2014-ல் எழுதியது. தொகுப்பிற்காக இங்கு இட்டுக் கொள்கிறேன்.
மேடையேறி தன் திறனை வெளிக்காட்டிக் கொள்வதை விட, மேடைக்கு அருகில் இருந்தபடி மற்றவர் திறனை மெய்மறந்து கேட்பதையே விரும்பிய ஒரு மகாவித்வான் இருந்தார் என்றால் நம்ப முடிகிறதா? அவர்தான் திருவாலங்காடு ‘ஸுஸ்வரம்’ சுந்தரேஸ ஐயர்.
இசைக் கல்லூரியில் பணியாற்றிய குருகிய காலத்தில், “பக்கத்து அறையில் முசிறி பாடம் எடுக்கிறார். நாமெல்லோருமாய் போய் கேட்போம் வாருங்கள்”, என்று குழந்தைக்குரிய குதூகலத்துடன் மாணவர்களை அழைத்துச் சென்றுவிடுவாராம் சுந்தரேஸ ஐயர்.
அவர் பக்கவாத்யம் வாசிக்கிறார் என்ற எண்ணமே பாடுபவரை அதுவரைக் கண்டிராத உயரங்களை நோக்கி செலுத்தும். பிரளயமாய் பெருக்கெடுக்கும் ராக அலைகளை அநாயாசமாய் ஒற்றைக் கீற்றில் விழுங்கிவிடும் வாசிப்புக்கு சொந்தக்காரர் அவர். ஒரு கச்சேரியில் செம்மங்குடி ஸ்ரீனிவாஸ ஐயர் விஸ்தாரமாய் த்விஜாவந்தி ராகம் பாடினார். அதை வாங்கி ஒரு சில வினாடிகளில் சுந்தரேஸ ஐயர் மிளிரவிட்டதும், “நான் பாடினதை எல்லாம் ரப்பரை வெச்சு அழிச்சாச்சு”, என்று சிரித்துக் கொண்டே சொன்னாராம் செம்மங்குடி.
அவர் வாசிப்பை நேரில் கேட்டவர்கள் அவருடைய லட்சண ஞானத்தையோ, வாத்தியத்தின் மீதிருந்த ஆளுமையையோ பெரியதாய் கருதுவதில்லை. ஒவ்வொரு ராகத்திலும் அநாவசியம் எது என்று உணர்ந்து அதைத் தவிர்க்கும் அசாத்தியமான அழகுணர்ச்சியை, அவரைக் கேட்டவர்கள் குறிப்பிடாமல் இருக்கத் தவறுவதில்லை.
“ராகத்தை விஸ்தாரப்படுத்த வேண்டும் போது அந்த வடிவின் அழகை பளிச்சென்று எடுத்துக்காட்ட என்ன செய்ய வேண்டுமோ அதைமட்டும் செய்வார். அநாவசிய ஆபரணங்களைப் போட மாட்டார். ஒரு இடத்திலேயே ஒரே ஆபரணத்தை நாலைந்து தடவை போடமாட்டார்.”, என்று தி,ஜானகிராமன் சுந்தரேஸ்வர ஐயரின் வாசிப்பை சிலாகித்துள்ளார்.
இராஜரத்தினம் பிள்ளையின் குருவான திருக்கோடிக்காவல் கிருஷ்ண ஐயரின் சீடர் செம்மங்குடி நாராயணசாமி ஐயரிடம் பயிற்சி பெற்றார். 17 வயதில் மதுரை புஷ்பவனத்துக்கு வாசித்த கச்சேரி அவரை சங்கீத வானில் செலுத்தியது. முசிறி சுப்ரமண்ய ஐயர், செம்பை வைத்தியநாத பாகவதர், ஆலத்தூர் சகோதரர்கள், என்று பல நட்சத்திர வித்வான்களுக்கு வாசித்த பொதிலும் சென்னைக்குக் குடி பெயராமல் திருவாலங்காட்டிலேயே தங்கிவிட்டார். “மதுரை மணி ஐயருடன் சேர்ந்து அவர் கச்சேரி வாசிக்காத கோயில்களே தமிழ்நாட்டில் இல்லை.”, என்கிறார் சுந்தரேஸ ஐயரின் மகன் நீலகண்டன்.
பெண்களுக்கு பல முன்னணி வித்வான்கள் வாசிக்க தயங்கிய காலகட்டத்தில் சுந்தரேஸ ஐயர் விதிவிலக்காக விளங்கினார். பத்து வருடங்களுக்கு மேலாக எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு பக்கபலமாகவும், தக்க ஆலோசகராகவும் விளங்கினார். அதிர்ஷ்டவசமாய் அவர் எம்.எஸ்-க்கு வாசித்த ஒரு கச்சேரி இன்றும் கேட்கக் கிடைக்கிறது.
வெகு நேரம் ஆலாபனை வாசித்தால் தான் பெரிய வித்வான் என்ற அபிப்பிராயத்தை மாற்றி ஐந்தே நிமிடம் வாசித்து ராகத்தின் சாற்றைப் பிழிந்து கொடுத்து அப்ளாஸ் வாங்கும் திறனாளி. நான் அவர் வாசிப்பை நேரில் கேட்டு ரசித்தவர்களில் ஒருவன்.
Thank you for this great blog post. I have referred and
copied it ( giving credit to you ) in my site
https://sites.google.com/site/dkpattammalsongs/
https://sites.google.com/site/dkpattammalsongs/home/tribute-to-dkp-by-gamakam-blog