2014-ல் எழுதியது. இன்று பாலு அவர்களின் பிறந்த தினம். அவர் நினைவாய் இங்கு பகிர்கிறேன்.
கல்யாண வசந்த ராகத்தை யார் அழகாகக் கையாண்டாலும் வயலின் மேதை லால்குடி ஜெயராமன் நினைவுக்கு வருவதைப் போல தமிழ் விருத்தம் ஒன்றை அதன் சுவை ததும்பும்படி யார் பாடினாலும் வித்வான் செதலபதி பாலசுப்ரமணியம் (1937 – 2004) நினைவுக்கு வராமலிருப்பதில்லை.
கச்சேரிகளில் பொதுவாக இசைக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் பாடல் வரிகளுக்குக் கொடுக்கப்படுவதில்லை. சில சமயங்களில் சுமாரான வரிகள் கூட சங்கீதத்தின் விசேஷத்தில் மிளிர்வதுண்டு. மனத்தை உருக்கும் வரிகள் சங்கீத சங்கதிகளுள் மூழ்கிப் போவதுமுண்டு.
செதலபதி பாலசுப்ரமணியம் போன்றவர்கள் பாடும் போதுதான் சங்கீதமும் சாஹித்யமும் இரண்டரப் பிணைந்து வார்த்தைகளுக்குச் சிறகு முளைத்து ஆனந்த களி நடனம் புரியும் அற்புதக் காட்சிகள் வெளிப்படுகின்றன.
இவரைக் கச்சேரி மேடைகளில் கேட்டவர்களை விட மார்கழி மாத பஜனைகளில் கேட்டவர்களே அதிகம். ரசிகர்களை ஈர்த்த வித்வான்களே இவரது முதன்மை ரசிகர்களாக விளங்கினர். பல வித்வான்களின் கச்சேரியின் முடிவில் கைத்தட்டல்கள் இரைந்து ஒலிக்கும். தான் பாடுவதில் தன்னையும் கரைத்து கேட்பவரையும் கரைக்கும் செதலப்பதி பாலசுப்ரமணியம் போன்றவர்களின் கச்சேரிகளின் முடிவில் கலங்கிய கண்களும் ஆழ்ந்த அமைதியுமே நிறைந்திருக்கும்.
பாபநாசம் சிவனின் பிரதான சிஷ்யரான இவர், தன் வாழ்வை சிவன் கீர்த்தனைகளைக் காக்கும் கருவூலமாக்கிக் கொண்டவர். ஒரு முறை கோயமத்தூருக்குச் செல்லும் வழியில் தன் உடைமைகள் அனைத்தும் காணாமல் போன பொது, “என் குருவுடன் பழகிய நினைவுகளும், அவருடைய கீர்த்தனைகளும் என் மனத்தை விட்டு அகலாத வரை நான் எதையுமே இழக்கவில்லை”, என்றாராம்.
கச்சேரிகளிலும், மார்கழி பஜனைகளிலும் பாபநாசம் சிவனின் கீர்த்தனைகளை இவர் பாடிக் கேட்பதே ஒரு அலாதியான அனுபவம். குறிப்பாக கீர்த்தனைகளுக்கு முன்னொட்டாய் விருத்தங்கள் பாடும் போது கண்களை மூடி, கைகளை முகத்தருகே வைத்தபடி ராகத்தை வளர்க்கும் போது சாகித்யம் அவர் மூடிய கண்கள் முன்னால் பேருரு எடுப்பது போன்ற பிரமை ஏற்படுவதுண்டு. மெதுவாக ராகம் படர்ந்து சூழலை நிறைத்து உச்சத்தை அடையும் அவ்வேளையில், ஒற்றை வார்த்தை ஒன்று மணியாகி, மாணிக்கமாகி, மாலையாகி ராக தேவதையை வகை வகையாய் அலங்கரிக்கும் அதிசயக் காட்சிகளைக் கண்டும் கேட்டும் களித்தவர்கள் எக்காலத்திலும் அந்தக் கணத்தின் மயக்கத்திலிருந்து விடுபடவியலாது.
இவரது மகன்கள் – கணபதிராமனும் சிவராமனும் – அவர் வழியில் இசைத் துறையிலேயே வாழ்வை அமைத்துக் கொண்டு அனைத்து முன்னணி வித்வான்களுக்கும் மிருதங்கம் வாசித்து வருகின்றனர்.
Pranams to my great Guru Shri Balu Mama. Not a single day is passed without remembering him.
Namaskaram mama Veena parthasarathy
beautiful rendition. Thanks for sharing
வித்வான் செதலபதி பாலசுப்ரமணியம் அருமையாகப் பாடும் பாடல் எட்டாம் திருமுறையின் ‘081 கோயில்’ என்ற பகுதியில் உள்ள 4 ஆம் பாடல் ஆகும்.
குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய வெடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே.
இப்பாடல் ‘கட்டளைக் கலித்துறை’ யாகும்.
அடுத்துப் பாடும் பாபனாசம் சிவனின் பாடலும் இனிமை.
டாக்டர்.வ.க.கன்னியப்பன்