Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for ஜனவரி, 2024

மேதை ராமநாதபுரம் கிருஷ்ணனின் இசையை நான் வகைப்படுத்திச் சொல்ல வார்த்தைகள் கிடைக்காமல் பல நாட்கள் தவித்ததுண்டு.

ஒருமுறை வெண்கலச் சிலை செய்வதற்கு முன் செய்யும். மெழுகுச் சிலை செய்வதைக் கண்டேன். எனக்கு கிருஷ்ணனின் இசை காதுகளில் ஒலித்தது.

உளிதான் – ஆனால் அதிர்ந்து விழாத நகாசுச் செதுக்கல்கள்.

இன்னொரு வகையிலும் கூட எனக்கு அந்த உவமானம் சரியென்று பட்டது. மெழுகுச் சிலையை வைத்து எடுக்கப்படும் வார்ப்புகளில் எத்தனையோ சிலைகளைச் செய்து எடுக்க முடியுமல்லவா? கிருஷ்ணனின் இசை கொண்டு செய்த வார்ப்புச் சுரங்கத்தில் மூன்று தலைமுறையாய் கலைஞர்கள் முங்கி முத்தெடுத்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

அவர் நினைவு நாளில் ஓர் அரிய பதிவை வலையேற்றியுள்ளேன்.

சிற்பத்தின் தீர்க்கமும் மிருது மெழுகின் மழமழப்பும் உங்களை ஆட்கொள்ளும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

Read Full Post »

2010-ல் இந்த நாளில் ராஜம் சார் மறைந்தார். அன்று வெள்ளிக்கிழமை. அதற்கு முந்தைய ஞாயிற்றுக் கிழமை அவரை நான் சந்தித்தேன்.

இஸபெல் ஆஸ்பத்திரியில் சாதாரண வார்டில் இருந்தார். நான் சென்ற போது நல்ல உற்சாகமாக இருந்தார். அவரைச் சந்தித்த போதெல்லாம் நாயினா பிள்ளை, திருவாலங்காடு சுந்தரேச ஐயர், வீணை தனம்மாள் – இவர்களைக் கேட்டதைச் சொல்லாமல் இருந்ததேயில்லை. அன்று பேகடையை இந்த மூவரும் கையாண்ட விதத்தைச் சொல்லும் போது தன் இளமைக்கே சென்றுவிட்டார். அதிலும் நாயினாப் பிள்ளை நினைவு வந்ததும் வாய்விட்டுப் பாட ஆரம்பித்துவிட்டார்.

அந்தச் சமயத்தில், அவர் வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்மணி பூங்கொடி வந்தார். “வாம்மா, வாம்மா! – உன்கிட்ட ஒரு காரியம் ஆகணும்”, என்று வரவேற்றார்.

பூங்கொடி பெரியதாக அலட்டிக் கொள்ளவில்லை.

”டாக்டர் வரும்போது சொல்லி, என்னை அரைமணி வீட்டுக்கு கூட்டுண்டு போயிட்டு வா.”

“வீட்டுக்கா?”

“டிஸ்சார்ஜுக்கு 2-3 நாளாகலாம். எனக்கு ஒரு அரை மணி போயிட்டு வந்தாத் தேவலாம்.”

நான் இடைபுகுந்து, “என்ன சார் அப்படி முக்கியமான வேலை?”

“ஒண்ணும் இல்லைப்பா. ஒரு பெயிண்டிங் ஆரம்பிச்சேன். ஃபினிஷிங் மட்டும் பாக்கி இருக்கு. அரை மணி நேரத்துல முடிச்சுடலாம்.”

”அப்படி என்ன அவசரம் சார்? வீட்டுக்குப் போய் பார்த்துக்கலாமே.”

அவர் ஏதோ சொல்ல நினைத்து நிறுத்திக் கொண்டார்.

இன்னொமொரு சீடர் அவருக்கு ரசம் சாதம் எடுத்துக் கொண்டு வந்ததும் பேச்சு சங்கீதம் பற்றி திரும்பியது.

சிறிது நேரத்தில் நான் கிளம்பத் தயாரானேன்.

“ராமசந்திரா! அந்தப் பெயிண்டிங்கை முடிச்சுடணும்பா.”

“…”

“இப்ப என் கை நடுங்க ஆரம்பிச்சிடுத்து. இனிமேல் வரைய முடியாதுனு நினைக்கிறேன்.”

இதைச் சொல்லும்போது அவர் 91-வயதை நெருங்கிக் கொண்டிருந்தார். அடுத்து அவர், “வயசாயிடுத்துப்பா, இனிமேல் என்ன இருக்கு?”, என்கிற வகையில் ஏதாவது சொல்வார் என்று நினைத்து நான் பதிலளிக்கத் தயாரானேன்.

