Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘Parvadini Nagaswaram Concerts’

வருடாந்திர கச்சேரிகளை இந்த வருடம், கரோனா சமயத்தில், வைக்க வேண்டுமா/வேண்டாமா என்று பலமுறை ஊசலாடிய பின் – அற்புதக் கலைஞர்கள் இன்னொரு முறை மக்களை சென்றடைய ஒரு வாய்ப்பாகவாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.

இருந்தும் கரோனா காலத்தில் எந்த அரங்கில் வைப்பது? ரசிகர்களை அழைப்பது சரியா? கலைஞர்களை பயணிக்க வைப்பது சரியா என்றெல்லாம் குழப்பம் நிலவியது.

நண்பர் சரவணன் ஒரு வழி சொன்னார். கலைஞர்கள் – அவரவர் சௌகரியத்துக்கு கச்சேரியைப் பதிவு செய்து அனுப்பட்டும். யூடியூபில் நாளுக்கு ஒன்றாய் போடலாம் என்றார்.ஒன்பது நாட்கள் – அரிய கலைஞர்களின் இசை வர்ஷம். வழக்கமாய் நடப்பதைவிட இந்த வருடம் நன்றாகவே அமைந்தது என்று தோன்றியது.

நாகஸ்வரம் அழிந்துவிட்டது. அது வருங்காலத்தில் வழக்கொழிந்தே போய்விடும் என்று பிலாக்காணம் படிப்பவர்கள் இந்தக் கச்சேரிகளைக் கேட்டு மனத்தை மாற்றிக் கொள்ளலாம்.ஒன்பது கச்சேரிகளையும் கேட்க:

Read Full Post »

சென்ற ஆண்டு தொடங்கி, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நாத இன்பத்துடன் சேர்ந்து, நாகஸ்வர கச்சேரி ஒன்றை பரிவாதினி ஒருங்கிணைத்து வருகிறது.

அந்த வரிசையில் இந்த மாதம் 27-ம் தேதி, நெம்மாரா சகோதரர்களின் கச்சேரி ஏற்பாடாகியுள்ளது. கேரளத்தைச் செர்ந்த இந்த கலைஞர்கள் சமீப காலத்தில் சங்கீத உலகில் நல்லதொரு பெயரை ஈட்டி, அனைத்து பிரபல அரங்குகளிலும் வாசித்து வருகின்றனர். இவர்களுடன் தேர்ந்த தவில் கலைஞர்களான திருராமேஸ்வரம் ராதாகிருஷ்ணனும், தாராபுரம் கணேஷும் வாசிக்கவுள்ளனர்.

PHOTO-2019-04-16-11-43-34

வழக்கம் போல், கச்சேரியுடன் சேர்ந்து திறமையுள்ள ஆனால் நிதி நிலை ஸ்திரமாக இல்லாத இரு மாணவர்களுக்குத் தவிலும் நாகஸ்வரமும் வழங்கப்படவுள்ளது.

இம்முறை தவில் பெறும் மாணவர் பதினைந்து வயது நிரம்பிய மணிகண்டன். இவர் தென்திருப்பதி அரசு இசைப்பள்ளியில் பயின்று வருகிறார். நாகஸ்வரம் பெறும் மாணவர் சிவகுருகணேஷ். பதினேழு வயது நிரம்பிய இவர், திருவையாறு அரசு இசைப்பள்ளியில் பயின்று வருகிறார்.

கச்சேரிகளுக்கோ, வாத்தியம் வழங்குவதற்கோ நன்கொடை அளிக்க விரும்புவோர் இங்கு குறிப்பிட்டுள்ள வங்கிக் கணக்கில் நன்கொடை அளிக்கலாம்.

Parivadini Charitable Trust,
Union Bank of India
Account Number: 579902120000916
branch: Kolathur, Chennai,
IFSC Code: UBIN0557994

 

Read Full Post »

பரிவாதினியில் நாகஸ்வரத்துக்கு என்றுமே தனி இடமுண்டு. 2013-ல் தொடங்கி நாகஸ்வர நிகழ்ச்சிகள் இல்லாத பரிவாதினி இசைவிழாகள் இல்லாத நிகழ்ச்சி நிரலைக் காண முடியாது. இசைத் தொடரில் சம்பிரதாயமாக மங்கல வாத்யம் என்று ஒரு மணிக்கு குறைவாய் நாகஸ்வரக் கலைஞரை வாசிக்க வைப்பதில் என்றுமே எனக்கு உடன்பாடில்லை. அதனால் பரிவாதினியில் இடம் பெற்ற நாகஸ்வர கச்சேரிகள் அனைத்துமே மற்ற கச்சேரிகளுக்கு இணையான நேர அளவில்தான் அமையும்படி பார்த்துக் கொண்டு வருகிறோம்.

சில மாதங்களுக்கு வைணவ நாகஸ்வர மரபை ஆவணமாக்க இணையத்தில் உதவி கோரிய போது கிடைத்த ஆதரவு உண்மையில் நம்பமுடியாத வகையில் இருந்தது. அதுவே வழக்கமாக ஏற்பாடு செய்யும் வருடத்து ஒன்றிரண்டு நாகஸ்வர கச்சேரிகளைத் தவிர இன்னும் ஏதாவது செய்யத் தூண்டியது.

