Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Posts Tagged ‘prakash ilayaraja’

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை கோர தாண்டவம் ஆடத் தொடங்குவதற்கு முன் காருகுறிச்சியாரின் நூற்றாண்டைக் கொண்டாடுவதைப் பற்றி எனக்குப் பல கனவுகள் இருந்தன. அவற்றில் ஒன்று, இந்த வருடம் தென்னிந்தியாவில் பொருளாதார நிலையில்பின் தங்கிய நூறு மாணவர்களுக்கு காருகுறிச்சியாரின் நாகஸ்வரம் வழங்க வேண்டும் என்பது.

அதற்கான அறிவிப்பை நான் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு நிதியளிக்க விண்ணப்பித்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். கேட்ட சில வாரங்களில் நிறையவே நன்கொடை கிடைத்தது. கிட்டத்தட்ட 40 நாகஸ்வரங்கள் வாங்குவதற்கான நிதி திரள்வதற்கும் கரோனாவின் இரண்டாம் அலை உச்சம் பெருவதற்கும் சரியாக இருந்தது.

பல பேரின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்ட போது காருகுற்ச்சியாரின் நூற்றாண்டை கொஞ்சம் மறந்துவிட்டு பெருந்தொற்றால் வாழ்வாதாரம் வாசிக்கப்பட்ட கலைஞர்களுக்கு நிதி திரட்டுவதில் அவனம் செலுத்த வேண்டியிருந்தது. பொதுச் சூழல், பணிச் சூழல், குடும்ப சூழல் அனைத்திலும் குழப்பம் நிலவிய நிலையில் காருகுறிச்சியாரின் நூற்றாண்டு திட்டங்கள் அனைத்தும் மறந்தே போயின.

சில வாரங்களுக்கு முன் சங்கீத வித்வத் சபையிலிருந்து காருகுற்ச்சியாரைப் பற்றி உரை ஒன்று நிகழ்த்த அழைப்பு வந்ததும்தான் பழைய நினைவுகள் மனத்தின் ஆழங்களிலிருந்து மீண்டு எழுந்தன. ஏற்கெனவே திரண்டிருந்த 40 நாயனங்களுக்கான நிதியும் நினைவுக்கு வந்தது. ஏப்ரல் மாதத்தில் நூற்றாண்டு முடிவதற்குள் நூறு நாயனங்களுக்கான நிதியை திரட்ட முடியாவிடினும், இது வரை வந்த பணத்திற்காவது நாகஸ்வரம் வாங்கியளிக்க வேண்டும் என்று தோன்றியது.

நண்பர் Swamimalai Saravanan நரசிங்கம்பேட்டையில் ஆசாரியுடன் பேசி முதல் கட்டமாய் இருபது நாகஸ்வரங்கள் செய்ய ஏற்பாடு செய்தார். அவற்றை டிசம்பரில் அளிக்கலாம் என்று திட்டமிட்டோம். நரசிங்கம்பேட்டை நாயங்கள் உலக்ப் பிரசித்தம் என்றாலும் அவற்றை நுணுக்கமாக ஒரு கலைஞர் பரிசோதித்துப் பார்த்து துல்லியத்தை உறுதி செய்த பின் மாணவர்களுக்குக் கொடுப்பதுதான் சரியாக இருக்கும் என்று சரவணன் கூறினார். கூறியதோடு நில்லாமல் நேற்று வித்வான் Prakash Ilayaraja -வுடன் நரசிங்கம்பேட்டை சென்று அத்தனை நாகஸ்வரங்களையும் சரிபார்த்திருக்கிறார்.

நேற்றிரவு படங்களும் சில விடியோ பதிவுகளும் அனுப்பியிருந்தார். பிரகாஷ் இளையராஜா நரசிங்கம்பேட்டையில் அமர்ந்தபடி வாசித்த மோகனத்தைக் கேட்ட போது என்னுள் அடக்கமுடியாமல் உணர்ச்சிப் பெருக்கு ஏற்பட்டது.

காருகுற்ச்சியாரின் பெயரில் அந்த நாயனம் இன்னமொரு நூற்றாண்டு ஒலிக்கும் என்று உள்ளுக்குள் ஒரு கூவல் எழுந்தது.

பி.கு: நாற்பதை நூறாக்க நீங்கள் உதவ நினைத்தால் பரிவாதினி வங்கிக் கணக்குக்கு உங்கள் நன்கொடையை அனுப்பலாம்.

Parivadini Charitable Trust,

Union Bank of India Account Number:

579902120000916 branch: Kolathur, Chennai,

IFSC Code: UBIN0557994

Read Full Post »