“அதனாலென்ன, இனிமேல் முழு நேரம் சங்கீதத்துல ஈடுபட வேண்டியதுதான்”, என்று சொன்னதும் வெடித்துச் சிரித்துவிட்டேன்.

ஜனவரி 30 காலை சனிக்கிழமை நான் சென்னையில் இருந்தேன். ராஜம் சார் வீட்டில் ஐஸ்பெட்டிக்குள் உறங்கிக் கொண்டிருந்தார்.

தஞ்சை ராஜராஜேஸ்வரத்தில் 108 கரணங்களில் 27 கரணங்கள் வடிக்கப்படாமல் பாறைக்குள் மறைந்திருப்பதைப் போல, ஃபினிஷிங் முடியாத அந்த சந்தியா தாண்டவமூர்த்தியை ராஜம் சாரின் மகன் கையில் வைத்துக்கொண்டிருந்தார்.

அந்த அரைமணி நேரம்…

பி.கு: ராஜம் சாரின் நூற்றாண்டின் போது விதுஷி விஜயலட்சுமி , ராஜம் சாரிடம் ஓவியம் கற்ற ரமணி ராஜா, ஸ்ருதியின் அந்நாள் ஆசிரியர் ஜானகியுடன் சேர்ந்து நானும் மியூசிக் அகாடமியில் ராஜம் சாரைப் பற்றி பேசினேன். என் உரையின் காணொளியை இங்கு கொடுத்துள்ளேன்.

Read Full Post »

நான் நாகஸ்வர மேதை நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் பற்றிய உரைக்கான தயாரிப்பில் இருக்கும்போது ஒரு சம்பவத்தைப் பற்றிய குறிப்பு கிடைத்தது.

ஒருமுறை சேலத்துக்கு ராஜரத்தினம் பிள்ளை வாசிக்க வந்திருந்த போது, தன் ஜாகையில் அமர்ந்த சாதகம் செய்து கொண்டிருந்தார். அவரைச் சந்திக்க வந்த நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் அறைக்குள் சென்றால் வாசிப்பு நின்றுவிடும் என்பதால், ஜன்னல் பக்கமாய் அறைக்கு வெளியிலேயே உட்கார்ந்து கொண்டார். வாசிப்புக்கு இடையில் தாம்பூலமிட்ட வாயைக் கொப்பளிக்க ஜன்னலுக்கு அருகில் வந்த ராஜரத்தினம் பிள்ளை, கிருஷ்ணனைக் கண்டதும் “கொஞ்சம் விலகப்பா. துப்ப வேண்டும்.”, என்றாராம்.

“அப்படியே என் தலையில் துப்புங்கள். அப்படியாவது என் சங்கீதம் வளரட்டும்”, என்று கிருஷ்ணன் சொன்னாராம்.

இதைப் படித்த போது கற்பனைக் கதையோ என்று தோன்றியது.

இன்று எதேச்சையாய் எனக்கு நாரயணன் செட்டியார் அளித்திருந்த இசைப்பதிவுகளில் ஒரு பதிவில் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் மறைந்த போது வெளியான அஞ்சலியின் பதிவிருப்பதைக் கண்டேன். அதிலும் இந்தச் சம்பவம் குறிப்பிடப்படுகிறது.

அஞ்சலியை என் யுடியூப் தளத்தில் வலையேற்றியுள்ளேன்.

Read Full Post »

சென்னையை உறைவிடமாகக் கொண்டிருந்த நாகஸ்வரக் கலைஞர்களுள் இவர் போலப் புகழ் பெற்றவர் எவரும் இல்லை என்று சொல்லுமளவிற்கு புகழுடன் வாழ்ந்தவர் சைதாப்பேட்டை நடராஜன். அவர் வாசித்து பல பதிவுகள் பல திரைப்படங்களில் இடம் பெற்றுள்ளன. கே.வி.மகாதேவனுக்கும், எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும் ஆஸ்தான நாகஸ்வரக் கலைஞராக இருந்தவர் இவர்தான். அவர் இருந்த காலத்தில் முதன் முதலாக ஒரு பதிவிற்கு நான்கு இலக்கத் தொகையை சம்பளமாகப் பெற்றவரும் இவர்தான்.