அந்த எண்ணத்தின் அடுத்த நிலைதான் நாத இன்பத்துடன் பரிவாதினி சேர்ந்து நடத்தும் இருமாதத்துக்கு ஒருமுறை நாகஸ்வர கச்சேரிகள். இதன் தொடக்கம் ஜூலை மாதம் நிகழ்ந்தது.

சின்னமனூர் விஜய்கார்த்திகேயனும், இடும்பாவனம் பிரகாஷ் இளையராஜாவும் இரண்டரை மணி நேரத்துக்கு மேல் அற்புதமாக வாசித்தனர். நாகஸ்வரத்துக்கே உரிய தத்தகாரப் பல்லவி அந்தக் கச்சேரியின் உச்சம் என்று நினைக்கத் தோன்றும் – அன்று அவர்கள் வாசித்த ராகமாலிகையைக் கேட்கும் வரை.

கோயில்களில் உற்சவ மூர்த்தி வீதி வலம் முடித்தபின், கோயில்வாசலுக்கு வந்து திருவந்திக் காப்பு முடித்து தன் இருப்பிடத்துக்குப் போகும் போது படியேற்றம் வாசிக்கப் படும். அதாவது ஒவ்வுரு படியாய் ஏறி தன் அறைக்குச் செல்லும் போது ஒவ்வொரு படிக்கும் ஒவ்வொருராகம் இசைக்கப்படும். கிட்டத்தட்ட பத்து வினாடிகளுக்குள் ஒருபடியைக் கடக்கும் கணத்தில் ஒரு ரகத்தைக் கடப்பார்கள் நாகஸ்வரக் கலைஞர்கள். இந்த நிகழ்வை மனக்கண் முன் நிறுத்தி அன்று கார்த்திகேயனும் இளையராஜாவும் வாசித்த ராகமாலிகையை நேரில் கேட்ட்வர்கள் புண்ணியம் செய்தவர்கள். (அவர்களைக் காட்டிலும் அளவில் சற்று குறைவாய் புண்ணியம் செய்தவர்களுக்காக இணைப்பு கீழே)

 

பரிவாதினி ஒருங்கிணைத்த நிகழ்வுகளில் கச்சேரி முடிந்தும் பல வாரங்களுக்கு பரபரப்பாய் பேசப்பட்ட நிகழ்ச்சி இதுதான்.

அதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் இஞ்சிக்குடி மாரியப்பன் அவர்களின் கச்சேரி இடம் பெற்றது. ஆரம்பம் முதல் கடைசி வரை பல அரிய பாடல்களின் ஆவணமாக அந்தக் கச்சேரி அமைந்தது. அவர் வாசித்த நீதிமதி அந்தக் கச்சேரியின் சிகரம் எனலாம்.

 

அன்ர்த மூன்றரை மணி நேர இசை மழையைத் தொடர்ந்து வரும் நவம்பர் 3-ம் தேதி ஒரு அரிய நிகழ்ச்சி ஏற்பாடாகியுள்ளது.

இணையத்தில் இசையைத் தேடி அடைபவர்களுக்கு யாழ்பாணம் பாலமுருகனின் இசையைத் தெரிந்திருக்கும். அவர் வாசித்த பல இசைத் துளிகள் ஃபேஸ்புக்கிலும், யூடியூபிலும் மிகவும் பிரபலம். சென்ற வருடம் கோலப்பன் ஹிந்துவில் எழுதியிருந்த கட்டுரையில், கேரளமும், கர்நாடகமும், ஆந்திரமும் இந்தக் கலைஞனை அழைக்கும் அளவிற்கு தமிழ்நாடும், சென்னை சபைகளும் அழைப்பதில்லை என்று எழுதியிருந்தார். அந்தக் குறை பரிவாதினியின் மூலம் தீர்வதில் எனக்க்குப் பெருமகிழ்ச்சி.

balamurugan

நினைத்த மாத்திரத்தில் கேட்டுவிடும் தூரத்தில் இல்லாத ஓர் கலைஞனின் அரிய நிகழ்வென்பதால் ரசிகர்கள் திரளாக வந்து ரசித்து இன்புற வேண்டும் என்று கோருகிறேன்.

இந்த நிகழ்ச்சியில் திறமை வாய்ந்த, பொருளாதர வசதி அதிகம் இல்லாத மூன்று நாகஸ்வர மாணவர்களுக்கும் ஒரு தவில் மாணவருக்கும் வாத்தியங்கள் வழங்கி மகிழவுள்ளோம்.

இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் ஆதாரம் பரிவாதினியின் ஆதரவாளர்கள் தொடர்ந்து அளித்து வரும் உதவியும் ஊக்கமும்தான். அதற்கு எத்தனை முறை நன்று கூறினாலும் ஈடாகாது.

இந்தத் தொடர் நிகழ்வுகளுக்கு பங்களிக்க விரும்புவோருக்காக க்வங்கிக் கனக்கு கீழே அளிக்கப்பட்டுள்ளது. பரிவாதினிக்கு அளிக்கும் நன்கொடைகள் செக்தன் 80ஜி-யின் கீழ் வருமானவரிச் சலுகைக்கு தகுதிபெற்றவை.

Parivadini Charitable Trust,
Union Bank of India
Account Number: 579902120000916
branch: Kolathur, Chennai,
IFSC Code: UBIN0557994

Read Full Post »