத்திருக்கும் முக்கியத்துவம் அவரின் இசையின் மற்ற பரிமாணங்களுக்கு கொடுக்கவில்லை என்றே தோன்றுகிறது. ஆலாபனையில் கூட கச்சேரியின் தொடக்கத்தில் பாடிய ராகங்கள், பிரதான ராகங்கள், ராகம் தானம் பல்லவியில் பாடிய ராகங்கள் ஆகியவற்றில் அவரது ஆலாபனை அணுகு முறை எப்படி அமைந்தது என்று கூறியிருக்கலாம். நிரவல், கல்பனை ஸ்வரம் பற்றியெல்லாம் குறிப்பிடுவதோடு நிறுத்தியிருக்காமல் அவற்றின் தனிக் கூறுகளை விளக்கி, அவர் பாடியிருக்கும் கிருதிகள் பற்றியும் இன்னும் ஆழமாக சென்றிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

படத்தில் ஒரு காட்சி தவறுதலாய் இரண்டு முறை வருகிறது. அவர் பாடுவதைக் கேட்டு ரசிப்பது போன்று அமைத்திருக்கும் காட்சியில், அவர்களின் ரசிகானுபவத்தை  super slow motion-ல் காட்டியிருப்பது சில சமயம் out of synch-ஆக தோன்றுகிறது. பஹ¤தாரி, பலமஞ்சரி, பூர்ண ஷட்ஜம் போன்ற அரிய ராகங்களை கிருஷ்ணன் அழகாகப் பாடுவார் என்று கூறிய பின் ஒலிக்கும் ராகம் எது பலர் குழம்பக் கூடும் (ஒலிப்பது பலமஞ்சரிதான்).   ‘Temple tower effect’ என்பதை passing mention-ஆக கூறிய பின் தொடரும் ராகத்தில், தஞ்சை பெரிய கோயில் விமானத்தை காட்டிய போதும், மேல் செல்லச் செல்ல குரலின் ஒலி குருகுவதை பின்னொலிக்கும் இசை தெளிவாகக் காட்டியிருக்கலாம். விஸ்தாரமாகப் பாடுவதற்கு ஏற்ற ராகங்களை பெரிய ராகங்கள் என்றும் அப்படி இல்லாத வற்றை சிறிய ராகங்கள் என்று பொதுவாகக் குறிப்பிடினும், அவற்றை ஆங்கிலத்தில் ‘Major Scales’ என்றும் ‘Minor scales’ என்றும் குறித்தல் குழப்பம் ஏற்படுத்தும். மேற்கத்தைய இசையில் இந்தப் பதங்களுக்கு வேறு அர்த்தம் இருப்பதை உற்று நோக்கின் இக் குழப்பம் புரியும். இசை ஒலிக்கும் போது, ஒலிக்கும் ராகம், கிருதி, பல்லவியின் தாளம் போன்ற செய்திகளையும் காட்டியிருப்பின், மாணவர்களுக்கும், இசைப் பயிற்சி அதிகம் இல்லாதோருக்கும் உதவியாக இருந்திருக்கும்.

இதைப் போன்ற சிறு சிறு குறைகள் இருக்கும் போதும், மொத்தத்தில் ராமநாதபுரம் கிருஷ்ணனின் இசை வாழ்வின் செம்மையான பதிவாகவே இந்தப் படைப்பு அமைந்திருக்கிறது. இதைப் போன்ற இன்னமும் பல ஆவணங்களை இந்த நிறுவனம் எடுக்க வேண்டும். அப்படிச் செய்ய இசை ரசிகர்களும், ஆர்வலர்களும் இது போன்ற முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும்.

நான் டிவிடி வாங்கிவிட்டேன். நீங்க?

மேலும் விவரங்கள்: http://www.kalakendra.com/shopping/ramanathapuramramnad-krishnan-musicans-musician-p-618.html

Read Full Post »