அவர் வாசிப்பில் உள்ள சுநாதத்திற்கு ஈடாக இன்னொன்றைச் சொல்வது கடினம். குழைவிற்குக் குழைவு! கம்பீரத்துக்கு கம்பீரம்! ‘நாதஸ்வர ஓசையிலே’, ‘மனம் படைத்தேன்’ என்று பல பாடல்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். நவராத்திரி படத்தின் கடைசி காட்சியில் ஒவ்வொரு சிவாஜியாக திருமண வரவேற்புக்கு வரும் போது ராகங்களை மாற்றி மாற்றி இசைத்திருக்கும் இவரது வாசிப்பை நான் பலமுறை வியந்து கேட்டதுண்டு.

இவர் கச்சேரிகளும் நிறைய வாசித்திருக்கிறார் என்று தெரிய வந்தாலும் இதுவரை அவர் வாசித்த பதிவுகளை நான் கண்டதில்லை. சமீபத்தில் இவர் வாசித்த ஒரு கச்சேரிப் பதிவு கிடைத்தது. அதில் ஒரு அற்புதமானப் பாடலை என் யுடியூப் தளத்தில் கொடுத்துள்ளேன்.

Read Full Post »

கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுதோரும் இசைக் கலைஞர்களை ஆவணப்படுத்தும் வகையில் பரிவாதினி நாட்காட்டி ஒன்றை வெளியிட்டு வருகிறது.

இந்த ஆண்டு சென்னையில் வாழ்ந்து நாகஸ்வரம்/தவில் கலையில் உச்சம் தொட்ட முன்னோடி கலைஞர்கள் 12 பேரை ஆவணப்படுத்தும் வகையில் நாட்காட்டியை வெளியிட்டுள்ளோம்.

இதில் இடம்பெறும் கலைஞர்கள்:

நாகஸ்வரம்

1. நடேச பிள்ளை

2. பி.என்.கோவிந்தசாமி

3. மாம்பலம் எம்.கே. ஸ்வாமிநாதன்

4. சைதாபேட்டை நடராஜன்

5. தேனாம்பேட்டை பி.கே.மதுரை

6. வி.என்.பாலசுப்ரமணியம்

தவில்

1. சூளை நாகப்பா

2. சைதாபேட்டை சுப்ரமணியம்

3. சி.பி.பக்கிரிசாமி

4. கே.கே.வடிவேல்

5. எஸ்.வி.வஜ்ரபாணி

6. திருவொற்றியூர் டி.ஏ.சுப்ரமணி

இதற்கான தகவல்களையும், படங்களையும் திரட்டிக் கொடுத்த மூத்த நாகஸ்வர கலைஞர் Kalaimamani Mks Natarajan அவர்களுக்கு நன்றி.

இந்த அரிய ஆவணத்தைப் பெற விரும்புபவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

மின்னஞ்சல்: parivadinimusic@gmail.com

வாட்சாப்: 9980992830

Read Full Post »

நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனின் நூற்றாண்டை ஒட்டிய என் உரைக்கான தயாரிப்பின் போது 1974-ல் வெளியான மலையாளப் படத்தில் அவருடைய இந்த முத்து இடம்பெற்றதை தெரிந்துகொண்டேன். அதில் ஒரு பகுதியை என் உரையில் அளித்தேன். இன்று என் யுடியூப் சானலில் அந்தத் துகளை முழுமையாய் அளிப்பதில் மகிழ்கிறேன்.

Read Full Post »

இந்த வருட சங்கீத வித்வத் சபை காலை உரைகளில் மூன்று நாகஸ்வர மேதைகளின் நூற்றாண்டு கொண்டாடப்பட்டு அவர்களின் இசையாளுமையைப் பற்றி பேசப்பட்டது.

அந்த மூவரில் சங்கீத கலாநிதியான ஷேக் சின்ன மௌலானாவைப் பற்றி அவருடைய பெயரன்கள் வித்வான் காசிம்/வித்வான் பாபு, வயலின் மேதை நாகை முரளிதரனுடன் இணைந்து பல அழகான இசைப் பதிவுகளுடன்கூட அற்புதமாகப் பேசினர்.

மற்ற இருவர் வித்வான் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், வித்வான் வேதாரண்யம் வேதமூர்த்தி. இவ்விருவரையும் பற்றி பேசுவதற்கான வாய்ப்பு எனக்கு அமைந்தது. இதைச் சாக்கிலிட்டு அவர்களுடைய இசையில் பல மாதங்க்கள் மூழ்கும் வாய்ப்பு அமைந்தது. நான் கண்டுகொண்டதை தொகுத்து ஒன்றரை மணி நேரத்தில் இசைத் துணுக்குகள் உதவியுடன் கடந்த டிசம்பர் 23-ம் தேதியன்று பேசி முடித்தேன்.

அந்த உரையின் காணொளியை இங்கு காணலாம்.

Read Full Post »